
என்னவோ சத்தம் என்றுதான் வெளியே எட்டிப் பார்த்தேன்.
அலுவலக டாய்லெட் வாசலில் அந்த முரட்டு நைஜீரிய என்ஜினியர் அங்கே பாவமாய் நின்றுகொண்டிருந்த நேபாளித் தொழிலாளிகள் இருவரையும் பயங்கரக் கோபத்துடன் அடிக்கப் பாய்ந்து கொண்டிருந்தான்.
ஓடிப்போய் அவனைத்
தடுத்தால்… காலையிலிருந்து டாய்லெட் அடைத்திருப்பதை சரிசெய்யாமல், அவசரத்திற்கு உள்ளே போகவிடாமல் அந்த நேபாளிகள் தடுப்பதாய் அந்த நைஜீரியன் கோபமாய்த் தெரிவிக்க, முக்கியமான இடத்தில் அடைத்திருப்பதால் தண்ணீர் போக மாட்டேன் என்கிறது, இன்ஸ்பெக்ஷன் சேம்பர் வழியாக எவ்வளவு குத்தியும்
அடைத்திருப்பது போகாததால், அதை சரி செய்யும் வரை டாய்லெட்டை உபயோகிக்க முடியாது என்று தடுத்ததாய் இவர்கள் ஹிந்தியில் சொன்னார்கள்.பாவம்… இந்த நேபாளிகள். வேலை தெரியாத ஹெல்ப்பர் ஆட்கள். ப்ளம்பர் விடுமுறை என்பதால் சமாளிக்கலாம் என்று வந்தவர்கள், இப்போது என்ன செய்வதென்று தெரியாமல்
அட்மின் சூப்பர்வைசர் ஜெய்மர் வரக் காத்திருப்பதாய்ச் சொல்லிவிட்டு அவனுக்கு ஃபோன் செய்ய ஆரம்பித்தார்கள்.ஜெய்மர் பெயரைக் கேட்டதுமே எனக்கு இந்தப் பிரச்னை இன்னும் பெரியதாகப் போகிறது என்று தெரிந்துவிட்டது.ஜெய்மர் என்கிற இந்த ஜெய்மர் க்யூனிசலா ஒரு பிலிப்பைனி. நல்ல சிவப்பு.
நாகரிகம். எல்லாவற்றிலும் அழுக்குப்படாத உயர்தரம் விரும்பும் ஒரு ஆள். ஐஃபோனும் ஆடி காருமாய் வாழும் அவன், கொஞ்சம் தலைக்கனம் பார்ட்டி. அவ்வளவு சுலபத்தில் யாரிடமும் பேசமாட்டான். சுத்தம் சுத்தம் என்று எந்நேரமும் சுத்தம் பற்றியே பேசுபவன் என்பதால் அவனை அவன் சுத்தமாய் வைத்துக் கொள்வது

போலவே அலுவலகத்தையும் சுத்தமாய் வைத்துக் கொள்வதில் கெட்டிக்காரன். அதனால்தான் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் வாழும் கம்பெனியில் தாக்குப் பிடிக்கிறான் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.அந்த நேபாளிகள் அவனுக்கு ஃபோன் செய்து கொண்டிருக்கும்போது அவர்கள் குத்திக் கொண்டிருந்த
சேம்பரை எட்டிப் பார்த்தேன். மனிதக் கழிவுகளும் வண்டலுமாய் கலங்கி நுரைத்து நாறிக் கொண்டிருந்தது. பார்த்த உடனேயே வயிற்றைப் பிரட்ட சட்டென்று அங்கிருந்து நகர்ந்து நின்றுகொண்டேன். சற்று முன்னே மண்ணைத் தோண்டி பைப்பை உடைத்து, குத்திவிட்டு திரும்ப பைப்பை சரிசெய்து மாட்டி விட்டால்
அடைப்பு போய்விடும். ஆனால் அதற்குக் கண்டிப்பாய் ஒரு மணிநேரமாவது ஆகும்.என்ன செய்யப் போகிறானோ என்று யோசித்துக் கொண்டிருக்கையில் வந்துவிட்டான் ஜெய்மர். அந்த நேபாளிகளிடம் என்ன என்று கேட்டுக் கொண்டே அவன் அடைப்பு இருந்த இடத்தை நோக்கி நகர, அதற்குள் சேர்ந்திருந்த இன்னும் சில
என்ஜினியர்கள் ’புவர் மெயிண்டெனன்ஸ்’ என்று கத்த ஆரம்பிக்க, நான் அவர்களிடம் ’சற்று பொறுங்கள்’ என்று சமாதானம் செய்துகொண்டிருக்கும் போதுதான்… யாரும் எதிர்பாராமல் ஜெய்மர் அந்தக் காரியத்தைச் செய்தான்.இன்ஸ்பெக்ஷன் சேம்பர் அருகே முட்டியை மடக்கி உட்கார்ந்தவன்,
சட்டென்று சட்டைக் கையை ஏற்றிக் கொண்டு, அந்த சாக்கடைக்குள் கையைவிட்டு, அதற்குள் அடைத்திருந்த சாப்பாட்டுக் கவரை ஒரு இழுப்பில் இழுக்க… மறுவிநாடி எல்லா பிரச்னையும் முடிந்தேவிட்டது.எட்டிப் பார்க்கவே குமட்டும் அந்த சாக்கடைக்குள் எப்படிக் கையை விட்டான்.? அதுவும் அவ்வளவு சுத்தம்
பார்க்கும் இவனா அதைச் செய்தான்… என்ற அதிர்ச்சியில் எல்லோரும் உறைந்திருக்க, ஒன்றுமே நடக்காதது போல, ”அவ்ளோதான். இப்ப நீங்க டாய்லெட்டை உபயோகிக்கலாம்.!” என்று எங்களைப் பார்த்து சிரித்தபடியே கைகளைக் கழுவ டாய்லெட்டுக்குள் சென்றான்.
’எப்படி அப்படிச் செய்ய முடிந்தது?’ என்று பிறகு
நேரில் பார்த்த போது கேட்டேன். அதற்கு நேரடியாய் பதில் சொல்லாமல் சிரித்தபடி என்னைக் கேட்டான்.
“உங்களுக்கு விநோபா பாவே-வைத் தெரியுமா.?”
எனக்கு இன்னும் ஆச்சர்யமாகி அவனிடம் கேட்டேன்.
“ஆமாம்.. எங்கள் நாட்டு சுதந்திரப் போராட்ட தியாகி. அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.?”
அவன்
சிரித்தபடி சொன்னான், “அவர்தான் மக்சேசே விருது வாங்கிய முதல் இந்தியர்.!”
அது என்ன விருது, அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தமாய் இருக்கும்… என்ற குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்த என்னிடம் அவன் தொடர்ந்து சொன்னான்.
“ரமொன் மக்சேசே எங்கள் நாட்டுத் தலைவர். இன்னும் சொல்லப் போனால்
உங்களுக்கு காந்திபோல எங்களுக்கு அவர் தேசப்பிதா என்றே சொல்லலாம். மக்கள் எவ்வழி மகேசன் அவ்வழி என்பார்கள் தெரியுமா… அதுபோலவே தலைவர்களை வைத்தே அந்த நாட்டு மக்கள் குணத்தை ஓரளவு அறியமுடியும். பாருங்கள் அத்தனைபேர் இருந்த இடத்தில் நீங்கள் மட்டும்தான் நிலைமையைச் சமாதானமாக்க முயன்று
கொண்டிருந்தீர்கள். நான் நிலைமையைச் சீர் செய்ய முயன்று கொண்டிருந்தேன். ஏனென்றால் நம் முன்னோர்கள் அப்படி.!” என்று சிரித்துக் கொண்டே போய்விட்டான்.இது என்ன புதிதாய் இருக்கிறதே என்று சற்றே ஆர்வம் அதிகமாகி முதன்முதலாய் விநோபா பாவே யார் என்றும் ரமொன் மக்சேசே யார் என்றும் தேடிப்
படிக்க ஆரம்பித்தேன்..
”மக்சேசே நாலு வருசம் கூட முழுதுமாய் பிலிப்பைன்ஸ் பிரசிடெண்டாய் இருக்கவில்லை. ஆனால், அவர் நாட்டுக்குச் செய்த அளவு நல்லதை வேறு யாருமே அவர்களுக்குச் செய்ததில்லை என்கிறது வரலாறு. அவர் ஒரு ஆட்டோ மெக்கானிக். மிலிட்டரியில் வேலை செய்தவர். கொரில்லா படை ஒன்றை
இரண்டாம் உலகப் போரில் வழிநடத்தியவர்.. ஆனால் அவரை அப்போதை விட, பதவிக்கு வந்தபிறகுதான் பிலிப்பைன்ஸ் தெரிந்து கொண்டது. நமது விநோபா கூட அப்படித்தான். சுதந்திரப் போராட்டத்தின் போது அவரைப் பற்றித் தெரிந்து கொண்டதைவிட சுதந்திரத்திற்குப் பிறகுதான் இந்தியா அதிகம் தெரிந்து கொண்டதாய்
சொல்கிறது நம் வரலாறு.மக்சேசே ஆண்ட நாட்கள் பிலிப்பைன்ஸின் பொற்காலம் என்றே சொல்லலாம். மிக எளிமையானவர். தான் மிகப் பெரிய பதவியில் இருந்த போதும் சாதாரணர் ஒருவர் இறந்தபோது அவருடைய உடலைச் சுமந்து போனவர் மக்சேசே. அப்படிப்பட்ட மக்சேசே ஆட்சியில்தான் வியாபாரம், தொழில், விளையாட்டு
எல்லாத்துலயும் புது ரத்தம் பாய்ந்து பிலிப்பைன்ஸ் முன்னேற ஆரம்பித்தது. பேஸ்கட் பால், பாக்சிங் என விளையாட்டில், அறிவியல் கண்டுபிடிப்புகளில் அவர்கள் பங்களிப்பு மிகப் பெரியது. இப்படி ராணுவம், ஆட்டோமொபைல் என்று மக்சேசே வளர்ந்திருந்தாலும் மக்கள் வளமா இருக்கச் சரியான தொழில் என்று
அவர் தேர்ந்தெடுத்தது விவசாயத்தைத்தான். அவருடைய ஆட்சியில்தான் நிலச்சீரமைப்பு சட்டம் மூலமாக நிறைய நிலத்தை ஏழை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து, பல நீர் வழிகள் சரிசெய்யப்பட்டு விவசாயத்தை பெருக்கி இருக்கிறார் மக்சேசே.அதேபோல, சுதந்திரத்துக்குப் பிறகு காந்தியக் கொள்கைகளை மறந்து
அறிவியல் ஆயுதம் என்று இந்தியா தனது பார்வையைத் திருப்பிய போது, விநோபாவே கிராமம்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொன்ன காந்தியின் வார்த்தைகளைப் பற்றிக் கொண்டு இந்தியா முழுவதும் பயணம் செய்து நிலம் உள்ளவர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 44லட்சம் ஏக்கர் நிலங்களைத் தானமாய்ப் பெற்று,
ஏழை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து விவசாயத்தை பெருக்கும் பூமிதான இயக்கத்தை வழிநடத்தி இருக்கிறார். கிராமக் கைத்தொழிலைப் பெருக்க சர்வோதயா சங்கத்தை துவங்கி இருக்கிறார். தன்னை விட மிகச் சிறந்த காந்தியவாதி விநோபா பாவே தான் என்று காந்தியே சொல்லி இருக்கிறாராம்.
‘என்னுடைய எல்லா
முயற்சியும் இதயங்களை ஒன்றிணைப்பதுதான்’ என்று பயணம் கிளம்பிய விநோபா ஏறக்குறைய இந்தியா முழுவதும் பயணித்திருக்கிறார். கிட்டத்தட்ட மக்சேசே வாழ்க்கையும் அப்படிப் பட்டதுதான்.பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி ஆகி நான்கு வருடங்களுக்குள்ளேயே ஒரு விமான விபத்தில் அவர் இறந்துவிட்டார். ஆனாலும்
இன்றும் மக்கள் அவரை நன்றியுடன் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் நினைவாக ஆசியாவின் நோபல் என்று சொல்லப்படும் மக்சேசே விருதுகள் பலதுறைகளில் மாற்றங்களை கொண்டு வருபவர்களுக்கு கொடுக்க முடிவு செய்த கொடுக்க ஆரம்பித்தபோது முதல் முறையாய் வாங்கியவர்களில் பிலிப்பைன்ஸ் தாண்டி
வெளிநாட்டிலிருந்து இந்த விருதை வாங்கிய முதல் நபர் விநோபா பாவே மட்டும்தான். அப்படித்தான் விநோபாவா பற்றி ஜெய்மருக்குத் தெரிந்திருக்கிறது.மக்சேசே மற்றும் விநோபா இருவருமே அறிவியலுக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் மக்கள் சுயமாய் நிற்க வளர்ச்சியை விட விவசாயம் தான் உதவும்னு
அவர்கள் நம்பியிருக்கிறார்கள். அதை அவர்கள் வாழ்நாளில் செய்தும் காட்டியிருக்கிறார்கள்.இதையெல்லாம் நான் அவனிடம் சொன்னபோது, ஜெய்மர் சிரித்தபடி தானும் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் தான் என்று சொன்னான். நானும் தான் என்று சொன்னதும் கேட்டான்.
”ஆக, நம் முன்னோர்கள் எல்லாம்
நாம் பெருமைப்படும்படித்தான் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், நாம் அவர்கள் பெருமைப்படும்படி வாழ்கிறோமா என்றால்… வாழவில்லைதானே.? காந்தி, விநோபா, மக்சேசே போன்றவர்கள் நம்பிக்கையத் தோற்கடித்து விட்டுத்தானே நாம் இங்கே வந்து நிற்கிறோம். விவசாயக் குடும்பங்களில் பிறந்து, வளர்ந்து,
படித்து முன்னேறிவிட்டோம் என்று நினைத்து விவசாயத்தைப் பற்றியே தெரியாமல் அழித்த முதல் பரம்பரை நம்முடையதுதான்… இல்லையா நண்பா.?” என்று நிஜமான வருத்தத்துடன் கேட்டான்.எனக்குத்தான் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.!