தித்திக்கும் தமிழ்!

தித்திக்கும் தமிழ்! எங்கே இடம்?

தமிழர்களின் உபசரிக்கும் பண்பே அலாதியானது. அறிமுகம் இல்லாத ஒருவர் திடீரென்று இல்லத்திற்கு வந்தால் கூட வாங்க என்று அழைப்பர்! இல்லத்தின் உள்ளே அழைத்துச்சென்று நாற்காலியிலோ சோபாவிலோ அமர வைப்பர். மின்விசிறி போட்டு களைப்பாறச் சொல்லி நீரோ, குளிர்பானமோ, காபியோ ஏதாகிலும் தந்து உபசரிப்பர். பின்னர்தான் அவர் வந்த வேலையைக் கேட்பர். அது இயலுமாயின் செய்து கொடுப்பர் இது தமிழர் உபசரிப்பு. 

  இந்த உபசரிப்பு இன்று உருமாறிப் போய் அவலநிலையில் இருக்கின்றது. வாசல் வரை வந்தவரை அங்கேயே சென்று பேசி அப்படியே ஒன்றும் கொடாமல் திருப்பி அனுப்புவர். காலம் மாறிக்கிடக்கிறது. கள்வனும் உள்ளே வரக்கூடும் என்று எப்போதும் கதவுப் பூட்டிக் கிடக்கிறோம் இன்று. இன்னும் சிலரோ வீட்டில் இருந்தாலும் வெளியில் தலைகாட்ட மாட்டார். துணைவியிடமே வீட்டில் ஆள் இல்லை என்று சொல்லி அனுப்பிவிடச் சொல்வார்.

   இன்று அவரவர் பிழைப்பதே பெரும்பாடாக கிடக்கிறது. இதில் அடுத்தவரைக் கூப்பிட்டு உபசரிக்கவோ நன்கொடை அளிக்கவோ யாருக்கும் நேரமும் இல்லை விருப்பமும் இல்லை. இப்படி ஒரு வகையினர்.   இன்னும் ஒரு வகையினர் இருக்கின்றனர். விருந்தினர் வீட்டினுள் வந்தபோது, வாங்க வாங்க! சவுக்கியமா? உக்காருங்க! என்பர் அங்கே உட்கார இடம் இருக்காது. சோபாவில் பழைய துணிமணிகளும் பிள்ளைகள் இறைத்த புத்தகங்களும்  அடைத்துக் கிடக்கும். அதை அப்புறப் படுத்தாமலே, நிற்கறீங்களே உக்காருங்க! என்று சொல்லிவிட்டு இவர் பாட்டுக்கு தொலைக்காட்சியிலே கவனம் செலுத்த ஆரம்பிப்பார்.  

வந்தவரால் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாத நிலை! வெளியே செல்லவும் முடியாது. என்னங்க! வந்தீங்க! அப்படியே கிளம்பிட்டீங்களே! என்று கேட்பார் இவர். அவர் பாவம் தவித்துப்போய் ஒரு வாய் தண்ணீர் கிடைக்குமா என்று எண்ணி கொஞ்சம் தண்ணி கிடைக்குமா? என்று கேட்க இவரோ இருந்த இடத்தை விட்டு அசையாமல் உள்ளே குரல் கொடுப்பார். “ஏம்மா! ஒரு சொம்பு தண்ணி கொண்டுவா!”    உள்ளேயிருந்து குரல் வரும், ”நான் வேலையா இருக்கேன்! நீங்களே வந்து எடுத்துப்போங்க!”  வந்தவருக்கு தர்ம சங்கடமாகிப் போகும்.

இப்படி நமது உபசரிப்புக்கள் மாறிப் போய்விட்டன. இப்போது அந்த காலத்தில் ஒளவையாருக்கு நடந்த உபசரிப்பைப் பார்ப்போமா?     ஒரு சமயம் சோழன் தமிழறிஞர்களை புலவர்களை மிகவும் ஆதரித்து வந்தான். அவன் ஒருநாள் காவிரி வளம் கண்ணுற்று வந்தபோது காவிரிக்கரையோரமாக சங்கு ஒன்று வாய் திறந்தபடி இருப்பதைக் கண்டான். அதே சமயம் அங்கிருந்த ஒரு பூவிவிலிருந்து சிறு துளி தேன் ஒன்று அந்த சங்கின் வாயில் விழுந்தது. இதைக் கண்டு மகிழ்ந்த சோழன் இயற்கையின் அதிசயத்தை வியந்து அதே சிந்தனையில் இருந்தான்.   இதே சிந்தனையில் அவன் அவையில் இருந்தபோது அவ்வையார் அங்கே வந்தார்.

மன்னன் அவ்வையைக் கண்டு, வாருங்கள், அமருங்கள் என்று சொன்னான். ஆனால் அங்கே அவ்வையார் அமர இருக்கை ஏதும் இருக்கவில்லை! இதைப்பற்றி அவையில் இருந்தோரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.   ஔவையாரோ நெடுந்தொலைவு நடந்து வந்தவர், மிகுந்த பசியோடும் தாகத்தோடும் இருந்தார். சோழனின் இந்தச் செயல் அவரை ஒரு கவிபாட வைத்தது.


  கால்நொந்தேன் நொந்தேன் கடுகி வழிநடந்தேன்யான் வந்ததூரம் எளிதன்று –கூனல்கருந்தேனுக் கங்காந்த  காவிரிசூழ் நாடாஇருந்தேனுக் கெங்கே இடம்?


காவிரிக் கரையோரம்  செழித்து வளர்ந்து பூத்துச்சொரியும் சோலைகளிடையே கிடக்கும் சங்கானது பூக்களில் சுரந்து வழியும் மிகுதியான தேனைப் பருகுவதற்காக வாயைப்பிளந்து இருக்க கூடிய காவிரி சூழ்ந்த வளம் மிக்க சோழநாடா! உன்னைக் காணும் ஆர்வத்தால்  விரைந்து வழியெல்லாம் நடந்து என் கால் நோவுற்றேன்! நான் கடந்து வந்த தூரம் குறைவான தூரம் அல்ல! எளிதில் அடைய முடியாத நெடுந்தூரம். அவ்வாறு நடந்து வந்து உன் அவையினுள் நின்றிருக்கும் எனக்கு அமர்வதற்கு எங்கு இடம்?


 என்று பொருள் படும்படி பாடினார்.   சோழன் அசந்து போனான். தான் கண்ட காட்சியை பாடிய ஔவை இறையருள் பெற்ற புலவர் என்று எண்ணினான். தன் தவறுக்கு வருந்தினான். உடனே இருக்கை தந்து உபசரித்து பரிசுகள் தந்து வழியனுப்பினான். 

இதில் கூனல் என்பது, சங்கு, அல்லது, நத்தை, அல்லது ஆமை என்று பொருள் கொள்ளலாம்.   ஒரு நத்தைக்கும் தேன் கிடைக்கும் இந்த சோழ நாட்டில் எனக்கு அமர்வதற்கு ஓர் இடமும் கிடையாதோ?  என்று பாடியது உன் அன்புப் பரிசும் கிடையாதோ என்று பொருள் உணர்த்தும்.

என்ன ஒரு அருமையான பாடல்! படித்து ரசியுங்கள்! மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்! நன்றி!

2 comments

  1. நீண்ட காலத்திற்குப் பிறகு எனது முதல் கட்டுரை நான் அதைப் படித்திருக்கிறேன், தமிழிலும், மிக்க நன்றி சகோதரர்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: