பொன்மகள் வந்தாள் – விமர்சனம்.

 ‘நீதி வழங்குவதற்கு சாட்சியை விட உண்மை தான் முக்கியம்.’ -ஓங்கிச் சொல்கிறாள் ‘பொன்மகள் வந்தாள்.’பெட்டிசன் பெத்துராஜின் மகளான வெண்பா பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சைக்கோ குற்றவாளி என்று போலீஸாரால் சுட்டுக்கொள்ளப்பட்ட சத்யஜோதிக்கு ஆதரவாக நீதிப்போராட்டத்தைத் துவங்குகிறாள். அங்கிருந்து படம் துவங்கிறது.

பெண் குழந்தைகளைக் கடத்திக் கொலை செய்யும் சைக்கோ குற்றவாளி என்று நம்ப வைக்கப்பட்ட இறந்து போன சத்யஜோதியை நிரபராதி என நிரூபிக்கப் போராடும் வெண்பாவிற்கு சத்யஜோதி யார்? அதிகாரமும் பணபலமும் நீதியை தன் வீட்டு வேலைக்காரன் போல நடத்தும் காலத்தில் வெண்பாவின் அன்பான நீதி எப்படி வென்றது? இதற்கான பதிலை இரண்டு மணி நேரத்தில் மிக நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார்கள்.வெண்பாவாக ஜோதிகா. ஜாக்பாட் ஜோதிகாவை லாக்டவுன் செய்து சீரியஸ் ஜோதிகாவை லாகின் செய்து அசத்தி இருக்கிறார். எவ்வளவு பெரிய நடிகரையும் தன் வசீகர வசனத்தால் ஓரங்கட்டும் பார்த்திபனையே சில பன்ச்களில் ஜோதிகா தெறிக்க விடுவதெல்லாம் அல்டிமேட் ரகம். படத்தில் ஜோதிகா பார்த்திபனின் வாதப்பிரதி வாதங்கள் ஜோர் ஜோர். பாக்கியராஜ் தனது வேலையைச் செவ்வனே செய்ய, நீதிபதியாக வரும் பிரதாப் போத்தன் மிக அழகாக நடித்துள்ளார்.பாண்டியராஜனுக்கு பெரிய வேலை இல்லாவிட்டாலும் பிரதாப் போத்தனுக்கும் அவருக்குமான காட்சிகளில் ஸ்கோர் செய்துவிடுகிறார். தியகாராஜன் செய்யும் வில்லனத்தனம் ரசிக்கும் படியாகவே இருக்கிறது.

மெலிதாக சோகம் இழையோடும் கதை என்பதை அவ்வப்போது கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை நினைவூட்டுகிறது. ஊட்டியின் மலையழகையும் மலர் அழகையும் மழலையின் அழகாய் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர்.படம் தாங்கி நிற்கும் கதை நம் நாட்டில் பெரும்பாலான பெண் குழந்தைகள் படும் வதை. இங்கு நிறைய குழந்தைகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறலைச் சொல்லத்துவங்கினால் நிறைய முகமூடி நல்லவர்களின் உண்மை முகம் அசிங்மாகி விடும். இந்தப்பொன்மகள் வந்தாள் அப்படியான காமவெறி போலிகளை எச்சரிக்கச் வந்திருக்கிறாள்.ஆஷிபாக்களையும், நந்தினிகளையும், ஹாசினிகளையும் நினைவூட்டும் படம் பொள்ளாச்சி காமக் கொள்ளையர்களையும் அவர்களைத் தப்பிக்க வைக்கப் அயராது உழைக்கும் சுயநல வர்க்கத்தையும் தோலுரித்துக் காட்டுகிறது. வெல்டன் பிரெட்ரிக்!

‘பா’க்களில் வெண்பா எழுதுவது தான் மிகப்பெரிய கஷ்டம். ஆசிரிப்பாவில் சமரசம் செய்து விட முடியும். வெண்பாவில் அது முடியாது. சீர் தளை என இலக்கணம் எல்லாம் சரியாக அமைந்தால் தான் அது வெண்பா. இந்தப் பொன்மகள் வெண்பா அனைத்து இலக்கணத்தையும் கொண்டிருக்கிறாள். அதனால் நிச்சயம் இலக்கை அடைவாள்!இத்தனை வருட சினிமா வாழ்வில் ஒரு படம் நேரடி ரிலீஸாக அனைவரின் வீட்டிற்குள்ளும் வந்திருப்பது இதுவே முதல்முறை. அந்தப் பெருமையை அமேசான் மூலமாகப் பொன்மகள் வந்தாள் படம் பெற்றிருக்கிறது. அது வீட்டிற்குள் வைத்துப் போற்றக்கூடிய படமாகவும் இருப்பது தான் சிறப்பு!       -மு. ஜெகன்சேட்

நன்றி: http://www.startcutaction.com/

வலைப்பாய்ச்சல்!

நம் வாழ்க்கையோட இணைந்து வரவேண்டியவங்க நம்ம வீட்டுக்கும் விஷேசங்களுக்கும் மூன்றாம் மனிதர் போல வந்து போகும்போது ஏற்படும் மனவேதனையும் வலியும் சொல்லி மாளாது !

@Railganesan

 படித்தால் தான் வேலை, கை நிறைய சம்பளம் என்று சொல்லி தரும சமூகம் , விதைத்தால் தான் சோறு என்று சொல்லி தர மறுத்து விட்டது…!!

@Aravind01431

 நண்பர்: கண் டெஸ்ட் பண்ண டாக்டர், ‘இப்படியே விட்டா டேஞ்சர் ஆய்டும்’னு சொன்னாருனு சொன்னியே. என்னாச்சு.? தில்லுதுர: அதயேன் கேக்கற.? அதுக்கப்பறம் அவரைப் பார்க்கவே முடியல.!

-சுட்டது

@minimeens

 ஆயிரம் முயற்சிக்கு பிறகு தான் எடிசனுக்கு பல்பு கிடைச்சது.. நமக்கு முதல் முயற்சியிலேயே..

@manipmp

 கொரோனா, வெயில், வெட்டுக்கிளி.. வேற யாராச்சும் இருக்கீங்களா?          @pachaiperumal23

மோடி 2வது முறையாக பதவியேற்ற ஒராண்டு நிறைவு விழாவை 30ம் தேதி கொண்டாட பா.ஜ.க முடிவு – செய்தி # கொண்டாட்டத்துல நாங்களும் பங்கேற்றுகலமா ? – வெட்டுக்கிளி 

@Akku_Twitz

 வெட்டுக்கிளிகளை விரட்ட மத்திய அரசு களமிறங்கியதாம் ..! டேய் அத ஏன்டா வெறட்றீங்க… “புடிச்சி ‘சைனாவுக்கு வித்துடுங்கடா” விற்கிறது தான் உங்களுக்கு கை வந்த கலையாச்சே…

@22042015s 

குழந்தைகளின் அழுகையில் இழப்பு ஏதும் இருக்காது ! தேவை மட்டுமே இருக்கும்.

@Anandh_Offl

 அடம் பிடித்து தான் பிடித்தமானவற்றை அடைய வேண்டுமென்பதில்லை உனக்கானது அதென்றால் உன்னை கண்டிப்பாக வந்தடையும் யார் தடுத்தாலும், எதையும் சாதிக்க #பொறுமை அவசியம் பொறுமையைக் கடைப்பிடி ,,

@whitecloud_pri

 முன்னெல்லாம் ராத்திரி 8 மணிக்கு பிஎம் தொந்தரவு பண்ணாரு. இப்ப அந்த இடத்தை எப் எம் ஸ்டேஷன்காரங்க பிடிச்சுக்கிட்டாங்க…

@saravankavi பிளீச்சிங் பவுடரில் ஊழல் செய்தேன்… எதற்காக… ஏற்கனவே விதவிதமாக செய்த ஊழல்களால் ஏற்பட்ட கறைகளை அகற்றி சுத்தமாக்க வேண்டும் என்பதற்காக@KLAKSHM14184257

காது கொஞ்சம் நீளம்!

 (வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி பெரிய தெருவில் ஒரு வீட்டில் கணவன் மனைவி)

     “காவ்யா என்ன பண்றே?”

     “இதோ வரேங்க!”

     “எப்பப் பாரு போன்ல என்ன பண்றே?”

     “போன்ல ‘சேட்’ பண்ணிக்கிட்டிருந்தேங்க!”

     “இதே வேலைதானா? உன்னைச் சொல்லக் கூடாது! உன்னைப் பெத்தவங்களைத்தான் சொல்லணும்!”

     “போதும் நிறுத்துங்க! எங்கப்பாதான் நம்ம ‘கல்யாணம்’ஆகும்போதே சொன்னாருல்ல!”

     “என்ன சொன்னாரு?”

     “என் பொண்ணு ‘குனிஞ்ச தலை நிமிராதவன்னு’ சொன்னாரா? இல்லையா?”

     “அதுக்கு இப்படி ஓர் ‘அர்த்தம்’ இருக்குன்னு உனக்கும் உன் அப்பனுக்கும்தான்டி தெரியும்!”

-முத்து ஆனந்த் வேலூர்

பண்டிகாவனூர் ரேசன் கடையில் ஊழியரும் ரேசன் வாங்க வந்த பெண்ணும்.

அண்ணே…! இந்த மாசம் ஆயிரம் ரூபா கொடுக்கலையா?

”ஆயிரம் போதுமா?”

போதாதுதான்..! பத்தாயிரம் கொடுத்தாக்கூட எங்க ஊட்டுக்காரன் குடிச்சே தீர்த்துடுவான்!

ரூபா எவ்ளோ கொடுத்தாலும் போதாதுன்னுதான் சொல்வே! அதான் ஃபிரியா ரேசன்பொருள் கொடுக்கறாங்க!

ஆமா! புழுத்துப்போன அரிசியும்! முளைச்சுபோன கோதுமையும் வாங்கி என்னா பண்றது?

அப்ப எட்த்தை காலிப்பண்ணு!

தோடா! நா வாங்காம உட்டா நீ கொள்ளையடிக்கலாம்னு பாக்கிறியா!

ஆமா இதுல கொள்ளையடிச்சுதான் கோடீஸ்வரன் ஆகப்போறேன்! ஃபிரியா கொடுத்தா பெனாயிலைக் கூட வாங்கற பரம்பரையாச்சே..உங்க பரம்பரை வாங்கிட்டு போ..!

கவர்மெண்ட்டு வேலை இப்படி பேச்ச்சொல்லுது! முகத்தை நொடித்தபடி வாங்கிச்செல்கிறார் பெண்மணி.   சின்னசாமி,நத்தம்.

சீர்காழி       ( கடை வீதியில் இருவர் )

” மாப்ள நான் குடிக்கிறது சிகரெட் பிடிக்கிறது ஓசி டீ குடிக்கறது எல்லாத்தையும் விட்டுட்டேன்….”  ” ஏன் இந்த திடீர் மன மாற்றம்  மச்சான்  ….?”

” கொரானாவால உலக சந்தை  கடும் வீழ்ச்சியானதை என்னால தாங்க முடியலடா …”” அடங்கொய்யால , ஒரு ரூபாய் காசு கொடுத்து எதுவும் வாங்காம மாமனார் வீட்டு எடுபிடியா இருக்கற நாய்க்கு காரணத்தை பாரு ….”

” பொதுநல சிந்தனை இருக்க கூடாதா மாப்ள …..?”

  ” அதுக்கு அர்த்தமாவது  தெரியுமாடா உனக்கு விளங்காத வெங்காயம் ….”

      ( நைஸாக நழுவுகிறார் )

– பி.கே. ராதா. சீர்காழி .

தச்சூர்க்கூட்டுசாலை!  பேக்கரி ஒன்றில்  கடைக்காரரும் இளைஞரும்!

     என்னப்பா..! கடையை மூடிட்டு இப்படி நடுத்தெருவுலே  வியாபாரம் பண்றே?

 நானாவது நடுத்தெருவுலே வியாபாரம் பண்றேன்! நீயெல்லாம்…இப்படி நக்கல் பண்ணிட்டு வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கே ..!

  அண்ணே கோச்சுக்காதேண்ணே! மில்க் பிஸ்கட் இருக்கா?

   மாரி பிஸ்கெட் இருக்கு!

எண்ணே மில்க் கேட்டா மாரி இருக்குன்னு சொல்றே?

விரும்பினதை சாப்பிடற காலம் மாறி கிடைச்சதை சாப்பிடற காலம் வந்துருச்சுன்னு சொல்றேன்! வேணும்னா வாங்கு! இல்லே கிளம்பு

இளைஞர் முறைத்தபடி நகர்கிறார்.  எஸ்.எஸ்.பாபு. பஞ்செட்டி

 பொன்னேரி மளிகை கடை ஒன்றில் கடைக்கார்ரும் பொருள் வாங்க வந்தவரும்

  50 சன்ரைஸ் ஒரு சரம் கொடுங்க!  சன்ரைஸ் இல்லே! ப்ரு போட்டுடலாமா?

சரி போடுங்க! ஹமாம் சோப் ஆறு! சர்ப் எக்செல் 6 போடுங்க!

சர்ப் எக்செல் இல்லே! ரின் இருக்கு போடவா?

சரி போடுங்க!பில்ஸ்பெரி ஆட்டா அரைகிலோவுல ஒரு டசன்!

பில்ஸ்பெரி இல்லே! நாகா இருக்கு போடலாமா?

சரி போடுங்க!எவ்ளோ ஆச்சு? இந்தாங்க என்று ஒரு பை நிறைய சில்லரையை கொடுக்கிறார்!யோவ் சில்லரையை யார் எண்ணறது? நோட்டா கொடு!

நோட்டு இல்லே..! சில்லரைதான் இருக்கு! நான் கேட்ட பொருளை கொடுக்காம மாத்தி கொடுத்தா நான் வாங்கிட்டேன் இல்லே அதே போல நீங்களும் நோட்டுக்கு பதில் சில்லரை வாங்கிக்க பழகுங்க!

கடைக்காரர் பேந்த பேந்த முழிக்கிறார்.  சந்தோஷ்குமார், பொன்னேரி

மகிழ்ச்சி எங்கே?

  சி.சுரேஷ் தருமபுரி  இன்று ரமணன் மனைவியின் பிறந்த நாள்
     ரமணன் தன் மனைவியிடம் “நளினி நான் ஆசையா  உனக்கு பிடிச்ச  பச்சை கலர்ல பட்டு சேலை வாங்கிட்டு வந்திருக்கேன் அதை ஏன் கட்டிக்கில “
   அவளோ வாடிய முகத்தோடு “எனக்கு எதுவும் பிடிக்கல வெறுமையா இருக்குதுங்க”என்றாள்
   “நளினி உனக்கு நான் என்ன குறை வச்சிருக்கேன் இன்னைக்காவது  சந்தோஷமா இருக்கலாம் இல்ல”என்றான்
   அவள்  மெலிதாக சிரித்து “உங்க மேல எல்லாம் எனக்கு எந்த கோபமும் இல்லைங்க” என பெருமூச்சு விட்டாள்
  அவனோ கண்ணீர் சிந்த” அப்ப சந்தோஷமா இருக்கலாம் இல்ல எனக்கும் உன்ன விட்டா யாரு உறவுன்னு சொல்லிக்க ஹாஸ்டலில்தான் தனியா கஷ்டப்பட்டு வளர்ந்தேன்” 
  “என்னைய மன்னிச்சிடுங்க என்ன ட்ரை பண்ணாலும் என்னால சந்தோஷமா இருக்க முடியல”
  “சரி வெளியாவது போயிட்டு வரலாமா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்”  
  பிறகு அவளை ஆக்டிவ் ஹொண்டாவில் உட்காரவைத்து  அடுத்த தெருவில் இருந்த மெர்சி ஹோம்க்கு அழைத்து சென்றான்
  அங்கே பெற்றோர்களை இழந்த கடவுளின் குழந்தைகள் இவர்களின் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்
பிறகு கேக் வெட்டி ஹேப்பி பர்த்டே கொண்டாடப்பட்டது
நளினிக்கு இது ஒரே சர்ப்ரைசாக இருந்தது
  பெருமகிழ்ச்சி அடைந்தாள் நான்கு மாதங்களுக்கு முன்பு வயிற்றில் கருவிலே சிதைந்த குழந்தையை குறித்ததான துக்கத்தை மறந்து அந்த பிள்ளைகளோடு  தன் பிறந்தநாளை சந்தோசமாய் கொண்டாடினாள்

எதிர் சேவை! நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்!

எதிர் சேவை!  பரிவை.சே.குமார்.

மனசு என்ற வலைப்பூவில் எழுதி வரும் அமீரக எழுத்தாளரும் மண்ணின் மைந்தருமான பரிவை.சே.குமார் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு. எதிர் சேவை. கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்து இருக்கிறது.

பரிவை.சே குமார் தன் வலைப்பூவிலும் மற்ற மின்னிதழ்களிலும் எழுதிய பன்னிரண்டு கதைகளின் தொகுப்பு இந்த நூல். குமாரின் எழுத்துக்களை நான் வலைப்பூவில் மிகவும் விரும்பி வாசித்து இருக்கிறேன். அந்த எழுத்துக்களில் தேவையற்ற வர்ணனைகளோ வாசகர்களை ஈர்க்க வேண்டும் என்ற வர்ண ஜாலங்களோ இருக்காது. யதார்த்தமான எழுத்தும் அழுத்தமான உரைநடையும் தென் மாவட்டத்து மக்களின் வட்டார மொழியும் அவர்களின் வாழ்க்கை முறையும் அவர் எழுத்துக்களில் ஜீவித்து இருக்கும்.

 ஒரு சிறுகதையை வாசிக்கும்போது அந்த மாந்தர்களாகவே மாறி வாசிப்பது சுகானுபவம். அந்த சுகானுபவம் எல்லோருடைய  சிறுகதைகளிலும் கிடைக்காது. குமாரின் கதைகளில் அந்த அனுபவம் நமக்கு எப்போதும் கிடைக்கும். இந்த சிறுகதை தொகுப்பிலும் பன்னிரண்டு சிறுகதைகளிலும் உள்ள கதை மாந்தர்களாக படிப்பவர்களை மாறிவிடச்செய்திருப்பது அவரது எழுத்தின் வலிமையைக் காட்டுகிறது.

நினைவின் ஆணிவேர் காதல் திருமணம் ஒரு குடும்பத்தில் எத்தனை வலிகளை உண்டாக்கிவிடுகிறது என்பதையும் காதலித்து மண்ந்தவனின் குற்ற உணர்ச்சியையும் காதலியான மனைவியின்  நினைவிழப்பை சரியாக்க அவன் படும் துயரையும் சொல்கிறது. இக்கதை வெட்டி ப்ளாக்கர்ஸ் சிறுகதைப்போட்டியில் முதல் பரிசினை பெற்றது என்பது கூடுதல் தகவல்.

கிராமத்துப்பெண் நகரத்துக்கு வந்து வீட்டு வேலை செய்கிறாள். பதின் பருவத்தில் அவள் தீபாவளிக்கு ஊருக்குச் செல்ல வேண்டும் என்று ஆவலோடு இருக்கையில் இரண்டு வருடங்களாக மறுக்கப்பட்ட அவள் கனவு நிறைவேறும் வேளையில் ஊரிலிருந்து வரும் தகவல் அவள் கனவை கலைத்துவிடுகிறது கூடவே நம் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.

வசதியான மாமா, வசதி குறைந்த அத்தைப்பையன் குடும்பங்களை கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது எதிர்சேவை. மாமா குடும்பம் தன் வீட்டில் பெண் எடுக்காது வசதியான வீட்டில் பெண் எடுப்பதால் கோபம் கொண்ட சரவணன் மனமும் மாறுகிறது அழகரின் எதிர்சேவையில்.

பங்காளிகளுக்குள் இருக்கும் தேவையற்ற வீராப்பும் அதன் முரண்பாடுகளையும் எடுத்துச்சொல்கிறது வீராப்பு.

அண்ணன் தங்கை பாசத்தை தன் கையில் பணமில்லாவிட்டாலும் தங்கைக்கு தீபாவளி சீர் கொடுக்கும் மகாலிங்கம் அண்ணன் கண்முன்னே நிற்கிறார் ஜீவ நதியில்

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நாற்காலி இருக்கும். அதைச்சுற்றி ஒர் கதை இருக்கும் அப்பாவின் நாற்காலியிலும் அப்படி ஒரு கதை இருக்கிறது படித்தால் நெகிழ்ந்து போவீர்கள்.

இந்த நூலில் உள்ள பன்னிரண்டு கதைகளும் பன்னிரண்டு முத்துக்கள். அவற்றில் சில முத்துக்களையே உங்கள் முன் காட்டியிருக்கிறேன். புத்தகத்தை வாசித்து முடிக்கையில் நம் மனதில் ஒரு நிறைவை ஏற்படுத்திவிடுகின்றது இந்த சிறுகதை தொகுப்பு. அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் இத்தொகுப்பு.

96 பக்கங்கள் அழகிய வடிவமைப்பு. தரமான அட்டை மற்றும் தரமான் தாளில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள் கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகத்தார்.

விலை. ரூ 100.

கிடைக்குமிடம்: கலக்கல்ட்ரீம்ஸ் பதிப்பகம், எண் 3 நேரு தெரு, மணிமேடு தண்டலம். பெரிய பணிச்சேரி, சென்னை 600122. அலைபேசி: 9840967484

மங்கள கிரி ஸ்ரீ பானக நரசிம்மர்!

மங்கள கிரி ஸ்ரீ பானக நரசிம்மர்!

  ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் இருந்து குண்டூர் செல்லும் வழியில் இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மங்களகிரி என்னும் வைணவத்தலம். இந்த தலத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மராக ஸ்ரீதேவியை இடது மடியில் அமர்த்திக்கொண்டு அருள்புரிகிறார் மகாவிஷ்ணு. இக்கோயிலுக்கு அருகில் மலை மீதுள்ள குகை ஒன்றில் ஸ்ரீ நரசிம்மர் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவருக்கு பானகம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இவரே ஸ்ரீ பானக நரசிம்மர் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

    பாரதத்தில் உள்ள மலைகள் மகேந்திரம், மலையம், ஸஹ்யம் சுக்திமான், ருக்ஷம் விந்தியம் பாரியாத்ரம் என்ற சப்த குல பர்வதங்கள் என்று விஷ்ணுபுராணத்தில் கூறப்படுகிறது. ஸ்ரீ தேவியாகிய மகாலட்சுமி அமிர்தத்தை விஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து தவக்கோலத்தில் நின்றதன் காரணமாக பாரியாத்ர பர்வதத்திற்கு மங்களகிரி என்ற பெயர் வந்தது. ஹஸ்தகிரி, தர்மாத்ரி, தோத்தாத்ரி, முக்தியாத்ரி, சபலதா என்பவை அதன் மற்றபெயர்களாகும்.

   மங்களகிரி மலையில் மேய்ந்துவந்த பசு ஒன்று தினமும் மாலையில் பால் இல்லாமல் திரும்பியதை கண்ட பசுவின் சொந்தக்காரன் சந்தேகித்து பசுவை பின் தொடர்ந்து கண்காணித்து வந்தான். அச்சமயம் ஒருநாள் இரவும் பகலும் கூடும் அந்தி வேளையில் நிழல் உருவம் ஒன்று அப்பசுவின் பாலை அருந்திவிட்டு அருகிலிருந்த குகையில் சென்று மறைவதைக் கண்டான்.

    அன்று இரவு அவனது கனவில் ஸ்ரீ மகாலட்சுமி சமேதராய் ஸ்ரீ நரசிம்மர் காட்சி தந்து தான் நொமுச்சி என்ற கொடிய அசுரனுக்காக குகையில் மறைந்திருப்பதாக கூறி மறைந்தார். மறுநாள் அவன் அந்த குகைத் துவாரத்தில் பசுவின் பாலை ஊற்றினான்.  ஆனால் அதிலிருந்து வழிந்துவிட்ட பாதி பாலை பிரசாதமாக வீட்டுக்கு எடுத்துச்சென்றான்.

   அந்தப் பகுதியை ஆண்டுவந்த அரசன் இதைக் கேள்விப்பட்டு ஸ்ரீ நரசிம்மருக்கு குகைமீது கோயில் எழுப்பியதாக மங்களகிரி தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

   கொட்டைப்பாக்கில் செலுத்திய ஊசிமுனையில் ஒற்றைக்கால் கட்டை விரலில் சூரியனை நோக்கி நின்று பிரம்ம தேவனை தியானித்து தவம்புரிந்தவன் கொடிய அரக்கன் நொமூச்சி. அவனுக்கு காட்சி தந்த பிரம்ம தேவன் எந்த மானிடனாலோ, ஆயுதத்தினாலோ நொமூச்சிக்கு மரணம் ஏற்படாது என்ற வரத்தை கொடுத்துவிட அரக்கன் தேவர்களை துன்புறுத்த அவர்கள் மஹாவிஷ்ணுவை சரணடைந்தார்கள் அதையடுத்து மஹாவிஷ்ணு நரஸிம்ம மூர்த்தியாக மங்களகிரி குகையினுள் நொமூச்சியின் வருகைக்காக காத்திருந்தார். இந்திரன் விடுத்த சக்ராயுதத்தை தன் விரல்களில் ஏற்றுக்கொண்டு குகையருகில் நொமூச்சியை சம்ஹரித்தார் என்று பிரம்மவைவர்த்த புராணத்தின் சங்கரகீதை கூறுகிறது. ஸ்ரீ நரசிம்மரது நகங்கள் சுதர்சன சக்கரத்தின் அம்சமாக இதன் காரணமாக கருதப்படுகிறது.

   கிருத யுகத்தில் அவ்வாறு அமிர்தத்தை அருந்திய நரசிம்மர், திரேதாயுகத்தில் பசுநெய்யையும் துவாபர யுகத்தில் பசுவின் பாலையும் கலியுகத்தில் பானகத்தையும் அருந்தி அருள் பாலிக்கிறார் என்று கூறப்படுகிறது.

   மங்களகிரி மலை எண்ணூறு அடி உயரம் கொண்டது. நானூறு படிகள் ஏறினால் நரசிம்ம தரிசனம் கிடைக்கும். அடிவாரத்தில் பிரம்மராம்பிகை சமேத மல்லேஸ்வரரையும் அருகில் உள்ள கருடாழ்வாரையும் தரிசித்து விட்டு மலை ஏறத் தொடங்கலாம்.

   ஐம்பது படிகள் ஏறியதும் பால்செட்டு வெங்கடேஸ்வர சுவாமியைத் தரிசிக்கலாம். ஒரு சமயம் சர்வ சுந்தரி என்ற அப்சரஸ் பெண் கொடுத்த சாபத்தினால் நாரத மஹரிஷி பாலவிருட்சமாக மாறி நின்றார். வேங்கடேஸ்வர சுவாமி அருகே வளர்ந்த அந்த பால்செட்டு செடி பிற்காலத்தில் மலையடிவாரத்தில் கருடாழ்வார் சன்னதி அருகில் நடப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

  புத்திரப்பேறு கிடைக்காத பெண்கள் ருதுஸ்நானம் முடிந்த தினம் இந்த பால் விருட்சத்தை வலம் வந்து பழங்களை வினியோகித்தால் அவர்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டும் என்ற நம்பிக்கை இங்கு காணப்படுகிறது

     நரசிம்மர் சிலை அகன்ற பித்தளை வாயுடன் உள்ளது. பெரிய சட்டிகளில் பானகம் தயாரித்து வைத்துள்ளனர். இதில் நான்கைந்து சட்டி பானகத்தை நரசிம்மரின் அகன்ற வாயில் ஊற்றுகிறார் அர்ச்சகர். அப்போது மடக் மடக் என மிடறல் சத்தம் கேட்கிறது. குறிப்பிட்ட அளவு குடித்ததும் சத்தம் நின்று விடுகிறது. சட்டியில் இருக்கும் மீதி பானகத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விடுகிறார். சில சமயங்களில் நரசிம்மர் வாயில் இருந்து பானகம் வெளியேயும் வருகிறது. இந்த வழிபாட்டுக்கு கட்டணம் ரூ.45.  கோயிலிலேயே பானகம் கிடைக்கிறது. இந்த மலை முன்பு  எரிமலையாக இருந்ததாம். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், வெல்லமும், பானக நீரும், தேங்காய் உடைத்த தண்ணீரும் கொட்டிக்கிடந்தாலும், நரசிம்மர் சன்னதியில் ஒரு ஈயோ எறும்போ பார்க்க முடியாது. சர்க்கரையும், எலுமிச்சையும் சேர்ந்த கரைசல் இந்தப்பாறையில் படும்போது, அதன் சூடு தணிந்து, எரிமலை வெடிக்கும் வாய்ப்பு குறைவதற்காக இவ்வாறு செய்யும் பழக்கம் வந்திருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. நமது முன்னோர் எவ்வளவு பெரிய விஞ்ஞான ஆர்வலர்கள் என்பதற்கு இதுவே சான்று.

   கிருதயுகத்தில் தாங்கள் செய்த நன்மைக்காக சொர்க்கத்தை அனுபவித்த உயிர்கள் மீண்டும் பிறப்பை சந்திக்க காத்திருந்தன. மீண்டும் பூலோகம் செல்ல வேண்டியிருந்ததை எண்ணி வருந்தி இந்திரனிடம் முறையிட்டன. இந்திரன் அவற்றிடம், பூலோகத்திலுள்ள மங்களகிரிக்கு சென்று நரசிம்மரை யார் வழிபடுகிறாரோ, அவர் மீண்டும் சொர்க்கம் பெறுவார், என்றான். அதுபோல, திரேதாயுகத்தில் உயிர்கள் செய்த பாவமும் மங்களகிரி வந்ததால் நீங்கி, பிறப்பற்ற நிலை பெற்றனர். இந்த ஊர் அஞ்சனாத்ரி, தோட்டாத்ரி, முக்தியாத்ரி, மங்களகிரி என்ற பெயர்களால் யுகவாரியாக அழைக்கப்பட்டிருக்கிறது.

முக்தி அளிக்கும் ஸ்ரீ பானக நரசிம்மரை ஒருமுறை சென்று வழிபடுவோம்! வாழ்வில் வளம் பெறுவோம்!

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 20

உங்கள் ப்ரிய “பிசாசு”

முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் கூட்டி வரும் செல்விக்கு பேய் பிடித்துள்ளதால் பாயிடம் அழைத்து சென்று தங்க வைக்கின்றனர். அங்கிருந்து தப்பித்து வரும் செல்வி வழியில் சாலையில் நடக்கும் ஒரு விபத்தை பார்த்து விகாரமாக சிரிக்கின்றாள்.

இனி:

      மணி சுமார் விடியற்காலை மூன்று இருக்கும் திடுமென விழித்துக் கொண்டான் வினோத். தூரத்தில் ஆம்புலன்சின் சைரன் ஒலியும் பதட்டமான குரல்களும் அவன் காதில் ஒலிக்க எழுந்து வெளியே வந்தான். மவுல்வியும் அப்போதுதான் எழுந்து வெளியே வந்திருந்தார். பனிமூடியிருந்தது அந்த பிரதேசமே தூரத்து காட்சிகள் ஒன்றும் விளங்க வில்லை!

     என்ன தம்பி! இவ்வளவு சீக்கிரம் எழுந்திட்டீங்க? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் இல்ல!

    இல்லே திடுமென விழிப்பு வந்துடுத்து? ஆமாம் அது என்ன சத்தம் ஆம்புலன்ஸ் சைரன் மாதிரி கேட்டுதே?

      ஆம்புலன்ஸ்தான் தம்பி! முன்னே மாதிரி இல்லே தம்பி இப்ப உடனடியா வருது! அரசாங்கம்தான் 108 சேவையை அறிமுகப்படுத்தியிருக்கே! அவர் சாதாரணமாய் சொல்லிக் கொண்டிருக்க இல்லே பாய்! அப்ப இந்த பகுதியில ஏதாவது விபத்து நடந்திருக்கணும் இல்லையா? எனக்கு சந்தேகமா இருக்கு? செல்வி இருக்காளான்னு பார்க்கணும் என்றான் வினோத்.

    தம்பி நீங்க ரொம்பவே பயந்து போய் இருக்கீங்க? செல்வி எங்க கட்டுப்பாட்டில் இருக்கும் வரைக்கும் வெளியே போக முடியாது.

  இல்ல பாய்? எதுக்கு சந்தேகம் ஒரு எட்டு பார்த்திட்டு வந்திடலாம்!

  சரி வாங்க போவோம்!

 இருவரும் நடந்து செல்வியின் அறை பக்கம் வந்தனர். அறைக்கதவு உட்புறம் தாழிடப்பட்டு இருந்தது. பார்த்தீங்களா? உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருக்கு! உள்ளேதான் தூங்கிகிட்டு இருக்கணும்.

    எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு?

சரி ஜன்னல் வழியா எட்டி பார்த்திடுவோம்!

  ஜன்னல் வழியாக நோக்கிய போது அங்கே செல்வி தலையை விரித்து போட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். பார்க்கவே பயங்கரமாக இருந்தது. சந்திரமுகி ஜோதிகா போன்றதொரு கோலம்! விதிர்விதிர்த்து போய் நின்ற வினோத் என்னமோ நடந்திருக்கு என்று முணுமுணுத்துக் கொண்டான்.

   பாயும் எட்டிப்பார்த்தார்! அம்மா செல்வி! என்று குரல் கொடுத்தார்! பதில் இல்லை! அம்மா செல்வி! இரண்டாவது முறை குரல் கொடுத்த போது கோபத்துடன் திரும்பிய செல்வி, நான் செல்வி இல்லை! ப்ரவீணா!  என்றாள்.

     சரி ப்ரவீணா! ஏன் இப்படி உட்காந்திருக்கே! படுத்து தூங்கறது தானே?

தூங்கறதா! இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கேன்! இனிமே முடிக்கிறவரைக்கும் எனக்கு தூக்கம் ஏது? என்றாள்.

   என்னம்மா சொல்றே?

ஆமாம் என் கணக்கு இன்னிக்குத்தான் துவங்கியிருக்கு!

வெறிபிடித்தவள் மாதிரி அப்படியே சுவற்றை பார்த்து சிரிக்கத்துவங்கினாள். அந்த ரெண்டுங்கெட்டான் நேரத்தில் அந்த மசூதியே அதிரும் வண்ணம் அவள் சிரிப்பு இருந்தது.. இருவரும்  ஏதும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

***********************************************************

குஹாத்ரி மலையின் அந்த அதிகாலை போதில் தன் நண்பனை அழைத்து வந்த சித்தப்பா சுவாமிஜின் மாந்திரீக சக்தி கண்டு மலைத்து போயிருந்தான் முகேஷ். அதே சமயம் ரவி கொலைகள் பண்ணியிருப்பதாக சொல்லவும் ஆடிப்போனான்!

   சித்தப்பா! இதெல்லாம் நிஜமா? இவன் துளி ரத்தம் கண்டா கூட பயப்படுவான்!

உண்மைதான் முகேஷ்! இவன் கொலை பண்ணியிருக்கான்! ஆனா பண்ணலை!

கொஞ்சம் புரியும் படியா சொல்றீங்களா! எஸ். ஜே சூர்யா மாதிரி பேசி குழப்பறீங்களே!

    இவன் ரெண்டு கொலைகள் பண்ணியிருக்கான்! ஆனா அதை பண்ணியது இவன் இல்லை!

   மறுபடியும் தெளிவா குழப்பறீங்களே சித்தப்பா!

  இன்னுமா புரியலை முகேஷ்! இவன் மேல இருக்கற ஆவிதான் அந்த கொலைகளை பண்ணியிருக்கு! அதுக்கு இவன் உடல் உதவி இருக்கு அவ்வளவுதான்!

  ஆனா சித்தப்பா! சட்டம் இதை ஒத்துக்குமா? இவன் தான் செய்தான்னு இவனுக்கில்லே தண்டனை கிடைக்கும்!

  நீ சொல்றது நிஜம் தான்! ஆனா இவன் நேரடியா அந்த கொலைகளை பண்ணலையே பயமுறுத்தியே சாகடிச்சு இருக்கான். இவன் அந்த மரணங்களுக்கு மறைமுக காரண கர்த்தாதான்

   எனக்கு ஒண்ணும் புரியலை சித்தப்பா!

     இவன் நேரடியா போய் கத்தி எடுத்தோ துப்பாக்கி எடுத்தோ கொலை செய்யலை! பாதிக்கப்பட்டவங்க மிரண்டு போய் அவங்களாவே முடிவை தேடிக் கிட்டாங்க!

   அப்ப இவனை கொலை காரன்னு நீங்க சொன்னீங்க!

  என்னை பொறுத்த வரைக்கும் கொலைக்கு தூண்டி விட்ட இவன் கொலைக் காரந்தான்.

   சரி சித்தப்பா! இவனை எப்படி குணப்படுத்தறது?

நேத்திக்கு நீ பார்த்தியே அந்த மாதிரிதான்! சரி நான் குளிச்சிட்டு வந்திடறேன்! பூஜையை ஆரம்பிக்கலாம் என்று சென்று விட்டார் சித்தப்பா.

   காலை ஒன்பது மணி இருக்கும் பூஜைகள் ஆரம்பமாயின. அரிசி மாவினால் அறுகோணத்தில் கோலமிட்டு அதன் முனைகளில் சூலம் வரைந்து சுற்றி ஓம் போட்டிருந்தது. அதன் மையத்தில் ஏதோ எழுத்துருக்கள். அந்த கோலத்தின் மையத்தில் ரவியை நிற்க வைத்தார்கள்.

    பூசணிக்காய் எலுமிச்சை, ஆத்து தும்மட்டிக்காய் போன்ற வஸ்துக்களும் மாவினால் செய்யப்பட்ட ஒரு பொம்மையும் இருந்தது. சாதம் மூன்று கலர்களாய் இருந்தது.

   பூஜை ஆரம்பித்தது. முதலில் ஏதோ மந்திர உச்சாடனம் செய்து கொண்ட சுவாமிஜி வேப்பிலையால் ரவியை  வருடி வேப்பிலை அடிக்க ஆரம்பிக்க  ரவி விகாரமாய் சிரித்தான். அந்த வேப்பிலையை தூக்க முடியாமல் கனத்தது. கஷ்டப்பட்டு தூக்கி அடித்த சுவாமிஜி அதை முறித்து தூர எறிந்தார்.

   முகேஷ் என்ன சித்தப்பா! என்றான்.

  இது ரொம்ப சாதாரணமான பேய் இல்லை! வேப்பிலை அப்படியே கனத்தது! இதை விரட்ட நிறைய பூஜை பண்ண வேண்டியிருக்கும்

    என்னை ஏன் விரட்டறீங்க? நானாவே போயிருவேன்! என் வேலை முடிய போவுது? என்றான் ரவி!

   என்ன சொல்றே?

 என் வேலை முடிய போவுது? இன்னிக்கு ஒரு இரவு மட்டும் என்னை விட்டு வைங்க! இந்த கிராமத்திலேதான் என் எதிரி இருக்கான்! அவனை நான் முடிக்கணும் என்றான் ரவி

  என்னது இந்த கிராமத்திலேயா? நீ தப்பு செய்யற ரவி!

  நான் ரவி கிடையாது! அவன் உடம்புல வாழறேன்!

 அப்ப நீ யாரு!

   நான் நான் யாரா? நான் தான் மகேஷ்! என்று விகாரமாக சிரித்தான் ரவி!

                                             மிரட்டும்(20)

நோயாளி : இங்கே அட்மிட் ஆன முதல் நாளே உங்க இதயத்தை நாான் திருடிட்டேன்..தெரியுமா? 

நர்ஸ் : உங்களுக்கு ஆபரேசன் பண்ணும் போது டாக்டர் உங்க கிட்னியை திருடிட்டார் அது தெரியுமா?

 இந்து குமரப்பன்  விழுப்புரம்.

சிரி தர்பார்!

ஓட ஓட  தூரம் குறையலை…!  மந்திரியாரே!

    நாசமாப் போச்சு!  மன்னா! நீங்க இப்போ அரண்மனையில் சைக்ளிங் பயிற்சியில் இருக்கிறீர்கள்!

 எஸ்.வேதா, நத்தம்

நாடுமுழுக்க ஊரடங்கு போட்டுவிட்டோம்! அடுத்து என்ன மன்னவா?

 நாம் போய் பதுங்கு குழியில் அடங்குவோம் வாருங்கள் மந்திரியாரே!

எஸ்,எஸ்,பாபு, பஞ்செட்டி,

 எதிரி கோட்டை வாசல் வரை வந்துவிட்டான் மன்னா…!

கோட்டை மேல் நின்று கைதட்டி பன்னீர் தெளித்து, விளக்கேற்றி பார்ப்போமா மந்திரியாரே…!

எஸ்.வேதா, நத்தம்.

     புலவர் ஏன் எகிறி குதித்துக் கொண்டு இருக்கிறார்?

மன்னர் கொடுத்த செக் பவுண்ஸ் ஆகிவிட்டதாம்!

சின்ன சாமி, நத்தம்.

                                  யாரங்கே….?

மன்னா! இப்படியெல்லாம் கத்தி எனர்ஜி வேஸ்ட் பண்ணாதீர்கள்! ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் உடனே வந்துவிடுகிறேன்!

எஸ்,எஸ்,பி, பஞ்செட்டி,

  எதிரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாராமே மன்னர் அவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது?

 அது எங்கள் நாடு கொரானோ பாதிப்புள்ள பகுதி என்ற எச்சரிக்கை தானே!

சின்னசாமி, நத்தம்.

 .

மன்னருக்கு போர் என்றாலே அலர்ஜி!

அதற்காக “கொரானாவுக்கு எதிரானா போரில்” கூட கலந்துகொள்ளமாட்டேன் என்று சொல்வது சரியில்லை!

சின்னசாமி, நத்தம்.

எதிரி பதுங்கி பதுங்கி வருகிறான் மன்னா?

இப்படி திடீரெனக் கூறி என்னை விழிபிதுங்க வைப்பதே உமக்கு வாடிக்கையாகிவிட்டது தளபதியாரே!

எஸ். வேதா, நத்தம். 

 புலவர் மன்னரின் அருகில் வந்த்தும் மன்னர் ஒதுங்கி  கொண்டாரே என்ன விஷயம்?

  அவர் கொரானாக் கவிதைகள் எழுதி வந்திருக்கிறாராம்!

 எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி,

என்னது மன்னர் கொடி அசைந்ததும் காற்று வந்த்துன்னு பாட்டு பாடிக்கிட்டு இருக்கார்….!

 எதிரி இவரது சமாதானத்தை ஏத்துக்கிட்டு வெள்ளைக் கொடியை அசைச்சதும்தான் அவருக்கு மூச்சே வந்தது அதைத்தான் ஜாடையா பாடறார்!

வில்வமணி, பொன்னேரி.

நன்றிக்கடன்!

நன்றிக்கடன்!

    சீ.  குறிஞ்சிச் செல்வன்.

 லட்சுமி அக்கா ஜாடையில் போய்க் கொண்டிருந்தாள் அவள்….வயசு முப்பத்தைந்து இருக்கும்….. 

என்.எஸ்.பி. ரோட்டில் நின்றிருந்த கார்மேகத்திற்கு மனம் கிடந்து துடித்தது…அவளிடம் பேசவேண்டும்  போல் ஆசையாய் இருந்தது…..


ஜன நெரிசல் கூட்டத்தை கிழித்துக் கொண்டு ஓட்டமாய் ஓடினான்….

லட்சுமி அக்காவை பார்த்து பேசி எவ்வளவோ வருஷங்கள் ஆகியிருந்தது….


அவளை நெருங்கினான்…


பழக்க தோஷத்தில்  அ…க்கா…. என்று  கூப்பிட்டான்….. மூச்சு வாங்கியது அவனுக்கு…..


இவனை தவிர்க்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல்
அவஸ்தைபட்டாள் , அவள் ……


திகைப்பை மறைக்க மிகவும் சிரமப்பட்டு புன்னகைத்து வைத்தாள்…..


“லட்சுமி அக்காதானே…நீங்க….”


 தலை மட்டும் ஆடியது.


அவள் எதுவும் பேசவில்லை…


“இங்கே திருச்சி பக்கம் எப்போ வந்தீங்க?….”


“இப்பத்தான்”….. 


“இன்னும் என்னென்ன கேட்கப் போகிறானோ?….”


— படபடப்பாய் இருந்தது அவளுக்கு….


“வா….தம்பி ஹோட்டலுக்கு போய் சாப்பிடலாம்…. “


 சாதுர்யமாய் கார்மேகத்தை அழைத்தாள் லட்சுமி அக்கா…..


“இல்லக்கா….இருக்கட்டும்…..”


வா…கண்ணு…  எங்க ஊருக்கு வந்திருக்க…சாப்பிடாமல் போகலாமா ….. அக்கா தானே கூப்பிடறேன்…..சிநேகமாய் அவன் கைப்பற்றினாள்….


முன்பென்றால் “ஜீலிர்” ரென்றிருந்திருக்கும் அந்தத் தீண்டல்….. 


இப்போது அப்படி  இருக்கவில்லை அவனுக்கு……


கார்மேகம் அவள் அழைப்பை மறுக்கவில்லை……


இருவரும் அருகில் இருந்த ஹோட்டல் நோக்கி நடந்தார்கள்…..


லட்சுமி அக்காவிடம் பேச நிறைய விஷயங்கள் இருந்தது அவனிடம்…


அக்காவின் புருஷன் மாயாண்டி மச்சான்   அதீத குடியாலும்,  பெண்கள் ஆசையினாலும் சகலமும் தொலைத்து… ஊரில் இருந்த போதே
செத்துப்போனார்..  


அது இருக்கும்
பத்து வருஷம்…. 


அப்போது கல்லூரிக்கு போய்க் கொண்டிருந்தான் இவன்… 


 அக்கா இப்போதும்….பூவும் பொட்டுமாய் தான் இருந்தாள் … 


எதுவும் கேட்கவில்லை அவன்….


கொஞ்சம் பருத்து
சோகை பிடித்து  நிறையவே உருமாறி இருந்தாள்  லட்சுமி அக்கா…. 


முகத்தில் , கண்களில்
சோகத்தின் தடயம் எதுவும் தென்படவில்லை அவளிடம்……


எதுவும் கேட்டு சங்கடப்படுத்தக்கூடாது   என்பதில்
உறுதியாய் இருந்தான் கார்மேகம்…..


அதேசமயம்,  அவன் எதுவும் கேட்டுவிடப்போகிறானோ  என்று பயந்து கொண்டே தான் சாப்பிட்டாள் அவள்…..


இடையில்   அவள் செல்போனுக்கு இரண்டு முறை அழைப்பு வந்தது, ..


 கார்மேகத்தை பார்த்துக் கொண்டே பேசாமல் துண்டித்தாள்….


அவனுக்கு சங்கடமாய் இருந்தது…


அவளுக்கும் அவன் முன்னால்
அந்த நபரிடம் பேச. ஏனோ கூச்சமாய் இருந்தது…..


மின்னல் வேகத்தில் யோசித்தாள்.
இவனைப் பார்த்தாள்….


“தம்பி…. வயலூர் பஸ்ஸு குறிப்பிட்ட நேரத்துக்குதான் வரும்….. மணி ஆயிட்டு….வர்ற நேரம்  தான்….வரட்டா….” எழுந்தாள்…


 “நீ பொறுமையா சாப்பிடு தம்பி…. நான் பில்லு கொடுத்துட்டு போறேன்…..”


சட்டென்றெழுந்து அவசரமாய் கைக்கழுவி   மறைந்தாள் லட்சுமி அக்கா….


நன்றாகவே பசித்தது….இருந்தும் இவனால் சாப்பிட முடியவில்லை… 


 பந்துமாதிரி சுருண்டு ஒரு துக்கம் தொண்டை அடைத்தது……


ஹோட்டல் விட்டு வெளியில் வந்தான் கார்மேகம் …..  


ஒரு ஸ்வீட் ஸ்டால் எதிரே நின்று  லட்சுமி அக்கா யாருடனோ செல்
ஃபோனில் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்……


சில பொய்கள் சிற்சில சந்தர்பங்களில் நன்மைகளுக்கானவை…..


சொன்னவர் ஒன்றும் சாதாரண மனுஷர் இல்லை…. பொய்யாமொழி புலவர் என்று கொண்டாடுகிறார்கள் அவரை…..


 இவன்,  வேறு பாதையை தேர்ந்தெடுத்து நடந்தான்…..


“சாப்பிட்ட சோற்றுக்கு நன்றி கடனாய் ஊரில் போய்,  அக்காவை 
கண்டதை யாரிடமும்   சொல்லி விடக்கூடாது….”


 தனக்குள் சொல்லிக் கொண்டான் கார்மேகம். 
——————————————————————————————————————–


அவர் :இது மந்திரவாதி வீட்டு கல்யாணம்னு எப்படி சொல்றே?

இவர் : யாராவது மொய் எழுதாமல்  போனால் ரத்தம் கக்கி சாவீங்கன்னு

எழுதி வைச்சுருக்காரே..!

இந்து குமரப்பன் விழுப்புரம். 

தேன்சிட்டு மின்னிதழ்- எழுத்தாளர் தஞ்சை ப்ரணா இணைந்து நடத்தும் மாபெரும் நகைச்சுவை சிறுகதைப்போட்டி!

மொத்தப் பரிசு ரூ 8000/-

முதல் பரிசு ரூ 3000/- இரண்டாம் பரிசு ரு 2000/- மூன்றாம் பரிசு ரு1500/-

ஆறுதல் பரிசு  மூன்று பேருக்கு  தலா ரூ 500/-

 போட்டிக்கான கதைகள் வந்து சேர கடைசி நாள்: 30-6-2020

முடிவுகள்  ஆகஸ்ட் 2020 இதழில் வெளியாகும்.

பரிசுபெற்ற கதைகள் தொடர்ந்து தேன்சிட்டு மின்னிதழ் மற்றும் தேன்சிட்டு இணையதளத்தில் பிரசுரமாகும்.

போட்டிக்கான விதிமுறைகள்::         கதைகள் சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்க   வேண்டும்.

கதைகள் 800 முதல் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

கதைகள் இதற்கு முன்னர் எந்த இதழிலும் ஊடகத்திலும் மின்னிதழ், இணையதளங்களில் பிரசுரம் ஆகாதவையாக இருத்தல் வேண்டும். படைப்பாளி இது தமது சொந்த படைப்பு வேறு எங்கும் பிரசுரம் ஆகவில்லை என்று சான்றளித்து கையோப்பம் இட்டு அனுப்ப வேண்டும்.

கதைகளை எம்.எஸ்.வேர்டில் யூனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்து மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.போட்டி குறித்து கடிதத்தொடர்போ போன் செய்து விசாரிப்பதை தவிர்க்கவும்.

 போட்டிக்கான கதைகள் நடுவரால் பரிசீலிக்கப்பட்டு தேன்சிட்டு மின்னிதழில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும். நடுவரின் தீர்ப்பே இறுதியானது. .அனுப்பவேண்டிய மின்னஞ்சல் : thalir.ssb@gmaiil.com.   

  போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்!