அன்பார்ந்த வாசகப் பெருமக்களே

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே! வணக்கம்!

        தேன்சிட்டு மின்னிதழின் 23 வது இதழான இந்த இதழ் ஹைக்கூ சிறப்பிதழாக மலர்வதில் பெருமை அடைகின்றேன். தமிழில் எழுதப்படும் குறுகிய வடிவிலான கவிதை வடிவம் ஹைக்கூவின் ரசிகன் நான். பல்லாயிரக்கணக்கான ஹைக்கூக்களை வாசித்து மகிழ்ந்து இருக்கிறேன். தேன்சிட்டு துவக்குகையிலேயே ஹைக்கூவிற்கு என குறும்பா கூடம் என்ற தனிப்பகுதியை துவக்கி ஹைக்கூ எழுத்தாளர்களை சிறப்பித்து உள்ளேன். அந்த வகையில் இப்போது ஹைக்கூவிற்கு என சிறப்பிதழ் வெளியிடுவது தமிழ் ஹைக்கூ எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஒரு பணியாக கருதுகின்றேன். இந்த இதழில் படைப்பாளர்கள் அனுப்பிய ஹைக்கூக்கள் தவிர இணையத்தில் தீவிர தேடுதலில் கிடைத்த  தரமான ஹைக்கூக்களை தந்துள்ளேன். இணைய படைப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

தேன்சிட்டுடன் எழுத்தாளர் ப்ரணா இணைந்து நடத்தும் நகைச்சுவை சிறுகதைப்போட்டிக்கான உங்களின் படைப்புக்கள் கிடைத்து நடுவர் வசம் அனுப்பப்பட்டுள்ளது. நடுவரின் தீர்ப்பும் முதல் பரிசு பெறும் கதையும் அடுத்த இதழில் இடம்பெறும். கலந்து கொண்டோருக்கு எனது வாழ்த்துகள்.

வேலூர் காதல் கவிஞர் முத்து ஆனந்த் அவர்களின் கவிதைக்காதலி தொடர் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. 12 மாதங்களாக உங்களை காதல் பெருவெள்ளத்தில் மூழ்கடித்த கவிதைத்தொடர் நிறைவடைவதை வாசகர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். எதுவொன்றிற்கும் ஆரம்பம் இருக்கும்போது முடிவும் இருக்கும் தானே.  கவிஞர் ப்ரணாவின் பாடல்கள் பலவிதம் தொடரும் இம்மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

 அடுத்த இதழ் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. எனவே விரைவில் புதிய பகுதிகளை எதிர்பாருங்கள். அடுத்த இதழ் நகைச்சுவை சிறப்பிதழாக அமைய உள்ளதால் வாசகர்கள் புதிய சிந்தனையில் அமைந்த புதிய ஜோக்ஸ்களையும் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த நகைச்சுவை சம்பவங்களையும் நகைச்சுவை கதைகளையும் எழுதி அனுப்பி வையுங்கள். தரமான படைப்புக்கள் தேன்சிட்டை அலங்கரிக்கும்.

உலகெங்கும் பரவிய கொரானோ தொற்று தமிழகத்திலும் வேகமாக பரவிவருவது வேதனையளிக்கிறது. அரசாங்கம் ஊரடங்கு அறிவித்தாலும் கொரானாவின் வேகம் குறையாமலிருப்பது மக்களிடம் உள்ள அறியாமையையும் அசட்டுத் துணிச்சலையும் வெளிப்படுத்துகின்றது. அதே சமயம் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் உரிமைகளை இந்த கொடும் தொற்று பறித்துக் கொண்டு இருக்கின்றது. சுதந்திரத்தின் அருமை இப்போது மக்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கும். ஆனாலும் அரசின் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவதால் பாதிப்பு நமக்குத்தான் என்பதை உணர்ந்து  நோய் தொற்றிலிருந்து முழுவதும் விடுபட தன்னாலான ஒத்துழைப்பை மக்கள் கொடுக்க வேண்டும். கூடிய வரை வீட்டிலிருங்கள், வெளியே செல்கையில் முக கவசம் அணியுங்கள். கை, கால், முகம் முதலியவற்றை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். இவையெல்லாம் நோயை நம்மிடம் இருந்து துர விலக்கும் சுயக் கட்டுப்பாடுகள் தான்.

முழுமையாக நோய் கட்டுப்படுவது நம் கையில் இல்லை. அது இறைவன் கையில் மட்டுமே. ஆனால் அந்த இறைவன் வாழும் கோயில்களும் இப்போது அடைத்துக் கிடப்பது கிரகங்களின் வலிமையை உணர்த்துகிறது. கோள்களின் இயக்கம் இப்போது நம்மை கட்டுப்படுத்தி வருகின்றது. அந்த ஆதிக்கத்தில் இருந்து விடுபட   இறை நாம ஜெபம் செய்வோம். கிருமியின் பெயரை சொல்லாது இறைவன் பெயரை உச்சரிப்போம். உலகம் மீண்டும் இயல்பு நிலை திரும்ப நேர்மறை சிந்தனைகளை விதைப்போம்.   

தொடர்ந்து தேன்சிட்டில் புதுமைகளை புகுத்திவருவதில் முனைந்து வருகின்றோம்.  உங்கள் கருத்துக்கள் பாராட்டுகள் எங்களை ஒருபடி உயர்த்தி வைக்கும். எனவே உங்கள் மேலான கருத்துக்களை உடனே எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அடுத்த இதழ் நகைச்சுவை சிறப்பிதழ்.  உங்கள் முகங்களில் புன்னகையை சிரிப்பை வரவழைக்க முயற்சிக்கிறோம்! கொரானா என்னும் “புண்”ணில் இருந்து மீண்டு புன்னகை மிளிரும் உலகம் மீண்டும் மிளிரட்டும். அடுத்த இதழில் சந்திப்போம். நன்றி.                                                      அன்புடன்.

                               நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. ஆசிரியர். தேன்சிட்டு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: