உளி விழும் போது..!

                        உளிவிழும் போது!

செந்தில் குமார்  அமிர்தலிங்கம்.
……………………………….

பள்ளிமுடிந்ததும் அழுது கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் ஏழாம் வகுப்பு படிக்கும் மாதவன்.

“ஏன்டா அழுவுற..”என்று கேட்டாள் அம்மா செண்பகம்.

“நான் இனிமேல் ஸ்கூலுக்கே போகமாட்டேன்” என்றான் தேம்பியபடி.

“என்னாச்சுடா கண்ணு, ஏன்டா இப்படி சொல்ற? ஸ்கூல்ல என்ன நடந்துச்சி.?” என அனுசரணையாய் விசாரித்தாள் செண்பகம்.

“என்னை சார் அடிச்சுட்டாரு..” என்றான் கண்களை கசக்கியபடி.

“ஏன் ஒன்ன அடிச்சாரு, நீ தப்பு கிப்பு ஏதும் செஞ்சியா..?” விசாரணையை விநயமாய் முடுக்கினாள்.

“கிளாஸ்மேட் சுதாகர் என்னோட பேனாவை எடுத்துக்கிட்டான். நா அத திரும்ப கேட்டேன், அவன் அத தூக்கி வெளில வீசினதால, எனக்கு வந்த கோவத்துல அவன அடிச்சிட்டேன்..” என்றான் குற்றவுணர்வு ஏதுமின்றி.

“சரி…அப்புறம்?”

” அவன அடிச்சத சார்கிட்ட சொல்லி, எனக்கு அடிவாங்கி வச்சிட்டாம்மா அவன்” என்றான் அழுதபடியே.

“சரி சரி அழாத…போய் முகம் கழுவிட்டு வா. நீ பண்ணினதும் தப்புதான, அதான் சார் அடிச்சிருக்கார். அவர் கிட்ட சுதாகர் பண்ணின தப்ப சொல்லியிருந்தா அவர், உனக்கு பதிலா அவனதான் சாத்தியிருப்பார்” என்றாள்.

எதுவும் பேசாமல் அமைதியாய் நின்று கொண்டிருந்தான் மாதவன்.

“உனக்கு சிநாக்ஸ், அப்புறம் காஃபி வச்சி தரேன். அழக்கூடாது சரியா..?” என்றாள் அம்மா.

“எனக்கு எதுவும் வேணாம், நான்
ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னா போக மாட்டேன், அவ்ளோதான்..” என்றான் பிடிவாதமாக.

செண்பகத்திற்கு கோபம் வந்தது.
“இப்படியே சொல்லிட்டிருந்தீன்னா நான் உன்னப்பத்தி அப்பாகிட்ட சொல்லிடுவேன், அப்புறம் என்ன நடக்கும்ன்னுதான் உனக்கு தெரியுமே, ஒழுங்க இரு படவா..”. என்றாள்.

“அப்பா அடிச்சாலும் சரி, ஒதைச்சாலும் சரி, நான் ஸ்கூல் போகமாட்டேன்னா போகமாட்டேன்தான்.” என்றவன் வீம்பாக பையை தூக்கி எறிந்துவிட்டு அவனது அறைக்குள் சென்று படுத்துக்கொண்டான்.

இரவு அவனது அப்பா மாணிக்கம் வேலை முடிந்து வந்தார். நடந்ததை செண்பகத்தின் மூலமாக தெரிந்துகொண்டவர் மாதவனிடம் சென்றார்.

“டேய் மாதவா.. இங்க பார், எழுந்திரிடா..” என்று எழுப்பினார். எழுந்த அவன் முகம் அழுது அழுது வீங்கிப்போயிருந்தது.

அதைப் பார்த்தவர், அவனை மார்போடு அனைத்துக் கொண்டு மேலும் அதட்டாமல் பொறுமையாக பேசினார்.

“டேய் மாதவா…என்னைய எங்க அப்பா படிக்க வைக்கல, அஞ்சாங்கிளாஸோட நிறுத்திட்டாரு. அந்த வயசுலயே ஒரு ஒர்க்ஷாப்ல சேர்த்துவிட்டுட்டாரு. சரியா படிக்காததுனால இன்னைக்கு வரைக்கும் நான் ரொம்ப கஷ்டப்படறேன்.”

அவன் அன்னாந்து அப்பாவின் முகத்தை பார்த்தான், கண்கள் கலங்கி வெளியேரத்துடித்த கண்ணீர் விளக்கு வெளிச்சத்தில் பளீரிட்டது.

“நீ நல்லா படிச்சா பெரிய ஆளா வரலாம், ஃபேன் காத்துல உட்கார்ந்துகிட்டு நாலு பேர வேல வாங்கலாம், கைநிறைய சம்பாரிச்சு வீடு, பங்களா, கார்னு வாங்குறத ஒரு அப்பாவா கண்குளிர பார்க்கணும் நான். எனக்கு கெடைக்காத வாய்ப்பு வசதிகள் ஒனக்கு கெடைக்கணும் சரியா?” என்றார் நிதானமாக.

“எனக்கு அதெல்லாம் வேணாம்ப்பா நானும் ஒர்க் ஷாப்புக்கே வேலைக்குப் போறேன், எனக்கு ஸ்கூலுக்குப் போக பிடிக்கல.” என்றான் மாதவன்.

“டேய் மாதவா நீ நல்லா படிச்சி பெரிய ஆபீசரா வரணும், அத பார்த்து நானும் அம்மாவும் சந்தோஷப்படணும்னுதான்டா இவ்ளோ கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம். நீ என்னடானா இந்த வயசுலயே வேலைக்குப் போறேன்னு சொல்ற” என்றவர் கண்ணிலிருந்து கண்ணீர் உருண்டோடியது.

அருகில் நின்றிருந்த செண்பகம்,
“தம்பி நீ நாளைக்கு வேணா லீவு எடுத்துக்க, ஆனா அதுக்கு அடுத்த நாள்ல இருந்து ஒழுங்கா ஸ்கூலுக்கு பாேகணும் சரியா கண்ணு” என்று கெஞ்சினாள்.

அவன் ஏதும் பேசாமல் திரும்பவும் தலையணையில் முகம் புதைத்து படுத்துக்கொண்டான்.

அப்பா எழுந்து வெளியே சென்றுவிட, செண்பகம் தட்டில் சாப்பாடு போட்டு எடுத்துவந்தாள். அவன் சாப்பிட மறுத்துவிட, அவளும் சாப்பிடாமல் பசியோட படுத்து உறங்கிவிட்டனர்.

மறுநாள் காலையில் அப்பா வேலைக்கு சென்றுவிட, அம்மா சமையலறையில் இருந்தாள். இவன் படுக்கையை விட்டு எழுந்தவன், பல் துலக்கிவிட்டு சாப்பிட வந்தான்.

“நாளையிலயிருந்து ஸ்கூலுக்குப் போகணும்ப்பா..” என்றாள்.

“வேண்டாம், என்னை ஸ்கூலுக்குப் போகச்சொன்னா, இனிமே நான் சாப்பிடவே மாட்டேன்.” என்று அடம் பிடித்தான்.

அதற்குமேல் இவள் எதுவும் பேசவில்லை, இப்படியே ஒரு வாரம் கழிந்தது. மாணிக்கம் ஒருநாள் பள்ளிக்குப்போய் அவனது ஆசிரியரிடம் பேசினார்.

“இனிமேல் அடிக்க மாட்டேன் என்று சொல்லி அழைத்து வாருங்கள்” என்று சொல்லிவிட்டார் அவர்.

ஒரு நாள் அவனது நண்பன் ஜெகன் வீட்டிற்கு வந்தான்.

“டேய் மாதவா ஏன்டா ஸ்கூலுக்கு வரல?”

“எனக்கு வர பிடிக்கலடா”.

“நாளைக்கு ஆண்டுவிழாடா”

“அப்படியா, டான்ஸ் பாட்டு எல்லாம் இருக்குமேடா..”

“ஆமான்டா மாதவா நீ நாளைக்கு ஸ்கூலுக்கு வரியா?” என்றான் ஜெகன்.

“சார் என்னை அடிப்பாரேடா..”

“அவர் தான்டா உன்னை கூட்டிக்கிட்டு வர சொன்னாரு, இனி அவர் அடிக்க மாட்டாருடா, வாடா ப்ளீஸ்..” என்றான்.

“சரி நாளைக்கு டான்ஸ் பார்க்க மட்டும் நான் வரேன்..” என்றவுடன் மகிழ்ச்சியாகக் கிளம்பினான் ஜெகன்.

மறுநாள் மாலையில் மாதவனும், ஜெகனும் பள்ளியில் கூட்டத்தில் ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டனர்.

விழா ஆரம்பித்தது, சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் அவர்கள் வந்திருந்தார்கள்.

விழா மேடையில் ஆசிரியர்கள் சில பேர் பேசியபிறகு கலெக்டர் பேச ஆரம்பித்தார்.

“அனைவருக்கும் என் இனிய மாலை வணக்கம். நான் இப்போது இந்த மாவட்டத்துக்கே கலெக்டர் ஆகியிருக்கிறேன் என்பதைவிட, நான் பத்தாம் வகுப்புவரை படித்த பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமையாக இருக்கிறது..” என்றார்.

கூட்டத்தின் கைதட்டலில் பள்ளி வளாகமே அதிர்ந்தது.

கலெக்டர் பேசியதை கேட்ட மாதவன் புது உற்சாகம் பிறந்தவனாய் அவரது பேச்சை கேட்க ஆரம்பித்தான்.

“நான் இந்த பள்ளியில் படித்ததை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். எனக்கு படிப்புடன் வாழ்வை கற்றுத்தந்த ஆசிரியர்கள் என்னை கண்டிப்போடும், கனிவோடும் வழிநடத்தினார்கள்..”

“நான் இப்போது இந்த உயர்ந்த நிலையில் இருக்கிறேன் என்றால் அதற்கு எனது பெற்றோர்களும், ஆசிரியர்களும்தான் காரணம்” என்றார்.

மேலும் கைதட்டல்கள் வானைக்கிழிக்க, மாதவன் ஆவலாய்க் கேட்டுக் கொண்டிருந்தான்.

“நான் பலமுறை ஆசிரியர்களிடம் அடி வாங்கியிருக்கிறேன், ஆனால் அவைகளெல்லாம் என் வாழ்வை செதுக்கிய உளிகள்” என்றார்.

மாதவன் மனம் சற்று லேசானது.

மேலும் கலெக்டர் “நான் தற்போது தலைமை ஆசிரியரிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.” என்றார்.

“நான் படித்த வகுப்பறைகளுக்குச் சென்று நான் அமர்ந்து படித்த இடங்களிலெல்லாம் மீண்டும் அமர வேண்டும், அதற்கு அனுமதி தருவீர்களா?” என்றார்.

மிகவும் மகிழ்ந்த தலைமை ஆசிரியர் அவரை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு வகுப்பறையாகச் சென்றார். உடன் சில ஆசிரியர்களும், மாணவர்களும் சென்றனர்.

கலெக்டர் ஒவ்வொரு வகுப்பறையிலும் தான் அமர்ந்த பென்ஞ்சினை ஞாபகப்படுத்தியபடி அமர்ந்து, அமர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக வந்தார். இதைப்பார்த்துக்கொண்டே வந்தான் மாதவன்.

ஏழாம் வகுப்பு அறையில் நுழைந்த கலெக்டர், தான் மாணவனாக அமர்ந்து படித்த இடத்தில் அமர்ந்தார்.

அது மாதவனின் தற்போதைய இருக்கை, இதைப் பார்த்த மாதவன் நெஞ்சம் குதூகலித்தது.

தானும் ஒரு கலெக்டராகவே ஆகிவிட்டதாக மனதிற்குள் மகிழ்ந்தவன்,

பெற்றவர்களின் கரிசனமும்
ஆசிரியரின் கண்டிப்பும்
தன்மீதான அக்கரையினால் விளைந்தது என்பதை உணர்ந்தான் மாதவன்.

முற்றும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: