டெஸ்ட்

டெஸ்ட்  குடந்தை.ஆர்.வி.சரவணன்

ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று இந்த நேரத்தில் எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திருந்தார் ஆங்கில ஆசிரியர். மாதா மாதம் நடைபெறும் டெஸ்ட் தான் அது. அன்றைய டெஸ்ட்டுக்கு நான் படித்து கொண்டு வரவில்லை. காரணம் சோம்பல், திமிர் இதில் ஏதேனும் ஒன்றை போட்டு கொள்ளலாம். டிக்கெட் புக் பண்ணவங்க வந்தாலும் வரலேன்னாலும் ரயில் டயத்துக்கு கிளம்பிடற மாதிரி எவன் படிச்சிட்டு வந்தா என்ன? வரலேன்னா தான் என்ன ? என்பது போல் அன்றைய டெஸ்ட் தொடங்கியது. விடை என்ன எழுதுவது என்றே தெரியாமல் நான் முழித்து கொண்டிருக்க, எல்லாரும் எழுதி கொண்டிருந்தார்கள்.

டேய் எவனாவது இன்னிக்கு எனக்கு துணை இருங்கடா. என்னை தனி ஒருவனா விட்டுராதீங்க என்ற எனது மைண்ட் வாய்ஸ் எனக்கு மட்டுமே கேட்டது. பக்கத்து சீட் மாணவன் சுரேஷை பார்த்து எழுதலாம் என்றால் அவன் என்னை திரும்பி பார்க்கவேயில்லை. இதுவே ஒரு குற்ற உணர்ச்சி போல் தோன்றியது. வேறு யாரேனும் இது போல் எழுதாமலிருந்தால் சேம் பிளட் என்று உற்சாகமாகி கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ள மற்ற மாணவ மாணவிகளை கவனித்தேன். எல்லாரும் இன்றே நூற்றுக்கு நூறு எடுத்து விடும் உறுதி எடுத்து கொண்டது போல் எழுதி கொண்டிருந்தார்கள்.

காலையில் செய்ய தவறிய நடைப்பயிற்சியை ஹால் முழுக்க ஆசிரியர் இப்போது செய்து கொண்டிருந்தார். காலில் இடறிய சிறு குப்பையை தன் கால்களாலே வகுப்பறைக்கு வெளியே தள்ளி கொண்டிருந்தார்.இன்னும் சிறிது நேரத்தில் என்னையும் அது போல் தான் வெளியேற்றுவார் என்பது சிம்பாலிக்காக தெரிந்து போயிற்று. அங்குமிங்கும் திரும்பி பார்த்தேன். சேகர் எழுதுவதை விட்டு விட்டு ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்பாடா நமக்கு ஒரு துணை கிடைச்சாச்சு என்ற நிம்மதி பெருமூச்சை விட்டேன். கமலா கூட எழுதாமல் எல்லாரையும் பார்த்து கொண்டிருந்தாள். அவளை பார்த்து எழுதலையா என்பதை நான் கண்களால் கேட்பதை கவனித்த ஆசிரியர், பல்லை கடித்த படி சாக்பீஸை என் மேல் விட்டெறிந்தார். நான் நோட்டில் பார்வையை பதித்தேன். எழுதுவது போல் பாசாங்கு காட்டி ரூல்டு நோட் கோடுகளை எண்ண ஆரம்பித்தேன். மணித்துளிகளையும் தான். டெஸ்ட் நோட்டில் என் பெயரின் மேல் மீண்டும் மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.

டெஸ்ட் முடிந்ததன் அறிகுறியாக ஆசிரியர் கையில் இருந்த ரூல் தடியை மேஜையில் ஒரு அடி அடித்தார். என் முதுகில் விழுந்தார் போல் விர்ரென்றது. “எல்லாரும் டெஸ்ட் நோட்டை டேபிள்ல கொண்டாந்து வைங்க” என்ற ஆசிரியரின் உத்தரவுக்கு கீழ் படிந்து டெஸ்ட் நோட்டை சக மாணவ மாணவிகள் எழுந்து சென்று அடுக்க ஆரம்பித்தனர். விரைவாக கொண்டு சென்று வைப்பவர்கள் நன்றாக எழுதியிருக்கிறார்கள் என்பது உடனே தெரிந்து போயிற்று. சிலர் சரியாக எழுதவில்லை என்பது வேண்டா வெறுப்புடன் மெதுவாகவே மேஜையை நோக்கி அவர்கள் நகர்ந்ததில் தெரிந்தது. சிலர் எழுந்திருக்கலாமா வேண்டாமா என்ற நிலையிலிருந்தனர். சில நொடிகளில் மேஜையில் டெஸ்ட் நோட்டுகளால் ஒரு பைசா கோபுரம் உதயமாகி இருந்தது.

எனக்கு டெஸ்ட் நோட்டை ஆசிரியரின் டேபிளில் வைக்கும் தைரியம் வரவில்லை. ஆனால் இன்னொரு தைரியம் முளைத்தது. அது, டெஸ்ட் நோட்டே வைக்காமல் விட்டு விட்டால் என்ன என்பது. அதன் மூலம் ஆசிரியரது திட்டுக்களில் இருந்து தப்பி விடலாம் என்றே நினைத்தேன். நீ தவறு செய்கிறாய் என்று பிரம்பு கொண்டு மிரட்டிய மனசாட்சியை சாரி என்ற ஒற்றை வார்த்தையால் அடக்கி விட்டு டெஸ்ட் நோட் வைக்காமலே விட்டு விட்டேன். இதை கவனித்து கேட்ட சுரேஷை, இதுக்கு மட்டும் என் பக்கம் திரும்புறியா நீ என்பதாக வடிவேலு போல் முறைக்க ஆரம்பித்தேன்.

ஆசிரியர் டேபிளில் இருக்கும் டெஸ்ட் நோட்களை மட்டும் திருத்தி கொடுத்து விடுவார் என்று நான் நினைத்திருக்க, அவரோ கிளாஸ் லீடரை அழைத்தார். அன்று வந்திருந்த மாணவர்கள் எண்ணிக்கையையும் டெஸ்ட் நோட்டுகள் எண்ணிக்கையும் ஒப்பிட சொன்னார். ஒரு டெஸ்ட் நோட் மட்டும் குறைந்தது தெரிய வந்தது. அது யாரென்பதை கிளாஸ் லீடர் அட்டெண்டென்ஸ் பார்த்து என் பெயரை உச்சரிக்கும் முன்னே படபடப்புடன் எழுந்து நிற்க தயாரானேன்.

ரகு என்ற பெயர் அறிவித்தவுடன் எல்லோரது பார்வையும் என் பக்கம் திரும்பியது.பிறகென்ன. அரசன் அன்றே கொள்வான். தெய்வம் நின்றே கொள்ளும். ஆசிரியர் அடுத்த நொடியே தண்டனை கொடுத்தார். அந்த பீரியட் முழுதும் பெஞ்சு மேல் ஏறி நிற்க வேண்டும் என்று சொன்ன போது அழுகையும் அவமானமும் ஒன்று சேர பெஞ்சு மேல் ஏறி நின்றேன். ஏன்டா எழுதாதது மாதிரி எல்லாம் சீன் போட்டீங்களேடா. நீங்க எழுதி முடிச்சிட்டு தான் உட்கார்ந்திருந்தீங்களா என்று உள்ளுக்குள் புலம்ப தான் முடிந்தது.

ஆசிரியர் சொன்னார். “அவன் எழுதாம அங்க இங்க வேடிக்கை பார்த்துகிட்டிருக்கிறப்பவே எனக்கு டவுட் வந்துச்சு. மார்க் கம்மியா எடுத்தவங்க, ௦ மார்க் எடுத்தவங்க இவங்களை இன்னிக்கு நான் திட்ட போறதில்ல. ரகுவால் நீங்க தப்பிச்சீங்க” என்றார். மார்க் கம்மியா எடுத்த மாணவர்கள் என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்கள். “டேய் உங்களுக்கும் சேர்த்து தான் தண்டனை எனக்கு கிடைச்சிருக்கு” வகுப்பு முடிந்தவுடன் அவர்களை பார்த்து கத்த வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். மதிப்பெண் எடுக்கலைனா கூட அதில் ஒரு நேர்மை இருக்கு. டெஸ்ட் நோட்டே வைக்காமல் இருப்பதில் என்னடா நேர்மை இருக்க போகிறது. கமலா என்னை பார்த்து சிரித்த சிரிப்பில் இருந்த செய்தி இது தான்.

இதோ இன்று அந்த கமலா தான் என்னை பார்த்து சிரித்து கொண்டிருக்கிறாள். கையில் பைலுடன் நான் அவள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன் . நான் பணி புரியும் நிறுவனத்தில் பொது மேலாளராக பொறுப்பேற்று கொண்ட கமலாவின் முன் தான் தற்போது நின்று கொண்டிருக்கிறேன். பழைய ஞாபகங்களுக்கு நான் சென்று வந்தது போலவே அவளும் சென்று வந்திருக்க வேண்டும். அப்போது வெளிப்படுத்திய அதே சிரிப்பு இப்போதும் அவள் முகத்தில் இருந்தது. சிரிப்பினூடே வார்த்தைகளை வெளியிட்டாள்.

“இப்பயும் ஆபீஸ்ல வேலை செய்து முடிக்க முடியாத பைல்களை எல்லாம் கொடுக்காம கையோட தான் வச்சிக்கறீங்களா ரகு ?”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: