பட்டுக்கோட்டையின் பாசம்மிக்க டாக்டர்!

பட்டுக்கோட்டை தாலுக்காவில் மருத்துவர் டி.ஏ.கே.ரத்தினம் அவர்களை அறியாதவர்களே இருக்க முடியாது.
நான் பட்டுக்கோட்டையில் இருந்தபோது இவர்தான் எங்கள் குடும்ப மருத்துவர். மிகக் குறைவான மருந்துகளே எழுதுவார். அதிகபட்சம் இரண்டு. பிரிஸ்க்ரிப்ஷன் பேடே உள்ளங்கை சைசில்தான் இருக்கும்.
மிகவும் கனிவாகப் பேசுவார். கூர்ந்து கவனிக்க வேண்டிய அளவிற்கு மென்மையான குரலில் குறைந்த டெஸிபலில் பேசுவார்.
என் முதல் சிறுகதை அச்சில் வந்தபோது நான் கொண்டு சென்று காட்டி ஆசிபெற்ற வெகு சில அன்பு நெஞ்சங்களில் இவரும் ஒருவர்.
பிரசவம் பார்ப்பதில் ஸ்பெஷலிஸ்ட். ஆமாம். ஆயிரக்கணக்கான பெண்கள் ஆண் மருத்துவர் என்றும் பார்க்காமல் இவரிடம் போவார்கள். 99.99% சுகப் பிரசவம்தான்.
இலக்கிய, சமூக ஆர்வமும் உண்டு. நாங்கள் ஒரு குழுவாக முத்தமிழ் பேரவை என்கிற இலக்கிய அமைப்பை துவங்கியபோது அதில் உறுப்பினரானதோடு மாதாந்திர நிகழ்ச்சிகளை அவருக்குச் சொந்தமான இடத்தில் இலவசமாக நடத்த அனுமதியளித்தவர்.
இவர் இந்த கொரானா நேரத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் நன்கொடை அனுப்பியதோடு..அவரது கட்டிடத்தில் உள்ள வர்த்தக கடைகளுக்கு மூன்று மாதங்களுக்கு வாடகை தர வேண்டாம் என்று தாமாக முன்வந்து கருணை காட்டியிருக்கிறார்.
மனிதம் மீது நம்பிக்கை வளர்க்கும் இந்த மாமனிதரை நன்றியுடனும், பாராட்டுக்களுடனும் வணங்கி மகிழ்கிறேன். 91 வயதான இவர் நூறாண்டு கடந்து வாழ வேண்டுமென்றும் வாழ்த்துகிறேன்.
பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் முகநூல் பதிவு.