சு. கணேஷ் குமார் கவிதைகள்!

முகம் நடுங்கும் காதலி
சுண்டல் மடித்த காகிதத்தில்
‘ஆணவக் கொலை’ குறித்த செய்தி!
கதவுக்குப் பின்னே
கூடு கட்டுகிறது குளவி
நெருக்கத்தில் போகி!
பனிக்காலம்
கோமுகியில் துளிர்த்தெழுந்த ஆலவிதை
வெந்நீர் அபிசேகத்தில் கடவுள்!
நெய் காய்ச்சிய பாத்திரம்
ஆழ்ந்து நுகர்கிறாள்
வேலைக்காரச் சிறுமி!
கட்சி துவக்குகிறார் நடிகர்
அடகுக்கு தயாராகிறது
ரசிகன் வீட்டுத் தாலி!
பனித்துளிகள் ருசிக்கின்றன
அதிகாலை நீ போட்டுவைத்த
மார்கழிக் கோலம்
குடிசை வீட்டில் நசுங்கிய பாத்திரங்கள்
உணர்த்திக்கொண்டிருக்கின்றன
குடிகாரன் இருப்பை!
பாரதியின் சிலைமீது
எச்சமிடும் பறவைகள்
‘காக்கை குருவி எங்கள் சாதி!’