தமிழ் சினிமாவும் முறை தவறிய உறவுகளும்!

தமிழ் சினிமாவும் முறை தவறிய உறவுகளும்!

 பிரபாகர் சர்மா

அடிமகள், நிழல் நிஜமாகிறது, பின்னே பதினாறு வயதினிலே

அடிமகள் 1969 இல் மலையாள மொழியில் சேதுமாதவன் இயக்கத்தில் சாரதா, ஷீலா, பிரேம் நசீர், சத்யன் இவர்களது நடிப்பில் வெளிவந்த திரைப்படம். இந்தப் படத்தின் மூலம் தெரியவில்லை. அதுவும் ஏதாவது கொரியன் அல்லது இரானிய மொழிப் படமாக இருக்கலாம்.

பதினாறு வயதினிலே 1977ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் ஸ்ரீதேவி, கமலஹாசன், ரஜனிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம்.

1978ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஷோபா, சுமித்ரா, கமலஹாசன், சரத்பாபு ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம்.
அடிமகளும் நிழல் நிஜமாகிறதும் ஒரே ஊடுசரத்தில் இழையும் கதைகள்.

கிராமத்திலிருந்து பஞ்சம் பிழைக்க பணக்கார வீட்டில் சமையல்காரியாக நுழையும் ஒரு பாவப்பட்ட பெண்ணைப் பற்றிய கதை. மலையாளத்தில் சாரதாவும், தமிழில் ஷோபாவும் பிய்த்து உதறியிருக்கும் பாத்திரப் படைப்பைக் கொண்ட படங்கள்.

கே.பியின் படத்தில் நகாசு வேலை அதிகம். சேதுமாதவன் உணர்ச்சிகளுக்கு மட்டும் இடம் கொடுத்து விரசமில்லாமல் ஆனால் படு வில்லங்கமான கதையைக் கையாண்ட படம்.

பதினாறு வயதினிலே படத்தை அப்படியே மலையாள படத்தைத் தழுவி எடுக்காமல் கொஞ்சம் மாற்றியிருப்பார்கள்.

கேரளத்தில் பொதுவாகவே எஜமானனுக்கும் வேலைக்காரிக்குமான உறவு அவர்கள் வடித்துக் காட்டும் சித்திரங்கள், படிக்கும் கதைகள் அவர்கள் வரலாறு இவற்றைக் கொண்டு நான் கற்பித்துக் கொண்ட இலக்கணதிற்குக் கொஞ்சமும் விலகாமல் அடிமைகள் படம் எடுக்கப்பட்டிருப்பதால் முறை தவறிய உறவு என்பது கேரளாவில் பெரிய விஷயமாக இருப்பதற்கு அவசியமில்லை என்றே தோன்றுகிறது. இதனை நான் பொதுமைப்படுத்தி மலையாளிகளைப் புண்படுத்த விரும்பவில்லை என்றாலும் எழுபதுகளில் இவ்வாறுதான் வீட்டுப் பணிக்குச் செல்லும் பெண்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் தமிழில் கலாசாரத்தில் முறை தவறிய உறவு என்பது ஐந்திணை ஒழுக்கத்தில் கூட இருந்தது கிடையாது. களவொழுக்கம் உண்டு என்றாலும் செவிலி, பாங்கன், தோழி, நற்றாய், ஊரார் அனைவரும் சேர்ந்து களவொழுகிய ஆடவனையும், மங்கையையும் திருமணத்தில் கொண்டு விட்டு விடுவார்கள். எனவே முறை தவறிய பெண்மையை ஒரு திரைச் சித்திரத்தில் இன்றளவும் சித்தரிக்க தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் அச்சப்படுகின்றனர். அது தவறா முறையா என்பதெல்லாம் பிறகு.

அதனால்தான் பாரதிராஜா மிக சாமர்த்தியமாக மயிலு டாக்டர் மீது மையல் கொண்டாலும் முறை தவறப் போகும் நேரத்தில் கை நழுவிப் போய்விடுவதாகக் காட்டியிருப்பார்.. போலி கற்பு பற்றிய புரிதல் என்று இதனை ஒதுக்கி விட முடியாது. அவளது பெண்மை காப்பாற்றப்படுகிறது என்றாலும் சந்தேகத்தில் நிழல் அவள் மேல் படிந்து அவளது தாயாரின் உயிரைக் குடிப்பதாக கதையைக் கொண்டு போயிருப்பார்.

நிழல் நிஜமாகிறது அடிமகளின் டிட்டோ காப்பி. ஷீலா மலயாள படத்தில் கிருஷ்ண பக்தை. ஆண்களை வெறுத்து சிறு வயதில் தனது தாபங்களைஎல்லாம் உள்ளுக்குள் கற்பனையாக அடக்கிக் கொண்டு வீட்டிற்குள் ஒரு போலிச் சாமியாரை வரவழைத்து சன்யாச வாழ்க்கை வாழ்பவள். அவளது சகோதரன் அனந்தனின் சிநேகிதன் ஒரு சிவில் எஞ்சினியர் –காட்சியமைப்பின்படி அவர்களுக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆகியிருக்க வேண்டும்- அப்புக் குட்டன் என்பவன் வீட்டிற்குள் நுழைகிறான். அவன் திறந்த மனப்பாங்கு உடையவன் என்பது காட்சிகளில் கூறப்படுகிறது. ஷீலா போர்வை போட்டு மூடி மறைக்கும் பெண்மையைச் சீண்டுகிறான். அவனது கடவுள் மறுப்புப் பேச்சுகள் அவளுக்கு ரசிக்கவில்லை என்றாலும் இயற்கையின் இயல்பான தூண்டுதல் அவனிடம் அவளுக்குப் பாலியல் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அதனை அப்புக்குட்டனும் முகர்ந்து பார்த்து ஒருநாள் அவளைக் கட்டியணைத்து நேரடியாகத் தனது காதலை வெளிப்படுத்தி விடுகிறான். ஷீலாவின் சகோதரன் அனந்தன் அந்த வீட்டில் சமையல்காரியாகத் தன்னை முற்றிலும் நிலை நிறுத்திக் கொண்ட சாரதாவின் எதிர்பால் ஆசையைத் தூண்டி விட்டு அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான்.

இரண்டு வெவ்வேறு முனைகளில் உள்ள ஆடவர்கள் தங்களுக்கு எதிமுனையில் உள்ள பெண்களிடம் தங்களை வெளிப்படுத்துவதில் ஆண்களின் நிலையிலிருந்துதான் காட்டப்படுகிறதே தவிர பெண்களின் நிலையிலிருந்து காட்டப்படவில்லை. தன்னை ஒரு பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள இயக்குனராகக் காட்டிக் கொண்ட இயக்குனர் கே.பாலச்சந்தர் சுமித்ராவின் பாத்திரப்படைப்பைக் குட்டிச் சுவராக்கியிருப்பார்.

மலையாள அடிமகளில் சாரதாவின் சம்மதத்துடனேயே அவர்களது உறவு யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக நீடிக்கிறது. அவர்கள் வீட்டில் எடுபிடி வேலைக்கென்று பொட்டன் என்ற செவித்திறன் இழந்த ஒருவன் வளைய வருகிறான். அவனுக்கும் இளம்பிராயம்.

பிரேம் நசீர் அந்த பாத்திரத்தை மலயாளத்தில் ஏற்று நடித்திருப்பார். என்னைப் பொறுத்தவரையில் தமிழில் அதே பாத்திரத்தை ஏற்று நடித்த ஹனுமந்துவும் மலையாளத்தில் நடித்த பிரேம் நசீரும் முக்கியமான இடத்தில் சொதப்பியிருப்பார்கள்.

ஆனால் இதே வேடத்தைச் சப்பாணியாக ஏற்று நடித்த கமலஹாசன் பிரமாதப்படுத்தியிருப்பார். ( நிழல் நிஜமாகிறது படத்தில் நடிக்கும்போது அட நம்ம ரோலை ஹனுமந்து என்று தோன்றி இருக்குமோ?)

அடிமகளும், நிழல் நிஜமாகிறதும் பாத்திரத்தின் குணச்சித்திரங்களைச் சிதைத்து விடும் படங்களாகும். இரண்டு படங்களிலும் சத்யன் மற்றும் கமலஹாசனின் பாத்திரங்கள் தேவையே இல்லை என்று சொல்வேன். ஏன் என்றால் இரண்டிலும் சாரதாவும் ஷோபாவும்தான் தங்களுக்கும் தங்கள் வேலை பார்க்கும் இல்லங்களின் எஜமானர்களுக்கும் இடையில் உறவை அனுமதிக்கின்றனர். அவர்கள்தான் தங்களது வாழ்நாள் துணைவன் யார் என்பதைத் தேர்வு செய்கிறார்கள்.

பழைய களத்தூர் கண்ணம்மா நினைவில் இருக்கிறதா? அறுபதுகளில் வந்த படங்களில் காந்தர்வத் திருமணம் போன்ற ஒன்றை நிறுவிப் பெண்களுடனான தகாத உறவை நியாயப்படுத்துவார்கள். எழுபதுகளில் கொஞ்சம் முன்னேற்றம். மலையாளத்திலிருந்து தமிழிற்குக் கசிந்ததால் இத்தகைய முறை தவறிய உறவுகள் தமிழுக்கு வந்தனவே அன்றி அசல் தமிழில் அப்படி இல்லை.

தி.ஜானகிராமன் ஜெயகாந்தன் இருவரும் இந்த விஷயத்தில் எதிர் எதிர் முனையில் நிற்பவர்கள். தி.ஜானகிராமன் ஒரே மாதிரி கதைகளை எழுத நிற்பந்தப்படுத்தப்பட்டார் என்றுதான் கூற வேண்டும். ஜெயகாந்தன் இதற்கான தீர்வைதான் பார்த்தார். அக்னிபிரவேசம் சில நேரங்களில் சில மனிதர்களாகப் பிரவாகமெடுத்தபோது கங்கா பிரபுவிடம் கூறுவாள்,”அன்னிக்கு நானும்னா சம்மதிச்சேன். நான் மறுத்திருந்தால் அப்படி ஒரு விஷயமே நடந்திருக்காது. அதற்கு நானும் ஒரு காரணம்” என்று கூறுவாள். அதில் ஒருவகை நேர்மை இருக்கும்.

பாலியல் தேவைகள் ஆணுக்கும் பெண்ணிற்கும் பொது; செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் பொது. ஆனால் முறை தவறும்போது கர்ப்பம் உண்டாகுதல் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் பெண்களுக்கே பாதிப்பை ஏற்படுத்துகின்றன. முள் சேலை பழமொழி அரதப் பழசானாலும் அதில் உள்ள உண்மையை மறுக்க முடியாது.

வெறும் பாலியல் தேவைகள் மட்டும் என்றால் இந்த நவீன யுகத்தில் பல கர்ப்பத்தடை சமாச்சாரங்கள் வந்து விட்டன. ஆனால் ஒரு கலைஞன் வெறும் பாலியல் தேவையோடு ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வை நிறுத்தி விட நினைப்பதில்லை.
ஜெயகாந்தன் சிறுகதையில் ஒரு சுலபமான தீர்வைத் தருகிறார். வெளியில் போய்விட்டு வரும்போது காலில் சேற்றுக் கறை பட்டதற்குக் காலை யாரும் வெட்டிக் கொள்ள மாட்டார்கள் என்று கங்கா ஜலத்தைத் தெளித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் காதும் காதும் வைத்தது மாதிரி வீட்டிற்குள் அனுமதித்து விடுவார். நிஜமாகவே பாராட்டப்பட வேண்டிய மனிதாபிமானம் மிக்க முடிவுதான்.

ஆனால் படித்தவர்கள் என்ற முறையில் வரும் மேட்டுக்குடிப் பாத்திரங்கள் அடிமகள் நிழல் நிஜமாகிறது இரண்டு படத்திலும் எண்ணுவதற்கே கூசும் முடிவை எடுப்பார்கள். எஜமானர்கள் வீட்டில் எடுபிடியாக இருக்கும் செவித்திறன் பாதிக்கப்பட்ட வனை முறை தவறிய உறவால் கர்ப்பமான வேலைக்காரிக்குத் துணையாக இருக்கும்படி கேட்டுக் கொள்வார்கள்.

இதனுடைய நீட்சியாக மகரிஷி புவனா ஒரு கேள்விக்குறி என்ற நாவலை எழுதியிருப்பார். அதில் பாதிக்கப்பட்ட பெண் கருச்சிதைவு வரை சென்று இறுதியில் மாதங்கள் அதிகமாகி விட்டதால் மருத்துவர் கருச் சிதைவிற்குச் சம்மதிக்க மறுத்ததால் வேறு ஒரு ஆடவனின் அடைக்கலத்தில் சென்று இருக்க சம்மதிப்பாள். பழைய காதலன் தனது திருமணத்திற்குப் பிந்தைய மகப்பேறின்மை காரணமாக தனது பழைய காதலியை அவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தையைக் கோருவதற்கு வருவான். தற்போதைய ஆண்மையின்மையைக் காரணம் காட்டி அந்தக் குழந்தை அவனுக்குப் பிறந்தது இல்லை என்று கோர்டில் தன்னால் நிரூபிக்க முடியும் என்று மிகத் துணிச்சலாகக் கூறுவாள். படத்திலும் நாவலிலும் இது சரியான முறையில் கையாளப்பட்டிருக்கும்.

நடந்த பொதுவான தவறுக்கு மாற்று ஏற்பாடு என்று வரும்போதே ஷீலா சுமித்ரா கமலஹாசன் சத்யன் ஆகியோர் நடித்த பாத்திரங்களின் நேர்மைத்தன்மை அடிபட்டுப் போகிறது.

மேட்டுக்குடி மக்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்கள் போடும் அத்தனை திட்டங்களையும் பாவப்பட்ட வறியவர்கள் கேட்டுக் கீழ்படிந்துக் நடப்பதைத் தவிர வேறு வழியை இவர்காளால் காட்ட முடியவில்லையா என்று தோன்றும்.

விதி படத்தில் இது பட்டிமன்றம் போல கோர்ட்டில் விவாதிக்கப்பட்டு முறைதவறிப் பிறந்த குழந்தைக்கு ஏமாற்றிய காதலன்தான் காரணம் என்பதை நிரூபித்து விட்டு இறுதியில் அவனைக் கதாநாயகி நிராகரிப்பாள் . அதிலாவது கொஞ்சம் இலக்கிய முறைமை இருந்தது. இந்த இரண்டு படங்களிலும் அயோக்கியத்தனம் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.

பதினாறு வயதினிலே படம் இந்தச் சிக்கலை எளிதில் கடந்து விடுகிறது. தனது மகள் நடத்தை கெட்டவள் என்ற ஊராரின் அலர் தோன்றியதும் மானஸ்தியான அவள் தாயார் மடத்தனமாகத் தற்கொலை செய்து கொண்டு மகளை நட்டாற்றில் தவிக்க விட்டு உயிரைப் போக்கிக் கொள்கிறாள். என்னைக் கேட்டால் இவளை விட கங்கா ஜலம் தெளித்து மகளை ஏற்றுக் கொள்ளும் அக்னிப்பிரவேசத் தாய் எவ்வளவோ மேன்மையானவள். அதன் பிறகு வீட்டிற்குக் காவலாக வரும் சப்பாணி மயிலுக்கு அனைத்துமாக இருந்து இறுதியில் ஒரு கொலைக்கும் ஆளாகி மயிலைக் காப்பாற்றுகிறான். POETICAL JUSTICE என்பது இந்தப் படத்தில் இருந்ததன் காரணமாகவே இந்தப் படம் மற்ற இரண்டு படங்களையும் விட அமோக வெற்றி பெற்றது எனலாம்.

முறை தவறிய குடியில் பிறந்த மாதவி கோவலன் தொடர்பைக் கூட மேபட்ட உறவாகச் சித்தரிக்கும் தமிழ் கலாசாரத்தில் திருமணத்தில்முடியாத முறை தவறிய உறவுகள் பற்றிக் கூறும் கதைகள் வெற்றி பெற்றதில்லை.

பி.கு: DNA பரிசோதனைகள் வந்த பிறகு மேற்சொன்ன எல்லா கதைகளும் அடிபட்டுப் போய்விடும் என்றாலும் இன்றளவும் பாலியல் தேவைகள் முறைகெட்டு வரும்போது ஆணுக்கு ஒரு வழியையும் பெண்ணிற்கு வேறொரு வழியையும்தான் காட்டுகிறது.


பிரபாகர் சர்மா. முகநூல் பதிவு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: