தில் ஸ்டார்!
***********************
வேலூர்.வெ.இராம்குமார்
முகநூலில் எழுத்தாளர் கணேஷ்பாலா நடத்திய படக்கதைப் போட்டியில் நடுவர் எழுத்தாளர் ஆர்னிகா நாசர் அவர்களால் இரண்டாம் பரிசாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதை. எழுத்தாளர் ராம்குமார் இயக்குனர் சுந்தர் சி யிடம் உதவி இயக்குனாராக பணியாற்றியுள்ளார்.

“கட்..கட்.. “என்னாச்சு கோபி!.நான் நல்லாத்தானே இந்த சீன்ல நடிச்சேன்.”என கேட்டான் தில் ஸ்டார் வர்மன்.
“வர்மன்!என்ன நீ நடிக்கறே?நான் எடுக்கறது க்ரைம் கலந்த பேய் பட சப்ஜெக்ட்.அதுவும் க்ளைமாக்ஸ் சீன்.இந்த படத்துல,அழகாயிருக்கற உன் உயிர் நண்பனை கொன்னுட்டு,அவன் உடலை வெட்டி புதைச்சுட்டு,அவன் தலையை மட்டும் வீட்ல வெச்சு,அவனுடைய அழகு சிதைந்த முகத்தை ரசிக்கற சைக்கோ கேரக்டர்.க்ளைமாக்ஸ்ல,போலீஸ் உன்னை ஒரு பக்கம் பிடிக்க முடியாமல் திணறுது.இன்னைக்கு மஹாளய அமாவாசை,யாருமில்லாத இந்த பங்களாவுல நீயும்,வீட்டு வேலைக்காரனும் இருக்கீங்க.நீ இந்த உடலில்லாத பாடி கூட பேசும்போது,அந்த முகம் பேயா மாறி பேசி பயமுறுத்தி உன்னை சாகடிக்குது..இந்த சீனுக்கு முகத்துல பயம்,கலவரம்,அதிர்ச்சியைக் காட்டாம,மூஞ்சை உம்முன்னு வெச்சிருந்தா,என்ன அர்த்தம்?”கோபத்தில் கத்தினார் டைரக்டர் கோபிநாத்.
“கோபி!நான் என்ன பண்றது சொல்லுங்க.எனக்கு இந்த பேய்,பூதம் எல்லாம் நம்பிக்கையே கிடையாது.பயம்ன்னாலே என்னன்னு தெரியாத நான் எப்படி பொய்யா பயத்தை கிரியேட் பண்ணி நடிக்க முடியும்,சொல்லுங்க?
“வாஸ்தவம்தான்..தப்பு என் மேலதான்.லவ் சப்ஜெக்ட்ல சாக்லேட் பாயா நடிச்சிட்டிருந்த உனக்கு இந்த பவர்ஃபுல்லான சப்ஜெக்ட்ல நடிக்க வெச்சது என் தப்புதான் என்றார்.”
“கோவச்சுக்காதீங்க கோபி.”
“இந்த காட்டு பங்களாவுக்கு ஒருநாள் வாடகை என்ன தெரியுமா,மூணு லட்சம்ய்யா.இரண்டு நாளா க்ளைமாக்ஸை முடிக்க முடியலை.உன்னால,எனக்கு ஆறுலட்ச ரூபாய் நஷ்டம்,தெரியுமா?”
“விடுங்க..அதெல்லாம் தயாரிப்பாளர் பார்த்துக்குவார் கோபி!”
“யோவ்!இந்த படத்தோட தயாரிப்பாளர்,டைரக்டர் எல்லாமே நாந்தான்யா.ஏற்கனவே ஐந்து படம் க்ரைம்,பேய்ப்பட சப்ஜெக்ட்டை வெச்சி சூப்பர்ஹிட் கொடுத்திருக்கேன்.ஆனால்,ஆறாவது படம்,உன்னால எனக்கு சோதனையா இருக்கு.நல்லா பழகியதால,விடவும் முடியலை.துரத்தவும் முடியாம தவிக்கிறேன்!”
“சாரி!தப்பு என் பேர்லதான்.ஃபைனலா ஒரு ஷாட் போகலாமா..ஒழுங்கா பண்ணிடறேன்.”
“சொதப்பிடாதே.ஏற்கனவே பிலிம் செலவு வேற அதிகமாயிட்டே போகுது.போ..போய் டச்சப் பண்ணிக்கோ?”
“நீ திட்டின திட்டுக்கு ஏற்கனவே முகமெல்லாம் வெளிறிப் போயிருக்கு.நேரா டேக்குக்கு போயிடலாம்.அப்பதான் ஒரிஜினாலிட்டி கிடைக்கும்.”
“ஒகே..ஒகே..கேமிராமேன்,ரெடியாயிருங்க.ரெடி..ஆக்ஷன்.கேமிரா சுழல ஆரம்பித்தது..”
மீண்டும் அவனது நடிப்பில் திருப்தி வராதவனாய்..கட்.கட்,பேக்கப்.”
“பேக்கப் என்றதும் ஒட்டுமொத்த படக்குழுவும் அதிர்ந்துபோய் நின்றார்கள்.”
கோபத்துடன் பங்களாவிற்கு வெளியே வந்தவர்,சிகரெட்டை பற்ற வைத்து ஊறிஞ்ச ஆரம்பித்தார்.
அவர் முன் பவ்யமாக வந்து நின்றான் உதவி இயக்குனர் மணியன்.
“என்னய்யா?
” ஒரு யோசனை இருக்கு சார்.”
“மணியன் திறமைசாலி.என்பதை அவர் அறிவார்.அதுமட்டுமின்றி,இவரது கடந்த ஐந்து பட வெற்றிகளிலும் அவனுக்கு பங்குண்டு..அதனாலேயே,அவன் மீது கோபிநாத்துக்கு அளவுகடந்த அன்புண்டு..”சொல்லு,மணி?”
சொல்ல ஆரம்பித்தான்.
.அவன் சொல்ல சொல்ல கோபிநாத்தின் முகம் பிரகாசமானது.
உடனே பங்களாவுக்குள் நுழைந்தவர்,வர்மனிடம் சென்றார்.
கோபத்தில் இருந்த கோபியை பார்த்ததும்,தர்மசங்கடமாக உணர்ந்தான் வர்மன்.
“சொல்லு கோபி?
“உனக்கு முகத்துல பய உணர்ச்சியே வரமாட்டேங்குது.அது உண்மையா,பொய்யான்னு நான் தெரிஞ்சுக்கணும்.இன்னைக்கு ஒரு இரவு மட்டும் இந்த காட்டு பங்களாவுல,இதே அறையில நீ தங்கணும்.உனக்கு துணையா,இந்த பங்களாவோட வீட்டு சமையல்கார சர்வர் மட்டும் இருப்பாரு…சம்மதமா?”
“எதுக்கு இந்த சேலஞ்ச்?நான் இங்கே தங்கறதனால,உனக்கு என்ன ஆதாயம்?”புரியாமல் வர்மன் கேட்டான்.
“இந்த பங்களாவுல இதுவரை யாருமே தனியா தங்கனதுல்லே.நீ தங்கிட்டா,நிஜமான தைரியசாலிதான்.ஒருவேளை பயந்துட்டா,அதே பய உணர்ச்சியோடயே நாளைக்கு க்ளைமாக்ஸை முடிச்சுடுவேன்.இந்த டீல்ல நிச்சயமா தோத்திடுவேன்னு எனக்கு தெரியும்.”
“நீ நினைகக்கற மாதிரியில்லை.நான்தான் ஜெயிப்பேன்.எனக்கு இந்த டீல் ஒகே என்றான்.”
“ஆனால்,ஒரு கண்டிஷன்..நைட்டு நீ சரக்கடிக்கக் கூடாது.ஏன்னா,பய உணர்ச்சி போயிடும்ங்கறது என்னோட எண்ணம்.”
“ஒகே..டீல்!”
“புன்னகைத்தான்.இரவு வரைக்கும் நம்ம ஹோட்டல் அறையில போய் ரிலாக்ஸ் பண்ணிட்டு வரலாம் என்றான். “
“அதுவும் சரிதான்!
“வர்மனுடன் செல்லும்போது,திரும்பி மணியணைப் பார்த்து புன்னகையுடன் தம்ஸ் அப் காட்ட..”
“பதிலுக்கு மணியனும் தம்ஸப் சிம்பளை காட்டி சிரித்தான்!
********************
காட்டுப் பங்களா.,இரவு மணி ஏழு..
சர்வரை அழைத்தான் வர்மன்.
வந்தான் சர்வர்.
எங்க படக்குழுவினர் எல்லோரும் போய்ட்டாங்களா?
“போய்ட்டாங்க சார்..உங்களுக்கு ஏதாவது வேணுமா சார்.
“வேணாம்.நைட்டுக்கு சப்பாத்தி மட்டும் பண்ணிடுங்க போதும்.”
“சார் இந்த ரூமெல்லாம் பார்க்க திகிலா இருக்குதே..பேய்ப்பட ஷூட்டிங்கா,சார்?
“அருகேயிருந்த தலை உருவத்தில் கைவைத்து தடவியபடியே,ஆமாம் என்றான்”.
“சரி சார்!ஏதாவது தேவைப்பட்டா,பாலுன்னு ஒரு குரல் கொடுங்க வந்திடறேன் என்றான்.”
“ஒகே பாலு.”
**********************
இரவு பத்து மணி..
டிபனை முடித்துவிட்டு,பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்தான்.கண்ணுக்கெட்டும் தூரம் வரையில் காரிருள்..எதிரேயிருப்பது கூட கண்ணுக்கு தெரியவில்லை.கொஞ்ச நேரம் இருளை ரசித்தவன்,படுக்கைக்கு வந்தான்,சுவற்றில் இருந்த படமும்,மேஜையில் இருந்த ஒற்றை தலையும் எரிச்சலுடன் பார்த்துவிட்டு சொன்னான்,இதுகளையெல்லாம் பார்த்தா,பயமா வரும்,எரிச்சல்தான் வரும்.”
“பாலு வந்தான்..சார்!நான் தூங்கப்போகிறேன்.உங்களுக்கு எதாவது வேணுமா?
“ஒரு க்ளாஸ் பால் போதும்ப்பா.”
**************
நடுநிசியை நேரம் நெருங்கிக் கொண்டிருக்க..வெளியே கோட்டான்,வௌவால்,ஆந்தை கத்தும் சப்தங்கள் காதைப் பிளக்குமளவுக்கு கேட்டது..
கண்ணயர முயற்சித்தவன்,மேஜையிலிருந்த மனித தலையை பார்த்தான்.அது அவனை பார்த்து கண்சிமிட்டியது..அப்போது அறைக்குள் பால் க்ளாஸூடன் நுழைந்தான் பாலு.கண்சிமிட்டிய உருவமோ,இப்போது புன்னகைத்தது,
அய்யய்யோ என அலறியடித்து எழுந்தவன் சுவற்றில் இருந்த ஒற்றைக்கண் ஒவிய உருவத்தை பார்த்தான் அது அவனைப் பார்த்து கண்ணடித்தது.அறைக்குள் ஏதோ துஷ்டசக்தி நுழைந்த தடயமாய் மல்லிகைப்பூ மணக்கவும்,
அய்யய்யோ அம்மா என அலறியபடியே வேலைக்கார சர்வர் பாலு பயத்தில் தரையில் சரிந்தான்.
“அந்த சமயத்தில் கரண்ட் கட்டாகிவிட..ஒரு பெண்ணின் ஆக்ரோஷ சிரிப்பு சத்தம் கேட்டதும்தான் தாமதம்..ஏற்கனவே முகம் வெளிறிப் போயிருந்த வர்மன்,இருளில் அவன் முதுகில் யாரோ கைவைத்த உணர்வு படரவும்..ஐய்யோ..அம்மா..எனஅதிர்ச்சியில் அலறலுடன் தரையில் விழுந்தான்..
மறுகணமே அந்த அறைக்குள் மின்சாரம் வந்தது.வர்மனின் அருகே மணியன் பெண் வேடமிட்டு நின்றிருந்தான்.உடனே மேலே விட்டத்தை பார்த்து,டேக் ஒகே.கேமிராவை ஆஃப் பண்ணிட்டு கீழே வாங்க என்றான்.
மணியனின் சிக்னலுக்காக காத்திருந்த கோபிநாத்தும்,டெக்னிஷீயன்களும்,மொட்டைமாடியில் இருந்து இறங்கி வந்தனர்.
“வெரிகுட் மணியா!உன் ஐடியா நல்லா ஒர்க்கவுட்டாகிடுச்சு.க்ளைமாக்ஸ் சீன் ரொம்ப நேச்சரா வந்திருக்கு.வர்மனுக்கே தெரியாம,நாம இங்கே வந்து மறைஞ்சிருந்தது நல்லதாப் போச்சுப்பா..முதல்ல இரண்டு பேருக்கும் என்னாச்சுன்னு பாரு.
“அய்யய்யோ சார்!ரெண்டு பேருமே மூச்சி பேச்சில்லாம,ஆழ்ந்த மயக்கத்துல இருக்காங்க.இப்போ என்ற பண்றது?மணியன் கேட்கவும்,
“முதல்ல,டாக்டருக்கும்,மீடியாக்களுக்கும் போன் பண்ணு.”
“டாக்டர் ஒகே..மீடியாவுக்கு எதற்கு?
“பப்ளிசிட்டிக்குதான்.படத்தோட க்ளைமாக்ஸ்ல நடிக்கும்போது பயந்து மயங்கிட்டாரு..தில்ஸ்டாருக்கே இந்த நிலமைன்னா,படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு என்ன கதியாகுமோன்னு நியூஸ் போட்டாங்கன்னா,பப்ளிசிட்டிக்கு பப்ளிசிட்டியும் ஆச்சு.ரசிகர்கள்கிட்டே எதிர்பார்ப்பும் அதிகமாயிடும்..வியாபாரமும் பிச்சிக்கும்ய்யா..”
“இதைக் கேள்விப்பட்டா,வர்மன் சார் வருத்தப்பட்டா,என்ன சார் பண்றது?
“இந்த படத்தோட இரண்டாம் பாகத்தோட ஹீரோவே நீதான்னு சொல்லி சமாளிச்சுடலாம்ய்யா.”
“கோபிநாத்தின் மார்க்கெட்டிங் திறமையைப் பார்த்து வியந்து போனான் மணியன்!