உலகின் முதல் நவீன அறுவை சிகிச்சை மருத்துவர்
காசங்காடு. வீ. காசிநாதன்.

உலகின் முதல் நவீன அறுவை சிகிச்சை மருத்துவர் (Surgeon) யார் ?
இந்த கேள்வியை மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களிடம் கேட்டால் பதில் எப்படி இருக்கும் ?
அவர் ஏதேனும் ஒரு மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி நாடுகளை சார்ந்த ஒரு கிறித்துவர் குறிப்பாக ஒரு பாதிரியாராக இருக்கலாம் என ஒரு பெயரை குறிப்பிடலாம். பொது மக்களின் எண்ணமும் அவ்வாறாகத்தான் இருக்கும். ஏனெனில் கிறித்தவ பெரு மக்கள் மருத்துவ துறைக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பு அப்படியானது.
இந்த பதில் பாதி உண்மையானதே. ஏனெனில் அவர் மேற்கத்திய நாடான ஸ்பெயினை சார்ந்தவர் ஆனால் கிறித்தவர் அல்ல. பாதிரியாரும் அல்ல.
அவர் பெயர் அல் ஜஹ்ராவி ( Al Zahrawi) முழுப் பெயர் அபுல் காசிம் அல் ஜஹ்ராவி. லத்தீன் பெயர் Albucasis. (பிறப்பு 936- இறப்பு 1013). இவர் நவீன அறுவை சிகிச்சையின் தந்தை என அறியப்படுகிறார். அன்றைய முஸ்லிம் ஸ்பெயினில் கார்டோபா நகரில் பிறந்தவர். இந்தியாவை போன்றே ஸ்பெயின் சுமார் 700 ஆண்டுகாலம் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர்தான் முதன்முதலில் நவீன அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டவர். தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த ஒரு அடிமைப் பெண்ணை அறுவை சிகிச்சை செய்து பிழைக்க வைத்தார். இது அக்காலத்தில் மிகப் பெரும் சாதனையாக கருதப்பட்டது. தனது மருத்துவ ஆராய்ச்சிகளை முப்பது தொகுதிகளில் (30 Volumes) கிதாப் அல் தஷ்ரீப் (Kitab Al Tasreef) (The Method of Medicine) என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். இதை எழுத ஐம்பது ஆண்டு காலம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
கி.பி.1000 ல் வெளியான இந்த நூலில் உடற்கூறு(Anatomy) மருத்துவம்(Medicine),மருத்துவ சிகிச்சை முறைகள்(Medical Treatment), அறுவை சிகிச்சை முறைகள்(Surgery), பல் மருத்துவம்( Dentistry) மற்றும் அறுவை சிகிச்சை கருவிகளின் பயன்பாடுகள் (Usage of Surgical Tools) குறித்து எழுதியுள்ளார். சுமார் 200 அறுவை சிகிச்சை கருவிகள் குறித்து படத்தோடு விளக்கியிருக்கிறார். அதில் சில கருவிகள் அவரே உருவாக்கியவை.
அவரது நூல் Gerard of Cremona என்பவரால் லத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டது. சுமார் 500 ஆண்டு காலம் இது பாடமாக கற்பிக்கப் பட்டு வந்தது. இப்னு சினாவின் The Canon of Medicine ஐ போன்றே சிறந்த புத்தகமாக மருத்துவ உலகில் கருதப்படுகிறது.
British Medical journal கூற்றுப்படி இங்கிலாந்தில் முதல் மருத்துவ நூல் எழுதப்பட்டது கி.பி.1250 ம் ஆண்டில் ஆகும். அந்த புத்தகத்திலும் அல் ஜஹ்ராவியின் கிதாபுல் தஸரீப் குறித்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மருத்துவ அறிஞர்களின் மருத்துவ ஆராய்ச்சி நூல்களே ஐரோப்பாவின் மருத்துவ துறை மேம்படையவும்,புதிய மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும் தூண்டு கோலாக இருந்தது. அரபு இஸ்லாமிய மருத்துவர்களின் ஆராய்சிக்கு இந்திய,சீன பழம் மருத்துவ முறைகள் பயன்பட்டுள்ளது என்பது நமது பெருமைக்குரியது. இது குறித்து பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் வெளி வந்துள்ளன.
One thought on “உலகின் முதல் நவீன அறுவை சிகிச்சை மருத்துவர்”