ஐ லவ் யூ …..!
திலகா சுந்தர்.

——–
(முகநூலில் எழுத்தாளர் கணேஷ்பாலா நடத்திய திடீர் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை.தேர்ந்தெடுத்தவர் – எழுத்தாளர் திரு. ஆர்னிகா நாசர் அவர்கள் )
” கொரோனாவுக்கு எதிரான போர்! கண்ணுக்கு தெரியாத எதிரியை அடித்து வீழ்த்துவோம். அவனைக் கொல்லுவோம், வெல்லுவோம் என்று வசனம் பேசிக் கொண்டு திரிகிறார்கள் முட்டாள் ஜனங்கள்! ஸோ…. ஸ்டுபீட்!
பைத்தியக்காரத்தனத்தின் உச்சம். ஹெஹ்ஹே …. ஹெஹ்ஹே …. ஹெஹ்ஹேஹே” வெறித்தனமாக சிரித்தான் ராம்.
“அப்போ, எ …. எ …. என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?” மெதுவாகக் கேட்டான் கதிர்.
” இப்படி வீம்பு புடிச்சிகிட்டு அலைஞ்சா அவன் இன்னும் அதிகமாத்தான் கொல்லுவான்…”
” அதனால ….?”
அவனைக் கூர்ந்து பார்த்தான் ராம்.
“அதனால …… முதல்ல சரணடையணும்…. பிறகு சினேகமாகணும்… என்ன …. புரியலையா? அவன் கூட ஒரு ப்ரண்டா மாறிடணும்….”
திடுக் என்றது கதிருக்கு.
” அது மட்டும் போதாது. அதுக்கடுத்து அவன் கிட்ட மானசீகமா இன்னும் ஒன்று சொல்லணும்?”
“என்னது ….” எச்சில் கூட்டி விழுங்கினான் கதிர்.
” ஐ லவ் யூ ….”
“எங்கே சொல்லு ……?”
“ஐ …. ஐ … ல… ல … ல வ் யூ ….”கதிரின் குரல் குழறியது. பங்களாவின் ஏர் கண்டிஷனிலும் கடுமையாக வியர்த்தது.
” சரியாக வரவில்லையே …. எங்கே, தெளிவா …. ஸ்டெடியா…. மூஞ்சியில அன்பை குழைத்துக் கொண்டே மறுபடியும் சொல்லு ……?
“ஐ லவ் யூ…” இந்த தடவை அசட்டு தைரியத்தை வரவழைத்து சரியாகச் சொன்னான் கதிர்.
” எதையும், அடிக்கிறோம், உடைக்கிறோம், கொல்றோம்னா நம்ம எனர்ஜிதான் வேஸ்ட்டா போகும். நமது நோக்கம் போர் புரிவதல்ல. எதையும் அப்படியே ஏற்றுக் கொள்வது, அன்பாய் இருப்பது, அரவணைத்துக் கொள்வது. புரிந்ததா?”
அவசரமாக ஆமோதித்து என்று தலை ஆட்டினான்.
“ஓகே…. இப்ப நம்ம கதா நாயகன் பெயரை மறுபடியும் சொல்லு பார்க்கலாம்”
” கொ… கொ … கொ …. ரோ …..னா” மறுபடியும் திக்கியது. ஆனால் ராமின் கவனம் வேறு பக்கம் இருந்தது.
“இங்கே பார்த்தாயா …. என் ஓவியம்! நானே என் கையால் வரைஞ்சது…. கற்பனையில வரைஞ்சது. அவனுக்கு வித விதமா உருவம் குடுக்கணும், ரசிக்கணும். அதான் என் ஆசை. பல்லு, மூக்கு எல்லாம் தனித்தனியா பிய்ந்து கிடக்கிறது. இங்க ஒரு கண்ணு…. அங்க ஒரு கண்ணு. ஆள் காட்டி விரலால் சுட்டிக்காட்டினான். பிக்காஸோ மாதிரி மாறிட்டேன்ல. இங்க … வலது கோடியில பாரு! இருட்டா மாறி கருப்பு நிறத்தில் எவ்வளவு அழகா உட்கார்ந்திருக்கான். வாவ்!
” அ அ அ …அங்க …. அது … அது … ஒரு பொண்ணோட ஒடம்பு மாதிரி தெரியுதே?” திக்கி திக்கி கேட்டான் கதிர்.
” சபாஷ்! சரியான கேள்வி …. முனிவர்களே பெண்கள் விஷயத்தில் ரொம்ப வீக்! நம்ம ஹீரோ மட்டும் விதிவிலக்கா என்ன? அவனுக்கும் பெண்களை ரொம்ப பிடிக்கும். அவனோட இரக்க மனசைக் காட்டுறதுக்குதான் அங்கே சிம்பாலிக்கா ஒரு பெண்ணோட மேல் உடம்பையும் வெறுமையா வரைந்து இருக்கிறேன்.”
” இங்க பார்த்தாயா? தலையணைல கூட நம்ம ஹீரோ உருவத்தைத் தான் பிரிண்ட் பண்ணி வச்சிருக்கேன். இவனோட தலையில இரண்டு கொம்பு வைத்து அப்படியே எம தர்ம ராஜா மாதிரியே மாற்றியிருக்கிறேன். இந்த முகத்தையே மாஸ்க்கா செஞ்சு மக்கள் தங்கள் முகத்துல போட்டு கிட்டாங்கன்னா அவனுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா? இப்படி அவனை நம்மோட முகத்தில் அணைத்து கொள்ளும் போதுதான் போதுதான் நம்ம மேல பரிவு காட்டுவான். பாய மாட்டான்.”
திக் திக் என்று இதயம் துடிக்க ஆரம்பித்தது கதிருக்கு.
சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு, கொஞ்சம் ரகசியமா குரலை மாற்றிக் கொண்டே …. கதிரின் காது கிட்ட வந்து
“நீ எனக்கு ஒரு உதவி செய்யணும். இப்ப எனக்கு ஒரு மாடலிங் தேவைப்படுது. உன்ன அவனா மாத்தப் போறேன்…. அதான் என் ஹீரோ மாதிரி உன்ன மாத்தப் போறேன்…. உன் தலை மட்டுந்தான் எனக்கு வேணும். முதல்ல சாப்பாடு கொடுக்காம பல நாளுக்கு பட்டினி போடப் போறேன். கன்னம் குழி விழுந்து எலும்புகள் புடைத்து வெளியே தெரிய ஆரம்பிக்கும். தூக்கம் இல்லாமல் கண்கள் பிதுங்கி சுற்றிலும் கரு வளையம் படரும். இந்தா இதை வைத்து உன் பற்களை அப்படியே ஆங்காங்கே பிடுங்கி எடுப்பென். உன் காதுலேயும், மூக்கிலேயும் வளையங்கள் மாட்டுவேன். முகத்தில் “ஐ லவ் யூ கொரோனா” ன்னு பச்சை குத்தி அழகு பார்ப்பேன். உன் முடியை ஆங்காங்கே மழித்து, மீதி இருக்கும் முடியில் குட்டி குட்டி ஜடை பின்னி அதை பந்தாக உருட்டுவேன்… உன்னை ஆராதனை செய்வேன். இன்னும் எத்தனை! எத்தனை! ஆம்! என்னோட கனவு நாயகனுக்கு நீதான் மாடலாக இருக்கப் போகிறாய்…”
இனம் தெரியாத பதட்டத்தில் கதிரின் மூச்சு வேகமாக ஏறி இறங்கியது. ஏதோ சம்பந்தம் இல்லாத இட த்தில் மாட்டிக் கொண்டாற் போன்ற பீதியிலும், பயத்தில் உடம்பு கிடு கிடு வென்று நடுங்கியது.
” சார் …. முக்கியமான விஷயம் பேசணும்னுதானே கூப்பிட்டீங்க. இப்ப என்னென்னமோ பேசிறீங்களே”
துப்பாக்கியை கையில் எடுத்தான் ராம்.
அங்கிருந்து எழுந்து ஓடிவிட எத்தனித்தான் கதிர்.
”கோ …… இன்சைட் ….. டீப்பாயின் துவாரத்துக்குள்ள தலைய கொண்டு போ! இல்லன்னா …உன் தலை வெடித்து சுக்கு நூறாயிடும்.”
வெறி பிடித்தவனைப் போல் உச்ச ஸ்தாதியில் கத்தினான். கண்களில் கொலை வெறி தாண்டவமாடியது.
தப்பிக்க வழி இல்லாமல் ராம் சொன்னபடி கேட்க ஆரம்பித்தான் கதிர். அவன் உயிர் துடிக்கும் சத்தம் காதில் டமாரம் அடித்த து. கண்கள் பீதியில் பிதுங்கி வெளியே தள்ளியது. எந்நேரத்திலும் மயக்க நிலைக்குப் போய் விடுவான் போல் இருந்தது.
“ஸ்ஸ்ஸ்ஸ் …. ஏண்டாப்பா என்னை பைத்தியமாக்குற. ஈஸியா ஒத்துழைக்கணும். கத்தவிடக் கூடாது புரிந்ததா?”
வலது காலை மடித்து வைத்து, இடது காலை அதன் மேல் தூக்கிப் போட்டுக் கொண்டு தலையணையில் ரிலாக்ஸ் ஆக சாய்ந்து கொண்டான். ஆஸ்டிரேயே லேசாக தள்ளி வைத்து, டீப்பாய்க்கு மேலே இருக்கும் அவன் தலையை ஸ்டேண்டைப் போல் உபயோகித்து தன் இடக் கரத்தை நீட்டி ஹாயாக அதன் மேல் வைத்துக் கொண்டான்.
“உன் உடம்பே எனக்கு தெரியலைடா? தலைதான் தெரியுது .தலையை மட்டும் வெட்டி தனியா டீப்பாயில வச்ச மாதிரி இருக்கு …… வாட் என் அமேஸிங் சைட் …. ஹ ஹ் ஹா!” என்று சிரித்தான்.
அதே நேரம் பார்த்து தற்செயலாக காப்பி எடுத்துக் கொண்டு அங்கே வந்த வேலைக்காரன்
” அய்யோ, அம்மா ….” என்று அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினான்.
“ஏய்! என் ஹீரோவைக் கொல்லப் பார்க்கிறீங்களா? கிட்ட வந்தீங்க …. பொணமாதான் கிடப்பீங்க “
கதிரின் தலைப்பகுதியை மறைத்து கொண்டு கத்தினான். துப்பாக்கியை எங்கே வைத்தோம் என்று தெரியவில்லை. சுற்றும் முற்றும் கண்கள் அலை பாய்ந்தன. தகுந்த சமயம் பார்த்து கண்ணிமைக்கும் நேரத்தில் லாவகமாக மடக்கிப் பிடித்தனர் வேலையாட்கள். டாக்டர் வலுக்கட்டாயமாக மயக்க மருந்தை செலுத்தினார்.
“ராமுவுக்கு கேபின் பிவர் (Cabin fever) ஆக இருக்கலாமோன்னு நான் சந்தேகப் படறேன். ரொம்ப நாளா லாக் டவுன்ல வீட்டுக்குள்ளேயே அடைஞ்சி கிடக்கிறதாலயும், கொரோனோ வைரஸ் பற்றிய செய்திகளை அடிக்கடி கேட்டதாலேயும், அதை பற்றி இடை விடாம யோசிச்சதாலும் வந்த மன அழுத்தம் அல்லது பிறழ்வாகத்தான் இருக்கக் கூடும். மிகவும் அரிதாக, வெகு சிலருக்குதான் இப்படிப்பட்ட விபரீதங்கள் நடக்க கூடும். ராமுவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணனும். ஆன் லைன் தெரபிக்கும் ஏற்பாடு பண்றேன்…. டோண்ட் வொர்ரி. சூழ் நிலை சரியானதும் எல்லாம் சரியாகிடும்…” என்றார் மருத்துவர்.
மயக்க மருந்தின் உபயத்தால், எதைப் பற்றியும் கவலையில்லாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான் ராம்.
முதல் வேலையாக அந்த ஓவியத்தையும், தலையணை உறையையும் மாற்றினாள் ராமின் மனைவி.