இளம்பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அப்துல் கலாம்!

இளம்பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அப்துல் கலாம்!

                      ஜான் துரை ஆசிர் செல்லையா

“அப்துல் கலாம் ஒரு பெண்ணோட கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா ?
என்ன ஜான் சொல்றே ?”

“ஆமா. அந்தப் பெண்ணின் பெயர் சரஸ்வதி.”

“எப்போ நடந்தது இது ?
எதுக்காக அந்த கல்யாணத்தை நிறுத்தினார் அப்துல் கலாம் ?”

நண்பரிடம் விளக்கமாக நான் அதை சொன்னேன்.

ஆம்.

அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம்.

அப்போது உயர் அதிகாரியாக திருச்சியில் பணி புரிந்து வந்த கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து.

“சொல்லுங்க சார்” என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி.

கலாம் சொன்னார்
அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என.

காரணம் அந்த பெண்ணின் வயது 16. பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள்.
மாப்பிள்ளைக்கு 47.
இரண்டாவது கல்யாணம். சொந்த மாமன்.

கலாம் தொடர்ந்தார் :
“கட்டாய கல்யாணம். அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க. அப்புறம்
அந்தப் பொண்ணு மேலே படிக்கணும்னு ஆசைப்படுது.
அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை…”

“அதை நாங்க பாத்துக்கிறோம் சார்” என்றார் கலியபெருமாள்.
“பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?”

ஊர் பெயரை சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது.

அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார்.
ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.

கலாம் சொன்னபடியே அந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ் டூ சரஸ்வதி நன்றி சொன்னாள்.
“சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்.”

“நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. அதற்கான ஏற்பாடு பண்றோம்.”

சொன்னாள். கவனமாக
குறித்துக் கொண்டார் கலியமூர்த்தி.

“ஓகே, நாங்க புறப்படறோம்.
அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்.”

“என்ன சார் ?”

“உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே.
அவருக்கு யாரும்மா இந்த தகவலை சொன்னது ?”

“நான்தான் சார்.”

ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி.

“எப்படீம்மா ?”

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். அதற்கு அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆகவில்லை.
அந்த கூட்டத்திற்கு இந்தப் பெண் சரஸ்வதியும் போயிருந்தாள்.

பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : “உங்களில் யாராவது ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம்.
Only four students…”

கேள்வி கேட்ட நான்கு பேரில் ஒருவர் இந்தப் பெண்.

கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட நால்வரையும் தனியாக அழைத்து பாராட்டினார் கலாம்.
“இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்.”

அந்த கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி, ஃபோன் நம்பர் இருந்தன.

எப்படியோ அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள் இந்தப் பெண். அதுதான் இந்த ஆபத்துக் காலத்தில் அவளுக்கு உதவியிருக்கிறது.

இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார்.
அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.
அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார்.

காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ?

சமீபத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி.

அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம் பெண் அவசரம் அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம்.

யார் இந்தப் பெண் ?
எங்கோ பார்த்தது போல இருக்கிறதே !

மேடையில் நின்ற அந்தப் பெண்
மூச்சு வாங்க சொன்னாளாம். “நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்.”

யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்?
எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.

“கலியமூர்த்தி சார். நான் இங்கே அமெரிக்காவில் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன்.
மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருக்கு நான்கு லட்சம். சந்தோஷமாக இருக்கிறோம்.
நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா ?”

“தெரியவில்லை” என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி.

அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள் :
“ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால் காப்பாற்றப்பட்டவள்.
படிக்க வைக்கப்பட்டவள்.
நான்தான் துறையூர் சரஸ்வதி.”

இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில் கண் கலங்கி போகிறார்.

“உங்களுக்கும் நன்றி.
உங்களுக்கு தூண்டுகோலாக இருந்து என் வாழ்வில் ஒளியேற்றிய அப்துல் கலாம் ஐயாவுக்கும் நன்றி.”

சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்ட நிறைவோடு, மேடையை விட்டு இறங்கி போகிறாள் அந்தப் பெண்.

ஆச்சரியம்தான்.
அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் உள்ள ஒரு சாமானிய பெண் ஜனாதிபதியோடு சகஜமாக பேச முடிந்திருக்கிறது.
தான் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.

ஆம்.
அது ஒரு அழகிய கலாம் காலம்.

பெங்குயின்! திரை விமர்சனம்!

பெங்குயின்!  திரை விமர்சனம்!

ரிதம் எனும் பெண்ணின் மகன் காணாமல் போய், ஆறு வருடங்களுக்குப் பின் கிடைக்கின்றான். அவனை யார் கடத்தினார்கள், அந்தச் சிறுவனுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரிந்து கொள்ள ரிதம் நினைக்கிறார். அவரால் அதைத் தெரிந்து கொள்ள முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை.

“ஓப்பன் பண்ணா, காட்டுக்கு நடுவுல ‘மதர் ஆஃப் நேச்சர்’ சிலை. ஒரு கருப்பு நாய், தத்தித் தத்தி நடக்கும் சின்ன பையன், சிலைக்குப் பின்னாடியிருந்து மஞ்சள் நிறக் குடையில் சார்லி சாப்ளின் முகமூடி அணிந்த கொலைகாரன். அதோடு படம் சரி” என பெண்குயின் பார்வையாளர்களைத் தெறிக்க விட்டுள்ளது.

படத்தோடு ஒன்ற முடியாமல், தொடக்கத்தில் இருந்தே ஓர் அந்நியத்தன்மை இழையோடுகிறது. என்ன தான் விஷூவல்ஸில் அசத்தியிருந்தாலும், தட்டையான கதாபாத்திரங்களை மீறிப் படத்தில் கவனம் செலுத்த இயலாமல் போகிறது. சுமார் ஆறு வருடங்களுக்குப் பின் கிடைத்த மகனைத் தனி அறையில் படுக்க வைப்பதெனும் கலாச்சாரமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோக்களே, தங்கள் மகிமைகளைப் புறந்தள்ளிவிட்டு, வில்லன்களிடம் அடி வாங்குகிறார்கள், இறக்கவும் செய்கிறார்கள். இப்படத்தில், கர்ப்பினிப் பெண்ணான நாயகியோ ஒரு சிறு பதற்றமும் இல்லாமல் நடமாடிய வண்ணமே உள்ளார்.

மகனின் நினைவுகளிலே ஆறு வருடங்களாகத் தவிக்கும் நாயகிக்கு, ஒரு துப்பு கிடைக்கிறது. உயிருக்குப் பயப்படாமல் பல சாகசங்கள் புரியத் தயாராக இருக்கும் நாயகி, கிடைக்கின்ற அந்தத் துப்பை அலட்சியமாக விட்டுவிட்டுச் செல்கிறார். தவறவிட்டார் என்ற அளவுக்காவது அந்தக் காட்சியில் பதற்றத்தைக் கொண்டு வந்திருக்கவேண்டும். கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு கொடைக்கானலின் அழகிலேயே மயங்கிக் கிடக்கிறதே தவிர, கதாபாத்திரங்களின் உணர்ச்சியைக் கோட்டை விட்டுவிடுகிறது. பிளாஸ்டிக் தன்மையோடு மனிதர்கள் நடமாடுகிறார்கள். கீர்த்தி சுரேஷிடம் கூட ஒரு பதற்றம் இருக்கிறதே தவிர, அஞ்சனா எனும் சிறுமியின் தாயிடமிருந்த பதைபதைப்பு மிஸ்ஸிங். கீர்த்தியின் முதல் கணவராக வரும் லிங்காவும், அஜயாக நடித்திருக்கும் மாஸ்டர் அத்வைத்தும்தான் ஆறுதல் அளிக்கின்றனர். பெரியவர்களின் அனைத்துச் சொதப்பல்களையும் முடிந்தளவுக்குத் தோளில் தாங்கி அசத்தியுள்ளார் அத்வைத்.

படத்தின் இன்னொரு மிகப் பெரும் சறுக்கல், கதாபாத்திரங்களுக்கு இடையேயான ரிலேஷன்ஷிப். மேடை நாடகத்தில் தனது காட்சிக்காகக் காத்திருந்து, மேடைக்கு வந்து செல்பவர்கள் போலவே, ஃப்ரேம்க்குள் காத்திருந்து உள் நுழைகிறார்கள். ஓகே, நம்ம சீன் முடிஞ்சிடுச்சுஎன டயலாக் பேசியதும் கிளம்புகிறார்கள். அநாதை ஆசிரமத்தில் வளர்ந்த கீர்த்தி சுரேஷ், கையில் சங்கிலியில் கட்டப்பட்டுக் கொடுமைக்கு உள்ளாகி ஆறு வருடம் கழித்துக் கிடைத்த மகனை, அன்றிரவே தனி அறையில் படுக்க வைக்கிறார். அதற்கு முன், வீட்டுக்கு வெளியில் கீர்த்தி சுரேஷ் புன்னகைக்கும் முகத்துடன் ஹோஸ்-பைப் கொண்டு அவன் முதுகில் நீரடித்து சுத்தம் செய்கிறார், அப்படியே நாயையும் அதே போல் சுத்தம் செய்கிறார். சொந்த மாநிலத்திற்கு நடந்து வந்த கூலிப் பணியாளர்களை உத்திர பிரதேச அரசாங்கம் நிற்க வைத்து மருந்து தெளித்ததை விட மிகக் கொடுமையான செயல் இது. ஒரு பெண் தன் தோழிகளுடன் தனித்திருக்கும் சமயத்தில் எப்படிப் பேசுவார், கணவனுடன் எப்படிப் பேசுவார், நீண்ட நாட்களுக்குப் பின், தொலைந்துவிட்ட மகன் கிடைக்கும் பொழுது எப்படி நடந்து கொள்வார் என்று எந்த அக்கறையும் கவனமும் கொள்ளாமல் காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக்.

போதாக் குறைக்கு, அன்லிமிடெட் பொங்கலைச் சாப்பிட்டது போல் ஒரு சைக்கோ வில்லன் (அதே கடையில்தான், இரண்டாவது கணவர் கெளதமாக நடித்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜும் பொங்கல் வாங்கிச் சாப்பிட்டுள்ளார் என்பதைச் சுலபமாக யூகிக்க முடிகிறது). பேசுறது, நடக்கிறது, சிரிக்கிறது என அனைத்தையும் ஸ்லோ-மோஷனில் செய்கிறார் அந்த சைக்கோ டாக்டர். கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பிறகும் கூட, அவரிடம் உள்ள அந்த பொங்கல் எஃபெக்ட் குறையாததால் மிக மொக்கையாக மாட்டிக் கொள்கிறார். பதினாறு கொலைகள் செய்த அந்தக் கொலைகாரனின் பொங்கல் மயக்கம் கொஞ்சம் தீர்ந்ததும், விக்ரம் வேதா பாணியில் நாயகிக்கு அவரது மகனைக் கடத்தியது யாரெனத் துப்பு தருகிறார். அட கொலைகார நாயே உனக்கென்னடா இவ்ளோ அக்கற?” என்று பார்வையாளர்கள் மனதில் எழும் கேள்விக்கு, ‘ஏன்னா எனக்கு நாயகியின் தைரியம் ரொம்பப் பிடிக்கும்என்று சொல்கிறார். இதற்கு அது பதிலில்லையே எனக் கொலக்காண்டு ஆகிறது.

பார்வையாளர்களை ஒரு வழி செய்துவிட்டு, ஒருவழியாகப் படம் சுபமாக முடிந்ததே எனப் பார்த்தால், கீர்த்தி சுரேஷ் தனது மகனுக்கு “பெண்குயின்” கதை சொல்லுவதாகத் தலைப்பைக் கொண்டு வந்து க்ளைமேக்ஸில் முடிச்சுப் போட்டுள்ளனர். ஏன் இந்தப் படத்துக்கு ‘பெண்குயின்’ என்று தலைப்பு வைத்தார்கள் எனப் பார்வையாளர்கள் குழம்பி விடக் கூடாது என நினைக்கும் இயக்குநரின் அந்தத் “தாய்” மனம் இருக்கில்ல? ப்ப்பாஆஆ.. எங்கேயோ போய்விட்டது தமிழ் சினிமா.      நன்றி: https://ithutamil.com/

கோவை. நா.கி. பிரசாத் கவிதைகள்!

கோவை. நா.கி. பிரசாத் கவிதைகள்!

நின்றுபோன வாகனத்தில்
விரைகிறது
எரிபொருள் விலை!

சுவர் பிடித்து
எழுந்து நிற்கிறது
நிழல்!

  •  

சமரசம் பேச
சாமரம் வீசும் யானை
காதருகே எறும்பு!

கொடூர விலங்குகள்
அழிந்து வர
அச்சத்தில் காடு!

  •  

அச்சுஅசல் மாறவேயில்லை
அடுத்தவர் படைப்பில்

வெளியான புத்தகம்!

வானவில் மழை
சாயம் போகும்
குடைக்கடை!

  •  

அடுத்தவர் தடம் பதிக்க
அமோக வெற்றி
செருப்புக்கடை!

பிறர் காலை பிடித்ததில்
மூக்குடைந்து போனது
முள்!

குடும்ப ரத்தம்
குடிக்கும் அட்டை
குடிகார அப்பன்!

சரியான சட்டமின்றி
மாட்டி வைக்கப்படுகிறது
சாதாரண மக்கள்
புகைப்படமாய்

ஜவஹர் ப்ரேம்குமார் கவிதைகள்!

ஜவஹர் ப்ரேம்குமார் கவிதைகள்!

1.
பாசம் உடுத்திய
தண்ணீருக்கு மேல் நனையாத..
அல்லிமலர்..!

#2.
புழுதி போர்த்திய
சாலை எங்கும் உதிர்ந்த
சருகுகள்..!

#3.
ஆபரணம் அணிந்த குழந்தை.. வலியுடன் தொட்டுப் பார்க்கும்
காதுகளை..!

#4.
அலை ஆடையெங்கும்
மொய்த்து ஊர்கின்றன
கட்டுமரங்கள்..!

#5.
உடுத்திய ஆடைகளை
ஊதிக்களைகிறாள் அடுப்படியில்
பொங்கும் பாலில்..!

தேங்கிய தண்ணீரில்

அசையவே இல்லை!

நினைவுகள்!

சிரி கண்ணா! சிரி!

சிரி கண்ணா! சிரி! 

 ” தலைவருக்கு மட்டும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கே எப்படி ?”

  ” சிறைக் களியில வளர்ந்தது அவர் உடம்பாம் !

ஆர்.சீதாராமன், சீர்காழி.

என் பையனுக்கு இப்பெல்லாம் மாஸ்க் மேல கோவம் வர்து”

” என்னாது? மாஸ்க் மேலயா?”

” மூக்கு மேலதான் கோவம் வரும்.ஆனா இப்பதான் மூக்கு மேல மாஸ்க் போட்டிருக்கானே..அதான் அப்டி சொன்னேன்”

புது வண்டி ரவீந்திரன், சோளிங்கர்

  தலைவர் புது வகையான விளம்பர விரும்பியா எப்படி ?   ” வாயில மாஸ்க்குக்கு பதில் ஸ்டிக்கர் ஒட்டச்  சொல்றாரே ….”

,ஆர்.சீதாராமன். சீர்காழி

தலைவர் தன் கொள்கை முடிவுலே இருந்து பின் வாங்க மாட்டாராம்!

 இருக்கட்டும் அதுக்காக கட்சி ஆபிஸுக்கு ஒரு ஸ்டாப்ளர் பின் கூட வாங்க மாட்டேன்னு சொல்றது நல்லாயில்லே..!

சின்னசாமி, நத்தம்.

   தலைவர் மேடையில்:  நாங்கள் பேசக்கூடாது என்று எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து செய்த சதிதான் இந்த மாஸ்க் அணிதல். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

எஸ்.வேதா, நத்தம்.

  மாஸ்க் போடாம வெளியே போகக் கூடாதுன்னு அரசாங்கம் சொன்னது நல்லதா போச்சு?

மாஸ்க் தானே போடறோம்! முகம் தெரியவா போகுதுன்னு என் மனைவி மேக்கப் போடற நேரம் குறைஞ்சிருச்சு!

ஏ.எஸ். மணி, மாநெல்லூர்

அவள் :ஏன் அவளோட புது மாடல் கொண்டையைப் பார்த்து எல்லாரும் பயந்து ஓடுறாங்க?

இவள் : அவ போட்டுயிருக்குறது கொரோனோ வைரஸ்மாடல் கொண்டையாம்..!

இந்து குமரப்பன் விழுப்புரம். 

 அவர் : குறுக்கெழுத்து போட்டி கடிதங்களை தேர்ந்தெடுக்க ஏன் கவர்ச்சி நடிகை வரச்சொல்லி இருக்காங்க…?

இவர் :அவுங்க தான் நல்லா குலுக்கி குலுக்கிஎடுப்பாப்ங்களாம்….!

இந்து குமரப்பன் விழுப்புரம். 

அந்த நடிகை சமூக இடைவெளியை அதிகமாகவே கடை பிடிக்கிறாங்களாமே…?

  பின்னே  அவங்க “கவர்ச்சி நடிகை” ஆச்சே…!

எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி.

   “எதுக்குங்க தூங்கும்போதுகூட ‘மாஸ்க்’ போட்டுக்கிட்டிருக்கீங்க?!”

     “வைரஸ் கிட்டே நெருங்கும்போது எச்சரிக்கையா இருக்கணும்னுதான்!

  முத்து ஆனந்த். வேலூர்  

கி.ரவிக்குமார் கவிதைகள்!

கி.ரவிக்குமார் கவிதைகள்!

எந்தக்குழந்தை அழுததோ
இந்த உடம்பில் இறைவன்
காற்று ஊதிக் கொடுக்க!

சிரிக்க சிரிக்க
கன்னம் உப்புகிறது
வளர்பிறைக்கு!

எனக்கு முன்னால் விழித்து
இன்றும் காத்திருந்தது
ஒரு பகல்

தேன்சிட்டு ஆகஸ்ட் 2020 இதழ் நகைச்சுவை சிறப்பிதழ்  

காலையில் அந்த வீட்டுக்குள்ளும்

மாலையில் இந்த வீட்டுக்குள்ளும்
இருக்கிறது மதில்சுவரின் நிழல்.

குழந்தைகளின் ஓவியங்களில்
மரங்கள் இருக்கும் வரை
உயிர்ப்புடன் இருக்கும் பூமி!

புலம் பெயர்ந்த
சாலைகள் எங்கும்
கிருஷ்ண பாதங்கள்.

 தூங்குவதற்கும்
விழித்திருப்பதற்கும்
இடைப்பட்ட போராட்டமாக
வாழ்க்கை!

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 21

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 21

உங்கள் ப்ரிய “பிசாசு”

முன்கதை: ராகவனின் நண்பன் வினோத் கூட்டி வரும் பெண் செல்விக்கு பேய் பிடித்துள்ளதால் அருகில் உள்ள தர்காவில் சேர்க்கிறார்கள். அங்கு சென்றும் அவளை பிடித்துள்ள பேய் விலகாமல் பழி வாங்குகிறது. முகேஷின் நண்பன் ரவியை கண்டுபிடித்து தரும் அவனது சித்தப்பா சுவாமிஜி அவன் கொலை செய்திருப்பதாக கூறுகிறார். அவனை வைத்து ஏதோ பூஜைகள் செய்ய ரவியின் உடம்பில் உள்ள ஆவி பேசுகிறது. இனி

 அந்த மலை பிராந்தியமே அதிரும் வண்ணம் நான்  யாரா? நான் தான் மகேஷ்! என்று அதிர வைக்கும் சிரிப்பால் கலங்கடித்தான் ரவி.

    எல்லோரும் மிரண்டு போயிருக்க சுவாமிஜி மற்றும் பயப்படாமல் அப்போ நீ மகேஷ்! ஏன் இவன் உடம்பிலே புகுந்திகிட்டு இருக்கே? என்றார்.

   பழிவாங்கனும்! அதுக்கு இவன் உடம்புல இருக்கேன்!

யாரை?

 என்னையும் என் மனைவியையும் கொன்னவங்களை!

 பழிக்குப்பழி! இது பாவம் இல்லையா?

எது பாவம்? நான் காதலிச்சது பாவமா? என் மனைவியை நல்லா பார்த்துகிட்டது பாவமா? ஆறுமாச கர்ப்பிணியா இருந்த என் பெண்டாட்டியை தீ வைச்சு கொளுத்தினாங்களே அது தப்பில்லையா?

   இதை சொல்லும் போது ரவியின் முகம் அப்படியே சிவந்தது! ஆக்ரோஷமாக கத்தினான்.

   சரி! அதுக்காக

என்னை கொன்னவங்களை தேடிகிட்டு இருக்கேன்! சில பேரை முடிச்சாச்சு! சிலபேர் பாக்கி இருக்கு! வந்த காரியம் முடிஞ்சதும் போயிருவேன்!

  நீ போயிருவே ஆனா அப்பாவி இந்த ரவி இல்லே போலிஸ் கிட்ட மாட்டிக்க வேண்டியிருக்கும்.

   கண்டிப்பா மாட்ட மாட்டான்!

  எப்படி சொல்றே?

 நான் இவன் உடம்பிலே தங்கறேன்! ஆனா இவன் கையால எந்த கொலையும் செய்யலை!

புரியும் படியா சொல்லு!

  எனக்கு தங்குமிடம் வேணும்! என் உடலுக்கு சக்தி வேணும்! அதுக்காக நான் தேர்ந்தெடுத்த ஒரு உடல்தான் ரவி! என் ஆன்மா அவன் உடம்புல தங்கி இருக்கு! இது தற்காலிகம்தான்! அது சாந்தியடைஞ்சதும் போக வேண்டிய இடத்திற்கு போயிரும்! இவன் உடல் என்னோட தங்குமிடம் மட்டும் தான்! இவனைக் கொண்டு நான் எந்த கொலையும் பண்ணலை! இவன் மூலமா கொலையாளிகளோட இடத்திற்கு போறேன்! அப்புறம் இவனை விட்டு பிரிஞ்சுதான் என்னோட பழிவாங்கலை செய்யறேன்.

   ஆனா கொலை நடந்த இடத்தில இவன் இருப்பானே! ஏதாவது சாட்சியம் கிடைச்சா ரவியோட வாழ்க்கை பாதிக்கப்படுமே!

  கண்டிப்பா பாதிக்க படாது!

  எப்படி சொல்றே!

ரவி யாரையும் கொல்லலை! நான் தான் கொல்லறேன்! இதை நான் எங்க வேணாலும் சொல்வேன்!

  நீ சொல்லுவே ஆனா கோர்ட் நம்பணுமே!

ரவியின் உடலில் இருந்த அந்த ஆவி உறுமியது! என்னை விடு! நான் போகனும்! உன் கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டிருக்க முடியாது!

  நீ இப்ப என் கோட்டையில் இருக்கே! என் பேச்சை கேட்டாத்தான்  உனக்கு விடுதலை!

   அது முடியாது! நான் கிளம்பறேன்! ரவி அந்த சக்கரத்தில் இருந்து ஒரு அடி வைத்திருப்பான்! ஆ.. என்று அலறியவாறே விழுந்தான்.

   முகேஷ் மிகவும் பயந்து போயிருந்தான். சித்தப்பா என்ன? ரவிக்கு என்ன ஆயிற்று?

   ஒண்ணும் இல்ல! நீ பயப்படாதே! இது ஒரு துர் ஆவி!

 இதை உங்களாலே விரட்ட முடியாதா சித்தப்பா?

  விரட்டணும்!

என்ன சித்தப்பா ஒரு மாதிரி தயக்கமா சொல்றீங்க!

  தயக்கம் எதுவும் இல்லை! ஆனா அந்த மகேஷ் ஆவியோட பேசினதுல அதன் செயல்ல ஒரு நியாயம் இருக்கறாமாதிரி தோணுது!

  அதுக்காக அப்படியே விட்டுடலாம்னு சொல்றீங்களா? ரவி என்னாவான்?

 நீ என்கிட்டே வந்துட்டே இல்லே! ஒண்ணும் ஆகமாட்டான்! இப்போதைக்கு அவன் மேல இருக்கிற ஆவி எங்கேயும் போகாத மாதிரி கட்டு போட்டிருக்கேன். அதன் பிறகு வர்ற அமாவாசையிலே அதை அவன் கிட்ட இருந்து இறக்கி ஒரு பாட்டில்லே சிறை வைச்சிடிறேன்!

  என்ன சித்தப்பா! அலாவுதீன் கதை மாதிரி சொல்றீங்க!

   அடங்காத ஆவிகளை இப்படி பாட்டில்ல இறக்கி  சீல் வைச்சி பூமிக்கு அடியிலேயோ இல்ல கடல்லேயோ தூக்கி வீசிடுவோம்!

   என்னமோ போங்க! ரவி நல்ல படியா குணமானா போதும்!

கண்டிப்பா குணமாயிருவான் கவலைப்படாதே!

 ஆமாம் சித்தப்பா! ஆவிங்கன்னா என்ன? அதை நேர்ல பார்க்க முடியுமா?

 துர் மரணம் அடைஞ்சவங்களோட ஆத்மாதான் ஆவி! இறந்த உடல்ல அது மீண்டும் புக முடியாது. ஆனா அதனோட ஆசைகள் பூர்த்தி அடைஞ்சி இருக்காது, அதனோட ஆயுசு இன்னும் இருக்கும். அதனாலே அது மேல் உலகமும் போக முடியாது. இப்படி ரெண்டு கெட்டான் நிலையில அது வாழ்ந்த இடத்தில் அலைஞ்சி கிட்டு இருக்கும். அதனோட ஆயுள் முடியறவரைக்கும் அது இப்படித்தான் வாழ வேண்டியிருக்கும். அதன் பின்னர் தான் அது மேல் உலகம் போய் அப்புறம் பாவ புண்ணிய கணக்கு எல்லாம் பார்த்து அடுத்த பிறவி இல்லே மோட்சம்.

   சித்தப்பா! பிறவியிலே உங்களுக்கு நம்பிக்கை இருக்கா!

நமக்கு அடுத்த பிறவின்னு  ஒண்ணு இருக்கா?

  அது பெரிய ஆராய்ச்சிக்குரிய விசயம்! பல சித்தர்களும் முனிவர்களும் பிறவி இருக்குதுன்னு பாடி வைச்சிட்டு போயிருக்காங்க! நம்முடைய புராணங்களும் பிறவி இருக்குதுன்னு சொல்லுது. ஆனா இதுவரைக்கும் இது உண்மைன்னு நிரூபீக்க படலை!

   சரி சித்தப்பா! இப்ப ரவி மேல இருக்கிற ஆவியோட  ஐ மீன் மகேஷ் என்கிற ஆவியோட பழைய வாழ்க்கை வரலாறு எப்படி தெரிஞ்சிக்கிறது. திரும்பவும் இப்படி சக்கரம் எல்லாம் வரைஞ்சி பூஜை எல்லாம் செஞ்சிதான் தெரிஞ்சிக்கணுமா?

    இன்னொரு முறையும் இருக்கு!

அது என்ன முறை சித்தப்பா?

 அதுதான் ஆவியோட பேசற ஓஜா போர்டு முறை!

அது எப்படி?சித்தப்பா ஆவியோட பேசறது?

 சொல்றேன்! அதுக்கு முன்னாலே சுடுகாட்டு வரைக்கும் போய் மீண்டு வந்த ஒரு மனுசனை பத்தி தெரியுமா உனக்கு?

    என்னது சுடுகாட்டுக்கு போயி மீண்டு வந்துட்டாரா?

  ஆமாம் நம்ப பக்கத்து ஊரில ஒரு ஆசாமி திடீர்னு செத்து போயிட்டான். எல்லாருக்கும் தகவல் சொல்லி அனுப்பிச்சி எல்லா சடங்கும் முடிச்சிட்டாங்க! சுடுகாட்டுக்கு கொண்டு போய் பிணத்தைவச்சி கட்டையும் அடுக்கிட்டாங்க!

 தீ வைக்கற சமயம்! நம்மாளு திடீர்னு எழுந்திருக்கான்!

  அங்கிருந்தவங்க பதறி அடிச்சிகிட்டு ஓட  ஆரம்பிச்சிட்டாங்க! அப்புறம் இவன் நில்லுங்க! நில்லுங்க! நான் பேயி இல்ல மனுசந்தான்னு கத்தவும் ஒருத்தரு ரெண்டு பேரு கொஞ்சம் தைரியம் வந்து நின்னாங்களாம்!

   அப்புறம்?

 அவன் மேல போன கதைய கதைகதையா சொன்னானாம்? எம கிங்கரர்கள் வந்தாங்களாம்! பாசக்கயிற்றை வீசினாங்களாம்? அப்படியே கட்டி இழுத்துகிட்டு போய் எமன் முன்னாடி நிறுத்தினாங்களாம். அப்ப சித்திர குப்தன் இவனோட விதியை படிச்சிட்டு இவன் சாகற நேரம் இது இல்ல! மாத்தி அழைச்சிட்டு வந்துட்டாங்க என்று சொன்னானாம்!

  எமன் ரொம்ப கோபப்பட்டு சீக்கிரம் இவன் உடம்புல உயிரை கொண்டு போய் சேருங்கன்னு சொல்லி அனுப்பி வைச்சிட்டாராம்! இவனும் தூங்கி முழிச்சாப்பல எழுந்திகிட்டானாம்!

  அப்புறம் என்ன ஆச்சி சித்தப்பா?

 என்னதான் அவன் கதை சொன்னாலும் நம்ம மக்க அவனை திரும்பவும் வீட்டுக்குள்ளே சேர்த்துக்கலை! இப்ப தனியா சுடுகாட்டில தான் இருக்கான்.

  ரொம்ப இண்டரஸ்டிங்கா இருக்கே?

சரி இதுல இருந்து உனக்கு என்ன தெரியுது? விட்டலாச்சார்யா படம் மாதிரி இருக்குது! இந்த காலத்துல இப்படி எல்லாம் நடக்குமா?

  அப்ப நீ நம்பலையா?

ஊகும்! இது ஏதோ டுபாக்கூரா இருக்கும்!

ஆனா உன் நண்பனை பேய் பிடிச்சிருக்குன்னு மட்டும் எப்படி நம்பறே?

 சித்தப்பா நீங்க என்ன சொல்ல வறீங்க?

எவனோ எமனை பார்த்து வந்ததை நம்ப மாட்டேன்னு சொல்ற நீ உன் ப்ரெண்டுக்கு பேய் பிடிச்சிருக்கிறதை மட்டும் எப்படி நம்புற?

  ஏன்னா இவன் வித்தியாசமா நடந்துக்கிறான்! செய்கை எல்லாம் பயங்கரமா இருக்கு!

  அப்ப கண்ணாலே பார்த்தா நம்புவே இல்லையா?

 ஆமாம் சித்தப்பா! கண்ணால பார்க்கிற காட்சிங்க கூட இப்ப பொய்யாகிருதே அப்படி இருக்கும் போது கதைகளை நம்பறது கஷ்டம்தான்!

  உன் ப்ரெண்ட் ஏன் தனக்கு பேய் பிடிச்சிருக்கிறதா வேசம் போடக்கூடாது?என்று சுவாமிஜி கேட்க அவரையே  வியப்பாய் பார்த்தான் முகேஷ்! இதை பின்னாலிருந்து கேட்டுக் கொண்டிருந்தான் ரவி! அவன் கண்கள் சிவந்தன!

                                        மிரட்டும்(21)

சு. கணேஷ் குமார் கவிதைகள்!

சு. கணேஷ் குமார் கவிதைகள்!

முகம் நடுங்கும் காதலி

சுண்டல் மடித்த காகிதத்தில்

‘ஆணவக் கொலை’ குறித்த செய்தி!

கதவுக்குப் பின்னே

கூடு கட்டுகிறது குளவி

நெருக்கத்தில் போகி!

  •  

பனிக்காலம்

கோமுகியில் துளிர்த்தெழுந்த ஆலவிதை

வெந்நீர் அபிசேகத்தில் கடவுள்!

  •  

நெய் காய்ச்சிய பாத்திரம்

ஆழ்ந்து நுகர்கிறாள்

வேலைக்காரச் சிறுமி!

 கட்சி துவக்குகிறார் நடிகர்

அடகுக்கு தயாராகிறது

ரசிகன் வீட்டுத் தாலி!

பனித்துளிகள் ருசிக்கின்றன

அதிகாலை நீ போட்டுவைத்த

மார்கழிக் கோலம்

குடிசை வீட்டில் நசுங்கிய பாத்திரங்கள்

உணர்த்திக்கொண்டிருக்கின்றன

குடிகாரன் இருப்பை!

பாரதியின் சிலைமீது

எச்சமிடும் பறவைகள்

‘காக்கை குருவி எங்கள் சாதி!’

தில் ஸ்டார்! ***********************

தில் ஸ்டார்!
***********************

 வேலூர்.வெ.இராம்குமார்


முகநூலில் எழுத்தாளர் கணேஷ்பாலா நடத்திய படக்கதைப் போட்டியில் நடுவர் எழுத்தாளர் ஆர்னிகா நாசர் அவர்களால் இரண்டாம் பரிசாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதை. எழுத்தாளர் ராம்குமார் இயக்குனர் சுந்தர் சி யிடம் உதவி இயக்குனாராக பணியாற்றியுள்ளார்.

“கட்..கட்.. “என்னாச்சு கோபி!.நான் நல்லாத்தானே இந்த சீன்ல நடிச்சேன்.”என கேட்டான் தில் ஸ்டார் வர்மன்.
“வர்மன்!என்ன நீ நடிக்கறே?நான் எடுக்கறது க்ரைம் கலந்த பேய் பட சப்ஜெக்ட்.அதுவும் க்ளைமாக்ஸ் சீன்.இந்த படத்துல,அழகாயிருக்கற உன் உயிர் நண்பனை கொன்னுட்டு,அவன் உடலை வெட்டி புதைச்சுட்டு,அவன் தலையை மட்டும் வீட்ல வெச்சு,அவனுடைய அழகு சிதைந்த முகத்தை ரசிக்கற சைக்கோ கேரக்டர்.க்ளைமாக்ஸ்ல,போலீஸ் உன்னை ஒரு பக்கம் பிடிக்க முடியாமல் திணறுது.இன்னைக்கு மஹாளய அமாவாசை,யாருமில்லாத இந்த பங்களாவுல நீயும்,வீட்டு வேலைக்காரனும் இருக்கீங்க.நீ இந்த உடலில்லாத பாடி கூட பேசும்போது,அந்த முகம் பேயா மாறி பேசி பயமுறுத்தி உன்னை சாகடிக்குது..இந்த சீனுக்கு முகத்துல பயம்,கலவரம்,அதிர்ச்சியைக் காட்டாம,மூஞ்சை உம்முன்னு வெச்சிருந்தா,என்ன அர்த்தம்?”கோபத்தில் கத்தினார் டைரக்டர் கோபிநாத்.
“கோபி!நான் என்ன பண்றது சொல்லுங்க.எனக்கு இந்த பேய்,பூதம் எல்லாம் நம்பிக்கையே கிடையாது.பயம்ன்னாலே என்னன்னு தெரியாத நான் எப்படி பொய்யா பயத்தை கிரியேட் பண்ணி நடிக்க முடியும்,சொல்லுங்க?
“வாஸ்தவம்தான்..தப்பு என் மேலதான்.லவ் சப்ஜெக்ட்ல சாக்லேட் பாயா நடிச்சிட்டிருந்த உனக்கு இந்த பவர்ஃபுல்லான சப்ஜெக்ட்ல நடிக்க வெச்சது என் தப்புதான் என்றார்.”
“கோவச்சுக்காதீங்க கோபி.”
“இந்த காட்டு பங்களாவுக்கு ஒருநாள் வாடகை என்ன தெரியுமா,மூணு லட்சம்ய்யா.இரண்டு நாளா க்ளைமாக்ஸை முடிக்க முடியலை.உன்னால,எனக்கு ஆறுலட்ச ரூபாய் நஷ்டம்,தெரியுமா?”
“விடுங்க..அதெல்லாம் தயாரிப்பாளர் பார்த்துக்குவார் கோபி!”
“யோவ்!இந்த படத்தோட தயாரிப்பாளர்,டைரக்டர் எல்லாமே நாந்தான்யா.ஏற்கனவே ஐந்து படம் க்ரைம்,பேய்ப்பட சப்ஜெக்ட்டை வெச்சி சூப்பர்ஹிட் கொடுத்திருக்கேன்.ஆனால்,ஆறாவது படம்,உன்னால எனக்கு சோதனையா இருக்கு.நல்லா பழகியதால,விடவும் முடியலை.துரத்தவும் முடியாம தவிக்கிறேன்!”
“சாரி!தப்பு என் பேர்லதான்.ஃபைனலா ஒரு ஷாட் போகலாமா..ஒழுங்கா பண்ணிடறேன்.”
“சொதப்பிடாதே.ஏற்கனவே பிலிம் செலவு வேற அதிகமாயிட்டே போகுது.போ..போய் டச்சப் பண்ணிக்கோ?”
“நீ திட்டின திட்டுக்கு ஏற்கனவே முகமெல்லாம் வெளிறிப் போயிருக்கு.நேரா டேக்குக்கு போயிடலாம்.அப்பதான் ஒரிஜினாலிட்டி கிடைக்கும்.”
“ஒகே..ஒகே..கேமிராமேன்,ரெடியாயிருங்க.ரெடி..ஆக்ஷன்.கேமிரா சுழல ஆரம்பித்தது..”
மீண்டும் அவனது நடிப்பில் திருப்தி வராதவனாய்..கட்.கட்,பேக்கப்.”
“பேக்கப் என்றதும் ஒட்டுமொத்த படக்குழுவும் அதிர்ந்துபோய் நின்றார்கள்.”
கோபத்துடன் பங்களாவிற்கு வெளியே வந்தவர்,சிகரெட்டை பற்ற வைத்து ஊறிஞ்ச ஆரம்பித்தார்.
அவர் முன் பவ்யமாக வந்து நின்றான் உதவி இயக்குனர் மணியன்.
“என்னய்யா?
” ஒரு யோசனை இருக்கு சார்.”
“மணியன் திறமைசாலி.என்பதை அவர் அறிவார்.அதுமட்டுமின்றி,இவரது கடந்த ஐந்து பட வெற்றிகளிலும் அவனுக்கு பங்குண்டு..அதனாலேயே,அவன் மீது கோபிநாத்துக்கு அளவுகடந்த அன்புண்டு..”சொல்லு,மணி?”
சொல்ல ஆரம்பித்தான்.
.அவன் சொல்ல சொல்ல கோபிநாத்தின் முகம் பிரகாசமானது.
உடனே பங்களாவுக்குள் நுழைந்தவர்,வர்மனிடம் சென்றார்.
கோபத்தில் இருந்த கோபியை பார்த்ததும்,தர்மசங்கடமாக உணர்ந்தான் வர்மன்.
“சொல்லு கோபி?
“உனக்கு முகத்துல பய உணர்ச்சியே வரமாட்டேங்குது.அது உண்மையா,பொய்யான்னு நான் தெரிஞ்சுக்கணும்.இன்னைக்கு ஒரு இரவு மட்டும் இந்த காட்டு பங்களாவுல,இதே அறையில நீ தங்கணும்.உனக்கு துணையா,இந்த பங்களாவோட வீட்டு சமையல்கார சர்வர் மட்டும் இருப்பாரு…சம்மதமா?”
“எதுக்கு இந்த சேலஞ்ச்?நான் இங்கே தங்கறதனால,உனக்கு என்ன ஆதாயம்?”புரியாமல் வர்மன் கேட்டான்.
“இந்த பங்களாவுல இதுவரை யாருமே தனியா தங்கனதுல்லே.நீ தங்கிட்டா,நிஜமான தைரியசாலிதான்.ஒருவேளை பயந்துட்டா,அதே பய உணர்ச்சியோடயே நாளைக்கு க்ளைமாக்ஸை முடிச்சுடுவேன்.இந்த டீல்ல நிச்சயமா தோத்திடுவேன்னு எனக்கு தெரியும்.”
“நீ நினைகக்கற மாதிரியில்லை.நான்தான் ஜெயிப்பேன்.எனக்கு இந்த டீல் ஒகே என்றான்.”
“ஆனால்,ஒரு கண்டிஷன்..நைட்டு நீ சரக்கடிக்கக் கூடாது.ஏன்னா,பய உணர்ச்சி போயிடும்ங்கறது என்னோட எண்ணம்.”
“ஒகே..டீல்!”
“புன்னகைத்தான்.இரவு வரைக்கும் நம்ம ஹோட்டல் அறையில போய் ரிலாக்ஸ் பண்ணிட்டு வரலாம் என்றான். “
“அதுவும் சரிதான்!
“வர்மனுடன் செல்லும்போது,திரும்பி மணியணைப் பார்த்து புன்னகையுடன் தம்ஸ் அப் காட்ட..”
“பதிலுக்கு மணியனும் தம்ஸப் சிம்பளை காட்டி சிரித்தான்!
********************
காட்டுப் பங்களா.,இரவு மணி ஏழு..
சர்வரை அழைத்தான் வர்மன்.
வந்தான் சர்வர்.
எங்க படக்குழுவினர் எல்லோரும் போய்ட்டாங்களா?
“போய்ட்டாங்க சார்..உங்களுக்கு ஏதாவது வேணுமா சார்.
“வேணாம்.நைட்டுக்கு சப்பாத்தி மட்டும் பண்ணிடுங்க போதும்.”
“சார் இந்த ரூமெல்லாம் பார்க்க திகிலா இருக்குதே..பேய்ப்பட ஷூட்டிங்கா,சார்?
“அருகேயிருந்த தலை உருவத்தில் கைவைத்து தடவியபடியே,ஆமாம் என்றான்”.
“சரி சார்!ஏதாவது தேவைப்பட்டா,பாலுன்னு ஒரு குரல் கொடுங்க வந்திடறேன் என்றான்.”
“ஒகே பாலு.”
**********************
இரவு பத்து மணி..
டிபனை முடித்துவிட்டு,பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்தான்.கண்ணுக்கெட்டும் தூரம் வரையில் காரிருள்..எதிரேயிருப்பது கூட கண்ணுக்கு தெரியவில்லை.கொஞ்ச நேரம் இருளை ரசித்தவன்,படுக்கைக்கு வந்தான்,சுவற்றில் இருந்த படமும்,மேஜையில் இருந்த ஒற்றை தலையும் எரிச்சலுடன் பார்த்துவிட்டு சொன்னான்,இதுகளையெல்லாம் பார்த்தா,பயமா வரும்,எரிச்சல்தான் வரும்.”
“பாலு வந்தான்..சார்!நான் தூங்கப்போகிறேன்.உங்களுக்கு எதாவது வேணுமா?
“ஒரு க்ளாஸ் பால் போதும்ப்பா.”
**************
நடுநிசியை நேரம் நெருங்கிக் கொண்டிருக்க..வெளியே கோட்டான்,வௌவால்,ஆந்தை கத்தும் சப்தங்கள் காதைப் பிளக்குமளவுக்கு கேட்டது..
கண்ணயர முயற்சித்தவன்,மேஜையிலிருந்த மனித தலையை பார்த்தான்.அது அவனை பார்த்து கண்சிமிட்டியது..அப்போது அறைக்குள் பால் க்ளாஸூடன் நுழைந்தான் பாலு.கண்சிமிட்டிய உருவமோ,இப்போது புன்னகைத்தது,
அய்யய்யோ என அலறியடித்து எழுந்தவன் சுவற்றில் இருந்த ஒற்றைக்கண் ஒவிய உருவத்தை பார்த்தான் அது அவனைப் பார்த்து கண்ணடித்தது.அறைக்குள் ஏதோ துஷ்டசக்தி நுழைந்த தடயமாய் மல்லிகைப்பூ மணக்கவும்,
அய்யய்யோ அம்மா என அலறியபடியே வேலைக்கார சர்வர் பாலு பயத்தில் தரையில் சரிந்தான்.
“அந்த சமயத்தில் கரண்ட் கட்டாகிவிட..ஒரு பெண்ணின் ஆக்ரோஷ சிரிப்பு சத்தம் கேட்டதும்தான் தாமதம்..ஏற்கனவே முகம் வெளிறிப் போயிருந்த வர்மன்,இருளில் அவன் முதுகில் யாரோ கைவைத்த உணர்வு படரவும்..ஐய்யோ..அம்மா..எனஅதிர்ச்சியில் அலறலுடன் தரையில் விழுந்தான்..
மறுகணமே அந்த அறைக்குள் மின்சாரம் வந்தது.வர்மனின் அருகே மணியன் பெண் வேடமிட்டு நின்றிருந்தான்.உடனே மேலே விட்டத்தை பார்த்து,டேக் ஒகே.கேமிராவை ஆஃப் பண்ணிட்டு கீழே வாங்க என்றான்.
மணியனின் சிக்னலுக்காக காத்திருந்த கோபிநாத்தும்,டெக்னிஷீயன்களும்,மொட்டைமாடியில் இருந்து இறங்கி வந்தனர்.
“வெரிகுட் மணியா!உன் ஐடியா நல்லா ஒர்க்கவுட்டாகிடுச்சு.க்ளைமாக்ஸ் சீன் ரொம்ப நேச்சரா வந்திருக்கு.வர்மனுக்கே தெரியாம,நாம இங்கே வந்து மறைஞ்சிருந்தது நல்லதாப் போச்சுப்பா..முதல்ல இரண்டு பேருக்கும் என்னாச்சுன்னு பாரு.

“அய்யய்யோ சார்!ரெண்டு பேருமே மூச்சி பேச்சில்லாம,ஆழ்ந்த மயக்கத்துல இருக்காங்க.இப்போ என்ற பண்றது?மணியன் கேட்கவும்,
“முதல்ல,டாக்டருக்கும்,மீடியாக்களுக்கும் போன் பண்ணு.”
“டாக்டர் ஒகே..மீடியாவுக்கு எதற்கு?
“பப்ளிசிட்டிக்குதான்.படத்தோட க்ளைமாக்ஸ்ல நடிக்கும்போது பயந்து மயங்கிட்டாரு..தில்ஸ்டாருக்கே இந்த நிலமைன்னா,படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு என்ன கதியாகுமோன்னு நியூஸ் போட்டாங்கன்னா,பப்ளிசிட்டிக்கு பப்ளிசிட்டியும் ஆச்சு.ரசிகர்கள்கிட்டே எதிர்பார்ப்பும் அதிகமாயிடும்..வியாபாரமும் பிச்சிக்கும்ய்யா..”
“இதைக் கேள்விப்பட்டா,வர்மன் சார் வருத்தப்பட்டா,என்ன சார் பண்றது?
“இந்த படத்தோட இரண்டாம் பாகத்தோட ஹீரோவே நீதான்னு சொல்லி சமாளிச்சுடலாம்ய்யா.”
“கோபிநாத்தின் மார்க்கெட்டிங் திறமையைப் பார்த்து வியந்து போனான் மணியன்!

குறும்பா கூடம்!

உறங்கா இரவுகளில்
ஜன்னலுக்கு வெளியே நிலா
காவலெனவும், காதலெனவும்…

– வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

எந்த மேகத்திலிருந்து
கசியுமோ
முதல் துளி…

– வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

நீரில் மிதக்கும் பூக்கள்

நதியில் கரைகிறது

இறப்பின் துயரம்

 ச.கோபிநாத் சேலம்

அமைதியான நதியில்

மெல்ல நகரும் படகு

வேடிக்கை பார்க்கிறது குருவி!

ச.கோபிநாத் சேலம்

அடித்து அடித்து எழுதியும்
கண்ணீர் சிந்திடவில்லை
காகிதம்!

அ.வேளாங்கண்ணி

தூர விலகி கலைத்துப் போட்டது
ஜன்னல் வரைந்த ஓவியத்தை
சூரியன்!

அ.வேளாங்கண்ணி

கடனெடுத்து கட்டிய வீடு,
புதிதாக குடிவந்திருக்கிறார்கள்;
நடுத்தெருவுக்கு!

அன்ஸார் எம்.எல்.எம்

நல்ல மழை,
நிரம்பி வழிகிறது குளம்;
தவளைகள் சத்தத்தால்!

கூழாங்கல்லின் அடியில் 
படபடக்கிறது
சுதந்திர தின கவிதை…

ஐ.தர்மசிங்

விவசாயியின் வறுமை
அரிசியாக மாறுகிறது
விதை நெற்கள்…

ஐ.தர்மசிங்

மவுனப்பொழுது!
முள்ளாய் குத்துகிறது!
கடிகாரத்தின் ஓசை!

தளிர் சுரேஷ்.

உருப்போட்டு முடித்ததும்
     சில்லறை விழுகிறது!
   நடைபாதை ஓவியன்!

தளிர் சுரேஷ்.

வெண்மேகம்
காளான் குடையானது
இலையுதிர்ந்த மரத்தின்மேல்

சா.கா.பாரதி ராஜா, 

தூண்டிலைக் கடித்துக் கொண்டே
கரையேறாமல் நீந்துகிறது
வானில் பட்டம்

சா.கா.பாரதி ராஜா, 

ஹைக்கூ சிறப்பிதழ்

தாயின் புதைகுழி
தொட்டுத் தொட்டுப் பார்க்கிறேன்
பூத்திருக்கும் செடி…

தமிழ் தம்பி

எறும்பு தவறி விழுந்ததும் /
ஆகாயம் கலங்குகிறது /
கிணற்றுக்குள் தவளை

எம்.ஜெகன் ஆண்டனி.

சிதிலமடைந்த சிலை/
பாதுகாப்பாக இருக்கிறது/
பறவையின் குடும்பம்

-சாண்டில்யன் விவேகானந்தன்

குறும்பா கூடம்!

தரையில் காலூன்றும்/
நம்பிக்கையில் தொங்குகின்றன/
ஆலம் விழுதுகள்

-சாண்டில்யன் விவேகானந்தன்

சுவரேறிய எறும்பு
கிணற்று நீரில் தத்தளிக்கிறது
ஒற்றை இலை.

கவி நிலா மோகன்.

குடமுழுக்கு நடக்கின்ற

கோயிலுக்கு அருகில்

கூரையில்லாப் பள்ளிக்கூடம்

ஸ்ரீநிவாஸ் பிரபு கவிதைகள்

தேநீர் குவளையில்
பூக்களைச் சேமித்தேன்
பட்டாம்பூச்சிகளின் வருகை
….

  • திடீர் மழை

ஒதுங்கி நிற்க

குடைபிடிக்கிறது கோயில் மணி

  • ஈ பறந்து போகிறது

தேனீர் கோப்பை விளிம்பில்

காலடிக் கோடு

  • கடந்து போன பிச்சைக்காரன்

கூடவே வருகிறான்

முகத்தில் பசி வரிகள்

  • தோன்றி மறையும் நேரத்துள்

பால்யம் கூட்டிச் சென்று திருப்புகிறது

                வல்லமை வாய்ந்த வானவில்

தொடர்வண்டியில்

எனை ஏற்றிவிட்டு

எதிர்காற்றை கிழித்தபடி

தொடர்ந்து ஓடிவரும்

உன் காலடித் தடங்கள்

சொல்லாமல் சொல்லிப்போகிறது

என் மீதான உன் ப்ரியங்களை!

                    – தனுஜா ஜெயராமன்.

வெள்ளம் வடிந்த
ஆற்றின் படித்துறையில்
பறவைகளில் கால்தடங்கள்!

-ஹைக்கூ உமா

ஏரியில் மீன்பிடிக்க
மணம் வீசுகிறது
கரையில் பூத்த தாழம்பூ.

Ji. அன்பழகன்.

பூ விழுந்ததால்
தலை விழுந்தது
ரவுடி சுண்டிய நாணயம்
புது வண்டி ரவீந்திரன்

இங்குமங்குமாய் ஒரு எறும்பு
பிடிபடாமல் ஆடிக் கொண்டிருக்கிறது
இலையின் நிழல்

– கி.கவியரசன்

பயமுறுத்தும்
சோளக்கொல்லை பொம்மை
வட்டமடிக்கும் பட்டாம்பூச்சி.!ஜவஹர்.ப்ரேம்குமார். பெரியகுளம்