அன்பார்ந்த வாசகப் பெருமக்களே! வணக்கம். இந்த இதழுடன் நமது இதழ் இரண்டு ஆண்டுகளை முழுதாய் நிறைவு செய்கிறது. ஆறுமாதங்கள் முன்பு இவ்விதழை நிறுத்திவிடலாம் என்றொரு யோசனை வைத்திருந்தேன். அதையும் மீறி இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்ததில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
சென்ற இதழ் ஹைக்கூ சிறப்பிதழ் பற்றிய உங்கள் கருத்துகள் கிடைக்கப் பெற்றேன். ஹைக்கூ சிறப்பிதழ் ஹைக்கூ படைப்பாளிகள் பலருக்கு பெரிய சுவையை கொடுக்கவில்லை என்பதை விமர்சனங்களின் மூலம் அறிந்தோம். குறைகளை அடுத்தச் சிறப்பிதழில் நிறைகளாக்க முயல்வோம். இந்த இதழ் நகைச்சுவை சிறப்பிதழாக வெளியிடுகின்றோம். அதற்கு முதல் காரணம் எழுத்தாளர் தஞ்சை ப்ரணா. அவரது படைப்புக்களை நமது இதழில் தொடர்ந்து வாசித்து இருப்பீர்கள்.
நான்கு மாதங்கள் முன்பு தேன்சிட்டு இதழ் சரிவர வாசகர்களிடையே சென்று சேரவில்லை என்ற வருத்தத்தில் இதழை பி.டி.எப் வடிவம் நிறுத்திவிட்டு இணைய தளத்தில் மட்டும் பதிவுகளாக வெளியிடலாமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது. தேன்சிட்டுடன் இணைந்து சிறுகதைப் போட்டி நடத்தலாமா என்று போனில் தொடர்பு கொண்டு கேட்டார். அவர் ஒரு பரிச்சயமான சிறந்த எழுத்தாளர். முகநூலில் அவருக்கு ஏராளமான நட்பும் பாலோயர்ஸும் உண்டு. அவர் முகநூலிலேயே இந்த சிறுகதைப் போட்டியை அறிவித்திருக்கலாம். இருப்பினும் தேன்சிட்டுடன் இணைந்து சிறுகதைப்போட்டியை நடத்த வந்தது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
இதைக் கேட்டபோது. சிலர் மின்னிதழ் துவக்கி ஆர்பாட்டமாய் வெளியிடுவார்கள் சிலமாதங்களில் அந்த இதழ் காணாமல் போய்விடும். அப்படியில்லாமல் தொடர்ந்து நீங்கள் வெளியிட்டு வருகிறீர்கள். உங்களை பாராட்டும் விதமாகவும் வாசகர்களுக்கு இந்த கொரானா லாக்டவுன் காலத்தில் பயனுள்ள விதமாக பொழுது கழியும் வண்ணம் நகைச்சுவை சிறுகதைப்போட்டி நடத்தலாம் என்றார். அவர் தேன்சிட்டின் மீது கொண்ட நம்பிக்கை தேன்சிட்டுவிற்கு உற்சாகத்தைக் கொடுத்தது.
தேன்சிட்டு- எழுத்தாளர் ப்ரணா நகைச்சுவை சிறுகதைப் போட்டி உதயமானது. அப்போட்டியில் வாசகர் பலர் கலந்து கொண்டு படைப்புக்களை அனுப்பி இருந்தீர்கள். அந்த படைப்புக்களை நடுவர் பரிசீலித்து பரிசுகளை அறிவித்துள்ளார். பரிசுபெற்றோர் விவரம் உள்ளே. பரிசுபெற்ற நகைச்சுவை கதைகளில் முதல் மூன்று பரிசினை பெற்ற கதைகள் இவ்விதழை அலங்கரிக்கின்றன.
நகைச்சுவை சிறப்பிதழில் உங்களை மகிழ்விக்கும் வண்ணம் ஏராளமான நகைச்சுவை துணுக்குகளும் நகைச்சுவை கதைகளும் தந்துள்ளோம். கொரானா என்னும் கொடிய தொற்றுநோயின் தாக்கத்தில் இருந்து கொஞ்சமேனும் உங்கள் துயரங்களை மறந்து சிரிக்க இந்த இதழ் உதவுமேயானால் மிகவும் மகிழ்வோம்.
அடுத்த இதழ் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எனவே புத்தம் புதிய பகுதிகளுடன் உங்களை மகிழ்விக்க வருகிறது தேன்சிட்டு.
உங்கள் படைப்புக்களையும் விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் விரைந்து அனுப்புங்கள். தேன்சிட்டோடு வானில் சிறகடியுங்கள்! நன்றி வணக்கம். அன்புடன்.
நத்தம்.எஸ். சுரேஷ்பாபு. ஆசிரியர், தேன்சிட்டு.