உதவி தனுஜா ஜெயராமன்.

வாச கதவை திறந்ததும் எதிரே நின்றிருந்தாள் லஷ்மி…
ஏன் லஷ்மி ..காலையிலேயே வரேன்னுட்டு சொல்லாம கொள்ளாம நின்னுட்டயே..சிங்க் நிறைய பாத்திரம் குமிஞ்சு கெடக்கு… துணிவேற மிஷின்ல கெடக்கு …என்று கோபித்தாள் சித்ரா
சாரிம்மா…”எங்க சங்கத்துல இந்த கௌதம் பயலுக்கு கல்வி உதவி தொகை தர்றேன்னு சொல்லியிருந்தாங்க” …அதான் காலையிலே போயிட்டு, இப்ப தான் வரேன்….
“வாங்கிட்டயா லஷ்மி”
“ஒரு ஆயிரம் ரூபா குடுத்தாங்க”..அதுக்கே நாலுமணி நேரம் வெயில்ல உக்காந்துட்டு வாங்கினு வரேன்..
” ஏன், என்னாச்சி”
“அது எங்க சாதி ஆளுங்க வெச்சிருக்கிற சங்கம்..மா”…நல்லா படிக்கிற எங்க சாதி பசங்களுக்கு உதவி தொகை தரோம்னு கூப்டாக…ஆனா இம்மா நேரம் மீட்டிங் போட்டு சாதி சாதின்னு பேசி அறுத்து தள்ளிட்டு தான் அந்த காசையே தந்தானுங்க ..
“அதுக்கு ஏன் லஷ்மி இவ்ளோ கோவம் …”
அடபோங்கம்மா…எங்க ஆளுங்கல்லாம் நல்லா வசதியாத்தான் இருக்காங்க…நான் வீட்டு வேலை செஞ்சி வவுத்தை கழுவுறேன்… சாதியா வந்து சோறுபோடுது….என் கஷ்டத்துல தான் நான் குப்பைய கொட்றேன்… என்று சிங்கிலிருந்த பாத்திரங்களை தொலக்க ஆரம்பித்தாள்..
“ஆமாம் லஷ்மி…. கேக்கறேன்னு தப்பா நினைக்காதே…நீ…நீ ..என்ன ஜாதி…”
ம்…ம் “ஏழை ஜாதி” …என்றாள் தூண்டை உதறி தோளில் போட்டபடி….