தேன்சிட்டு – எழுத்தாளர் தஞ்சை ப்ரணா இணைந்து நடத்திய நகைச்சுவை சிறுகதைப் போட்டி முடிவுகள்
அன்பார்ந்த வாசகர்களே! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நகைச்சுவை சிறுகதைப் போட்டியின் முடிவுகள் இதோ.

முதல் பரிசு: புதுவண்டி ரவீந்திரன்.
யாரு சுட்ட தோசை! இது அப்பா சுட்ட தோசை!

இரண்டாம் பரிசு: மலர்மதி
ஞாபகமறதி ஞானக்கண்ணு

மூன்றாம் பரிசு: ஆர். ஹரிகோபி
மங்கையர்க்கரசியின் மகிமை.
ஆறுதல் பரிசுகள்:
லஷ்மி- ஐம்பது கிலோ தாஜ்மஹால்
சி.பி. செந்தில்குமார் – ஒரு மஞ்சமாக்கானின் பெண் பார்த்த படலங்கள்
புவனா- நளபாகம்.
வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தேன்சிட்டு நிர்வாகம் தெரிவித்துக் கொள்கிறது. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.பரிசினை தவறவிட்டோர் இம்முறை பரிசு கிடைக்காவிட்டாலும் அடுத்த முறை பரிசினை வெல்ல வாழ்த்துகள்.
இப்போட்டிக்காக மொத்தம் 35 கதைகள் வந்தன. தேன்சிட்டு நிர்வாகம் இன்னும் அதிகமான போட்டியாளர்களை எதிர்பார்த்தது. ஆனால் பெரும்பாலோர் இதில் ஆர்வம் காட்டவில்லை. நகைச்சுவை கதை என்பதால் இருக்கலாம் என்று நினைக்கின்றோம்.
இப்போட்டி குறித்து எழுத்தாளர் ப்ரணா அறிவித்தபோது நடுவர் யார் சார்? என்றேன். நீங்களே சொல்லுங்கள் என்றார். முதல் நபராய் நான் சொன்ன நபர் நந்து- சுந்து. குமுதம் வார இதழில் இரண்டு வருடங்களாக தொடர்ந்து எக்ஸ்- எக்செல் நகைச்சுவை கதைகளை எழுதி அசத்திக் கொண்டிருப்பவர். கலைமகள், கல்கி, வாரமலர், ராமகிருஷ்ணவிஜயம், பொதிகைச்சாரல் உள்ளிட்ட பத்திரிகைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளை வென்ற இவரின் நகைச்சுவை உணர்வு அபரிமிதமானது. அவருடன் சில வார்த்தைகள் பேசினாலே நமக்கு நகைச்சுவை உணர்வு நிரம்பி வழியும். நகைச்சுவை மட்டுமின்றி சிறுகதை ஒரு பக்க கதை என அனைத்து வடிவ கதைகளிலும் தனிமுத்திரை பதித்துவரும் அவரே இப்போட்டிக்கு நடுவராக இருக்க சரியானவர் என்று நினைத்தேன். எனவே அவர் பெயரை முன்மொழிந்தேன். ப்ரணாவும் நானும் அவரைத்தான் நினைத்துள்ளேன். என்றார். ப்ரணாவே நந்து-சுந்து அவர்களை தொடர்பு கொண்டு பேசி சம்மதம் வாங்கினார்.
தேன்சிட்டு இதழ் ஆசிரியர் என்ற முறையில் அவருக்கு ஒரு மெயில் அனுப்பியதோடு என் பணி முடிந்துவிட்டது. எழுத்தாளர் ப்ரணாவே நடுவரை அவ்வப்பொழுது தொடர்பு கொண்டு போட்டி குறித்து தகவல்களை அளித்தார். முதலில் 31-5-20 கடைசி தேதியாக அறிவித்தோம். பின்னர் பலரின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு மாத கால நீட்டிப்பு வழங்கினோம்.அதன் பின்னரே கதைகள் வந்து சேரத் துவங்கின.
போட்டிக்கு வந்த மொத்த கதைகளையும் தொகுத்து பிடிஎப் வடிவில் அவருக்கு அனுப்பி வைத்தோம். பத்துநாள் அவகாசம் கேட்டவர் ஒரே வாரத்தில் முடிவுகளை தந்துவிட்டார். அவரிடம் கதைகளை தேர்ந்தெடுத்த விதம் குறித்து ஒரு விளக்கம் கேட்டோம். அதையும் எழுதி தந்தார். அதை கீழே பிரசுரித்து உள்ளோம்.
முதல் மூன்று பரிசு பெற்ற கதைகள் இவ்விதழில் பிரசுரமாகி உள்ளது. மற்ற மூன்று கதைகள் அடுத்த இதழில் பிரசுரம் ஆகும். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை அனுப்பி வைக்கப் படும். வாழ்த்துகள்.
நந்து சுந்து அவர்கள் கதைத் தேர்வு குறித்து சொன்ன விளக்கம்
போட்டிக்கு மொத்தம் 35 கதைகள் வந்திருந்தன.
இதில் சிலர் இரண்டு கதைகள் அனுப்பியிருந்தனர்.
நகைச் சுவை எழுதுவது கடினம். நகைச்சுவை எப்படி எழுதுவது?
விஷயங்களை மிகைப் படுத்துதல். அல்வா சாப்பிட்டு வாய் ஒட்டிக் கொண்டது என்பது போல.
ஒருவர் பேசுவதற்கு இடக்கு மடக்காக கவுண்டர் கொடுத்தல்.
உண்மையை இன்டைரக்டாக சொல்லுதல். நீ ஒரு நாய் என்று நேரிடையாக சொல்லாமல் நீ ஒரு வள்ளவன் என்று கூறுதல்.இந்த சூட்சுமத்தை புரிந்து கொண்டு எழுதப்பட்ட கதைகள் பரிசுக்கு தேர்வாகியுள்ளன.
நகைச் சுவை கதைகளில் பொன் மொழிகளும் தத்துவங்களும் தேவையில்லை. சில கதைகளில் அவைகள் இருந்தன. இலக்கிய நடை அவசியமில்லை.எழுத எழுத வந்து விடும்.
சீரியஸ் கதைகளுக்கு நல்ல கதைக் கருவும் வலுவான பாத்திரங்களும் இருந்தால் போதும். கதையை அதுவே நகர்த்திச் சென்று விடும். காமெடி அப்படியல்ல.
உப்புமா கிண்டினான். அவ்வளவு தான் கதை. அவன் தப்பு தப்பாக உப்புமா செய்வது தான் கதை. இதற்கு பெரிதாக பாத்திரங்கள் வேண்டாம் (ஒரு வாணலி போதும்)
வாணலி பேசுவதாகக் கூட எழுதலாம். காமெடிக்கு எல்லைகளும் வரம்புகளும் இல்லை.போட்டிக்கு வந்த கதைகள் தேர்ந்தெடுக்கபட்ட விதம் இதோ:
எடுத்துக் கொண்ட கருவுக்கு 25 மார்க்.எழுதிய நடைக்கு 25 மார்க்.
கதையில் தூவப்பட்டுள்ள ஜோக்குகளுக்கு 50 மார்க்.மூன்றையும் கூட்டி மொத்த மார்க்.
பரிசு பெற்ற கதைகளுக்கிடையே ஒன்று அல்லது இரண்டு மார்க் தான் வித்தியாசம்.எனவே தேர்வான எல்லா கதைகளுமே முதல் பரிசுக்கு நிகர் தான்.
தேர்வு பெறாதவர்கள் வருந்த வேண்டாம்.காமெடி வேறு விதமான டிராக். பழகப் பழக வந்து விடும். சற்றே மாற்றி யோசியுங்கள். வெற்றி கதவைத் தட்டும்.
கதவை திறந்து வைத்திருந்தால் இன்னும் நல்லது. அது தானாக நுழைந்து விடும்.
நடுவராக பணியாற்ற வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி.
போட்டி குறித்து எழுத்தாளர் ப்ரணாவின் கருத்துரை:

வணிக நோக்கமோ பொருளாதார பயனோ எதிர் நோக்காது ஒரு மின்னிதழை தொடர்ந்து இரு வருடங்கள் நடத்துவதென்பது பாராட்டுதலுக்குரிய ஒன்று. புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு பயிற்சி களமாகவும், பல்வேறு வணிக இதழ்களில் எழுதுவோருக்கு ஒரு மாறுபட்ட தளமாகவும் இயங்குவது மட்டுமன்றி உள்ளடக்கத்திலும், வடிவமைப்பிலும் மாதா மாதம் மெருகேறிக்கொண்டே வரும் ஒரு மின்னதழ் தேன்சிட்டு. அதனாலேயே “தேன்சிட்டு” மின்னிதழுக்கு எப்பொழுதுமே என் மனதில் தனி இடம் உண்டு.
எனது முதல் சிறுகதை தொகுப்பான “பிள்ளையார் சுழி” ஏறக்குறைய 750 பிரதிகள் விநியோகமாகி பொருளாதர ரீதியிலும் நிறைவை தந்த போது நான் ஒரு சிறுகதை போட்டி நடத்தி அந்த மகிழ்வை பகிர்ந்து கொள்ள நினைத்தேன். உடனே எனது நினைவுக்கு வந்த இதழ் “தேன்சிட்டு” மின்னிதழ் தான்.
நேரத்தையும், திறமையையும், உழைப்பையும் முதலாய் கொண்டு தொடர்த்து மின்னிதழ் நடத்தும்
திரு.நத்தம் சுரேஷ் பாபு அவர்களின் செயல்பாடுகளுக்கு என்னால் கொடுக்க முடிந்த சிறு
மரியாதையாகத்தான் “தேன்சிட்டு” மின்னிதழுடன் இணைந்து இந்த “நகைச்சுவை சிறுகதை போட்டி” நடத்த
எண்ணினேன். தொலைபேசியில் ஆசிரியரை அழைத்து அனுமதி கேட்ட உடனேயே இசைந்தார். திரு. நத்தம் சுரேஷ் பாபு அவர்களுக்கு என் நன்றி.
நகைச்சுவை சிறுகதை போட்டி என்பதால் அதற்கு தகுதி வாய்ந்த ஒருவர் தான் நடுவராக இருக்க வேண்டும்
என எண்ணிய போது திரு. நந்து சுந்து அவர்கள் தான் என் நினைவுக்கு வந்தார். இவர் குமுதம் இதழில் எழுதும் “சிரி” கதையை படித்துவிட்டு சிரிக்காதவர்கள் தமிழ் படிக்கத் தெரியாதவர்களாய்த் தான் இருக்க வேண்டும்; அப்படியொரு சரளமான நகைச்சுவை எழுத்துக்கு சொந்தக்காரார்.
வணிக இதழ்கள் நடத்திய பல்வேறு சிறுகதை போட்டிகளில் மட்டுமின்றி சர்வதேச சிறுகதை போட்டிகளிலும் முதல் பரிசு வென்று வெற்றி வாகை சூடியவர். “மாறியது நெஞ்சம்” என்னும் சிறுகதை தொகுப்புக்கு சொந்தக்காரர்.
திரு. நந்து சுந்து அவர்களிடம் செய்தியை சொல்லி நடுவராய் இருக்க முடியுமா என்று கேட்டவுடன் ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஒப்புக்கொண்டார். போட்டிக்கு வந்த அத்தனை கதைகளையும் படித்து பரிசுக்குரிய
கதைகளை தேர்வும் செய்து தந்தார். அதுமட்டுமின்றி எந்த அடிப்படையில் தேர்வு செய்துள்ளார் என்பதையும்
சுருக்கமாக விளக்கியுள்ளார். இது வருங்காலத்தில் நகைச்சுவை எழுதுவோருக்கும் மிகவும் உதவும். திரு. நந்து சுந்து அவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
இந்த இருவரின் நட்பும் தொடர்பும் எனக்கு கிடைக்க உதவிய “தமிழக எழுத்தாளர்கள்” வாட்ஸ்-அப் குழுமத்திற்கும் அதன் அட்மின்கள் திரு. வைகை ஆறுமுகம் மற்றும் திரு.பெ.பாண்டியன் அவர்களுக்கும் எனது நன்றி!
இந்த நகைச்சுவை போட்டி சிறப்பு பெற்றதே பங்கேற்ற அனைத்து நகைச்சுவை சிறுகதை எழுத்தாளர்களால்
தான். அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது தனிதனி
நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிக்கு சிறுகதை எழுதிய அனைவருக்குள்ளும் இருக்கும் நகைச்சுவையாளர்கள் ஒவ்வொரு விதத்தில் வெளிப்பட்டாலும் சில அளவுகோல் கொண்டு நடுவர் அவர்கள் அலசியதால் சிலரே வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் அனைவருமே எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறும்
சாத்தியம் உள்ளது. முயற்சி திருவினையாக்கும்.
போட்டியில் வென்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்!
நன்றி!
————————————————————————————————————————————————