கவிதைச்சாரல்!
1.
காசுபணம் தொலைத்தார்கள்
பண்ட பாத்திரங்கள் தொலைத்தார்கள்
பொன்பொருள் தொலைத்தார்கள்
சொத்து சுகங்களை தொலைத்தார்கள்
பிள்ளைகளை தொலைத்தார்கள்
சில பெரியவர்கள் தொலைந்திட
பெற்றோரைத் தொலைப்பதோ
வாடிக்கையானது.
தொடர்ந்து….
தன்மானத்தையும் சுயகவுரவத்தையும்
உரிமைகளையும் தொலைக்கலாயினர்
அனைத்தையும்
தொலைக்க முற்பட்ட மனிதர்கள்
இயற்கை வளங்களையும்
வனங்களையும் நதிகளையும்
கனிம வளங்களையும்
தொலைத்ததற்கா வருத்தப் போகிறார்கள்
இந்த மதி கெட்ட மனிதர்கள்.
2.
எனக்கும் உனக்கும் இருந்ததில்லை
ஒருபோதும் இடைவெளி.
உண்மை நிலையறிய உன்
நினைவிழைகளை பின்னோக்கித் தள்ளு
அதனால் தவறொன்றுமில்லை.
நட்பெனும் புள்ளியில் பூத்தது

நமது ஆரம்பம்.
அனுமதி மறுக்கப்பட்ட
நாளொன்றினை உறிஞ்சி
நீயே உருவாக்கி கொண்டாய்
உனக்கான விலகல் வட்டங்களை.
சுயநலக் கோப்பையைகளை
கவிழ்த்து விடு
நமக்குள் இல்லை எப்போதும் விரிசல்.
விரிசல் விழுமென்ற கற்பனையில்
உன்னை வலிய திணித்துக் கொண்டு
அன்புப் பதியனிட்ட உன் பிறப்பின்
அடையாளங்களை நிரப்பாமலே போகிறாய்.
–
கவிஞர்.பாரியன்பன் நாகராஜன்
குடியாத்தம் – 632602 பேச: 9443139353
பாய்ந்தோடும் நதி நீர்
இழுத்து செல்ல முடியவில்லை
தன்னில் விழுந்த
நிலவின் பிம்பம்.
அலமாரி திறக்கையில்
சின்ன கிரீச் சத்தம்
கதவு செய்வது…
பாப்பாவுக்கு கேட்கும்
தன் பள்ளிச் சீருடையின்
கேவலாக…
துடுப்பதி வெங்கண்ணா
வலியே வாழ்க்கை
ஏணிகளைக் காணத
எனக்கு என்றும் வாழ்க்கை
ஒரு பாம்புக்கரம்.
மலைப் பயணத்தில்
ஏற்றம் கடினம் இறக்கம் சுலபம்
முன்னதாகவே முடிவு.
துள்ளிக் குதித்தேறினாலும்
இறங்குவது நிச்சயம்
இது சருக்கல் விளையாட்டு.
(வெ.ஹேமந்த் குமார், ஈரோடு)
கொலுசும், பாவாடையும்
மிணுமிணுக்குது
சிணுங்கிற வயதில்
அவளுக்கு திருவிழா
அது !எனக்கு
இவள்தான்
திருவிழா
தேர் வீதி வீதியாக செல்லும்
இவள் செல்லும் வீதி தான்
தேர் எனக்கு
இதயக் கூட்டில் விழுந்தது
ஒற்றைப் பூ
தேரில் இருந்த பூவா ?
இவள்
தலையிலிருந்த பூவா ?
தெரியவில்லை
முகர்ந்த பின் தெரிந்தது
தேரில்
இருந்தப் பூ
தேவதையின்
கூந்தலில் பட்டு
என் இதயக் கூட்டில் விழுந்தது
நொறுங்கியது
என் இதயக் கூடு
அவள் முகத்தில்
ரெண்டு விண்மீன்கள்
சிமிட்டுக் கொண்டிருக்கிறது
என் சிமிட்டலை நோக்கவா ?
ஏதோ சுவாசிக்கிறாள்
தெரியவில்லை
காற்றையா ?
காதலையா ?
இல்ல என்னையவா ?
தங்கட்டிசுழல்கிறது
பூமிப் போல
பார்க்கிறேன்
அவளாலபூமி
சுழல்வதை
பூமியிலிருந்து
அவள்
மொழி தெரியவில்லை
இனிக்கிறது
நாவல் பழத் தோலுக்கு
ஓர் அதிசயம்
பௌர்ணமியில்
இரு பிறைகள்
பிறைகளின் மையத்தில்
ஓர் பொட்டு
மறைத்துவிட்டாள்
ரவிக்கையால் !
கல்லால் செதுக்கியமேனி
சிற்பியின் உளி தவறியது
அதில் ஓர்பள்ளம்
சரிக்கினேன்
நானும் !
நடை !
மடை கட்டியது
மௌன மொழி
கொலுசால் !
நான் மயங்கியது
அங்கத்துக்குமில்ல
அழகுக்குமில்ல
வெள்ளி சத்தத்திற்க்கே !
கனவில் வீதியில்
நிற்கிறேன்
அவள் வருகைக்கு
நினைவில் …..
நல். கதிரேசன்
வாழ்க்கை
———————-
மூக்குக் கண்ணாடியை
துடைத்துவிட்டு
அணிந்த போது –
எங்கிருந்தோ பறந்து வந்த
ரெண்டு சிட்டுக்குருவிகள்
என் வீட்டு ஜன்னலில்
அமர்ந்தன….
கீச்ச்…கீச்ச்…குரலில்
அவை ரெண்டும்
ஏதோதோ சங்கதிகள்
பேசுவதும்-கொஞ்சுவதும்
பறப்பதுமாய் இருந்தன….
இந்த
சின்னக் குருவிகளுள்
ஆண்டவன்
எவ்வளவு பெரிய
உற்சாகத்தை
வைத்து இருக்கிறான்…?
வாழ்க்கை
முடிந்து போனது’_என
நினைக்கும்
தருணங்களில் எல்லாம்…
ஏதோ ஒரு வகையில்
இயற்கை என்னை
வாழ வைக்கிறது…!
எல்.இரவி செ.புதூர்.612203. செல்.9952720995.
விவாகரத்து பெற்ற பெண்ணைப்
பார்த்து பரிதாபத்தை தூவுகிறார்கள் உறவினர்கள்.
தொழிலில் தோல்வியடைந்தவனை
இரக்கத்தோடு விசாரிக்கிறார்கள்
சுற்றத்தார்கள்.
ஓடிப்போய் திருமணம் செய்தவளின்
தாயை கரிசனத்தோடு விவரம்
கேட்கிறார்கள் அக்கம்பக்கத்தார்கள்.
வேலை கிடைக்காமல் வெதும்பியனுக்கு அறிவுரைகளை பரிவாக அள்ளித் தெளிக்கிறார்கள் நண்பர்கள்.
உலகம் தெரியாத அப்பிராணிக்கு வலிய வந்து புத்திமதி கூறுகிறார்கள்
சாமர்த்தியசாலிகள்.பலவீனமாக இருப்பதென்பது நமக்கு எத்தனை சௌகரியமாய் இருக்கிறது நம் சுயத்தை பாதிக்காமல் அன்பு காட்டுவதற்கு.
# தி.கலையரசி.
நரம்பில்லா ஒற்றை நாக்கு
ஆக்டோபஸின் கரங்களாய்
திசைகொன்று நீளும்…..
சுற்றி சுழற்றி – எதிர்வரும்
நிலைக்கோர் சொற்களை
உதிர்க்கும்…..
அவை
சில நேரங்களில்……
அழுத குழந்தையை அள்ளி
மார்போ டணைக்கும் தாய்போ
லரவணைக்கும்…..
பசுமரம் சாய்க்கும் கொடும்
கோடாரியாய் மனம் வெட்டிச்
சாய்க்கும்……
நஞ்சினை நற்தேன் குழைத்துத்
தருதல் போல் நயந்து
கெடுக்கும்……
தேர்ந்தவன் கைத் தோட்டா
போல் குறித்
துள்ளியமாய்த்
தாக்கும்…..
முகில் சிவராமன்.
வானில் கடல் புரண்டு
பூமிக்கு நீர்த்துளிகள்,
நீர்க்கடவுளின் பாதங்கொண்ட
மழைக்கால சிறார்கள்…
நட்பால் சுரம் காக்கும்
ஒடிந்த வாழையிலை,
சலசலத்து சிரிப்பது
சிற்றாறோ? சிறாரோ??
(வெ.ஹேமந்த் குமார்)
நதி நம் ஞாபகத்தில்
ஓடிக்கொண்டிருக்கிறது
பாவங்களை சுமந்தபடி.
நதிக்கு சாயம் பூசி
நஞ்சாக்கி விட்டு
கங்கைக்கு போய் கழுவுகிறோம் கறையை.
ஆற்றை அள்ளி அள்ளி தின்றுவிட்டு
அனாதை ஆக்கிவிட்டோம் ஆலமரத்தை.
மழை தங்கவந்த ஏரியில்
நாம் தங்கிக்கொண்டு
நெகிழி குடம் தூக்கி
தாகவழிப் பயணம் போகிறோம்.
கடலை கச்சா எண்ணெய்
தார்ப்பாயால் மூடிவிட்டு
ராமேஸ்வரத்திற்கு
ரயில் எப்போது என கேட்கிறோம்.
புலிப்பாலுக்கும்
யானைத் தந்தத்திற்கும்
மலைச் சாம்பலுக்கும்
மான் கொம்பிற்கும்கொலை செய்துவிட்டு
நரியைப் போய் சொல்கிறீர்கள்
நயவஞ்சக நரியென்றுநாகூசாமல்.
மரத்தை மாட்டை
மலையைவணங்குங்கள்
யாரும் மறுக்க மாட்டார்கள்.
மரக் கட்டையையோ
மாட்டு மூத்திரத்தையோ
மைல் கல்லையோ
வணங்கச் சொல்லும் போது தான்
கடவுளுக்கு எதிராய் கருத்துப் பிறக்கிறது.
நெய்யை ஊற்றி நெருப்பு வைத்து விட்டு
பழங்கஞ்சி உண்ணும்
பாமர பிள்ளையிடம் புராணங்களை காட்டி
பொய் பேசாதீர்கள்.
உங்களுக்கு தாழம்பூவே மேல்.
நடுரோட்டில் நாம் நிற்பதற்கு
எட்டு வழிச்சாலை ஏற்பாடாகிறது.
காட்டை கற்பழித்த
சாபத்தினால் தான்
கண்ணுக்குத் தெரியாத உயிருக்கு பயந்து
கதவைச் சாத்திக் கொண்டார் கடவுள்.
சிகரம் தொடு
” எண்ணத்தால் உயர்ந்து எளிமையில் தவழ்ந்து
தூய்மையில் நனைந்து
உழைப்பை மூலதனம் செய்து
விடா முயற்சியை கைவசமாக்கி
தோல்விகளை விலக்கி
வெற்றிப் படிகளை அனுபவம் என்கிற
ஊன்றுகோலால் கடந்து
முதியோர் பக்குவத்தை வசமாக்கி
நிமிர்ந்து செல் நாணலாய் வளைந்து
கொடு
நேர்மறை எண்ணம் கொண்டு
துல்லிய இலக்கை
நோக்கி வழுக்காமல் தடம் பதித்து விடு
சிகரம் தொடு சிம்ம சொப்பணமாய்
இரு மனிதா .
– பி.கே. ராதா . சீர்காழி .
இடைக் காலத் தடை உத்தரவு தெரியும்
அது என்ன?! இடை தொடத் தடை உத்தரவு?!
எல்லாம் கொரோனா ஆட்சியின் கோலம்
உன்னையும் இப்படிப் பிடித்து ஆட்டுகிறது!
ராமர் பாலம் கட்ட அணில் சின்னச் சின்ன
உதவிகள் செய்ததுபோல்தான்
*நம் காதல் வளர நான் செய்த உதவிகளும்
ஆனால் அதற்காக நீ என்னை
இப்படி ஒதுக்கலாமா? ஓரங்கட்டலாமா?
கை கழுவி கவசத்தைக் கழற்றிய பின்
முகத்தையும் கழுவி முத்தங்கள் வழங்க
ஆசையாய் வந்தால்
முன் பின் யோசிக்காமல் முழு மூச்சாய்
நீ நிராகரிப்பதுஎந்த வகையில் நியாயம்?!
உலகத்தையே உலுக்கிக் கொண்டு
முதல் முறையாகக்
காதலுக்கே விடுமுறை வழங்க வைத்த
அந்தக் கிருமி மேல் உனக்கு மட்டும்தானா கோபம்?!
எனக்கும் கொலைவெறிதான்!
நம்மை நாமே மாற்றிக் கொண்டால்தான்
அடுத்தவர்களையும்கொஞ்சமாவது மாற்ற
முயற்சி செய்யலாம்!
முத்து ஆனந்த் , வேலூர்
*பத்துப் பதினஞ்சு வருசமா
கடைவீதிக்கு கொண்டு போன அக்கா
பின்னிய பிளாஸ்டிக் ஒயர் கூடை…
*குழாயடியில் அக்கம் பக்கம்
சண்டை போட்டு தண்ணி பிடிச்சு
நைந்து போன நைலான் குடங்கள்…
*இருவது வருசமுன்ன புதுவீட்டு
பால்காய்ப்புக்கு மச்சினன் மனசார
வாங்கி மாட்டின சுவர் கடிகாரம்…
*ரெண்டாவது பயல் எங்கிட்ட அடம்புடிச்சி
கோவில் கொடையோட வாங்கிக் கொடுத்த
கீ குடுத்தா ஓடும் காரும், ரயிலும்…
*மூத்த பொண்ணின் முகம் கொள்ளா ஆசையுடன் அவளது அத்தை வாங்கித் தந்த
அலங்கார பாசிமணியும், பொட்டு டப்பாவும்…
*பள்ளிக்குப் புள்ளைக பவிசா கொண்டுபோன
பென்சில் டப்பாக்களும், தண்ணி கேனும்…
லேசான கீறலைக்கூட மன்னிக்காமல்…
* வீடு முழுவதும் ஆக்ரமித்திருந்த — பிளாஸ்டிக்
பொருள்களெல்லாம் தேடித்தேடி சேகரித்து
எடைக்குப் போட்டுட்டோம் வேற வழியில்லாம…
* கொரோனா ஒழியுறதெப்போ…?
வேலை வெட்டி கிடைக்கிறதெப்போ…?
உருக்குலைஞ்சு போச்சுதையா எங்க வாழ்க்க…
இந்த பழைய பொருளுக மாதிரி….!!
டோரா புஜ்ஜி ஸ்டிக்கர் ஒட்டிய
பென்சிலை பாக்ஸுக்குள் வைத்திருக்கிறாள்…
ஒரு முனை ஒடிந்த சிகப்பு பென்சில்
நான்கு கலர் க்ரேயான்ஸ்
பாதி கடித்த ரப்பர் துண்டு ஒன்று
பூ பூவாய் விரிந்திருக்கும்
பென்சில் துருவல்
மிக்கி மௌஸ் டாட்டூ
ரெண்டு குட்டி மயிலிறகு
மஞ்சள் நிற மலர்கள் சில…
கூடவே
கிளாஸ் டீச்சரின் கையெழுத்தில்…
இந்த மாத டர்ம் பீஸ் கட்டச்சொல்லும்
ஒரு
துண்டு சீட்டும்!தக்ஷன், தஞ்சை