குறும்பா கூடம்!

தோகை விரித்தாடும் மயில்
நின்று ரசிக்கின்றன
சூழ்ந்த மழை மேகங்கள்.
சாளரத்தின் அருகே
தொட்டிச் செடிகள்
தேடி வந்தது மழைச்சாரல்.
உருண்டோடும் கூழாங்கல்
திசையெங்கும் கேட்கிறது
நதியின் பாடல்.
கண்ணாடி முன்நின்று
சிரிக்கும் குழந்தை
பிரதிபலித்தது உற்சாகம்.
பள்ளி சுவரெங்கும்
வண்ண வண்ண ஓவியங்கள்
திசைதிரும்பியது வண்ணத்துப்பூச்சி.
ச. கோபிநாத் சேலம்
உடைந்த பொம்மை
ஏக்கத்தோடு பார்க்கும்
தாயில்லா குழந்தை
உடைந்த மண் சட்டி
பாதி நிறைந்த நீரிலும்
முழு நிலா
தொலை தூரம்
பறந்து வந்த பறவை
நின்றது சோதனைச் சாவடியில்
ஓங்கி அடித்துவிட்டு
பின்வாங்கும் கடல் அலைகள்
என்ன தவறு செய்ததோ கடற்கரை
கவிஞர் மீன்கொடி.
வெளியே போனதால்
உள்ளே வந்தது
கொரோனா !
அரசனையும் ஆண்டியையும்
ஒன்றே என்றது
சமத்துவ கொரோனா !
கற்றல் தடைபடவில்லை
விடுமுறையில் வேலை
வாழ்க்கைப் பாடம் !
ச.கிறிஸ்துஞானவள்ளுவன்.வேம்பார்
வறண்ட நதி
கடந்து செல்லுகின்றது
வயிறு நிறைந்த லாரி
வறண்ட நதியில்
நீச்சல் கற்கிறது
பறவையின் நிழல்
பனை மரம்
ஆடிக்கொண்டே இருக்கிறது
குருவி கூடு
பாண்டியராஜ்.
கடவுளின் கருணை.
சிக்கவேயில்லை
சிலை திருடன்.
முத்தங்களை
மிஸ் செய்கின்றன குழந்தைகள்
கடும் கோடை
படிப்படியாக உயரும்
குளத்தின் ஆழம்
பசிக்கும் நேரம்
சுத்தமாக வைத்துள்ளார்
சுவரில் மரங்களை வரைந்ததும்
ஆச்சிரியமாக இருக்கிறது
திடீர் கோடை மழை…
மழை நின்றதும்
மரம் வரைந்த சுவரில்
ஆங்காங்கே நீர்த்துளிகள்…
குளத்துநீரில் கால்களை கழுவ
தெறிக்கும் நீர்த்துளிகள்
தாமரை இலையில் மிதக்கின்றன…
பாதரசமில்லாத கண்ணாடி தான்
உருவத்தை காட்டுகிறது
தெளிந்த நீர்.
..
வண்ணத்துப்பூச்சி அமர்ந்தது
இந்த ரோஜாவுக்கு பிடிக்கவில்லையோ
ஒரு இதழை உதிர்த்து விடுகிறது.
..
நண்பனைப் பார்த்ததும்/
கடவுள் பெயரை உச்சரிக்கிறான்/
நகரும் மேகங்கள்
நிழல் தேடி அமர்கிறான்
விறகு வெட்டி!!!
ஜீவா
சுமையேற்றிச் செல்லும்
வாகனத்தின் பின்புறத்தில்
தொங்கியபடிக் கோவைக்கொடி.
ச.ப. சண்முகம்
காதலியின் பேச்சால்
ஏறிக் கொண்டே போகிறது
சர்க்கரையின் அளவு
இளவல் ஹரிஹரன், மதுரை
கைக்கு எட்டியது
வாயிக்கு எட்டவில்லை
பசியோடு பரிமாறும் சிறுவன்!
படிப்பில்
முத்திரை பதித்தான்
அஞ்சல் வழிக்கல்வி!
யானைக்கும் அடி சறுக்கியது
பிதுங்கிய நெடுஞ்சாலை!
டென்டர் முறைகேடு!
கோவை.நா.கி.பிரசாத்
மரண வீடு
வாசல் மிதியடியில்
நல்வரவு!
பதிவாகாது
எந்த ட்ரோன் கேமராக்களிலும்
பசி!
தக்ஷன், தஞ்சை.
பட்டக்கடன்
அடிக்கடி பதறவைக்கிறது
அழைப்பு மணி…
குதிரையின் குளம்படி சத்தம்
இனிமையாக இல்லை
லாடங்களின் வடுக்கள்…
தூர் வாரிய குளம்
நாற்றம் எடுக்கிறது
ஊழல்…
நுனிப்புல் மேய்ந்த நாளை
அசை போடுகிறதோ?
பசித்திருக்கும் மாடு…
கரை ஏறுவதற்காக
கடலில் இறங்குகிறான்
வலை வீசுபவன்…
மீன்கள் துள்ளுவதால்
கலங்குகிறது குளம்
வலை விரித்திருக்கிறார்களே!…
சுவற்றில் பால் கணக்கு
அழியாமல் இருக்கிறது
அம்மாவின் நினைவுகள்…
ஐ.தர்மசிங்
1.
மணிச் சத்தம் கேட்கிறது
நான் மட்டும் தனியே
வண்டி மாடுகள்
போன பாதை.
*
2.
ஓர் இலை துளிர்க்கிறது
ஒரு குயில் கூவுகிறது
அமைதியாக மூச்சுவிடுகிறது வனம்.
3.
மூக்கின் பிராப்தம்
கண்களுக்கில்லை
எங்கிருக்கிறது அந்த மலர்?
*
4.
மாடு மேய்கிறது
வெட்டுக்கிளி கத்தரிக்கிறது
புல் வளருகிறது.
*
5.
நிழல் தராத
பனை மரம்
நுங்கு தருகிறது.
- பிருந்தா சாரதி.
எத்தனை கண்கள்
விரித்த தோகை மீது
ஆடும் மயில்!
பூவை புறந்தள்ளி
இலையில் அமர்கிறது
முட்டையிடும் வண்ணத்துப்பூச்சி.
தலைக் கனம்தான்
அதிக ஆட்டமில்லை
ஈச்சமரம்.
தன் கால்களைப் பற்றி
மேலேறுகிறது
கண்ணாடியில் எறும்பு.
எண்ணத்துவங்குகிறாள் சிறுமி
நேற்று விட்ட இட்த்திலிருந்து
நட்சத்திரங்களை
நீண்டநாள் கழித்து வருகிறேன்
ஓடிவந்து கால்களைத் தழுவுகின்றன
கடலலைகள்.
மகிழ்நன் மறைக்காடு.
குடியிருப்பு அகற்றம்
வேதனையில் எறும்பு!
விரிசலில் பூச்சு!
பற்றிய கால்கள்
விட மறுத்தது
ஈரநிலம்!
சேரும் இடத்தின் சிறப்பை
தனதாக்கிக் கொண்டது!
தண்ணீர்!
வீசப்படும் எச்சில் இலை!
காத்திருக்கும் நாய்கள்!
தட்டிப்பறிக்கிறது காற்று!
பலமுறை படித்து முடிக்கையில்
காணாமல் போய்விடுகிறது!
புத்தகத்தின் புது வாசனை!
இருண்ட வீடு!
விளக்கேற்றின மின்மினிகள்!
மரங்கள்!
தளிர் சுரேஷ்