தோனி…! இந்தியாவின் தோணி…!

தோனி…! இந்தியாவின் தோணி…!

விஷ்வக்சேனன்

சிறந்த கேப்டன் என்றதும் எப்போதும் கங்குலிக்கும் தோனிக்குமான ஒரு போட்டியாக இந்திய சூழலில் விவாதம் நடக்கும். சிலர் அசார், கபில், கவாஸ்கர், பட்டோடி என்று தங்களது விருப்ப போட்டியாளருடன் வருவர். மேலும் சிலர் தங்கள் மேதாவித்தனத்தை காட்ட அஜித் வடேகர், டிராவிட், கும்ளே, பேடி என்று எதாவது ஒரு பெயரை போகிற போக்கில் அடித்துவிட்டு சொல்வார்கள்.

ஒரு கேப்டனை எப்படி மதிப்பிடலாம் என்ற கேள்விக்கு பல பதில்கள் உண்டு, ஆனால் அடிப்படையான ஒரு விஷயம் அவர் வெற்றி பெற்றிருக்க வேண்டும். எத்தனை புயல்களை பார்த்தாய் என்பது பொருட்டல்ல, கப்பலை கரை சேர்த்தாயா இல்லையா என்பதுதான் அடிப்படை விஷயம். அப்படி கரை சேர்க்கத்தான் கேப்டன். இரண்டாவது விஷயம், அவர் ஆடும் காலத்தில் அவரது கேப்டன்சி உலகளவில் எப்படி மதிக்கப்பட்டது, அப்போதிருந்த சிறந்த கேப்டன்கள் வரிசையில் இவர் எந்த வரிசையில் இருந்தார் என்ற மதிப்பீடு.

இந்தியாவில் பத்து டெஸ்ட் வெற்றிக்கு மேல் பெற்றவர்கள் மொத்தமே நாலு கேப்டன்கள்தான் – அசார், கங்குலி, தோனி, கோலி. கவாஸ்கர், பட்டோடி நாற்பதுக்கும் மேல் போட்டிகளில் விளையாடி வெறும் 9 வெற்றிகள், டிராவிட் 8 வெற்றிகள், மற்றவர்கள் இன்னும் மோசம். இதில் அசாரின் 14 டெஸ்ட் வெற்றிகள் எல்லாமே துணைக்கண்டத்தில் அதுவும் உள்ளூரில் பெரும்பகுதி. அவர் காலத்து இந்திய அணியை உள்ளூர் புலி என்றுதான் அழைப்பார்கள், வெளிநாடுகளில் அவ்வளவு மோசமாக விளையாடுவார்கள். ஒருநாள் போட்டிகளில் இதைவிட பலமான அணியாக இருந்தாலும் அதிலும் வெளியூர் ஆட்டங்களில் தகிடதத்தம்தான். சச்சின் தனியாக அணியை தூக்கி சென்றதெல்லாம் இவர் காலத்தில்தான். முக்கியமாக உலகக்கோப்பை போன்ற எந்த பெரிய கோப்பையையும் வென்றதில்லை. அதிகபட்சம் நாலு நாடுகள் கலந்து கொள்ளும் தொடரில் வெற்றிபெற்றிருக்கிறார்கள், ஆனால் அதிலும் சச்சின் பெரிய பங்களிப்பு உண்டு. அசார் ஆடும் காலத்தில் ஹன்சி கிரோனியே, மார்க் டெய்லர், ஸ்டீவ் வாவ், அர்ஜூன ரனதுங்க, வாசிம் அக்ரம் போன்றவர்கள் இவரைவிட சிறந்த கேப்டனாக அறியப்பட்டார்கள்.

கங்குலியின் சிறப்பாக சொல்லப்படுவது அவர் சோர்ந்துக்கிடந்த இந்திய அணியில் புதுரத்தம் பாய்ச்சி ஆக்ரோஷமாக விளையாடும் இயல்பை புகுத்தினார் என்பதும் வெளிநாடுகளில் ஜெயிக்கும் வித்தையை அணிக்கு முறையாக பயிற்றுவித்தார் என்பதும்தான். 90களில் ஆஸ்திரேலியர்களும், சௌத் ஆப்ரிக்கர்களும் ஈவிரக்கமற்ற ஆக்ரோஷத்துடன் கச்சிதமான வெல்லும் மனப்பான்மையுடன் கொண்டுவந்த தொழில்முறை கிரிக்கெட் ஆட்டத்திற்குமுன், மன உறுதியும் தொழில்முறை நேர்த்தியும் இல்லாத இந்தியா போன்ற மற்ற அணிகளின் ஆட்டம் போதவில்லை. அப்படியான ஒரு காலக்கட்டத்தில் கங்குலி தனது ஆக்ரோஷமான கேப்டன்சி மூலம் இந்திய அணியின் சாதுவான முகத்தை மாற்றினார், அதற்கு ஒத்துவரக்கூடிய தீவிர மன உறுதியும் வெல்லும் மனப்பான்மையும் உடைய யுவ்ராஜ், கைஃப், தோனி, சேவாக், ஹர்பஜன், ஜாகிர் என்று பெரிய இளைஞர் கூட்டத்தை தயார் செய்தார். அவர்களுடன் இந்திய அணியின் பேட்டிங் மூவேந்தர்களான சச்சின், கங்குலி, டிராவிட் இனைய, ஒரு வலுவான அணி அமைந்தது, இதோட டெஸ்டில் லட்சுமணன் போன்ற வீரர்கள் கிடைக்க, திரும்பி வந்த கும்ப்ளேவுடன் சேர்ந்து பலமான அணியாக வெளிநாட்டிலும் ஜெயிக்க தொடங்கினர். வழக்கமாக வெளிநாடுகளில் எளிதாக முதல் டெஸ்ட் தோற்கும் கெட்ட வழக்கத்தினை அகற்றி, எப்படியாவது முதல் டெஸ்ட்டை தோற்காமல் ட்ரா செய்தாவது தப்பிவிடுவார்கள், பின் வாய்ப்பிருந்தால் அடுத்த போட்டியில் வெற்றி. அதன்மூலம் இந்திய அணியின் மோசமான கெட்டகனவாக இருந்த வெளிநாட்டு போட்டிகளை கடும்சவாலான சுவாரசியமான போட்டிகளாக மாற்றினார். இவ்வளவு செய்தும் அவர் இரண்டாம் இடத்துடன் திருப்தி பட்டுக்கொண்டார் என்பதுதான் கசப்பான உண்மை.

கங்குலியின் தலையிலான இந்திய அணி டெஸ்ட்டில் தொட்ட அதிகப்படியான உயரம் டெஸ்ட் ரேங்கில் இரண்டாம் இடம். அந்த காலக்கட்டத்தில் போட்டி என்பதே இரண்டாம் இடத்துக்காகத்தான் நடந்தது, அது இந்தியாவா, நியூசிலாந்தா, சௌத் ஆப்ரிக்காவா, இலங்கையா என்று. முதலிடத்தை எல்லோரும் மானசீகமாக ஆஸ்திரேலியாவுக்கு விட்டு கொடுத்துவிட்டார்கள், அவர்களை மீறி யாரும் சிந்திக்கவேயில்லை. ஒண்டே மேட்ச்களிலும் அவர் 2003ல் இரண்டாம் இடத்துடனே திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. பொதுவாகவே கங்குலிக்கும் ஃபைனலுக்கும் ஏழாம் பொருத்தம் என்ற நிலையே இருந்தது, அவரால் முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் கூட வெற்றி பெற முடியவில்லை, எல்லாவற்றிலும் ஃபைனலில் வந்து தோற்றுவிடுவார். நாட்வெஸ்ட் தொடர் போன்றவை விதிவிலக்குகள். ஒருகட்டத்தில் இந்திய அணி ஒன்பது ஃபைனல்களில் தொடர்ச்சியாக தோற்றது. முத்தரப்பு போட்டிகளை விடுங்கள், இருதரப்பு போட்டிகளில்கூட கடைசி போட்டியில் ஜெயித்தால் தொடர் நம் கையில் கிடைக்கும் என்ற சூழல் இருந்தால் அந்த போட்டியைகூட ஃபைனல் என்ற பயத்தில் தோற்றுவிடுவார்கள். அப்படித்தான் 2002/03ல் இந்தியா வந்த இங்கிலாந்து அணியை வெல்ல கடைசி மேட்சை வென்றாக வேண்டிய கட்டத்தில் அந்த மேட்சை பரிதாபமாக தோற்றது அணி. இந்த மேட்சில்தான் ஃப்ளிண்டாஃப் சட்டையை கழற்றி சுற்றியது, அதற்கு பழிவாங்கதான் பின்னர் கங்குலி லார்ட்சில் கழட்டி சுற்றினார். கங்குலியின் காலத்தில் ஸ்டீவ் வாவ், பாண்டிங், ஃப்ளெமிங், கிரெயம் ஸ்மித் போன்றவர்கள் இவரைவிட சிறந்த கேப்டன்களாக அறியப்பட்டனர். இன்சமாம், நாசர் ஹுசைன் போன்றவர்கள் சமமான கேப்டன்களாக கருதப்பட்டனர். ஆடும் காலத்தில் இரண்டாம் இடத்தில் திருப்தியடைந்த ஒரு கேப்டன், சிறந்த கேப்டன்கள் வரிசையிலும் இரண்டாம் இடத்துடன்தான் திருப்தி அடையவேண்டும்.

தோனி தனது கன்னி தொடரில் ஒரு உலக கோப்பையை வெல்லுவதுடன் தனது கேப்டன் ஆட்டத்தை ஆரம்பித்தார். கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் யாரும் முதல் தொடரில் ஒரு உலகக் கோப்பையையோ, சாம்பியன்ஸ் ட்ராபியையோ வென்ற சரித்திரம் இருந்ததில்லை. ஒரு டெஸ்ட் கேப்டனாக தோனி செய்த முக்கியமான செயல் ஆஸ்திரேலிய அணியில் ஒரு தசாப்த ஆதிக்கத்தை முடித்து வைத்தது. 2008, 2010, 2012 என ஆஸ்திரேலியாவை டெஸ்ட்டில் தோற்கடித்து அவர்களது கொடியை இறக்கிவைத்ததில் இவருக்கும் முக்கிய பங்குண்டு. அதன்பின் சிலவருடங்கள் உலகின் முதல் நிலை டெஸ்ட் அணியாக இந்தியா தொடர்ந்தது. அதே போல் ஒரு நாள் போட்டிகளிலும் முதலிடம், முத்தாய்ப்பாக 2011 உலகக்கோப்பை. 1983 பின் இந்திய அணிக்கு கோப்பை திரும்ப வந்தது, ஆனால் முதல் முறை போல கறுப்பு குதிரையாக தொடரை தொடங்கி ஆச்சரியபடுத்தி வெல்லவில்லை. 2011 உலக கோப்பை தொடங்கும் போதே இந்திய அணி வெல்லக்கூடிய அணியாக மதிப்பிடப்பட்டு, அதற்கேற்றார்போல ஒவ்வொரு கட்டத்திலும் தனது ஆதிக்கத்தை காட்டி கம்பீரமாக வென்ற தொடர். அதன்பின் ஒரு சரிவு. ட்ராவிட், லட்சுமண், சச்சின், ஜாகிர், ஹர்பஜன், சேவாக், கம்பீர் என்று பழைய ஆட்கள் கொஞ்சம் கொஞ்சமாக உதிரத்தொடங்க அணி முதலிடத்தை விட்டு இறங்குகிறது. அடுத்த அணியை தவான், ரோகித், விராட், அஷ்வின், ஜடேஜா, ரெய்னா, முரளி விஜய், புஜாரா, இஷாந்த், ரகானே போன்றவர்களை கொண்டு கட்டியெழுப்பி சாம்பியன்ஸ் ட்ராபி போன்ற பெரிய தொடரை வென்றார். தோனி எப்போதும் இரண்டாம் இடத்துடன் திருப்தி கொண்டதில்லை, கிடைத்த முதலிடத்தையும் தலைக்கு ஏற்றி கொண்டு ஆடியதில்லை. ஒரு நல்ல கனவானாக இந்திய அணிக்கும், கிரிக்கெட் விளையாட்டிற்கும் மதிப்பு சேர்த்திருக்கிறார். தோனியின் காலத்தில் எப்போதும் உலகின் சிறந்த கேப்டனாகவே மதிப்பிடப்பட்டு வந்திருக்கிறார். அவரது தலைமை பண்பு, வழிநடத்தும் திறன், வித்யாசமான ஆட்ட சிந்தனை, களமுடிவெடுக்கும் திறன், முன்னின்று போராடும் குணம் என அவரை பற்றி உலகெங்கிலும் பல அறிஞர்கள் காவியம் பாடாத குறையாக எழுதியிருக்கின்றனர். தோனி ஆடிய காலக்கட்டத்தில் ஆரம்பக்காலத்தில் பாண்டிங் இருந்தார், அதன் பின் கிரெயம் ஸ்மித், ஸ்ட்ராஸ், மைக்கேல் கிளார்க் போன்றோர் இருந்தாலும் தோனி பல வருடங்களாக சிறந்த கேப்டனாக கருதப்பட்டார். கிரெயம் ஸ்மித், ஸ்ட்ராஸ் போன்றோர் டெஸ்ட்களில் திறம்பட வழி நடத்தியிருந்தாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் எந்த பெரிய கோப்பையையும் வெல்லவில்லை என்பது ஒரு பெரிய சறுக்கல். உலகின் பல நாட்டு அணிகளாலும், அதன் கேப்டன்களாலும் தோனி சிறந்த கேப்டனாக மதிக்கப்பட்டது, புகழப்பட்டது எல்லாம் கண்கூடு. கிரிக்கெட் அறிஞர்கள் தோனியை ஸ்டீவ் வாவ், பாண்டிங், கிளைவ லாய்ட் வரிசையில் வைத்து பார்க்கிறார்கள்.

விராட் கோலி இப்போதே தோனியை விடவும் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுவிட்டார். அணியையும் அசைக்க முடியா முதலிடத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். ஆனால் ஒரு நாள், மற்றும் டி20 போட்டிகள் கைகூடவில்லை. கங்குலி போல சிறப்பாக விளையாடி தொடரின் ஃபைனலுக்கு சென்ற பின் கோப்பையை கோட்டைவிடுவதை வழக்கமாக்கி கொண்டுவிட்டனர். கோலியின் அணி தோனி தயார் செய்த அணியின் தொடர்ச்சிதான், ஆனாலும் அதை கறாரான ஒரு ஜெயிக்கும் எந்திரமாக மாற்றிய பெருமை கோலிக்குதான் செல்லும். அவருக்கு இன்னும் காலம் இருக்கிறது, அதோட சில கோப்பைக்களையும் வெல்லட்டும், ஆடி முடிக்கட்டும், பின் இந்த சிறந்த கேப்டன் போட்டிக்கு இழுக்கலாம்.

கேப்டன்சியில் இந்திய அளவில் தோனியின் உயரத்தை யாரும் தொடவில்லை என்பதுதான் யதார்த்தம். உலக அளவிலும் கேப்டன்சியை பொருத்தவரையில் வாழும் போதே வரலாறானவர் தோனி. வரலாற்றின் சிறந்த கேப்டன்களின் அரியணை வரிசையில் தனது மாறாத புன்சிரிப்புடன் கேப்டன் கூல் என்ற பட்டத்துடன் தோனி அமர்ந்திருப்பார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: