GUN பதில்கள்!

GUN பதில்கள்!

க்ரைம் கதை மன்னர் ராஜேஷ்குமார் பதில் அளிக்கிறார்

 ரத்தத்தில் ‘ஓ’ பாம்பே ( O Bombay) என்ற ஒரு வகை ரத்தப் பிரிவு இருக்கிறதா?

(எஸ். சண்முகராஜன் ,மதுரை)

ஆமாம்.

‘ஓ’ க்ரூப் ரத்தம் உள்ள ஆணுக்கும், ‘ஓ’ க்ரூப் ரத்தம் உள்ள பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு மிகவும் அரிதாக ஓ.எச் ( OH ) என்ற ரத்த க்ரூப் இருக்கும்.

இந்த வகையான ரத்தத்தைதான் ‘ஓ’ பாம்பே என்று சொல்கிறார்கள் .

இந்த OH ரத்த குரூப் உள்ளவர்கள் விபத்தில் சிக்கும் போது, சாதாரண ‘ஓ’ வகை ரத்தம் கொடுத்தால் அவர்களின் உடல் அதை ஏற்றுக் கொள்வதில்லை.

OH ரத்த க்ரூப் உள்ள நோயாளிகளுக்கு அதே OH ரத்த க்ரூப் உள்ளவர்கள் மட்டுமே ரத்தம் கொடுக்க முடியும் .

மும்பையில் இந்த ரத்த குரூப் உள்ளவர்கள் அதிகம்

இருப்பதால்

இதற்கு ‘ஓ பாம்பே’ என்று பெயர் .

 தோனி?
(
கே.வருண், சென்னை)
வெற்றிக்காக போராடும் போது பல சமயங்களில் ஏணியாகவும்
தோணியாகவும் மாறியவர்.


பொதுவாக ஆண்கள் எப்படி இருந்தால் பெண்களுக்குப் பிடிக்கும்?

(வி.பரந்தாமன், பெங்களூரூ)

இ.வா.கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

அப்படியிருந்தால் பிடிக்கும்.

இ.வா. க்கு என்ன அர்த்தம் என்பதை வெற்றிகரமான ஆண்களிடம் கேட்டுப் பாருங்கள்.

இனிமையான வார்த்தைகளைப் பேசுபவர்களாக என்று

சொல்வார்கள்.

நமது மூளைக்கு ‘தலைமைச் செயலகம்’ என்ற செல்லப் பெயர் இருப்பது போல் வேறு ஏதேனும் ஓர் உறுப்புக்கு அது மாதிரியான செல்லப் பெயர் உண்டா?

( எஸ். திவ்யா சந்திரன், சென்னை)

நம் உடம்பில் உள்ள ஒரு உறுப்புக்கு ஸ்வீட் பிரெட் ( Sweet bread) என்று பெயர்.

அந்த உறுப்பு கணையம்.

(Pancreas)

நீண்ட இலை வடிவத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் மிருதுவாக இருக்கும் நமது கணையத்தின் எடை 90 கிராம். நீளம் 15 சென்டிமீட்டர். உடலின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் அதற்கு ஸ்வீட் ப்ரெட் என்று பெயர்.

 சினிமாவில் காட்டுவது போல் போலீசில் பிடிபட்ட தீவிரவாதிகள் சயனைட் விஷம் சாப்பிட்ட அடுத்த விநாடியே இறந்து போவது சாத்தியம்தானா?( எம்.மனோகரன், ஓசூர்)

மனிதனின் உயிரை பறித்து விடும் தன்மை கொண்ட சயனைடு விஷம் பார்ப்பதற்கு வெண்மை நிறத்தில் உப்பு போல் மிருதுவாக இருக்கும். ஆனால் அதனுடைய அணுக்கள் படு ஸ்ட்ராங்க்.

கூர்மையான கண்ணாடித் துகள்கள் போல் அதன் அணுக்கள்

இருப்பதால் தொண்டைக்குள் சயனைடு இறங்கும் போதே மெல்லிய இரத்தக் குழாய்களை அறுத்து வயிற்றை ரத்தத்தால் நிரப்பி விடும் தன்மை கொண்டவை.

சயனைடு விஷம் வாயு வடிவத்தில் இருக்கும் போது ஹைட்ரஜன் சயனைடு எனவும் ,உப்பு போன்ற பவுடர் வடிவில் இருக்கும்போது பொட்டாசியம் சயனைடு எனவும் நாமகரணம் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது.

இதை வாயுவாக சுவாசித்தாலும் சரி, பவுடராக உட்கொண்டாலும் சரி, மரணம் என்பது உடம்புக்குள் போகும் சயனைடின் அளவைப் பொறுத்துதான் ஏற்படும்.

சில வினாடிகளில் சயனைடு விஷம் ரத்தத்தில் கலந்து அது மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இதயத் துடிப்பையும் குறிவைத்து ஆக்ஸிஜன் சப்ளையைத் துண்டித்து இறப்பை ஏற்படுத்தும்.

100 முதல் 200 மில்லி கிராம் வரையிலான சயனைடு ஒரு மனிதன் உயிரை எடுக்க போதுமானதாகும்.

சினிமாவில் வில்லன் சாவதாக இருந்தால் சில விநாடிகளிலும் ஹீரோ சாவதாக இருந்தால்

சில நிமிஷங்களிலும் சயனைடு நேரம்

எடுத்துக் கொள்கிறது

ஹீரோ பக்கம் பக்கமாக வசனம் பேச

வேண்டாமா….மனோகரா?

 பெண்கள் யாரும் தங்கம் வாங்குவதில்லை என்று முடிவு எடுத்துவிட்டால் நகை கடைகள் எல்லாம் என்னாகும்? (கற்பனைததான்)

( ரமேஷ்பாபு , கிருஷ்ணகிரி)

கற்பனைதான் என்று நீங்களே பதிலையும் சொல்லிவிட்டு கேள்வியையயும் கேட்டால்

எப்படி ரமேஷ்…..?

கொரோனா ஒழிந்த பிறகு பெரும்பாலான பெண்களின் கழுத்தில் கொரோனா நெக்லஸ்

ஜொலிப்பதை நாம் எல்லோரும் பார்க்கத்தான் போகிறோம்.

யாரும் தங்கம் வாங்குவதாக தெரியவில்லை.

இருந்தாலும் தங்கத்தின் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

( எம். ராஜப்பன், திருவையாறு)

திருவாளர் கொரோனா அவர்கள்தான் காரணம்.

கொரோனாவின் தாக்கத்தால்

உலக நாடுகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு மூச்சு திணறி வருகிறது.

உலகில் உள்ள அனைத்து பண முதலீட்டாளர்களும் பங்குச் சந்தையில்

பணத்தை போட பயந்து போய் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அப்புறம் விலை ஏறாமல் என்ன செய்யும்?

இதனால் பெரிய அளவில் லாபம் அடைபவர்கள் நகைக்கடை அதிபர்கள்தான்.

நான்கு மாதங்களுக்கு முன்பு பவுன் 33000 ரூபாய்க்கு விற்ற தங்கம் இப்போது 43000 ரூபாய்.

நகைகளை விற்காமலேயே பவுனுக்கு 10000 ரூபாய் லாபம்.

ஒவ்வொரு நகைக் கடை அதிபரும் இப்போது 64 பற்களைக்

காட்டிச் சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

 எதிர்காலத்தில் வரப்போகும் நோய்களில் விபரீதமானதாக எது இருக்கும்?

( எல். மாணிக்கவாசகம், ஓரிக்கை,காஞ்சிபுரம்)

மனிதனை அதிரவைக்கும் நோய்களில் ஒன்று அல்சீமர் (Alzheimer) எனப்படும் நினைவுகளைத் தொலைக்கும் நோய்.

மனிதனின் தலைமைச் செயலகமான மூளையை குறி வைத்துத் தாக்கும் நோய்களில் இது முதல் இடத்தைப் பெறுகிறது.

அலியோஸ் அல்சீமர் என்பவர் 1906 ஆம் ஆண்டு இந்த நோயை கண்டு பிடித்தார். எனவே அவர் பெயரிலேயே இந்த நோய் அல்சீமர் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் ஒரு மனிதனுக்கு இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிப்பதே கடினமான காரியமாக இருக்கும்.

பொதுவாக இந்த நோய் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை தாக்கும் .கொஞ்சம் ஏமாந்தால் இளைஞர்களின் மேலும் பாய்ந்து பதம் பார்த்துவிடும்.

தற்போது உலகெங்கும் 4 கோடி பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு ,மனைவி குழந்தைகளின் முகங்களையும், அவர்களைப் பற்றிய நினைவுகளையும் , தங்கள் வாழ்க்கையில் நடந்த எல்லா விதமான சம்பவங்களையும் மறந்து விட்டு

தீவு ஒன்றில் மாட்டிக் கொண்டவர்கள் போல் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

இந்த அல்சீமர் நோயை குணப்படுத்தும் வல்லமை எந்த மருந்துக்கும் இல்லை.

இந்த நோய்க்கான காரணம் மனிதர்களின் பரபரப்பான வாழ்க்கைதான் என்கிறார் மேட்டேஜ் ஆரேஸிக் என்னும் அல்சீமர் ஆராய்ச்சியாளர்.

2050 ம் ஆண்டில் மனிதர்களின் வாழ்க்கை இன்னமும் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும்.

அப்போது உலகம் முழுவதும் 100 பேரில் ஒருவர்க்கு இந்த அல்சீமர் நோய் இருக்கும்.

கவலை வேண்டாம்.

அந்த ஒருவரில் நீங்களோ அல்லது உங்கள் வாரிசுகளோ யாரும் இருக்க மாட்டீர்கள் என்பது நிச்சயம்.

கற்பு என்பது மனம் சம்பந்தப்பட்டதா…அல்லது உடல் சம்பந்தப்பட்டதா?

(பி.சர்வோத்தமன்,குற்றாலம்)

பெண் கெடும்போது உடல்.

ஆண் கெடும்போது மட்டும்

மனம்.

பஞ்சாயத்து முடிஞ்சுது…. வீட்டுக்கு போங்க சர்வோத்தமன்..

நல்ல பழக்கம் என்பது எங்கிருந்து எப்படி ஆரம்பிக்க வேண்டும்?
(
எஸ். கனகராஜ், அரவக்குறிச்சி)

காலையில் படுக்கையை விட்டு எழுந்த உடனேயே போர்வையை ஒழுங்காக மடித்து வைப்பதிலிருந்து

ஸார்…நான் பலமுறை இந்தக் கேள்வியைக் கேட்டு விட்டேன். இந்த தடவையாவது பதில் சொல்லுங்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை கடலில் இருந்து வெளியே எடுத்து விட்டார்களா இல்லையா ?

( ப.நிதிஷ்குமார், சிங்கம் புணரி)

இல்லை…..நிதிஷ்.

கனடாவில் இருந்து தென்கிழக்கு திசையில் 329 மைல் தூரத்தில்

கடலில் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடந்த டைட்டானிக் கப்பலை வெளியே எடுப்பது சாத்தியமில்லை என்கிற முடிவுக்கு வந்த ஆய்வுக் குழு, அதற்குப் பிறகு அந்த டைட்டானிக் கப்பலை கடலிலேயே நினைவுச் சின்னமாய் வைத்து பாதுகாக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.

ஆனால்..கடல் நீரில் பல வகை உப்புகள் இருக்கின்ற காரணத்தால் டைட்டானிக் கப்பலின் இரும்பு பகுதிகளை அது கத்தி கொண்டு அறுப்பது போல் அறுத்துக்கொண்டு இருந்தது.மேலும்….அந்த உப்பைக் காட்டிலும் கடல் நீரில் இருந்த 27 வகையான அபாயகரமான பாக்டீரியாக்கள் வேகமாய் கப்பலை தின்று வந்தது. எனவே கப்பலை வெளியே எடுப்பது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள்.கப்பலையே கபளீகரம் செய்யும் இந்த வகை பாக்டீரியாக்கள் இதுவரை மருத்துவ உலகம் பார்த்திராத ஒன்று. இந்த பாக்டீரியாக்களுக்கு விஞ்ஞானிகள் ஹாலோமோனஸ் டைட்டானிகே ( Halomonas Titanicae) என்று இப்போது பெயரிட்டுள்ளார்கள்.

இனி சில வருடங்களுக்கு டைட்டானிக் கப்பலை ஆராய்ச்சி செய்ய யாரும் அதன் அருகே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால்…..டைட்டானிக் கப்பலை உப்பு ஒரு பக்கமும் பாக்டீரியாக்கள் ஒரு பக்கமும் அரித்துக் கொண்டிருப்பதால் அதில் இருந்து உதிரும் இரும்புத்தூளும் ,கடலில் உள்ள உப்பும் கலந்து சேர்ந்து இறுகி மிக மெலிதான பிளேடு போன்ற கூர்மையான பாறைகளாய் மாறி வருகிறது.

இதற்கு ஊசிப் பாறைகள் என்று பெயர்.

இந்த ஊசி பாறைகள் தண்ணீருக்குள் இருக்கும் போது மனித பார்வைக்கு சரியாகப் புலப்படாத காரணத்தால் நீந்தி செல்லும் மனிதர்களின் உடம்புகளை விநாடிக்கும்..குறைவான நேரத்தில் அது இரண்டு துண்டுகளாக அறுத்து விடும்.இந்த ஊசிப்பாறைகள் முற்றிலுமாக அழிய முப்பது ஆண்டுகள் ஆகும் என்பதால்

அந்த கடல் பகுதியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டைட்டானிக் கப்பல் இனிமேல் நம்

நினைவில் மட்டுமே இருக்கும்.

ராமர் கோவில் பற்றி ?

(ஏ.பழனியப்பன், ராஜபாளையம் )

கோவையில் இருக்கும் கோவில்களில்

ராம்நகரில் இருக்கும் ராமர் கோவில் ரொம்பவும் பிரசித்திபெற்ற ஒன்று.

எனக்கு மிகவும் பிடித்த கோவில்.

ஒவ்வொரு வருடமும் ராமநவமி அன்று நடைபெறுகிறபூஜைகள் அற்புதமாக இருக்கும்.

நீங்களும் ஒருமுறை அவசியம் வந்து தரிசிக்க வேண்டிய கோயில். அப்புறம்……

ராஜபாளையத்தில் நல்ல மழையா பழனியப்பன்?

எந்த ஒரு கேள்வியைக் கேட்டாலும் அசத்தலாய் பதில் சொல்லும் நீங்கள் படித்து அசந்து போன கேள்வி பதில் ஏதாவது உண்டா?

( ஹென்றி டேனியல், பணகுடி)

சாவி ஸாரின் கேள்வி பதில்கள் எப்போதுமே அசத்தலாக இருக்கும்.

உதாரணத்திற்கு ……

கேள்வி.

ஆடு சைவமா….அசைவமா?

பதில்.

அது உயிரோடு இருக்கும் போது சைவம்.

உயிரை விட்டதும்

அசைவம்.

சாம்பிராணி, மடச் சாம்பிராணி …என்ன வித்தியாசம் ?

(திருப்பூர் எஸ்.ரவிச்சந்திரன்,திருப்பூர்)

முதலில் சாம்பிராணியைப் பார்ப்போம்.

ஃபிராங்கின்சென்ஸ் (Frankincense) என்ற மரத்திலிருந்து வழியும் பால் போன்ற பசையை சரியான முறையில் பதப்படுத்தி கட்டிகளாக மாற்றினால் அதுவே சாம்பிராணி ஆகும்.

உண்மையில் சாம்பிராணி என்பது மிக முக்கியமான அதிக நன்மைகள் மிகுந்த ஒரு மருத்துவப் பொருள் .இதனை ஆங்கிலத்தில் ‘ஃபிராங்கின்சென்ஸ் ‘ என்றே அழைக்கிறார்கள். இதன் புகையை சுவாசித்தால் நுரையீரல்களில் உள்ள

நச்சுகள் மாயமாக மறையும் என்பது மருத்துவ ரீதியாக நிரூபணமாகியுள்ளது.

சாம்பிராணி மரமானது ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் வளர்கிறது .

இந்தியாவில் இம்மரம் பீகார் அஸ்ஸாம் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் சேலம் அருகிலுள்ள சேர்வராயன் மலைப் பகுதியில் செழிப்பாக வளர்கிறது.

சாம்பிராணியில் அனேக ரசாயன சங்கதிகள் இருப்பதால் நம் முன்னோர்கள் எண்ணெய் குளியலுக்கு பிறகு சாம்பிராணிப் புகை போட்டு தலைக்கேசத்தை

ஆற வைப்பார்கள். குழந்தை ஈன்ற இளம் தாய்களுக்கு அரு மருந்து இந்த சாம்பிராணி.

நச்சு கிருமிகளை அழிக்கும் திறன் கொண்ட

ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி தன்மை கொண்ட இந்த சாம்பிராணி பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாப்பதை அலோபதி மருத்துவமும்

ஒப்புக் கொண்டுள்ளது.

இனி….

மடச் சாம்பிராணி என்ன என்பதைப் பார்ப்போம்.

பொதுவாக மடம், கோவில், போன்ற

இடங்களில் கூட்டம் சேரும்போது காற்றில் இருக்கிற கிருமிகளை

அழிப்பதற்கு ஒரு பெரிய சாம்பிராணி கட்டியை வைத்திருப்பார்கள்.

இந்த சாம்பிராணி கட்டி சில நாட்களில் கறுத்து நிறம் மாறி எதற்கும் உதவாமல்

போய் விடும். இப்படி உதவாமல் போகும் சாம்பிராணிக்கு பெயர்தான் மடச் சாம்பிராணி.

இந்த கொரோனா காலத்தில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு இந்தப் பெயர் மிகவும்

பொருத்தம்.

 ஸார்….பெருங்காயம் நமக்கு எப்படி கிடைக்கிறது?

மணக்காடு சி.தெ.ரஜினிஅருள்

பெருங்காயம் ஃபெருலா அசஃபொட்டிடா ( Ferula asafoetida ) என்ற செடியின் வேர், தண்டிலிருந்து சுரக்கும் ஒருவித பசையிலிருந்து கிடைக்கிறது .

இயற்கையாக கிடைக்கும் பெருங்காயம் துர்நாற்றம் கொண்டதாக இருப்பதால் இதை ஆரம்ப காலத்தில் ‘சைத்தானின் கழிவு’ என்று பெயரிட்டு அழைத்தார்கள்.

ஆனால்

இது பல வைரஸ்களை அழிக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது என்று

ஒரு காலத்தில் நிரூபணம் ஆனதும் ‘கடவுளின் அமிர்தம் ‘ என்று கொண்டாடப்பட்டது.

இது பெர்சியாவை பிறப்பிடமாகக் கொண்டது என்றாலும் துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது.

பெருங்காயச் செடி சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும் வேரையும் கீறிவிட்டு அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால்

அதுதான் பெருங்காயம்.

இதில் வெள்ளை பெருங்காயம் சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது.

கலப்படம் இல்லாத பெருங்காயம் எளிதில் தீப்பற்றிக் கொண்டு எரியும்

தன்மை கொண்டது. பெருங்காய வாசனை காற்றில் கரையக் கூடியது என்பதால்

அதை திறந்து வைக்கக்கூடாது. திறந்து வைத்தால் அது வெறும்

பெருங்காய டப்பா.

என்ன ரஜினி .பெருங்காயத்தைப் பற்றி இந்த தகவல் போதுமா….இன்னும் கொஞ்சம்

வேணுமா?கீழே

பெருங்காய செடி.

சார், உடலில் மச்சம் தோன்ற காரணம் ஏதாவது உண்டா….? மச்சம் அதிர்ஷ்டமானதா?

( நம்பிக்கைராஜ் ,திருவண்ணாமலை)

மனிதனின் தோல் மற்ற பாலூட்டி மிருகங்களின்

தோலைக் காட்டிலும் மென்மையானது.

கருவில் இருக்கும் போதே தோலின் அடிப்பகுதியில்

லட்சக்கணக்கில் நுண்ணிய ரத்தக் குழாய்கள்

பின்னிப் பிணைந்து உருவாகும்.

பிரசவ காலம் நெருங்கும் போது குழந்தை உடம்பின் மிருதுவான தோல் பகுதி ரத்தக் குழாய்களால் அழுத்தத்திற்கும்,

நசுங்குதல்களுக்கும் உட்பட்டு தோலின் மேற்பகுதியில் சிறிய புடைப்புகள்

ஏற்பட்டு மெலனின் ( Melanin) என்கிற ரசாயனத்தோடு வினை புரிந்து

மச்சங்களாக (moles )மாறுகின்றன.

மச்சங்கள் திர்ஷ்டமானவை…..ஜோதிடர்களுக்கு மட்டும்.

 பதில் சொல்ல முடியாத கேள்வி,கேள்வியே கேட்காமல் கிடைக்கும் பதில்எது ஸார்…? ( குழப்பி விட்டேனா?)( எல்.தீர்த்தராமன், அரசரடி, மதுரை)

பிறப்பு ஒரு கேள்விக் குறி.இதற்கு யாரும்

பதில் சொல்ல முடியாது. மரணம்தான் அதற்கு பதில்.ஆனால் மரணத்திடம் யாரும்

கேள்வி கேட்க முடியாது.(ரொம்பவும் குழப்பிவிட்டேனா?)

கந்தர் சஷ்டி கவசம் பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே?

(எஸ் ஜெயவேல், சென்னை)

நாத்திகம் பேசுபவர்களே அதை ஆராய்ச்சி

செய்யும் அளவுக்கு

விரும்பிப் படித்திருக்கும்

போது நான் சொல்ல

என்ன இருக்கிறது?

 ஒருவர் மேஜர் ஆவதற்கு அது என்ன குறிப்பாக18 வயதை நிர்ணயம் செய்து இருக்கிறார்கள்?( எம். முருகானந்தம், கோவை)

நமது உடம்பின் தலைமை செயலகம் மூளை என்பதுஉங்களுக்குத் தெரியும்.

மூளையின் வளர்ச்சி வயதுக்கு வயது மாறுபடும். முதல் 5 வயது வரை ஒரு விதமாகவும் ,அதற்குப் பிறகு நல்லது எது கெட்டது எது என்று பகுத்தறியும் திறமையோடும் வளரும் .

அதனால்தான் ஒரு குழந்தையின் பள்ளிக் கல்விஐந்தாவது வயதில் முதல் வகுப்போடு ஆரம்பம் ஆகிறது .

5 வயதுக்குப் பிறகு மூளையின் வளர்ச்சி படிப்படியாக ,அதிகரித்து அதன் 18 வது வயதுடன் நின்று போய்விடுகிறது.

அதாவது மூளை முழுவளர்ச்சி பெற்று விடுகிறது.

இதனால் தான் ஒரு நபருக்கு 18 வயதானதும்,

மேஜர் ஆகி விட்டதாக சொல்கிறார்கள்.

நமது மூளையில் 100 பில்லியனுக்கும்,

மேற்பட்ட நியூரான் செல்கள் உள்ளன.

ஒரு பில்லியன் என்பது 100 கோடி .

ஒரு மூளையின் ஆயுள் 250 வருடம் வரை உள்ளது.ஆனாலும்ஒரு மனிதன் தன் ஆரோக்கியத்தை எவ்விதம் பாதுகாக்கிறான்

என்பதைப் பொறுத்தே மூளையின் வாழ்நாள்

அமைகிறது.

18 வயதுக்குப் பிறகு மூளையில் புது செல்கள்

உற்பத்தியாவதில்லை. அதற்கு பதிலாக தினசரி ஆயிரம் செல்கள் அழியும். இப்படி அழிவதால் மூளையின் செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.மூளையில் புதிதாக செல்கள் தோன்றும் வாய்ப்பு இல்லாததால் தலையில் அடிபடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

முடி கொட்டுவதை தடுக்க நீங்களாவது நல்ல யோசனை சொல்லுங்கள் ஸார்?

( ப.தெய்வநாயகம் ,திருவையாறு)

முதலில் முடி ஏன் கொட்டுகிறது என்று பார்ப்போம்.

ஒரு மனிதனின் வாழ்நாளில் 25 வயது வரை முடி கொட்டி, கொட்டி வளரும்.

முடி வளர்ச்சியை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். அவை…..

அனாஜென். ( Anagen)

கேட்டாஜென், (Catagen)

டெலோஜென். (Telogen)

அனாஜென் என்பது ஒரு மனிதனின் குழந்தைப் பருவத்தில்

வளரும் முடி.10 வயது வரை முடி செழிப்பாக வளரும்.

அடுத்ததாக கேட்டாஜென். இந்த நிலையில் புதிதாக முடி வளரவும் செய்யாது.அதேபோல்

கொட்டவும் செய்யாது.

இதுதான் நீண்டகாலம் நீடிக்கும். ( அதாவது கல்யாணம் ஆகிற வரைக்கும்)

மூன்றாவது டெலோஜென். இதுதான் இலையுதிர் காலம். முடி கொஞ்சம் கொஞ்சமாக கொட்ட ஆரம்பிக்கும். ஆண்கள் ஆண்ட்ரோஜன் ஜாதி என்பதால் வேகமாக கொட்டி

வழுக்கை என்ற பெயரை வாங்கிக் கொடுத்துவிடும்.

பெண்கள் ஈஸ்ட்ரோஜன் ஜாதி என்பதால் வழுக்கைக்கு வாய்தா வாங்கி வாங்கியே தப்பித்துக் கொள்வார்கள்.

இரும்பு, கால்சியம்,புரோட்டீன் இந்த மூன்றும் கலந்த சமச்சீரான உணவை தினமும் எடுத்துக் கொண்டால் முடி கொட்டுவதை தள்ளிப்போடலாம். ஆனால்…….

தாத்தாவின் தாத்தா, தாத்தா, அப்பா

இவர்களுக்கு பரம்பரை சொத்தானவழுக்கை இருந்தால்….ஆண்கள் அதிலிருந்து தப்பிக்கவே

முடியாது.

 கண்கள் இத்தனை விநாடிகளுக்கு ஒரு முறைதான் சிமிட்டப்பட வேண்டும் என்கிற உயிரியல் விதி ஏதாவது இருக்கிறதா ஸார் ?

( எம். வி. நீலகண்டன், சென்னை)

நிச்சயமாக…..நீலகண்டன்.

கண்களில் எந்த கோளாறும் இல்லாமல்,

எதிர் வீட்டில் ஒரு அழகான பெண்ணும் இல்லாமல் இருந்தால் ஆறு விநாடிகளுக்கு ஒரு முறைகண் சிமிட்டப்பட வேண்டும்.

இது தான் கண்கள் ஆரோக்கியமாய் இருக்கிறதுஎன்பதற்கான அடையாளம்.


ராத்திரி 12 மணிக்கு நீங்கள் கதை எழுதிக்கொண்டு இருக்கும்போது ஒரு பெண்ணின் கொலுசுச் சத்தம் கேட்டால் என்னசெய்வீர்கள்?( வி.கிருத்திகா, கோவை)

உடனே எழுந்து போய் “இப்படியெல்லாம் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது.

கொலுசுகளை கழற்றிவிட்டு வேண்டுமானால் நட”

என்று சொல்லிவிட்டு வந்து

தொடர்ந்து எழுத ஆரம்பித்து விடுவேன்.

கொலுசு சத்தத்துக்கெல்லாம் பயப்பட்டா க்ரைம் நாவல் எழுத முடியுமா கிருத்திகா?

இதிகாச நட்புகளில் எது டாப்?

( ரா.நிரஞ்சன், ஸ்ரீபெரும்புதூர்)

கர்ணன்,துரியோதனன்….நட்பு.

எடுக்கவோ….?

கோர்க்கவோ….?

துரியோதனன் கேட்ட அந்த கேள்வியில் உள்ள நட்பின் ஆழத்தை இன்னமும் அளந்து கொண்டிருக்கிறேன்.

பேப்பரும்,பேனாவும் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால்…..?
(
மு.மதிவாணன் ,அரூர்)

நீங்கள் தப்பிக்கவே முடியாது. அப்போதும் பனையோலைகளில் எழுத்தாணி கொண்டு க்ரைம் நாவல்கள் எழுதியிருப்பேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: