அடுத்த வேளைச் சாப்பாடு

ஒருபக்க கதை: பூபதி பெரியசாமி
காலை 9.00 மணி… படுடென்ஷனாய் இருந்தாள் கவிதா. காரணம், சமையல்காரி தனம் இன்னும் வேலைக்கு வந்தபாடில்லை. கோபமாய்ப் போனை எடுத்தாள். அப்போது, வேகமாய் ஓடிவந்த சமையல்காரி… “அம்மா மன்னிச்சிடுங்கம்மா. கொஞ்சம் லேட்டாயிடுச்சு…”
உடனே, சலிப்பாய்…“சரி… சரி போய் வேலையப்பாரு. நிறைய வேலை கிடக்கு…” என்றாள் கவிதா.
சில நிமிடங்களில்… வழக்கமாய் கேட்பதுபோலவே, “அம்மா… அடுத்த வேளைக்கு என்ன சாப்பாடு செய்ய?” என்றாள் தனம். வகைவகையான அயிட்டங்கள் பலவற்றைச் சொல்லிவிட்டு, ஷாப்பிங் புறப்பட்டாள் கவிதா. தனத்தின் சமையல் கைவண்ணம், வீடு முழுக்க வாசம் வீசியது.
‘எப்படியும் வேலை முடிந்து போகும்போது, முதலாளியம்மா ஏதாவது கொடுப்பாங்க…’ என்ற ஆவலில் தன்னை மறந்து வேலையில் மூழ்கினாள் தனம். எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும், மீதமிருந்ததை எடுத்து பிரிட்ஜில் வைக்கச் சொன்னாள் கவிதா.
‘அடுத்த வேளைக்கு என்ன சாப்பாடு செய்ய…?’ என்று முதலாளி அம்மாவிடம் ஆசையாய்க் கேட்ட வேலைக்காரி தனம், ‘அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போறேனோ தெரியல?…” என்ற கவலையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள்.