சிறுகதை: இளவல் ஹரிஹரன், மதுரை

அடித்துப் போட்ட மாதிரி இரவு வீதியில் கிடந்து
இருந்தது. தெரு விளக்குகள் கோபித்துக் கொண்டு எரி
யாமல் இருந்தன மின்வெட்டைக் காரணம் காட்டி.
தூரத்தில் யாரோ உரக்கப் பாடிக்கொண்டே
நடப்பது காலடிச் சத்தத்தில் இருந்து கேட்டிருக்குமா…..
பாட்டுச் சத்தம் தான் தெரிவித்தது. அது இருளைத்
தவிர்ப்பதற்கான பயம் என்பது குரலின் நடுக்கத்தில்
இருந்து புலப்பட்டது.
இருளாயி ( என்ன பொருத்தமான பெயர்……
இருளைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் போது, கதா
பாத்திரத்தின் பெயர் கூட இருளாயி என்று வந்து விடுகி
றதே…..) தன் அழுக்கு மூட்டையுடன் பெட்டிக் கடை ஓரம்
மூட்டையோடு மூட்டையாக ஒதுங்கி உட்கார்ந்திருந்தாள்.
இருளைக் கண்டு அவளுக்குப் பயம் ஏதுமில்லை.
அதனால் அவள் பாட்டை ஏதும் முணுமுணுக்காமல் இருந்
தாள். ஆனால் உள்ளூர வேறு பயம்……
பிறந்து வளர்ந்ததில் இருந்து பாவப்பட்ட ஜென்மமா
அலைஞ்சி திரிஞ்சவள். ஒரு கட்டத்தில் தன்னைத் தானே
காப்பாற்றிக் கொள்ள பைத்தியமாய் அலைபவள். கிடைத்த
இடத்தில் கிடைத்ததை உண்டு திரிபவள்.
சிக்குப் பிடித்த தலையும், அழுக்குத் துணியுமாய்
யாரும் நெருங்க முடியா ஒரு நாற்றத்துடன் வலம் வருபவள்.
இருளின் ரகசியங்களைத் தேடுவது போல அவள்
கண்கள் அலைந்து கொண்டே இருக்கும். விடியும் வரை இந்த
வெளிச்சத்தை எங்கே மறைத்து வைத்திருக்கும் இந்த இருள்
என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவது போல அவள் மனம் நிலை
யிலாது தவிக்கும். அதனால் பெரும்பாலும் தூக்கமின்றி ஒரு
ஞானியைப் போலக் கிடப்பாள்.
எல்லோருக்கும் இரவு என்றால் தூக்கமும், அதில்
வரும் கனவும் வாய்ப்பது போல இவளுக்கு வாய்ப்பதில்லை.
வெளிச்சம் இருந்தால் போவோர் வருவோர் ஏதோ ஓர் அருவ
ருப்பான ஜென்மத்தைப் பார்ப்பது போல கடந்து போவர். சிலரது
காமக் கண்கள் அந்த இரவிலும் இவளிடம் ஏதோ ஒரு கவர்ச்சி
யக் கண்டது போல நோட்டமிட்டுக் கொண்டே செல்வர். இன்
னும் சிலரோ அவளையும் ஒன்றிரண்டு முறை சுற்றிப் பார்ப்பர்.
ஏதோ வெறி நாயப் பார்த்ததாய்…..ச்சீ…..ச்சேய்…….
ப்போ…..ப்போ……என்று நாயைத் துரத்துவதாய் சைகை காட்டித்
துரத்துவாள்.
எல்லோருக்கும் படியளக்கற ஆண்டவன் அவளுக்கு
மட்டும் படியளக்காமலா இருந்து விடுவான். அவளது பசியும்
அவ்வாறு தான் அடங்குகிறது தினமும்.
கையில் எப்போதும் ஒரு பிஸ்கட் பொட்டலம்
இருக்கும். அவளைத் தேடியும் சில நன்றியுள்ள நாய்கள்
வரும். அவற்றுக்கு பிஸ்கட்டை ஒடித்து ஒடித்துப் போட்டுத்
தன் ஜீவகாருண்யத்தால் வள்ளலாராக மாறுவாள்.
இன்று இரவு இருள் முகத்தில் அறைவது போலக்
கடுமையாக இருந்தது. ஏதோ ஊரடங்குச் சட்டம் போட்டாற்
போல அமைதியாக இருந்தது. வாகனங்கள் கூட ஏதும்
செல்வது போலத் தெரியவில்லை. என்ன காரணமென
விளங்கவில்லை.
இருளாயிக்கு எல்லாம் ஒன்று தான்……பசி
எடுத்தால், யாரிடமாவது கை நீட்டுவாள். முகஞ்சுழித்துக்
கொடுத்தால் வாங்க மாட்டாள். காசைக் கீழே போட்டு
விடுவாள்.
“பார்றா……..இந்த அழுக்கு மூட்டைக்காரிக்குத்
திமிர…….காசை வாங்காமக் கீழே போட்டுட்டுப் போறா…..”
காதில் வாங்காமல் செல்வாள். இவள் மீது இரக்கப்
பட்டுச் சிலர் சாப்பிட ஏதும் வாங்கிக் கொடுத்தால், உடனே
வாங்கிக் கொள்வாள். அதிலிருந்து சிறு பங்கை காக்கை
குருவி, நாய்களுக்குப் போட்டுவிட்டுக் கொஞ்சம் மீதம்
வைத்துக் கொண்டு சாப்பிடுவாள். அந்த மீதத்தை இவளைப்
போல ஏதாவது ஒரு ஜீவன் தென்பட்டால் அதற்குக் கொடுத்
திடுவாள்.
இப்படித் தான் அவள் காலம் போய்க் கொண்டிருந்
தது. தூரத்தில் குடுகுடுப்பைக்காரனின் குடுகுடுப்பைச் சத்தம்
கேட்டது. நடுச்சாமம் தாண்டியிருந்தது. காற்று கூட வீச
மறந்தது போல ஒரு சலனமின்றி இருந்தது.
இருளாயிக்கு கண் அயர்வது போலத் தெரிந்தது.
தன் அழுக்கு மூட்டையைத் துழாவி அதிலுள்ள பிளாஸ்டிக்
பாட்டிலைத் திறந்து சிறிதளவு தண்ணீர் குடித்தாள். இருக்கும்
இடத்திலேயே கால் நீட்டிச் சற்று உறங்கலாமா என யோசிக்
கும் போது, சிறிது தொலைவில் ஏதோ அசைவது போலச்
சத்தம் கேட்டது.
“ஐயோ…..விடு….விடு….விடுடா……. ” என ஏதோ
ஒரு பெண் குழந்தையின் குரல் போலக் கேட்டது.
இருளாயி தன்னை உணர்ந்தாள்.
“டேய் எடுபட்ட பய….. எந்த நாய்டா அது……விடுடா
அந்தப் பிள்ளைய விடுடா………” எனக் குரல் கொடுத்துக்
கொண்டே இருட்டில் துழாவியவாறு அந்த இடத்தை
அடைந்தாள்.
ஓர் ஆண் மிருகம் ஒரு சிறுமியைப் பலாத்காரம்
செய்வதாய் உணர்ந்தவள் சத்தம் வந்த இடத்தில் பாய்ந்தாள்.
கையில் தலை முடி கிடைத்ததும் அதைப் பலங் கொண்டமட்
டும் இழுத்தாள். முகந் தெரியா ஆண் இவளது முகத்தில் ஓங்கி
அறைந்தான்.
” அய்யோ………..” என்று விழுந்தாள் இருளாயி.
அவள் கைக்கு அருகில் ஒரு பெரிய கல் கிடந்தது. கண்கள்
மங்குவது போலத் தெரிந்தது.
விடிகாலை ஒன்றும் தெரியாதது போல விடிந்தது.
சிறிது நேரத்தில் அந்த இடத்தில் சிறு கூட்டம் கூடியிருந்தது.
நடுவில் ஓர் முரட்டு உடல் கிடந்தது. தொடைகளுக்கு
நடுவில் ஒரு பெருங்கல் பலமாக விழுந்திருந்ததில் உயிர்க்குறி
நசுங்கி ரத்த வெள்ளமாய் இருந்தது. கண்கள் மேலே செருகி
இருக்க வாய் அண்ணாந்திருந்ததில் ஈக்கள் மொய்த்துக
கொண்டு இருந்தன.
ஊரை விட்டுத் தொலைவில் அழுக்கு மூட்டைக்
காரியின் கையைப் பிடித்தவாறே ஒரு சிறுமி நடந்து
கொண்டிருந்தாள்.
——————-