
நன்றி என சொல்லி விட்டு புன்னகையுடன்
புறப்பட்டு சென்றார் திரு வசந்தகுமார்.
அவருடன் நான் பேசிக் கொண்டிருந்தது என்னவோ அரை மணி நேரம்தான். ஆனால் வெகுநாட்கள் நெருங்கி பழகியவர் போல ஒரு நட்பையும் பாசத்தையும் எனக்குள் ஏற்படுத்தி விட்டு போய் விட்டார் அவர்.
சில ஆண்டுகளுக்கு முன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு ஆடியோ ஒலிப்பதிவு கூடத்தில்தான் திரு வசந்த குமாரை எதிர்பாராதவிதமாக
முதன்முதலாக சந்தித்தேன்.
அந்த ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் முன்னதாகவே நாங்கள் எங்கள் கிளையண்ட்டுக்காக நேரத்தை புக் செய்திருந்தோம்.
காலை 10 மணி முதல் பகல் ஒரு மணிவரை எங்களுக்கு நேரம் ஒதுக்கி கொடுத்து இருந்தார் சவுண்ட் என்ஜினியர் நித்தியானந்தம்.
சுறுசுறுப்பாக போய்க்கொண்டிருந்தது எங்கள் ஒலிப்பதிவு.
திடீரென காலை பதினோரு மணிக்கு ரெக்கார்டிங் இன்ஜினியர் நித்யாவுக்கு ஒரு போன் கால் வந்தது.
பேசி முடித்துவிட்டு எங்களை தர்ம சங்கடத்துடன் பார்த்தார் இன்ஜினியர்.
“என்ன ?” என்று கேட்டேன்.
நித்யானந்தம் கைகளை பிசைந்து கொண்டே, “ஒண்ணுமில்ல ஸார். ஒரு சின்ன சிக்கல்” என்றார்.
“என்ன விஷயம், சொல்லுங்க…” என நான் அழுத்தமாக கேட்ட பிறகு தயக்கத்துடன் சொன்னார்.
காலை பதினோரு மணி முதல் பதினொன்றரை வரை
ஒரு அரை மணி நேரம் ஒலிப்பதிவுக்கு நேரம் வேண்டும் என்று முதல் நாளே சொல்லி வைத்திருந்தாராம் திரு வசந்த குமார்.
ஆனால் ஏதோ வேலை நெருக்கடியில் அந்த வசந்த் அண்ட் கோ அப்பாயின்ட்மெண்ட்டை மறந்து விட்டிருந்ததால் காலை 10 முதல் பகல் ஒரு மணிவரை முழுமையாக எங்களுக்கு நேரம் ஒதுக்கி கொடுத்து விட்டார் நித்யா.
எங்கள் ரெக்கார்டிங் போய்க் கொண்டிருக்கிறது.
வசந்தகுமாரும் அவரது ஒலிப்பதிவுக்காக இப்போது இந்த ஸ்டூடியோவுக்கு வந்து கொண்டிருக்கிறார் .
இதுதான் இப்போதைய சிக்கல்.
எங்கள் ஒலிப்பதிவையும் பாதியில் நிறுத்தச் சொல்ல முடியாது.
முதல் நாளே ஒலிப் பதிவுக்கான நேரத்தை சொல்லி இருந்த காரணத்தால் திரு வசந்த குமாரையும் வர வேண்டாம் என்று சொல்ல முடியாது.
தர்மசங்கடத்தில் தவித்தார் நித்யா.
இந்த சிக்கலை எப்படி சரி செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் கணீரென்ற குரலில் ‘ஹலோ’ சொல்லியபடி ஸ்டூடியோவுக்கு
உள்ளே நுழைந்த வசந்தகுமார்…
ஒலிப்பதிவு அறைக்குள் இருந்த எங்களை வித்தியாசமாக பார்த்தார்.
‘அவருக்காக கொடுத்திருந்த நேரத்தில் இன்னொருவர் எப்படி..?’ என அவர் சிந்திப்பதை அவர் எங்களை பார்த்த பார்வையே வெளிப்படுத்தியது.
இதற்குள் நித்யா திரு வசந்த குமார் அருகில் சென்று
தலையை சொறிந்து கொண்டும் கைகளை பிசைந்து கொண்டும் தன்னுடைய தவறையும் அதனால் ஏற்பட்ட தர்மசங்கடமான நிலைமையையும்
எடுத்துச் சொன்னார்.
முகத்தில் எந்த வித சலனமும் இன்றி நித்யா சொல்லுவதை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார் திரு வசந்த குமார். ஒரு நொடிதான் யோசித்தார். சட்டென்று புன்னகைக்கு மாறினார்.
நித்யானந்தம் தோள்களில் தட்டிக் கொடுத்த வசந்தகுமார், “அதனால் என்ன ? இப்போ அவங்களுக்கு நேரம் ஒதுக்கி கொடுத்திட்டீங்க. அவங்களோட வேலையை முடிங்க. ஆனா எனக்கும் அவசரம். ரேடியோ ஸ்டேஷனுக்கு அனுப்பணும். எப்படியாவது இன்னைக்கு ஈவினிங் எனக்கு நேரம் ஒதுக்கி கொடுங்க. ஓகே தானே ?”
இப்படி சொல்லி விட்டு புறப்பட தயாரானார் வசந்தகுமார்.
அவ்வளவு பெரிய தொழிலதிபர், இவ்வளவு எளிமையாகவும் இனிமையாகவும் நடந்து கொள்வது நிஜமாகவே என்னை கவர்ந்தது.
சற்றே யோசித்தேன்.
அடுத்த அரை மணி நேரத்தை வசந்தகுமார் அவர்களுக்கு கொடுத்துவிட்டால் என்ன ?
நமது ஒலிப்பதிவை அதற்கு பிறகு கூட வைத்துக் கொள்ளலாமே !
நான் நித்யாவை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். நிம்மதிப் புன்னகையோடு அதை அவர் வசந்த குமாரிடம் சொல்ல அவர் முகத்திலும் புன்னகை. அப்படியா என்று என்னை பார்த்து சிரித்தார் வசந்தகுமார்.
அடுத்த அரை மணி நேரம் ஒலிப்பதிவு ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க…
அதையும் கவனித்துக் கொண்டு, ஸ்டுடியோவின் ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து என்னோடு பேசிக் கொண்டிருந்தார் திரு வசந்தகுமார்.
எந்த ஊர் என என்னிடம் விசாரித்தார். தென்காசி எனச் சொன்னவுடன் தொகுதி அரசியல் நிலவரத்தை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டார்.
காமராஜரின் உறவினர்கள் எனக்கு மிக நெருக்கம் எனச் சொன்னவுடன் ஆர்வமாக இன்னும் எனக்கு அருகில் நெருங்கி அமர்ந்து அது தொடர்பான விஷயங்களையும் கேட்டுக்கொண்டார்.
பேச்சின் இடையிடையே அடிக்கடி தோளில் மாலை போல போட்டிருந்த அங்கவஸ்திரத்தை எடுத்து கீழே வைப்பதும் மறுபடி எடுத்து தோளில் போட்டுக் கொள்வதுமாக இருந்தார்.
திடீரென கள்ளமற்ற சிரிப்புடன் இப்படி கேட்டார்: “அதுசரி. இந்த அங்கவஸ்திரத்தை இப்படி நான் போட்டிருக்கறது எப்படி இருக்கு ? நல்லா இருக்கா இல்லையா ?”
இந்த திடீர் கேள்வியை எதிர்பாராத நான் திகைத்துப் போனேன்.
ஆனாலும் சமாளித்து,
“இது உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு சார்” என்றேன்.
“அப்படியா ?” என விழிகள் விரிய சிரித்தபடி கேட்டார். “ஆமாம் சார் . மற்றவர்களைவிட இது உங்களை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.”
“நிஜமாத்தான் சொல்றீங்களா இல்ல கிண்டலுக்கு சொல்றீங்களா ?” என்று கேட்டுவிட்டு கலகலவென்று சிரித்தார் திரு வசந்த குமார்.
இதற்குள் ஒலிப்பதிவு வேலைகள் முடிந்து விட புன்னகையுடன் நன்றி சொல்லி விட்டு புறப்பட்டு சென்றார் திரு வசந்த குமார்.
நித்தியானந்தம் சிரித்தபடி கேட்டார் : “என்ன ஜான் சார் ? இரண்டு பேரும் ரொம்ப நேரம் சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தீங்க. ஒரே ஊர்க்காரங்க அப்படிங்கிற பாசமா ?”
நான் கொஞ்சம் சிந்தித்தபடி சொன்னேன்: “இல்லை. அது என்னன்னு தெரியல. அவர்கிட்ட ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு.”
ஆம்.
திரு வசந்தகுமார் அவர்கள் தொழில் அரசியல் இரண்டிலும் வெற்றி பெற காரணம், இனிமையான அவரது புன்னகையும், இனம் தெரியாத அந்த ஈர்ப்பு சக்தியும்தான்.
எளிதில் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் அவரது ஈர்ப்பு சக்தி,
அந்த பாஸிட்டிவ் வைரஸை மட்டும் தன் பக்கம் ஈர்க்காமல் இருந்திருக்கலாம்.
என்ன செய்வது ?
வசந்தகுமார் அவர்களின் கள்ளமில்லா அந்த புன்னகையும், கணீரென்ற அவரது குரலும்
காலங்கள் உள்ளவரை நிலைத்திருக்கும்.