கனவுச்சாமியார்

கனவுச் சாமியார்

சிறுகதை :  முகில் தினகரன்.

“ம்மா…நானும் வர்றேன்மா…எப்பப் பார்த்தாலும் நீ அவனை மட்டுமே கூட்டிட்டுப் போறே…என்னைய எங்கியும் கூட்டிட்டுப் போறதேயில்லை…ப்ளீஸ்!…இன்னிக்காவது என்னையக் கூட்டிட்டுப் போம்மா” கெஞ்சினான் பாபு.

“தொந்தரவு பண்ணாதே பாபு…உன்னைய நாளைக்குக் கூட்டிட்டுப் போறேன்…சரியா,” அவனை சமாதானப் படுத்த முயன்றாள் நிர்மலா.

“போம்மா…நீ இப்படித்தான் சொல்லுவே அப்புறம் கூட்டிட்டே போக மாட்டே” அழ ஆரம்பித்தவனை சிறிதும் சட்டையே செய்யாமல் உள் அறைக்குள் சென்ற நிர்மலா சின்னவன் மோகனுக்கு உடை மாற்ற ஆரம்பித்தாள்.

பெரியவன் பாபுவின் அழுகையைச் சகிக்க மாட்டாத நிர்மலாவின் மாமியார் அறைக்குள் வந்து, “ஏம்மா..அவன் கேக்கறதும் நியாயம்தானே,..ஏன் இன்னிக்கு ஒரு நாள் அவனைக் கூட்டிட்டுப் போனா என்ன கொறைஞ்சு போய்டும்,” சற்று கோபமாகவே கேட்டாள்.

“ம்….கௌரவம் கொறைஞ்சுதான் போகும்” ‘வெடுக்”கென்று நிர்மலா சொல்ல,

“என்னது கௌரவம் கொறைஞ்சு போய்டுமா?…எப்படி?”

“பின்னே,..இதா..இந்த சின்னவனைப் பாருங்க…எத்தனை அழகா..குண்டா ‘புசு..புசு’ன்னு பார்த்தாலே எடுத்துக் கொஞ்சலாம் போல இருக்கான்…இதே…அவனைப் பாருங்க..நமீபியா பஞ்சத்துல அடிபட்டவனாட்டம் கையும் காலும் குச்சி குச்சியா..ச்சை!..பாக்கறவங்க கேக்கறாங்க.. “குழந்தைக்கு சோறு கீறு போடறியா,..இல்ல நீயே சாப்பிட்டுக்கறியா,”ன்னு…எங்களுக்கு நாக்கைப் புடுங்கிக்கலாம் போல இருக்கு…அதான் போற எடத்துக்கெல்லாம் இவனைக் கூட்டிட்டுப் போயிடறோம்”

“என்னம்மா இப்படிப் பேசுறே,…அதுவும் நீ பெத்த பிள்ளைதானேம்மா,”

“யார் இல்லைன்னு சொன்னாங்க?…நீங்களே பாருங்க..நானும் சரி..அவரும் சரி..எவ்வளவு புஷ்டியா இருக்கோம்…எங்களோட இவனைக் கூட்டிட்டுப் போயி இவன்தான் எங்க மூத்த பையன்னு சொல்றதுக்கே கேவலமாயிருக்கு”

தாய் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த பாபுவின் மனம் நொந்து போனது. தன் உடம்பையும்..கை கால்களையும் ஒரு முறை குனிந்து பார்த்துக் கொண்டான். அம்மா சொல்வது உண்மைதான்…எட்டு வயசுக்கு இந்த உடம்பு குறைச்சல்தான் என்பதைப் புரிந்து கொண்டு சோகமானான். “அம்மா…நான் என்னம்மா செய்வேன்,…நானும் மத்தவங்க மாதிரிதான் சாப்புடறேன்…தூங்கறேன்..அந்த சாமிதான் என்னைய ஒல்லியாப் பொறக்க வெச்சிடுச்சு…அது என்னோட தப்பாம்மா,”

அம்மாவும், அப்பாவும் தம்பி மோகனை அழைத்துக் கொண்டு சென்றதும் பாட்டியின் மடியில் அமர்ந்து கொண்டு கார்டுன் பார்த்த பாபு அவனையுமறியாமல் உறங்கிப் போனான்.

கனவுலகம் அவனைக் கை நீட்டி வரவேற்றது. சற்று குண்டாயிருந்த சாமியார் ஒருவர் “தம்பி..நீ நல்லா சாப்பிடு…எதையும் வேணடாம்னு தள்ளாமல் முடிந்த வரை விழுங்கு…அப்போதுதான் நீ நல்லா புஷ்டியாய்…பலமுள்ளவனாய்..ஆவாய்” எனச் சொல்ல வெறி கொண்டவன் போல் சாப்பாடு…இட்லி…பூரி..தோசை…என வகைவகையான உணவுகளை விழுங்கித் தள்ளுகிறான் பாபு. அடுத்த நிமிடமே மட..மட..வென குண்டாகி… “ஹூர்ரே…”எனக் கத்துகிறான்.

அவன் கத்தலில் திடுக்கிட்ட பாட்டி அவனைத் தட்டியெழுப்ப கனவு கலைந்து எழுந்தவன் ‘மலங்க..மலங்க’ விழித்தான். “என்னப்பா கனாக் கண்டியா?” 

மேலும் கீழுமாய்த் தலையாட்டியவன் யோசனையில் ஆழ்ந்தான். “ஒரு வேளை..அந்த சாமியார் சொன்ன மாதிரி நெறைய சாப்பிட்டா நானும் குண்டாயிடுவேனா,..அப்பாவும் அம்மாவும் என்னையும் வெளியில் கூட்டிக்கிட்டுப் போவாங்களோ,” தீர்மானம் செய்தான் “இனிமேல் நெறைய சாப்பிட வேண்டியதுதான்”

“ஹூம்..கொழந்தை எதைக்கண்டு பயந்ததோ பாவம்..தூக்கத்துல கனாக் கண்டு அலறுது..அதைக்கூட கவனிக்க முடியாமப் போச்சு இதைப் பெத்தவளுக்கு..எல்லாம் காலக் கொடுமைடா சாமி” தனக்குத் தானே புலம்பிக் கொண்டாள் பாட்டி.

“பாட்டி…பாட்டி…” மெதுவாக அழைத்தான் பாபு.

“என்னப்பா,” தலையை வருடியவாறே கேட்டாள் பாட்டி.

“சாப்பிடறேன் பாட்டி”

“என்னது,..சாப்பிடறியா?…இப்பத்தானே அம்மா போகும் போது சாப்பிட வெச்சிட்டுப் போனா?” 

“மறுபடியும் சாப்பிடறேன் பாட்டி”

உண்மையில் பசியே சிறிதும் இல்லை. ஆனாலும் கனவுச் சாமியார் சொன்னதற்காக சாப்பிட்டான். கண்ணை மூடித் திறப்பதற்குள் அவன் அத்தனையையும் சாப்பிட்டு முடித்ததைப் பார்த்து அசந்து போனாள் பாட்டி. அது ஒரு புறம் சந்தோஷத்தைக் கொடுத்தாலும்…மறுபுறம் லேசாய் ஒரு பயம் மனசை இடறியது.

மறுநாள் காலை. டைனிங் டேபிளில் பாபு சாப்பிட்ட வேகத்தையும்…அளவையும் கண்டு அவன் தாய் நிர்மலா மிரண்டு போனாள். அதே போல் மாலையில் வழக்கமாக அவன் டிபன் பாக்ஸில் திரும்பி வரும் சாப்பாடும் காணாதிருக்க “என்னாச்சு இவனுக்கு,..” குழப்பத்தில் ஆழ்நதாள்.

நான்கு நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் நள்ளிரவு யாரோ முனகும் சத்தம கேட்க நிர்மலா எழுந்து வந்து குழந்தைகள் உறங்கும் அறையை எட்டிப் பார்த்தாள். பாபுதான் வயிற்றைப் பிடித்தபடி துடித்துக் கொண்டிருந்தான். 

“டேய் பாபு…என்னடா…என்னாச்சு?” தொட்டுத் தூக்கினாள். அவனோ வயிற்றைக் காட்டி ஏதோ சொல்ல முயன்று முடியாமல் துவண்டு விழுந்தான்.

அவசரமாக கணவனை எழுப்பி, அவசரமாக ஒரு டாக்ஸி பிடித்து, அவசரமாக ஆஸ்பத்திரிக்குப் பறந்து….

நீணட பரிசோதனைக்குப் பிறகு “டோண்ட் வொர்ரி…ஹீ ஈஸ் ஆல் ரைட்” என்று டாக்டர் சொன்ன பிறகுதான் அவர்களுக்கு உயிரே வந்தது.

“டாக்டர்..எதனால் அவனுக்கு இப்படி?,….” நிர்மலா நிதானமாய்க் கேட்க,

“நத்திங்…அளவுக்கு அதிகமா சாப்பிட்டிருக்கான்…அஜீரணமாயிடுச்சு…தட்ஸ் ஆல்”

“ஆமாம் டாக்டர்.நான் கூட கவனிச்சேன்…ரெண்டு மூணு நாளாவே ரொம்ப அதிகமா வெறி பிடிச்ச மாதிரிதான் சாப்பிட்டான்”

“அது ஏன்னு யோசிச்சீங்களா?,”

“இல்லையே டாக்டர்;.ஏன்?,”

“காரணத்தை நான் சொல்றதை விட அவனையே கேட்டுடலாமே” என்றவர் அவர்களிருவரையும் பாபு படுத்திருக்கும் அறைக்குள் அழைத்துச் சென்று அவனிடம் கேட்டார்.

அப்பாவும் அம்மாவும் ஒதுக்கியதை…கனவுச்சாமியார் சொன்னதை…குண்டாக வேணடும் என்கிற வெறியை…எல்லாவற்றையும் தன் மழலைக் குரலில் அவன் சொல்லச் சொல்ல….

அதிர்ந்து போய் நின்றனர் நிர்மலாவும் அவள் கணவனும்.

மெலிதாய்ச் சிரித்த டாக்டர் “இப்பப் புரியதா..அவன் ஏன் அப்படிச் சாப்பிட்டான்னு?..,..உங்களாலதான்.. நீங்கதான் அவன் ஒல்லியா இருக்கறான்கற காரணத்தினால் அவனை எங்கேயம் கூட்டிட்டுப் போகாம ஒதுக்கி வெச்சுட்டீங்களே…அதான் சீக்கிரமே குண்டாகனும்னு முயற்சி பண்ணியிருக்கான்” என்றார்.

தங்கள் தவறை உணர்ந்த அவர்களிருவரும் “சாரி டாக்டர்…சாரி டாக்டர்” என்றபடி நெற்றியில் அடித்துக் கொண்டனர்.

“பொதுவாவே..குழந்தைக கிட்ட சில விஷயங்கள் நம்மை உறுத்தத்தான் செய்யும்..அதுக்காக அவற்றையெல்லாம் அதுக முன்னாடி வெளிப்படையா சொல்லி அதுகளோட மனசை நாம காயப் படுத்தக் கூடாது..பாத்தீங்கல்ல..அவன் ஒல்லியா இருக்கற விஷயம் உங்களுக்கு உறுத்தலா இருந்திருக்கு..அதை அவன் முன்னாடி போட்டு உடைச்சிருக்கீங்க…விளைவு?…அவனா எதையோ செய்ய முயற்சி செய்து கடைசில அது விபாPதமாப் போயிருக்கு” டாக்டர் திடீரென்று சீரியஸாகிப் பேச,

அந்த சின்ன மனதில் தாங்கள் ஏற்படுத்தி விட்ட காயத்திற்கு என்ன மருந்திடுவது என்று தெரியாத நிர்மலா முத்த மூலிகையை அதன் நெற்றியில் ஒற்றியெடுத்தாள். தாயின் திடீர் அன்பில் திணறிப் போன பாபு பளீரென்று சிரித்தான்.

(முற்றும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: