
1
கோவில் யானை
மதம் பிடித்து நகரும்
சாமி ஊர்வலம்
2
மயானத்தை கடக்கையில்
மேலும் கீழும் அசைகிறது
துறவியின் உதடுகள்!!!
3
இரவு காவலாளி
பகலில் குழந்தைக்கு சொல்கிறார்
நிலா கதைகள்
ஜீவா, கோவை.
இன்னும் நிமிர்ந்தபாடில்லை
கஜா புயல் சாய்த்துப் போட்ட
சவுக்கு விவசாயியின் வாழ்க்கை
மரமேறும் தொழிலாளரின்
எதிர்காலம் குறித்த கேள்விக்குறியாய்
மரத்தில் கொத்திய அரிவாள்
வெளிச்சக் கோடுகள்
கிழித்து விளையாடுகிறது
மின்மினிப் பூச்சி
காற்றுவெளியில்
இசைக்குறிப்புகளை எழுதிச் செல்கின்றன
சிறகசைக்கும் பறவைகள்.
மழைமேகம்
வந்துகொண்டிருக்கிறது
துரத்திவிட காற்று
துளிப்பா எழுதுபவனின்
அப்பா ஆசிரியர் என்பதால்
எழுதினான் இன்று ஆசிரியப்பா.
சிறுவயசு முதலே
எனது விசிறி ஆனது
பனையோலை
காணவில்லை அறிவிப்பு சுவரொட்டி
கண்களில் பட
மீண்டும் காணாமல் போகிறான்..
காணாமல் போனவன்
கொட்டும் பனி
மேசைமீது குளிர்காய்கிறது
கோப்பை நிறைய தேநீர்.
ச. கோபிநாத் …
கடுங்குளிர்
சுருட்டும் படுக்கைவிரிப்புக்கடியில்
கலைந்தோடும் எறும்புகள்!
@
நீலவானம்
எட்டிப்பார்த்ததும் உடைந்துபோகும்
நீர்க்குமிழிகள்!
@
உதிர்ந்த பூக்களை
உதட்டில் வைக்கிறேன்
அப்போதும் இனிக்கும் தேன்!
@
அந்தரத்து வானம்
தேங்கும் அணைக்கட்டில் துள்ளும்
மீன்கள்!
@
காலி மதுப்புட்டிகளைப்
பொறுக்கும் சிறுவனின் வீட்டில்
வீட்டுப்பாடம் எழுதும் அம்மா!
ஹைக்கூ உமா.
நிறைந்த குளத்தில்
மூழ்கிக் கிடக்கிறது
குன்றின் நிழல்
கலாராணி லோகநாதன்
வானவில் கவிதை
நாளிதழில் வெளியானது
கறுப்பு வெள்ளையில்…
காகிதத்தில் கவிதை
கடற்கரை மண்ணில் புதைந்திருக்கும்
கவிஞனின் பெயர்…
தண்ணீர் தேசம்
புத்தகத்தைப் படிக்கும் போது
இடியுடன் மழை…
வானவில் வரைந்த மகள்
நனைந்தபடி இருக்கிறாள்
மழைநீரில்…
ஒரு கட்டத்தில்
நான்கு முக்கோணங்கள் தெரிய
ஒரு சிலுவை வரைகிறேன்…
மகளெழுதிய தேர்வு தாளில்
தவறான பதில் அனைத்திலும்
சிலுவை…
ஸ்.டென்னிஸ்
மதுரை