சின்னத்தாய்!

ஒருபக்க கதை: கி.ரவிக்குமார்
வெளியே ஜோவென மழை பெய்து கொண்டிருந்தது. இரவு மணி ஏழு! எட்டாம் வகுப்பு படிக்கும் வர்ஷிணி மும்முரமாக தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தாள்.
அம்மா விமலா இரவு சாப்பாட்டுக்கு தயார் செய்து கொண்டிருந்தாள். மூன்று வயது அஸ்வின், பொம்மை உலகில் ஆழ்ந்திருந்தான். திடீரென வாந்தி எடுக்கும் சத்தம். ஹாலுக்கு வந்து பார்த்தாள் விமலா. அஸ்வின், வாந்தி எடுத்திருந்தான். ஓடி வந்த வர்ஷிணி அவன் வாயில் விரல் விட்டு ஒரு பிளாஸ்டிக் மூடியை எடுத்தாள். எச்சிலில் ரத்தம் தோய்ந்து இருந்தது. பகீர் என்றது விமலாவுக்கு.
அஸ்வின் அழ ஆரம்பித்தான். வாயில் ரத்தம் வழிந்தது. "கிளம்புமா! கிருத்திக் டாக்டர் கிட்டே போவோம்! இல்லைனா தம்பிக்கு தொண்டைப் புண் செப்டிக் ஆயிரும்!" என்றாள் வர்ஷிணி . "அவ்வளவு பணம் இல்லம்மா! காலையில் தான் கேஸ் சிலிண்டர் வந்தது. விட்டா, அப்புறம் கிடைக்காதேன்னு இருக்கும் பணத்தில் வாங்கிட்டேன்.
அப்பா ஊரிலிருந்து நாளைக்கு தான் வருவார். அது தான் என்ன பண்றதுன்னு தெரியலை!" என்றாள் விமலா கையை பிசைந்த படி! உடனே, வர்ஷிணி எழுந்து போய் ஒரு சின்ன துணி பர்ஸை எடுத்து வர, அதில் பத்து ஐம்பது நூறு என ரூபாய் தாள்கள் இருந்தன. விமலாவின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்து வர்ஷிணியை பார்த்தன! "நீ, அப்பா, தாத்தா, பாட்டி எல்லோரும், என் பிறந்த நாள், பண்டிகை நாள்னு கொடுக்கும் பணத்தை இதில் சேர்த்து வைத்தேன். இப்போ, 1550 ரூபாய் இருக்கும்மா! இதை வைச்சுக்கோ! நான் ஸ்கூல் ஆட்டோ அங்கிளுக்கு போன் செய்து வரச் சொல்றேன்!" என்று சொல்லி கொடுக்கவும்,
“என்ன பெத்த ஆத்தா!" என கட்டிப் பிடித்துக் கொண்டாள் விமலா!