23 September 2020|அக்டோபர் தேன்சிட்டு., கட்டுரை

சந்துரு மாஸ்டர் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
சென்னை அரசு ஓவியக் கலை கல்லூரியின் முதல்வராக இருந்தவர். தற்போது திருநெல்வேலியில் சிற்பக் கலைக் கல்லூரியை சிறப்பாக நடத்திக் கொண்டிருப்பவர்.
தமிழகத்தின் தலைசிறந்த சிற்பிகளில் ஒருவர்.
சமீபத்தில் ஒரு நாள்…
நள்ளிரவு 12 மணியை தாண்டியும் தூக்கம் வரவில்லை சந்துரு மாஸ்டருக்கு.
அப்படியும் இப்படியும் படுக்கையில் புரண்டார். இடையிடையே எழுந்து அறைக்குள்ளேயே அங்குமிங்கும் நடந்தார்.
ஏதோ நினைத்துக் கொண்டவர் போல படுக்கைக்கு பக்கத்தில் மேஜையில் வைத்திருந்த காகிதத்தில் ஒரு சில கோடுகளை வரைந்தார்.
மறுபடியும் படுத்தார், எழுந்தார், வரைந்தார், மீண்டும் அங்குமிங்கும் நடந்தார் சந்துரு மாஸ்டர்.
இப்படி ஒரு வித்தியாசமான சிந்தனை இதுவரை அவருக்குள் எழுந்தது இல்லை. அந்த எண்ணம் வந்ததிலிருந்து அவர் தூக்கம் தொலைந்து போனது.
அவர் உறக்கம் இல்லாமல் தவிப்பதற்கு ஒரே காரணம், அவர் உள்ளத்தில் ஏற்பட்ட பெரு வியப்பு.
ஆம். அந்த நாலு பேரை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை சந்துரு மாஸ்டருக்கு.
யார் அந்த நான்கு தரப்பினர் ?
மருத்துவ பணியாளர்கள்,
காவல்துறை நண்பர்கள்,
துப்புரவு துறை தொழிலாளர்கள்,
சமூக ஆர்வலர்கள்…
உலகமே பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் இந்த தொற்றுநோய் காலத்தில், இந்த நான்கு துறையினர் மட்டும் கொஞ்சம் கூட அச்சமில்லாமல் அந்த தொற்று நோய்க்கு எதிராக களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருப்பது அவருக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது.
சரி. வியப்பதோடு மட்டும் விட்டு விட முடியுமா ?
இந்த நான்கு துறை வீரர்களையும் வரலாற்றில் இடம் பெறச் செய்ய வேண்டாமா ?
அப்போதுதானே வருங்கால தலைமுறை இவர்களின் பெருமையை அறிந்து கொள்ளும்.
அதற்கு கலைஞனாக தான் செய்ய வேண்டிய கடமை என்ன ?
இதை நினைத்தபோதுதான் தூக்கம் தொலைந்து போனது சந்துரு மாஸ்டருக்கு.
பலவித கோணங்களில் சிந்தித்துப் பார்த்தார். எதுவும் அவருக்கு திருப்தி தரவில்லை.
சட்டென ஒரு எண்ணம் உதித்தது.
அசோகச் சக்கரம்.
நான்கு சிங்கங்களை கொண்ட அந்த வடிவம் சந்துரு மாஸ்டர் நினைவுக்கு வந்தது.
அந்த நான்கு சிங்கங்களின் வடிவத்தில் இந்த நான்கு தரப்பினரையும் சிற்பமாக வடித்தால் என்ன ?
உற்சாகமாக எழுந்தார்
சந்துரு மாஸ்டர்.
உடனே தொடங்கி விட்டார்
அந்த உன்னத கலைப் படைப்பை !
அசோகச் சக்கரம் சின்னத்தில் இருப்பது போலவே அந்த நான்கு சிங்கங்களுக்கும் பதிலாக

மருத்துவத்துறை
காவல்துறை
துப்புரவு பணியாளர்கள்
சமூக சேவகர்கள்
இந்த நான்கு துறையில் உள்ளவர்களையும் தன் சிற்பத்தில் இடம் பெறச் செய்த
சந்துரு மாஸ்டர் சொல்கிறார்:
“உலகமே அச்சத்தில் உறைந்து போய் இருக்கும் இந்தச் சூழ்நிலையில், தங்கள் உயிரைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல், மனித குலத்தை காப்பதற்காக மகத்தான இந்த மனித நேயப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த நான்கு தரப்பினரையும் பாராட்டி பதிவு செய்ய வேண்டியது ஒரு கலைஞனாக இருக்கும் என்னுடைய கடமை என்றே கருதுகிறேன். அதற்காகத்தான் இந்த சிற்பத்தை வடிவமைத்திருக்கிறேன்.”
உண்மையிலேயே சந்துரு மாஸ்டரை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். காரணம் 1980 இல் நான் சென்னை ஓவியக் கலை கல்லூரியில் படித்தபோது சிற்பக்கலை பிரிவில் எனக்கு ஆசானாக இருந்தவர் இந்த சந்துரு மாஸ்டர்.
விரைவிலேயே தமிழக அரசு தகுந்த ஒரு இடத்தை தேர்வு செய்து இந்த சிலையை அங்கே நிறுவ இருக்கிறதாம்.
இதுபோன்ற சமுதாய அக்கறை கொண்ட கலைப்படைப்புகளை எதிர்காலத்தில் இன்னும் ஏராளமாக படைக்க என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள் சந்துரு சார்…!