பாரியன்பன் நாகராஜன் – கவிதைகள்

1.
உன் வருகைக்காக
காத்திருக்கும்
என் கனவுகளின் திசை.
2.
காற்றின் மொழி வேறு
மரங்களின் மொழி வேறு.
எனினும் தொடர்கிறது
பாரபட்சமில்லா உரையாடல்.
3.
என் நெற்றிப்பொட்டில்
அமர்ந்து கொள்.
நான் கண்மூடி தியானிக்கிறேன்.
4.
நிற்க நேரமில்லாத நாட்களில்;
நான் ஓடுவதைத் தவிர பிரிதொன்றை நிகழ்த்துவதில்லை.
5.
உன்னுடன் இருக்கும் போதே
முடிந்தவரை
என்னை எடுத்துக்கொள்.
6.
அன்புடன் வாழப் பழகு
இதயத்தில் இருக்காது
வலியும் காயங்களும்.
7.
ஒவ்வொரு துளி கண்ணீருக்கும்
ஒருநாள் பதிலுரைக்கும்
காலம்.
8.
கூண்டினை திறந்து வைத்தபடி
தூங்குகிறது
களவு பயமில்லா பறவைகள்.
9.
சுடரைக் கண்டதும்
புன்னகைக்கும்
இருட்டு.
10.
எல்லோரிடமும் தைரியமாய்
சொல்லத் தகுந்த
பொய்யொன்று வேண்டும்.
11.
கேட்ட கேள்விக்கு
பதில் தெரியாத வானம்
அழுதது மழையாய்.
12.
வேழமென மலைகள்
கம்பளமென மேகங்கள்
அரசென அந்திச் சூரியன்.
13.
குற்றங்களை அடுக்கிய வாய்
திருந்தியதை யாரிடத்திலும்
சொல்லவில்லை.
14.
காதல் நிரம்பிய விழிகளில்
உபரியாய் வழிந்து கசியும்
கருணை.
15.
உன்னிலிருந்து சிதறும்
ஒவ்வொரு துகளிலும்
நான்.
16.
உன் முத்தங்களால்
ஆறவேண்டிய ரணம்
என் உதடுகளில்.
17.
முத்தமிடும் வேளையில்
சத்தங்கள் சிதறுவது
இதழ்களின் பண்பலைவரிசை.
18.
ஓடாத
நதியென்றாலும்
தவமிருக்கும் கரைகள்.
19.
நீ தொலைத்த என்னைத் தேடுகிறேன்
அகப்படும் வரை
ஓயப்போவதில்லை நான்.
20.
உறக்கம் கலைந்த பிற்பாடு
வருகிறாள்; கனவு நீண்டு
மாறுகிறது காட்சிகள்.
– கவிதைகள் ஆக்கம்
பாரியன்பன் நாகராஜன்