வா மகளே வா!
கவிஞர் இளவல் ஹரிஹரன்

கவிதை:
வா மகளே வா
வாழ்க்கைக்கு வண்ணத்தைச் சேர்க்க யிங்கு
வா மகளே வாவென்றே வரவேற் பேன் நான்
சூழ்கின்ற இன்பங்கள் ஆக்கு கின்ற
சுவையுணர்வே மகளென்னும் தேவ தையால்.
வாழ்கின்ற காலமெல்லாம் கண்ணில் வைத்து
வளர்த்து,காத்து வாழவைக்கும் மகளே உன்னால்
சூழ்கலியும் தீர்ந்துவிடும் அழகு சேரும்
சொர்க்கமிங்கு மண்ணுலகில் தோன்றும் தன்னால்.
ஆசைக்குப் பெறுகின்ற ஒன்றாய் ஆகும்
ஆனாலும் அதுவொன்றே வாழ்க்கைக் கோயில்
பூசைக்குச் சேர்கின்ற தெய்வ மாகும்
போற்றிவளர் அன்புலகைக் காட்டு கின்ற
வீசுதென்றல் காற்றாகும் பெருமை யெல்லாம்
விளங்கவைக்கும் மகளன்றோ கால மெல்லாம்
பேசுமொழி தெய்வமொழி யாகு மன்றோ.
பெருமிதமும் தரும்வரமே யாகு மன்றோ!
மகளே நீ வெறுந்தெய்வம் ஆன காலம்
மலையேறிப் போச்சன்றோ இப்போ திங்கு
மகளே நீ பெருந்தெய்வம் எனக்காண் பாரே
மாநிலத்தில் உன்பெருமை அதுவே யன்றோ
மகளே நீ பட்டங்கள் ஆள்வ தற்கு
மகாகவியாம் பாரதியும் அன்றே சொன்னான்
மகளே நீ வா மகளே என்றே யுன்னை
மனமார உச்சிமோந்து மகிழ்வே னன்றோ!
கவிஞர் ” இளவல் ” ஹரிஹரன், மதுரை