
நெம்பர்1 , லைட் ஹவுஸ் ரோடு ராஜேஷ்குமார்
779, ஒப்பணக்கார தெரு ராஜேஷ்குமார்
23, யமுனா தெரு ராஜேஷ்குமார்
இந்த மூவருக்கும் என்ன வித்தியாசம்?
( ஆர்.வைதேகி ராமநாதன், சென்னை )
இடங்கள் மாறினாலும்
இதயம்
இன்னமும்
அதே இடத்தில்தான்
இருக்கிறது.
கல்லூரி காதல்கள் தோல்வியில்
முடிவது ஏன்?
( மெளலீஸ்வரன், திருக்கடையூர்)
இந்த பாடல் வரிகளை சத்தம் போட்டு பாடவும்.
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்.
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்.
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்.
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்.
ஆயிரத்து ஐநூறுக்குமேல் நாவல்கள் ஆயிரக்கணக்கில் சிறுகதைகள் எழுதியிருக்கிற உங்களுக்கு எப்போதாவது கற்பனைப் பஞ்சம் வந்து, அல்லது ….
எழுத எதுவும் தோன்றாமல் ஒரு நாளாவது சும்மா இருந்திருக்கிறீர்களா?
( நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு)
அப்படியொரு கற்பனை பஞ்சம் எனக்கு
வந்திருந்தால் இன்றைக்கு இப்படியொரு கேள்வியை நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள் சுரேஷ்பாபு.
இறையருளால் நான் சும்மா இருந்த நாட்களை ஒற்றை இலக்க எண்ணில்
எண்ணி விடலாம்.
தேடல், மெனக்கெடல் இரண்டும் இருந்து விட்டால் கற்பனைப் பஞ்சம்
அங்கே எட்டி கூடப் பார்க்காது.
நாளைக்கு எழுதி முடிக்க வேண்டியதை இன்றைக்கே முடிக்கக்
கற்றுக் கொண்டால்
வெற்றிகள் தேடி வரும்.
வெறும் வாய்க்கு அசை போட உகந்தது அவல்,பாக்கு, சுயிங்கம் இந்த மூன்றில் எது டாப் ?
(பா.பொன்ராஜ், கணுவாய்)
லாக் டவுன் பீரீயட் முடிஞ்சாச்சு பொன்ராஜ்.
வீட்டை விட்டு அவசியமான வேலைகளுக்கு மட்டுமாவது வெளியே வாங்க.
வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்துகிட்டு இருந்தா இப்படித்தான் அறிவுபூர்வமான கேள்விகளெல்லாம் உதயமாகி யார்கிட்டேயாவது கேட்கத்
தோணும்.
அப்புறம்…..
அசை போட வெறும் வாயே போதும்.
மது, மாது ,சூது ….இந்த மூன்றில் எதை முதலில்
நிறுத்த வேண்டும்?
( கே.பி. ஆறுமுகம் , குடந்தை)
மீதி இரண்டையும்
சாவகாசமாய்
தவணைமுறையில்
நிறுத்திக் கொள்ளலாம்
என்று
பார்க்கிறீர்களா?
பூமி முழு உருண்டையாக ஒரு பந்து போல் தெரிவதற்கு பூமியில் இருந்து எத்தனை கிலோமீட்டர் உயரத்திற்கு நாம் செல்ல வேண்டும்?
( என். சக்திவேல் ,திண்டுக்கல் )
ஒரு விளையாட்டு மைதானத்தை மேலிருந்து முழுவதுமாக நாம் பார்க்க வேண்டுமென்றால் 50 அடி உயரத்துக்கு மேலே போனால் தான் நம்மால் பார்க்கமுடியும் .
இதைப் போன்றே பூமியை ஒரு உருண்டையாக பந்தைப் போல் பார்க்க வேண்டுமென்றால் நாம் பூமியில் இருந்து 72 ஆயிரம் கிலோ மீட்டர் உயரம் செல்ல வேண்டும் .
அந்த உயரத்திலிருந்து இருந்து பார்த்தால் பூமி நீல வண்ணத்தில் ஒரு பந்தைப் போல மேக கூட்டங்களுக்கு நடுவில் மிதந்து கொண்டு இருக்கும்.
பூமி சூரியனை ஒரு விநாடிக்கு 29.78 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது.
பூமியின் சுற்றும் வேகம் 17 மடங்கு அதிகரிக்கும் போது நாம் பூமியோடு ஒட்டிக்கொண்டு இருக்க மாட்டோம்.
ஒரு கல்லைப் போல் விண்வெளியில் தூக்கி எறியப்படுவோம்.

எந்த வாசகரின் வளர்ச்சி உங்களை பிரமிப்பில் ஆழ்த்தியது?
( எல். திவாகரன், கணபதி, கோவை)
திருப்பூர் அலோ. முழுப்பெயர். அ.லோகநாதன்.
அவர் வாசகராய் இருந்த பொழுது 1986 ல் திருப்பூரில் முதன் முதலாய் ஒரு ஜெராக்ஸ் கடையை ஆரம்பித்தார்.
அந்தக் கடையை நான்தான் ஆரம்பித்து வைக்க வேண்டுமென்று ஓர்
அன்பு அடம்.
மறுக்காமல் போய் ஆரம்பித்து வைத்தேன்.
அந்தத் தொழில் மூலம் சிறிது சிறிதாக உழைத்து, மேம்பட்டு அடுத்த சில வருடங்களுக்குள் திருப்பூரில் குறிப்பிடத்தக்க பின்னலாடை ஏற்றுமதித் தொழிலதிபராக மாறி என்னை இன்றளவும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இவர் வாசகர் மட்டுமல்ல.
ஓர் எழுத்தாளரும் கூட.
குமுதம்,சாவி இதழ்களில்
சிறுகதைகள் நிறைய எழுதியவர்.

சில இடங்களில் மட்டும் எதிரொலி கேட்கிறது சில இடங்களில் கேட்பது இல்லை இது எதனால் ?
(வி. பூவராகவன்,மயிலாப்பூர் சென்னை-4)
ஒலியின் வேகம் வினாடிக்கு 332 மீட்டர்.
நாம் சப்தம் எழுப்பியதும் அது ஒலியலைகளாக மாறி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போய்ச் சேர, அதாவது 332 மீட்டரைக் கடக்க ஒரு விநாடி நேரத்தை எடுத்துக் கொள்கிறது.
அப்படி அந்த ஒலியலைகள் அந்த வேகத்தில் பயணிக்கும் போது வழியில் ஏதாவது சுவரோ மற்ற தடைகளோ இருந்தால் அவை தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன.
இப்படி தடைகளில் மோதி திரும்ப வரும் ஒலியலைகள் நமக்கு மறுபடியும் ஒருதடவை கேட்பதையே எதிரொலி என்கிறோம்.
ஒருவர் பேசும் இடத்தில் இருந்து 55 அடி தூரத்தில் தடை ஏதாவது இருந்தால் தான் எதிரொலி உண்டாகும்.
ஒரு மனிதனின் காதுகள் கேட்கும் ஒலித்திறனின் வினாடியை 10 ஆக பிரித்தால் கிடைக்கும் நேரம் எவ்வளவோ அந்த நேரம் வரை நம் காதுகளில் எதிரொலி நிலைத்து நிற்கும்.
இந்த 1/10 வினாடிகளுக்குள் வேறு எந்த ஒலியாவது நம் காதுகளில் விழுந்தாலும் முன்னர் கேட்ட ஒலி நம் காதுகளில் நிலைத்திருப்பதால் மற்ற ஒலியை நம்மால் கேட்க முடியாது.எதிரொலி அடங்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.
அப்புறம்……
எல்லாப் பொருட்களும் ஒலியை எதிரொலிக்கச் செய்வதில்லை.
மரம்,ஜன்னல்,அட்டை போன்றவை ஒலியலைகளை ஈர்த்துக் கொள்கின்றன.
செங்கல் சுவர்கள், பாறை, தண்ணீர் போன்றவை ஒலியலைகளை திருப்பி அனுப்பி விடுகின்றன.
கடன் வாங்கியவர்கள்
இப்படி திருப்பிக் கொடுத்து விட்டால்
பரவாயில்லை.
நாக மாணிக்கம் என்று கல் உண்மையிலேயே உள்ளதா…..?
( எஸ். சசிகுமார், பாப்பிரெட்டிப்பட்டி)
நல்ல பாம்புக்கு வயதாகி, அதன் உடல் தளர்ந்து ,இரை தேடுவதற்கு அதிக தூரம் ஊர்ந்து செல்ல முடியாத போது , அது அதன் தலைப்பகுதியில் உள்ள மாணிக்கத்தை உமிழ்ந்து விட்டு அந்த மாணிக்கம் வெளியிடும் வெளிச்சத்தில தனது இரையை தேடி உண்ணும் என்கிற இந்த கதை எனக்கு எனது பள்ளி நாட்களிலேயே தெரியும்.
அந்த மாணிக்கம் மனிதன் கையில் கிடைத்தால் அவன் குபேரன் ஆகிவிடுவான்.
அதை வீட்டில் பூஜை அறையில் வைத்தால் சுபிட்சம் ஏற்பட்டு
செல்வச்செழிப்பு உண்டாகுமென்றும்
நாக மாணிக்கத்தில் இருந்து ஒரு அடி தூரத்திற்குள் வெளிச்சம் விழுந்தால் அதன் விலை ஒரு கோடி ரூபாய்.
2 அடி தூரத்துக்குள் விழுந்தால் இரண்டு கோடி ரூபாய் .
10 அடி தூரத்துக்குள் விழுந்தால் 10 கோடி ரூபாய் என்கிற அம்புலிமாமா கதையும் எனக்கு தெரியும்.
இந்த கதைகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி .
கும்பல் பேர்வழிகள் உலகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறார்கள்.
இந்த பேர்வழிகள் மிகவும் நூதனமான முறையில் இதை நடத்தி வருகின்றனர்.
நாகமாணிக்கம் என்ற பெயரில் பட்டாணி சைஸுக்கு ஒரு ரசாயனப் பொருளை
உருவாக்கி அதை ஒரு நவரத்தின கல் போல் வடிவமைத்து,
அதில் நுண்ணிய எலக்ட்ரானிக் வேலைகளை செய்து வெளிச்சம் வரும்படி செய்கிறார்கள். அதை நாகமாணிக்கம் என்று நம்பி வாங்கி பணத்தை இழக்கும் பணக்காரர்கள் இந்தியாவில் அதுவும் வடநாட்டில் அதிகம்.
ஏனென்றால் …….
பாம்புகளை தெய்வத்தின் அம்சமாக
இந்திய மக்கள் கருதுவதால்தான்.
ஆர்மோனியப் பெட்டிகளை எந்த மரத்தில் வேண்டுமானாலும் செய்யலாமா?
( நெல்லை அரசு, திருநெல்வேலி)
அப்படி செய்தால் அது ஆர்மோனிய பெட்டியாய்
இருக்காது.
மளிகை சாமான்கள் போட்டு வைத்துக்
கொள்ளும் அஞ்சறைப்பெட்டியாகத்தான் இருக்கும்.
இசையை வரவழைக்கும் ஆர்மோனியப் பெட்டிகள்
செய்வதற்கு பயன்படும் மரப்பலகைகள் ‘ ரெட்சீடார்’ எனப்படும் ஒரு வகை மலைவேம்பு
மரத்தில் இருந்தும் ,’மகோகனி’ மரத்திலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன.
இந்த ‘மரங்களுக்கு’ மட்டுமே இசையை
சேதமில்லாமல், பிசிறில்லாமல் வெளிப்படுத்தும் தன்மை உண்டு என்று
இசை வல்லுனர்கள் நம்புவதே இதற்குக் காரணம்.
சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் தேசியக் கொடியை ஏற்றுவதில்
நடைமுறை வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா?
( சு.ஈஸ்வரன், கூளேகவுண்டன்புதூர்)
இருக்கிறது.
சுதந்திர தினத்தன்று, தேசியக் கொடியானது, கம்பத்தின் கீழே
இரண்டு கயிறுகளால் பூக்களோடு சேர்த்து
மடித்துக் கட்டப்பட்டு இருக்கும்.
கொடி ஏற்றுபவர் பிரதமர்.
பிரதமர் கொடியேற்றும் போது ஒரு கயிற்றை , மேல் நோக்கி இழுப்பதின் மூலமாக
மடித்து வைக்கப்பட்டிருக்கும் கொடி கம்பத்தின் உச்சிக்கு சென்றதும் இன்னொரு கயிற்றை இழுக்கும் போது கொடி அவிழ்ந்து உள்ளே இருக்கும் பூக்களை சிதற விட்டபடி
பறக்க ஆரம்பிக்கும்.
இப்படி கொடியேற்றுவதின் நோக்கம் ,
1947 ல் இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்றுச் சிறப்பைப்
பெருமைப்படுத்தவே
கொடி கீழே இருந்து மேலே சிறிது சிறிதாக
உயர்த்தப்பட்டு பறக்கவிடப்படுகிறது.
ஆனால்………
ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, கொடி கம்பத்தின் உச்சியில்
மடித்துக் கட்டப்பட்டு இருக்கும்.
கொடியேற்றுபவர் குடியரசுத் தலைவர்.
இவர் கம்பத்தின் மேலே இருக்கும் ஒரே ஒரு கயிற்றை
இழுப்பதின் மூலமாக கொடி சுலபமாக அவிழந்து பறக்கும்.
நம் நாடு
இப்போது சுதந்திரமாக இருப்பதை இது குறிக்கும்.
பிரதமர் சுதந்திர தின நாளில் மட்டுமே கொடியை அரசின் சார்பில் ஏற்றுகிறார்.
ஏனெனில்
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு
முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசியலமைப்பு அறிவிக்கப்படவில்லை.
1950 ல்தான் இந்தியா குடியரசு நாடாக பிரகடனம் செய்யப்பட்டது.
அது முதல் குடியரசு நாளில்
ஜனாதிபதி கொடி ஏற்றி வைக்க ஆரம்பித்தார்.
இன்னொரு வித்தியாசம்.
சுதந்திர தினம் செங்கோட்டையிலும்
குடியரசு தினம் ராணுவ அணிவகுப்பு நடைபெறும் இடமான
ராஜ்பாத்திலும் நடைபெறுகிறது.
எனக்கு தெரிஞ்சது
இவ்வளவுதாங்க
கூளேகவுண்டன்புதூர் ஈஸ்வரன்.
Share this post:
Categories
- All Posts
- அக்டோபர் தேன்சிட்டு.
- ஆகஸ்ட் தேன்சிட்டு
- ஏப்ரல் தேன்சிட்டு
- கட்டுரை
- கவிதை
- செப்டம்பர் தேன்சிட்டு
- ஜனவரி தேன்சிட்டு
- ஜூன் தேன்சிட்டு
- ஜூலை தேன்சிட்டு
- தொடர்
- தொடர் கவிதை
- பிப்ரவரி தேன்சிட்டு
- புதிய வரவு
- மார்ச் தேன்சிட்டு
- மே தேன் சிட்டு
- ஹைக்கூ
Sign up for blog updates!
Join my email list to receive updates and information.SIGN UP
Recent Posts
மகிழை சிவகார்த்தி கவிதைகள்1 Oct 2020பட்டாம்பூச்சி வந்தகதை!25 Sep 2020ஜவஹர் ப்ரேம்குமார் கவிதைகள்!25 Sep 2020