அதிர்ஷ்டசாலிகள் நேர்மறையானதை சிந்திக்கக் கூடியவர்கள் என்பது மட்டுமல்லாமல், நீங்கள் நேர்மறையான சிந்தனை உடையவர்களாக இருந்தால் நிச்சயம் நீங்களும் லக்கியானவராக வெற்றியாளராக இருப்பீர்கள் என்கிறது வாழ்வியல்.
உண்மையில் என்ன இல்லை என்ற பார்வையில் அதிர்ஷ்டமும் இல்லை என்ன இருக்கிறது என்ற பார்வையில் அதிர்ஷ்டமும் இருக்கிறது.
லக்கியானவர்கள் என சொல்லப் படுகிறவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களை தங்கள் மனதுக்குள் மீண்டும் மீண்டும் அசை போடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அதே நேரம் அன்லக்கி என சொல்லக் கூடியவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த தோல்விகளை, அவமானங்களை எதிர்மறையான நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் அசை போடக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
அதனால் அவர்களுடைய ஆழ்மனதும், அவர்கள் மனதில் என்ன மாதிரியான காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கிறதோ, அது தான் அவர்கள் விரும்பக் கூடிய ஒன்று என முடிவுக்கு வந்து அது மாதிரியான சூழலையே அவர்களை நோக்கி ஈர்க்கிறது.
அந்த வகையில் அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் உங்கள் எண்ணங்களில் தான் கருக் கொள்கிறது. உங்கள் விழிப்புணர்ச்சியில் தான் அது உருப் பெருகிறது.
இதைப் புரிந்து கொண்டால் நிச்சயம் நீங்களும் அதிர்ஷ்டசாலியே !
பல வருடங்களுக்கு முன்பு, பாலைவனங்களில் தார் சாலைகள் போடப் படாத கால கட்டங்களில்… ஒட்டகம் மட்டுமே புதையும் பாலை மனலில் வாகனமாக பயன்படுத்தப் பட்டபோது, ஒட்டகத்தை மணலில் உட்காரச் செய்து அந்த பயணி தன் பயணத்தில் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை எல்லாம் அதன் நீண்ட முதுகில் மூட்டை மூட்டையாக ஏற்றுகிறார். ஒட்டகமும் அசையாமல் உட்கார்ந்திருக்கிறது. அவர் இப்போது ஒட்டகத்தை ஓட்டி செலவதற்காக எழுந்திருக்க சொல்கிறார். அது எழுந்திருக்க மறுக்கிறது!. என்ன ஆயிற்று இந்த ஒட்டகத்திற்கு.., அவர் குழம்பியவாறு அதை சுற்றி இருக்கும் கயிற்றை இழுத்து மீண்டும் மீண்டும் அதை எழ வைக்க முயற்சிக்கிறார். அது எழ மறுக்கிறது. அவர் அதை தன் கைகளால் தள்ளி எழச் சொல்கிறார். அது ஏதோ சமிஞ்கை காட்டுவது போல், சரமாரியாக மூட்டைகள் ஏற்றப் பட்ட தன் முதுகை வலதும் இடமுமாக அசைத்து விட்டு அந்த இடத்தை விட்டும் எழுந்திருக்காமல் வெறுமனே முரண்டு பிடிக்கிறது. அந்த பயணிக்கு ஒட்டகம் என்ன சொல்ல வருகிறது, அது ஏன் இப்படி தன்னுடன் ஒத்துழைக்காமல் முரண்டு பிடிக்கிறது என்பது பிடிபடுகிறது. இப்போது அவர் ஒன்றுமே இல்லாத சில காலி மூட்டைகளை ஒட்டகத்தின் மேல் ஏற்றுகிறார்.
ஒட்டகம் இன்னும் அதிகமாக முரண்டு பிடித்து எழாமல் அமர்ந்திருக்க, அவர் தனக்குள் சிரித்தவாறு ஒட்டகத்தின் கண்ணில் படுவதற்கேற்ப அந்த காலி மூட்டைகளை அதன் முதுகில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக தள்ளி விடுகிறார். ஒட்டகம் ஏதோ சாதித்த பெருமையில், எந்த பாரமும் குறையாமலே ஏதோ பாரம் இறங்கி விட்டது போல் தன் உடலை சிலிர்த்து எழுந்து பயணிக்கத் தொடங்குகிறது.
பெரும்பாலான உறவுகளில் இந்த வீம்பும் பிடிவாதமும் தானே முன்னின்று, ஏதோ ஒன்றிற்கு முரண்டு பிடித்துக் கொண்டு எந்த உறவையும் முறிக்கிறது. அவன் என்னை அவமானப் படுத்தி விட்டான்… அவன் சாரி சொல்லாமல் அவனோடு ஒரு போதும் பேச மாட்டேன் என உங்கள் நட்பையும் உறவையும் தள்ளி வைக்கச் செய்கிறது. உண்மையில் பாரமே இல்லாத ஒன்றை இறக்கி வைத்து விட்டு பெரும் பாரம் குறைந்தது போல் வீறு நடை போட வைக்கிறது.
எந்த ஒன்றிற்கும் உண்மையான பிரச்னையை புரிந்து கொண்டு அதை சீர் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைப்பதை விட, உங்கள் ஈகோ திருப்தி அடைய வேண்டும் எனும் எண்ணம் தானே பல நேரங்களில் உங்களிடம் மேலோங்கி நிற்கிறது.
உறவுகள் மகிழ்ச்சியெனும் ஹைட்ரஜன் வாயுவால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள், சிறு சிறு குறைகளை பெரிது படுத்தாமல், அவர்களை நெருக்கமாக வைத்துக் கொள்வதும், எங்கோ பறக்க விடுவதும், உங்கள் கைகளில் தான் இருக்கிறது. அதுவே உங்கள் மகிழ்ச்சியின் அளவை தீர்மானிக்கிறது.
–dr.Fajila Azad, International Lifecoach & Hypnotist
…பாண்டவருக்கு மகள் இருக்கும் விஷயம் சிலருக்காவது தெரிந்திருக்கிறது.
மகாபாரதம் உலகின் பெரிய காவியம் ஆகும் அதில் பல கதைகள் உண்டு. தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும் தொடர்கள் பாண்டவரை மையமாக வைத்தே எடுக்கப்படுகின்றன. அதில் வரும் உபகதைகள் ஒளிபரப்பப்படுவதில்லை . அவ்வாறே பாண்டவ மகளின் கதை ஒரு உப கதையாகவும் நாட்டுப்புற கதையாகவும் உள்ளது.
🌼பாண்டவர்கள் :
சந்திர வம்ச அரசன் பாண்டுவின் ஐந்து புதல்வர்களே கூட்டாக பாண்டவர் என அறியப்படுகின்றனர்.
🌼திரௌபதி :
ஐந்து பாண்டவருக்கும் பொதுவான பத்தினி ஆவாள். திரௌபதியை தவிர பாண்டவருக்கு வேறு மனைவிகளும் உண்டு.
🌼உபபாண்டவர்:
பாண்டவர்களுக்கு திரௌபதி மூலம் பிறந்த ஐந்து ஆண் குழந்தைகள் உபபாண்டவர் என அறியப்படுகின்றனர்.
🌼பாண்டவர் மகள் :
🌻திரௌபதி மற்றும் யுதிஷ்டிரன் இருவருக்கும் #சுதானு என்ற மகளும் பிரதிவிந்தியன் என்ற மகனும் பிறந்தனர். இந்த சுதானு தான் பாண்டவர் வம்சத்தின் மூத்த குழந்தை ஆவார். அதாவது உபபாண்டவரின் #சகோதரி தான் இந்த சுதானு.
தாய் திரௌபதி போல அழகும் அறிவும், தந்தை யுதிஷ்டிரன் போல தர்மமும் வீரமும் உடையவள் தான் இந்த சுதானு.
உபபாண்டவர் அனைவர்மீதும் பாரபட்சம் இன்றி அன்பை பொழிந்தாள் சுதானு. சூதாட்டத்தில் நாட்டை இழந்த பாண்டவர் வனவாசம் சென்ற போது தாத்தா துருபதனின் மாளிகையில் பாண்டவரின் குழந்தைகள் அனைவரும் தங்கினர். எனவே அங்கு தாய்மாமன் மற்றும் அத்தையின் அன்பில் வளர்ந்த செல்ல மகள் தான் சுதானு. குருஷேத்திரப் போர் முடிந்த பிறகு பாண்டவரின் மகன்கள் அனைவரும் உறங்கும் போது அஸ்வத்தாமனால் கொல்லப்படுகின்றனர்.
பாண்டவ வம்சத்தில் மிச்சமிருந்தது சுதானு மட்டுமே.
💐இந்த சுதானுவானவள் கிருஷ்ணன் மற்றும் #சத்யபாமாவின் மூத்த மகன் #பானு வை காதலித்து அனைவரது சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு #வஜ்ரம் என்ற மகன் பிறக்கிறான்.
சிலரோ குருஷேத்திரப் போருக்கு பிறகு தான் இவரது திருமணம் நடந்ததாக கூறுகின்றனர். ஆனால் உபபாண்டவரின் அக்கா என்பதால் இவரது திருமணம் உபபாண்டவரின் திருமணத்திற்கு முன்பே நடந்திருக்கவேண்டும்.
திருமணத்திற்கு பின்னர் சுதானு துவாரகையில் வசிக்க ஆரம்பிக்கிறாள்.
💐கிருஷ்ணன் #ஜாம்பவதி இணையரின் மகனான #சாம்பனை மணந்த துரியோதனனின் மகள் லட்சுமணாவும் #துவாரகையின்_மருமகள் ஆவாள்.
தந்தையரை போல விரோதம் பாராமல், சுதானுவும் லட்சுமணாவும் அன்பாகவே வாழ்ந்தனர்.
🌼காந்தாரியின் சாபத்தால் துவாரகை அழியும் நேரத்தில் துவாரகையின் அனைத்து பெண்களும் குழந்தைகளும், அர்ஜுனன் மூலமாக ஹஸ்தினாபுரத்தை அடைகின்றனர்.
சுதானு தனது கடைசி காலத்தை அங்கே கழிக்கிறார்.
பாண்டவர்களுக்கு ஒரு சகோதிரியும் இருந்திருக்கிறார்
குந்திக்கு
4 பிள்ளைகள் அதாவது தர்மர் பீமன் அர்ச்சுனன் கடைசியில் உண்மை வெளியில் வந்தது கர்ணன்.
மாத்திரா தேவிக்கு
3 பிள்ளைகள் நகுலன், சகாதேவன், இறுதியில் பாண்டு மாத்திரா தேவியை கூடிக்கலந்தபோது தான் பாண்டு இறந்தார். மாத்திரி உடன்கட்டை ஏறியதும் இவர்களின் அஸ்தி கடலில் விட்டனர். கண்ணனின் கருணையால் பாண்டுவின் விந்து மாத்திரி உடலில் இருந்ததால் உடன்கட்டை ஏறியும் அந்த விந்து தீயிலும் எதுவுமாகாமல் அஸ்தி கடலில் கலக்கும் போது கடலில் உள்ள சங்கில் தங்கியது. அந்த சங்கில் இருந்து பிறந்தவள் தான் சங்குவதி என்ற பெண். இந்த பெண் பாண்டவர்களுக்கு தங்கையாவாள். அர்ச்சுனன் போரில் வெற்றி பெற 5 பொருட்கள் தேவைப்பட்டன. அவை:
1. வீரப்பம்பை
2. வீரசாட்டி
3.வீரகந்தம்
4. பண்டாரப்பெட்டி
5. வீரவாள்.
இவை அனைத்தும் ஒருவனிடத்தில் தான் உள்ளது என்றார் கண்ணன். இவை அனைத்தும் யாரிடம் உள்ளது அர்ச்சுனன் கேட்க போத்தலிங்கம் என்பவனிடத்தில் உள்ளது என்று கண்ணன் கூறினார். இதை எப்படி வாங்குவது என்று அர்ச்சுனன் கேட்க இதை தந்திரத்தால்தான் வாங்க முடியும் என்று கண்ணன் கூறினார். இதில் கண்ணன் கூறிய வழி வீமன் விறகு விற்பவனாகவும், அர்ச்சுனன் அழகிய பெண்ணாக விஜயாம்பாள் என்ற பெயருடன் மற்றும் கண்ணன் விஜயாம்பாளுக்கு தாய்கிழவியாக போத்தலிங்கம் உள்ள நாட்டிற்கு சென்றனர். வீமன் விறகு விற்பவனாக சென்று கொண்டிருக்க விஜயாம்பாள் தன் அண்ணனை தேடிக்கொண்டு போக அச்சமயம் போத்தலிங்கம் விஜயாம்பாளை கண்டு அவள்மீது மோகம் கொண்டான். என் அண்ணன் விறகு விற்றகொண்டு இந்த வழியாக வந்ததை பார்த்தீர்களா என்று விஜயாம்பாள் கேட்க அழள் பேச்சிலும் அழகிலும் மயங்கினான் போத்தலிங்கம். உனக்காக எதை வேண்டுமானாலும் கொடுக்கிறேன் என்னை மணந்துக்கொள் என்று கூறினான். அந்த சமயத்தில் அந்த பெண்ணிற்கு தாய் கிழவியாக வந்தார் கண்ணன். அப்போது விஜயாம்பாள் என் பாட்டி என்ன கேட்கிறாரோ அதை தந்தால் நான் தங்களை மணப்பேன் என்று கூறினாள். 1. வீரப்பம்பை
2. வீரசாட்டி
3.வீரகந்தம்
4. பண்டாரப்பெட்டி
5. வீரவாள்.
இவைகள் நாங்கள் பூஜை செய்வதற்கு தேவைப்படுகிறது. இவைகளை கொடுத்தால் நாங்கள் இருவரும் பூஜை முந்ததும் தருகிறோம் என்று தாய்க்கிழவி சொல்ல போத்தலிங்கம் கொடுத்தார். நாங்கள் பூஜை செய்வதை யாரும் பார்க்க கூடாது என்று தாய்கிழவி கண்டிப்புடன் போத்தலிங்கமிடம் கூறினாள். அதற்கு சம்மதித்த போத்தலிங்கம் சற்று பொறுமை காத்தான். சற்று நேரம் கழித்து பார்த்தபோது பூஜை செய்தவர்கள் காணவில்லை. போத்தலிங்கம் விஜயம்பாள் விஜயாம்பாள் என்று புலம்பி கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் தேடினான். இறுதியில் அவர்கள் இருக்கும் நாட்டில் கண்டுபிடித்தப்பின் கண்ணன் நாங்கள் உன்னிடம் இந்த 5 பொருட்களை வாங்கவே வந்தோம் என்று நடந்த உண்மையை கூறி விளக்கினார். அதற்கு பின்பும் போத்தலிங்கம் விஜயாம்பாள் விஜயாம்பாள் என்றான். அதற்கு கண்ணன் சங்கு துவாரகையில் பாண்டுவிற்கும் மாத்ராதேவிக்கும் பிறந்த பெண் பாண்டவர்களின் தங்கையான சங்குவதி இருக்கிறாள் அவளை மணந்துக்கொள் என்று கண்ணன் கூறினார். அன்றுதான் பாண்டவர்களுக்கு தங்கை இருப்பது தெரியும். போத்தலிங்கம் சங்குவதியை மணந்தார். பின்பு போர்க்களத்தில் போத்தலிங்கம் முன்னிருக்கும் பிள்ளையாக போர்மன்னனாக இருக்கவேண்டும் என்று கண்ணன் கூறினார்.
நன்றி என சொல்லி விட்டு புன்னகையுடன் புறப்பட்டு சென்றார் திரு வசந்தகுமார்.
அவருடன் நான் பேசிக் கொண்டிருந்தது என்னவோ அரை மணி நேரம்தான். ஆனால் வெகுநாட்கள் நெருங்கி பழகியவர் போல ஒரு நட்பையும் பாசத்தையும் எனக்குள் ஏற்படுத்தி விட்டு போய் விட்டார் அவர்.
சில ஆண்டுகளுக்கு முன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு ஆடியோ ஒலிப்பதிவு கூடத்தில்தான் திரு வசந்த குமாரை எதிர்பாராதவிதமாக முதன்முதலாக சந்தித்தேன்.
அந்த ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் முன்னதாகவே நாங்கள் எங்கள் கிளையண்ட்டுக்காக நேரத்தை புக் செய்திருந்தோம்.
காலை 10 மணி முதல் பகல் ஒரு மணிவரை எங்களுக்கு நேரம் ஒதுக்கி கொடுத்து இருந்தார் சவுண்ட் என்ஜினியர் நித்தியானந்தம்.
சுறுசுறுப்பாக போய்க்கொண்டிருந்தது எங்கள் ஒலிப்பதிவு.
திடீரென காலை பதினோரு மணிக்கு ரெக்கார்டிங் இன்ஜினியர் நித்யாவுக்கு ஒரு போன் கால் வந்தது.
பேசி முடித்துவிட்டு எங்களை தர்ம சங்கடத்துடன் பார்த்தார் இன்ஜினியர்.
“என்ன ?” என்று கேட்டேன்.
நித்யானந்தம் கைகளை பிசைந்து கொண்டே, “ஒண்ணுமில்ல ஸார். ஒரு சின்ன சிக்கல்” என்றார்.
“என்ன விஷயம், சொல்லுங்க…” என நான் அழுத்தமாக கேட்ட பிறகு தயக்கத்துடன் சொன்னார்.
காலை பதினோரு மணி முதல் பதினொன்றரை வரை ஒரு அரை மணி நேரம் ஒலிப்பதிவுக்கு நேரம் வேண்டும் என்று முதல் நாளே சொல்லி வைத்திருந்தாராம் திரு வசந்த குமார்.
ஆனால் ஏதோ வேலை நெருக்கடியில் அந்த வசந்த் அண்ட் கோ அப்பாயின்ட்மெண்ட்டை மறந்து விட்டிருந்ததால் காலை 10 முதல் பகல் ஒரு மணிவரை முழுமையாக எங்களுக்கு நேரம் ஒதுக்கி கொடுத்து விட்டார் நித்யா.
எங்கள் ரெக்கார்டிங் போய்க் கொண்டிருக்கிறது.
வசந்தகுமாரும் அவரது ஒலிப்பதிவுக்காக இப்போது இந்த ஸ்டூடியோவுக்கு வந்து கொண்டிருக்கிறார் .
இதுதான் இப்போதைய சிக்கல்.
எங்கள் ஒலிப்பதிவையும் பாதியில் நிறுத்தச் சொல்ல முடியாது. முதல் நாளே ஒலிப் பதிவுக்கான நேரத்தை சொல்லி இருந்த காரணத்தால் திரு வசந்த குமாரையும் வர வேண்டாம் என்று சொல்ல முடியாது.
தர்மசங்கடத்தில் தவித்தார் நித்யா.
இந்த சிக்கலை எப்படி சரி செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் கணீரென்ற குரலில் ‘ஹலோ’ சொல்லியபடி ஸ்டூடியோவுக்கு உள்ளே நுழைந்த வசந்தகுமார்… ஒலிப்பதிவு அறைக்குள் இருந்த எங்களை வித்தியாசமாக பார்த்தார்.
‘அவருக்காக கொடுத்திருந்த நேரத்தில் இன்னொருவர் எப்படி..?’ என அவர் சிந்திப்பதை அவர் எங்களை பார்த்த பார்வையே வெளிப்படுத்தியது.
இதற்குள் நித்யா திரு வசந்த குமார் அருகில் சென்று தலையை சொறிந்து கொண்டும் கைகளை பிசைந்து கொண்டும் தன்னுடைய தவறையும் அதனால் ஏற்பட்ட தர்மசங்கடமான நிலைமையையும் எடுத்துச் சொன்னார்.
முகத்தில் எந்த வித சலனமும் இன்றி நித்யா சொல்லுவதை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார் திரு வசந்த குமார். ஒரு நொடிதான் யோசித்தார். சட்டென்று புன்னகைக்கு மாறினார்.
நித்யானந்தம் தோள்களில் தட்டிக் கொடுத்த வசந்தகுமார், “அதனால் என்ன ? இப்போ அவங்களுக்கு நேரம் ஒதுக்கி கொடுத்திட்டீங்க. அவங்களோட வேலையை முடிங்க. ஆனா எனக்கும் அவசரம். ரேடியோ ஸ்டேஷனுக்கு அனுப்பணும். எப்படியாவது இன்னைக்கு ஈவினிங் எனக்கு நேரம் ஒதுக்கி கொடுங்க. ஓகே தானே ?”
இப்படி சொல்லி விட்டு புறப்பட தயாரானார் வசந்தகுமார்.
அவ்வளவு பெரிய தொழிலதிபர், இவ்வளவு எளிமையாகவும் இனிமையாகவும் நடந்து கொள்வது நிஜமாகவே என்னை கவர்ந்தது.
சற்றே யோசித்தேன்.
அடுத்த அரை மணி நேரத்தை வசந்தகுமார் அவர்களுக்கு கொடுத்துவிட்டால் என்ன ? நமது ஒலிப்பதிவை அதற்கு பிறகு கூட வைத்துக் கொள்ளலாமே !
நான் நித்யாவை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். நிம்மதிப் புன்னகையோடு அதை அவர் வசந்த குமாரிடம் சொல்ல அவர் முகத்திலும் புன்னகை. அப்படியா என்று என்னை பார்த்து சிரித்தார் வசந்தகுமார்.
அடுத்த அரை மணி நேரம் ஒலிப்பதிவு ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க… அதையும் கவனித்துக் கொண்டு, ஸ்டுடியோவின் ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து என்னோடு பேசிக் கொண்டிருந்தார் திரு வசந்தகுமார்.
எந்த ஊர் என என்னிடம் விசாரித்தார். தென்காசி எனச் சொன்னவுடன் தொகுதி அரசியல் நிலவரத்தை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டார். காமராஜரின் உறவினர்கள் எனக்கு மிக நெருக்கம் எனச் சொன்னவுடன் ஆர்வமாக இன்னும் எனக்கு அருகில் நெருங்கி அமர்ந்து அது தொடர்பான விஷயங்களையும் கேட்டுக்கொண்டார்.
பேச்சின் இடையிடையே அடிக்கடி தோளில் மாலை போல போட்டிருந்த அங்கவஸ்திரத்தை எடுத்து கீழே வைப்பதும் மறுபடி எடுத்து தோளில் போட்டுக் கொள்வதுமாக இருந்தார்.
திடீரென கள்ளமற்ற சிரிப்புடன் இப்படி கேட்டார்: “அதுசரி. இந்த அங்கவஸ்திரத்தை இப்படி நான் போட்டிருக்கறது எப்படி இருக்கு ? நல்லா இருக்கா இல்லையா ?”
இந்த திடீர் கேள்வியை எதிர்பாராத நான் திகைத்துப் போனேன்.
ஆனாலும் சமாளித்து, “இது உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு சார்” என்றேன்.
“அப்படியா ?” என விழிகள் விரிய சிரித்தபடி கேட்டார். “ஆமாம் சார் . மற்றவர்களைவிட இது உங்களை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.”
“நிஜமாத்தான் சொல்றீங்களா இல்ல கிண்டலுக்கு சொல்றீங்களா ?” என்று கேட்டுவிட்டு கலகலவென்று சிரித்தார் திரு வசந்த குமார்.
இதற்குள் ஒலிப்பதிவு வேலைகள் முடிந்து விட புன்னகையுடன் நன்றி சொல்லி விட்டு புறப்பட்டு சென்றார் திரு வசந்த குமார்.
நித்தியானந்தம் சிரித்தபடி கேட்டார் : “என்ன ஜான் சார் ? இரண்டு பேரும் ரொம்ப நேரம் சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தீங்க. ஒரே ஊர்க்காரங்க அப்படிங்கிற பாசமா ?”
நான் கொஞ்சம் சிந்தித்தபடி சொன்னேன்: “இல்லை. அது என்னன்னு தெரியல. அவர்கிட்ட ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு.”
ஆம்.
திரு வசந்தகுமார் அவர்கள் தொழில் அரசியல் இரண்டிலும் வெற்றி பெற காரணம், இனிமையான அவரது புன்னகையும், இனம் தெரியாத அந்த ஈர்ப்பு சக்தியும்தான்.
எளிதில் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் அவரது ஈர்ப்பு சக்தி, அந்த பாஸிட்டிவ் வைரஸை மட்டும் தன் பக்கம் ஈர்க்காமல் இருந்திருக்கலாம்.
என்ன செய்வது ?
வசந்தகுமார் அவர்களின் கள்ளமில்லா அந்த புன்னகையும், கணீரென்ற அவரது குரலும் காலங்கள் உள்ளவரை நிலைத்திருக்கும்.
அப்படியும் இப்படியும் படுக்கையில் புரண்டார். இடையிடையே எழுந்து அறைக்குள்ளேயே அங்குமிங்கும் நடந்தார்.
ஏதோ நினைத்துக் கொண்டவர் போல படுக்கைக்கு பக்கத்தில் மேஜையில் வைத்திருந்த காகிதத்தில் ஒரு சில கோடுகளை வரைந்தார்.
மறுபடியும் படுத்தார், எழுந்தார், வரைந்தார், மீண்டும் அங்குமிங்கும் நடந்தார் சந்துரு மாஸ்டர்.
இப்படி ஒரு வித்தியாசமான சிந்தனை இதுவரை அவருக்குள் எழுந்தது இல்லை. அந்த எண்ணம் வந்ததிலிருந்து அவர் தூக்கம் தொலைந்து போனது.
அவர் உறக்கம் இல்லாமல் தவிப்பதற்கு ஒரே காரணம், அவர் உள்ளத்தில் ஏற்பட்ட பெரு வியப்பு.
ஆம். அந்த நாலு பேரை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை சந்துரு மாஸ்டருக்கு.
யார் அந்த நான்கு தரப்பினர் ?
மருத்துவ பணியாளர்கள், காவல்துறை நண்பர்கள், துப்புரவு துறை தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள்…
உலகமே பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் இந்த தொற்றுநோய் காலத்தில், இந்த நான்கு துறையினர் மட்டும் கொஞ்சம் கூட அச்சமில்லாமல் அந்த தொற்று நோய்க்கு எதிராக களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருப்பது அவருக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது.
சரி. வியப்பதோடு மட்டும் விட்டு விட முடியுமா ?
இந்த நான்கு துறை வீரர்களையும் வரலாற்றில் இடம் பெறச் செய்ய வேண்டாமா ?
அப்போதுதானே வருங்கால தலைமுறை இவர்களின் பெருமையை அறிந்து கொள்ளும்.
அதற்கு கலைஞனாக தான் செய்ய வேண்டிய கடமை என்ன ? இதை நினைத்தபோதுதான் தூக்கம் தொலைந்து போனது சந்துரு மாஸ்டருக்கு.
பலவித கோணங்களில் சிந்தித்துப் பார்த்தார். எதுவும் அவருக்கு திருப்தி தரவில்லை.
சட்டென ஒரு எண்ணம் உதித்தது.
அசோகச் சக்கரம்.
நான்கு சிங்கங்களை கொண்ட அந்த வடிவம் சந்துரு மாஸ்டர் நினைவுக்கு வந்தது.
அந்த நான்கு சிங்கங்களின் வடிவத்தில் இந்த நான்கு தரப்பினரையும் சிற்பமாக வடித்தால் என்ன ?
உற்சாகமாக எழுந்தார் சந்துரு மாஸ்டர். உடனே தொடங்கி விட்டார் அந்த உன்னத கலைப் படைப்பை !
அசோகச் சக்கரம் சின்னத்தில் இருப்பது போலவே அந்த நான்கு சிங்கங்களுக்கும் பதிலாக
மருத்துவத்துறை காவல்துறை துப்புரவு பணியாளர்கள் சமூக சேவகர்கள் இந்த நான்கு துறையில் உள்ளவர்களையும் தன் சிற்பத்தில் இடம் பெறச் செய்த சந்துரு மாஸ்டர் சொல்கிறார்:
“உலகமே அச்சத்தில் உறைந்து போய் இருக்கும் இந்தச் சூழ்நிலையில், தங்கள் உயிரைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல், மனித குலத்தை காப்பதற்காக மகத்தான இந்த மனித நேயப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த நான்கு தரப்பினரையும் பாராட்டி பதிவு செய்ய வேண்டியது ஒரு கலைஞனாக இருக்கும் என்னுடைய கடமை என்றே கருதுகிறேன். அதற்காகத்தான் இந்த சிற்பத்தை வடிவமைத்திருக்கிறேன்.”
உண்மையிலேயே சந்துரு மாஸ்டரை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். காரணம் 1980 இல் நான் சென்னை ஓவியக் கலை கல்லூரியில் படித்தபோது சிற்பக்கலை பிரிவில் எனக்கு ஆசானாக இருந்தவர் இந்த சந்துரு மாஸ்டர்.
விரைவிலேயே தமிழக அரசு தகுந்த ஒரு இடத்தை தேர்வு செய்து இந்த சிலையை அங்கே நிறுவ இருக்கிறதாம்.
இதுபோன்ற சமுதாய அக்கறை கொண்ட கலைப்படைப்புகளை எதிர்காலத்தில் இன்னும் ஏராளமாக படைக்க என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள் சந்துரு சார்…!
திரும்பி பார்க்கிறேன்! இந்த கொரோனா தொற்று நீடித்துக் கொண்டே போகிறது! தினசரி வாழ்க்கை ஸ்தம்பித்துப் போய் நீண்ட நாட்கள் ஆகி விட்டன! வயசு ஆக ஆக உடம்பில் தென்பும் குறைந்து கொண்டே போகிறது! எழுபது வயசுக்கு மேல் நான் போகும் இடங்கள் வாரப் பத்திரிகைகள் விற்கும் பெட்டிக் கடைகளும், டவுனில் இருக்கும் நூலகமும், விஜயா பதிப்பகமும் தான்! இனிமேல் அங்கு எல்லாம் பழையபடி போக முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது! போலியாக தெம்பை வரவழைத்துக் கொண்டு வெளியில் கிளம்பினால், மகன், மகள்கள் மட்டுமல்ல, பேரன், பேத்திகளும் சேர்ந்து கொண்டு, “தாத்தாவுக்கு 80 வயசுக்கு மேல் ஆச்சு!…இன்னும் மைனர் மாதிரி வெளியே கிளம்பப் பார்க்கிறார்…பார்!…” என்று முணு முணுக்கிறார்கள்! தர்ம சங்கடமாக இருக்கிறது!. இரவில் கூட நீண்ட நேரம் தூக்கம் வருவதில்லை! கட்டிலில் படுத்துக்க கொண்டும், சோபாவில் உட்கார்ந்து கொண்டும் பழைய காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். இந்தக் காலம் மாதிரி அந்தக் காலத்தில் போன், முக நூல் வாட்ஸ் அப், காமிரா, ஜெராக்ஸ் போன்ற வசதிகள் எல்லாம் இல்லாத காலத்தில் நான் வாழ்ந்து விட்டு, எந்த அடையாளத்தைப் பார்த்து பழையதை நினைவு படுத்த முடியும்? நான் வாழ்ந்த காலத்தில் எங்கள் கிராமத்தில் மின்சாரம் கூட கிடையாது. எங்கள் கிராமத்துக்கு பக்கத்தில் துலுக்க பாளையம் என்று ஒரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வசதியான கவுண்டர் தான், தன் தோட்டத்தில் முதன் முதலில் அந்தப் பகுதியில் மின் இணைப்பு வாங்கி பம்பு செட் வைத்தார். அவர் தோட்டத்தில் கிணற்றுக்கு பக்கத்தில் மாலை வந்தவுடன் 100 வாட்ஸ் குண்டு் பல்ப் போட்டு எரிய விடுவார்! வெளிச்சம் எங்களூருக்கு வரும்! நாங்கள் சில நண்பர்களோடு அந்த கிணற்றடிக்குப் போய் அந்த ’பல்ப்’ க்கு பக்கத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் அந்த வெளிச்சத்தை வேடிக்கை பார்த்தது முதலில் நினைவுக்கு வருகிறது!
இன்று சுதந்திர தினம்! எனக்கு சுதந்திரம் வாங்கிய 1947 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி மிக மங்கலாக நினைவுக்கு வருகிறது! நான் அப்பொழுது எங்கள் கிராம பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். எங்கள் பள்ளியில் ரத்தினசாமி எனபவரும், அவர் மனைவியும் ஆசிரியர்களாக இருந்தார்கள். காலையில் பள்ளிக்குப் போனவுடன் தேசிய கொடியை பாக்கெட்டில் பின்னூசியால் குத்தி எங்களை வரிசையாக நிற்க வைத்தார்கள். பிறகு பாலக்கரை ரோட்டில் ஊர்வலமாக கூட்டிக் கொண்டு போனார்கள்! எங்கள் ஊருக்கு கடைசியில் சானார் பாளையம் என்ற ஒரு பகுதி இருக்கிறது. அங்கு ரோட்டின் மேலேயே இரண்டு மிக பெரிய சிலைகள் பயங்கரமான தோற்றத்தோடு இருக்கும். அதன் கைகளில் இருக்கும் அருவாள், குத்தீட்டி, முகத்தில் இருக்கும் மீசை எல்லாம் பார்க்க பயங்கரமாக இருக்கும்! முனியாண்டியோ, மாயாண்டியோ என்று எதோ பெயர் சொல்வார்கள்.. தனியாக அதன் பக்கத்தில் போக பயந்து விடுவேன். அங்கு நிறைய பானைகள் அடுக்கி வைத்திருப்பார்கள்! “மகாத்மா காந்திக்கு ஜே! ஜவகர்லால் நேருவுக்கு ஜே! சுபாஷ் சந்திர போஷூக்கு ஜே!” என்று தொண்டை கிழிய கோஷம் போட்டுக் கொண்டே எங்களை அங்கு கொண்டு போய் அந்த பானைகள் அடுக்கி வைத்திருந்த இடத்திற்கு முன்னால் நிறுத்தினார்கள்! அது எல்லாம் கள் இறக்கும் பானைகள், சாராயம் காய்ச்சும் பானைகள் என்று சொன்னார்கள். அது எதற்கு என்று எல்லாம் எங்களுக்குத் தெரியாது! “நம் தேச தலைவர்கள் யாருக்குமே மது பானம் பிடிக்காது! அதை குடித்தால் அறிவு கெட்டுப் போய், குடும்பங்கள் அழிந்து, நாடு கெட்டுப் போய் விடும்! அதனால் நம் தலைவர்கள் எல்லோரும் நாம் சுதந்திரம் வாங்கியவுடன் முதலில் இதைத் தான் ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்! நீங்கள் முதலில் இந்த பானைகளை உடைத்து எறியுங்கள்!..” என்று ரத்தினசாமி வாத்தியார் சொன்னார். கல்லால் அடித்து உடைப்பதில் இருக்கும் சந்தோஷத்தை விட வேறு பெரிய சந்தோஷம் எல்லாம் எனக்கு அந்த வயசில் இல்லை! எனக்கு ஏற்கனவே வேலியில் போகும் ஓணான்கள் கல்லால் விரட்டி விரட்டி அடித்த அனுபவம் உண்டு! விடுவேனா? ஐந்தாறு பானைகளை கல்லால் அடித்து நொறுக்கி விட்டேன். அன்று ரத்தினசாமி வாத்தியார் எனக்கு அதற்காகவே நிறைய ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தார்! அது எல்லாம் மங்கலாக நினைவுக்கு வந்தது! இன்று நினைத்து பார்க்கும் பொழுது ஆசிரியர்கள் எல்லாம் எதிர் காலத்தைப் பற்றி தீர்க்கமாக சிந்திக்கும் ஆற்றல் இல்லாதவர்களாகத் தான் தெரிகிறது! தேசத் தலைவர்களுக்கு எல்லாம் மது பானம் பிடிக்காது! அவர்கள் நாடு விடுதலை பெற்ற பின் முதல் வேலையாக மது அரக்கனைத் தான் ஒழிப்பார்கள் என்று சொன்னது இன்று ஒரு தமாஷாகத் தெரிகிறது! இன்று நாட்டை ஆள வரும் எல்லாத் தேசத் தலைவர்களும மது பானம் தயாரிப்பதற்கும், விற்பனைக்கும் தானே முதலிடம் தருகிறார்கள்?
நான் இப்பொழுது எல்லாம் என்னுடைய அடி மனசில் இருக்கும் பழைய காலத்து நினைவுகளில் மூழ்கிப் போய் விடுகிறேன்! எவ்வளவு நினைத்துப் பார்த்தாலும் எல்லாம் மங்கலாகத் தான் நினைவுக்கு வருகிறது!
ஆரம்ப படிப்பை எங்கள் கிராமப்பள்ளியில் முடித்து விட்டு, பெருந்துறை உயர்நிலைப் பள்ளியில் 1950 ல் சேர்ந்தேன்.
அந்தக் காலத்தில் எங்கள் கிராமத்தில் ஐந்தாவது வகுப்பு வரை தான் பள்ளிக் கூடம் இருந்தது. மேற் படிப்பு பெருந்துறையில் தான்!
ஆனந்த விகடன், கல்கி பத்திரிகைகள் எங்கள் வீட்டிற்கு நான் பிறந்த காலம் முதல் வந்து கொண்டிருந்தது! என் தந்தை அந்த இரண்டு பத்திரிகைகளையும் விரும்பி படிப்பார். நான் குழந்தையாக இருந்த பொழுதே படிக்காமல் கிழித்துப் பழகியது அந்தப் புத்தகங்களைத் தான்!
ஐந்தாவது வகுப்புக்கு போகும் முன்பே எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்தவுடனே ஆனந்த விகடன் கல்கி தான் விரும்பி படிப்பேன். பாடப் புத்தகங்களை வேண்டா வெறுப்பாகத் தான் தொடுவேன்!
எங்கள் கிராமத்திலிருந்து பெருந்துறை மூன்று மைல் தொலைவு. எங்கள் கிராமத்திலிருந்து பையன்களும் சில பெண்களும் சேர்ந்து நூற்றுக் கணக்கில் தினசரி பெருந்துறைக்கு நடந்தே போய் தான் படிப்போம்.
அந்தக் காலத்தில் எல்லாம் சைக்கிள் வைத்துக் கொள்ள பெரிய பணக்காரர் வீட்டு பையன்களால் தான் முடியும்!
அதனால் சைக்கிள் கனவு எல்லாம் எனக்கு அந்தக் காலத்தில் இருந்தது இல்லை. என் நினைப்பு எல்லாம் கல்கி எப்பொழுது வரும். அதில் பொன்னியின் செல்வன் எப்பொழுது படிப்போம்…ஆனந்த விகடன் எப்பொழுது வரும்..அதில் தேவன், லக்ஷ்மி போட்டி போட்டு எழுதும் தொடர்கதைகளை எப்பொழுது படிப்போம் என்பதைப் பற்றித்தான் இருக்கும்!
காலையில் என் தாயார் எட்டு மணிக்கு எல்லாம் சுடச் சுட தோசை சுட்டுக் கொடுத்து மத்தியானம் சாப்பிட புளி சாதம் அல்லது தயிர் சாதம் பித்தளை தூக்குப் போசியில் நிறையப் போட்டு, தின்பண்டம் வாங்கிச் சாப்பிட செலவுக்கு இரண்டணா கொடுத்து அனுப்புவார்கள்!
மூன்று மைல் நடைப் பயணம். நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டே போக ஜாலியாகத் தான் இருக்கும்!
எனக்குப் பிடித்தது வாய் சுவைக்கு இனிப்பு. மன சுவைக்கு படைப்பு.
பெருந்துறை போனதும் உயர் நிலைப் பள்ளிக்குப் பக்கத்தில் கே.வி.என். கவுண்டர் கடை என்ற பெரிய மளிகைக் கடை இருக்கும், அங்கு போய் ஒரு அணாவுக்கு கற்கண்டு வாங்கி புத்தகப் பையில் போட்டுக் கொள்வேன். ஒரு அணாவுக்கு திருப்பதி லட்டு சைசுக்கு கற்கண்டு கொடுப்பார்கள் அடுத்து நாற்சந்திக்கு பக்கத்தில் இரு பக்கத்திலும் புத்தகக் கடைகள் இருக்கும்! அங்கு சின்னச் சின்ன சைசில் அரையணா ஒரு அணவுக்கு லட்டு, ஜலேபி, டில்லி சலோ, போன்ற தலைப்புகளில் கதைப் புத்தகங்களும் கல்கண்டு, ஜில்ஜில், அணில், டமாரம், பாப்பா மலர், கண்ணன் போன்ற ஏராளமான வார இதழ்களும் கயிற்றில் வரிசையாக தொங்க விட்டிருப்பார்கள்!
அந்தக் காலத்தில் சிறுவர்களுக்கு பிடித்த பொழுது போக்கு கதைப் புத்தகங்கள் படிப்பது தான்!
அதில் ஒன்றை வாங்கிக் கொண்டு தான் பள்ளிக் கூடம் போவேன். ஆசிரியரை ஏமாற்றி விட்டு அவைகளை வகுப்பிலேயே படிப்பது உண்டு.
பாடப் புத்கங்களுக்கு செலவழித்த நேரத்தை விட கதைப் புத்தகங்களுக்கு செலவழித்த நேரம் தான் அதிகம்!
அந்தக் காலத்தில் டைபாய்டு ஜூரம் கொடிய காய்ச்சலாக கருதப் பட்டது. பலர் உயிர் இழந்திருக்கிறார்கள். அந்தக் காய்ச்சல் எனக்கு பனிரண்டு வயசில் வந்து விட்டது. பிழைப்பதே கஷ்டம் என்ற நிலை!
பெருந்துறையில் நம்பியார் என்ற பெரிய டாக்டர் அந்தக் காலத்தில் இருந்தார். அவர் மருத்துவ மனை பவானி ரோட்டில் இருந்தது… காய்ச்சல் முற்றிய நிலையில் என்னை அவரிடம் அழைத்துப் போனார்கள்
பிற்காலத்தில் அந்தக் கட்டிடம் அஞ்சல் நிலையமாக இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.
அங்கு மாடியில் சில ரூம்கள் இருந்தன. ஊசியைப் போட்டு உடனே அங்கு என்னைப் படுக்க வைத்து விட்டார்கள். காய்ச்சலில் உளறிக் கொண்டு இருந்ததாக அம்மா சொன்னார்கள்.
நாலு நாட்களில் காய்ச்சல் இறங்கி விட்டது. எனக்கு ஆரஞ்சு, ஆப்பிள் பழம் எல்லாம் அப்பா மருத்துவ மனை மாடியில் இருந்து கீழே போய் எதிரில் இருக்கும் கடையில் வாங்கிக் கொண்டு வருவார்.
மறு நாள் முறை அப்பா பழக்கடைக்குப் போகும் பொழுது “ அப்படியே புத்தகக் கடைக்குப் போய் அந்த வாரக் கல்கண்டு பத்திரிகை வாங்கிக் கொண்டு வாங்க!..”.என்றேன்.
“புத்தகம் எல்லாம் வீட்டிற்குப் போன பிறகு படிக்கலாம்” என்றார்.
“நீங்கள் வாங்கி வராவிட்டால் நான் காலையில் எழுந்து போய் வாங்கி வருவேன்”என்றேன்
அப்பா அடிக்க வந்தார். அம்மா திட்ட கோபத்தை அடக்கிக் கொண்டு, கீழே இருந்த புத்தகக் கடைக்குப் போய் ஒரு கல்கண்டு பத்திரிகை வாங்கி வந்தார்
சங்கர்லால் துப்பறிகிறார் போன்ற துப்பறியும் கதைகள், மர்ம கதைகள் தான் தமிழ்வாணன் நிறைய எழுதியிருக்கிறார். விகடன் போன்ற பத்திரிகைகளில் மணிமொழி நீ என்னை மறந்நு விடு போன்ற கதைகளும் எழுதியிருக்கிறார் என்று தான் அவரைப் பற்றிய இன்றைய தகவல்கள் சொல்கின்றன.
ஆனால் அந்தக் காலத்தில் கண்ணம்மா, மாயக்கள்ளன் போன்ற சிறுவர்களுக்குப் பிடித்த தொடர்கதைகளும் ஆரம்பத்தில் கல்கண்டில் எழுதியிருக்கிறார். நான் அந்த மாதிரி ஒரு கதையைத் தான் காய்ச்சலில் படுத்திருந்த பொழுது படித்ததாக நினைவுக்கு வருகிறது!
இப்பொழுது அவர் பதிப்பக விலைப் பட்டியலிலேயே அவர் பெயரில் அந்த மாதிரி தலைப்புள்ள புத்தகங்கள் இல்லை! வேறு எங்கும் அந்தக் கதைகள் பற்றிய குறிப்புகளும் இல்லை! எனக்கு நன்றாக நினைவுக்கு வருகிறது. மர்ம கதைகள், துப்பறியும் கதைகள் எழுதுவதற்கு முன்பு கல்கண்டில் அவர் மாயக் கள்ளன் போன்ற கதைகள் எழுதியது!
அரை டிராயர் டவுசர் சைடு பாக்கெட்டில் மறைத்து ஸ்கூலுக்கு எல்லாம் கொண்டு போய் வகுப்பில் படித்திருக்கிறேன்!
எப்படியோ குணமாகி அடுத்த வாரம் ஊர் போய் சேர்ந்தேன்.
நெம்பர்1 , லைட் ஹவுஸ் ரோடு ராஜேஷ்குமார் 779, ஒப்பணக்கார தெரு ராஜேஷ்குமார் 23, யமுனா தெரு ராஜேஷ்குமார் இந்த மூவருக்கும் என்ன வித்தியாசம்? ( ஆர்.வைதேகி ராமநாதன், சென்னை )
இடங்கள் மாறினாலும் இதயம் இன்னமும் அதே இடத்தில்தான் இருக்கிறது.
கல்லூரி காதல்கள் தோல்வியில் முடிவது ஏன்? ( மெளலீஸ்வரன், திருக்கடையூர்)
இந்த பாடல் வரிகளை சத்தம் போட்டு பாடவும்.
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும். நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும். ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும். உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்.
ஆயிரத்து ஐநூறுக்குமேல் நாவல்கள் ஆயிரக்கணக்கில் சிறுகதைகள் எழுதியிருக்கிற உங்களுக்கு எப்போதாவது கற்பனைப் பஞ்சம் வந்து, அல்லது …. எழுத எதுவும் தோன்றாமல் ஒரு நாளாவது சும்மா இருந்திருக்கிறீர்களா? ( நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு)
அப்படியொரு கற்பனை பஞ்சம் எனக்கு வந்திருந்தால் இன்றைக்கு இப்படியொரு கேள்வியை நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள் சுரேஷ்பாபு.
இறையருளால் நான் சும்மா இருந்த நாட்களை ஒற்றை இலக்க எண்ணில் எண்ணி விடலாம்.
தேடல், மெனக்கெடல் இரண்டும் இருந்து விட்டால் கற்பனைப் பஞ்சம் அங்கே எட்டி கூடப் பார்க்காது.
நாளைக்கு எழுதி முடிக்க வேண்டியதை இன்றைக்கே முடிக்கக் கற்றுக் கொண்டால் வெற்றிகள் தேடி வரும்.
வெறும் வாய்க்கு அசை போட உகந்தது அவல்,பாக்கு, சுயிங்கம் இந்த மூன்றில் எது டாப் ? (பா.பொன்ராஜ், கணுவாய்)
லாக் டவுன் பீரீயட் முடிஞ்சாச்சு பொன்ராஜ். வீட்டை விட்டு அவசியமான வேலைகளுக்கு மட்டுமாவது வெளியே வாங்க.
மது, மாது ,சூது ….இந்த மூன்றில் எதை முதலில் நிறுத்த வேண்டும்? ( கே.பி. ஆறுமுகம் , குடந்தை)
மீதி இரண்டையும் சாவகாசமாய் தவணைமுறையில் நிறுத்திக் கொள்ளலாம் என்று பார்க்கிறீர்களா?
பூமி முழு உருண்டையாக ஒரு பந்து போல் தெரிவதற்கு பூமியில் இருந்து எத்தனை கிலோமீட்டர் உயரத்திற்கு நாம் செல்ல வேண்டும்? ( என். சக்திவேல் ,திண்டுக்கல் )
ஒரு விளையாட்டு மைதானத்தை மேலிருந்து முழுவதுமாக நாம் பார்க்க வேண்டுமென்றால் 50 அடி உயரத்துக்கு மேலே போனால் தான் நம்மால் பார்க்கமுடியும் .
இதைப் போன்றே பூமியை ஒரு உருண்டையாக பந்தைப் போல் பார்க்க வேண்டுமென்றால் நாம் பூமியில் இருந்து 72 ஆயிரம் கிலோ மீட்டர் உயரம் செல்ல வேண்டும் .
அந்த உயரத்திலிருந்து இருந்து பார்த்தால் பூமி நீல வண்ணத்தில் ஒரு பந்தைப் போல மேக கூட்டங்களுக்கு நடுவில் மிதந்து கொண்டு இருக்கும்.
பூமி சூரியனை ஒரு விநாடிக்கு 29.78 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. பூமியின் சுற்றும் வேகம் 17 மடங்கு அதிகரிக்கும் போது நாம் பூமியோடு ஒட்டிக்கொண்டு இருக்க மாட்டோம். ஒரு கல்லைப் போல் விண்வெளியில் தூக்கி எறியப்படுவோம்.
எந்த வாசகரின் வளர்ச்சி உங்களை பிரமிப்பில் ஆழ்த்தியது? ( எல். திவாகரன், கணபதி, கோவை)
திருப்பூர் அலோ. முழுப்பெயர். அ.லோகநாதன்.
அவர் வாசகராய் இருந்த பொழுது 1986 ல் திருப்பூரில் முதன் முதலாய் ஒரு ஜெராக்ஸ் கடையை ஆரம்பித்தார். அந்தக் கடையை நான்தான் ஆரம்பித்து வைக்க வேண்டுமென்று ஓர் அன்பு அடம்.
மறுக்காமல் போய் ஆரம்பித்து வைத்தேன்.
அந்தத் தொழில் மூலம் சிறிது சிறிதாக உழைத்து, மேம்பட்டு அடுத்த சில வருடங்களுக்குள் திருப்பூரில் குறிப்பிடத்தக்க பின்னலாடை ஏற்றுமதித் தொழிலதிபராக மாறி என்னை இன்றளவும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இவர் வாசகர் மட்டுமல்ல. ஓர் எழுத்தாளரும் கூட. குமுதம்,சாவி இதழ்களில் சிறுகதைகள் நிறைய எழுதியவர்.
சில இடங்களில் மட்டும் எதிரொலி கேட்கிறது சில இடங்களில் கேட்பது இல்லை இது எதனால் ? (வி. பூவராகவன்,மயிலாப்பூர் சென்னை-4) ஒலியின் வேகம் வினாடிக்கு 332 மீட்டர். நாம் சப்தம் எழுப்பியதும் அது ஒலியலைகளாக மாறி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போய்ச் சேர, அதாவது 332 மீட்டரைக் கடக்க ஒரு விநாடி நேரத்தை எடுத்துக் கொள்கிறது. அப்படி அந்த ஒலியலைகள் அந்த வேகத்தில் பயணிக்கும் போது வழியில் ஏதாவது சுவரோ மற்ற தடைகளோ இருந்தால் அவை தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. இப்படி தடைகளில் மோதி திரும்ப வரும் ஒலியலைகள் நமக்கு மறுபடியும் ஒருதடவை கேட்பதையே எதிரொலி என்கிறோம். ஒருவர் பேசும் இடத்தில் இருந்து 55 அடி தூரத்தில் தடை ஏதாவது இருந்தால் தான் எதிரொலி உண்டாகும். ஒரு மனிதனின் காதுகள் கேட்கும் ஒலித்திறனின் வினாடியை 10 ஆக பிரித்தால் கிடைக்கும் நேரம் எவ்வளவோ அந்த நேரம் வரை நம் காதுகளில் எதிரொலி நிலைத்து நிற்கும். இந்த 1/10 வினாடிகளுக்குள் வேறு எந்த ஒலியாவது நம் காதுகளில் விழுந்தாலும் முன்னர் கேட்ட ஒலி நம் காதுகளில் நிலைத்திருப்பதால் மற்ற ஒலியை நம்மால் கேட்க முடியாது.எதிரொலி அடங்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும். அப்புறம்…… எல்லாப் பொருட்களும் ஒலியை எதிரொலிக்கச் செய்வதில்லை. மரம்,ஜன்னல்,அட்டை போன்றவை ஒலியலைகளை ஈர்த்துக் கொள்கின்றன. செங்கல் சுவர்கள், பாறை, தண்ணீர் போன்றவை ஒலியலைகளை திருப்பி அனுப்பி விடுகின்றன. கடன் வாங்கியவர்கள் இப்படி திருப்பிக் கொடுத்து விட்டால் பரவாயில்லை.
நாக மாணிக்கம் என்று கல் உண்மையிலேயே உள்ளதா…..? ( எஸ். சசிகுமார், பாப்பிரெட்டிப்பட்டி)
நல்ல பாம்புக்கு வயதாகி, அதன் உடல் தளர்ந்து ,இரை தேடுவதற்கு அதிக தூரம் ஊர்ந்து செல்ல முடியாத போது , அது அதன் தலைப்பகுதியில் உள்ள மாணிக்கத்தை உமிழ்ந்து விட்டு அந்த மாணிக்கம் வெளியிடும் வெளிச்சத்தில தனது இரையை தேடி உண்ணும் என்கிற இந்த கதை எனக்கு எனது பள்ளி நாட்களிலேயே தெரியும்.
அந்த மாணிக்கம் மனிதன் கையில் கிடைத்தால் அவன் குபேரன் ஆகிவிடுவான். அதை வீட்டில் பூஜை அறையில் வைத்தால் சுபிட்சம் ஏற்பட்டு செல்வச்செழிப்பு உண்டாகுமென்றும் நாக மாணிக்கத்தில் இருந்து ஒரு அடி தூரத்திற்குள் வெளிச்சம் விழுந்தால் அதன் விலை ஒரு கோடி ரூபாய். 2 அடி தூரத்துக்குள் விழுந்தால் இரண்டு கோடி ரூபாய் . 10 அடி தூரத்துக்குள் விழுந்தால் 10 கோடி ரூபாய் என்கிற அம்புலிமாமா கதையும் எனக்கு தெரியும்.
இந்த கதைகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி . கும்பல் பேர்வழிகள் உலகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறார்கள். இந்த பேர்வழிகள் மிகவும் நூதனமான முறையில் இதை நடத்தி வருகின்றனர்.
நாகமாணிக்கம் என்ற பெயரில் பட்டாணி சைஸுக்கு ஒரு ரசாயனப் பொருளை உருவாக்கி அதை ஒரு நவரத்தின கல் போல் வடிவமைத்து, அதில் நுண்ணிய எலக்ட்ரானிக் வேலைகளை செய்து வெளிச்சம் வரும்படி செய்கிறார்கள். அதை நாகமாணிக்கம் என்று நம்பி வாங்கி பணத்தை இழக்கும் பணக்காரர்கள் இந்தியாவில் அதுவும் வடநாட்டில் அதிகம்.
ஏனென்றால் ……. பாம்புகளை தெய்வத்தின் அம்சமாக இந்திய மக்கள் கருதுவதால்தான்.
ஆர்மோனியப் பெட்டிகளை எந்த மரத்தில் வேண்டுமானாலும் செய்யலாமா? ( நெல்லை அரசு, திருநெல்வேலி)
அப்படி செய்தால் அது ஆர்மோனிய பெட்டியாய் இருக்காது. மளிகை சாமான்கள் போட்டு வைத்துக் கொள்ளும் அஞ்சறைப்பெட்டியாகத்தான் இருக்கும்.
இசையை வரவழைக்கும் ஆர்மோனியப் பெட்டிகள் செய்வதற்கு பயன்படும் மரப்பலகைகள் ‘ ரெட்சீடார்’ எனப்படும் ஒரு வகை மலைவேம்பு மரத்தில் இருந்தும் ,’மகோகனி’ மரத்திலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன.
இந்த ‘மரங்களுக்கு’ மட்டுமே இசையை சேதமில்லாமல், பிசிறில்லாமல் வெளிப்படுத்தும் தன்மை உண்டு என்று இசை வல்லுனர்கள் நம்புவதே இதற்குக் காரணம்.
சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் தேசியக் கொடியை ஏற்றுவதில் நடைமுறை வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா? ( சு.ஈஸ்வரன், கூளேகவுண்டன்புதூர்)
இருக்கிறது.
சுதந்திர தினத்தன்று, தேசியக் கொடியானது, கம்பத்தின் கீழே இரண்டு கயிறுகளால் பூக்களோடு சேர்த்து மடித்துக் கட்டப்பட்டு இருக்கும்.
கொடி ஏற்றுபவர் பிரதமர்.
பிரதமர் கொடியேற்றும் போது ஒரு கயிற்றை , மேல் நோக்கி இழுப்பதின் மூலமாக மடித்து வைக்கப்பட்டிருக்கும் கொடி கம்பத்தின் உச்சிக்கு சென்றதும் இன்னொரு கயிற்றை இழுக்கும் போது கொடி அவிழ்ந்து உள்ளே இருக்கும் பூக்களை சிதற விட்டபடி பறக்க ஆரம்பிக்கும்.
இப்படி கொடியேற்றுவதின் நோக்கம் , 1947 ல் இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்றுச் சிறப்பைப் பெருமைப்படுத்தவே கொடி கீழே இருந்து மேலே சிறிது சிறிதாக உயர்த்தப்பட்டு பறக்கவிடப்படுகிறது.
ஆனால்………
ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, கொடி கம்பத்தின் உச்சியில் மடித்துக் கட்டப்பட்டு இருக்கும். கொடியேற்றுபவர் குடியரசுத் தலைவர். இவர் கம்பத்தின் மேலே இருக்கும் ஒரே ஒரு கயிற்றை இழுப்பதின் மூலமாக கொடி சுலபமாக அவிழந்து பறக்கும். நம் நாடு இப்போது சுதந்திரமாக இருப்பதை இது குறிக்கும்.
பிரதமர் சுதந்திர தின நாளில் மட்டுமே கொடியை அரசின் சார்பில் ஏற்றுகிறார். ஏனெனில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசியலமைப்பு அறிவிக்கப்படவில்லை. 1950 ல்தான் இந்தியா குடியரசு நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. அது முதல் குடியரசு நாளில் ஜனாதிபதி கொடி ஏற்றி வைக்க ஆரம்பித்தார்.
இன்னொரு வித்தியாசம். சுதந்திர தினம் செங்கோட்டையிலும் குடியரசு தினம் ராணுவ அணிவகுப்பு நடைபெறும் இடமான ராஜ்பாத்திலும் நடைபெறுகிறது.
எனக்கு தெரிஞ்சது இவ்வளவுதாங்க கூளேகவுண்டன்புதூர் ஈஸ்வரன்.