உயிரா_உயிலா_எடுத்துச்_செல்ல

May be a cartoon of text that says 'உயிரா, உயிலா எடுத்துச் செல்ல? சதுரா துப்பறியும் நிறுவனம் சாகஸம் சாய்ரேணு சங்கர்'

1 மதியம் சற்றே நிறம் மங்கும் மாலையின் ஆரம்பம்.”வாங்க சீக்கிரம்” என்று கூவினாள் மஞ்சு.அவள் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியவாறே பின்னால் ஓடினார்கள் அவினாஷும்

அனன்யாவும்.மஞ்சுவிற்கு என்ன வயதிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?இருபதுகளில்? டீன்ஸ்?மஞ்சுவின் வயது நாற்பத்தி இரண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பார்த்தால் சொல்லவே முடியாது. ‘சிக்’கென்ற உடலமைப்பு. முகத்தில் சிறிதும் சுருக்கமில்லாத பால்போன்ற தெளிவு. கூடவே ஒரு குழந்தைத்தனம் அந்த முகத்திற்கு அழகையும் இளமையையும் கொடுத்திருந்தது.”இருபத்தி ஏழு மதிக்கலாம்” என்றுதான் அநேகமாக மஞ்சுவின் வயதைக் கணிப்பவர்கள் கூறுவார்கள். இன்னமும்கூடக் குறைத்துச் சொல்பவர்கள் உண்டு. அதற்குக் காரணம் அவளது தோற்றம் மட்டுமல்ல, குன்றாத உற்சாகம். எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் முழு முனைப்பு, குறையாத உழைப்பு, வெற்றி.அவினாஷும் அனன்யாவும் அவள் குழந்தைகள் என்று நம்புவது கடினம். பின்னே, மஞ்சுவிற்குப் பதினைந்து வயதில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று நம்புவது கடினம்தானே? அதோடு, அவர்கள் பார்ப்பதற்கு மஞ்சுவின் கணவன் ரமேஷை ஒத்திருந்தார்கள். ரமேஷ் மட்டும் என்ன? அழகில் குறைந்தவனா? அவன் கம்பீரமான தோற்றத்தைக் கண்டுதானே முதல் பார்வையிலேயே அவன்மேல் காதல் கொண்டாள் மஞ்சு?”சீக்கிரம் வாங்க, ட்வின்ஸ்” என்று அழைத்தவாறே அந்த பெரிய நிலப்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்சஸ பலூனின் கூடைக்குள் தாவி ஏறினாள் மஞ்சு.

அவனாஷும் அனன்யாவும் அதே உற்சாகத்துடன் உள்ளே ஏறிக் கொண்டார்கள்.”பலூன் உயரத்திற்கு வந்ததும் நான் கயிற்றைக் கழற்றி விட்டுடுவேன். அது காற்றோடு மிதந்து செல்லும். பின்னாடியே காரில் வந்து அது எங்கே தரையிறங்குகிறதோ அங்கே உங்களைப் பிக்கப் செய்துகொள்வேன்” என்றான் பலூன் கம்பெனி மானேஜர் விக்கி.”ஆல்ரைட்!” என்று கையைத் தட்டினார்கள் அவினாஷும் அனன்யாவும்.பலூன் மேலே உயர ஆரம்பித்தது. அவினாஷும் அனன்யாவும் உற்சாகத்தில் ஏதேதோ பேச, பாட, ஆட, அவர்கள் பாதுகாப்பை உறுதிசெய்தவாறே அவர்களுக்கு முழுமையாக ஈடுகொடுத்தாள் மஞ்சு. ஜூல்ஸ் வெர்ன் அடிக்கடி அவர்கள் பேச்சில் அடிபட்டார்.இன்னும் சில நிமிஷங்களில் பலூனைப் பூமியோடு பிணைத்த கயிறு வெட்டப்படும்… காற்றோடு பயணம் போகலாம்… கீ….ழே… உலகம் ஒரு 3-டி புகைப்படம்போல் விரியும்… ஆறுகள் சில்வர் புழுக்களாய் நெளியும். வீடுகளெல்லாம் பொம்மைகள்போல்… புல்வெளிகளும் வயல்களும் விதவிதமான பச்சையில் கம்பளங்கள்போல்…

இறைவனுக்கு உலகம் இப்படித்தான் தெரியுமோ என்று மஞ்சு ஒருகணம் எண்ணினாள். வானத்தை நெருங்க நெருங்க நமக்கே கடவுளர் போன்று உணர்வு தோன்றுகிறதே, அதனால்தான் கடவுளர்க்கு வீடு வானம் என்று வைத்தார்களோ? இங்கே என்ன ஒரு சக்தியை உணர முடிகிறது! அப்சொல்யூட் பவர்… முழுமையான சக்தி…அவள் எண்ணத்தின் பைத்தியக்காரத்தனத்தை உணர்த்துவதுபோல் பலூன் கூடை சடாரென்று குலுக்கிப் போட்டது. கீழே சில அங்குலங்கள் இறங்கியிருந்தது.”என்ன ஆச்சு மம்மி? பலூனைக் கீழே இறக்கறாங்களா?” அனன்யா பயக்குரலில் கேட்டாள்.மஞ்சு கீழே பார்த்தாள்.பலூன் கம்பெனியைச் சேர்ந்த யாரும் அங்கே இல்லை. சற்றுத் தொலைவில் தெரிந்த பெட்டிக்கடை போன்ற தற்காலிக அமைப்பில் இயங்கிக் கொண்டிருந்த சிறு கடையின் வெளியே விக்கி தெரிந்தான். டீயோ காப்பியோ அருந்திக் கொண்டிருக்கலாம்.இந்த எண்ணங்கள் அவள் மனதில் மோதுவதற்குள் பலூன் மேலும் பல அங்குலங்கள் உயரமிழந்தது

.”மம்மி…” என்றான் அவினாஷ் பீதியாய்.மஞ்சு மேலே பார்த்தாள். என்ன காரணத்தாலோ பலூன் இளைத்துக் கொண்டிருந்தது. உள்ளிருந்த ஹீலியம் தடைகளை மீறிக் காதலனைத் தேடிச் செல்லும் காதலிபோல காற்றுவெளியில் கலந்துகொண்டிருந்தது.மஞ்சு தன் கைப்பைக்குள் கைவிட்டு ஒரு சிறு குழாயை எடுத்தாள். “பயப்படாதீங்க” என்று சொல்லி, குழாயிலிருந்த விசையை இழுத்தாள்.விர்ரென்று மின்னல் கீற்றுப் போல் குழாயிலிருந்து கிளம்பிய ஒளி, வானிலேறி பளீரென்று ஒளிசிதறல்களாய் மின்னி மறைந்தது.யாரோ மேலே நடப்பதைக் காட்டிக் குரல் கொடுக்க, விக்கி சடேரென்று திரும்பினான்.*****உடனே க்ரவுண்ட் நெட் எழுப்பப்பட்டு, முதலுதவிக்குத் தேவையான உபகரணங்களும் மருந்துகளும் தயார் செய்யப்பட்டு, ஒரு குழுவே கவனமாக வேலை செய்து பலூனிலிருப்போர் பாதுகாப்பாக நெட்டில் விழுமாறு செய்து, ஆக்ஸிஜன் மாஸ்க்குகள் மாட்டப்பட்டு, சிராய்ப்புகளும் மற்ற காயங்களும் மருந்து தடவப்பட்டு…மஞ்சு கூடாரத்திலிருந்த படுக்கையில் படுக்க வைக்கப்பட்டாள். அருகிலேயே சாய்வு நாற்காலிகளில் அவினாஷும் அனன்யாவும்.”மஞ்சு” என்று அலறிக் கொண்டு அரைமணி நேரத்திற்குள் ஓடி வந்துவிட்டான் ரமேஷ்.

5 spots to enjoy a hot air balloon ride in India | Times of India Travel

“ரமேஷ்!” – முகம் மலர்ந்தது மஞ்சுவிற்கு.”என்னம்மா ஆச்சு? எதையாவது பண்ணித் தொலைக்காதேன்னா கேட்கறியா?” கவலையும் கோபமுமாக மஞ்சுவைக் கடிந்து கொண்டான் ரமேஷ்.”ஒண்ணுமில்லை ரமேஷ். மேலிருந்து கீழே பாராசூட் இல்லாம குதிச்சோம், அவ்வளவுதான்” என்று சொல்லிச் சோகையாய்ச் சிரித்தாள் மஞ்சு.அவர்களைப் பேச விட்டுவிட்டு கூடாரத்தின் வெளியே வந்தார்கள் அவினாஷும் அனன்யாவும். விக்கி பலூனை ஆராய்ந்து கொண்டிருப்பதைக் கண்டதும் அவனருகில் சென்றார்கள்.”என்ன விக்கி, என் அம்மா எவ்வளவு ஸ்போர்ட்டிவ்வா உன்னுடைய பலூனில் பயணம் செய்ய ஒத்துக்கிட்டாங்க. கொரோனா விழிப்புணர்வு வாசகங்களும் படங்களும் கொண்டதுன்னு சொன்னதும் உடனே ஒத்துழைப்புக் கொடுத்தாங்க. நீ பலூனை நல்லா டெஸ்ட் பண்ணியிருக்க வேண்டாமா? அம்மா முன்னெச்சரிக்கையா அந்த ஃப்ளேரைக் (flare) கொண்டு வந்திருக்காட்டி என்ன ஆகியிருக்கும்?” என்று கடிந்துகொள்வதுபோல் பேசினான் அவினாஷ்.விக்கி மெதுவாகத் திரும்பி அவினாஷை நோக்கினான்.

“என்ன அவினாஷ், நீ என் தம்பியோட ஃப்ரெண்ட். எனக்கும் தம்பி மாதிரி. உனக்கு இத்தனை பெரிய ஆபத்தை நான் ஏற்படுத்துவேனா? எல்லா உபகரணங்களையும் டபிள் செக் பண்ணிட்டுத் தாண்டா உங்களை எல்லாம் ஏற்றிவிட்டேன். அதான் பலூனைப் பார்த்துட்டிருக்கேன், எங்கே ப்ராப்ளம்னு. என் கண்ணை என்னாலேயே நம்ப முடியல…” என்று இழுத்தான்.”என்ன விஷயம்? எங்கே ப்ராப்ளம்? சொல்லு விக்கி அண்ணா” என்றாள் அனன்யா, அவன் முகபாவம் புரிந்தவளாய்.”இங்கே பாருங்க” என்று பலூனின் அடிப்பகுதியில் ஒரு ஓட்டையைக் காட்டினான் விக்கி. “இது தானாய்க் கிழிஞ்சது இல்லை. யாரோ மெல்லிய ஓட்டை ஒண்ணைப் போட்டிருக்காங்க. அது காற்றழுத்தம் தாங்காமப் பெரிதாகியிருக்கு. நல்ல வேளை, பலூன் ஃப்ரீயா மிதக்க ஆரம்பிச்சு அதற்கப்புறம் இந்தப் ப்ராப்ளம் வந்திருந்தா, எங்களால் உங்களைக் காப்பாற்றியிருக்க முடியாது. நல்லவேளை, இங்கிருந்து பலூன் மிதந்து செல்லும் முன்பே, பிரச்சனை வந்துவிட்டது, நாங்களும் கவனிச்சுக் காப்பத்திட்டோம். இல்லேன்னா…” உடல் சிலிர்த்தது விக்கிக்கு.

“எங்க கம்பெனி வளர்ச்சியைப் பொறுக்காத யாரோதான் இதைச் செய்திருக்கணும்.”அனன்யாவும் அவினாஷும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் தலைகள் விக்கி சொன்னதை மறுப்பதைப்போல் ஆடின.1.2 சதுரா துப்பறியும் நிறுவனம்.ஆபீஸுக்கு வந்து சேர்ந்த தர்மா, வெளியே காத்திருந்த இருவரையும் பார்த்துப் புன்னகைத்தான். “குட். சொன்னபடி கரெக்ட் டைமுக்கு வந்துட்டிங்களே!” என்றவாறே அலுவலகத்தைத் திறந்தான். அதே நேரத்தில் தன்யாவும் தர்ஷினியும் மொபெட்டில் வந்து இறங்கினார்கள்.ஸானிடைஸர் சாங்கியங்களில் ஐந்து நிமிடங்கள் கரைத்து, எல்லோரும் தர்மாவின் அறையில் அமர்ந்தனர்

.”சொல்லுங்க. உங்க பேர் அவினாஷ், அனன்யா என்பதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது” என்று தர்மா பேச்சை ஆரம்பித்தான்.”சார், நாங்க இங்கே வேளச்சேரியில்தான் இருக்கோம். தினமும் ஸ்கூலுக்குப் போகும்வழியில் வேன் ஜன்னல் வழியா உங்க ஏஜன்சி போர்டைப் பார்த்துட்டேதான் போவோம்” என்றான் அவினாஷ்.”அதான் இந்த அசம்பாவிதங்கள் எல்லாம் நடக்கும்போது உங்களிடம் உதவி கேட்கலாம்னு தோணிச்சு” என்றாள் அனன்யா.”முதல்ல உங்க அட்ரஸ், அம்மா அப்பா பெயர் எல்லாம் சொல்லுங்க” என்றாள் தர்ஷினி. அவர்கள் சொல்லச் சொல்லக் குறித்துக் கொண்டாள்.

“அடடே! உங்க அம்மா மஞ்சள்பை சூப்பர்மார்க்கெட்ஸோட ப்ரொப்ரைட்டரா?” என்றாள் தன்யா ஆச்சரியமாய்.”ஆமாம். எங்க அம்மா பேர்ல மஞ்சு சூப்பர்மார்க்கெட்ஸ்னுதான் எங்க தாத்தா ஆரம்பிச்சார். தாத்தா ஆன்மீகத்தில் இன்ட்ரஸ்ட் வந்து நிர்வாகத்திலிருந்து விலகிக் கொண்டார். எங்க அம்மா அதைப் பல வருஷங்களா நடத்திட்டு இருக்காங்க. ஆறு வருஷத்திற்கு முன்னாடி அதை ஆன்லைனா ஆக்கி, சென்னை முழுவதும் டெலிவரி கொண்டுவந்து விரிவாக்கினப்போ, லோக்கல் உணர்வு இருக்கணும்னு மஞ்சள்பைன்னு அம்மா பேர் மாத்தினாங்க” அனன்யா பெருமையாகக் கூறினாள்.”சரி, இப்போ உள்ள பிரச்சனைக்கு வருவோமா?” என்றாள் தன்யா.”என் அம்மாவை யாரோ கொல்லப் பார்க்கறாங்க” என்றான் அவினாஷ் படாரென்று.தர்மாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது

. “குழந்தைகளா, விளையாட்டு விஷயமில்லை இது” என்று எச்சரித்தான்.”நாங்க குழந்தைகள் இல்லை. எங்களுக்குப் பதினைந்து வயதாச்சு. விஷயங்களைப் பார்த்துப் புரிஞ்சுக்கற அறிவு எங்களுக்கு வந்தாச்சு. ப்ளீஸ், எங்களைக் கைக்குழந்தைகள் மாதிரி நடத்தாதீங்க” என்றான் அவினாஷ் சற்றுக் கோபமாக.”கூல், கூல். முதல்ல நடந்த சம்பவத்தை விவரமா சொல்லுங்க. அது கொலை முயற்சியா இல்லையாங்கறதை நாங்க சொல்றோம்” என்றாள் தன்யா.அவினாஷும் அனன்யாவும் மாறிமாறி இராட்சத பலூன் கீழே விழ இருந்த நிகழ்வை விளக்கிச் சொன்னார்கள்.”அந்த மானேஜர் சொன்ன மாதிரி இது அவருடைய எதிரிகள் செய்த வேலையா இருக்கலாமில்லையா? ஏன், ஆக்ஸிடெண்டா கூட இருக்கலாம்” என்றாள் தன்யா. “என்ன காரணத்தினால இது உங்க அம்மாவைக் கொல்ல நடந்த முயற்சின்னு சொல்றீங்க?” என்று கேட்டாள்

.”இது நிச்சயம் ஆக்ஸிடெண்ட் இல்லை மேம். விக்கி அதைக் கன்ஃபர்ம் பண்ணிட்டான்” என்றாள் அனன்யா. “அப்புறம் இது என் அம்மாவைக் கொல்லப் பண்ணின சதிதான்னு ஏன் சொல்றோம்னா…” சற்றே இடைவெளிவிட்டுத் தொடர்ந்தாள் “…இது முதல் முயற்சி இல்லைங்கறதால!””வாட் டூ யூ மீன்? உங்க அம்மாவைக் கொல்ல ஏற்கெனவே…””யெஸ். முதல்முறை… என் அம்மா மத்தியானம் சாப்பிட்டு ஒருமணி நேரத்திலெல்லாம் மயங்கி விழுந்துட்டாங்க. எங்க வீட்ல நான்-வெஜிடேரியன் சாப்பிடும் பழக்கம் உண்டு. மாமிசத்தில் ஏதோ அசுத்தம் இருந்திருக்கலாம்னும் அது ஃபுட் பாய்சன் ஆகியிருக்குன்னும் டாக்டர் சொன்னார். எங்க யாருக்கும் ஒண்ணும் செய்யாம, அவங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு அஃபெக்ட் ஆகும்? மயக்கம் தெளிஞ்சதும் ஒரே வாந்தி, வாயில் ஏதோ உலோகச் சுவை, தலைசுற்றல்…””சுருக்கமாக, ஆர்சனிக் விஷ பாதிப்பின் எல்லா அறிகுறிகளும்” என்றாள் தர்ஷினி அவளுடைய மென்மையான குரலில்.

அவினாஷும் அனன்யாவும் அவள் பக்கம் திரும்பினார்கள். “யெஸ் மேம்” என்றார்கள் வியப்புடன்.”கூகுள்ல தேடினீங்களா?” தர்ஷினியே தொடர்ந்தாள்.”யெஸ் மேம்.””அப்புறம் என்னாச்சு?””என் அம்மாவுக்கு ஸ்டாமினா, மனோதிடம் எல்லாமே ஜாஸ்தி. பிழைச்சு வந்துட்டாங்க. டாக்டர் ஏதோ தப்புப் பண்ணறார், சரியா டயக்னோஸ் பண்ணலைன்னு நினைச்சுதான் கூகுள்ல தேடினோம். ஆனா கிடைத்த தகவல்கள் ரொம்ப அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருந்ததால, யாரிடம் எப்படிச் சொல்லன்னு தெரியல” என்றான் அவினாஷ்.”தொடர்ந்து இந்தப் பலூன் சம்பவம், இல்லையா?””நடுவில் வேறொன்றும் நடந்தது. நாங்க ஒரு புது வீடு கட்டிட்டிருக்கோம். அதைப் பார்க்கறதுக்காகப் போயிருந்தோம். அங்கே கைப்பிடி இன்னும் மாட்டாத பாலகனியிலிருந்து அம்மா விழப் போனாங்க. நல்லவேளை, பக்கத்திலேயே இஞ்சினியர் இருந்ததால, சட்டுன்னு பிடிச்சுட்டார். நாங்களும் சேர்ந்து கைகொடுத்துத் தூக்கிவிட்டுட்டோம்” அவினாஷ் சொல்ல, அனன்யா தொடர்ந்தாள். “இதுவும் விபத்துன்னு சொல்வீங்க. நாங்க அம்மா இறங்கிப் போனதும் அந்த இடத்தைக் கவனிச்சுப் பார்த்தோம். எண்ணை மாதிரி ஏதோ வழுக்கற பொருள் அங்கே தடவப்பட்டிருந்தது

!”தர்மாவின் முகம் சுருங்குவதைத் தன்யாவும் தர்ஷினியும் கவனித்தார்கள்.”இதையெல்லாம் ஏன் உங்க அம்மாகிட்டச் சொல்லல?” என்று கேட்டான் தர்மா.”அவங்க குணம் உங்களுக்குத் தெரியாது சார். ரொம்பப் பாசிட்டிவ் பர்ஸன். நாங்க சொல்றதை உதறித் தள்ளிட்டு அடுத்த வேலையைக் கவனிக்கப் போயிடுவாங்க.””ம்… உங்க அப்பாகிட்டயாவது சொல்லியிருக்கலாமே. அவர் போலீஸ் உதவியை நாடியிருப்பார். ஏதாவது செய்திருப்பார். ஏன் எங்களைத் தேடி…””அப்பாகிட்ட எப்படிச் சொல்றது?” இடைமறித்தான் அவினாஷ். “இந்தக் கொலைமுயற்சிகளே அவர்தான் செய்யறார் என்னும்போது!”

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: