உயிரா உயிலா எடுத்துச்செல்ல!

சாய்ரேணு சங்கர்

4

4.1

தர்மா மெதுவாகத் தன்யாவைத் திரும்பிப் பார்த்தான். தன்யா நேரே பார்த்துக் கொண்டு காரைச் செலுத்தினாள். “பின்னால் பார்க்காதே” என்றாள்.

“ஆளை மடக்கிடுவோமா?” என்றான் தர்மா.

“நாட் நெசசரி. நாம யாருன்னு தெரிஞ்சுக்கத்தான் வரான்னு நினைக்கறேன். தெரிஞ்சுண்டு போகட்டும், ஆனா ஆள் யாருங்கறதை நாமும் தெரிஞ்சு வெச்சுக்கணும்” என்றாள் தன்யா.

“TN-19 5649” என்றாள் தர்ஷினி. தர்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவள் எப்போது, எப்படி எண்ணைக் கவனித்தாள்?

“செங்கல்பட்டு ரெஜிஸ்ட்ரேஷன். அட்ரஸ் வாங்கிடலாம்” தர்ஷினி தொடர்ந்தாள். “அதாவது உண்மை நம்பரா இருந்தா!”

பின்தொடர்ந்தவன் ஆபீஸ்வரை கூட வந்துவிட்டு நிற்காமல் நேரே போய்விட்டான். மூவரும் அறைக்குள் நுழைந்தார்கள்.

“கேம்-ப்ளான்” என்றாள் தர்ஷினி, தன்யாவைக் கைகாட்டி.

“முதல்ல, மஞ்சுவுக்கு ஆபத்து இருக்கு, அதாவது, அவங்க உயிருக்கு ஒருத்தர் அல்லது ஒரு கேங்க் குறிவெக்கறாங்க என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படணும்” என்றாள் தன்யா.

“இப்போ நிரூபணம் ஆகலையா?” என்று கேட்டான் தர்மா வியப்புடன்.

“இதுவரை நடந்த எல்லாமே ஆக்ஸிடெண்ட் மாதிரித்தானே காட்டப்பட்டிருக்கு?” என்றாள் தன்யா.

“அப்போ நம்மை ஃபாலோ பண்ணியவன்?” என்றான் தர்மா.

“இந்தக் கேஸ்க்காகத்தான் நம்மைப் பின்தொடர்ந்தான்னு என்ன நிச்சயம்?”

“அதானே! எத்தனையோ கேஸ், எத்தனையோ எதிரிகளைச் சம்பாதிச்சுட்டோம்” என்றாள் தர்ஷினி.

“ஆமா, சி பி ஐக்கும் மொஸார்ட்டுக்கும் எஃப் பி ஐக்கும் போட்டியா வளர்ந்தாச்சு! இதெல்லாம் ஓவரா தெரியல?” என்றான் தர்மா உஷ்ணமாக.

அவன் வார்த்தைகளை வழக்கம்போல் அலட்சியம் செய்த தன்யா “முதல் பாயிண்ட் நிரூபிக்கப்பட்டுட்டா அப்போ நாம போலீஸ் பாதுகாப்புகூடக் கேட்கலாம்” என்றாள்.

“நமக்கா?” என்றான் தர்மா.

“ஸில்லி! மஞ்சுவுக்கு!”

“இரண்டாவது பாயிண்ட் – யார்? இந்த முயற்சிகளின் பின்னால் இருப்பது யார்? மஞ்சுவின் குடும்பத்தினரா? கொஞ்சம் நம்பக் கஷ்டமாயிருக்கு. காரணம்…”

“டெஸ்பரேஷன்” என்றான் தர்மா. “குழந்தைகளுக்கு ஏதும் ஆனால் பரவாயில்லைன்னு பெற்ற தகப்பனே நினைப்பாரா?”

“அவருடைய பேக்-கிரவுண்டை அலசணும்.”

“அந்த மனோஜ்?”

“அவனோடதும்தான்.”

“மூன்றாவது பாயிண்ட் – ஏன்? மோட்டிவ்” என்று தொடர்ந்தாள் தன்யா.

“இதைத் தனிப் பாயிண்ட்டா பார்க்கற அளவு என்ன இருக்கு? மிகப் பழைய மோட்டிவ் – பேராசை. பணத்தாசை. சொத்து” என்றான் தர்மா.

தன்யாவும் தர்ஷினியும் தலையசைத்ததில் சற்றுத் தயக்கமிருந்தது.

“வெல்?” என்றான் தர்மா.

“நீ சொன்னதுதான் – டெஸ்பரேஷன். அதற்குக் காரணம் வெறும் பணத்தாசையா இருக்க முடியாதே! ஏதோ ஒரு கோபம், பழி இருக்கலாமோ…” தன்யா விட்டத்தை வெறித்தாள்.

“ஊகங்கள், சிந்தனைகள் எல்லாம் பிறகு. முதலில் செயல்” என்றாள் தர்ஷினி.

“அச்யுத்தைக் கூப்பிடு” என்றாள் தன்யா.

4.2

மறுநாள். தன்யாவுக்கு மொபைலில் ஒரு கால் வந்தது. புது நம்பராய் இருக்கவே, வியந்துகொண்டே எடுத்தாள்.

“ஹலோ! நான் மஞ்சு!”

“சொல்லுங்க மேடம்! என்ன விஷயம்? என் அண்ணாகிட்ட பேசணுமா?” என்றாள் தன்யா ஆச்சரியம் மாறாமல்.

“உங்க மூணுபேர் கிட்டயுமே பேசணும்! ப்ளீஸ், கொஞ்சம் வீட்டுக்கு வரமுடியுமா?” என்றாள் மஞ்சு. குரலில் அவளுடைய வழக்கமான அமைதியை மீறி ஒரு வருத்தம் தொனித்தது தன்யாவின் கவனத்திற்குத் தப்பவில்லை.

“ஷூர். உடனே வரோம்” என்று சொல்லி இருவரையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள், “வேலை இருக்கு தன்யா! நீங்க ரெண்டுபேரும் போங்களேன்” போன்ற தர்மாவின் புலம்பல்களை லட்சியம் செய்யாமல்.

மஞ்சுவின் வீட்டில் ஒரு புயல் அடித்திருந்தது என்பது உள்ளே நுழைந்தவுடனேயே புரிந்தது. அவினாஷ், அனன்யா எங்கே என்றே தெரியவில்லை. பாவம், பயந்துகொண்டு எங்கேயாவது பதுங்கியிருந்தார்கள் போலும்!

மஞ்சுவின் வழக்கமான புன்னகை மிஸ்ஸிங். அவர்களை “வாங்க” என்றுகூட அழைக்கவில்லை. உள்ளே நுழைந்ததுமே “ஓகே, உண்மையைச் சொல்லுங்க. நீங்க யார்?” என்றாள் சற்றுக் கோபமாக.

“பார்டன் மீ” என்றாள் தன்யா.

“நீங்க தொழிலதிபர்கள் இல்லை, உங்களுக்கு என் பங்களாவில் எந்த இண்டரஸ்டும் இல்லை. நீங்க துப்பறியறவங்க, கரெக்டா?”

தன்யா புன்னகைத்தாள். “நாங்க துப்பறியறவங்கதான், ஆனா அதற்காக நாங்க சொன்னதெல்லாமே பொய்னு நீங்க சொல்வதை மறுக்கிறேன். என் அண்ணா பெரிய பப்ளிஷர். பாரத் பிரஸ் அவனுடையது. அதற்குச் சற்றுப் பெரிய பில்டிங் இப்போ அவசியமாயிருக்கு…”

“ஆனா நீங்க அதுக்காக என் வீட்டுக்கு வரல, யாரோ ஏதோ சொல்லித் துப்பறிய வந்திருக்கீங்க, கரெக்டா?” என்றாள் மஞ்சு.

தன்யா அவளை ஏறிட்டாள். “மஞ்சு மேடம், உங்களிடம் உண்மையை மறைக்க விரும்பல. ஆமா, நாங்க வந்தது உங்களைக் கொல்ல யாராவது முயற்சி செய்யறாங்களான்னு துப்பறியத்தான்!”

“என்னது? ஐயோ ஐயோ ஐயோ ஐயோ! இந்தக் கொடுமையக் கேட்டியாடா ரமேஷ்! இத்தனைநாளா, நாம ஏதோ இந்த மகாராணியைக் கொடுமை பண்ணிட்டதா தான் ஊரெல்லாம் பரப்பிவிட்டிட்டிருந்தா, இப்போ நாம அவளைக் கொலை செய்யப் பார்க்கறதா வேற சொல்லியிருக்கா! அப்படி என்னடிம்மா உன்னைப் பண்ணிட்டோம்? கத்தியால குத்தினோமா துப்பாக்கியால மிரட்டினோமா?” என்று கையை நீட்டியும் மடக்கியும் பல அபிநயங்களைச் செய்தவாறே ரமேஷின் அம்மா வெளியே வந்தாள்.

“கத்தியால குத்தல, துப்பாக்கியால மிரட்டல, ஆனா விஷம் வெச்சிருக்கீங்க” என்றாள் தர்ஷினி மெதுவாக.

எல்லோரும் அவள் பக்கம் திரும்பினார்கள்.

“என்னடி நீலி சொல்ற? நான்… நானா விஷம் வெச்சேன்?” என்று தடுமாறினாள் ரமேஷின் அம்மா.

தர்ஷினி புன்னகைத்தாள். “சில நாட்களுக்கு முன்னால் மஞ்சு மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு மயங்கி விழுந்தாங்க…”

“…அது ஃபுட் பாய்சனிங்” இடைமறித்தான் உள்ளேயிருந்து வெளிவந்த ரமேஷ்.

“ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன், அது ஃபுட் பாய்சனிங் இல்லை, ஆர்சனிக் பாய்சனிங். உங்க டாக்டர் கிட்ட நாங்க தெளிவா டிஸ்கஸ் பண்ணியாச்சு. இந்தச் சந்தேகம் அவருக்கு முன்பே வந்து உங்க மனைவி கிட்டயும் இதைப் பற்றிச் சொல்லியிருக்காராமே?”

பதிலளிக்க முடியாமல் ரமேஷும் அவன் தாயும் விழிக்க, மஞ்சுவே பதில் சொன்னாள் – “ஆமா சொன்னார். சரி விடுங்க, நான் அதைப் பெரிசா நினைக்கல.”

“எப்படி மேடம் பெரிசா நினைக்காம இருந்தீங்க? தொடர்ந்து நடந்த சம்பவங்களைப் பார்த்தாவது நீங்க முழிச்சுட்டிருக்க வேண்டாமா?” என்றாள் தன்யா.

“என்ன சம்பவம்? சும்மா கயிறு திரிக்காதீங்க” என்றாள் அம்மா.

தன்யா சிரித்தாள். மஞ்சுவைத் தொடர்ந்த அசம்பாவிதங்களை விளக்கினாள்.

“ஹும், நீங்க சொன்னது எல்லாமே விபத்துகள். யாருக்குமே நடக்கக் கூடியது. உடனே அதான் சாக்கு, அத்தரிமாக்குன்னு நீங்க துப்பறிய வந்துடறதா? யார் சொல்லி நீங்க இப்படியெல்லாம் செய்து என் மனைவி மனசைக் கலைக்கறீங்க?” என்று கோபத்துடன் கேட்டான் ரமேஷ்.

“ஏண்டா, இதுகூடவா உனக்குப் புரியல? இவங்களை வரச் சொன்னது வேற யாரும் இல்லடா, உன் தர்மபத்தினியேதான்! இந்த மாதிரி உன்மேல ஏதாவது பழி போட்டுட்டா, அப்புறம் அவளுக்கு டைவர்ஸ் ஈசியா கிடைச்சுடும், அவ காதலனோடச் சேர்ந்துக்கலாம் பாரு, அதான் இவங்களைக் கூட்டுச் சேர்த்துக்கிட்டு இப்படியெல்லாம் ஆட்டம் போடறா!” என்று வெறிபிடித்தவள்போல் பேசினாள் ரமேஷின் அம்மா.

“அத்தை, நாக்கில் நரம்பில்லாம இப்படியெல்லாம் பேசாதீங்க” என்றாள் மஞ்சு கண்ணீருடன்.

“சரிதாண்டி, நான் சொல்றதை இல்லேன்ன்னு நிரூபிடீ பார்க்கலாம்! கோடி கோடியாய்ப் பணத்தை வெச்சுக்கிட்டு புருஷனுக்கு ஒரு அத்தியாவசியம் வந்தபோது அம்பது லட்ச ரூபா தரமாட்டேன்னு சொன்னவ தானேடி நீ! அதுவே உன் தம்பி திருட்டுத்தனம் பண்ணி மாட்டிக்கிட்டபோது அவனுக்காக உருகி உருகிப் பணத்தைக் கொண்டுபோய்க் கொட்டினே!”

“அது எங்க அப்பா பணம் அத்தை. அவனுக்குத் தரமாட்டேன்னு எப்படிச் சொல்லுவேன்? இவருக்கும் தரமாட்டேன்னு சொல்லல. எதுக்காக அவ்வளவு பணம் வேணும்னு கேட்டேன். அவர் பிஸினஸ்ல நானும் ஹெல்ப் பண்றேன்னு சொன்னேன், இது தப்பா?”

“ஆமாண்டி, பிஸினஸ் நல்லா நடந்தா அது உன்னாலதான்னு உனக்குப் பேர் கிடைக்கணும், எங்கே என் பிள்ளை பேர் வாங்கிடுவானோன்னு உனக்குப் பயம். ஏய், உன் குணம் தெரியும்டி எனக்கு. வயசுவந்த குழந்தைகளை வெச்சுக்கிட்டுப் புருஷனை விட்டுட்டு வேறு ஒருத்தனோடப் போகறதுக்கு ப்ளான் பண்றவ தானேடி நீ! இந்தக் கேவலமான காரியத்துக்கு உதவ உனக்கு டிடெக்டிவ்ஸ் வேற!” பொரிந்து தள்ளினாள் ரமேஷின் அம்மா.

“ஹலோ, கொஞ்சம் வார்த்தைகளை அளந்து பேசுங்க” என்றாள் தர்ஷினி. “எங்களைத் துப்பறியச் சொன்னது இவங்க இல்லை.”

“வேறென்ன சொல்லுவ நீ? இவ இல்லைன்னா வேற யாரு? அவ தம்பியா? ஆம்பிள்ளையா லட்சணமா வீட்டுப் பொண்ணை அடக்கி வைக்கத் துப்பில்லாம அவளுக்குக் கால் பிடிக்கறான். உங்கப்பனைப் பற்றிச் சொல்லவே வேணாம். என் பிள்ளைகளெல்லாம் அப்படிக் கிடையாது. அவங்க மானஸ்தங்க! ஏன், இவ பிடிச்சிருக்கற டிடெக்டிவ்வைப் பாரு! அவனும் தங்கச்சிங்களுக்குத் தொண்டூழியம் பண்ணுறான்! வெட்கமாயில்ல உங்களுக்கெல்லாம்!” என்று உறுமினாள் அம்மா.

தர்ஷினிக்கு முகம் சிவந்தது. கோபத்துடன் ஏதோ சொல்லப் போனவளைத் தர்மாவின் கை தடுத்தது. திரும்பி அவனைப் பார்த்தாள். தர்மாவின் முகத்தில் புன்னகை மாறவேயில்லை. “விடு, பேசட்டும்” என்பதுபோல் தலையசைத்தான்.

“சரிதான்மா, ஆறு வருஷத்துக்கு முன்னாடி இவ அப்பன் சாகற சமயத்தில் உயில் எழுதினாரே லட்சணமா! தன் மகனுக்குச் சொத்துக் கொடுக்க வேண்டாம்னு நினைச்சார். சரி, அவன் ஒரு தறுதலை. அப்போ மாப்பிள்ளை பேர்லதானே எழுதியிருக்கணும்! இவ பெரிய அறிவுக் கொழுந்துன்னு இவ பேர்ல எழுதினார். என் பேர்ல எழுதியிருந்தா எனக்கும் பிரச்சனையில்லை, இவ கொழுப்பும் அடங்கியிருக்கும்” என்றான் ரமேஷ்.

“மிஸ்டர் ரமேஷ்” மிக அமைதியாக, இயல்பாகத் தன்யாவின் குரல் ஒலித்தது. “நாங்க டிடெக்டிவ்ஸ்னு நீங்க எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்க?”

ரமேஷ் தடுமாறினான். பிறகு “உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்” என்றான்.

“சதுரா டிடெக்டிவ் ஏஜன்சி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீங்க. நாங்கதான் சதுரா டிடெக்டிவ் ஏஜன்சிக்காரங்கன்னு எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்க? மஞ்சுவுக்காகத் துப்பறிய வந்திருக்கோம்னு எப்படி ஊகிச்சீங்க?”

ரமேஷ் வார்த்தை வராமல் சற்றுத் தவித்துவிட்டு “விசாரிச்சேன்” என்றான்.

“எப்படி? ஒரு ஆளை எங்களை ஃபாலோ பண்ண வெச்சு, நாங்க எங்கே போகறோம்னு பார்த்துக் கண்டுபிடிச்சீங்க, இல்ல? TN-19 5649 – போலி நம்பர் போட்ட பைக். அதுவே 5469, உங்க பழைய பைக். இப்போதான் கார் வாங்கிட்டீங்களே” என்றாள் தன்யா.

“அவனோட பைக்குக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று ஆரம்பித்தாள் அம்மா. தன்யா அவளைச் சட்டை செய்யாமல் நேரே ரமேஷையே பார்த்துப் பேசினாள். “மிஸ்டர் ரமேஷ், உங்க கம்பெனி திவாலாகற நிலையில் இருக்கு. அதோடு வரி ஏய்ப்புப் பண்ணியிருக்கறதா உங்க மேல ஆக்‌ஷன் எடுத்துக்கிட்டிருக்காங்க. பணத்தைக் கட்டறது ஒண்ணுதான் நீங்க தண்டனையிலிருந்து தப்ப வழி. அதைச் சொல்லாம நீங்க மஞ்சு மேடம் கிட்ட பிஸினஸ்க்குப் பணம் வேணும்னு கேட்டிட்டிருக்கீங்க. நாங்க ரியல் எஸ்டேட் ஆக்டிவ்வா இல்லாத இந்தக் காலத்தில் வீடு வாங்கறதா சொல்லி இங்கே வந்ததுமே நாங்க போலீஸோ, என்ஃபோர்ஸ்மெண்ட் ஆளுங்களோ என்றெல்லாம் சந்தேகம் உங்களுக்கு வந்துருச்சு. அதைக் கன்ஃபர்ம் பண்ண உங்க ஆளைப் பைக்கில் அனுப்பினீங்க.

“நாங்க ப்ரைவேட் டிடெக்டிவ்ஸ்னு தெரிஞ்சதும் உங்களைப் பற்றித் தெரிஞ்சுக்க மஞ்சு மேடம் எங்களை அப்பாயிண்ட் பண்ணியிருப்பாங்களோன்னு பயம் உங்களுக்கு. அதைத் தெரிஞ்சுக்கத்தான் மஞ்சு மேடம்மைக் குத்திக்காட்டிப் பேசி அவங்க மூலம் எங்களை இப்போ வரவழைச்சிருக்கீங்க, சரியா?”

ரமேஷ் பிரமித்து நின்றான்.

“லிஸன், உங்க மிரட்டல்கள் எங்களை ஒண்ணும் செய்யாது. மஞ்சு மேடம் பாதுகாப்பு விஷயத்தில் எங்க தலையீடு தொடர்ந்துட்டுத்தான் இருக்கும். அவங்களுக்கு நடந்த சம்பவங்களில் உங்க பைக்காரனுக்கோ, உங்களுக்கோ சம்பந்தம் இருக்கறதாகவோ, அல்லது நீங்க அடுத்து ஏதேனும் செய்யறதாகவோ எங்களுக்குத் தெரிய வந்தது, அடுத்த நிமிஷம் எங்களோட இன்னொரு முகத்தைக் காட்டிடுவோம். நீங்களும் குடும்பத்தோட மாமியார் வீட்டுக்குக் குடி போயிடலாம். மஞ்சுவோட அம்மா வீடு இல்லை, கம்பிபோட்ட அசல் மாமியார் வீடு! பீ கேர்ஃபுல்!” என்று உறுமிவிட்டு அங்கிருந்தவர்கள் அத்தனைபேரும் அயர்ந்துபோய் நிற்க, பெருமை மின்னிய முகங்களுடன் தர்மாவும் தர்ஷினியும் தொடர, புயல்போல் வெளியேறினாள் தன்யா.

4.3

“சே! இன்னிக்குப் பூராவும் வேஸ்ட்” என்றாள் தர்ஷினி.

“இவங்க குடும்பச் சண்டை நமக்கு ரொம்பத் தேவை பாரு! நம்மையும் சேர்த்து இழுத்துவிட்டுட்டாங்க. கண்டினுவஸா டீவி ஸீரியல் பார்த்த எஃபக்ட்” என்று எரிச்சல்பட்டாள் தன்யா.

“அப்படி முழுவதுமாக வேஸ்ட்னு சொல்லிட முடியாது…” என்று இழுத்தான் தர்மா. “ரமேஷைச் சரியானபடி வார்ன் பண்ணிட்டோமே. இனிமே அவன் வாலாட்ட மாட்டானு நினைக்கறேன். அது நல்லதுதானே!”

“நல்லதுதான், இதையெல்லாம் செய்யறது ரமேஷா இருந்தா!”

“என்னது? அந்த பைக்காரன்…”

“…ரமேஷ் ஏற்பாடு செய்தவன்தான். ஆனா அதை வெச்சு இதையெல்லாம் செய்யறது ரமேஷ்தான்னு நிரூபிக்க முடியாது” என்றாள் தன்யா.

“இவ்வளவு நேரச் சண்டையில் ஒரு சின்ன நூல் கிடைச்சிருக்கு. அதைப் பற்றித் தெரிஞ்சுக்க நீதான் ஹெல்ப் பண்ணணும் தர்மா” என்றாள் தர்ஷினி.

“சின்ன நூலா?” என்றான் தர்மா குழப்பத்துடன்.

தர்ஷினி சிரித்தாள். “மஞ்சுவின் காதலன்” என்றாள்.

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: