உயிரா உயிலா எடுத்துச் செல்ல!

சாய்ரேணு சங்கர்

3

3.1

“இதான் எங்க பூர்வீக வீடு” மஞ்சு சொல்லும்போது அவர்கள் அரைமணி நேரம் பிரயாணம் செய்திருந்தார்கள். “எங்க தாத்தா காலத்திலேயே இடம் வாங்கியாச்சு – அஞ்சு ஏக்கர். அப்போ சின்னப் பண்ணை வீடா இருந்ததை என் அப்பா ரீமாடல் பண்ணிப் பெரிசா கட்டினார்.”

சுற்றியிருந்த இடம் தரிசாகக் கிடந்தது. வீட்டைச் சுற்றிப் பெரிய தோட்டம் இருந்திருக்க வேண்டும். இப்போது அதெல்லாம் பராமரிக்கப்படாமல் காடுபோலக் காட்சியளித்தது.

வாயிற்கதவா அது? கோயிற்கதவு போலக் காட்சியளித்தது. சுவற்றில் இருந்த ராட்சஸ சைஸ் ஸ்விட்சில் கைவைக்க, உள்ளே டிங்டாங் என்று சப்தம் ஒலித்தது.

உடனே கதவு திறந்து நின்ற இளைஞனுக்கு மனோஜ் வயது இருக்கலாம். “சித்தி எப்படி இருக்காங்க சுதாகர்?” என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தாள் மஞ்சு.

“இப்போ பரவாயில்லைக்கா” என்ற சுதாகரின் பதிலைக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தவர்கள் பார்வையில் முதலில் பட்டது பிரம்மாண்டமான ஹாலில் தெரிந்த சக்கர நாற்காலி. அதன்மேல் அவள் – மஞ்சுவின் சித்தி சாதனா.

நிச்சயம் வயது அறுபதைத் தொட்டிருக்க வேண்டும். சரோஜாதேவி சாயலில் கவர்ச்சிகரமான முகம். தேன் நிறத்தில் கண்கள். நீண்ட தலைமுடியைப் பின்னிக் கீழே தொங்கிய குஞ்சலம்.

“வாம்மா மஞ்சு. அடிக்கடி வந்துபோனேன்னா எங்களுக்கும் மனசுக்கு ஆறுதலா இருக்கும்… என்ன செய்யறது? உனக்கு ஆயிரம் வேலை. ஆம்பிள்ளைங்க வேலையையும் சேர்த்து நீயே பார்க்க வேண்டியதிருக்கு” சித்தியின் குரலில் கிண்டல் இருக்கிறதோ என்று கூர்ந்து கவனித்தாள் தன்யா. இல்லை, அதில் பரிதாபம்தான் தெரிந்தது.

“சரி விடுங்க சித்தி. இவங்க நம்ம வீட்டைப் பார்ப்பதற்காக வந்திருக்காங்க…”

“இந்த வீட்டை விற்கப் போறியா?” முதல் தடவையாய் சித்தியின் குரலில் கலவரம், மெலிதான கோபம்.

“எனக்குக் கொடுக்க இஷ்டமேயில்லை சித்தி. இவங்கதான் பிடிவாதமா பார்த்துட்டுப் போறேன்னு வந்திருக்காங்க. பார்ப்போமே, நமக்கு ரேட் சரியா வந்தா இதைக் கொடுத்துட்டு ஒரு வீடு வேளச்சேரியிலேயே வாங்கிடலாம் – உங்க பேரிலோ, அல்லது சுதாகர் பேரிலோ…” சித்தியின் முகம் மலர்ந்தது.

“சரிம்மா, நீ எது செய்தாலும் சரியாதான் இருக்கும். பக்கத்தில் நாங்க இருந்தா நல்லதுதானே, உனக்கும் ஆறுதலா இருக்கும்” என்றாள் சித்தி வாயெல்லாம் பல்லாக.

சுதாகர் கூடவர, வீட்டைச் சுற்றிப் பார்த்தார்கள். வீட்டின் கம்பீரம் பிரமிக்க வைத்தது.

“எப்படி இவ்வளவு பெரிய வீட்டை இவ்வளவு நீட்டா மெயிண்டெயின் பண்றீங்க?” தர்மா உண்மையான ஆச்சரியத்துடன் கேட்டான்.

“நல்ல வேலைக்காரங்க இருக்காங்க சார். அக்காதான் அவங்களை அப்பாயிண்ட் பண்ணினா. சமையலுக்கு ஒரு லேடி, அம்மாவைப் பார்த்துக்க ஒருத்தங்க, தவிர வீட்டு வேலைக்கு ஒரு பொண்ணு” என்றான் சுதாகர்.

“இவர் யார் ட்ரைவரா?” என்று கேட்டாள் ஒரு அறைக்குள் எட்டிப்பார்த்த தர்ஷினி.

“யாரு? ஓ, அவரா? இல்லைங்க, அவர் பேஷண்ட் அட்டெண்டர், ஹாஸ்பிடல்லேர்ந்து அனுப்பிச்சிருக்காங்க” என்றான் சுதாகர். அவர்கள் புரியாமல் முகம் சுருக்குவதைக் கண்டதும் “இந்தச் சின்ன ரூமுக்கு அடுத்து ஒரு ரூமிருக்கு. அதிலே எங்க ரிலேட்டிவ் ஒருத்தர் இருக்காரு. தூரத்துச் சொந்தம்தான். அக்காகிட்ட ஏதோ ஹெல்ப் கேக்கறதுக்காகப் பட்டணத்துக்கு வந்திருக்கார், இங்கே கோவிட் அட்டாக் ஆகிடுச்சு. அக்காவுக்கு ஆஸ்பத்திரியிலிருந்து விவரம் தெரிவிச்சிருக்காங்க. அக்கா அவரை இங்கே வெச்சுப் பார்த்துக்க ஏற்பாடு பண்ணியிருக்காங்க. ஃப்ளாட்ல வெச்சுப் பார்க்க முடியாதே. இதுக்கே எங்க அத்தான் அக்காவை வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாரு” என்றான் சுதாகர்.

“இப்ப எதுக்குடா அதெல்லாம்?” என்றாள் மஞ்சு, அவனை எச்சரிப்பதுபோல.

அந்நியர்களுக்கு எதிரில் குடும்ப விஷயத்தைப் பேசிவிட்டோம் என்று உணர்ந்தவனாகத் தலைகுனிந்தான் சுதாகர்.

தர்மா, தன்யா, தர்ஷினி மஞ்சுவைப் பார்த்த பார்வையில் மரியாதை கூடியிருந்தது.

3.2

“அடுத்து மேல்மாடியிருக்கு – மொட்டை மாடிதான், ஆனா ரெண்டு, மூணு ரூமிருக்கு. நடுவில் சின்ன ஹால் ஒண்ணு, வாட்டர் டாங்குகள்…” என்றாள் மஞ்சு.

“அப்பாடி… ஏற்கெனவே ரெண்டு மாடி பார்த்தாச்சு, இனிமே என்னால் ஏற முடியாது” என்றாள் தன்யா.

“மேடம், நீங்க வேணா என் ஸிஸ்டர்ஸோட கீழே வெயிட் பண்ணுங்க. நான் சுதாகரோட போய் மொட்டை மாடியைப் பார்த்துட்டு வந்துடறேனே” என்றான் தர்மா, தன்யாவின் பார்வையைப் புரிந்துகொண்டவனாக.

“ஓகே” என்றாள் மஞ்சு. பெண்கள் கீழே போக, சுதாகர் தர்மாவை அழைத்துக் கொண்டு படியேறினான்.

“வாவ்! என்ன காற்று” என்றான் தர்மா.

“இங்கேர்ந்து பார்த்தா ரத்ன விநாயகர் கோயில் கோபுரம் தெரியும். அதோ அந்தப் பக்கம்…” என்று சுதாகர் சுற்றிலும் தெரியும் முக்கியமான இடங்களைக் காட்டினான்.

“சுதாகர், இந்த இடத்தை நாங்க வாங்கறதில் வில்லங்கம் ஒண்ணும் வராதே” என்று கேட்டான் தர்மா.

“ஒரு வில்லங்கமும் கிடையாது. ஏன் கேட்கறீங்க? நானும் என் அம்மாவும் காலி பண்ணிக் கொடுக்காம பிரச்சனை பண்ணிடுவோம்னு நினைக்கறீங்களா? எங்களுக்கு ஆக்சுவலா இந்த வீடு கஷ்டமாதான் இருக்கு. சிட்டிலேர்ந்து தள்ளியிருக்கறது ஆஃபீஸ் போக, வரத் திண்டாட்டமாயிருக்கு. மூணு பஸ் மாறி வர வேண்டியிருக்கு” என்றான் சுதாகர்.

“ஸோ இந்த வீட்டை விற்பதில் உங்களுக்கு இஷ்டந்தான்.”

“இஷ்டந்தான். ஆனாலும் என் இஷ்டத்தில் என்ன இருக்கு? இந்த வீட்டோட ஓனர் என் அக்கா.”

“ஓ…” என்று இழுத்து நிறுத்தினான் தர்மா.

அவன் எண்ணியது போலவே சுதாகர் மேலும் பேச ஆரம்பித்தான். “என் அப்பாக்கு என் அக்கான்னா உயிர். தாயில்லாத பொண்ணுன்னு பரிதாபம் வேற. அதனால எல்லா சொத்துகளையும் அவர் காலத்துக்கப்புறம் அவளுக்கே சேரணும்னு எழுதிட்டாரு. அவர் உயிரோட இருக்கும்போதே பவர் ஆஃப் அட்டர்னி என் அக்கா பேர்லதான் இருந்தது…”

“இது உங்களுக்கு வருத்தமில்லையா?”

“வருத்தம்தான். ஆனா எங்கக்கா ரொம்ப நல்லவ. அப்பாவுக்கு என் மேல சில மனவருத்தங்கள் இருந்தது. அப்பா காலத்திற்கப்புறம் நான் ஒரு போலீஸ் கேஸ்ல மாட்டிக்கிட்டேன். எவ்வளவோ பணம் செலவழிச்சு எனக்குக் குறைவான தண்டனை கிடைக்கும்படி செய்தா. அப்புறம்… வேலை கிடைக்காம அல்லாடிக்கிட்டிருந்தவனுக்கு அவளுடைய சிபாரிசின் பேர்ல வேலை வாங்கிக் கொடுத்தா. இந்த வீட்டிலேயே எங்களை இருக்க வெச்சு, மாசம் இருபத்தி ஐயாயிரம் ரூபா கொடுக்கறா. இல்லேன்னா என் சம்பளத்தில் உடம்புக்கு முடியாத அம்மாவை வெச்சுக்கிட்டு இந்தப் பட்டணத்தில் என்னால காலந்தள்ள முடியுமா சொல்லுங்க? எங்களை இந்தப் பெரிய வீட்டில் தங்க அனுமதிச்சதுக்கு என் அத்தானுக்குக் கூடக் கோபந்தான்… அதுவும் இப்பல்லாம் எதுக்கெடுத்தாலும் அக்காவோட சண்டை. பாவம் அக்கா” என்று பேசிக்கொண்டே போனான்.

“இந்த வீட்டை விற்கும்போது உங்க அத்தான் கையெழுத்துப் போடமாட்டேன்னு ஏதாவது பிரச்சனை பண்ணுவாரா?” என்று கேட்டான் தர்மா.

“அவர் யாருங்க பிரச்சனை பண்றதுக்கு? நாந்தான் சொன்னேனே சொத்துகள் எல்லாம் அக்கா பேர்ல இருக்குன்னு” என்றான் சுதாகர்.

“ஐ ஸீ… ஓகே, ரொம்ப தாங்க்ஸ் – எனக்கு வீட்டைச் சுற்றிக் காட்டினதுக்கும், எல்லாம் எக்ஸ்ப்ளெயின் பண்ணினதுக்கும்” என்றான் தர்மா.

“சார், உங்க பப்ளிகேஷன்ல ஏதாவது வேலை இருந்தா என்னைக் கன்சிடர் பண்ணுவீங்களா? என்னடா வீட்டில் வெச்சுக் கேட்கறேனேன்னு நினைக்காதீங்க” என்று தயங்கியவாறே சொன்னான் சுதாகர்.

“நோ ப்ராப்ளம். இந்தாங்க என் கார்ட். லாக்டவுனெல்லாம் முடிஞ்சப்புறம் என்னை ஆஃபீஸ்ல வந்து பாருங்க” என்று சொல்லிக் கிளம்பினான் தர்மா.

3.3

மஞ்சுவை வீட்டில் விட்டுவிட்டு அவர்கள் விடைபெற்றுக் கிளம்பும்போது மாலையாகிவிட்டிருந்தது.

“நடந்ததெல்லாம் கொலை முயற்சின்னு முழுமையா நிரூபணம் ஆகாட்டியும், அந்தக் குழந்தைகள் சந்தேகப்படுவதில் அர்த்தம் இருக்குன்னு நினைக்கறேன்” என்றான் தர்மா.

“ரமேஷ் மேல சந்தேகம் வருது. அவர் தம்பி மேலயும் வருது. இந்தக் காலச் சீரியல்களை நம்பலாம்னா அவங்க அம்மா மேலயும் வருது” என்று சொல்லிச் சிரித்தாள் தர்ஷினி.

“சும்மா இரு. இந்த மாமியார்களெல்லாம் பிள்ளையைத் தூண்டி விடறதோட சரி. இவ்வளவு கிரிமினலா எல்லாம் வேலை செய்ய மாட்டாங்க. டீவி சீரியல்லாம் மிகைப்படுத்திச் சொல்றாங்க” என்றான் தர்மா.

“நீ என்ன நினைக்கறே தன்யா? உனக்கு யார் மேல சந்தேகம்? தன்யா… ஏய் தன்யா… எங்கே வேடிக்கை பார்த்துண்டிருக்க? சொல்லு, உனக்கு யார் மேல சந்தேகம்?” என்று தன்யாவை உலுக்கிக் கேட்டாள் தர்ஷினி.

“நாம கிளம்பினதில் இருந்தே நம்மை ஃபாலோ பண்ணிண்டு வரானே, அந்த பைக் காரன் மேலேதான் சந்தேகம்” என்றாள் தன்யா.

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: