உயிரா உயிலா எடுத்துச்செல்ல!

சாய்ரேணு சங்கர்

5

5.1

“சார், வரச் சொன்னீங்களே!” என்றவாறே உள்ளே நுழைந்தான் சுதாகர்.

“ஆமா, ஒரு வேலை காலியிருக்கு. உங்களுக்குக் கம்ப்யூட்டர் டெஸ்க்டாப் பப்ளிஷிங்கில் என்ன ஸாஃப்ட்வேர் தெரியும்?” என்று கேட்டான் தர்மா.

“சாரி சார், நான் அக்கவுண்ட்டிங்கில் இருந்தவன். எனக்கு எம் எஸ் வேர்ட், எக்ஸல் இது ரெண்டும்தான் தெரியும்” என்றான் சுதாகர் தயக்கத்துடன்.

“அப்போ மானேஜ்மெண்ட்டில்தான் பார்க்கணும். சரி, நான் கவனம் வெச்சுக்கறேன்” என்று தர்மா கூறியதும் சுதாகர் “அப்போ நான் வரட்டுமா சார்?” என்று எழுந்தான்.

“உட்காருங்க சுதாகர், டீ சாப்டுட்டுப் போகலாம்” என்றதும் அமர்ந்தான்.

“அப்புறம் உங்க அத்தான் எதுவும் பிரச்சனை பண்ணலியே” என்றான் தர்மா.

“அவருக்கு என்ன சார் வேலை? என் அக்காவை ஏதாவது சொல்றதேதான் வேலை” என்றான் சுதாகர்.

“நான் ஒண்ணு கேட்கலாமா? உங்க அக்காவும் அத்தானும் லவ் மாரியேஜ் தானே? அவங்களுக்குள் இவ்வளவு பிரச்சனைக்குக் காரணம் உங்க அக்காவுக்குத் திடீர்னு கிடைத்த சொத்தா இருக்குமோ?”

சுதாகர் யோசித்தான். “அப்படிச் சொல்ல முடியலை சார். என் அப்பா போய் ஏழு வருடங்கள் முடிஞ்சிடுச்சு. அதுக்கும் சில வருடங்கள் முன்னாலிருந்தே சொத்தெல்லாம் அப்பா அக்காவுக்குப் பவர் ஆஃப் அட்டர்னி பண்ணிக் கொடுத்துட்டார். அவ கல்யாணம் ஆகும்போதே எல்லாம் அவ மானேஜ்மெண்ட்டில்தான் இருந்தது. நான் நினைக்கறேன், அந்த ஆனந்த் விவகாரம்தான் அவங்களுக்குள் ஒரு பிளவை ஏற்படுத்திருச்சுன்னு…”

“ஆனந்த்…”

“அக்கா காலேஜில் படிச்சிட்டிருந்த காலத்தில் அக்கா பின்னாடியே திரிஞ்சவன். அக்காகிட்டச் செருப்பால அடிவாங்கினவன். அப்புறம் சில வருஷங்கள் அவன் ஊரிலேயே இல்லை. திரும்பி வந்தபோது என் அக்காவுக்கும் ரமேஷுக்கும் கல்யாணம் ஆகியிருந்தது. என் அக்கா அவனுக்குத் துரோகம் செஞ்சுட்டதா சொல்லி அவளைப் பழிவாங்கத் துடிச்சான். என் அத்தானைக் கொல்லவும் பார்த்தான். நல்லவேளையா அரிவாள் வெட்டுக் கழுத்தில் விழாம, தோளில் விழுந்தது. அத்தான் ஒரு மாசம் ஆஸ்பத்திரியில் இருந்தாரு. இவன் கொலை முயற்சின்னு ஜெயிலுக்குப் போனான். இப்போ சமீபத்தில்தான் ரிலீஸ் ஆனான்.

“அவன் என் அக்காவை வந்து பார்த்து, ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவன்ங்கறதால அவனுக்கு எங்கேயும் வேலை கிடைக்கலைன்னும், தனக்குப் பெரிய அமவுண்ட்டா அக்கா கொடுத்துட்டா எங்கேயாவது வெளிநாட்டிலோ, வடக்கேயோ போய்ப் பொழச்சுக்கறதா சொன்னான்…”

“ரொம்ப நல்லாயிருக்கே! உன் அக்கா எதுக்கு அவனுக்குப் பணம் கொடுக்கணும்?”

“அக்கா மாட்டேன்னுதான் சொன்னா. அந்தப் பாவி ரமேஷ்கிட்டயும் அவர் அம்மாகிட்டயும் என்னவோ போட்டுக் கொடுத்துட்டுப் போயிட்டான். அதிலிருந்து அவங்க ரெண்டுபேரும் என் அக்கா ஆனந்தோட ஓடிப் போகப் பார்க்கறான்னு சொல்லி அவளை டார்ச்சர் பண்றாங்க சார். பாவம் அக்கா! தன் கஷ்டம் எதையும் வெளியே காட்டிக்காமச் சிரிக்கறா. இப்படி ஒரு வாழ்க்கை வாழறதுக்குச் செத்துப் போயிடலாம் சார்!” கண்களில் கண்ணீர் துளிர்த்தது சுதாகருக்கு.

“ஐ ஆம் சாரி. உங்க துக்கத்தைக் கிளறிவிட்டுட்டேன். டீயைக் குடிங்க” என்றான் தர்மா, உண்மையிலேயே மனம் வருந்தியவனாக.

“பரவாயில்லை சார்” என்று சொல்லிவிட்டு டீயை அருந்தினான் சுதாகர்.

“கடைசியில் அந்த ஆனந்த் என்னதான் ஆனான்?”

“தெரியலை சார். இனிமே என்ன, அவன் நினைச்சபடி என் அக்காவைப் பழிவாங்கிட்டான். எங்கேயாவது கல்ஃப் கன்ட்ரீஸ் பக்கம் போய்த் தொலைஞ்சிருப்பான்னு நினைக்கறேன்” என்றான் சுதாகர்.

இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டான் தர்மா. அல்லது அமெரிக்கா போயிருக்கலாம். வடநாட்டில் எங்காவது செட்டில் ஆகியிருக்கலாம். சொந்த ஊர்ப்பக்கம் சென்றிருக்கலாம்.

அல்லது, இங்கே – சென்னையிலேயே – இருக்கலாம்.

5.2

“ஐ ஸீ” என்றாள் தன்யா, தர்மா கூறியதைக் கூர்மையாகச் செவிமடுத்துவிட்டு.

“அவன் பழிவாங்கிட்டதா சுதாகர் சொல்றான். ஆனா ஒருவேளை அவன் திருப்தி அடைஞ்சிருக்கலேன்னா? இந்தக் கொலை முயற்சிகளில் தெரியும் ஆத்திரம், ஒரு கோபமான அவசரம்… ஆனந்தோட ஒத்துப்போகுதில்லையா?”

“தன்யா, ஆனந்தைக் கண்டுபிடிக்க வேண்டியது முதல் ப்ரையாரிட்டி” என்றாள் தர்ஷினி.

தன்யா பதில் சொல்வதற்குள் ஒரு இளைஞன் அறைக்குள் நுழைந்தான்.

“வா, அச்யுத்” என்றாள் தன்யா.

“மஞ்சு மேடம் வீட்டில்தான் இருக்காங்க. அவங்களை க்ளோஸா வாட்ச் பண்ணிட்டிருக்கேன். நீங்க வரச் சொன்னதால்தான் வந்தேன்” என்றான் அச்யுத்.

அச்யுத்?

சதுராவில் புது வரவு. துடிப்பான இளைஞன். தகவல் சேகரிப்பதில் மன்னன். பாதுகாப்புக்கோ, தகவலுக்கோ, யாருமறியாமல் பின்தொடர்வதில் ஸ்பெஷலிஸ்ட்.

“நீ ரமேஷ் பற்றிக் கொடுத்த தகவல்கள் ரொம்பப் பயனுள்ளதா இருந்தது அச்யுத். இன்னொருவர் பற்றின தகவல்கள் வேணும். குறிப்பா, அவர் இப்போ எங்கே இருக்கிறார் என்பது” என்ற தன்யா, ஆனந்த் பற்றிய விவரங்களைச் சொன்னாள்.

“எஸ், மிஸ் தன்யா” என்று சொல்லி வெளியேறினான் அச்யுத்.

5.3

ஆனந்த் பற்றிய தகவல்கள் சுவாரசியமாக இருந்தன. ஆரம்பத்திலிருந்தே காலேஜில் கோபக்காரன், ரௌடி என்று பெயர் வாங்கியவன். சஸ்பென்ஷன் பலமுறை பார்த்தவன். ஒரு முறை காலேஜை விட்டே வெளியில் அனுப்பப்பட்டு, அரசியலில் சாய்கால் இருந்த அவனுடைய மாமாவால் காப்பாற்றப்பட்டவன்.

காலேஜ் முடியும் தருவாயில் கஞ்சாவோடு போலீஸில் பிடிபட, மாமா கேஸை உடைத்து அவனை மும்பைக்கு அனுப்பினார். அப்போது மஞ்சுவிடம் “என்றைக்கானாலும் நீ எனக்குத்தான் சொந்தம். உன்னைச் சீக்கிரமே வந்து பார்க்கிறேன், அதுவரை எனக்காகக் காத்திரு” என்று உருகி உருகிச் சொல்லிவிட்டுப் போனதைக் காலேஜே பார்த்தது.

மஞ்சு அவனைச் சட்டை செய்யவே இல்லை. அவன் ஐந்து ஆண்டுகளில் திரும்பச் சென்னை வந்தபோது அவள் மிஸஸ் ரமேஷ் ஆகியிருந்தாள்.

அதன்பிறகு நடந்ததுதான் அந்த அரிவாள் வெட்டுச் சம்பவம். சாட்சிகளுக்கு முன்னால் நடந்ததால் ஆனந்தின் மாமாவால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை.

சிறையிலிருந்து விடுதலையாகி வந்து ஆனந்த் ஏதேதோ வேலைகளுக்கு முயன்றான். இரண்டு ஆண்டுகள் நாய்படாத பாடுபட்டான்.

அதன்பின் மஞ்சுவை அவளுடைய சூப்பர்மார்க்கெட் புதிய கிளை திறப்பு விழாவின்போது அகஸ்மாஸ்த்தாய்ப் பார்த்துவிட்டான். அவள் அவனை அடித்துத் துரத்தவுமில்லை, பெரிதாகக் கண்டுகொள்ளவுமில்லை.

அடித்துப் பிடித்து உள்ளே சென்று ரமேஷுக்கு முன்னாலேயே “நான் உன்னை மறக்கவேயில்லை மஞ்சு, என்னோடு வந்துடறியா?” என்று கேட்டிருக்கிறான். மஞ்சு அவனை செக்யூரிட்டியைக் கொண்டு வெளியே தள்ளியிருக்கிறாள்.

பிறகும் அவளைப் பலமுறை தொந்தரவு செய்திருக்கிறான். அவளுக்கும் தனக்கும் தொடர்பு உள்ளதாகப் பலரிடம் சொல்லிப் பார்த்திருக்கிறான். பாவம், மஞ்சுவின் மாமியாரைத் தவிர யாரும் இந்தக் கதையை நம்பவில்லை.

முடிவாகப் பிளாக்மெயிலில் இறங்கியிருக்கிறான். அவளை விட்டு அவன் விலக வேண்டுமெனில், அவள் ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்று மிரட்டியிருக்கிறான். மஞ்சு இதெற்கெல்லாம் மசிபவளே அல்ல. ஏதேனும் வேலை வேண்டுமானால் வாங்கித் தருவதாகவும், வேறு ஏதாவது சொல்லிக் கொண்டு இங்கே வந்தால் அவன் மீண்டும் சிறைக்குப் போக வேண்டியதுதான் என்று எச்சரித்திருத்திருக்கிறாள்.

அதன்பின் ஓராண்டாக அவன் யார் கண்ணிலும் படவில்லை.

அச்யுத் சேகரித்த விவரங்கள்தாம் மேலே காணப்படுபவை. அவற்றை அவன் ரிப்போர்ட் செய்து முடித்ததும் “எல்லாம் சரிதான், இதில் பெரும்பாலானவை எங்களுக்குத் தெரிஞ்சதுதான். முக்கியமா தெரிய வேண்டியது, ஆனந்த் இப்போ எங்கே?” என்று கேட்டாள் தர்ஷினி.

அச்யுத் பதிலளிப்பதற்குள் தன்யாவின் செல்ஃபோன் சிணுங்கியது. எடுத்துப் பார்த்து “அவினாஷ்” என்றவள் வேகமாகக் காலைக் கனெக்ட் செய்தாள். “என்ன அவினாஷ்?” என்றாள்.

“தன்யா, கொஞ்சம் உடனே வரீங்களா? ஜீ வி ஹாஸ்பிடல்ஸ்” என்று அவினாஷின் பதற்றக் குரல் கேட்டது.

“என்ன ஹாஸ்பிடலுக்கா? என்னாச்சு?” என்று பதறினாள் தன்யா.

“அம்மா… இன்றைக்கு மறுபடியும் பண்ணைக்குப் போயிருந்தாங்க, சம்பளம் கொடுக்கறதுக்காக பாங்க்லேர்ந்து ட்ரா பண்ணிய பணத்தோட! யாரோ கத்தியால கண்மண் தெரியாமத் தாக்கியிருக்காங்க, கொண்டுவந்த பணமும் காணாமப் போயிருக்கு” என்றான் அவினாஷ் தழுதழுத்த குரலில்.

“சரி. நாங்க உடனே வரோம்” என்றாள் தன்யா.

காலைக் கட் பண்ணுவதற்குள் தர்ஷினி வாயிற்கதவைத் திறந்துகொண்டிருந்தாள், தர்மா கார்ச் சாவியை எடுத்தான், அச்யுத் ஹெல்மெட்டை அணிந்து கொண்டான்.

தன்யா புன்னகைத்து, வேகமாகக் கிளம்பினாள்.

5.4

“எப்படியிருக்கு மேடம்க்கு?” என்றவாறே ஆஸ்பத்திரி வாயிலிலேயே காத்திருந்த அவினாஷிடம் கேட்டவாறே கார் நிற்பதற்குள் குதித்து இறங்கினாள் தன்யா.

“கொஞ்சம் சீரியஸ்தான்னு சொல்றாங்க…” என்றான் அவினாஷ். தொண்டை கட்டிக் கொண்டிருந்தது அவனுக்கு.

“வா…” என்று சொல்லி உள்ளே ஓடினாள் தன்யா. கூடவே அவினாஷ் வழிகாட்டிக் கொண்டு ஓடினான். மற்றவர்கள் பின்தொடர்ந்தார்கள்.

ஐ சி யூவில் ஆக்ஸிஜன் மாஸ்குக்குக் கீழே தெரிந்த முகத்தை அவர்களுக்கு அடையாளம்கூடத் தெரியவில்லை. கோடிகளில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த தன் தந்தையின் நிறுவனத்தை ஆறே ஆண்டுகளில் நூறு கோடிகளுக்குக் கொண்டுவந்த பெண்ணா இது? “சரி விடுங்க” என்ற இரண்டே வார்த்தைகளில் பெரிய கஷ்டங்களைத் தூக்கியெறிந்த மஞ்சுவா இது?

வெளியே அழுதழுது சிவந்த விழிகளுடன் நின்றுகொண்டிருந்தாள் அனன்யா. “தன்யா, அம்மாவைப் பார்த்தீங்களா? இப்படி ஆக விட்டுட்டீங்களே!” என்று குரல் எழும்பாமல் கதறினாள்.

“அனன்யா, கன்ட்ரோல் யுவர்செல்ஃப் டியர். எத்தனையோ ஆபத்துகளிலிருந்து தப்பிச்ச உன் அம்மா இதிலிருந்தும் எழுந்து வருவாங்க பாரு” என்றான் தர்மா, மயிலிறகு போல் வருடும் குரலில்.

“அனன்யா, அம்மா வீட்டுக்குள் இருக்கும்போது நீங்க ரெண்டுபேரும் மாறி மாறிப் பார்த்துக்கணும், வெளியே போனா உடனே எனக்குத் தெரிவிக்கணும்னு சொல்லியிருந்தேனே, ஏன் என்னிடம் சொல்லல?” என்று கேட்டாள் தன்யா.

“நாங்க எதிர்பாராத ஒரு நேரத்தில் கிளம்பிப் போயிட்டாங்க, எங்களிடம் சொல்லக்கூட இல்லை” என்றாள் அனன்யா.

“டாமிட், உன் அம்மாகிட்டயும் சொல்லியிருந்தேன் என்னிடம் கட்டாயம் சொல்லிட்டுத்தான் வெளியே போகணும்னு. எதில்தான் அலட்சியம் காட்டறதுன்னு கிடையாதா? நான் ஒரு டாம் இடியட், ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டே அச்யுத்தை இவங்க வீட்டைவிட்டு நகர்த்தியது தப்பு!” என்று பொரிந்து கொட்டினாள் தன்யா.

“மிஸ் தன்யா, நீங்க சொன்னபடியே என் ஃப்ரெண்ட் கமல்நாத்தை வீட்டைக் கவனிக்கச் சொல்லி நிறுத்திட்டுத்தான் வந்தேன். அவன் எப்படியோ மிஸ் பண்ணியிருக்கான்” என்றான் அச்யுத்.

அவினாஷ் குறுக்கிட்டு “தன்யா, நீங்க வருத்தப்படாதீங்க. அனன்யா ஏதோ வருத்தத்தில் சொல்லிட்டாளே தவிர, உங்க மேல எங்களுக்கு எந்தக் கோபமும் இல்லை. இந்த லெட்டரைப் பாருங்க, அம்மா ரூம்ல இருந்தது” என்று ஒரு தாளை நீட்டினான்.

தன்யா அதை வாங்கிப் படித்தாள். கிறுக்கல் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது அது.

உன்னைக் கொல்ல நினைப்பது யாரென்று எனக்குத் தெரியும். எதற்காக என்றும் தெரியும். உன் உயிரையும் உன் குழந்தைகளின் உயிரையும் காப்பாற்ற எண்ணினால் என்னை அவசியம் இன்று மாலை நான்கு மணிக்கு உன் பண்ணையில் வந்து சந்திக்கவும். எனக்குப் பணம் தேவை. ஐம்பதினாயிரம் கொடுத்தால் ஆளை ஆதாரத்துடன் பிடித்துக் கொடுக்கிறேன். உன் வீட்டை டிடெக்டிவ்கள் கண்காணிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாமல் வரவும்.

“ஐ ஸீ” என்றாள் தன்யா பெருமூச்சுடன்.

“ரொம்ப சாமர்த்தியமாக உன் அம்மாவை ஏமாத்தியிருக்காங்க” என்றான் தர்மா.

“அப்போ அவங்க கொண்டுபோன பணம் ப்ளாக்மெயிலருக்குக் கொடுப்பதற்காகவா?” என்று கேட்டாள் தர்ஷினி.

“அதைத் தனியா வெச்சிருந்திருக்காங்க. அதுதவிர, பண்ணையிலயும் அதைச் சேர்ந்த ஹெர்பல் ஃபாக்டரி, ஆஃபீஸ் இங்கெல்லாமும் கொடுக்கப் பத்து லட்சம் ரூபா எடுத்து வெச்சிருந்தாங்க…”

“உங்க கம்பெனியில் பாங்க் ட்ரான்ஸ்ஃபர் பண்றதில்லையா?”

“பண்ணையைச் சேர்ந்த எல்லோருமே இந்தமுறை கேஷா கேட்டாங்க… லாக்டவுன் வந்துட்டா அவங்க பேங்க் போய் ட்ரா பண்றது கஷ்டமாச்சே! பாதிச் சம்பளமாவது கையில் இருந்தா நல்லதுன்னாங்க, அதான்” என்றாள் அனன்யா.

“சரி, அந்தப் பணமும் போச்சா?”

“ஆமா.”

அவினாஷுக்கும் அனன்யாவுக்கும் ஆறுதல் கூறிவிட்டு நால்வரும் வெளியே வந்து சதுரா அலுவலகத்தை அடைந்தார்கள். அச்யுத் அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்த்து நிற்க, தர்மா, தன்யா, தர்ஷினி சிந்தனையில் விழுந்தார்கள்.

இந்தக் கொலை முயற்சி பணத்திற்கா, பழிக்கா?

ஆனந்த் மஞ்சுவைப் பழிவாங்க நினைக்கிறவன். கத்திக்குத்துக் காயங்கள் அந்த எண்ணத்தோடு ஒத்துப் போகிறது. ஆனால் பணத் திருட்டு? ம், அதுவும் சரியாகவே வருகிறது. ஆனந்திற்குப் பணத்தேவை இருந்திருக்கிறது.

“அச்யுத், ஆனந்த் இப்போ எங்கேன்னு உடனே ட்ரேஸ் அவுட் பண்ணணும்” என்றாள் தன்யா, அவர்கள் மூவரின் குரலாக.

அச்யுத் சற்றுத் தயங்கினான். பிறகு “அதைத்தான் மேடம் நான் சொல்ல வந்தேன். அதற்குள்ளே இந்தக் கால் வந்து நாம ஆஸ்பத்திரி போயிட்டதால அதைச் சொல்ல முடியல…”

“வாட் டூ யூ மீன்? ஆனந்தை ட்ரேஸ் பண்ணிட்டியா?”

“ஓ எஸ்…” அச்யுத் மீண்டும் தயங்கினான். “வந்து… ஆனந்த் இப்போ மஞ்சுவோட கணவர் ரமேஷோட கம்பெனியில அஸிஸ்டெண்ட் மானேஜரா வேலை பார்க்கறான்” என்றான். (தொடரும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: