உயிரா உயிலா எடுத்துச்செல்ல! பகுதி 6

சாய்ரேணு சங்கர்

6

6.1

தன்யா “மை காட்” என்றாள். தர்ஷினி “ஃபைனலி!” என்று முணுமுணுத்தாள்.

தர்மா திகைத்து நின்றான். “ஆனந்த்… ரமேஷோட கம்பெனியில்… ஒருவேளை அவனுக்குத் தெரியாமல் இருக்குமோ ஆனந்த் யாருன்னு?” என்றான்.

“என்ன இடியாட்டிக்கா பேசற? ரமேஷுக்கு முன்னாடியே ஆனந்த் மஞ்சுகிட்டத் தப்பா பேசினான்னு நமக்குத் தகவல் வரலை?” என்றாள் தன்யா.

“ஓ, ஆமாம்” என்று தலைகவிழ்ந்தான் தர்மா.

“இட்ஸ் ஓகே” என்றாள் தர்ஷினி. “இப்போ விஷயங்கள் ஒரு பாட்டர்ன்ல சரியா பொருந்தற மாதிரி இருக்கு.”

“என்ன பாட்டர்ன்? ஒரு பெண்ணுக்கு எதிரா அவ கணவனும் முன்னாள் காதலனுமே சேர்ந்து செயல்படறதா? அப்படித்தானே தெரியறது நீங்க சொல்றதைப் பார்த்தா?” என்றான் தர்மா ஆவேசமாக.

“தர்மா, நான் சொல்றதைக் கொஞ்சம் எல்லோரும் கவனமா கேளுங்க. ஆனந்த் மஞ்சுவைக் காதலிச்சிருக்கலாம். ஆனா மஞ்சு அவனை விரும்பவேயில்லை. அவளுடைய நல்ல குணத்தின் காரணமா அவனுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானா செய்திருப்பாளே தவிர, அவனை ஒரு பொருட்டாகூட அவ மதிக்கலை. எனவே ஆனந்தை மஞ்சுவின் காதலன்னு சொல்றதே தப்பு!” என்றாள் தர்ஷினி.

“ஓகே, ஒத்துக்கறேன். ஆனா அப்படி அவன் நினைச்சது உண்மைதானே? அவளைப் பழிவாங்க நினைச்சதும் உண்மைதானே?”

“உண்மையாக இருக்கலாம். ஆனா எப்போ அவன் அவளைப் பணத்துக்காகப் பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்தானோ, அப்பவே அவனைவிட்டும் காதல் போயிட்டது. தான் எப்படியாவது வாழ்வில் சௌகரியமாக ஸெட்டில் ஆகணும்ங்கற எண்ணம்தான் மேலோங்கி இருந்ததுன்னு ஊகிக்கலாமா?”

தர்ஷினியுடைய வார்த்தைகள் தர்மாவின் மனதில் அறைந்தன. “ஓஹோ…” என்றான் சிந்தனையாக. “சரி… பணத்திற்காக அவன் இப்படியெல்லாம் செய்யறான்னு வெச்சுப்போம். முதல்முறை பண்ணையில் மஞ்சுவைக் கொல்லப் பார்த்தபோது அவளிடம் பணம் இருந்தது, ஆனா அதை எடுப்பதற்குள் அங்கே சுதாகர் வந்துட்டான், இல்லையா? இப்போதும் பணம் எடுத்துப் போயிருக்கா. மற்ற முயற்சிகளின்போது அவளிடம் பணம் கொள்ளையடிக்க எதுவும் பண்ணினதா தெரியலியே?”

தன்யா சிரித்தாள். “அங்கேதான் இந்த ஆச்சரியமான கூட்டணியோட ப்ளே வருது. நல்லா யோசிச்சுப் பாரு. ஆனந்தை முதன்முதலில் பார்க்கும்போது ரமேஷ் அவன் ஒரு ரௌடின்னும் தன் மனைவிமீது கோபம் உள்ளவன்னும் தெரிஞ்சுக்கறான். ரமேஷுக்கு அவசரமாகப் பணம் தேவை. இல்லேன்னா அவர் கம்பெனி திவாலாயிடும். அவர் ஜெயிலுக்கும் போக வேண்டி வரும். மஞ்சுவிடம் உண்மையான காரணத்தைச் சொல்ல வெட்கப்படுகிறார். மஞ்சுவும் காரணம் தெரியாமல் பணத்தைக் கொடுக்க மறுக்கிறாள்.

“இந்தக் காட்ச்-22 நிலையில்தான் மஞ்சுவிற்கு ஆனந்த் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறான் என்றும் அவளிடம் பணம் கேட்கிறான் என்றும் ரமேஷ் தெரிந்து கொள்கிறார். அவளைக் கொன்றுவிட்டால் ரமேஷ் பலகோடிக்கு அதிபதி! அந்தக் காரியத்தைச் செய்வதற்கு ஒரு வாடகைக் கொலையாளி ரெடிமேடாக மாட்டியிருக்கிறான்! எனவேதான் ரமேஷ் ஆனந்துக்கு வேலை போட்டுக் கொடுத்து, இந்த வேலையையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார் என்று ஊகிக்கிறேன்.”

தர்மா அதிர்ச்சி நீங்காதவனாகத் தன்யாவை உற்றுப் பார்த்தான். “ஆனந்த் ரமேஷ் கம்பெனில வேலை பார்க்கிறான் என்ற ஒரே பாயிண்ட்டை வைத்துக் கொண்டு நாம இவ்வளவு பெரிய முடிவுக்கு வர முடியுமா? ரமேஷுக்கு ஆனந்தின்மேல் கோபமும் வெறுப்பும் இருக்காதா?” என்று கேட்டான்.

தன்யா பெருமூச்சு விட்டாள். “தர்மா, மஞ்சுவோட வீட்டுக்கு நாம இரண்டாம் முறை போனபோது நடந்தவைகளை யோசிச்சுப் பாரு. மஞ்சுவின் கேரக்டர் பற்றி அவங்க மாமியார்தான் குற்றம் சொல்லிக்கிட்டே இருந்தாங்க, ரமேஷ் அதைப்பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லல. அவங்க அம்மா பேசியபோது நான் ரமேஷ் முகத்தையேதான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் அந்தப் பேச்சை ஏற்றுக் கொண்டதுபோல் தெரியவில்லை. அப்போதே ரமேஷைப் பொறுத்தவரைப் பிரச்சனை அவர் மனைவியின் ஒழுக்கம் இல்லை, பணம்தான்னு நான் புரிஞ்சுக்கிட்டேன்” என்றாள்.

“ஆனால் ஆக்சுவல் வேலையில் இறங்கறதுக்கு அவருக்கு ஒரு அடியாள் தேவைப்பட்டது. அந்த வேலையை ஆனந்த் ஏத்துக்கறான், இல்லையா? அதன்மூலம் அவன் பழியும் தீரும், பணத்தேவையும் மறையும். ப்ளாக் கார்ட்!” என்றான் தர்மா கோபமாக.

“இந்தப் பேச்செல்லாம் அப்புறம். முதலில் ஆனந்தைச் சந்தேகத்தின்பேரில் அரெஸ்ட் பண்ண ஏற்பாடு பண்ணணும்” என்றாள் தன்யா.

“அச்யுத் சொன்னவுடனேயே இன்ஸ்பெக்டர் போஸ்க்கு எஸ் எம் எஸ்ல ஆனந்த் பற்றி இன்ஃபர்மேஷன் கொடுத்துட்டேன்” என்றாள் தர்ஷினி.

“தட் இஸ் தர்ஷினி!’ என்றாள் தன்யா பெருமையாக.

6.2

“ஆனந்தைப் பிடிச்சுட்டாங்க. சிங்கப்பூருக்கு ஃப்ளைட் ஏற இருந்தான்” என்றாள் தன்யா, போஸுடன் பேசிவிட்டு.

“வெரிகுட். அவனை விசாரிக்கும்போது நாமும் கூட இருக்கலாமா?” என்றான் தர்மா.

“போகலாம். வழியில் ஹாஸ்பிடலுக்குப் போய் மஞ்சு மேடம் எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டுப் போயிடுவோம்” என்றாள் தன்யா.

“அம்மா நிலையில் ஒண்ணும் சேஞ்ச் இல்லை” என்று அழமாட்டாக் குறையாகச் சொன்ன அனன்யாவைத் தேற்றிவிட்டு, அவினாஷுக்கும் ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்புகையில் ஒரு டாக்டர் ஐ சியூவிலிருந்து வெளிவந்தார்.

“அவர்தான் அம்மாவை அட்டெண்ட் பண்றார்” என்றான் அவினாஷ்.

தன்யா அவரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சிறிதுநேரம் பேசினாள். திரும்பிவருகையில் அவள் முகம் மெலிதாகச் சுருங்கியிருந்ததைக் கண்ட தர்மா “என்ன சொல்றார் டாக்டர்?” என்று கேட்டான்.

“அதேதான் சொல்றார். ஒண்ணும் சேஞ்ச் இல்ல, இருபத்திநாலு மணிநேரம் ஆகணும்னு” என்று பதிலளித்தாள் தன்யா.

“அவர் சொன்னதில் ஏதோ சரியில்லை. நீ வொரி பண்ற மாதிரி இருக்கு. ஓபனா சொல்லேன்” என்றான் தர்மா.

“சேச்சே, அதெல்லாம் இல்லை. பொதுவா கொரோனா சிச்சுவேஷன் பற்றிப் பேசிட்டிருந்தோம். அது கொஞ்சம் வொரீடா இருக்கு, அவ்வளவுதான். இந்தக் கேஸ்க்கும் இதுக்கும் சம்பந்தமில்லை” என்றாள் தன்யா.

6.3

ஆனந்த் திரும்பத் திரும்ப அறைபட்டான். திரும்பத் திரும்ப குற்றத்தை மறுத்தான். “எனக்கும் இந்தக் கொலை முயற்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான் வேலை செய்யற கம்பெனி மஞ்சுவின் கணவனோடதுன்னு தெரியவே தெரியாது” என்று சாதித்தான்.

“இப்போ என்ன பண்றது? சரியான எவிடென்ஸ் இல்லாம அவனை லாக்கப்பில் வெச்சிருக்க முடியாது, இல்லை அவன் குற்றத்தை ஒப்புக்கணும்” என்றான் போஸ், லாக்கப்பை விட்டு வெளியே வந்ததும். வியர்த்துப் போயிருந்தான்.

“போஸ், உங்களுக்கு எவிடென்ஸ் நான் தரேன். கம்பெனி மானேஜர் ஸ்டேட்மெண்ட் – அஸிஸ்டெண்ட் மானேஜர்க்கான இண்டர்வ்யூவில் ஆனந்தை ரிஜக்ட் பண்ணிட்டாங்க. அப்புறம் ரமேஷ் அவனைப் பர்சனலா சந்திச்சுப் பேசி அப்பாயிண்ட் பண்ணியிருக்கான்” என்றாள் தன்யா.

“வாவ், இது போதுமே” என்றான் போஸ்.

“இருங்க, அப்புறம் அவனோட பைக்…”

“அது கம்பெனில சேல் போட்டப்போ வாங்கினதுன்னு சாதிக்கறான்.”

“அப்போ கம்பெனி பேரில்தானே அது ரெஜிஸ்டர் ஆகியிருக்கணும்? இந்தக் கம்பெனி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ரமேஷ் யூஸ் பண்ணின பழைய பைக் அது. அவர் பர்சனல் பேர்ல இருக்கு.”

“உங்களை ஃபாலோ பண்ணினது அவனில்லை, அந்தப் பைக் இல்லைன்னு சொல்றான்…”

“சிறுபிள்ளைத்தனமா இருக்கு. ரெண்டு நம்பரை மாற்றிப் போட்டுட்டா போலீசை ஏமாற்ற முடியுமா? அதோட, எங்களை ஃபாலோ பண்ண ஆள் அனுப்பியது தான்தான்ங்கறதை ரமேஷே மறுக்கல.”

“அதோட, பண்ணைக்குள்ளே ரமேஷ் நுழைந்ததைப் பார்த்த சாட்சி இருக்கு – எதிர்த்த காம்பவுண்ட் வாட்ச்மேன்!” என்றாள் தர்ஷினி.

“இதையெல்லாம் வெச்சுக் கொஞ்சம் மடக்கி மடக்கிக் கேட்டுப் பாருங்களேன். அவன் குற்றத்தை ஒத்துப்பான்னு தோணறது” என்றாள் தன்யா.

“கட்டாயம் மடக்கி மடக்கிக் கேட்கறேன். பதில் சொல்லல, அவனையே நாலைந்து இடத்தில் மடக்கி மடக்கிப் பொட்டலம் போட்டுடறேன். அவனைப் பாடவைக்க நானாச்சு” என்றான் போஸ் உறுதியாக.

6.4

“சரி, ரமேஷ் அரெஸ்ட் ஆகிறவரை நாம ஃப்ரீ தானே? ஒரு சின்ன வேலையைப் பார்த்துட்டு வந்துடறேன்” என்றான் தர்மா.

“என்ன வேலை?” என்று தன்யா சந்தேகமாகக் கேட்டாள்.

“இந்த மாத பாரத புத்ரா இஷ்யூக்கு ஒரு கட்டுரை எழுதணும். எண் ஏழின் மகத்துவத்தைப் பற்றி எழுதலாம்னு இருக்கேன்” என்றான் தர்மா.

“ஓ! ஏழு ஜன்மங்கள், ஏழு வயதுவரை ஒருவர் அறியாக் குழந்தை என்று நம்ம சாஸ்திரம் சொல்கிறது, இந்த லைன்ல எழுதுவியா?” என்று கேட்டாள் தன்யா.

“இன்னும் ஸப்தபதி, வாரக் கணக்கு எவ்வளவோ இருக்கே” என்றாள் தர்ஷினி.

“ஹாட்ஸ் ஆஃப். தெரியாத விஷயமே கிடையாதா உங்களுக்கு?” என்றான் தர்மா.

“அதிருக்கட்டும், என்ன திடீர்னு ஏழு பற்றி எழுதறே?”

“அதுவும் உங்களால்தான் பெண்களே! நீங்க இந்தக் கேஸில் என்னையும் மாட்டிவிடப் போக, எனக்கு இந்த ஐடியா கிடைச்சது!’

“என்ன பேத்தறே?”

“இல்லை, மூணு கான்ஃப்ளிக்டிங் ஸ்டேட்மெண்ட்ஸ் – முரண்பாடான வாக்கியங்களைக் கேட்டேன்.”

“என்னடா இவ்வளவு முக்கியமான விஷயத்தை எங்ககிட்டச் சொல்லாம இருந்திருக்க நீ?” என்றாள் தன்யா. (தண்யாவுக்குக் கோபத்தில் ‘டா’ சரளமாக வரும்!)

“முக்கியமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை. இந்தக் குழந்தைகள் நம்மகிட்ட முதல்தடவை பேசினபோது அவங்க தாத்தா இறந்து ஏறத்தாழ ஏழு வருடங்கள் ஆச்சுன்னாங்க. சுதாகர் அவர் இறந்து ஏழு வருஷம் முடிஞ்சுடுச்சுன்னார். ரமேஷ் ‘ஆறு வருஷத்துக்கு முன்னாடி இவ அப்பன் சாகும்போது’ன்னார். நாம இந்த மாதிரி விஷயங்களில் அக்யுரேட்டா இருக்க முடியாதில்லையான்னு நினைச்சுண்டேன். ஆக மொத்தம் அப்ராக்ஸிமேட்டா ஏழு வருஷம்! இந்த எண்ணம் வந்தபோது ஏழு என்பது ரொம்ப முக்கியமான எண்ணில்லையான்னு தோணித்து. அந்தச் சிந்தனை வளர்ந்துதான் இந்தக் கட்டுரைக்கு மேட்டராகியிருக்கு” என்று விளக்கினான் தர்மா.

“ஓ! இவ்வளவுதானா! ஆனா டீப்பா கவனிச்சிருக்கடா” என்றாள் தன்யா சிரித்தவாறே.

சிறிதுநேரத்திலேயே போஸிடமிருந்து கால் வந்துவிட்டது. “தன்யா! ஆனந்த் பாட ஆரம்பிச்சுட்டான். ரமேஷையும் அரெஸ்ட் பண்ண ஆள் போயிருக்கு. வரீங்களா?” என்றான் போஸ் உற்சாகம் ததும்ப.

உடனே தன்யாவும் தர்ஷினியும் கிளம்பிவிட்டார்கள் – “நான் இன்னும் எழுதி முடிக்கலியே” என்று தயங்கிய தர்மாவையும் பிடிவாதமாக இழுத்துக் கொண்டு.

அவர்கள் போலீஸ் ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தபோது அங்கே ரமேஷ் உட்கார்ந்திருந்தான். ஏற்கெனவே ஒரு ரவுண்ட் போலீஸ் ட்ரீட்மெண்ட் முடிந்துவிட்டது போலும். அதிகம் தளர்ந்திருந்தான்.

ஆச்சரியமாக இவர்களைப் பார்த்ததும் ஆர்வத்தோடு எழுந்தான். “ஹலோ டிடெக்டிவ்ஸ்! நீங்க சொல்லுங்க, எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லேன்னு. என்னை ரொம்ப மிரட்டறாங்க. வக்கீலைக் கூப்பிடக்கூட விட மாட்டேங்கறாங்க” என்றான். விட்டால் அழுதுவிடுவான் போலிருந்தான்.

“மிஸ்டர் ரமேஷ், தயவுசெய்து நடிக்காதீங்க. உங்க மனைவியைக் கொல்ல நீங்க ஆனந்தை ஏற்பாடு செய்தது எங்களுக்குத் தெரியும்” என்றாள் தன்யா.

“ப்ளீஸ்! என்னை நம்புங்க. நான் ஆனந்தோட டீல் போட்டது மஞ்சுவை அடிச்சு அவகிட்டேருந்து பணத்தைப் பறிச்சுட்டு வரத்தான். அவளைக் கொல்ல நான் ப்ளான் பண்ணவேயில்லை. முதல்தரம் பண்ணைக்கு அவ சம்பளப்பணத்தோட போனபோது ஆனந்தும் போயிருந்தான். ஆனா அங்க எதிர்பாராதவிதமா நடந்த ஆக்ஸிடெண்ட்னால அவனால் பணத்தை எடுக்க முடியாம போச்சு. நேற்று மஞ்சு மறுபடியும் பணத்தோட பண்ணைக்குப் போறான்னு தெரிஞ்சதும் நான் ஆனந்தை அனுப்பினேன். அவன் போய்ப் பார்த்தபோது அவ ரத்தவெள்ளத்தில் கிடந்திருக்கா. பதறிப் போய்ப் பணப்பையை எடுத்துக்கிட்டு ஓடி வந்துட்டான். அவன் விஷயத்தைச் சொன்னதும் நான் பயந்துபோய் அவனைச் சிங்கப்பூருக்கு அனுப்பிட ட்ரை பண்ணினேன். இதுதான் நிஜம்” என்றான்.

கைத்தடியைச் சுழற்றிக் கொண்டு உள்ளே வந்த போஸ் “ரெண்டுபேரும் பேசி வெச்சிருக்காங்க. ஆனந்தும் இதேதான் சொல்றான்” என்றான் மெல்லிய குரலில்.

“ப்ளீஸ், நான் உண்மையைத்தான் சொல்றேன். எனக்குப் பிஸினஸில் எல்லாம் அவ்வளவு திறமை கிடையாதுன்னு தெரிஞ்சுக்கிட்டே அதை நடத்தினேன். மஞ்சுவை ஜெயிக்கணும்ங்கற வெறியில தப்பான வழியில் சம்பாதிக்கப் பார்த்தேன். ஆனா சத்தியமா நான் கொலைகாரன் கிடையாது. சே! இந்தத் திமிரெல்லாம் இல்லாம நானும் என் மாமா மாதிரி ஆன்மீகத்தில் இறங்கியிருக்கலாம். அவரோட காசிக்குப் போய் கங்கையில் ஜலசமாதி ஆகியிருக்கலாம். போற வழிக்குப் புண்ணியம் கிடைச்சிருக்கும். மஞ்சுவோட மனதைக் கஷ்டப்படுத்தின பாவத்திற்கு, செய்யாத தப்புக்காக நான் தூக்கில் தொங்கப்போறேன்.”

புலம்பிக் கொண்டிருந்த ரமேஷ் இடைமறிக்கப்பட்டான். இவ்வளவு நேரமும் அவன் பேசுவதையும் கேட்டுக் கொண்டு மொபைலையும் பார்த்துக் கொண்டிருந்த தன்யா “வாட்!” என்று அதிர்ந்த குரலில் சொல்லியவாறே எழுந்து நின்றாள்.

“என்ன தன்யா? என்னாச்சு?” என்று பதறினான் தர்மா.

தன்யா சுதாரித்துக் கொண்டாள். “ஒண்ணுமில்லை, தர்மா. அவினாஷ் மெசேஜ் கொடுத்திருக்கான். வா, வெளியில் போய்ப் பேசுவோம்” என்றாள்.

“அவினாஷா மெசேஜ் கொடுத்திருக்கான்? என்ன விஷயம்? மஞ்சுவுக்கு என்ன?” என்று பதட்டத்துடன் கேட்டான் ரமேஷ்.

“அதைப் பற்றி அப்புறம் பேசலாமே. இப்போ நீங்க பேச வேண்டிய விஷயம் நிறைய இருக்கு, மிஸ்டர் ரமேஷ்” என்றான் போஸ் கேலியான குரலில். அவன் கையில் கம்பு மிரட்டலாகச் சுழன்றது.

6.5

“மஞ்சுவுக்குக் கொஞ்சம் சீரியஸா இருக்காம். அதான் அவினாஷ் மெசேஜ் கொடுத்திருக்கான்” என்றாள் தன்யா வேகமாக நடந்துகொண்டே.

தர்மா கார் ட்ரைவிங் சீட்டில் ஆரோகணித்து அதைப் பறக்கடித்தான். தர்ஷினியும் தன்யாவும் ஏதோ யோசனைகளில் ஆழ்ந்திருந்தனர். வழியில் யாரும் பேசவில்லை.

ஆஸ்பத்திரி ஐசீயூ வார்டை அவர்கள் அடைந்தபோது அங்கே அவினாஷும் அனன்யாவும் டாக்டரோடு பேசிக் கொண்டிருந்தார்கள். “பல்ஸ் இறங்கிட்டே வருது. கொஞ்சம் டவுட் தான்” என்று டாக்டர் சொல்வதைக் கேட்டதும் கதறி அழுதார்கள் அவினாஷும் அனன்யாவும். ஒருபுறமாக ஒதுங்கி நின்றிருந்த சுதாகரும் அழுதான்.

தர்மா, தன்யா, தர்ஷினி பேச்சிழந்து நின்றார்கள். டாக்டர் போனதும் அவினாஷையும் அனன்யாவையும் உட்கார வைத்து “அழாதீங்க, பிரார்த்தனை பண்ணுங்க. கட்டாயம் பலன் கிடைக்கும். மனசை விட்டுடாதீங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தான் தர்மா. தன்யாவும் தர்ஷினியும் அவர்களை ஆதரவாக அணைத்துக் கொண்டார்கள்.

இரவுவரை அங்கேயே காத்திருந்தார்கள் எல்லோரும். சாப்பிடப் போகக்கூட ஒருவருக்கும் தோன்றவில்லை.

இரவு ஒன்பதரை மணிக்கு டாக்டர் ஐசீயூக்குள் போவதைக் கண்டதும் ஏதோ முடிவுக்கு வந்தவளாகத் தன்யாவும் பின்னாலேயே போய்விட்டாள். “இவளுக்கு என்ன பைத்தியமா? எதுக்கு ஐசீயூக்குள்ளே போறா!” என்று கோபத்துடன் தர்ஷினியிடம் சொன்னான் தர்மா.

வெகுநேரம் கழித்துத் தன்யா வெளியே வந்தாள். சூம்பிப் போன முகமும் தளர்ந்த நடையுமாக வந்தவளைப் பார்த்தவுடனேயே மற்றவர்களுக்கு விஷயம் புரிந்துவிட்டது.

அவினாஷையும் அனன்யாவையும் பார்க்க முடியாதவளாகக் கீழே பார்த்துக் கொண்டு “மஞ்சு… நம்மையெல்லாம் விட்டுப் போயிட்டாங்க” என்றாள்.

அவினாஷும் அனன்யாவும் உடைந்து போனவர்களாகத் தரையில் அமர்ந்தார்கள்.

“ஐயோ அக்கா! எங்களையெல்லாம் விட்டுப் போயிட்டியே! எங்களை ஏமாத்திட்டியே அக்கா” என்று கதறினான் சுதாகர்.

தர்ஷினியின் முகத்தில் அதிர்ச்சியும் வருத்தமும் போட்டிபோட்டன.

இரண்டு நாட்கள் மட்டுமே தான் அறிந்த, பழகிய அந்தப் பெண்மணிக்காகத் தர்மாவின் கண்கள் கண்ணீரால் நிரம்பின.

(நாளை, க்ளைமேக்ஸ். இரு பகுதிகளாக.)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: