உயிரா…! உயிலா…! எடுத்துச்செல்ல..! நிறைவுப்பகுதி

சாய்ரேணு சங்கர்

7.3

ஹாலின் ஜன்னல்கள் அனைத்தும் திறந்திருந்தன. காற்று ‘ஜிலுஜிலு’வென்று வீசியது.

“எங்க வேலையில் நாங்க எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம், அவர்களுடைய நல்ல குணங்கள் – தீய குணங்கள், கஷ்ட – நஷ்டங்கள் எல்லாம் நாங்கள் அறிகிறோம். ஆனா நாங்கள் அவற்றால் பாதிக்கப்படுவதில்லை, பாதிக்கப்படவும் கூடாது. ‘ஆல் இன் த டேஸ் வொர்க்’ என்று கடந்து போகும் பக்குவம் எங்களுக்கு வேண்டும்” தன்யா அவளுடைய இயல்புக்கு மாறாக மிக மெதுவான குரலில் ஆரம்பித்தாள்.

“ஆனால் மஞ்சு… அவர்கள் தயாள குணம், தன்னம்பிக்கை, தைரியம் எல்லாமே எங்களைக் கவர்ந்தது. அவர்கள் மரணம்… எல்லாவற்றையும் தத்வரீதியாய் எடுத்துக் கொள்ளும் எங்க தர்மாவின் கண்கள்கூடக் கலங்கிவிட்டது. என்னாலோ அவங்க மரணத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை. இன்னும் மஞ்சு இங்கே… அவங்க பிறந்து வளர்ந்த வீட்டில்… அவங்கமீது மிகுந்த அன்புகொண்ட அவங்க அப்பாவுடன்… இருக்காங்க… என் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்காங்க என்றே தோன்றுகிறது…”

அறைக்குள் வீசிய காற்றில் ஏதோ அமானுஷ்யம் கலப்பதை இப்போது எல்லோருமே உணர்ந்தார்கள்.

“மஞ்சுவைக் கொல்லத் துடிக்கிறவருடைய அவசரத்திற்கு என்ன காரணம் என்பதற்கு நாங்க எப்படித் தவறான ஒரு முடிவை எடுத்தோம் என்பதைத் தர்ஷினி உங்களுக்கு எடுத்துச் சொன்னாள். அதாவது, இந்த முயற்சிகளில் தெரிந்த டெஸ்பெரேஷனுக்குக் காரணம் அதீதமான கோபம் அல்லது பழி உணர்வு என்று நாங்கள் நினைத்தது தவறு என்பது ஆனந்தைப் பற்றி அறிந்தவுடன் தெரிந்தது. ஆனந்தை விட்டாலோ மஞ்சுமீது கோபம் கொள்ளக் கூடியவர்கள் யாருமே இருப்பதாகத் தெரியவில்லை.

“அப்போது டெஸ்பரேஷனுக்குக் காரணம் ஆத்திரமல்ல என்றால் அவசரமாகத்தான் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அப்படி அவசரப்படுவதற்கு என்ன காரணமாக இருக்கலாம்? என்ன முக்கியமான சம்பவம் சமீபகாலத்தில் நடக்கவிருக்கிறது?

“இதைத்தான் நான் சிந்தித்துக் கொண்டே இருந்தேன். அப்போது தர்மா இந்த வழக்கோடு சம்பந்தப்பட்ட மூவர் ஒரே விஷயத்தைப் பற்றி முரண்பாடான ஸ்டேட்மெண்ட்களைச் சொன்னதாகச் சொன்னான். அது அவனை உறுத்தியது, ஆனால் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை அவனால் உணர முடியவில்லை. அப்படி ஒன்று இருப்பதாகவே எங்கள் யாருக்கும் தோன்றவில்லை.

“ஏனெனில் அந்த விஷயம் மிகச் சாதாரணமானது. அதாவது, மஞ்சுவின் அப்பா காலமானது எப்போது என்ற விஷயம். ஏறத்தாழ ஏழு வருஷம் என்றான் அவினாஷ், ஏழு வருஷம் முடிந்துவிட்டது என்றான் சுதாகர், ஆறு வருஷம் என்றான் ரமேஷ். இதில் அவினாஷ் சொன்னதே உண்மை என்று தெரிந்துகொண்டோம். மற்றவர்களில் ஒருவர் தவறாகச் சொல்லாமல் வேண்டுமென்றே பொய் சொல்கிறார் என்றால், எதற்காக இந்த விஷயத்தில்? அவர் காலமானது ஆகிவிட்டார். எப்போது மடிந்திருந்தால் என்ன?

“இது என்னை உறுத்திக்கொண்டே இருந்தது. ஏழு, ஏழு என்று என் மனம் ஜபித்துக் கொண்டே இருந்தது. இதற்கிடையில் நானும் தர்ஷினியும் இந்தக் கேஸ் பற்றி டிஸ்கஸ் செய்தபோது, சற்றுமுன் தர்ஷினி கூறியதை அவள் என்னிடம் கூறினாள் – “மஞ்சுவின் அருகிலோ அதே வீட்டிலோ இல்லாத, மிகுந்த ஆத்திரமோ, அவசரமோ உள்ள ஒருவர்தான் இதைச் செய்திருக்க வேண்டும்” என்பது அவளுடைய தீர்மானம். அதாவது டெஸ்பரேஷனோடு கூட அருகில் இல்லாமை என்பதையும் அவள் சேர்த்துக் கொண்டாள். மோட்டிவ், ஆப்பர்ச்சூனிட்டி எல்லாம் பார்க்காமல் வெறுமே இந்தக் கண்டிஷனுக்குப் பொருந்தி வருபவர் யார் என்று பார்த்தேன்.

“அதாவது, மஞ்சுவுடைய ப்ளான்ஸ் உடனுக்குடன் தெரியாமல், அந்தந்த நேரத்தில் அவளைப் பின்தொடர்வதன் மூலம், அல்லது அவளைச் சந்திப்பது, தொலைபேசியில் பேசுவது மூலம் அறிந்து அவ்வப்போது திட்டம் தீட்டுபவர்! இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் ரமேஷும் மனோஜும் உடனே விலகுகிறார்கள். மீதமிருப்பவர்கள் ஆனந்தும் சுதாகரும். ஆனந்த் ஒரு தனி என்ட்டிட்டி அல்ல, ரமேஷோடு சேர்ந்தவர் என்ற வகையில் அவரும் விலகுகிறார்…”

சுதாகர் பதறி எழுந்து நின்றான்.

“உட்காருங்க சுதாகர்” என்றாள் தன்யா நட்புடன். தொடர்ந்து “சுதாகரைச் சந்தேகப்படவே முடியவில்லை. ஏனெனில் அவருக்கு மஞ்சுவின் மறைவால் லாபம் ஏதுமில்லை, நஷ்டம் இருக்கிறது, அவள்மேல் கோபம் ஏதுமில்லை, சொல்லப் போனால் அவர் அவளிடம் மிகுந்த நன்றியோடு இருக்க வேண்டும்!” என்றாள்.

சுதாகர் மெதுவாக அமர்ந்தான்.

“இதற்கிடையில் சமீபத்தில் நடக்கவிருக்கிற சம்பவம் என்னவாக இருக்கும் என்று யோசித்தபோது, மஞ்சுவின் அப்பா இறந்த ஏழாவது வருஷம் முடிவடைகிறது என்பதைக் கொள்ளலாமா என்று நான் யோசித்தேன், அதற்கு முக்கியத்துவம் இல்லை என்று விட்டுவிட்டேன் என்று சொன்னேன். இல்லை, அது முக்கியம்தான் என்பதை ரமேஷ் தற்செயலாக என்னிடம் சொன்னார்.”

“நானா?” என்றான் ரமேஷ் வியப்புடன்.

“ஆமா, மஞ்சுவோட அப்பா காசியில் கங்கை நதியில் ஜல சமாதி ஆனார்னு எங்ககிட்ட சொன்னீங்க.”

“ஸோ?” என்றான் ரமேஷ் குழப்பத்துடன்.

“கங்கை நதியில் ஜல சமாதி ஆனவர்களுடைய உடல் அத்தனைச் சுலபத்தில் கிடைக்காது. சில நேரங்களில் கிடைக்காமலே போய்விடுவதும் உண்டு. உடல் கிடைக்காவிட்டால், மறைந்தவருடைய உயில் ஏழு வருஷங்களுக்கு அமுலுக்கு வராமல் நிறுத்தி வைக்கப்படும். அவர் ஏழு ஆண்டுகள் வரையில் ‘காணாமல் போனவராகக்’ கருதப்படுவார். ஏழு ஆண்டுகள் முடிந்தும் அவர் திரும்பி வரவில்லையென்றால், அவர் இறந்தவராகக் கருதப்பட்டு உயில் நிலுவைக்கு வரும்.

“நான் சொல்வது எல்லோருக்கும் புரிந்திருக்கும். இந்த நிமிஷம் வரை, மஞ்சு அவள் அப்பாவின் சொத்துகளுக்கு ஏகபோக உரிமைக்காரி அல்ல! ஆனால் இந்த விஷயம் யாருக்கும் நினைவில் இல்லை. வெகுகாலமாக மஞ்சு தன் அப்பாவின் சொத்துகளையும் வியாபாரத்தையும் நிர்வகித்து வருகிறாள். காசிக்குப் போவதற்கு முன் அவளுக்குப் பவர் ஆஃப் அட்டர்னியும் அவளோட அப்பா கொடுத்திருக்கார். எனவே லீகலா சொத்து அவள் பேரில் இன்னும் மாறவில்லை என்பது ஒரு பொருட்டாகவே இல்லை.

“ஆனால், உயில் நிலுவைக்கு வருவதற்கு முன்பே மஞ்சு இறந்துவிட்டால், அவளுடைய அப்பாவின் அடுத்த வாரிசான சுதாகருக்குச் சொத்துக் கிடைக்க வாய்ப்புள்ளது!

“ஆனால் இதில் சட்டச் சிக்கல்கள் வரலாம். உயில் எழுதியவரின் எண்ணம் மஞ்சுவிற்குச் சொத்தைத் தருவதுதான் என்பதால், மஞ்சுதான் வாரிசு, அவளுக்கு நான் வாரிசு அல்லது குழந்தைகள் வாரிசு என்று ரமேஷ் கேஸ் போடலாம். அதோடு ஏழு வருஷங்களும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, இந்த ஏழாண்டுக் காத்திருத்தல் என்பது ஒரு சம்பிரதாயம்தான் என்று வாதாடலாம். இந்நிலையில் ரமேஷ் போன்ற படித்த, சாமர்த்தியசாலியான, பெரிய இடத்துத் தொடர்புகள் உடையவருக்கு எதிராய்த் தன்னால் நிற்க முடியுமா என்று சுதாகர் பயப்பட வாய்ப்புள்ளது.

“முதலில் இந்த ஏழாண்டுகளாகத் தோன்றாத ஒரு விஷயம் இப்போது சுதாகருக்கு எப்படித் தோன்றியது? எப்படி அவருக்குத் தைரியம் வந்தது? என்று யோசித்தேன். அந்த நேரத்தில் தற்செயலாக எனக்கு ஒரு க்ளூ கிடைத்தது, அது ஒரு விபரீதமான எண்ணமாக மாறியது!

“க்ளூவை முதலில் சொல்லிவிடுகிறேன். இங்கே கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஒரு உறவினரை மஞ்சு தங்க வைத்திருக்கிறாள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரைக் கவனிக்க ஆண் நர்ஸ் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் ஜீவி ஹாஸ்பிடல்ஸ் என்ற ஐடி கார்ட் அணிந்திருப்பதை நான் கவனித்திருந்தேன்.

“தற்செயலாக மஞ்சுவை அட்மிட் செய்ததும் ஜீவி ஹாஸ்பிடலாகவே இருந்தது. மஞ்சுவின் நிலை குறித்து டாக்டரிடம் பேசிய நான், பொதுவாகத் தமிழ்நாட்டில் கோவிட் பாதிப்பு நிலை, தடுப்பூசிகள் என்று பேசிக் கொண்டிருந்தபோது, அவர் ஹாஸ்பிடலில் பெட் கிடைக்காத நிலையையும், அதனால் பலரை வீட்டிலேயே தனிமைப்படுத்த வேண்டியிருப்பதையும் கூறினார்.

“அப்போது நான் அவ்வாறு வீட்டில் இருப்பவர்களுக்கு நீங்கள் அட்டெண்டர் அனுப்புவதால் பிரச்சனை இல்லை என்றேன். ஜீவி ஹாஸ்பிடலிலிருந்து அப்படி அட்டெண்டர்கள் யாரும் அனுப்பப்படுவதில்லை என்ற அதிர்ச்சிகரமான உண்மையை டாக்டர் அப்போது என்னிடம் சொன்னார்!

“நான் குழம்பினேன். யாரோ ஒருவன் அட்டெண்டர் என்ற பெயரில் மஞ்சுவையும் சுதாகரையும் ஏமாற்றுகிறான் என்ற அளவிற்குத்தான் அப்போது என் எண்ணம் இருந்தது. இப்போது மஞ்சு இருக்கும் நிலையில் இதைக் கிளப்ப வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

“என்றாலும் இந்தப் பேஷண்ட் யார் என்று விசாரித்தேன். அவர் ஆஸ்பத்திரிக்கு வந்து மயங்கி விழுந்துவிட்டார், அவருடைய பைகளை ஆராய்ந்தபோது கிடைத்த போன் நம்பரை அழைத்திருக்கிறார்கள் என்றவரை உண்மை. ஆனால் அவருக்குக் கோவிட் இல்லை. அவர்கள் அழைத்த நம்பர் மஞ்சுவுடையதல்ல, இந்த வீட்டு லேண்ட்லைன். கால் அட்டெண்ட் செய்தது சுதாகர்.

“என்னடா இது தலைவலி என்ற எண்ணத்திலேதான் சுதாகர் அந்த மனிதரைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால் யாரோ தூரத்து உறவினர் என்று அவன் எண்ணியிருந்தவர் அவனுடைய அப்பாதான் என்று அறிந்தபோது அவன் எவ்வளவு அதிர்ச்சியடைந்திருப்பான்!”

இந்த இடத்தில் எல்லோருமே “ஹா” என்று அதிர்ந்தார்கள்.

“ஆம், மிஸ்டர் சபாபதி, மஞ்சு மற்றும் சுதாகரின் அப்பா, கங்கையில் மூழ்கி இறக்கவில்லை. தலையில் அடிபட்டுக் கடைசி நிமிடத்தில் காப்பாற்றப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் யாரென்று அவருக்கே தெரியவில்லை. அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். எனவே காசியிலேயே ஒரு ஆசிரமத்தில் இருந்திருக்கிறார்.

“சமீபத்தில் அவருக்கு சிறிதுசிறிதாக நினைவுகள் திரும்பியிருக்கிறது. தன் குடும்பத்தினரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க, எப்படியோ அவர் சென்னை வந்துவிட்டார். இங்கே அவர்மீது ஏதோ வண்டி மோதிவிடவே, அவரை அருகிலிருந்த ஆஸ்பத்திரியான ஜீவிக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

“சுதாகர் ஆபத்தாக ஒன்றும் அடிபடாத நிலையில் அவரை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டான். அப்போதுதான் அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியிருக்க வேண்டும்.

“அப்பா உயிருடன் இல்லையென்றால், சொத்து மஞ்சுவுக்கு. அப்பா இப்போது வந்துவிட்டாரே, அவரை உயிலை மாற்றி எழுத வைத்தால்? இந்த எண்ணம் வந்ததும் அவன் அதை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அவன் அப்பா உயிலை அவனுக்குச் சாதகமாக எழுதவே மாட்டார்.

“ஆனால் வேறொரு வழி இருக்கிறது! அதாவது சபாபதியின் உயில்படி அவருக்கு முன்னால் மஞ்சு இறந்துவிட்டால், அடுத்த வாரிசு சுதாகர் என்று எழுதியிருக்கிறார். (சொத்து அவளுக்கு வந்தபின் மஞ்சு மடிந்தால் அது ரமேஷுக்குத்தான் போகும்.)

“ஆக, சபாபதி இறப்பதற்கு முன் எப்படியாவது மஞ்சுவைக் கொன்றுவிட வேண்டும். அவள் இறந்து சில காலத்திற்குப் பிறகு, சபாபதி உயிரோடு இருப்பது இப்போதுதான் அவனுக்குத் தெரிந்ததுபோல் காட்டிக்கொண்டு அவரைக் குடும்ப வக்கீல் போன்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர் சபாபதிதான் என்று நிரூபிக்க வேண்டும். அப்புறம்… அவர் உயிலை மாற்றிவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்…”

இதன் அர்த்தம் என்ன என்று அனைவரும் புரிந்துகொள்ளச் சில விநாடிகள் ஆனது.

“மஞ்சுவைக் கொல்ல வேண்டும். மஞ்சு மரணமடைந்து ஒரு வாரத்திற்குப் பிறகு சபாபதி வெளியே வர வேண்டும். அதிலிருந்து ஒரு வாரம் அவர் உயிருடனிருந்தால் போதும். இது சரியாக நடந்தால், பதினைந்து நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள், பதினைந்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளக்காரன் சுதாகர், 200 கோடிக்கு அதிபதி!

“சாமர்த்தியமாக மஞ்சுவைக் கேட்டுச் செய்வதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்கி, அப்பாவை வீட்டிலேயே மறைத்துவைத்தான். அவரை மயக்கத்திலேயே வைத்து, கோவிட் நோயாளி என்று பொய்சொல்லி அவர் அருகில் யாரும் போகவிடாமல் செய்து, தன் கூட்டாளி ஒருவனைக் காவலுக்கும் வைத்தான்.

“அதன்பின் மஞ்சுவைக் கொல்ல அவனுடைய முயற்சிகள் ஆரம்பமாயின. விபத்துபோல் காட்ட அவன் செய்த முயற்சிகள் தோல்வியடையவே, முடிவில் அவளைக் கத்தியால் தாக்கிவிட்டு ஓடிவிட்டான்.”

“அடப்பாவி!” என்றான் ரமேஷ் தன்னையறியாமல்.

“அவசரப்படாதீங்க அத்தான். இதெல்லாம் வெறும் கற்பனை. இவங்களால் எதையும் நிரூபிக்க முடியாது” என்றான் சுதாகர் தைரியமாக.

“உன் அக்கா செத்த அன்னிக்கே வெற்றி மயக்கத்தில் லிக்கர் வாங்க நீ உன் அட்டெண்டர் தோஸ்தை அனுப்பினியே, அதுகூடக் கற்பனையா?” என்றாள் தன்யா முறுவலித்து.

“மஞ்சுவின் மரணத்திற்குப் பிறகு நீ என்ன பண்றேன்னு பார்க்க நான் நைட் பூரா தோட்டத்தில் மறைஞ்சிருந்தேன். உன் தோஸ்த் வெளியே போயிட்டு லிக்கரும் கையுமா என்கிட்ட மாட்டிக்கிட்டான். அன்பா விசாரிச்சதில் பெரும்பாலும் உண்மையைச் சொல்லிட்டான். வெளியே அச்யுத் கஸ்டடியில் இருக்கான்” என்றான் தர்மா.

“பாவம்! உங்கிட்ட மாட்டினானே! விசாரிக்கறேன்னு தோலை உரிச்சிருப்பியே” என்றான் போஸ்.

“சே! அதெல்லாம் ஏன் பண்ணப் போறேன்? ஆஃப் த ரெகார்ட், ஆமாம்” என்றான் தர்மா.

போஸ் சிரித்தான். “இந்தத் தர்மா அப்பாவின்னு நினைக்கிறவங்க எல்லோருக்கும் சொல்லிக்கறேன் – ஏமாறாதீங்க! இவன் ராமன் பரசுராமன் பரம்பரை! க்ஷத்ரியன்!” என்றான்.

“இராஜராஜ சோஜன்! மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்! சொல்லிண்டே போவியா?” என்றான் தர்மா.

இந்த உரையாடலை நல்லவேளையாக யாரும் கவனிக்கவில்லை.

“ம்ஹும், ஒரு திருடனுடைய வார்த்தையை நம்பி என்னைக் குற்றவாளின்னு சொல்லிட்டீங்க! இதையெல்லாம் நீங்க நிரூபிக்க வேண்டிவரும். என் அக்காவை நானே…” என்ற சுதாகரை இடைமறித்தாள் தன்யா.

“உண்மைதான் சுதாகர். நீதான் குற்றவாளின்னு எங்களால் நிரூபிக்க முடியாதுதான். சட்டத்தால் உன்னைத் தண்டிக்க முடியாது, உனக்கு உன் அக்காவே தண்டனை கொடுப்பா” என்று சொல்லி முடிப்பதற்குள் அறைக்கதவு “ழே…” என்ற சப்தத்துடன் மெதுவாகத் திறந்துகொண்டது.

வாயிலில்… ரத்தக்கறைகள் நிரம்பிய தோற்றமாய்… மஞ்சு! அவள் கையில் நீண்ட கத்தி.

எல்லோரும் அதிர்ந்து எழுந்தார்கள்.

“அக்கா!” என்று அலறினான் சுதாகர். “நான் உன்னைக் கொன்னது தப்புதான். என்னைக் கொன்னுடாதே அக்கா! கொன்னுடாதே அக்கா!” மயங்கி விழுந்தான்.

“மஞ்சு!…” என்று திகைத்தான் ரமேஷ்.

“சாரி, இது ஆவி இல்லை, மஞ்சுதான். அவங்க நேற்றிரவே ஆபத்துக் கட்டத்திலிருந்து வெளியே வந்துட்டாங்க. சுதாகர்மீது எனக்கு அப்போதுதான் சந்தேகம் விழுந்திருந்தது. ஆஸ்பத்திரியில் இருந்தாலும் அச்யுத் நான் கேட்டவைகளை விசாரிச்சுத் தகவல் அனுப்பிட்டே இருந்தான். என் சந்தேகத்தில் அர்த்தம் இருக்குன்னு தெளிவாச்சு. ஆனா அரெஸ்ட் பண்ண ஆதாரங்கள் இல்லை. அவனோ ஆஸ்பத்திரிலயே இருந்தான். மஞ்சுவை முடிக்கச் சந்தர்ப்பம் பார்த்துட்டிருந்தான். ஆனா எப்படி நடிச்சான் தெரியுமா? நான் நினைக்கறது தப்போன்னு எனக்கே பலதடவை தோன்றியது.

“அவனைப் பிடிக்கும்வரை மஞ்சுவுக்கு ஆபத்து ஏற்படாம இருக்கவும், அவனைக் கன்ஃபெஸ் பண்ண வைக்கவும் டாக்டர் மற்றும் போலீஸின் சம்மதத்தோடும் ஒத்துழைப்போடும் நான் நடத்திய நாடகம் இது. உங்கள் எல்லோருக்கும் அதனால் ஏற்பட்ட மனவருத்தத்திற்கு மன்னிப்புக் கேட்கிறேன்” என்றாள் தன்யா.

7.4

ஒரு மாதம் கழிந்திருந்தது.

“சீக்கிரம் வாங்க மம்மி” என்று மஞ்சுவை இழுத்துக் கொண்டு ஓடினார்கள் அவினாஷும் அனன்யாவும். சற்றுத் தொலைவில் ராட்சத பலூன் அவர்களுக்காகக் காத்திருந்தது. அதன் அருகிலேயே தர்மா, தன்யா, தர்ஷினி.

“நீங்க போங்களேன்” என்றாள் மஞ்சு அருகே வந்ததும்.

“சரியாப் போச்சு, நீங்கதான் வரணும். பழைய மஞ்சுவா, கடந்தகாலத்தைத் தூக்கிப் போட்டுட்டு, தன்னம்பிக்கையோடு, உற்சாகமா” என்றாள் தன்யா.

மஞ்சு பெருமூச்சோடு பலூனை நெருங்கினாள்.கூடையின் உள்ளிருந்து இரு கைகள் நீண்டன. அலறப்போனவள், அவை தர்மாவுடையது என்று கண்டதும் தெளிந்தாள்.

“கமான் மஞ்சு, ஏறுங்க. யூ கான் ஹோல்ட் மீ” அவள் தயங்குவதைக் கண்டதும் “என்னைத் தம்பி மாதிரி நினைச்சுக்குங்க” என்றான் தர்மா.

மஞ்சு சுருங்கிப் போனாள். தர்மா புன்னகைத்தான். “நான் உங்களைக் கீழே தள்ளுகிற தம்பி இல்லைம்மா, ஏற்றிவிடக் காத்திருக்கிற தம்பி. வாங்க மஞ்சு” என்றான்.

மஞ்சுவின் முகம் மெல்ல மலர, அவன் கையைப் பிடித்துத் துள்ளி மேலே ஏறினாள்.

“நீ எங்க அண்ணான்னு நினைச்சா எங்களுக்கு எவ்வளவு பெருமை தெரியுமா?” என்றாள் தர்ஷினி, தர்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு.

“உனக்கு இப்போ பெருமை. எனக்கு உங்க ரெண்டு பேரை நினைச்சு எப்போதும் அதே பெருமை” என்றான் தர்மா.

“இன்னாது, நாங்க உனக்கு அண்ணான்னு உனக்குப் பெருமையா?” என்றாள் தன்யா.

“மொக்கை ஜோக்” என்று வலிக்காமல் அவள் தலையில் குட்டினான் தர்மா.

ஆறு புன்னகை முகங்களைச் சுமந்துகொண்டு பலூன் உயரே, உயரே போய்க் கொண்டிருந்தது.

(சுபம்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: