உயிரா…! உயிலா…! எடுத்துச்செல்ல!

சாய்ரேணு சங்கர்

7 க்ளைமேக்ஸ் – முதல் பகுதி

7.1

மறுநாள் காலை. மஞ்சுவின் சித்தி வீடு.

அழுதழுது களைத்து அப்போதுதான் சற்றுத் தூங்கியிருந்தார்கள் அவினாஷும் அனன்யாவும். அவர்களோடே அமர்ந்திருந்தாள் சித்தி.

சுதாகர் ஹாலில் அக்கடாவென்று அமர்ந்தபோது, வாயில் மணி அடித்தது.

“யார் வந்திருப்பாங்க! சே! நிலைமை புரியாம தொந்தரவு!” என்று வெறுத்துக் கொண்டே போய்க் கதவைத் திறந்தான்.

தன்யாவும் தர்ஷினியும் உள்ளே நுழைந்தார்கள்.

“என்ன சுதாகர், குழந்தைகள் எங்கே?” என்று கேட்டாள் தன்யா.

“இப்பதான் தூங்கறாங்க” என்றான் சுதாகர்.

“பாவம், தூங்கட்டும். நாங்க எதுக்கு வந்தோம்னா, தன் மனைவியோட உடலைப் பார்க்கணும்னு ரமேஷ் அடம்பிடிக்கறார்…”

“முடியவே முடியாது!” எண்று கூவினான் சுதாகர். “அவளைக் கொன்ன படுபாவி அவன்! அவளைப் பார்க்க விடவே மாட்டேன்! விடவே மாட்டேன்!” என்று அலறினான்.

“சுதாகர்! கம்ப்போஸ் யுவர்செல்ஃப்” என்று அவனைக் கட்டுப்படுத்த முயன்றாள் தன்யா.

சுதாகர் மெதுவாக அடங்கினான்.

“ஆயிரந்தான் இருந்தாலும் மஞ்சு ரமேஷோட மனைவி. அவர் அவங்க உடலைப் பார்க்கறதை நாம தடுக்க முடியாதுன்னு நினைக்கறேன். அவரை அழைச்சுக்கிட்டு போலீஸை முதலில் இங்கே வரச் சொல்லியிருக்கேன்” என்றாள் தன்யா.

“இங்கே ஏன் வரணும்? அக்காவோட… ரிமெய்ன்ஸ்… ஹாஸ்பிடல்ல இல்ல இருக்கு?” என்றான் சுதாகர் சந்தேகமாக.

“இங்கே ஒரு இன்ஃபார்மல் செஷன். ரமேஷோட வக்கீலும் வரார். ரமேஷுக்கு எதிரா வலுவான சாட்சியங்கள் எதுவுமில்லைன்னு சொல்லி அவர் மனைவியையும் குழந்தைகளையும் பார்க்க அனுமதி கேட்டிருக்கார். ஆனா நாம உங்க மனோநிலையை எடுத்துச் சொல்லி, அதோட மஞ்சுவோட கொலையும் அதற்கு முந்தைய கொலை முயற்சிகளும் எப்படி நடந்ததுன்னு சந்தேகத்திற்கிடமின்றி விளக்கிட்டா நாம சொல்றதைப் போலீஸ் கேட்பாங்கன்னு தோணிச்சு. அப்படியே அக்யூஸ்ட் கிட்டருந்து ஒரு கன்ஃபெஷன் வாங்க முடிஞ்சுட்டா நல்லது. கொடூரமான கொலைகாரன் இனி அந்தக் குழந்தைகளையாவது பார்க்காமல் நாம தடுக்க முடியுமே!”

“சரியா சொன்னீங்க! பாவம், மஞ்சுதான் எங்க எல்லாரையும் விட்டுப் போயிட்டா. அங்கே ஆஸ்பத்திரியில் போஸ்ட்மார்ட்டத்துக்குக் காத்திருக்கறது வெறுங்கூடு! அதை வேணும்னா அவன் பார்த்துட்டுப் போகட்டும். குழந்தைகளை அவன் பார்க்க நான் அனுமதிக்கவே மாட்டேன்” என்றான் சுதாகர் ஆவேசமாக.

“ஓகே. உள்ளே வாங்க போஸ்” என்றாள் தன்யா.

போலீஸ் கான்ஸ்டபிள்கள் புடைசூழ உள்ளே நுழைந்தான் போஸ். அவர்களுக்கு இடையில் கைவிலங்கோடு தெரிந்தான் ரமேஷ். ஒரே நாளில் உடைந்து நொறுங்கிப் போயிருந்தான். கூடவே ஆனந்த்.

அவனைக் கண்டதுமே பாய்ந்தான் சுதாகர். “டேய்!” எண்று கத்தி அவன் சட்டையை உலுக்கினான். “என்னடா தப்புப் பண்ணினா என் அக்கா உனக்கு? எல்லோருக்குமே நல்லது நினைக்கறதையும் நல்லது செய்யறதையும் தவிர அவளுக்கு வேறொன்றும் தெரியாதேடா!” என்று கோபத்துடன் கத்தினான்.

“வாயை மூடு! இன்னும் என் அண்ணன்தான் கொலை பண்ணினான்னு ப்ரூவ் ஆகல. வேற யாரோ பண்ணிட்டு அவன் மேல பழியைப் போட்டிருக்காங்க” என்றான் உள்ளே வந்துகொண்டிருந்த மனோஜ்.

“அடடே! வேற யாருப்பா கொலை பண்ணினாங்க? பாலஸ்தீனத் தீவிரவாதிகளா? உன் அண்ணன் இல்லைன்னா இதைப் பண்ணியிருக்கக் கூடிய ஆள் நீ ஒருத்தன்தான்…”

“உளறாதே! எனக்கு எதுவும் தெரியாது” என்றான் மனோஜ்.

“அப்படிச் சொல்லிட்டா எப்படி மனோஜ் சார்? உங்களுக்கும் இந்தக் கேஸில் பல விஷயங்கள் தெரியுமே? அதையெல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரத்தானே நாமெல்லாம் இங்கே கூடினது” என்றா தன்யா குறுஞ்சிரிப்புடன்.

மனோஜ் அவளைப் பயமாய்ப் பார்த்தான். “மிஸ் தன்யா, நீங்க தப்பாய்ப் புரிஞ்சுக்கிட்டு…”

“எக்ஸா…க்ட்லி! தவறான புரிதல். அதுதான் இந்தக் கேஸில் நாங்க பண்ணிட்ட தப்பு. இல்லேன்னா… பாவம், மஞ்சு இப்போ நம்மிடையே இருந்திருப்பாங்க” என்றாள் தன்யா.

“இப்போ சரியா புரிஞ்சுக்கிட்டதை எங்களுக்குச் சொல்லலாமே. நேரம் ஆகிட்டே இருக்கு” என்று நினைவுபடுத்தினான் போஸ்.

“டெஃபெனட்லி. எல்லோரும் உட்காருங்க” என்றா தன்யா.

“எங்க உங்க ப்ரதர்? அவர் வரலியா?” என்று கேட்டான் சற்றுத் தெளிவடைந்திருந்த சுதாகர்.

“இதோ நானும் வந்துட்டேன்” என்று சொல்லியவாறே உள்ளே நுழைந்தான் தர்மா.

“என்ன தோஸ்த், தூக்கத்திலிருந்து எழுந்து அப்படியே வரியா? தலையெல்லாம் கலைஞ்சிருக்கு, சட்டை கசங்கிருக்கு?” என்று ரகசியமாகத் தன் நண்பன் தர்மாவிடம் கேட்டான் போஸ்.

“யார் தூங்கினா எழுந்து வரதுக்கு? ரெண்டு அல்லிராணிகளுக்கு அண்ணனா பொறந்தா இப்படித்தான்” என்று எரிச்சலுடன் கிசுகிசுத்தான் தர்மா.

“என்ன சொல்ற?” என்று போஸ் குழப்பத்துடன் கேட்பதற்குள் அந்த ஹாலில் எல்லோரும் அமர்ந்து தர்ஷினி நடுவில் வந்து நின்றாகிவிட்டது.

7.2

ஹாலில் எதிர்பார்ப்பு நிறைந்த மௌனம் நிலவியது. முக்கியமாகப் போஸ் அடுத்து வருவதை மிக ஆவலாக எதிர்பார்த்தான். இது போன்ற செஷன்களில் அவன் முன்பும் பங்குபெற்றிருக்கிறான். உண்மையைச் சொல்லப் போனால் இந்த செஷன்கள் நடப்பதே அவனுக்காகத்தான்! ஒரு குற்றம் நிகழ்ந்தது யாரால், எப்படி, ஏன் என்பது குறித்து தன்யாவும் தர்ஷினியும் துப்பறிந்து அறிந்தவற்றை அவன் ஒரு வழக்காகச் சமைக்க உதவியாக விளக்கிச் சொல்வார்கள்.

கான்ஃபரன்ஸ் ஹாலில் சேர்மனைப் போன்று போஸ் கம்பீரமாக அமர்ந்திருக்க, தர்ஷினி தன் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள்.

“மஞ்சு… மரணம். இந்த இரண்டு வார்த்தைகளும் வாக்கியமாக ஆகிடக் கூடாதுன்னு எங்களிடம் ஒருவர் சொன்னார். ஆனா துரதிர்ஷ்டவசமா அது நடந்துடுச்சு. அதற்காக அநேகமாக இங்கிருப்பவர்கள் எல்லோருமே, மஞ்சுவைப் பல வருடங்களாக அறிந்தவர்கள் முதல் அவளைப் பற்றிக் கேள்வி மட்டுமே பட்டவர்கள் வரை, வருத்தப்படுகிறோம். அந்த வாக்கியத்தை உண்டாக்கத் துடித்தவர் யார் என்பதுதான் நம் முன்னிருக்கும் கேள்வி.

“இது போன்ற… சந்திப்புகள்… நாங்க முன்பும் நடத்தியிருக்கோம். எப்போதுமே யார் என்ற கேள்விக்குப் பதிலளிப்பதாக மட்டும் இவை அமையாது. ஏன், எப்படி என்ற கேள்விகள், வாடகைக் கொலையாளி உள்ள வழக்குகளில் – கொலையாளி அல்லது கொலைக்குத் தூண்டியவர் இவர்கள் இருவரும் யார் யார், முக்கியமாகக் கொலையாளி இவர்தான் என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கும் ஆதாரங்கள் – இவைகளையும் இங்கே பேசுவோம். சில நேரங்களில் யார் என்பது தெரிந்துவிடும். மற்ற டீட்டெயில்ஸ்தான் தெரிய வேண்டியிருக்கும். ஒவ்வொரு தடவையும் சஸ்பென்ஸ் வைக்க இது அகதா க்ரிஸ்டி கதையில்லை, நிஜம்.

“முதலில் இந்தக் கேஸில் எல்லோர் மனதிலும் இருக்கிற மிக அடிப்படையான கேள்விக்குப் பதில் சொல்லிடறேன். யார் சொல்லி நாங்க இந்தக் கேஸில் சம்பந்தப்பட்டோம் என்பது! மஞ்சுவுடைய குழந்தைகள் அவினாஷும் அனன்யாவும் சொல்லித்தான் நாங்க இதில் ஈடுபட்டோம். தங்களோட தாயார் உயிருக்குத் தொடர்ந்து யாரோ ஆபத்து ஏற்படுத்தறதாகவும், அது அவங்க அப்பாதான்னு அவங்க சந்தேகப்படறதாகவும் சொன்னாங்க…”

ரமேஷ் அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான்.

“நாங்க கிளற ஆரம்பிச்சோம். மஞ்சுவின் உயிருக்கு ஒருவர் குறிவைக்க முக்கியக் காரணம் என்று எங்களுக்குப் பட்டது – மஞ்சுவின் அளப்பரிய சொத்து. எனவே நாம் முதலில் சந்தேகப்பட வேண்டியது, மஞ்சுவின் மரணத்திற்குப் பிறகு அதனை அடையப் பாத்தியதைப்பட்டவர்களையே. மஞ்சுவிற்கு ஒரு தம்பி இருந்தாலும், சொத்து ஏகபோகமாக மஞ்சுவிற்கே அவள் தந்தையால் தரப்பட்டது. எனவே, மஞ்சு உயில் எதுவும் எழுதாத காரணத்தால், அவளுக்குப் பிறகு அது next of kin முறைப்படி அவள் கணவனைச் சேரும்.

“ஒரு முக்கியமான, அதாவது, எங்களுக்கு முக்கியமான ஒரு விஷயத்தை இங்கே ஒத்துக்கறேன். இந்தக் கேஸை உண்மையில் ஸால்வ் பண்ணியது, எங்கள் நிறுவனத்தின் தலைவன் தர்மாதான்! அவன் தன் இண்டியூஷன் மூலமாக இந்தக் கேஸின் முக்கியமான இரண்டு விஷயங்களை அடையாளம் காட்டிவிட்டான். எங்களுக்கு அவற்றின் அர்த்தம் புரிந்து, வழக்கை விளக்கத்தான் நேரமாகிவிட்டது – அதற்குள் நாம் மஞ்சுவையும் இழந்துவிட்டோம்…”

தர்ஷினி நிறுத்தினாள். எல்லோரும் தர்மாவை “இவனா?” என்ற வியப்புப் பார்வை பார்த்தார்கள். தர்மாவின் முகம் “சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை” போல் இருந்தது.

“மஞ்சுவைக் கொல்ல நடந்த முயற்சிகளைப் பற்றிக் கேட்ட உடனேயே தர்மா இந்த வழக்கை ஒரே வார்த்தையில் வகைப்படுத்தினான் – டெஸ்பரேஷன்! இந்தக் கொலை முயற்சிகள் விபத்தைப் போல காட்டப்பட்டாலும், வெற்றியடையும் என்று நிச்சயமாகச் சொல்லமுடியாது, மஞ்சுவைத்தவிர மற்றவர்களும் பாதிக்கப்படலாம். அதாவது, ஆத்திரமாக, அவசரகோலமாகத் திட்டமிடப்பட்டவை என்று சொல்லலாம். இல்லையென்றால் மஞ்சுவைத் தொடர்ந்து கவனித்து, சந்தர்ப்பம் கிடைக்கும்போது வேகமாகத் திட்டமிட்டுச் செய்யப்பட்டவையாக இருக்கலாம்.

“சீனில் இருப்பவர்களில் யாருக்கு இந்த டெஸ்பரேஷன் பொருந்திவரும் என்று தேடினோம். அதிலும் ரமேஷ் மாட்டினார். அவருக்கு அவசரப் பணத்தேவை இருக்கிறது. இல்லையெனில் ஜெயிலுக்குப் போகும் அபாயம்!

“இதனை வொர்க்கிங் ஹைப்பாதஸிஸ் ஆக எடுத்துக்கொண்டு எங்கள் வேலையை ஆரம்பித்தோம். ஆனால் மற்றவர்களைக் கன்சிடர் பண்ணுவதையும் நாங்கள் விடவில்லை. முதல் காரணம், துப்பறிதல் என்பது கெமிஸ்ட்ரி லாபில் காம்பவுண்ட்களை இனம் காணுவது போலே. பார்த்தால் என்ன என்று தெரிகிறதே என்று முடிவெடுத்துவிடக் கூடாது. சோதித்துப் பார்த்தே முடிவெடுக்க வேண்டும். ஒருவேளை முடிவு மாறலாமில்லையா? இரண்டாவது, அந்த டெஸ்பரேஷன் என்ற வார்த்தையோடு ரமேஷின் அவசரம் அத்தனைப் பொருந்தவில்லை.

“அவரை விட்டால் சீனில் இருப்பவர்கள் மனோஜ், சுதாகர். மனோஜுக்கு அண்ணி மறைந்தால் அண்ணன் மூலமாகப் பணம் கிடைக்கலாம் என்பதைத் தவிர நேரடி லாபம் எதுவுமில்லை, எந்த அவசரமோ, அல்லது அண்ணிமீது ஆத்திரமோ இல்லை. சுதாகருக்கோ மோட்டிவ்வே இல்லை – அவன் அக்காவைச் சார்ந்துதான் அவன் வாழ்க்கை இருக்கிறது. அவளுடைய மரணத்தால் அவனுக்குப் பல நஷ்டங்கள் உண்டாகும்.

“ஆனால் முதலிலேயே மனோஜ் மீது எங்களுக்குச் சந்தேகம் உண்டானது. காரணம், மஞ்சுவின்மீது சரிவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரி மோதவந்த சம்பவம் நடந்த அன்று, தன் அண்ணியைக் கண்ட மனோஜ் பெருத்த அதிர்ச்சியடைந்தார். அவர் எத்தனை முயன்றாலும் அந்த அதிர்ச்சியை அவரால் மறைக்க முடியவில்லை…”

இந்த இடத்தில் நிறுத்திய தர்ஷினி மனோஜை ஏறிட்டாள். “மனோஜ், உங்களுக்கு என்ன தெரியும் இந்தக் கொலை பற்றி? தயவுசெய்து சொல்லிடுங்க. இல்லேன்னா சந்தேகம் உங்கமேல திரும்ப வாய்ப்பிருக்கு” என்றாள்.

மனோஜ் வியர்த்தான். சற்றுத் தயங்கினான். பிறகு சொல்ல ஆரம்பித்தான். “அன்னிக்குக் கொஞ்சம் பணம் வேணும்னு என் அண்ணாவிடம் கேட்க அவன் கம்பெனி ஆஃபீஸ்க்கு வந்திருந்தேன். அப்போ அண்ணன் கேபினுக்கு வெளியே யாரும் இல்லை. கதவைத் தட்டப்போன நான், உள்ளே பேச்சுக்குரல் கேட்டு நின்னேன்… அண்ணனும் ஆனந்தும்தான் பேசிட்டிருந்தாங்க.”

“பேசிட்டிருக்கல, திட்டம் போட்டுட்டிருந்தாங்க, சரியா?” என்றாள் தர்ஷினி.

“ஆமா…” என்று ஒப்புக்கொண்டான் மனோஜ். “அண்ணி இரண்டு நாளில் வொர்க்கர்ஸ்க்கும் ஸ்டாஃப்க்கும் சம்பளம் கொடுக்கப் பண்ணைக்குப் போவான்னும், அவளை அடிச்சுப்போட்டுட்டுப் பணத்தைத் திருடிட்டு வந்துடணும்னும் அண்ணன் ஆனந்த்கிட்டச் சொல்லிட்டிருந்தார்…”

“மனோஜ், உண்மையைச் சொல்லுங்க.”

“உண்மையைத்தான் சொல்றேன். வந்து, ஆனந்த் சொன்னார், அவரை அண்ணிக்கு நல்லா தெரியும்ங்கறதால, முடிஞ்சவரை அவங்களுக்குத் தெரியாம அவங்களைத் தாக்கறதாகவும், ஒருவேளை அண்ணி அவரைப் பார்த்துட்டா, அவங்களைத் தீர்த்துக் கட்டறதைத் தவிர வேறு வழியில்லைன்னு…”

ஆனந்த் பொறியில் மாட்டிக் கொண்ட மிருகம் போலத் தீனமாக அலறினான். “நான் சொன்னது உண்மை, ஆனா அவளைக் கொல்லணும்னு நான் நினைக்கவேயில்லை. சும்மா தெனாவெட்டா சொன்னேன், அவ்வளவுதான். அவ முகத்தைப் பார்த்தா என்னால் அவளை அடிக்கக்கூட முடியாது, கொல்றதாவது?”

“அதான் அவங்க முகத்தைப் பார்க்காமலே லாரியை ந்யூட்ரல்ல போட்டு அவங்க மேல மோதும்படி பண்ணியிருக்கீங்க” என்றாள் தர்ஷினி.

“இல்லைங்க, சத்தியமா இல்லைங்க. நான் ஒளிஞ்சு பார்த்துக்கிட்டிருந்தேன், அவ்வளவுதான். லாரி வரதைக் கடைசி நிமிஷத்தில் கவனிச்சு மஞ்சு மயிரிழையில் நகர்ந்து தப்பிச்சா. ஆனா தவறிக் கீழே விழுந்ததில் சிராய்ப்புகள், அதோடு அதிர்ச்சி. அப்போ பண்ணையில் இருந்த சுதாகர் சட்டுன்னு அவங்களைத் தாங்கிப் பிடிச்சு ஆறுதல் சொல்லி வீட்டுக்குக் கூட்டிப் போயிட்டார். அன்று சம்பளம் பட்டுவாடா நடக்கல.

“மறுபடியும் சம்பளம் கொடுக்க அவ வரப் போறான்னு ரமேஷ் தெரிவிச்சார். அப்பவும் அவளைத் தாக்கணும்னுதான் போனேன். அங்கே அவ ரத்த வெள்ளத்தில் கிடக்கறதைப் பார்த்துப் பதறி ஓடி வந்துட்டேன். சத்தியமா இதுதான் நடந்தது.”

ஆனந்த் நிறுத்தியதுமே தர்ஷினி கேட்டாள் – “ஆனந்த், ரெண்டு விஷயங்களைச் சொல்லாம விட்டுட்டீங்க போலிருக்கே?”

“என்னது, பணத்தை எடுத்துட்டு வந்ததா?”

“அது ஒண்ணு. மஞ்சுவைப் பண்ணைக்கு வரச் சொல்லி லெட்டர் எழுதினது நீங்கதானே?”

“என்ன லெட்டர்?” என்றான் ஆனந்த். “எனக்கு எதுவும் தெரியாது. ஒருவேளை ரமேஷ் எழுதியிருக்கலாம்” என்றான்.

“மற்ற அட்டெம்ப்ட்ஸ்?”

“எனக்கு அதெல்லாம் எதுவும் தெரியாது.”

“ரமேஷ், இனி நீங்க பேசணும். உண்மையை ஒத்துக்கிட்டா உங்களுக்கு நல்லது” என்றாள் தர்ஷினி.

“என்ன உண்மை? உங்களுக்கு என்ன தேவையோ, அதை எழுதிக் கொடுத்திடுங்க, அதை அப்படியே நான் கோர்ட்ல படிச்சுடறேன். ரெண்டுநாளா போலீஸ் டார்ச்சர் தாங்க முடியல. இதைவிடச் செத்துடலாம்” என்றான் ரமேஷ்.

“மஞ்சுவுக்குச் சாப்பாட்டில் விஷம் வெச்சது நீங்கதானே? அவளைப் பால்கனியிலிருந்து தள்ளியது நீங்கதானே? பலூன்ல…”

“ஷட் அப். மஞ்சு என் மனைவி. அவளைக் கொல்லணும்னு நான் முடிவெடுத்திருந்தா ஸ்லீப்பிங் பில்ஸைப் பாலில் கலந்து கொடுத்துக் கஷ்டமே இல்லாம முடிச்சிருப்பேன். எல்லோரும் அவ தற்கொலை பண்ணிக்கிட்டதா முடிவு பண்ணியிருப்பாங்க” என்றான் ரமேஷ் கோபமாக.

“கரெக்ட்” என்றாள் தர்ஷினி, ஆச்சரியமாய். “அதாவது மஞ்சுக்கருகில் அதிகம் செல்ல முடியாத ஒருவருடைய க்லம்ஸி அட்டெம்ப்ட்ஸ் போலத் தெரிந்தது இவை. அதனால்தான் நாங்கள் ரமேஷைவிட்டு விலகிச் சென்றோம். அந்த வீட்டில் இல்லாத, மிகக் கோபமான ஒருவருடைய வேலை இது என்று தோன்றியது. அப்படித்தான் ஆனந்த் எங்கள் ஸ்கேன்னரின்கீழ் வந்தார்.

“அப்போதுதான் ஒரு பெரிய ஷாக், எங்களுக்கு! அதாவது ஆனந்த் ரமேஷுக்காக வேலை செய்கிறான் என்பது. அப்போது ஆனந்தின் ப்ரையாரிட்டி பணமே தவிர, பழிவாங்கற வெறி இல்லைன்னு புரிஞ்சது. டெஸ்பரேஷன் என்ற வார்த்தை மறுபடி பொருந்தாமல் நின்றது.

“ஆனால் அதிர்ஷ்டவசமாக, தன்யாவுக்கு வந்த ப்ரெய்ன்-வேவ் காரணமாக, நாங்கள் அடிப்படையாகச் செய்திருந்த தவறு புரிந்தது. இந்தக் கொலை முயற்சிகளைச் செய்த கொடூரமான கொலையாளி யார், அதற்கு என்ன காரணம் என்பது அதன்பின் எங்களுக்குப் புலப்பட்டது.

“அதை விளக்கத் தன்யாவையே அழைக்கிறேன். ஓவர் டு தன்யா” என்று முடித்து அமர்ந்தாள் தர்ஷினி.

(தன்யா பேசும் அடுத்த பகுதி தொடரும்.)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: