மனமோகனவிலாஸ்! பகுதி 2

சாய்ரேணு சங்கர்

மனமோகனவிலாஸ்!

2

2.1

செண்பகராமனுக்குப் படபடப்பாய் இருந்தது. கண்கள் இருட்டிக் கொண்டு வரும் போலிருந்தது.

“என்னப்பா, என்ன ஆச்சு? என்ன பண்ணுது உங்களுக்கு?” என்று பதறிக்கொண்டு அருகில் ஓடிவந்தாள் ஸாம்மி.

“ஒண்ணுமில்லம்மா, பயப்படாதே” என்றார் செண்பகராமன்.

“முகமெல்லாம் வேர்த்திருக்கு, கைகாலெல்லாம் நடுங்கறாப்போல இருக்கு, ஒண்ணுமில்லையாவது? இந்தாங்கப்பா, முதலில் சார்பிட்ரேட் சாப்பிடுங்க” என்று மாரடைப்பு வராமல் காக்கும் மருந்தைக் கொடுத்தாள் ஸாம்மி.

“இதெல்லாம் வேண்டாம்மா. எனக்கு ஒண்ணுமில்லை. சின்ன அதிர்ச்சி, அவ்வளவுதான்.”

அவர் என்ன சொன்னாலும் விடவில்லை ஸாம்மி. அவரை வற்புறுத்தி மாத்திரை சாப்பிட வைத்தாள்.

அப்படியே படுத்துக் கொண்டுவிட்டார் செண்பகராமன். அவரைத் தொந்தரவு செய்யாமல் அவர் கையிலிருந்த கடிதத்தை எடுத்துப் பார்த்தாள் ஸாம்மி. அதில் எழுதியிருந்தது அவளைக் கலங்கச் செய்தது.

2.2

“அந்தச் செந்தில்குமார் வந்து நம்ம ட்ரூப்பில் சேர்ந்ததிலிருந்துதான் பிரச்சனைகள் ஆரம்பமாச்சு. என்னவோ ரொம்பத்தான் கொண்டாடறார் உன் அப்பா அவனை” என்றான் ஸ்ரீஹரி.

ஸ்ரீஹரிக்கு இருபத்தி ஐந்து வயது இருக்கலாம். அவன் அப்பா அந்தக் காலத்தில் மனமோகன விலாஸ் நடிகர். சில திரைப்படங்களில்கூடச் சின்னச் சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார். அம்மாவும் அக்கால நாடக நடிகை. ஸ்ரீஹரி எப்படியோ ஒரு டிகிரி வாங்கிவிட்டான். ஆனால் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே அவனும் நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறான்.

ஸ்ரீஹரி நல்ல லக்ஷணம் – நடிகர்களுக்குத் தேவையான அழகான முகவெட்டு. மாநிறத்திற்குக் கூடுதலான நிறம். பேசும் கண்கள். கம்பீரமான குரல். கிருஷ்ண லீலா நாடகத்தில் அவன்தான் கிருஷ்ணன் – ஹீரோ.

“தங்கமுத்து மாமா நாடகத்தில் நடிக்கும்போதே இறந்துட்டார் இல்லியா? அதான் அப்பாவுக்குச் சின்ன மனக்கஷ்டம்” என்றாள் ஸாம்மி.

“என்ன மனக்கஷ்டம்? தங்கமுத்துக்கு மாரடைப்பு வந்தா உங்கப்பா என்ன செய்வார்?”

“மனசுக்குள்ள வெச்சுக்கோ ஹரி. தங்கமுத்து மாமா இறந்தபோதே அவனுக்கு அப்பாதான் விஷம் வெச்சுக் கொன்னுட்டார்னு பேச்சு வந்ததாம். சூரி அண்ணாதான் சொன்னார்…”

“சூரிக்கு என்ன தெரியும்? யார் பேசினாங்க அப்படி? எல்லோரும் உன் அப்பாவுக்கு விசுவாசமானவங்க, ஸாம்மி. யாரும் உன் அப்பா மேல சந்தேகப்படல. இந்தச் சூரியே எதையாவது கிளப்பிவிடறதுக்காகச் சொல்லியிருப்பான். நீ கவலைப்படாதே.”

“இல்லை, அப்பாவுக்கும் தங்கமுத்து மாமாவுக்கும் எதோ மனஸ்தாபம்னு…”

“அது எப்படி இல்லாம இருக்கும்? அவர் ஸீனியர் ஆர்ட்டிஸ்ட், உன் அப்பா மானேஜர். பேமெண்ட் விஷயமா சின்னச் சின்ன மனக்கசப்புகள், சண்டைகள் உண்டாகச் சான்ஸ் இருக்கு. அதுக்காகக் கொலை பண்ணிடுவாங்களா? மடத்தனமா பேசறதுக்கும் ஒரு அளவு இருக்கணும்” என்றான் ஸ்ரீஹரி.

ஸாம்மியின் மனது சற்றே ஆறுதல் அடைந்தது.

2.3

“ம்… அடுத்து என்ன சீன்? அக்ரூரர் வரவா? ஜல்தி எல்லாரும் வாங்க” என்றார் செண்பகராமன்.

கிடுகிடென அரங்க அமைப்பு மாற்றப்பட்டது. கிருஷ்ணர், பலராமர் இளைஞர்களைப் போல் மேக்கப் செய்யப்பட்டு மேடைக்கு வந்தனர். சுற்றிலும் கோபர்கள், கோபப் பிள்ளைகள். அக்ரூரர் அட்டைத் தேரைச் செலுத்திக் கொண்டு அவர்களை நெருங்கினார்.

தொபேலென்று மேலிருந்து ஏதோ விழுந்தது. மேலே ஜாதிக்காய்ப் பலகைகளை வைத்து விதானம் அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்தது. அங்கே வைக்கப்பட்டிருந்த சுத்தியல்தான் விழுந்திருக்கிறது.

“யாருடா இப்படிக் கவனக்குறைவாய்ச் சுத்தியலை மேல வெச்சது? யார்மேலயாவது பட்டிருந்தா என்ன ஆகிறது?” என்று மேலே பார்த்து உறுமினார் செண்பகராமன்.

“சார்…” என்ற ஸ்ரீஹரியின் தயக்கமான அழைப்பைக் கேட்டுத் தலையைத் தாழ்த்தினார். தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் பலராமனாக நடித்தவர்…

செண்பகராமனுக்குத் தலைசுற்றியது. மயக்கம் வரும்போலிருந்தது.

அவரைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டுபோய் அவருடைய அறையில் விட்டுவந்தான் ஸ்ரீஹரி. அதற்குள் சூரி ஆம்புலன்ஸை அழைத்திருந்தார். சிறிதுநேரத்திலேயே ஆம்புலன்ஸ் வந்து பலராமனை ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவமனைக்குக் கொண்டுபோனார்கள்.

செண்பகராமன் லேசாகக் கண் அயர, ஸாம்மி அறைவாசலுக்கு அருகில் அமர்ந்தாள். அப்பாவுக்கு ஒன்றும் ஆகக்கூடாதே, பலராமன் பிழைக்க வேண்டுமே என்றெல்லாம் கவலையில் ஆழ்ந்தாள்.

“அக்கா” என்று சப்தம் கேட்டது. பாலன். அவர்கள் ட்ரூப்பில் இருக்கும் சின்னக் குழந்தைகளில் ஒருவன். ஒரு கடிதத்தை நீட்டினான். “ஒரு அங்க்கிள் கொடுக்கச் சொன்னார், அக்கா” என்றான்.

ஸ்ரீஹரியாய் இருக்குமோ? ஏன் கடிதம் அனுப்புகிறான்? படபடப்புடன் கடிதத்தைப் பிரித்தாள்.

“இந்தமுறை தப்பிவிட்டான் சிசுபாலன்

எப்போதும் இப்படி நடக்காது

எச்சரிக்கை! எச்சரிக்கை!

விவேகானந்தர் பேரிலே ஒரு

வெட்டுங்கொலையாளி இருக்கிறான்

எச்சரிக்கை! எச்சரிக்கை!”

ஸாம்மியின் உடல் நடுங்கியது. ஒரு முடிவுக்கு வந்தாள்.

2.4

சதுரா துப்பறியும் நிறுவனம்.

இரண்டு கடிதங்களையும் நன்றாக ஆராய்ந்து பார்த்தாள் தன்யா. “நார்மல் நோட் பேப்பர். கையெழுத்துத் தெரியாமல் இருக்கணும்னு மெனக்கிட்டிருக்காங்க. ப்ளாக் லெட்டரில் எழுதியிருக்காங்க” என்றாள்.

“வேடிக்கையாக எழுதியிருப்பாங்களோ? அல்லது இந்த மிரட்டல் இவ அப்பா மனதைக் கஷ்டப்படுத்தும் முயற்சியா?” என்று யோசித்தாள் தர்ஷினி.

“இங்கே வரதுக்கு முடிவெடுக்கச் சற்று முன்னால் வரைக்கும் நானும் இப்படித்தான் நினைச்சேன்” என்றாள் ஸாம்மி. “அந்தச் சுத்தியல் விழுந்த இன்சிடெண்ட்க்கு அப்புறம் என் மனசை மாத்திக்கிட்டேன்…”

“ஏன், அது ஒரு விபத்தா இருக்கக் கூடாதா?” என்றாள் தர்ஷினி.

ஸாம்மி தலையசைத்து மறுத்தாள். “இல்லை தர்ஷினி. அது தவறி விழவில்லை, தள்ளி விடப்பட்டது! அது விழுவதற்குக் கொஞ்சநேரம் முன்பிருந்தே மேலே யாரோ இருக்கறாப்பிலே நிழலாடிட்டே இருந்தது. மேடையிலிருந்து பார்த்தா தெரியாது, நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து பார்த்தா நல்லா தெரியும்!”

“இது பலராமனைத் தாக்குவதற்காக எறியப்பட்டதில்லை, சிசுபாலனைத் தாக்கன்னு சொல்றீங்க, ஆனா அந்த சீனில் சிசுபாலனே இல்லையே” என்றாள் தன்யா.

ஸாம்மி சோக்த்துடன் சிரித்தாள். “இருந்தார் தன்யா. சிசுபாலனா நடிக்கற வெற்றிவேலன்தான் நந்தகோபராவும் நடிக்கறவர்… மீசை, சில மேக்கப் உத்திகள், அவர் குரலைப் பொருத்தமா மாத்திக்கறது… இதனாலெல்லாம் இந்த ரெண்டு கேரக்டரும் செய்யறது ஒரே ஆள்தான்னு ஆடியன்ஸால கண்டுபிடிக்க முடியாது” என்றாள்.

“வாட் அபவுட் பழைய சிசுபாலனோட பையன்? ஒருவேளை லெட்டர் அவனைக் குறிப்பிட்டிருந்தா? அவன் வந்ததுக்கு அப்புறம்தானே இந்த லெட்டர்கள் வர ஆரம்பிச்சது?” என்று கேட்டாள் தன்யா.

“பாஸிபிள். அவனும் சீனில் இருந்தான், கோபர்களில் ஒருத்தனா!”

தர்ஷினி ஒரு ஸ்பைரல் நோட்டையும் பேனாவையும் நீட்டினாள். “இதில் குச்சி மனுஷங்க மாதிரி வரைஞ்சு யாரார் எப்படி நின்னுக்கிட்டிருந்தாங்கன்னு காட்ட முடியுமா? முடிஞ்சா அந்த விதானம், எந்த இடத்தில் சுத்தியல் இருந்தது எல்லாம்…”

ஸாம்மி தயக்கத்துடன் வாங்கிக்கொண்டாள். “எனக்கு வரையவே தெரியாது” என்றவாறே.

அது உண்மைதான் என்பது படத்தைப் பார்த்தபோது புலனானது. ஆயினும் யார் யார் எங்கு நிற்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் குறிப்புகள் மூலம் தெரிவித்திருந்தாள்.

கிருஷ்ணர், அவருக்கு வலப்புறம் பலராமர். பலராமருக்கு அருகில் நந்தகோபர். கிருஷ்ணரை நோக்கி இடப்புறமிருந்து வருகிறார் அக்ரூரர். கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் பின்னால் சில கோபப்பிள்ளைகள். பலராமருக்கு நேர் பின்னால் செந்தில்குமார்.

தன்யாவும் தர்ஷினியும் ஏககலத்தில் பெருமூச்சுவிட்டார்கள்.

“ஸோ, சுத்தி காயப்படுத்தும் இடத்தில் பலராமனாக நடித்தவர், புது சிசுபாலன், பழைய சிசுபாலனின் பிள்ளை என்று மூவர் இருந்திருக்கிறார்கள்! விக்டிம் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்! சரி, இந்த மூன்று பேரோட பேக்கிரவுண்ட் பற்றிச் சொல்லுங்க.”

“பலராமன் பற்றியும் சொல்லணுமா? அவர் இண்டெண்டட் விக்டிம் இல்லன்னு லெட்டர் சொல்லுதே?”

“சொல்றதை எல்லாம் நம்பக்கூடாது, ஸாம்மி. இப்போ நம்ம கண்ணெதிரில் இருக்கற உண்மை, பலராமனாக நடித்தவர் பலத்த காயமடியந்து உயிருக்குப் போராடிட்டு இருக்கார்! யாரையும் விட்டுட முடியாது.”

தர்ஷினியின் செல்ஃபோன் மென்மையாக ஒலித்தது. தர்ஷினி சற்றே விலகினாள்.

ஸாம்மி நடுங்கினாள். “நீங்க என்னோட வந்து தங்கி, இனியும் ஒத்திகையின்போதோ, நாடகத்தின்போதோ எந்த அசம்பாவிதமும் நடக்காம பார்த்துக்க முடியுமா?” என்று கேட்டாள்.

“இப்போ ஒரு கேஸ் நடந்துட்டு இருக்கு. நாளைக்குள்ள அது முடிஞ்சுடும். நாளைக்குச் சாயங்காலம் நாங்க அங்கே வரோம். இந்தத் தர்மாவை அனுப்பலாம்னு பார்த்தா அவன் வாக்ஸினேஷனுக்குப் போயிருக்கான்” என்றாள் தன்யா.

“சீக்கிரம் வந்துடுங்க” என்றாள் ஸாம்மி.

“ஓ! அந்த விஷயமாகத்தான் கால். நாங்க நினைச்சதைவிட இப்போ நடக்கிற கேஸ் சீக்கிரம் முடிஞ்சுடும் போலிருக்கு” என்றாள் தர்ஷினி, தான் அட்டெண்ட் செய்த காலைக் கட் செய்தவளாய். “சரி, அந்த மூன்று நடிகர்கள் பற்றியும் சொல்லுங்க. அப்படியே உங்க நாடக கம்பெனி பற்றியும், அதில் முக்கியமானவங்க பற்றியும் சுருக்கமா சொல்லிடுங்களேன்!”

“இதற்கிடையில், விவேகானந்தர் பேருள்ளவங்க யாராவது உங்க ட்ரூப்பில்…” என்று இழுத்தாள் தன்யா.

“நான் அதை யோசிக்காமல் இருப்பேன்னா நினைக்கறீங்க? விவேகானந்தன், விவேக்னெல்லாம் ஒருத்தரும் இல்லை. ஆனந்தன்னு ஒருத்தன் இருக்கான், ஆனா அவன் கொஞ்சம் மூளை வளர்ச்சி இல்லாதவன். சேவகன் மாதிரி ரோல்லதான் நடிப்பான். மிச்சபடி காப்பி டிபன் வாங்கிட்டு வரது, ஸ்க்ரீன் இழுக்கறது இதுமாதிரி வேலை எல்லாம் செய்வான். விவேகவாணின்னு பட்டம் வாங்கின ஒரு நடிகை இருக்காங்க. யசோதை ரோல்ல நடிப்பாங்க. வேறு யாரும் இல்லை.”

“ரைட். மற்றவங்க பற்றி…”

ஸாம்மி ஒரு பெருமூச்சுவிட்டு, பேச ஆரம்பித்தாள்

2.5

“சார், சார்” சோர்வாகப் படுத்திருந்த செண்பகராமனை எழுப்பினான் ஆனந்தன்.

“என்னடா?” என்று எழுந்துகொண்டார் செண்பகராமன்.

“கோயில்காரங்க வந்திருக்காங்க” என்று பதிலளித்தான்.

வேஷ்டியை இறுகக் கட்டிக் கொண்டு வேகமாய் வெளியே சென்றார் செண்பகராமன். ஹாலில் கோயில் கமிட்டியினர் காத்திருந்தார்கள்.

வணக்கங்கள் பரிமாறி முடிந்ததும் “என்ன, ஏதோ விபத்து நடந்துடுச்சாமே” என்றார் கமிட்டித் தலைவர்.

“ஆமா… வந்து…”

“இதோ பாருங்க செண்பகராமன், நம்ம கோயில்ல உங்க நாடகம் நடந்ததிலிருந்து செல்வச் செழிப்புக்குக் குறைச்சலே இல்லை. கொரோனா காலத்தில்கூட அம்பிகை ஆறுகால பூஜைகளை விடாது நடத்திக்கிட்டா! உங்க “தேவி லீலை” நாடகத்தைப் பார்த்து அம்பாள் மேல பக்திப் பித்து பிடிச்ச பக்தர்கள் இன்னும் கோயிலுக்குச் செஞ்சுக்கிட்டே இருக்காங்க. உங்க கிருஷ்ண லீலையும் இங்கே ரொம்பப் பிரசித்தம்.

“நீங்க ஆதாயத்துக்காக இல்லை, ஆத்மார்த்தமா நாடகம் நடத்தறவங்கன்னுதான் போனமுறை நடந்த அசம்பாவிதத்தை மறந்து உங்களை இங்கே அழைச்சிருக்கோம். அது தப்புன்னு எங்களை நினைக்க வெச்சுடாதீங்க. இனிமே இதுமாதிரி விபத்துகள் நடக்கக்கூடாது” என்று சற்றுக் காரமாகவே சொன்னார் கமிட்டித் தலைவர்.

செண்பகராமனுக்குச் சுர்ரென்று கோபம் வந்தது. அதை அடக்கிக் கொண்டு “ஐயா! இதுமாதிரி விபத்துகள் உங்களைவிட எங்களுக்குத்தான் அதிக நஷ்டத்தையும் மனக்கஷ்டத்தையும் ஏற்படுத்தும்ங்கறதை மறந்துடாதீங்க. நாங்க எதையும் வேணும்னு செய்யல. இனியும் அப்படி நடக்காதபடிக் கவனமா இருக்கோம்” என்றார்.

“நல்லது. கவனமா இருந்தா சரிதான். முக்கியமான விஷயத்தைச் சொல்லியாச்சு. இன்னொரு சின்ன விஷயத்தையும் சொல்லிடறேன்” என்ற தலைவர், “நம்ம கருப்பசாமிப் படையாச்சி இருக்காரே…” என்று கைகாட்டினார். செண்பகராமன் அவரைப் பார்த்துக் கைகூப்பினார். “அவரோட தங்கச்சி மகன் ஊரிலிருந்து வந்திருக்கான். அவனுக்கு நாடகத்தில் நடிக்கணும்னு ஆசையாம். இப்போ ஒரு நடிகர் குறைவா இருக்கறதால, தான் உங்க ட்ரூப்ல சேர்ந்துக்கலாமான்னு கேட்க விரும்பறான்” என்றவர் “இந்தாடா, உள்ளே வா” என்றார் குரலை உயர்த்தி.

செண்பகராமன் உள்ளே வந்த இளைஞனை உற்றுப் பார்த்தார். பல ஆண்டுகள் நாடக உலகிலே பழம் தின்று கொட்டை போட்டவர் ஆதலால், ஒரு பார்வையில் அவரால் மனிதர்களை அவர்கள் நல்ல நடிகர்களா, எந்த மாதிரியான ரோல்களில் பொருந்துவார்கள் என்றெல்லாம் கணிக்க முடியும்.

ஓகே. சராசரி உயரம், பருமன். எந்த மேக்கப்பும் பொருந்தும் சாதாரணமான முகம். தலையில் எந்த விக்கும் வைக்கலாம்.

“உனக்கு எந்த ரோல் வேணும்ப்பா?” என்றார்.

“ஐயா எனக்கு வில்லன் ரோல்களில் நடிச்சுப் பேர்வாங்க ஆசைங்க. ஆனா நீங்க எந்த ரோல் கொடுத்தாலும் செய்யறேன்” என்றான் பையன் பணிவாக.

குரலில் ஒரு மயக்கு இருந்தது. அமிதாப் பச்சன் போன்று வித்தியாசமான குரல்வளம். மோகன்லால் போன்று உணர்ச்சிகளைச் சட்சட்டென்று மாற்றும் குரல்.

முகபாவனைகள் அதிகம் காட்ட மாட்டான். காட்டினாலும் இயல்பாக இருக்காது. ஓவர் ஆக்ஷன் இருக்கலாம். நல்ல நடிகனாகப் புகழ்பெற மிகவும் பாடுபட வேண்டும். ஆனால் கொடுத்த வேடத்தைச் சரியாகச் செய்வான்.

“சரி, முதலில் சின்னச் சின்ன ரோல்கள் பண்ணு. அப்புறம் பார்க்கலாம்” என்றார் செண்பகராமன். “உள்ளே போய், சூரி என்பவரைப் பாரு, அவர் உனக்கு நம்ம ட்ரூப் பற்றி எல்லாம் சொல்லுவாரு” நகர முயன்றவனை நிறுத்தினார். “உன் பேரென்னப்பா?”

“நரேந்திரன்!”

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: