மன்மோகன விலாஸ்! பகுதி 3

சாய்ரேணு சங்கர்

3

3.1

“எங்க ட்ரூப்பை முதன்முதலில் உருவாக்கியது என் கொள்ளுத் தாத்தா. என் தாத்தா காலத்தில் பெரும்புகழ் அடைந்தது. என் அப்பா அதன் எல்லைகளை விரிவுபடுத்தினார். அந்தக் காலத்தில் சென்னையில் நிறைய நாடகம் போட்டிருக்கிறார். அப்போ நாங்க சென்னையிலேயேதான் இருந்தோம். என் ப்ரைமரி ஸ்கூலிங் எல்லாம் சென்னையில்தான்.

“அப்புறம் சென்னையில் புராண நாடகங்களுக்கு மவுசு குறைய ஆரம்பிச்சதும் அப்பா எங்க சொந்த ஊருக்கே வந்துட்டார். ஆனால் கோவில் திருவிழாக்களில் எல்லாம் எங்கள் நாடகங்கள் நடந்துகொண்டே இருக்கும். எங்க ட்ரூப்ல நாடகம் இல்லாத மாதம்னு ஒண்ணு இருந்ததே இல்லை. பெரிசா பணத்தை வாரிக் கொட்டலைன்னாலும் ஸ்டெடியா வருமானம் வந்துக்கிட்டே இருந்ததால கலைஞர்கள், மற்ற மெம்பர்கள் எல்லோருமே திருப்தியா, சந்தோஷமா இருந்தாங்க. இந்தக் கொரோனா காலத்தில்தான் ட்ரூப் அடி வாங்கிச்சு…

“இப்போ எங்க ட்ரூப் மெம்பர்கள் பற்றிச் சொல்றேன். ட்ரூப்போட ஸீனியர் மெம்பர் நடராஜன் ஐயா. எங்க குழு போட்டிருக்கும் 21 நாடக வசனங்களும் அவருக்கு மனப்பாடம். எந்த ரோல் கொடுத்தாலும் நடிச்சிடுவார். இப்போ கொஞ்சம் வயதாகிடுச்சு, இருந்தாலும் கம்பீரம் குறையல.

“தனுஷ் தங்கமுத்து பற்றி ஏற்கெனவே சொல்லிட்டேன். அவங்க பையன் இப்போ நம்ம ட்ரூப்பில் சேர்ந்திருக்கான். அமைதியானவன், அதிகம் பேசறதில்லை.

“விவேகவாணி ராதாம்மா. இவங்க பேர் என்னன்னே யாருக்கும் தெரியாது. ராதை ரோல்ல வந்து நின்னாங்கன்னா ஊரே மயங்குமாம். இப்போ யசோதா, காந்தாரி, கௌசல்யா இதுமாதிரி ரோல்கள். இன்னிக்கும் அம்மன் வேஷம் போட்டா தெய்வீகமாயிருப்பாங்க.

“ஸ்ரீஹரி. எங்க ட்ரூப்போட பழைய ஹீரோ சந்தானம் சாரோட பையன். அவர் பழைய ரஜினிகாந்த், கமல் படங்களிலெல்லாம்கூட நடிச்சிருக்கார். இப்போ இவன் ஹீரோ…”

ஸாம்மியின் கன்னம் சிவப்பதைப் புன்னகையுடன் பார்த்தார்கள் தன்யாவும் தர்ஷினியும்.

“சூரி அண்ணா” சற்றுத் தயங்கித் தொடர்ந்தாள் ஸாம்மி. “ட்ரூப் செகரட்டரி. மானேஜ்மெண்ட்டில் அப்பாவுக்கு ரொம்ப உதவியா இருப்பார். இவருக்குத் தெரியாத கோயில் தேவஸ்தானம் தமிழ்நாட்டிலேயே கிடையாதுன்னு அப்பா சொல்வார். மும்பைல செம்பூர், டெல்லி, புனே, கல்கத்தாவில்கூட இவருக்குக் கான்டாக்ட் உண்டு – இவரால் அங்கெல்லாம் நாடகம் போட்டிருக்கோம். ஆனால் அப்பாவை இப்பல்லாம் மதிக்கறதில்லை – தன்னைப் பார்ட்னரா ஆக்கணும்னு ஒருமுறை கேட்டார், அப்பா மறுத்துட்டார்.”

“ஐ ஸீ…” என்றாள் தன்யா.

இன்னும் பல நடிகர்கள், பல வருடங்களாக இருப்பவர்கள், ஐந்து வருடங்களுக்குள் ட்ரூப்பில் சேர்ந்தவர்கள் என்றெல்லாம் பலரைப் பற்றிச் சொன்னாள். பலராமனாக நடித்தவரைப் பற்றியும் சொன்னாள். பத்து வருடங்களாக ட்ரூப்பில் இருக்கிறார் என்றும் ட்ரூப்பின் ஹீரோயின் இவருக்குத் தூரத்துச் சொந்தம் என்றும் தெரிவித்தாள்.

அப்புறம் ட்ரூப்பின் எழுத்தாளர் பற்றிச் சொன்னாள். “கிருஷ்ணமூர்த்திங்கறது ஒரிஜினல் பெயர். நாடகத்திற்காகக் கலையரசுன்னு மாற்றிக்கிட்டார். ஏழு நாடகங்களைத் தவிர, மற்ற எல்லாமே இவர் எழுதியதுதான். புராணங்களெல்லாம் கரைச்சுக் குடிச்சிருக்கார். தமிழில் நல்ல பாண்டித்யம் உண்டு. அந்தக் காலத்தில் ரசிகர்கள் அவர் வசனங்களைக் கேட்பதற்காகவே வருவாங்களாம். பாஞ்சாலி சபதமெல்லாம் கனல் பறக்கும்பார் என் அப்பா…”

“இப்போ அதெல்லாம் போடறதில்லையா?” என்று கேட்டாள் தர்ஷினி.

“இல்லை, கிருஷ்ண லீலை, தேவி லீலை, இராமாயணம் இந்த மூன்றுதான் இப்போ மெயின். அப்பப்போ கர்ணன், சாவித்ரி சரித்ரம்னு போடுவோம். பழைய ஸ்க்ரிப்டையெல்லாம் கலையரசு சார் இந்தக்கால இளைஞர்களுக்குப் புரிகிற மாதிரி மாற்றியிருக்கார். காலத்திற்குத் தகுந்த மாதிரி நாமும் மாறலைன்னா வெற்றியடைய முடியாதும்பார் என் அப்பா. ஆனா நாங்க ஸ்க்ரிப்டில் மாறுதல்கள் செய்வோமே தவிர, சமூக நாடகங்கள் போட்டதேயில்லை” என்றாள் ஸாம்மி.

“புராணம் உங்க ஸ்பெஷாலிட்டி ஆச்சே” என்று சிரித்தாள் தன்யா.

ஸாம்மி “தன்யா, இந்தக் கேஸ் பற்றி என்ன நினைக்கறீங்க? சிசுபாலன்மீது யாருக்கு என்ன கோபம் இருக்க முடியும்? சிசுபாலனா நடிச்சதைத் தவிர எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத இரண்டு நடிகர்கள் தங்கமுத்துவும் வெற்றிவேலரும். அவங்களைக் கொல்ல யார் முயற்சி செய்யக்கூடும்? ஏதாவது போட்டிக் குழுவைச் சேர்ந்தவங்க பண்ணல்லாம் சான்ஸ் இல்லை. ஏதாவது அவதூறு கிளப்புவாங்க, பயமுறுத்துவாங்க, ஆனா பாடிலி இஞ்சுரி…” என்று நம்பமுடியாதவள்போல் தலையசைத்தாள்.

தன்யா “பார்க்கலாம்” என்றாள்.

3.2

ஸாம்மி கிளம்பிப் போனதும் தன்யாவும் தர்ஷினியும் தங்களுடைய இன்னொரு வழக்கில் கவனம் செலுத்தினார்கள். அன்று மாலைதான் ஸாம்மியின் வழக்கை அலச அவர்களுக்கு நேரம் கிடைத்தது.

“பழிவாங்குதல்?” என்றாள் தர்ஷினி, வழக்கம்போல் நறுக்கென்று.

“பாஸிபிள். அவன்… செந்தில்குமார்தானே பேரு? அவனைக் கவனிக்கணும்” என்றாள் தன்யா. “ஆனா…”

“ஆனா என்ன?”

“சிசுபாலன்மீது அவனுக்கு என்ன கோபம் இருக்க முடியும்? செண்பகராமன் மீதுதானே கோபம் இருக்கும்? லெட்டர் வரைக்கும் புரியுது… அந்தச் சுத்தியல்…”

“அவன் நேர் கீழேதான் இருந்திருக்கான்” என்றாள் தர்ஷினி.

தன்யா தலையசைத்து யோசனையில் ஆழ்ந்தாள்.

3.3

“வாப்பா நரேந்திரா! நீ இந்திரன் வேஷங்கட்டுவியா?” என்றார் சூரி அன்று மாலை.

“சரிங்க” என்றான் நரேந்திரன் பணிவாக.

“அடே அப்பா! என்ன பவ்யம்! இப்போ எல்லாரும் இப்படித்தான் இருப்பீங்க, கொஞ்சம் புகழடைஞ்சுட்டா போதும், தலைகால் தெரியாது. தனியா ட்ரூப் வைக்கலாம்னு தோணும், ட்ரூப்புக்கே தான்தான் ராஜான்னு தோணும்” என்று கிண்டல் செய்தார் சூரி.

“அண்ணா தப்பா நினைக்காதீங்க. கொஞ்சநாள் ட்ராமால இருந்துட்டு சினிமாவுக்குப் போகணும்னு எனக்கு ஆசை. நம்பியார் மாதிரி வில்லனா…”

“அப்போ நாடகம் டெம்பரரி! வாய்ப்புக் கிடைக்கற மட்டும் பயன்படுத்திக்கப் போறே! உன்னைச் சொல்லிக் குற்றம் இல்லைப்பா! பலபேர் அப்படித்தான் இருக்காங்க. வளர்ந்த இடத்தை, வளர்த்துவிட்ட மனிதர்களை மறந்துடறாங்க. சரி, சினிமாக்குப் போகறதுக்கு முன்னாடி காமெடியனா ஆகப்போறேன், வில்லனா ஆகப்போறேன்னெல்லாம் பேசுவாங்க. சில படங்கள் ஓடிடுச்சுன்னா, உடனே கதாநாயகனா நடிக்க ஆசை வந்துடும்.

“அந்தக் காலத்தில நாடகக் குழுவில் இருக்காங்கன்னா அது ஒரு பெருமை. நாடக நடிகர்கள்னா, இக்காலச் சினிமா நடிகர்கள் மாதிரிப் பிரபலமா இருப்பாங்க. நான் ஹெரான் ராமசாமி ட்ரூப்பில் இருந்தவன்.

“இப்பல்லாம் அனுபவத்திற்கு மதிப்பு இல்லாம போச்சு. சின்னப் பசங்க வெச்சதுதான் சட்டம்னு ஆகிடுச்சு. இந்த ஸ்ரீஹரியைப் பார் – அதுக்குள்ள ஹீரோ. எதுக்கு? எதுக்குன்னேன்? நடராஜன் இன்னும்கூட ஹீரோவா நடிப்பார். இல்லேன்னா, நான் இல்லையா, வேறு அனுபவமுள்ளவங்க இல்லையா? வரவரச் செண்பகராமன் சாருக்கும் புத்தி பேதலிச்சுப் போச்சு. மேனேஜ்மெண்ட்டுக்குள்ள எதுக்காக அவர் மகளைக் கொண்டு வரணும்? அதுக்கு என்ன தெரியும்? ஏதோ துணைக்கு வந்தா பரவாயில்லை… என் பேரில்கூட அவருக்குக் கோபம் இருக்கு” சூரி பேசிக் கொண்டே போனார்.

“சேச்சே, உங்க மேல அவருக்கு எப்படிங்க கோபம் இருக்கும்? உங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் என்னிடம் மதிப்பாதான் பேசறாரு” என்றான் நரேந்திரன்.

“அட போப்பா, விஷயம் தெரியாதவன் நீ! மகளை நாடகத்துக்கெல்லாம் கூட்டி வராதீங்க, சீக்கிரம் கட்டிக் கொடுத்திருங்கன்னேன், இது ஒரு தப்பா? என்மேல கோவிச்சுகிட்டு இப்போ எதையும் மகள்கிட்டக் கேட்டுத்தான் செய்யறது… ஒண்ணும் இல்லப்பா, புதுசா வந்திருக்கானே, அந்த செந்தில்குமார், அவனுக்கு நல்ல ரோல் கொடுக்கச் சொல்லிச் சிபாரிசு செய்யறாரு! சரி, நம்ம தங்கமுத்து பையன்தான், அதுக்காகத் தலைதெறிச்சு விழறதா? படிப்படியாதான் முன்னுக்கு வரணும்” படபடவென்று பொரிந்தார் சூரி.

“தங்கமுத்து சாரை அவருக்கு ரொம்பப் பிடிக்குமா சூரி அண்ணா?” என்று கேட்டான் நந்ரேந்திரன்.

“பிடிக்கும் பிடிக்கும், சட்டைதான் பிடிக்கும்! பிடிக்கற சட்டையை உதறி எறிஞ்சுடுவாங்கள்ள, அப்படித்தான் ஆகிப் போச்சு! இந்தத் தங்கமுத்துப் பய, செண்பகராமன்கிட்ட சொல்றான் – அவன்தான் சின்ன வயசிலேர்ந்து ட்ரூப்பில் இருக்கானாம், அதனால் பிற்காலத்தில் ட்ரூப் அவனுக்குதான் வந்து சேரணுமாம்! செண்பகராமனும் கேட்டுட்டார் – ஏம்ப்பா நான் என்ன அனாதையா, பிள்ளைகுட்டி இல்லாதவனான்னு. இவ்வளவு வளர்ந்த மகனை வெச்சுகிட்டு, தங்கமுத்து பதில் சொல்றான் – உங்க மகளை எனக்கே கட்டி வெச்சிருங்கன்னு! செண்பகராமனும் அவ்வளவு நல்ல கேரக்டர் இல்லே! சின்ன வயசில் நடிகைகளோடு நிறைய கூத்தடிச்சிருக்காரு! இருந்தாலும்…”

“என்னய்யா சூரி! வழக்கம்போல வம்பா? ஒரு ஆள் கிடைச்சா விடமாட்டியே நீ!” என்றவாறே அறைவாசலில் ஒரு முதியவர் பிரசன்னமானார்.

சூரி படாரென்று எழுந்தார். “வாங்க கலையரசு ஐயா” என்றார். “தம்பி, சாரைத் தெரியுமில்ல, நம்ம கதைவசனகர்த்தா” என்றார்.

“வணக்கங்க” என்றான் நரேந்திரன்.

அவனை நோக்கித் தலையசைத்துவிட்டு, “சூரி, ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்றார் கலையரசு.

“சரி. நரேந்திரா, அரைமணியில் வந்து ஸ்க்ரிப்ட் வாங்கிக்க. சீக்கிரம் நெட்டுரு பண்ணிடு. சாயந்திரம் ஒத்திகை இருக்கு” என்றார் சூரி. நரேந்திரன் வெளியேறினான்.

கலையரசு அமர்ந்தார். புது நாடகத்தில் சில வசனங்களைச் சேர்ப்பதுபற்றி இருவரும் பேசினார்கள். அந்த உரையாடல் முடிந்ததும் “சூரி, எல்லாரையும் நம்பி எல்லாத்தையும் சொல்றது நல்லதில்லே! இந்தப் பையன் இப்போதான் சேர்ந்திருக்கான், அவன் வந்ததிலிருந்து இங்கே நிலைமை வேற சரியில்ல” என்றார் கலையரசு.

“சேச்சே, இவன் நம்ம கோயில் கமிட்டிக்காரங்களோட…”

“…. சொந்தக்காரன்னு சொன்னான், ஒத்துக்கறேன். அது உண்மையான்னு நாம என்னத்தைக் கண்டோம்? முப்பது வருஷத்துக்கு முன்னாடி நம்ம ட்ரூப்ல வந்து சேர்ந்தாளே சிவகாமு, நினைவிருக்கா?”

சூரி சற்று யோசித்தார். “ஜிகினா சிவகாமுவையா சொல்றீங்க?”

“அவளேதான்! அவ ஜாடை இருக்கு இந்தப் பயலுக்கு!”

“அப்படியா?” என்று யோசித்த சூரி “ஆமா, இப்போ யோசிச்சுப் பார்த்தா தெரியுது. இவன் சிவகாமுவோட பிள்ளையா இருப்பானோ? அப்… அப்படின்னா…” என்று திணறினார்.

“இந்தபாரு, அதுக்குத்தான் சொல்றேன் விஷயங்களை மனசோட வெச்சுக்கன்னு! நீ செண்பகராமன் நடிகைகளோட கூத்தடிச்சவர்னு சொல்றே, அந்தப் பையனுக்குக் கண்ணில் பொறி பறக்குது! நான் ஜன்னல் வழியா பார்த்துட்டேதானே வரேன்!” என்றார் கலையரசு.

சூரி தவித்துப் போனார்.

3.4

மாலை ஒத்திகை நடந்துகொண்டிருந்தது.

செண்பகராமன் தெளிந்திருந்தார். வழக்கம்போல் அவருடைய சிம்மக்குரல் அவ்வப்போது கேட்டது.

நடுவில் ஆனந்தன் டீ கொண்டுவந்தான். அவருடைய பிரத்யேகக் கோப்பையைக் கழுவி அவருக்குத் தனியாக எடுத்துவந்திருந்தான்.

எல்லோரும் தேனீர் அருந்திக் கொண்டே தங்களுக்குள் பேச்சில் ஈடுபட்டார்கள். புதியவர்களான செந்தில்குமாரும் நரேந்திரனும் ஒன்றாகச் சேர்ந்து பேசிச் சிரித்தார்கள். ஸ்ரீஹரி சமிக்ஞையால் ஸாம்மியை அழைத்தான். இருவரும் சற்று ஒதுங்கிச் சென்று பேசினார்கள்.

தேனீர் இடைவேளை முடிந்ததும் “ஆ… ஆவட்டும். அடுத்து என்ன சீன்? ராஜசூயம் பார்ததுரலாமா?” என்றார் செண்பகராமன்.

ஸ்ரீகிருஷ்ணனுக்கே முதல் தாம்பூலம் என்கிறார் பீஷ்மர். சகதேவன் கிருஷ்ணனுக்குப் பாதபூஜை புரிகிறான். சிசுபாலன் அதனை எதிர்த்து எழுந்து நிற்கிறான்.

மௌனம்.

“இன்னாடா வெற்றிவேலு! இத்தனை ஒத்திகைக்கப்புறம் வசனம் மறந்துபோச்சா? பேசுடா! விசித்திரமாக இருக்கிறது உங்கள் செய்கை – அதிலேர்ந்து ஆரம்பி” என்று எடுத்துக் கொடுத்தார் செண்பகராமன்.

வெற்றிவேலர் வசனத்தை ஆரம்பிக்கவில்லை.

“த… தலையைச் சுத்துது அண்ணே” என்று தடுமாறியவாறே மயங்கி விழுந்தார் வெற்றிவேலர்.

“வெற்றிவேலு” என்று தன்னை மறந்து கூவியவாறே எழுந்து நின்றார் செண்பகராமன். கையிலேயே இன்னமும் இருந்த கோப்பையும் சாஸரும் தவறிக் கீழே விழுந்தன. சாஸருக்கும் கோப்பைக்கும் இடையில் மடித்து வைத்திருந்த காகிதமும் பறந்து விழுந்தது. ஸாம்மி அதனை எடுத்துப் பார்த்தாள்.

“சிசுபாலன் மடிந்தான் – ஸ்ரீகிருஷ்ண யுத்தமிது

அதர்மத்திற்கெதிரான விவேகானந்தன் யுத்தமிது

இன்னமும் முடியவில்லை, இனிமேலும் தொடரும்

எச்சரிக்கை! எச்சரிக்கை!”

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: