அருகிலே_உள்ள_தூரமே!

அருகிலே_உள்ள_தூரமே! ============ #சிறுகதை#தீபப்ரியா_ரமணன்

அந்த அழைப்பிதழை நூறாவது முறையாகப் பார்த்தார் வரதராஜன். ஆச்சரியம், திகைப்பு, வெறுப்பு என்று அலையலையாக ஏதேதோ அவருக்குள். இந்த விழாவின் முக்கிய ஸ்பான்சர் அவர். தமிழ் நாட்டின் தலையாய பிராண்டுகள் என்று லிஸ்ட் போட்டால் – முதல் ஏழு இடங்களில் வரதராஜனின் நிறுவனங்கள் தாம் இருக்கும்.

உப்பு முதல் சிமெண்ட் வரை ஒன்று பாக்கியில்லை. பிள்ளையில்லாச் சொத்தை நாளைக்கு எப்படியிருந்தாலும் பங்காளிகள் தான் கூறு போட்டுக் கொள்வார்கள். எனவே முடிந்த போதெல்லாம் நிவாரணம், உதவித் தொகை, விருதுகள், நன்கொடைகள் என்று , வாய்ப்புகளை நழுவ விடாமல்… புண்ணியமும் சேர்த்துக் கொள்கிற வியாபார மூளை!

இது போன்ற விருது விழாக்களில் சம்பிரதாயமாக ஒரு மணி நேரம் போல இருந்துவிட்டு வருவார். ஆனால் இன்று போகத்தான் வேண்டுமா என்ற யோசனை… போய்த்தான் ஆக வேண்டுமென்று ஜானகியும்…

=============================================================கார், நெடுஞ்சாலையில் விரையத் தொடங்கியது.ராஜலெட்சுமியோ, ஒரு பெருங்காட்டில் நடக்கும் செவிடனைப் போல மிகத் தனிமையாகவும், தவிப்பாகவும் உணர்ந்தார். அவருடைய நினைவலைகள் காரின் வேகத்தை விஞ்சி, காலத்தைக் குடைந்து சென்றது.

“வெல்டன் ராஜ்! கிரேட் ப்ராஜக்ட்! வெரி இன்னோவேடிவ்!” – வரதராஜனுடைய கைகளைப் பற்றிக் குலுக்கிய ஜானகி அவனுடைய வருங்கால முதலாளி. விவாகரத்தானவள். சமீப காலமாக ஆஃபீசுக்கும் வந்து போகிற அவள் சட்டென்று ராஜனின் கூர்த்த அறிவையும், தொலை நோக்கையும் கண்டு கொண்டாள்; கவரப்பட்டாள். முன்னெல்லாம் அவள் இப்படி குதூகலமாக அவன் கையைப் பற்றிக் குலுக்கிடும் போது, வரதராஜனுக்குச் சங்கோஜமாக இருக்கும்; இப்போது சகஜமாகி இருந்தது; இயல்பாக அந்தக் கைகளைத் தொட்டுப் பேச முடிந்தது.

காரில் அவளோடு முன்சீட்டில் உட்கார்ந்து, அவள் பெர்ஃபியூமில் கிறங்கி மூச்சடைத்துப் போவது சுகமாக இருந்தது. அவள் அவனை உயர்த்திப் பாராட்டும் போதெல்லாம், அவள் காதுக்கருகே “ராஜா கையை வெச்சா அது ராங்கா போனதில்லை!” என்ற சமீபத்திய ஹிட் வரியைப் பாட வைத்தது! “ராஜ், ஃபார் எ சேஞ்ச், உங்க வீட்டுக்கே போகலாமே!” – எப்போதும் போகும் ஹோட்டலைத் தவிர்த்து அவள் வரதராஜனின் வீட்டை நோக்கித் தன் ஃபியட் காரை விரட்டினாள். அவன் பதட்டமானான்; இந்த சந்திப்பு நடக்குமென்பது அவனுக்குத் தெரியும்.. அதன் உள்நோக்கமும் தெரியும்…

ஆனால், ஜானகி, திடுதிடுவென்று இப்படிப் போய் நின்றாள் லெக்ஷ்மி என்ன செய்வாள் பாவம்? காலிங் பெல்லை அழுத்தியதும், இடுப்பில் ஏற்றிச் சொருகியிருந்த சேலையை அவசரமாக உதறி, “வாங்க, வாங்க” என்றபடியே, இடது கையால் சிரமப்பட்டு பூட்டைத் திறந்து அவஸ்தையாக அசடு வழிந்தாள், ராஜலெக்ஷ்மி! வலது கையிலிருந்த கடலை மாவுக் கரைசலும், எண்ணெய் வாசனையும்… அவளது பரபரப்பைக் கூட்டி அழகாக்கின.. “க்யூட்!” — கையில் கோடாக வழிந்த மாவைத் தோய்த்து, லெக்ஷ்மியின் மூக்கு நுனியில் ஜானகி தடவிச் சிரித்தபோது, ராஜுவும் சேர்ந்து சிரித்த விதம் லெக்ஷ்மிக்குப் பிடிக்கவில்லை.

காஃபியை உறிஞ்சியபடியே, “எங்க ரெண்டு பேருக்குமே ஒரே வேவ்லெங்த்; ஒரே மாதிரி ரசனைகள், பிசினஸ்ல பெருசா சாதிக்கணும்ங்கிற வெறி.. ப்ச், மூணு வருஷத்துக்கு முன்னாடியே பார்த்திருக்கணும் இவரை!” – ஜானகியின் கண்கள் ஆர்வமாக ராஜை நொக்கின.“அதென்ன மூணு வருஷம்னு கணக்கு?” “என் கல்யாணங்கிற ஆக்சிடெண்ட் அப்ப தான்..!” கண்ணடித்துச் சிரித்தாள்.“ஓ..இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை..” கண்களில் காதல் வழிய வரதராஜனைப் பார்த்துக் கொண்டே கேலி பேசிய லெக்ஷ்மி – தனக்குத் தானே அக்கணத்தில் குழி வெட்டிக் கொண்டாள்.

“வெரி ட்ரூ.. “ – லெக்ஷ்மி, நான் உன்னை உபத்திரவம் பண்ணவே மாட்டேன்; பணமா, வைரமா உனக்கு அபிஷேகம் பண்றேன்; அவரையே எங்க கம்பெனியின் எம்.டி. ஆக்குகிறேன். உன் இருப்புக்கு நான் தடையில்லை; ஆனால் என் பெருவிருப்பம் அவர்! செண்டிமெண்ட்களால் அவர் எதிர்காலத்தைக் நீ கெடுக்க மாட்டேன்னு நினைக்கிறேன்!” தான் தீர்மானித்ததை நோக்கி லெக்ஷ்மியைச் சாமர்த்தியமாக நகர்த்தினாள், ஜானகி.“நமக்கும் தான் குழந்தை இல்லையே லெக்ஷ்மி!” – அவள் அடி பட்டவளாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் கண்களிலிருந்த உறுதியும், வார்த்தைகளில் தெறித்த வறட்சியும்… கைமீறிவிட்டான்! மனசால் விலகியும் விலக்கியும் விட்ட ஒருவனை, அதற்கப்புறம், லெக்ஷ்மி ஒரு கணம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை!

================================================================“பைத்தியமா நீயி? ஓயாம வூட்டுத் திண்ணையில குந்திகினு பசங்களை பள்ளியோடத்துக்கு அனுப்பு, அனுப்புன்னு உசுரை வாங்குறியே?” – எடுத்தெறிந்து பேசியவர்களிடம் ராஜலெக்ஷ்மி மறுபடியும் போய் நின்றாள். “ஐ…யோ! வந்துடுச்சு!” என்று அலுத்துக் கொள்வார்கள்.

அவள் ஒருத்தி அங்கிருப்பதைப் பற்றிய பிரக்ஞை இல்லாதவர்களாக துவைப்பார்கள்; சமைப்பார்கள்; சாப்பிடுவார்கள்; தூங்குவார்கள். அலுப்பில்லாமல் அழிச்சாட்டியமாக அவள் ஆறு மாதங்களுக்கும் மேலாக பின்னால் அலைவதைக் கண்டு, “இந்தா, உனக்காகத் தான் விடுறேன்! உன்னை நம்பித்தான்!” –முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு பள்ளிக்கு அனுப்புவார்கள்.

. தூசி தட்டி எடுத்த சான்றிதழ்கள், ஒரு குக்கிராமத்தில், ராஜலெக்ஷ்மியை அரசுப் பள்ளி ஆசிரியை ஆக்கின. ‘லெக்ஷ்மி டீச்சர்’ குழந்தைகளைத் தேடிப்போகப் போக அவளைத் தேடி, பத்திரிகைகளும், சேனல்களும், விருதுகளும் வர ஆரம்பித்தன. ஓய்வு பெற்ற பின்னரும் ஓடியோடி இதுவரை ஏழாயிரம் குழந்தைகளுக்குப் படிப்பு வாசனை என்ன என்பதைக் காட்டியிருக்கும் ப்ரியமான ‘லக்ஷ்மி டீச்சர்’, பெயரால் ராஜலெக்ஷ்மி என்றாலும் கை வீணையில்லாச் சரஸ்வதி… விழாவில் ராஜலெஷ்மியைப் பற்றிய காணொலி திரையில். ஜானகியும் வரதராஜனும் நுழைய கேமராக்கள் அவர்களைத் தொடர்ந்தன.

கல்வி அமைச்சர் கைகளால் விருது வாங்கிய ராஜலெக்ஷ்மி இவர்களைப் பார்க்கத் தவறவில்லை. “இவ்வளவு பேஷன், அர்ப்பணிப்பு! எப்படிச் சாத்தியம் மேடம்?”“முப்பத்திரெண்டு வருஷத்துக்கு முன்னால, ரொம்பத் திறமைசாலியான இளைஞர்கள் ரெண்டு பேர், எ ஜெண்டில்மேன் அண்ட் எ லேடி, என்னோட ஒரு கையெழுத்தால அவங்களோட வாழ்க்கையே வெளிச்சமாயிடும்னு நம்பிக்கையோட கேட்டாங்க; ஒரு உந்துதல்ல, நானும் உதவினேன்; நிஜமாகவே அவங்க வளர்ச்சி பிரமிப்பா இருந்துது; தட் வாஸ் த ஸ்பார்க்! “ ராஜலெக்ஷ்மி புன்னகைத்தார்.

முன்னிருக்கையில், அமரவைக்கப்பட்ட வரதராஜனும் ஜானகியும் கொந்தளித்த உணர்வுகளால் திணறினார்கள். “தேங்க் காட்! அந்த ஸ்பார்க் மட்டும் இல்லாம போயிருந்தா?” – தொகுப்பாளினி பேசத் தூண்டினாள். “யாருக்குத் தெரியும்… ஒருவேளை, இது போன்ற மாலை நேரத்தில, கதவைத் திறக்கிற வரைக்கும் காலிங் பெல்லில் வைச்ச கையை எடுக்கத் தெரியாத கணவனுக்காக, அவசர அவசரமாக பஜ்ஜியும் காபியும் ரெடி பண்ணிட்டு இருப்பேனோ என்னவோ?” – பெரிதாகச் சிரித்து விட்டு மேடையை விட்டு இறங்கினார் ராஜலெஷ்மி. தலைக்குள் ஆயிரம் எரிமலைகள் வெடிக்க வரதராஜன் ராஜலெக்ஷ்மியைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: