மன்மோகன விலாஸ்! 4

சாய்ரேணு சங்கர்

மன்மோகன விலாஸ்! 4

4

4.1

“மிஸ்டர் வெற்றிவேலர்?” என்று பரபரப்பாய்க் கேட்டவாறே ஸ்கூட்டியிலிருந்து இறங்கினாள் தன்யா.

“ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போயிருக்காங்க. இருபத்திநாலு மணிநேரம் கழிஞ்ச பின்னாடிதான் எதுவும் சொல்ல முடியும்னு சொல்றாங்க…” என்றாள் ஸாம்மி.

“அது டாக்டர்ஸ் சொல்லறதுதான், கவலைப்படாதீங்க” என்றாள் தர்ஷினி.

“இல்ல தர்ஷினி. பிழைக்கிறது கஷ்டம்னு அவங்களுக்குள்ள பேசிக்கிட்டாங்க…”

“நல்லதையே நினைப்போமே” என்று தன்யா இந்தப் பேச்சை முடித்தாள்.

“உங்களை நான் என்ன சொல்லி அறிமுகப்படுத்தறது?” என்று ஸாம்மி கவலையாய்க் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்கள் மூவரும் ஹாலுக்குள் நுழைந்துவிட்டார்கள்.

ஹாலில் ஏற்கெனவே ஐந்தாறு பேர் அமர்ந்திருந்தார்கள். எல்லோருடைய முகமும் சீரியஸாக இருந்தது.

“ஸாரி, நாங்க அப்புறம் வரோம்” என்று பின்வாங்கினாள் ஸாம்மி.

“இரும்மா, நீயும் கேட்க வேண்டிய விஷயம்தான் இது” என்றார் செண்பகராமன். தன் மகளுக்குப் பின்னால் இரண்டுபேர், அவர் முன்பின் அறியாதவர்கள், நிற்கிறார்கள் என்பதைக்கூடக் கவனிக்காத அளவிற்கு ஆடிப் போயிருந்தார்.

“இதோ பாருங்க செண்பகராமன், எங்களால சென்னையைச் சேர்ந்த நாடகக் குழு ஒன்றையே திருவிழாவிற்குக் கூப்பிட்டிருக்க முடியும். அப்போ பயணச் செலவு, இத்தனைநாள் தங்கற செலவு எதுவுமே இருந்திருக்காது. உங்களுக்குத் தெரியும் நாங்க உங்களை ஏன் வரவழைச்சோம்னு. நீங்க நல்ல புராணக் கதைகளைப் போடறீங்க, உங்க எழுத்தாளர் நிறைய ஆய்வு செய்து நாடகத்தை எழுதிருக்காருன்னுதான். எங்க கோயிலுக்கு வர பக்தர்களும் உங்க நாடகம் பார்க்க ரொம்ப ஆவலா இருந்தாங்க. அதனால்தான் முன்னாடி உங்களைக் கூப்பிட்டபோது நடந்த அசம்பாவிதத்தையும் மறந்து உங்களையே மறுபடி இன்வைட் பண்ணினோம்… இப்போ இப்படித் தொடர்ந்து நடக்குதுன்னா…” என்று நிறுத்தினார் கமிட்டித் தலைவர்.

“ஐயா, விபத்து நடக்கறதையும் ஃபுட் பாய்ஸன் ஆகறதையும் நாங்க தடுக்க முடியுமா சொல்லுங்க?” என்றார் செண்பகராமன் பலவீனமாக.

“வெளியே வேணும்னு விஷம் கொடுத்ததுன்னு இல்ல பேசிக்கறாங்க” என்றார் ஒரு கமிட்டி மெம்பர்.

“வெளியே பேசற வம்பெல்லாம் இங்க பேச வேண்டாம்” என்றார் தலைவர் சற்றுக் கோபமாக. “செண்பகராமன், அது பாய்சனிங்கோ, ஃபுட் பாய்சனிங்கோ, அது உங்க குழுவோட கவலை. எங்க கவலை என்னன்னா, ஒரு கொடூரமான காலத்திலிருந்து இப்பதான் மீண்டுட்டு வரோம். நமக்காகத் தவம் இருக்காப்பில ஆத்தா மகமாயி பூட்டின கோயிலிலேயே இத்தனைநாள் ஒருவர் முகமும் பார்க்காம இருந்துட்டா. இப்போதான் திருவிழாவுக்கு அனுமதி கிடைச்சிருக்கு, இப்போ அபசகுனம் மாதிரி இந்தச் சம்பவங்கள் நடந்துட்டே இருந்தா நாங்க என்ன பண்றது? நீங்களே சொல்லுங்க” என்றார்.

“இதில் நடந்தது எதுவும் எங்க தப்பில்லைங்க. நாடகக்காரங்க உணர்ச்சிவசப்பட்டவங்க. ஏதோ பழைய பகையைத் தீர்த்துக்கறதுக்காக யாரோ இப்படியெல்லாம் செய்யறாங்கன்னு நினைக்கறேன்” என்றார் கலையரசு.

“என்னங்க கேணத்தனமா பேசறீங்க? சிசுபாலன் மேல ஒருத்தனுக்குப் பகையா? இது உணார்ச்சிவசப்பட்டவன் செய்யற வேலை இல்லீங்க, ஏதோ சைக்கோ வேலை மாதிரி தெரியுது! உங்க குழுவில் அந்த மாதிரிப் பைத்தியங்கள் யாராவது இருக்காங்களா?”

தங்கள்மீது தவறில்லை என்று சுட்டிக்காட்டப் போய், அது தங்களுக்கே பிரச்சனையாக முடிந்துவிட்டது என்று கலையரசு அப்போதுதான் உணர்ந்தார் போலும். திணறினார்.

“அப்போ எங்களை ஊருக்குப் போன்னு சொல்றீங்களா?” என்றார் செண்பகராமன்.

“வேற என்ன சொல்லச் சொல்றீங்க, செண்பகராமன்? உங்க ஊர்லயும் கோயில் இருக்கு. இதுமாதிரி நடந்தா நீங்க என்ன செய்வீங்க?” என்றார் கமிட்டித் தலைவர்.

“சார், பெரியவங்க இருக்கற இடத்தில் நான் முந்திரிக்கொட்டை மாதிரிப் பேசறேனேன்னு நினைக்காதீங்க” என்றாள் தன்யா. “நீங்க சொல்றது ரொம்பச் சரி. யாருக்குமே நடந்திருக்கற சம்பவங்கள் கவலையைக் கொடுக்கும். ஆனா நடந்திருக்கற எதுவும் நாங்க வேணும்னு செய்ததில்லை. அதோட, இங்கே வந்திருக்கற நாற்பது சொச்சம் கலைஞர்களை நினைச்சுப் பாருங்க. இருபது சொச்சம் தொழிலாளர்களை நினைச்சுப் பாருங்க. அவங்க எல்லோரும் இந்தக் கோவிட் காலத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க? அவங்களுக்கு வெகுநாளைக்கு அப்புறம் கிடைக்கிற முதல் வருமானம் சார் இது! இன்னும் ரெண்டு நாள் டைம் கொடுங்க. இங்கு நடக்கிற பிரச்சனைகள் எல்லாத்தையும் சரி பண்ணி, நீங்க எதிர்பார்க்கிற அளவு அற்புதமா நாடகத்தை நடத்தித் தரோம்” என்று வேண்டினாள்.

கமிட்டி அங்கத்தினர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் எல்லோருக்குமே தன்யாவின் பேச்சு உள்ளத்தைத் தொட்டிருக்க வேண்டும்.

“சரி. ரெண்டு நாள்” என்று சொல்லிவிட்டு அவர்கள் எல்லோரும் செண்பகராமனிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள்.

4.2

“இது என்ன அதிகப்ரசங்கித்தனம்? யாரைக் கேட்டு டிடெக்டிவ் ஏஜன்சி எல்லாம் கூப்பிட்ட நீ? ஏற்கெனவே ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு, இங்கே நடக்கிறதெல்லாம் வெளியே பத்திரிகைகளுக்குத் தெரிஞ்சுருச்சுன்னா…” என்றார் செண்பகராமன் கோபமாக.

“அதெல்லாம் ஒண்ணும் தெரியாதுப்பா. விஷயங்களை ரகசியமா வெச்சுக்கத்தானே டிடெக்டிவ்ஸையே கூப்பிடறோம்! இவ்வளவு நடந்திருக்கு, இன்னும் என்ன நடக்கும்னே சொல்ல முடியாது, இந்த நிலையில் நாம ஒண்ணும் பண்ணாம சும்மா இருந்துடறதா? ரெண்டு உயிர் ஊசலாடிட்டிருக்கு அப்பா, இந்த நிலையில் நீங்க என்ன பப்ளிசிட்டியைப் பற்றிக் கவலைப்படறீங்க?” என்றாள் ஸாம்மி உஷ்ணத்துடன்.

மீண்டும் ஏதோ கோபமாகப் பேசப் போன செண்பகராமனைக் கலையரசு தடுத்தார். “நாம எத்தைத் தின்னா பித்தம் தெளியும்ங்கற நிலையில் இருக்கோம். அவங்கதான் முயற்சி பண்ணிப் பார்க்கட்டுமே. அந்தக் குழந்தை சொன்னது சரி. ரொம்பக் கஷ்டப்பட்டுட்டோம் ஐயா. கடன் ஏறிட்டே போவுது. வீடு ஜப்திக்கு வந்துரும் போலிருக்கு…” அவர் கண்களில் லேசாகக் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

செண்பகராமன் தடுமாறிப் போனார். “என்ன கலை, ஏன் எங்கிட்ட சொல்லல? வா, என்னால் என்ன பண்ண முடியும்னு பார்க்கலாம்” என்றவாறே கலையரசுவை அழைத்துக் கொண்டு உள்ளே போய்விட்டார்.

ஸாம்மி தன்யாவைச் சங்கடமாகப் பார்த்தாள். “தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த ரெண்டு நாளை அவர் தன் நிலையிலேயே இல்லை” என்றாள்.

தன்யா பரவாயில்லை என்பதுபோல் பார்த்தாள். பிறகு “உங்க ட்ரூப் மெம்பர்ஸை சந்திச்சுடலாமா?” என்றாள்.

4.3

“கிட்டத்தட்ட ஐம்பது பேரோடு பேசியிருக்கோம், ஒன்றரை மணி நேரத்தில்!” என்றாள் தன்யா.

“பலன் – பெரிய ஸைபர்” என்றாள் தர்ஷினி.

“அப்படி ஒரேடியா சொல்லிட முடியாது. ஏதோ கொஞ்சம் பலன் இருக்கு” என்றாள் தன்யா.

“உதாரணத்திற்கு…”

“இரண்டு கலையுலக வாரிசுகள்” என்றாள் தன்யா. “ஸ்ரீஹரி, செந்தில்குமார்.”

“நூறு வருஷம் பழமையான ஒரு நிறுவனத்தில் இது பெரிய விஷயம் இல்லையே?”

“ஸ்ரீஹரி – ஹீரோ. செந்தில்குமார் – நடிக்கும்போதே உயிர்விட்டவரோட பையன்! ஒருத்தன் ரொம்பச் சுலபமா ஹீரோ ஆகிட்டவன், இன்னொருத்தன் இப்போதான் சின்னச்சின்ன ரோல் பண்றவன். ஸ்ரீஹரிக்கு ஹீரோ ரோல் கொடுத்ததில் யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை, ஆனா செந்தில்குமாருக்கு நல்ல ரோல் கொடுக்கக்கூடாதுன்னு நினைக்கறாங்க!” என்று வியந்தாள் தன்யா.

தர்ஷினி புன்சிரித்தாள். “செந்தில்குமார் புதுசு. ஸ்ரீஹரி சின்னவயசிலேர்ந்தே ட்ரூப்பில் இருக்கான். அதோடு அப்பாவோட பெயரைப் பாஸ்போர்ட்டா பயன்படுத்தினா, அவருக்கு இருக்கற ப்ளாக் மார்க்ஸ் மகனுக்கும் வருவதைத் தவிர்க்க முடியாதே! தங்கமுத்து எப்படி நடந்துக்கிட்டார்னுதான் கதைகதையா சொல்றாங்களே எல்லாரும்!”

“இவையெல்லாம் அந்த இளைஞனைக் கோபப்படுத்தும் இல்லையா? அவன் எப்படி இவ்வளவு அமைதியா, இயல்பா இருக்கான்? எல்லோருமே இதை யோசிக்கறாங்க.”

“அதோடு, அவனுடைய அப்பாவின் மரணத்தில் செண்பகராமனுக்கு ஏதோ பங்கு இருக்குன்னும், ஆனா அவர் செய்கை நியாயமானதுதான்னும் இங்கே பேச்சிருக்கு. அவன் அம்மாவும் அதைச் சொல்லிட்டே இருந்திருக்காங்க. அவன் எப்படி…” தர்ஷினி யோசித்தாள்.

“செந்தில்குமார் மீது ஆழமான சந்தேகப்புள்ளியை வைக்க வேண்டி இருக்கு” என்றாள் தன்யா.

“என்றாலும் இந்தச் சிசுபாலன் ரோல் பண்றவங்களைக் கொல்றதுதான் இடிக்கறது” என்றாள் தர்ஷினி.

“நமக்குச் செந்தில்குமாரைப் பற்றி என்ன தெரியும்? அவனுக்குக்கு ஒரு ‘சிசுபாலன் காம்ப்ளெக்ஸ்’ இருந்தா? அதுதானே அவனுடைய அப்பா கடைசியா பண்ணிட்டிருந்த ரோல்? அவர் செய்த ரோலை மற்ற யாரும் செய்யக்கூடாதுன்னு அவன் நினைச்சால்?”

“நீ சொல்றதெல்லாம் சரி, ஆனா அவன் பழிவாங்கணும்னு நினைச்சால் அவனுடைய குறி செண்பகராமனா இருக்குமே தவிர…”

“அந்தக் கமிட்டி மெம்பர் என்ன சொன்னார்? இது உணர்ச்சிவசப்பட்டவங்க செய்யற வேலை இல்லை, சைக்கோ செய்யற வேலைன்னு! ஒரு சைக்கோவோட மனவோட்டத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாது, தர்ஷினி. அவனுடைய நியாயங்களே வேற!” என்றாள் தன்யா.

தர்ஷினியின் உடல் தன்னையறியாமல் நடுங்கியது.

4.4

“இப்போ அடுத்து யாரை விசாரிக்கப் போறீங்க?” என்றவாறே உள்ளே வந்தாள் ஸாம்மி.

“யுவர் சாய்ஸ்” என்று தோளைக் குலுக்கினாள் தன்யா.

ஸாம்மி அழைத்து வந்தவர்க்கு நிச்சயம் வயது அறுபத்தி ஐந்துக்கு மேலிருக்கும். என்றாலும் நிமிர்ந்த உருவமும் நேர்த்தியான உடற்கட்டுமாய் இருந்தார்.

“இவர் நடராஜன் ஐயா” என்று அறிமுகம் செய்தாள் ஸாம்மி.

“ஓ! வணக்கம். உங்களை மாதிரி பழுத்த அனுபவமிக்க ஒரு கலைஞரைச் சந்திச்சதில் மிக்க மகிழ்ச்சி. இப்போதான் கலையுலக வாரிசுகளைப் பற்றிப் பேசிட்டிருந்தோம். உங்க குழந்தைகள் யாரும் நாடகத்துக்கு வரலியா?” என்று இயல்பாக ஆரம்பித்தாள் தன்யா.

“எங்கேம்மா? இந்தக் காலப் பிள்ளைங்க எல்லாருக்கும் ஒரே எண்ணம்தான் – இஞ்சினியர் ஆகிடணும்னு! வேற நினைப்பே இல்லை! அதுதான்ப்பா நிறையச் சம்பளம் கிடைக்கும்ங்கறதுங்க!” என்று அங்கலாய்த்தார் நடராஜன்.

“அவங்க சொல்றது உண்மைதாங்க. அதோடு நாடகம் என்பது நிச்சயமில்லாத வருமானம் இல்லையா? உங்க பிள்ளைங்க பிழைப்பையும் பார்க்கணுமே!”

நடராஜன் புன்சிரித்தார். “கலைங்கறது பிழைப்புக்கான வழியில்லைம்மா! பிழைப்புக்கான காரணம்! பசிதாகம் தீர்க்கற உத்தியில்லைம்மா! அதுவே பசியும் தாகமும்! அறிவுப் பசி! ஆத்மாவோட தாகம்!”

தன்யாவுக்கும் தர்ஷினிக்கும் மெய்சிலிர்த்தது. அவரைக் கைகூப்பி வணங்கினார்கள்.

“சரி, ஏதோ வாரிசுகளைப் பற்றிப் பேசிட்டிருந்ததா சொன்னீங்களே? ஸ்ரீஹரியைப் பற்றியா?” என்று கேட்டார் நடராஜன்.

“செந்தில்குமாரைப் பற்றியும்” என்றாள் தர்ஷினி.

“ம்… இந்தக் குழுவில் இன்னொரு வாரிசும் இடம்பிடிச்சாச்சுன்னு எல்லோரும் பேசிக்கறாங்க, தெரியுமோ?” என்றார் நடராஜன் கேலிப் புன்னகையுடன்.

“யாரைச் சொல்றீங்க, ஸாம்மியையா?” என்றாள் தன்யா.

“இல்லைம்மா. முன்னாடி எங்க ட்ரூப்பில் ஜிகினா சிவகாமுன்னு ஒரு நடிகை இருந்தா…” என்று அவர் ஆரம்பித்தபோது, ஆனந்தன் கையில் சுண்ணாம்பு டப்பாவுடன் உள்ளே வந்தான்.

“எப்போ கேட்டேன், ஆடி அசைஞ்சு வரியே” என்று திட்டியவாறே டப்பாவை வாங்கிக் கொண்டு வெற்றிலைப் பெட்டியைத் திறந்தார் நடராஜன். இரண்டு வெற்றிலைகளைத் தேர்வு செய்து அவற்றைச் செல்லமாகக் கிள்ளித் துடைத்துத் தயார் செய்தார். சுண்ணாம்பு டப்பாவைத் திறந்தார்.

ஒரு துர்வாசனை பரவியது. “என்னடா ஆனந்தா! பூண்டுரசமா இன்னிக்கு மதியம்?” என்று கேட்டவர் “இல்லல்ல, இது கெட்டுப் போன முந்திரிப்பருப்பு மாதிரில்ல வாடை வருது” என்றார்.

தர்ஷினி சடாரென்று அவரிடமிருந்து சுண்ணாம்பு டப்பாவைப் பிடுங்கி வீசியெறிந்தாள்.

“கெட்டுப்போன முந்திரி வாசனையில்லை, பிஸ்தா வாசனை. பிட்டர் ஆல்மண்ட்ஸ்” என்றாள்.

“யூ மீன்…” என்று பதற்றமாய்க் கேட்டாள் தன்யா.

“பொட்டாசியம் சயனைட்” என்றாள் தர்ஷினி.

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: