மனமோகன விலாஸ்! பகுதி 8

சாய்ரேணு சங்கர்

மனமோகன விலாஸ்! பகுதி 8

8 – க்ளைமேக்ஸ் நிறைவுப் பகுதி

8.1

தன்யாவின் கூரிய பார்வை அந்த ஹால் முழுவதும் துழாவியது. பின் திருப்தியடைந்தவளாக, மென்மையாகத் தன் பேச்சை ஆரம்பித்தாள்.

“மிகமிகச் சுவாரஸ்யமான வழக்கு இது. நாடக உலகோடு சம்பந்தப்பட்ட இந்த வழக்கில், எத்தனையோ நாடகத்தனமான நிகழ்வுகள்! திடீரென்று மேலிருந்து சுத்தி விழுவது, மேடையிலேயே ஒருவர் மயங்கி விழுவது, இன்னும் ஏதேதோ… எல்லாம் சரியான க்யூவில் கச்சிதமாக நடைபெற்றன.

“இவையெல்லாம் ஏன் நடந்தன என்ற கேள்விக்கு எங்களுக்கு இரண்டுவிதமான பதில்கள் அகப்பட்டன. ஒன்று, நேரடியாகச் சிசுபாலன் என்ற கேரக்டர் மீது கோபம் – அதாவது ஒரு உளவியல் பிரச்சனை. மற்றொன்று – வாரிசுப் பிரச்சனை, அதனால் செண்பகராமனைப் பழிவாங்க முயற்சி.

“வெளிப்படையாக இரண்டு புதுமுகங்கள் இந்தப் பதில்களுக்குப் பொருந்துவார்கள்போல் காணப்பட்டார்கள். ஒன்று செந்தில்குமார், மற்றொன்று நரேந்திரன். செந்தில்குமாருக்கு சிசுபாலன் கேரக்டரில் யாரும் நடித்துவிடக் கூடாது என்ற எண்ணம் வரலாம். அதோடு அவருக்குச் செண்பகராமன் மீதும் கோபம் இருக்கலாம். நரேந்திரன் பற்றிச் சொல்லப்பட்டது, அவர் செண்பகராமனின் மகனாக இருக்கலாம், எனவே அவரைப் பழிவாங்க இவ்வாறு செய்கிறார் என்ற கருத்துத் தோன்றியது.

“ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கில் வாரிசுகளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மேற்சொன்னவர்களைத் தவிர ஸ்ரீஹரி இருக்கிறார். அவர் நாடகக் குழுவின் செல்லப்பிள்ளை. இன்னொரு முக்கியமான வாரிசை நாம் எல்லோருமே மறந்துவிட்டோம் – ஸாம்மி. அவள் நடிப்புத்துறை வாரிசு அல்ல, நிர்வாகத்தை எடுத்துக் கொள்ளப் போகிறவள். இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு இனிய ரொமான்ஸ் மலர்வதை நாங்கள் புரிந்துகொண்டோம். மனமோகன விலாஸ் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாடகம் நடத்த அடுத்த வாரிசுகள் வந்துவிட்டார்கள் என்று புரிந்தது.

“இன்னும் சில விஷயங்கள் இந்த வாரிசு மேட்டரில் சொல்ல வேண்டும், அதற்குப் பிறகு வருகிறேன்.

“ஒரு நாடகத்தனமாக பிரச்சனை, அதற்கு இரண்டு நாடகத்தனமான காரணங்கள். Look beyond the scenery and grease paint என்பார்கள் ஆங்கிலத்தில். இந்த நாடகத்தனத்தை எல்லாம் விட்டுவிட்டுப் பார்த்தால், என்ன உண்மை புலனாகிறது? எந்த ரிசல்ட்க்காக இவை செய்யப்பட்டன?

“செண்பகராமனைப் பழிவாங்க என்ற காரணம் ரப்பிஷ். அதற்குச் செண்பகராமனையே நேரடியாகத் தாக்கலாம். அப்புறம் இந்தச் சிசுபாலன் காம்ப்ளக்ஸ் – அதுவும் நாடகத்தனமாகத் தென்பட்டது. ஆனந்தன் போன்ற ஒரு நபரைத் தூண்டிவிடவும், சந்தேகத்தைப் பலர்மீது திருப்பவும்தான் அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

“இந்த… சம்பவங்கள்… தொடர்ந்து நடந்திருந்தால் எதில் கொண்டுபோய் விடும் என்று சிந்தித்துப் பாருங்கள், உங்களுக்கு மொத்தக் கதையும் புரிந்துவிடும்…”

“என்ன சொல்றீங்க, ஒண்ணும் புரியலையே” என்றார் சூரி.

“சூரி அண்ணா, கொஞ்சம் யோசிங்க. இப்படியே ஒவ்வொரு ஆபத்தா வந்துட்டிருந்தா, ஆர்ட்டிஸ்ட்கள் பயந்துடுவாங்க. நாடகமே வேண்டாம்னு சொந்த ஊருக்குப் போயிடுவாங்க, இல்லையா?”

“நாங்க சென்னையில் நாடகம் நடத்தக் கூடாதுங்கறதுக்காகவா இவ்வளவு பெரிய சதி?” என்றார் செண்பகராமன் வியப்புடன்.

“இல்லை சார், நீங்க எங்கே போனாலும் இந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்திருக்கும். அப்போ நீங்க என்ன செய்வீங்க? போலீசைக் கூப்பிடுவீங்களா?”

“எதுக்கு வம்பு? பத்திரிகைகளில் அடிபட்டு என் மானந்தான் போகும். அதுக்குப் பேசாம நாடகக் குழுவைக் கலைச்சிடலாம். ஏதோ இத்தனைநாள் நல்லா நடத்தியாச்சு. இனிமே சேஃப்டிதான் முக்கியம்” என்றார் செண்பகராமன்.

“அதான்… அதை எதிர்பார்த்துத்தான் இந்தப் பெரிய சதி நடத்தப்பட்டது” என்றாள் தன்யா புன்சிரித்தவாறே.

செண்பகராமன் யோசித்தார். “அதனால யாருக்கு என்ன லாபம்?” என்று கேட்டார் சூரி, அங்கிருந்த அனைவரின் குரலாக.

தன்யா உடனே விஷயத்திற்கு வந்திருக்கலாம், அவள் ஒரு லெக்சர் கொடுக்க ஆரம்பித்தாள்.

“ஸைக்காலஜி ஆஃப் க்ரைம். அகதா கிரிஸ்டி தன் கதைகளில் அதிகம் பயன்படுத்தும் ஒரு ஃப்ரேஸ் இது. அதாவது, ஒரு குற்றத்தின் குணாதிசயத்தைக் கொண்டே குற்றவாளியின் குணாதிசயத்தை அறியலாம், அதைக் கொண்டு குற்றவாளி யார் என்று அறியலாம் என்பது அவர் தத்துவம்.

“இந்தக் குற்றத்தின் குணாதிசயங்கள் என்ன? முதல் குணாதிசயம், குற்றவாளி தானாக எதையும் செய்பவர் அல்ல. ஷேக்ஸ்பியரின் இயகோ கதாபாத்திரம் போல, பிறரைத் தூண்டித் தன் காரியத்தை நடத்துபவர்.

“மனமோகன விலாஸை முடக்க, அதன் நாடகங்களை நடக்காது செய்யவேண்டும் என்ற எண்ணம் சிறிதுகாலமாகவே குற்றவாளி மனதில் இருந்திருக்க வேண்டும். ஆனால் செந்தில்குமாரின் வரவைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சிசுபாலன் வேடமிடுபவரை மிரட்டுவதாக ஒரு திட்டம் உருவாகியிருக்கிறது பாருங்கள்! ஒரே நேரத்தில் ஆனந்தன், செந்தில்குமார் இருவரையும் சந்தேகப்பட வைக்கும் ஒரு திட்டம்! குற்றவாளி மிக நுட்பமான அறிவுள்ளவர் என்று இதன்மூலம் தெரிகிறதல்லவா? காலத்திற்குத் தகுந்தாற் போன்று தன் திட்டங்களை வேகமாக மாற்றிக் கொள்ளவும் வல்லவர்.

“அதற்கு இன்னொரு உதாரணம் நரேந்திரனின் வருகை. நரேந்திரன் செண்பகராமனின் மகனாக இருக்கலாம் என்பதை வைத்து, சந்தேகம் அவர்மீதும் படரும்படிப் பார்த்துக் கொண்டார் குற்றவாளி! இந்த வதந்தியையே அவர்தான் பரப்பினார் என்று நான் சந்தேகிக்கிறேன். ஏனென்றால் குற்றவாளி அனுப்பிய எச்சரிக்கைக் கடிதத்தில் “விவேகானந்தர்” என்ற பெயர் இருந்தது. அவர் முதலில் ஆனந்தனைக் குறிப்பதற்காக அதை எழுதியிருக்கலாம். அதன்பிறகு நரேந்திரன் வந்ததும், சௌகரியமாக அது நரேந்திரனைக் குறிக்கலாம் என்ற சந்தேகத்தையும் உண்டாக்கினார்!

“நெக்ஸ்ட், தர்ஷினி சொன்னது. குற்றவாளி சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பவர், அல்லது அவர் நடிகரே அல்ல!

“குற்றவாளிக்கு ஏதோ காரணத்திற்காக மனமோகன விலாஸை முடக்க வேண்டும், அல்லது கலைக்க வேண்டும். நடிகர்கள் இல்லாமல் நாடகக் குழு ஏது? எனவே அவர் நடிகர்களை மிரட்ட ஆரம்பிக்கிறார். தான் அதை நேரடியாகச் செய்யாமல், ஆனந்தனைத் தூண்டி, சிசுபாலன் ஒரு கெட்டவனான அத்தை பிள்ளை என்ற எண்ணைத்தைப் பதித்து, அவன் கோபத்தைக் கிளறி, அவர் சொன்னபடி அவனைச் செய்ய வைக்கிறார். ஆனந்தன் சுத்தியை எறிகிறான். சுத்தி அங்கிருந்தவர்களில் ஒருவரைக் காயப்படுத்துகிறது.

“தன் நோக்கம் சிசுபால வதம் என்று ஒரு கடிதம் வைக்கிறார். அதில் ஆனந்தனை மறைமுகமாகக் குறிக்கிறார். பிறகு நரேந்திரனின் வருகை. அவனைக் குறித்து ஒரு வதந்தியைப் பரப்புகிறார்.

“சிசுபால நடிகரையும் வீழ்த்துகிறார், ஒரு பிரமாதமான ஐடியா மூலம். அது எவ்வாறு செய்யப்பட்டது என்பதைச் சரியாக ஊகித்தது தர்ஷினிதான். அவளே அதை விளக்கட்டும்” என்ற தன்யா, வாட்டர் பாட்டிலைக் கையிலெடுத்துக் கொண்டாள்.

தர்ஷினி மீண்டும் எழுந்தாள். “ஆனந்தன் ட்ரேயில் பல டம்ப்ளர்களை வைத்துக் கொண்டுவருகிறான். அதில் எந்த டம்ப்ளர் யாரிடம் போகும் என்று சொல்ல முடியாது. கூட்டத்தில் விஷத்தைக் கலக்கவும் முடியாது. எனவே குற்றவாளி முதலிலேயே செண்பகராமனுக்காக வைக்கப்பட்டிருந்த ஃப்ளாஸ்கில் விஷத்தைக் கலக்கி வைத்துவிடுகிறார். டீ வழங்கும் நேரத்தில், ஆனந்தனிடம் செண்பகராமனுடைய கோப்பையில் எல்லோருக்கும் வழங்கப்படும் டீயை விடச் சொல்கிறார். ஒரு டம்ப்ளரில் விஷம் கலந்த டீயை விடச் சொல்லி, அந்த டம்ப்ளரை வெற்றிவேலருக்குக் கொடுக்கச் சொல்கிறார். என்ன நடக்கிறது, எதற்காகச் சொல்கிறார் என்றெல்லாம் புரியாத அப்பாவி ஆனந்தன், செண்பகராமனுடைய டீயை, அதாவது விஷங்கலந்த டீயைக் கவனமாக வெற்றிவேலரிடம் கொடுக்கிறான்” என்றாள்.

ஆமாம், அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் – அங்கிருந்தோரின் சிந்தனை ஓடியது.

“வெற்றிவேலருக்கு வந்த ஆபத்திற்குப் பிறகு, எல்லோருக்கும் பயம் வந்தது. நாடகம் நடத்த வேண்டாம், ஊருக்குப் போய்விடுவோம் என்று பேச ஆரம்பித்தார்கள். அதற்கு வலுகொடுக்கவே நடராஜன் ஐயாவின் சுண்ணாம்பில் விஷம் கலக்கப்பட்டது, சூரி அண்ணாவின் அறையில் ஃபேன் கீழே விழுமாறு செய்யப்பட்டது. இவை நடந்திருந்தால் நாடகம் நடந்திருக்காது. போலீஸ் கேஸாகியிருக்கும். குழுவைக் கலைக்க வேண்டியும் வந்துவிடும்.

“இறையருளால் இந்த ஆபத்துகள் தடுக்கப்பட்டன. என்றாலும் செண்பகராமன் மனம் குன்றிப் போனார். குழுவைக் கலைத்துவிடலாமா என்று அவர் யோசித்தபோது, நாங்கள் அவருக்கு ஒரு ஆலோசனை சொன்னோம். கடைசியாக ஒரே ஒரு ஷோ நடத்தப்படும், அதன்பிறகு நாடகக் குழு விற்கப்படும் என்பதாக அவரை அறிவிக்கச் சொன்னோம்.

“இந்த யோசனையின் ஒரு பலன், நாடகம் நன்றாக நடந்தது, ஒரு தடங்கலும் வரவில்லை. ஆனால் செண்பகராமனுக்கே ஆபத்து வந்தது, செந்தில்குமாரால்! அதாவது, செந்தில்குமார் அவர் அப்பாவைக் கொன்றது செண்பகராமன்தான் என்று தூண்டி விடப்பட்டார்!

“ஆக, குற்றவாளி தங்கமுத்துவின் மரணத்தின்போது குழுவில் இருந்தவர். தங்கமுத்துவும் செண்பகராமனும் சண்டைக்குப்பின் சந்தித்தார்கள், செண்பகராமன் தங்கமுத்துவிற்கு ஏதோ அருந்தக் கொடுத்தார் என்பது தெரிந்தவர்.

“சுருக்கமாகச் சொன்னால், குற்றவாளி இந்தக் குழுவில் நீண்ட நாட்களாக இருப்பவர், சிறந்த அறிவாளி, படைப்புத் திறன் உடையவர், ஆனால் தன் படைப்புகளைப் பிறரைக் கொண்டு பிரகாசிக்கச் செய்பவர். திட்டங்களை வேகமாகப் படைக்கவும், தேவைக்குத் தகுந்தபடி மின்னல் வேகத்தில் அவற்றை மாற்றவும் இயன்றவர். குழுவின் உள் விவரங்கள் அறிந்தவர். ஆனந்தனின் கதை தெரிந்தவர்.”

தன்யா நிறுத்தினாள். எல்லோருக்கும் மெய்சிலிர்த்தது.

“இன்னும் சுருக்கமாகச் சொன்னால்… கதாசிரியர் கலையரசு!” என்று அறிவித்தாள் தன்யா.

8.2

எல்லோருமே திடுக்கிட்டார்கள். அலையலையாகப் பரவிய அதிர்ச்சி ஓயுமுன் கலையரசு எழுந்தார். ஜோல்னா பைக்குள் கைவிட்டுத் துப்பாக்கியை எடுத்தார். எல்லோரும் பதறப் பதறப் பின்பக்கமாக நகர்ந்து அறையைவிட்டு வெளியே போய்த் தப்பிக்க முயன்றார்.

அவரைக் கிடுக்கிப் பிடியாகப் பிடித்து நிறுத்தினான் கவனமாகத் தன்யாவால் அறைவாசலில் நிறுத்தப்பட்டிருந்த அச்யுத்.

8.3

“கலையரசு, நீங்களா? இந்தக் குழுவோட முதுகெலும்பா இருக்கறவரா? ஏன் கலையரசு, ஏன் இப்படிச் செய்தீங்க?” என்று செண்பகராமன் வருத்தத்துடன் கேட்டார்.

கலையரசு பதிலளிக்கவில்லை. நேர்ப்பார்வை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

“இந்த நாடகக் குழு தற்போது போடுகிற நாடகங்கள் எல்லாமே கலையரசு எழுதியது. தன்னுடைய ப்ரெயின்-சைல்டை அவரே அழிக்க நினைப்பாரா?” என்று கேட்டார் சூரி.

“என்ன அழிக்கறது, சூரி அண்ணா? அவருடைய நாடகங்கள் எல்லாமே குறைந்தது 500 ஷோ பார்த்தாச்சு. சாக்லேட் கிருஷ்ணா போல் சமீபத்தில் 1000 ஷோவை எட்டிய நாடகம் கிருஷ்ண லீலை. அவை எல்லாம் மக்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடிச்சாச்சு. இனி இன்னொரு நன்மைக்காக மனமோகன விலாஸ் கலைக்கப்பட்டால், அது அவருக்குப் பெரிய நஷ்டமில்லையே!” என்றாள் தன்யா.

“மனமோகன விலாஸ் முடங்குவதால் இவருக்கு என்ன நன்மை?”

“அங்கேதான் நான் சொன்ன வாரிசு மேட்டர் வரது! அதற்கு முன்னால் கலையரசுவை நாங்க எப்படி அடையாளம் கண்டுகொண்டோம் என்பதை விளக்கிடறேன். அகதா க்ரிஸ்டியுடைய இன்னொரு உத்தி – கான்வர்சேஷன்! அதாவது, வழக்கு பற்றி விசாரித்தலைத் தவிர, சம்பந்தப்பட்ட எல்லோரிடமும் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருப்பது! அதன்மூலம் தன்னையறியாமல் அவர்கள் ஏதாவது சொல்வார்கள். அது வழக்கோடு சம்பந்தப்பட்டதாக இல்லாவிடினும் வேறு விதத்தில் பெரிய உதவி செய்யும்.

“அப்படித்தான் நாங்கள் எல்லோரிடமும் பேசிக் கொண்டே இருந்தோம். அதற்கு நரேந்திரன் மிக உதவியாக இருந்தார். அவர் யார்? செண்பகராமனுடைய மகனா? அவருடைய நோக்கம் என்ன? தந்தையோடு இணைவதா அல்லது தந்தையைப் பழிவாங்குவதா? இந்த விஷயங்களைக் கொண்டு ஒரு உரையாடலை யாரோடும் எங்களால் தொடங்க முடிந்தது. அப்போதுதான் இரண்டு உரையாடல்களில் இருந்த முரணைக் கவனித்தோம். இல்லையேல், நாங்கள் கலையரசுவைச் சந்தேகப்பட்டிருக்கவே முடியாது. மறுபடி மறுபடி செந்தில்குமார், ஆனந்தன், நரேந்திரன், ஸ்ரீஹரி என்றுதான் சுற்றிக் கொண்டிருந்திருப்போம்.

“சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் குழுவிலிருந்து விலகப் போவதாகச் சொன்ன அன்று, செண்பகராமன் ஒரு வாக்கியம் சொன்னார் – ‘சென்னையில் இந்த ஷோ வெற்றிகரமா நடந்தா, முதன்முறையா ஒரு சரித்திர நாடகம் அரங்கேற்றம் பண்றதா இருந்தேன்.’ அதுவே கலையரசுகிட்டப் பேசியபோது ‘ஆசையா புராணம் தவிர வேறு ஒரு துறையில் நாடகம் எழுதினேன். அதை வேண்டாம்னுட்டாங்க.’ வேண்டாம் என்று சொல்லக்கூடியவர் செண்பகராமன்தான். ஆனால் அவரோ அதை நடத்தப் போவதாகச் சொல்கிறார்!

“இதில் யார் சொல்வது உண்மை? செண்பகராமன் பொய் சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால் ஒருவேளை அதை அவர் ரகசியமாக வைத்திருந்தாரோ? எதற்காக? எழுத்தாளரிடம் கூடவா ரகசியம்? அவரிடம் நிச்சயம் சொல்லியிருப்பாரே!

“ஒரு முக்கியத் தடயம் எங்களுக்கு அதே உரையாடலில் புலப்பட்டது. அதாவது கலையரசுவின் மகன், சினிமாக் கதாசிரியர் என்ற விவரம். அவருடைய கதை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரால் வாங்கப்பட்டிருக்கிறது என்ற விவரம்.

“நாங்கள் உடனே எங்கள் அலுவலகத்திற்குப் போய்க் கலையரசுவின் மகனைப் பற்றி விசாரித்தோம். சரியான தொடக்கம் கிடைக்காமல் தவிக்கும் கதாசிரியர் அவர் என்று அறிந்துகொண்டோம். வெகுசில படங்களுக்கே கதை எழுதியிருக்கிறார், அவைகளும் தோல்விப் படங்கள்.

“அப்போதுதான் அந்தத் தயாரிப்பாளரின் அறிமுகம் அவருக்குக் கிடைத்திருக்கிறது. அவரைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம். பெரிய பட்ஜெட்டில் வெற்றிப் படங்களை எடுப்பவர் அவர். அவரிடம் அகஸ்மாஸ்தாகத் தன் அப்பாவின் புதுக்கதையைத் தன் கதையாக ஒன்லைன் சொல்லப் போக, அவருக்கு அது உடனே பிடித்துவிட்டது! உடனே இருபது லட்ச ரூபாய் அட்வான்ஸ் தந்து கதையைத் தனக்குப் புக் செய்துகொண்டுவிட்டார் தயாரிப்பாளர். கதை ஸ்க்ரிப்ட் முழுவதும் கைக்கு வந்ததும் முப்பது லட்சம் என்றும், படம் எடுத்து முடிந்ததும் இன்னொரு ஐம்பது லட்சம் என்றும், மேலும் லாபத்திலும் பங்கு தருவதாகவும் ஒப்புக்கொண்டார்.

“இதை அறிந்த கலையரசு நடுங்கினார். அந்தக் கதை மனமோகன விலாஸின் ப்ராப்பர்ட்டி ஆயிற்றே! என்னதான் திரைக்கதையின் மாற்றம் செய்தாலும், செண்பகராமனுக்கு நிச்சயம் தெரிந்துவிடும். அவர் தயாரிப்பாளர்மீது கேஸ் போடுவார். அப்புறம் கலையரசுவின் மகனின் எதிர்காலம்? முதன்முறையாக அவருக்குக் கிடைத்திருக்கும் பெரிய ப்ரேக் ஆயிற்றே இது? ஆயிரங்களில் யோசித்துக் கொண்டிருந்தவர்கள் முதன்முறையாகக் கோடியில் யோசிக்க வைத்த சந்தர்ப்பத்தை விட்டுக்கொடுக்கலாமா?

“யோசித்தார். அந்தக் கதை, செண்பகராமனின் சொந்தச் சொத்தல்ல, மனமோகன விலாஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது. அதைக் கலைத்துவிட்டால், கேஸ் போட வாதியே இருக்க மாட்டார்கள். செண்பகராமனுக்கு ஊறு ஏற்படுத்தினால், நிறுவனம் அவர் மகள் கைக்குப் போகும். அவளோடு இப்போது ஸ்ரீஹரி வேறு இணைந்திருக்கிறான். நிச்சயம் சும்மா விடமாட்டார்கள்.

“சில விபத்துகளை ஏற்படுத்தி, நடிகர்களைப் பயமுறுத்தி, நாடகத்தை நடத்த விடாமல் செய்து, குழுவைக் கலைத்துவிட அவர் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தபோது, செந்தில்குமாரும் நரேந்திரனும் வந்து சேர்ந்தார்கள். அவருடைய கலையுள்ளத்திற்கு நல்ல தீனி கிடைத்தது. ஒரு ‘சிசுபாலக் கொலைகாரனை’ உருவாக்கினார். தந்தையைப் பழிவாங்கத் துடிக்கும் மகன், தந்தைக்காகப் பழிவாங்கத் துடிக்கும் மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களை ஏற்படுத்தினார். தவிர ஆனந்தன் – அவர் என்ன சொன்னாலும் செய்யக்கூடியவன், மனநிலை சரியில்லாதவன். அதனால் எல்லோரும் இது செண்பகராமனைக் குறிவைத்து அல்லது சிசுபால நடிகர்களைக் குறிவைத்துச் செய்யப்படுகிறது என்று நினைத்தார்கள். கலையரசுவின் நோக்கத்தை யாரும் அறியவில்லை.”

“அப்போ செந்தில்குமாரைத் தூண்டிச் செண்பகராமனைக் கொல்லப் பார்த்தது?”

“அவரை வெளிக்கொணர்வதற்காக நாங்கள் குழு விற்கப்பட்டுவிடும் என்று அறிவிக்கச் சொன்னோம். விற்றுவிட்டால் அவருடைய நாடகம் நாரதர் மன்றத்தின் சொத்தாகிவிடும். பேக் டு ஸ்கொயர் ஏ! அதனால்தான் அதைத் தவிர்க்கச் செந்தில்குமாரை அவர் அப்பாவைக் கொன்றது செண்பகராமன் தான் என்று அவர் நம்பும்படிச் சொல்லியிருக்கிறார். இங்கே நடந்த எல்லா பேச்சுகளையும் எல்லா நிகழ்வுகளையும் கலையரசு அறிந்திருக்கிறார்! அவர் நடிகரல்ல, ஒத்திகை போன்ற கமிட்மெண்ட்கள் அவருக்கு இல்லை. எனவே அவரால் எல்லா இடமும் சுற்றிவர முடிந்திருக்கிறது, எல்லோரோடும் பேச முடிந்திருக்கிறது.”

தன்யா பேசி முடித்தாள்.

“பணம்! கேவலம் பணத்துக்காகவா…”

செண்பகராமனை முடிக்கவிடாமல் கீச்சென்று கத்தினார் கலையரசு. “கேவலம் பணமா? என் படைப்பை வெச்சு நீ எவ்வளவு சம்பாதிச்சிருக்க? ஒவ்வொரு ஊரிலும் வீடு – பெரிய வீடு, சின்ன வீடுன்னு வாங்கிக் குவிச்சிருக்க! எனக்கு இப்போதான் கதைக்கு ஐம்பதாயிரம்னு ஒப்புக்கொண்டிருக்க. எப்போ பார்த்தாலும் நான் ஏமாந்துக்கிட்டே இருக்கணும், நீ மாடிமாடியா கட்டிட்டே போகணும்! என் படைப்புக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கும்போது, நான் அதை வேண்டாம்னு சொல்லிடணும், இல்ல?” என்று சீறினார்.

“உங்க மகனுக்கில்ல வாய்ப்புக் கிடைச்சிருக்கு?” என்றார் சூரி.

“நான் வேற, என் மகன் வேறயா?” என்றார் கலையரசு.

எல்லோரும் மௌனமானார்கள். அதற்குமேல் யாராலும் எதுவும் பேச முடியவில்லை.

8.4

அச்யுத் கலையரசுவைப் போலீசில் ஒப்படைக்க அழைத்துச் சென்றதும் ஸாம்மி மெதுவாக தன்யாவிடம் வந்தாள். “ரொம்ப நன்றி தன்யா, தர்ஷினி! அருமையா வழக்கைத் தெளிவுபடுத்திட்டீங்க. மனமோகன விலாஸையும் காப்பாற்றிட்டீங்க. இன்னும் அது நூறாண்டு நடக்கும், நடத்துவோம்” என்றாள்.

தன்யாவும் தர்ஷினியும் குறும்பாகச் சிரித்தார்கள். ஸாம்மி கன்னம் சிவந்தாள். வேகமாகப் பேச ஆரம்பித்தாள். “இன்னும் ஒரு விஷயம் தெளிவுபடுத்தலையே! இவர், இந்த நரேந்திரன், யார்? எனக்கு அண்ணன் தானா?” என்று கேட்கும்போதே அது உண்மையாக இருக்காதா என்ற ஏக்கம் அவள் குரலில் ஒலித்தது.

கேட்ட ஸாம்மியையும் ஆர்வமாகப் பார்த்த செண்பகராமனையும் நோக்கினாள் தன்யா. “சாரி. இவர் சிவகாமுவின் மகனல்ல. அது கலையரசுவால் கிளப்பிவிடப்பட்ட வதந்தி!”

“அப்போ இவரு கோயில் கமிட்டிக்காரரோட சொந்தக்காரர்தானா?” என்றார் செண்பகராமன்.

“இல்லை, இவரும் வேஷதாரிதான். எல்லாரையும் செமத்தியா ஏமாத்திட்ட ஒரு ஃப்ராட்! தடுப்பூசி போட்டுட்டு ஓய்வு எடுக்கிறார்னு நாங்க நினைச்சிட்டிருக்கும்போதே, இங்கே விபத்துகளைத் தவிர்க்கவும் விவரங்களை அறியவும் வந்து சேர்ந்தவர். இந்த வழக்கு விவேகானந்தரின் நினைவுநாளான ஜூலை நான்கன்று ஆரம்பித்ததால் நரேந்திரன்னு புனைப்பெயர் வெச்சுக்கிட்டார்” என்றாள் தன்யா புன்னகையும் சீற்றமுமாய்.

“என்ன? அப்படின்னா இவர்…”

“எங்க நிறுவனத்தோட தலைவர், சிறந்த துப்பறிவாளர், சுத்தப் போக்கிரி, சுருக்கமா சொன்னா…”

“தர்மா!”

(நிறைவுற்றது)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: