உறங்காத உண்மைகள்! சிறுகதை

உறங்காத உண்மைகள்!

பொன்னேரியின் பஜார் வீதியின் இறுதியில் அமைந்திருந்த அந்த மேன்சனில் பரபரப்புக் கூடியிருந்தது. காரணம் அங்கு நிகழ்ந்துவிட்ட ஓர் மரணம். வாசலில் கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு போலீஸ் உள்ளே நுழைந்தது.

    மேன்சனின் நிர்வாகி தனபால் முன்னே வந்து,  ”இன்ஸ்பெக்டர் சார்! நான் தான் இந்த மேன்சன் நிர்வாகி! உங்களுக்கு போன் பண்ணது நான் தான்!” என்றார்.

     மெலிந்த தேகம் கண்களில் பவர் கண்ணாடி முன் வழுக்கையும் பற்களில் வெற்றிலைக்கறையும் படிந்திருந்த அந்த மனிதரை உற்று நோக்கிய இன்ஸ்பெக்டர் பரசுராம்,” நீ  நிர்வாகின்னா ஓனர் யாருய்யா?” என்று ஒருமையில் மரியாதையைக் கைவிட்டார். பதவி தந்த அகங்காரம் அது.

  ”ஓனர் சென்னையிலே இருக்காருங்க!  லஷ்மி மில்ஸ் லஷ்மிநாராயணன் கேள்விப்பட்டிருப்பீங்களே! அவருதான் இந்த மேன்சன். கிட்ட்த்ட்ட ஒரு இருபது வருஷமா நான் தான் நிர்வாகம் பண்ணிக்கிட்டு இருக்கேங்க!”

  ” ஓ… கொலை எந்த ரூம்லயா நடந்திருக்கு!”

  ”பர்ஸ்ட் ப்ளோர் 17ம் நம்பர் ரூமுங்க! செத்துப் போனது ரிப்போர்ட்டர் குமாருங்க!”

   ” ரிப்போர்ட்டரா? எந்த பத்திரிக்கையிலா எழுதறான்? ஏதாவது முன் விரோதம் இருக்குமோ?”

    ”அப்படி பெரிய ரிப்போர்ட்டர் ஒண்ணும் இல்ல சார் அவரு! லோக்கல் பத்திரிக்கையிலே எழுதுவாரு! அப்பப்போ ப்ரிலான்ஸா சில பத்திரிகைகளுக்கு எழுதிட்டிருந்தாரு..”

  ”சரி வாங்க போய் பார்ப்போம்.”

  கொலை நடந்த 17ம் அறை எண் திறந்து கிடக்க வாசல் ஓரம் மூக்கில் ரத்தம் ஒழுக கவிழ்ந்து விழுந்து இறந்து கிடந்தான் குமார். ஒருவித கவுச்சி வாசம் ரத்தத்தில் இருந்து வீச மூக்கைப் பொத்திக்கொண்ட  இன்ஸ்பெக்டர்  உடன் வந்த எஸ்.ஐ யிடம் ”சீன் ஆப் க்ரைம் நோட் பண்ணுங்க! பாரன்சிக் ஆளுங்களை வரச்சொல்லிருங்க. அப்புறம் இவரு இறந்து கிடந்ததை யார் முதலில் பார்த்தது?” என்று கேட்டார்.

    அதுவரை ஓரமாக நின்ற ஓர் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி முன்னே வந்து  ”ஐயா, நான் தானுங்க முதல்லே பார்த்தேன்.” என்றார்.

     ”நீ யாரும்மா?”

  ”இந்த மேன்சன்லே பெருக்கி துடைக்கிற வேலை செய்யறேனுங்க!”

  ”ஓ.. ஸ்விப்பரா..?  சரி என்ன நடந்தது சொல்லு..!”

”காலையிலே வழக்கம் போல ஒவ்வொரு ரூமா கூட்டி பெருக்கிட்டு வருவேனுங்க! எல்லா ரூமும் சார்த்தியிருக்கும் கதவைத் தட்டி எழுப்பி உள்ளே போய் சுத்தம் பண்ணிட்டு வருவேணுங்க! அப்படி வரும்போது இந்த ரூம் கதவு லேசா திறந்து இருந்துச்சுங்க கதவை தள்ளி திறந்த நான் பயந்து போயிட்டேனுங்க!”

     ”ஏம்மா நீ என்ன  கொயம்புத்தூரா? நிமிஷத்துக்கு மூணுவாட்டி “இங்க” போடுற?”

     ”ஆமாமுங்க ஐயா!”

”சரியாப் போச்சு போ! அப்புறம்?”

”அப்புறமுங்க! இந்த குமார் தம்பி கவுந்தடிச்சு விழுந்து கிடந்துதுங்க! சுத்தியிலும் ரத்தம்! ஒரே பயமா போயிருச்சுங்க! “வீல்”னு அலறி அடிச்சுக்கிட்டு வந்து மேனேஜர்கிட்டே வந்து சொல்லிட்டேனுங்க! அவரும் வந்து பார்த்துட்டு  உங்களுக்கு போன் பண்ணிட்டாருங்க!”

  ”ம்.. நீ உள்ளே நுழைஞ்சப்ப உள்ளே புதுசா யாரையாவது பார்த்தியா?”

”யாரும் இல்லேங்க! ரூமுக்குள்ள இவரு மட்டும்தான் இறந்து கிடந்தாரு.”.

”இவர்கூட தங்கியிருக்கிற ரூம் மேட் யாரும் இல்லையா?”

   ”முரளின்னு ஒருத்தன் தங்கியிருக்கான்! எண்ணூர் ப்ளாண்ட்ல வேலை செய்யறான். நைட் ஷிப்ட் போயிருக்கான். இன்னும் கொஞ்சம் நேரத்துலே வந்திருவான்” என்றார் தனபால்.

   ”கிழே விழுந்து இறந்திருக்கான். மூக்குவழியா ரத்தம் வந்திருக்கு! உடம்புலே எந்த காயமும் இல்லே! நெத்தியிலேயும் லேசான சிராய்ப்புதான் இருக்கு! இது கொலையா இல்லே நேச்சுரல் டெத்தா குழப்பமா இருக்கே?  இவனுக்கு ஆகாதவங்க யாராவது கொன்னிருந்தாலும் ஒரு காயமும் இல்லையே!”

 ”பக்கத்து ரூம்லே யார் தங்கியிருக்காங்க விசாரிச்சிட்டீங்களா கணபதி?” என்று எஸ்.ஐ நோக்கி கேட்டார் பரசுராம்.

   ”ரெண்டு இந்திக் கார பசங்க பக்கத்துலே இருக்க ஸ்டீல் பேக்டரிலே வேலை செய்யறானுங்க அவனுங்க 18 ல தங்கியிருக்காங்க சார்..”

”அப்போ 16 லே”

  ”அந்த ரூம்லே யாரும் இல்லீங்க சார். 15லே போஸ்ட் ஆபீஸ்லே ரன்னர் வேலை பாக்கிறவர் தங்கி இருக்கார். வயசான மனுசன்.” எஸ்.ஐ சொல்லி முடிக்கவும் அவர்கள் முன்னே வந்து நின்றார்கள்.

அவர்களைப் பார்த்து ” ராத்திரி இந்த ரூம்லே இருந்து ஏதாவது சத்தம் கேட்டுதா?” என்றார் எஸ்.ஐ.

 ”ராத்திரி பதினோரு மணி வரைக்கும் அந்த ரூம்லே லைட் எரிஞ்சுகிட்டு இருந்தது.. காமன் பாத் ரூம் இந்த லைன்லே கடைசியிலே இருக்கு! எனக்கு சுகர் ப்ராப்ளம் பாத்ரூம் போக அடிக்கடி எழுந்து போவேன். பதினோரு மணிக்கு நான் போகும்போது இந்த ரூம்லே லைட் எரிஞ்சுகிட்டு இருந்தது. ஜன்னல் திறந்து இருந்தது. இவர் ரூம்லே உட்கார்ந்து கம்ப்யூட்டர்லே ஏதோ டைப் பண்ணிக்கிட்டு இருந்தாரு ஜன்னல் திறந்திருந்ததாலே.நான் இத பார்க்க முடிஞ்சது” என்றார் 15ம் அறைக்காரர்.

   ”உங்க பேரு என்ன?”

”வைத்திலிங்கம்”

”மிஸ்டர் வைத்திலிங்கம், பதினோரு மணிக்கு அப்புறம் நீங்க பாத்ரூம் போக எழுந்திருக்கலையா?”

 ”ரெண்டு மணி வாக்கில் எழுந்தேன் சார்! ”

”அப்போ நீங்க எதுவும் இந்த ரூம்லே பார்க்கலையா?”

 ”இல்லே சார்! கதவு ஜன்னல் எல்லாம் அடைச்சிருந்தது. உள்ளே சைலண்டா இருந்தது.”

”ஓக்கே நீங்க போகலாம்! விசாரணைக்கு கூப்பிடும்போது வரவேண்டியிருக்கும்!”

”தேங்க்ஸ் சார்! நான் டூட்டிக்கு போகணும்! இது என் போன் நெம்பர் தேவைப்பட்டா கூப்பிடுங்க!” என்று வாலண்டியராக நம்பரைக் கொடுத்துவிட்டு நகர்ந்தார் வைத்திலிங்கம்.

 “இந்திக்கார பசங்க என்னய்யா சொல்றானுங்க?”

  ”அவனுங்க போதை பார்ட்டீங்க சார்! நேத்து சீக்கிரமே தண்ணி அடிச்சிட்டு தூங்கிட்டானுங்களாம்! காலையிலே சத்தம் கேட்டுத்தான் விழிச்சானுங்களாம்! ரூம்ல செக் பண்ணிட்டேன் ஒரே சரக்கு பாட்டிலும் சிகரெட் துண்டுங்களா இருக்குது!”

 ”ரொம்ப சிக்கலா இருக்குதே…”

இதற்குள் பாரன்சிக் ஆட்கள் வந்து தங்கள் பணிகளை செய்ய ஆரம்பித்தார்கள் . ஆம்புலன்ஸ் வந்து உடலை ஏற்றிச் சென்றது.

  ”யோவ் தனபாலு!  இவன் ரூம் மேட் முரளி வந்தான்னா உடனே ஸ்டேஷணுக்கு வரச்சொல்லி அனுப்பி வை! என்று சொல்லியவர் ரூமை பூட்டி சாவியை அவரிடம் தந்து. கேஸ் முடியறவரைக்கும் இந்த ரூமை யாரும் திறக்க கூடாது. யாருக்கும் வாடகை விடலாம்னு நினைக்காதே! அப்புறம் நான் கூப்பிடறப்ப ஸ்டேசனுக்கு வரனும் தெரியுதா?” என்று மிரட்டலாக கூறிவிட்டு ஜீப்பில் ஏறிப் போக தனபால் தளர்வாய் இருக்கையில் சாய்ந்தார்.

  ”என்னய்யா? கேஸ் ஒரே இழுவையா இருக்கு! அந்த முரளி ஹார்ம்லெஸ்ஸா இருக்கான். நேத்து நைட் எட்டு மணிக்கே ட்யுட்டிக்கு கிளம்பி போயிருக்கான். அவன் போனதுக்கு அப்புறம்தான் குமார் ரூமூக்கே வந்திருக்கான். அவனை மிரட்டிப் பார்த்தாச்சு! அவனுக்கும் குமாருக்கும் எந்த கைகலப்போ சண்டையோ கிடையாது. அவன் வழி வேற என் வழி வேற.. வேற வழி இல்லாம இவன் கூட தங்க வேண்டி வந்துருச்சுன்னு சொல்றான்.”

    ”அதான் சார் குழப்பமா இருக்கு.”

”ஆமாம்! குமார் பத்தி விசாரிக்கச் சொன்னேனே! என்ன ஆச்சு?”

  ”குமார் கொஞ்சம் வில்லங்கமான ஆளுதான்னு விசாரணையிலே தெரிய வருது சார்! ஒரு பெரிய பத்திரிகையிலே ரிப்போர்ட்டரா இருந்து  நியுஸ் போட பணம் வசூல் பண்ணது தெரிஞ்சு வேலையை விட்டு நிறுத்திட்டு இருக்காங்க! அதுக்கப்புறம் லோக்கல் பத்திரிகைகளுக்கு செய்தி சேகரிச்சு கொடுக்கிறதோட விளம்பரமும் கலெக்ட் பண்ணிக் கொடுத்திருக்கான். அப்படி ஆட் கொடுக்க மறுத்த சில கம்பெனிகள்லே நீங்க ஆட் கொடுக்கலைன்னா பத்திரிக்கையிலே உங்களைப் பத்தி தப்பா எழுதுவேன்னு மிரட்டி பணம் பறிச்சிருக்கான். கோயில் விழா அரசியல் கட்சி கூட்டம், அன்னதானம் இப்படி லோக்கல்லே எது நடந்தாலும் அதை பத்திரிக்கையிலே போடறேன்னு சொல்லி காசு பார்த்திருக்கான். செயின் ஸ்மோக்கர் ஆல்க்ஹாலிக்கும் கூட.”

    ”அப்போ அவன் கேரக்டர் சரியில்லை! அப்போ எதிரிங்க நிறைய பேர் இருப்பாங்களே!”

  ”மே..பி.. ஆனா அவங்க அவனை கொலை செய்யற அளவுக்கு போவாங்கன்னு சொல்ல முடியாது. பாரன்சிக் ரிப்போர்ட் வந்தா ஓரளவுக்கு  உண்மை தெரியும் சார்.”

   ”பி,எம் நம்ம ஜி.எச் சிலேதானே நடக்குது டாக்டர் பரிமளாதானே சீப் டாக்டர்”.

  ”ஆமா சார்!”

பரசுராம் தன் செல்போனில் டாக்டர் பரிமளாவுக்கு டயல் செய்தார். இரண்டாவது ரிங்கில் போன் எடுக்கப் பட்டது.” டாக்டர் நான் இன்ஸ்பெக்டர் பரசுராம் பேசறேன். காலையிலே ஒரு பாடி அனுப்பினோமே குமார்னு ஒரு ரிப்போர்ட்டர் அந்த பாடியோட பி.எம் முடிஞ்சுதா? எதாவது சொல்லும்படி அப்நார்மல் நியுஸ் இருக்கா?”

    ”அது அப்பவே முடிஞ்சிருச்சு சார்! நீங்க நினைக்கிறாமாதிரி அது கொலை இல்லை சார். நேச்சுரல் டெத் தான். பீ.பி அதிகமாகி மூளைக்குப் போகிற நரம்புகளிலே பிரஷர் அதிகமாகி வெடிச்சிருக்கு மூக்கு வழியா ரத்தம் வெளியேறி இறந்து போயிருக்கார். வேற எந்த க்ளுவும் இல்லே! கொலை செய்யப்பட்டதற்கான வாய்ப்பே இல்லை!”

  ”டைம் ஆப் டெத் சொல்ல முடியுமா?”

   ”எக்ஸாக்டா சொல்ல முடியாது! நரம்பு வெடிச்சு இந்த ரத்தம் கொட்டி நினைவுகளை இழந்து இறந்திருக்கார். எப்படியும் விடிகாலை மூணு மணிக்கு மேல இறந்திருக்கணும். எங்கிட்டே பாடி வந்த  டைம் வச்சு இதைச் சொல்றேன்.”

    ”அப்போ நேச்சுரல் டெத் தான்!”

 “ஆமாம் சார்!  ஒக்கே தேங்க்ஸ் டாக்டர்.”

 ”தலைவலி ஒழிஞ்சுதுய்யா! அது நேச்சுரல் டெத் தானாம் ஃபைலை க்ளோஸ் பண்ணிட்டு போயிட்டே இருக்கலாம்! தீபாவளி அதுவுமா தலைவலி இல்லாம போயிருச்சு! ஆமாம் அந்த குமார் பேமிலிக்கு இன்ஃபார்ம் பண்ணச் சொன்னேனே பண்ணிட்டியா? இன்னும் யாரும் வரவே இல்லையே!”

  ”இந்த குமார் மதுரைக் காரன் சார்! அப்பா அம்மா இறந்துட்டாங்க! கல்யாணம் ஆகலே! ஒரே ஒரு அண்ணன். அவருக்குத் தகவல் அனுப்பி இருக்கோம். கிளம்பி வருவதா சொல்லியிருக்கார்.”

 ”சரி அவர் வந்தா பாடியை கொடுத்து அனுப்பிட்டு கேஸை க்ளோஸ் பண்ணிடலாம்.”

      அப்போது.. அங்கே அந்த ஸ்விப்பர் பெண்மணி வந்து நின்றாள்.

”என்னம்மா! நீ அந்த மேன்சனோட ஸ்விப்பர்தானே! என்ன விஷயம்மா!”

  ”சார்! நீங்க என்னை அரெஸ்ட் பண்ணணோங்க!”

   ”எதுக்கும்மா?”

”அந்த குமாரை கொலை பண்ணது நான் தானுங்க!”

 “என்னம்மா சொல்றே?”

”ஆமாம் சார்! அந்த பொறுக்கிய நான் தானுங்க கொன்னுப் புட்டேன்..!”

 இன்ஸ்பெக்டர் புருவம் உயர்த்தினார்..

  ”இது என்ன புதுக்கதையா இருக்கே!”

”ஏம்மா! உனக்கு பைத்தியம் ஏதும் பிடிச்சிருக்கா! அந்த குமார் தானா செத்துப் போயிருக்கான்! பி,பி அதிகமாகி ரத்தக்குழாய் வெடிச்சு ரத்தம் அதிகமா வெளியேறி செத்துப் போயிருக்கான்”.

   ”இல்லீங்கோ! நாந்தான் அவனை கொன்னுப்புட்டேனுங்க! பாவிப்பய! அவன் வாழத் தகுதியில்லாதவனுங்கோ! குப்பை! அதான் கூட்டி பெருக்கிட்டேனுங்க!”

      ”விவரமா சொல்லும்மா! ஒண்ணுமே புரியலை!”

”அந்தக் குமார் பய வில்லங்கமானவனுங்க! ரிப்போர்ட்டர்னு சொல்லிக்கிட்டு காசு பிடுங்கிட்டு இருந்தான். அது கிடக்கட்டும். ஆனா அவன் பண்ண சில காரியங்க என்னை கோபப்படுத்திருச்சுங்க!  பக்கத்துலே ஒரு ஸ்கூல் இருக்குதுங்க! அதுல பணக்கார புள்ளைங்களா படிக்குதுங்க! அதுலே சில புள்ளைங்க கூட படிக்கிற பசங்களோட சேர்ந்து சுத்துங்க! அறியாத வயசு! தப்புன்னு தெரிஞ்சாலும் சிலதை பண்ணுங்க!  அப்படி அதுங்க சுத்தும்போது அதுங்களுக்குத் தெரியாம பாலோ பண்ணி வீடியோ எடுப்பாணுங்க இந்த குமாரு பய..

   அந்த வீடியோவைக் காட்டிப்  அந்த பசங்களை பயமுறுத்தி பணம் பறிப்பானுங்க! அதோட விட்டாத்தானே… சில பொண்ணுங்களை தன்னோட ஆசைக்கு பலியாக்கிட்டாங்க!”

   ”இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?”

”நான் இந்த மேன்சனை மட்டும் கூட்டிப் பெருக்கிறதுல்லேங்க! சில வீடுங்கள்ளேயும் வீட்டு வேலைச் செய்யறேன். அப்படி ஒரு வீட்டுலே ஒரு பொண்ணுதான் இந்த விவரம் சொல்லுச்சு! ரெண்டு மூணு நாளா அந்த பொண்ணு ரொம்ப கவலையோட சோர்ந்து போயி இருந்த்தை பார்த்து நானா துறுவித் துறுவி விசாரிச்சேன். அந்த பொண்ணு முதல்லே சொல்ல்லை! அப்புறமா அழுதுகிட்டே விவரம் சொல்லுச்சு! அந்தப் பொண்ணு ஒரு பையனை கிஸ் அடிக்கிற போட்டோ ஒண்ணை எடுத்து வச்சிக்கிட்டு அவ அப்பாகிட்டே சொல்லிருவேன்னு நிறைய பணம் கேட்டிருக்கான். இதுவும் கையிலே இருந்த பணத்தை எல்லாம் கொடுத்திருக்கு அத்தனையும் வாங்கிகிட்டு அந்தப் பொண்ணை படுக்கைக்கு கூப்பிட்டிருக்கான். நேத்துதான் லாஸ்ட் வார்னிங் கொடுத்திருக்கான்.”

  ”அந்தப் பொண்ணை மட்டுமில்லே  பல பொண்ணுங்களை இப்படி மிரட்டி இருக்கான். இந்த குப்பை பய இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஏன்னா? நானும் இதே மாதிரி ஒரு சம்பவத்துலே பாதிக்கப் பட்டு இருக்கேன். என் பொண்ணு ஒருத்தியை இழந்திருக்கேன். அது மாதிரி யாரையும் இழக்கக் கூடாதுன்னு அவனை கொலை செய்ய முடிவெடுத்தேன்”.

”நான் ஒரு  கெமிக்கல் கம்பெனியிலும் வேலைப் பார்க்கிறேனுங்க. அங்கே இருந்து நைசா கொஞ்சம் பொட்டாசியம் சயனைட் திருடிகிட்டு வந்துட்டேனுங்க. அதை குமார் குடிக்கிற விஸ்கி பாட்டில்லே கலந்துடறதான் திட்டம். ”

  ”நேத்து சாயங்காலம் கூட்டிப் பெருக்க வரும்போது குமார் ப்ரிட்ஜ்லே வச்சிருந்த விஸ்கியிலே கொஞ்சம் சயனைட் தூளை போட்டுட்டேனுங்க…!”

”அதைக்குடிச்ச குமார் இறந்து போயிருக்கணுங்க! காலையிலே அவன் ரத்தம் கக்கி செத்துப் போனதை பார்த்த்தும் அப்படி ஒரு சந்தோஷமுங்க! அத்தனையும் அடக்கிக்கிட்டு  இருந்தேனுங்க! ஆனா மனசாட்சின்னு ஒண்ணு இருக்குதே! அது என்னை தூங்க விடலைங்க! என்னை கைது பண்ணுங்க!”

   ”ஆனா பி.எம் ரிப்போர்ட்ல சயனைட் கலந்திருக்கிறதா எந்த தகவலும் இல்லையே டாக்டர் பரிமளா பொய் சொல்ல மாட்டாங்களே!”

      ”ஒரு நன்மை நடக்கணும்னா பொய் சொன்னாலும் தப்பில்லேன்னு வள்ளுவரே சொல்லியிருக்காருங்க! வள்ளுவரே அப்படி சொல்லியிருக்கும்போது பரிமளா சொல்ல மாட்டாங்களா?”

    ”என்ன சொல்ல வர்றே?”

   ”என்கிட்டே குமார் ப்ளாக் மெயில் பண்றதா சொல்லி அழுதப் பொண்ணு யாரு தெரியுங்களா?”

     ”யாரு…?”

  ”டாக்டர் பரிமளாவோட பொண்ணுதானுங்க…!”

  ”ஓ மைகாட்…!”

 “என்னை கைது பண்ணுங்க இன்ஸ்பெக்டர்…”

”உன் பேரு என்னம்மா? இதுவரைக்கும் கேக்கவே இல்லை! கதையே முடியப் போவுது!”

  ”மாசாணியம்மா சார்!”

 ” மாசாணியம்மா! இது கொங்கு நாட்டு தெய்வப்பெயர்தானே!”

  ”ஆமா சார்! ”

   ”ஒரு குற்றத்துக்கு தெய்வம் தண்டனை தந்தா  அதுக்கு மனுசங்க என்ன பண்ண முடியும்? தெய்வம் தந்த நீதியை ஏத்துக்கத்தானே வேண்டும்.”

  ” ஆமாமுங்க!”

   ”நீயும் ஒரு நீதி தேவதைதான்! அந்த குமார் உயிரோட இருக்க வேண்டியவன் இல்லே! சாக வேண்டியவன் தான்!  நீ செஞ்சதுதான் சரி! கடவுள் உன் ரூபத்திலே அவனுக்குத் தண்டனை கொடுத்திருக்கார்.”

   ”நீ செஞ்ச குற்றத்தை நிரூபிக்க எந்த ஆதாரமும் எங்க கிட்டே இல்லை! இதை இதோட மறந்துடு! நாங்களும் மறந்திடறோம்! உங்களை கை எடுத்து கும்பிட்த்தான் தோணுது கைது பண்ணத் தெரியலை!… ”

  காலையில் தன்னை ஸ்விப்பரா என்று இழிவாக பார்த்த இன்ஸ்பெக்டரின் கண்களில் ஈரம் கசிவதைப் பார்த்தபடி வெளியேறினாள் மாசானியம்மா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: