நகைச்சுவைக் கதைகளின் நாயகன்… பாக்கியம் ராமசாமி நினைவலைகள்!

நகைச்சுவைக் கதைகளின் நாயகன்… பாக்கியம் ராமசாமி நினைவலைகள்!
தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை எழுத்துக்கென்று தனி இடம் இருக்கிறது. வஞ்சப்புகழ்ச்சி, சிலேடை உள்ளிட்ட உத்திகளில் அங்கதம் தமிழ் இலக்கியத்தில் ஆதி முதலே பயணித்து வருகிறது. பாரதிக்குப் பின் எழுச்சிபெற்ற உரைநடையில் நகைச்சுவை மிளிர எழுதிய எழுத்தாளர்கள் பலர். ஆர்.மகாதேவன் எனும் தேவன் உருவாக்கிய ‘தும்பறியும் சாம்பு’ என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தை மறக்க முடியாது. அவர் ஏராளமான நகைச்சுவைக் கதைகளை எழுதினார். அவரைத் தொடர்ந்து பலரும் எழுதினார்கள். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் ஜ.ரா.சுந்தரேசன் எனும் இயற்பெயர் கொண்ட பாக்கியம் ராமசாமி.


சேலம் பகுதியைச் சார்ந்த பாக்கியம் ராமசாமி, குமுதம் பத்திரிகையில் பணியாற்றியவர். இவர் உருவாக்கிய அப்புசாமி – சீதாப்பாட்டி கதாபாத்திரங்கள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றவை. அந்தக் கதாபாத்திரங்களைக் கொண்டு நகைச்சுவை ததும்பும் கதைகளை எழுதினார். பொதுவாக, அனைவரின் வீடுகளில் இருக்கும் தாத்தா, பாட்டிகளைப் போலத்தான் அப்புசாமியும் சீதாப்பாட்டியும். ஆனால், ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டே இருப்பவர்கள்போலக் கதைகளை அமைப்பார். விவரணைகளைத் தவிர்த்து, காட்சிகளாகவே கதையைக் கொண்டுசெல்வார்.

ஒரு காட்சியின் உரையாடலில் அப்புசாமியின் குரல் மேலோங்குவதுபோல இருந்தால், அடுத்த காட்சியில் சீதாப்பாட்டியின் குரல் மேலோங்கும். ஒருவரையொருவர் வார்த்தைகளால் வாரிக்கொள்வதுதான் மைய இழை. அதை வைத்துக்கொண்டு தொடர்கதை, நாவல்களில் புகுந்து விளையாடினார் பாக்கியம் ராமசாமி. இருவரின் உரையாடலில் அதிகம் ஆங்கிலம் புழங்கும். அப்புசாமி – சீதாப்பாட்டி இடம்பெற்ற சின்னச் சின்னக் கதைகளையும் இவர் எழுதினார். அதில் ஒரு கதையில், புகழ்பெற்ற எழுத்தாளர் அப்புசாமியைப் பார்க்க வருவார். ரொம்பவும் சம்பாத்தியம் பெற்ற எழுத்தாளரா…. என்கிற உரையாடல் வரும். அப்புசாமி, அந்த எழுத்தாளரைப் பார்த்து, ‘நீர் என்ன ஒரு எழுத்துக்கு ஒரு பைசா வாங்குவீரா…” என்பார். அவரோ பதறியபடி, “அவ்வளவு ரூபாய்… எப்படி?” என்பார். அதற்கு அப்புசாமியோ, “பாத்திரத்தில் பெயர் பொறிப்பவரே அவ்வளவு வாங்குகிறாரே” என்று வாருவார்.
கதைகளைப் போலவே அவர் எழுதும் கட்டுரைகளிலும் நகைச்சுவை உலவும். உடல் குண்டாவது பற்றிய கட்டுரை ஒன்றை இப்படி முடிக்கிறார். “தான் சாப்பிட்ட பொருளை மாடு விரும்பும்போது வாய்க்குக் கொண்டு வந்து சாவகாசமாக அசைபோடுகிறது. அதைப்போல், மனிதர்களுக்கும் வசதியும் வாய்ப்பும் இயற்கை அமைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பெரும்பாலானவர்கள் ஒல்லியாகவே இருக்கக்கூடும்!”
பாக்கியம் ராமசாமி முழு வீச்சில் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் நகைச்சுவை கதைகளின் முடிசூடா மன்னராக விளங்கினார். ‘அப்புசாமியும் 1001 இரவுகளும்’ நூல் புகழ்பெற்றது. தொழில் நுட்ப மாற்றம் நிகழ்ந்தபோது, http://www.appusami.com எனும் இணையத்தில் இயங்கி வந்தார். இதில் அவரது பல கதைகள் படிக்க கிடைக்கின்றன.
பாக்கியம் ராமசாமிக்கு இசையின் மீது தனி ஆர்வம் உண்டு. அவரின் கதைகளில் அது வெளிப்படும். அப்புசாமியைப் போலவே சீதாப்பாட்டிக்கும் சபாக்களில் பொன்னாடை கிடைப்பதைப் பார்த்து, பொறாமைப்படும் கதை ஒன்றை எழுதியிருப்பார். ‘அப்புசாமி – சீதாப்பாட்டி இசைக் கூடல்’ எனும் அமைப்பை, இசைக்கலைஞர்களைக்கூட உருவாக்கினார். சமூகப் பணிகள் செய்வதற்கு ‘அப்புசாமி – சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை’ எனும் அமைப்பை உருவாக்கினார். இறுதி வரை எழுதியும் இயங்கிக்கொண்டும் இருக்க வேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருந்தது.
தமிழ் இலக்கிய உலகுக்குச் சிரிப்பை அள்ளித் தந்த ஜ.ரா.சுந்தரேசன் நேற்று (டிசம்பர் 7) உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரின் கதைகள் படிக்கும் காலம் வரை அவரும் வாழுவார்.

தொண்டர் தலைவரிடம் :-
“ஏண்ணே நீங்க அடிக்கடி சட்ட சபைலிருந்து வெளிநடப்பு செஞ்சுடறீங்க…!?”

“எப்பப் பார்த்தாலும் கூச்சல் போடறது.., மேஜைய தட்டறதுன்னு நிம்மதியா தூங்க விடமாட்றானுகடா..?”
துடுப்பதி வெங்கண்ணா

,

டாக்டர் :என்னோட கிளினிக்கிற்கு என் மனைவி பேரை வெச்சதுு தப்பா போச்சு..!

இவர் :ஏன் சார்?

டாக்டர் : அவ பெயரை கேட்டாலே

என்னை மாதிரியே நோயாளிகளும் பயப்படறாங்க…!

இந்து குமரப்பன். விழுப்புரம்.

நீச்சலும் கூச்சலும்

நீச்சலும் கூச்சலும்                 

       ’கடுகு’ அகஸ்தியன்.

 ஞாயிற்றுக்கிழமை. சிறிது சாவகாசமாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து, பேப்பரில் வந்திருந்த குறுக்கெழுத்துப் போட்டியில் இறங்கினேன்.  என் தலையெழுத்து வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும்.

வாயில் மணி அடித்தது. கதறியது என்று கூட சொல்லலாம். மனுநீதி சோழனின் மணியை, கன்றை இழந்த பசு அடித்தது போன்று இருந்தது. நான் சோழனும் இல்லை; எங்கள் பேட்டையில் மாடோ, கன்றோ எதுவும்  கிடையாது. என்னிடம் தேர் எதுவும் கிடையாது. இருந்தும் இந்த மணி ஓசை  ஒரு பழமொழியைத் தான்  லேசாக மாற்றி, நினைவுபடுத்தியது. ‘யானை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே!’ என்பதை லேசாக மாற்றி, ‘மணி ஓசை வரும் முன்னே; தொல்லை வரும் பின்னே’ என்பது மாதிரி எனக்குத் தோன்றியது
மணியோசை கேட்டு சமையலறையிலிருந்து எதிரொலி மாதிரி என் அருமை மனைவி கமலா   ”காது கேட்கலயா? உங்களுக்கு இடி இடிச்சாக் கூட  காது கேட்காது. உங்களுக்கு இருக்கிறது காது இல்லை;   ‘கேட்-காது’ தான் இருக்கு” என்று சொல்லி, தன்னுடைய சொல் நயத்தைத் தானே ரசித்தபடி, தன் முதுகில் தானே ஒரு ஷொட்டு கொடுத்தபடியே வந்து  வாயிற் கதவைத் திறந்தாள் கமலா.

“வாடா.. .. வாம்மா.. வாடா குழந்தை”  என்று  அன்பு, கரிசனம், பாசம், பரிவு, வாத்ஸல்யம், கனிவு… இன்னும் எனக்குத் தெரியாத பல பாவங்களுடன் கமலாவரவேற்றாள். பூர்ண கும்பம், வாழை மரம், நாதஸ்வர இசை, வேத கோஷம் தான் இல்லை! ஆமாம், திடீரென்று தொச்சுவும் அவனுடைய  அருமை மனைவி அங்கச்சியும்,  அவர்களுடைடைய நண்டு ஒன்றுடன் வருவார்கள் என்று அவள் எதிர்பார்க்க வில்லை.
 “ சும்மா  காலார நடந்து வந்தோம்..அத்திம்பேரைப் பார்த்து ரொம்ப நாளாச்சே என்று வந்தோம்”  என்று தொச்சு சொல்லிக் கொண்டிருக்கும் போது, அங்கச்சி  குறுக்கிட்டு,  “அது மட்டும் இல்லை, அக்கா. எங்க  அபார்ட்மென்ட்   காலனியில் நீச்சல் குளம் கட்டி இருக்காங்க. சூப்பரா இருக்கு. பசங்க அதகளம் பண்ணறங்க. காலனியில் இருக்கிற நண்டும் சுண்டும்…..”  என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது, நான் இடைமறித்து  “அப்படியா? நம்ப நண்டுதான் லீடரா?” என்று கேட்டேன் 
 “பிரச்சினையே அதுதான், அத்திம்பேர். எதுக்கு இந்தப் பொடியன் வந்திருக்கான் தெரியுமா? அவனுக்கு நீச்சல் தெரியாது. தொளைச்சு எடுக்கிறான், ‘நீச்சல் கத்து கொடு’ என்று. அவனை  ‘நண்டு’ என்று நீங்க சொன்ன வேளை, அவனை நிஜமாகவே நண்டாக நீங்க ஆக்கி வைக்கணும்” என்றாள் அங்கச்சி.
   “அங்கச்சி..   ‘கெக்கே பிக்கே’ என்று ஏதாவது சொல்லிண்டே இருக்காதே. நான் விளக்கமா சொல்றேன், அத்திம்பேர்” என்றான்  தொச்சு.
ஏதோ நாடக வசனத்தை எழுதி, மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல தொச்சு, அங்கச்சி வசனங்கள் இருந்தன.

“உள்ளே வாடா, தொச்சு…வந்தவனை “வா” என்று சொல்லாமல், ஏதேதோ பேசிக் கொண்டே இருக்கிற வழக்கத்தை எப்பதான் விடுவீங்களோ!” என்றாள் கமலா. 
  “கமலா, முதலில் காபி கொண்டு வந்து கொடு” என்றேன். 
பொங்குகிற பாலில் சிறிது தண்ணீர் தெளித்தது போல்,  கமலாவின் கடுகடுப்பு ‘புஸ்’ என்று அடங்கிப்போயிற்று.  அது மட்டுமல்ல, உற்சாகம் ஊற்றாகப்  பெருக்கெடுத்தது.
 நான் சொல்லி முடிப்பதற்குள், எள் என்பதற்குள் எண்ணெயாக இருக்கும் என் மாமியார்  காப்பியுடன் வந்து விட்டாள்- வழக்கத்தை விட 50% அதிக பாசத்துடன்! 
 “தொச்சு! வாடா, அங்கச்சி வாம்மா. பப்ளி வாடா” என்று சொல்லியபடியே, மேஜையில் காப்பியை வைத்தாள்.
(பப்ளி? தொச்சுவின் பையனின் உண்மையான பெயர் என்ன என்று எனக்குத் தெரியாது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு பெயரில் அழைப்பார்கள். சில சமயம்  அது திட்டு மாதிரி கூட இருக்கும்;  உதாரணமாக, புளிமூட்டை, ரோடு ரோலர், பீம சேனா, ஃபுட்பால் தடியா, கரடிக் குட்டி, வெல்லக்கட்டி, பலூன் கண்ணா என்று பல பலப் பெயர்கள்.)
“தொச்சு.. நீ குழந்தையை ‘ பப்ளி’ன்னு கூப்பிடறயே, அது என்ன பப்ளி?” என்று கேட்டால், இந்த பெயர்களுக்கெல்லாம்  அர்த்தம், விளக்கம் எதுவும் கிடையாது. அத்திம்பேர்! என் பெயரை  ‘தொச்சு’ என்று வைச்ச மாதிரி, இதுவும் ஒரு பேர்… இந்த பப்ளி என்ற பெயர்  ‘பப்ளிமாஸ்’ என்ற பெயரின் சுருக்கம். அவ்வளவுதான்” என்பான்!)
காப்பியை நோக்கி பொடிநடையாக சென்றபடி “அத்திம்பேர்..  நாங்க இன்னிக்கு வந்ததே இந்த பப்ளிக்காகத்தான்…. எங்க காலனியிலே இப்போ சூப்பரா நீச்சல்குளம் கட்டி இருக்காங்க; போன வாரம் திறந்து வெச்சாட்டங்க. பசங்க பாடு கும்மாளம் தான். பாவம், பப்ளி  வெறுமனே வேடிக்கை பார்த்துண்டு  இருக்கான்” என்று தொச்சு சொன்னான்.
  அங்கச்சி,  “அவன்   நீச்சல் கற்றுக் கொள்ளத் துடியா துடிக்கிறான்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே நான் “தொச்சு,   நீ சொல்லிக் கொடுக்க வேண்டியது தானே? என்று கேட் டேன்,

காபியை ஒரு முழுங்கு குடித்துவிட்டு, தொச்சு “அம்மா, எப்படிம்மா இப்படி பிரமாதமா காபி போடறே? அங்கச்சியும் போடறாளே!.. போகட் டும், என்ன சொன்னீங்க, அத்திபேர்? நீச்சல் நீயே சொல்லிக் கொடுக்க வேண்டியது தானே என்று தானே சொன்னீங்க…. ஐயோ, எனக்கு ஆயிரம் வித்தை  தெரிஞ்சிருந்தாலும் (!) இந்த பாழாப் போன நீச்சல் தெரியாது. அதனால வந்து….” என்று லேசாகத் தயங்கியபடி அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது, அங்கச்சி “என்ன மென்னு முழுங்கறீங்க? நீங்க பணமா கடன் கேட்கிறீங்க?… நானே அத்திம்பேரைக் கேட்கிறேன். அத்திம்பேர் மாதிரி ஒருத்தர் கிடைச்சது நம்ப பாக்கியம். அத்திம்பேர், நீங்க நாலு நாள் வந்து, இந்தக் குழந்தைக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கணும்…பப்ளி அசகாய சூரன்.  இரண்டே நாளில் கற்றுக்கொண்டு விடுவான்” என்றாள். 
    “இரண்டு நாளில் கற்றுக்கொண்டு விடுவான் என்றால், நான் எதுக்கு நாலு நாள் வரணும்? அடுத்த இரண்டு நாள், ஒலிம்பிக் வீரனைப்போல நீச்சல் அடிக்கக் கத்துக்கப் போறானா?” என்று கேட்டேன்.  நான் எதிர்பார்த்தபடி அங்கச்சி, “இதுதான் அத்திம்பேர் என்கிறது… ஒரு அல்ப நீச்சல் விஷயத்திலும் ஜோக் அடிக்கிறார்”  என்றாள். (எல்லாம், ஐஸ்!) 
“நீச்சலும் சரி, ஜோக்கும் சரி… இரண்டும் ஒன்றுதான். இரண்டும் அடிக்கிற விஷயங்கள்தான்” என்றேன்
 இதற்குள் பொறுமை இழந்த என் மாமியார் “ஏண்டி கமலா, நீங்க பேசி க்கொண்டே இருப்பதை பார்த்தால், பப்ளி  நீச்சல் கத்துக்கப் போறானோ இல்லையோ, நன்னா ஜோக் அடிக்கக் கத்துண்டு விடுவான்” என்றாள்.
“அதுவும் இரண்டு நாளிலேயா?” என்று ஆகாயத்தைப் பார்த்து கேட்டேன். எதிர் விமர்சனம் எதுவும் வரவில்லை.   (எல்லாம் அனுபவத்தில் அடிபட்டு கற்றுக் கொண்ட பாடம்)
இன்னும் காலம் தாழ்த்தினால்  “இருந்து சாப்பிட்டு விட்டு போயேண்டா” என்று புத்திர பாசம் பொங்க, என் மாமியார் சொல்லக்கூடும். அதனால் நான் “சரி..சரி..  நாளைக்கு நான் வரேன், நீச்சல் பாடத்திற்குப் பூஜை போடலாம்.. ஏய், பப்ளிகுட்டி, நீ சரியா கத்துக்கலே, உனக்கும் சரியான பூஜை கிடைக்கும்” என்று சொல்லிச் சிரித்தேன். எல்லாரும் (என் மாமியார் உட்பட) சிரித்தார்கள்.


                       ***                         ******
 மறுநாள் காலை 5 மணிக்கு என்னை எழுப்பினாள் கமலா. 
“மணி ஆகலை? சீக்கிரம் எழுந்திருங்கோ. குழந்தை வந்து காத்துண்டு  இருப்பான்” என்றாள்
“எட்டு மணிக்குத் தானே நீச்சல் கற்றுக் கொடுக்க வரேன்னு சொல்லி இருந்தேன்” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போது, கமலா  “அது எனக்குத் தெரியாதா? நீங்க எழுந்திருக்கணும், பேப்பரை எழுத்து எழுத்தாப்  படிக்கணும். அப்புறம் உங்க ஃப்ரண்ட் ராஜப்பா கிட்ட நியூஸ் மொத்த த்தையும் அலசணும். அதுவும்,  கோஸ்டரீகா பூகம்பம், நிகரகுவாவில் பஞ்சம், அங்கே வெள்ளம், இங்கே சுனாமி என்றெல்லாம் பேச வேண்டாமா?  அந்த நாடு எல்லாம் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாமல் அரட்டை அடிச்சாகணும், இல்லையா.  அப்புறம்,  நல்ல காலம். கிராமத்திற்கு போய் இருக்கிறாள் உங்கம்மா.   இல்லவிட்டால் பேரன், பேத்தி எல்லாரையும் பத்தி பேசணும்.  அதுக்குள்ள மணி எட்டு ஆயிடும்;  இல்லை எட்டுமணி நேரம்கூட ஆயிடும்… சரி, சரி, எழுந்து ரெடி ஆயிடுங்க” என்று அதட்டினாள். 

தீயணைக்கும் வீரர்கள் கூட இத்தனை பரபரப்பாக, அவசரமாக வேலையில் இறங்க மாட்டார்கள்.  நீச்சல் குளத்திற்குத் தீப்பிடித்து விட்டது மாதிரி அவசரம் அவசரமாக காலனிக்குப்   போகத் தயாரானேன். 
கமலா கொடுத்த மூட்டையை, இருமுடி கட்டிக் கொண்டு போவது போல், எடுத்துக் கொண்டு கிளம்பினேன் .  மூட்டையில் என்ன என்று கேட்காதீர்கள். இட்லி,  சட்னி, சாம்பார் என்று   தம்பி குடும்பத்திற்குக் கொடுத்து அனுப்பி இருந்தாள் கமலா. ராமருக்குக் கூட தம்பி லட்சுமணன் மேல் இத்தனை பாசம் இருந்திருக்குமோ என்பது சந்தேகம்.  
                  *                                     *
 தொச்சுவின் காலனிக்கு போய் சேரும் போது மணி எட்டாகி இருந்தது. தூரத்தில் ஒரே கூச்சலும் கும்மாளமுமாக இருந்தது.  நீச்சலும் கூச்சலும் உடன் பிறப்பு என்பது இன்று வரை எனக்கு தெரியாது. 
“எங்கே இருக்கிறது  நீச்சல் குளம்?” என்று யாரையும் கேட்க வேண்டிய அவசியமே இல்லை.  கூச்சல் வந்த திக்கை நோக்கிப் போனேன். அதை நெருங்குவதற்குள் அங்கச்சி மற்றும் சில கொசுறுகள் என்னை நோக்கி ஓடி வந்தன. இரண்டு கைகளையும் விரித்தபடி தொச்சு ஓடி வந்தான். அவன் என்னை பார்த்தபடி வரவில்லை என்பது இரண்டு  நிமிஷத்தில் தெரிந்துவிட்டது.
  “என்ன,  அத்திம்பேர்!  பெரிய மூட்டையைக் கொண்டு வந்திருக்கீங்க? ’எதுவும்  அனுப்பாதே’ என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு தான் வந்தேன். இவ்வளவு அனுப்பி இருக்கிறாள். இந்த அம்மா எப்பவும் நான் சொல்றதை கேட்கவே மாட்டாள்” என்றான்.
  “நீ சொல்றதை அம்மா அப்படி கேட்காமல் இருக்கிறதாலதானே, நீயும் சொல்லிண்டே  இருக்கே. ஒண்ணும் இல்லை… இட்லி, சாம்பார், சட்னி கொடுத்து அனுப்பி இருக்கிறாள். நீச்சல் கிளாஸ் ஆரம்பிக்கலாமா? எங்கே பப்ளிமாஸ்?” என்றேன்.
பப்ளி வந்தான். “சரி, சரி வாடா. ஆரம்பிக்கலாம்” என்றேன்
“எனக்கு ரொம்பப் பசிக்குது” என்று இழுத்தான்.
உடனே அங்கச்சி “இட்லியை பார்த்துட்டானோ இல்லையோ, பசி வந்துட்டது என்றாள்
“சாப்பிட்டுவிட்டு  நீச்சலடிக்கிறது உடம்புக்கு நல்லதில்லை, வாடா கண்ணா ! இன்னைக்கு நீச்சல் கிளாஸ் முடிந்ததும், பாவ்-பாஜி வாங்கித் தரேன்” என்றேன்.
“பாவ்-பாஜியா! ஆவ்!” என்று பெரிதாக ஏப்பம் விட்டான் பப்ளி.
மளமளவென்று நீச்சல் உடையுடன் பப்ளி வந்தான். நான் முதலில் தண்ணீரில் இறங்கினேன். 
 மேலே, நிறைய பேர் தங்கள் பேரன்கள் நீச்சலடிப் பதை, ஒலிம்பிக் நீச்சல் பயிற்சியாளர்கள் போல், “இப்படி அடி, அப்படி அடி ” என்று கத்திக்கொண்டு இருந்தார்கள். எந்த பாட் டி, எந்த பேரனுக்கு ஆடியோ பாடம்  நடத்துகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. இதுதான் தர்மக்கூச்சல்  என்பதுவோ, அதுவும் எனக்குத் தெரியவில்லை
    *                                *
தண்ணீரில் இறங்கினேன். “பப்ளி! வாடா குழந்தை” என்று அவனைக் கூப்பிட்டேன். அவன் “எனக்குப் பயமாயிருக்கு. தண்ணிக்குள்ள மூழ்கிப் போயிடுவேன்; ரொம்ப ஆழத்துக்கு போய்ட்டா என்ன செய்யறது? எனக்குப் பயமா இருக்குது” என்று கத்த ஆரம்பித்தான்.
 “அழாதேடா.. எவ்வளவு பெரிய பையனாயிட்டே..   எல்லாரும் சிரிக்கிறாங்க…. அதோ பாரு, மாடி வீட்டு வரது குட்டி, டால்பின் மாதிரி   நீச்சல் அடிக்கிறான்” என்றான் தொச்சு
  “அவன் வரதுக் குட்டி இல்ல; அவனோட பாட்டி அவனை ‘வாத்துக்குட்டி’ன்னுதான்   கூப்பிடுறா.. அதனால் அவனுக்கு நல்ல நீச்சல் வருது” என்று தன் கண்டுபிடிப்பை, லேசாக அழுதபடி சொன்னான், பப்ளிமாஸ்.
 “ஏ, பப்ளிமாஸ்!  படிக்கட்டு வழியாக இறங்கு.. ஆழமே  மூணு, நாலு அடி தான். இப்போ வரப் போறியா, இல்லையா?” என்று நான் சற்று கடுமையாக சொன்னதும்  “உன்னைக் குண்டு கட்டாகத் தூக்கிப் போட்டு விடுவேன்” என்று சொல்லியபடியே தொச்சு அவனை நெருங்கினான். 
அந்த சமயத்தில், கிட்டத்தட்ட இரண்டு செகண்டுகளில் நடந்ததை விவரிக்கப் பத்து நிமிஷமாவது ஆகும் .
 ஜல்லிக்கட்டு காளையை பிடிக்க முனையும் வீரனைப் போல் தொச்சு அவன்  மேல் பாய, பப்ளிமாஸ் சடாரென்று ஓடி — இல்லையில்லை, கண்,மண் தெரியாமல்  நீச்சல் குளத்தின் ஓரமாக ஓட முற்பட்டான். அப்போது எதிரே வந்த ஒரு கேட்டரிங் பையன் மேல் மோதினான். அந்த கேட்டரிங் பையன் கையில் பெரிய தட்டையும், அதில் சுமார் 10 டம்ளர் மாம்பழ ஜூஸ் வைத்திருந்ததையும் அவன் கவனிக்கவில்லை.  அந்த கேட்டரிங் பையனும் கவனிக்கவில்லை.    நீச்சல் குளத்தின் அருகில் நாற்காலியில் உட்கார்ந்து இருந்தவர்களும் இதை கவனிக்கவில்லை.  “எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர்” என்று கம்பன் சொன்னதை சற்று மாற்றி   “மோதியதைப் பார்த்தனர்; அடுத்து, ’ஐயோ’ என்ற பப்ளியின் அலறலைக் கேட்டனர் 
பப்ளி மட்டும் தண்ணீரில் விழவில்லை; கேட்டரிங் பையனும் விழுந்தான். அவன் கெட்டியாகப் பிடித்திருந்த  தட்டும், கண்ணாடி டம்ளர்களும்  தண்ணீரில் விழுந்து விட்டன. எல்லாம் இரண்டு செகண்ட்தான்.  அடுத்த ஷாட், பப்ளி  அலறி அழுவது கேட்டது.
(காலனியை கட்டிய கம்பெனி, தெரிந்தோ தெரியாமலோ சரியான அளவு சிமெண்ட் போட்டு கட்டி இருந்ததால், பப்ளி அலறலுக்கு கட்டடம் ஈடு கொடுத்து, விக்கல் வந்தது போல் லேசாக  ஆடி நின்றது!)
  “என்ன ஆச்சு?,  என்ன ஆச்சு?” என்று எல்லோரும், பதில் கிடைக்காது என்று தெரிந்திருந்தும் ஒருவரை ஒருவர்   கேட்டனர்.
 தண்ணீரில் நின்றுகொண்டிருந்த நான் இந்த நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
 எனக்குச் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த பப்ளி  ‘கால், கால்’ என்று கத்தினான்.  ‘காள், காள்’ என்று கத்துவது வழக்கம்; இது என்ன புதிதாக இருக்கிறதே என்று யோசித்தேன். 
 அடுத்த கணம், ஐயன் பெருமாள் கோனார் நோட்ஸ், பரிமேலழகர் உரை எதுவும் இல்லாமல் எனக்குப் புரிந்துவிட்டது.  “ஐயோ, காலில் கண்ணாடி குத்தி விட்டது” என்று எஃப்.எம். ஒலிபரப்பு மாதிரி கத்தினான். அதற்குள் அவனைச் சுற்றி தண்ணீரில் சிவப்பு கோலம் போட்டது மாதிரி ஏதோ மிதந்து கொண்டிருந்தது. உற்றுப் பார்த்தேன். ரத்தம்! பப்ளியின் காலிலிருந்து ரத்தம் வந்து, நீச்சல்  குளத்தைச் சிவப்பாக்கிக் கொண்டிருந்தது.
  அப்போது   யாரோ உரக்க விசில் அடித்தார்கள். “எல்லாரும் தண்ணீரை விட்டு வெளியே வாங்கோ, உடனே வாங்கோ” என்ற அறிவிப்பும் வந்தது. எனக்குப் புரிந்துவிட்டது.  பப்ளி மோதியதால் விழுந்த கண்ணாடி டம்ளர்கள், தண்ணீரில் விழுந்து உடைந்துவிட்டன. போதாக்குறைக்கு, பப்ளி அவற்றின் மீது குதித்தும் விட்டான். கண்ணாடித் துண்டுகள் அவன் பாதத்தைப் பதம் பார்த்துவிட்டன! எல்லோரும் பரபரப்பாக நீச்சல் குளத்தில் இருந்து மேலேறி வந்தனர். பின்னணி இசையாக, “ஐயோ காப்பாத்துங்க; இல்லைன்னா 108’க்கு போன் பண்ணுங்க; தெய்வமே! என் பிள்ளையைக் காப்பாத்து’ என்றும், இன்னும் பல வசனங்களையும் அழுது கொண்டே அங்கச்சி  பேசியது அங்கு யாருக்கும் புரியாவிட்டாலும்,  அனுதாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்தது.
 * * * எல்லாரும் ஒரு வழியாக தண்ணீரிலிருந்து வெளியேறி கொண்டிருக்க, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பக்கம், காரசாரமாக வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.  தனி ஒருவருடன் நாலைந்து பேர் கைகலக்காத குறையாக  உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள்.      
திடீரென்று எதிர்க்கட்சிக்காரரிடம் “இங்க பாருங்க, ராபர்ட். உங்களுக்கும் வேண்டாம்; எனக்கும் வேண்டாம். இதோ என்னோட அத்திம்பேர் வந்திருக்கிறார். அவரிடம் கேட்கலாம். அவர் சொல்றதுக்கு நானும் கட்டுப்படறேன்; நீங்களும் கட்டுப்பட வேண்டும்” என்றான் தொச்சு.
“அவர்  உன்னோட அத்திம்பேர் என்றால், உன்பக்கம் தான் பேசுவார்” என்றார் ராபர்ட் என்னும் ‘அவர்’.
  எப்போது என் பெயர் வந்துவிட்டதோ, இனி நாம் சும்மா இருக்கக்கூடாது என்று    எண்ணி “சார், ராபர்ட்.  என்ன விஷயம்?” என்று நான் கேட்டேன்.
“குட் மார்னிங், சார்” என்று சொல்லியபடியே ராபர்ட் என்னிடம் வந்து  “ நான் இந்த காலனி பில்டர். நீச்சல் குளத்தை அன்பளிப்பாக நான் கட்டிக் கொடுத்தேன்   இதை பாருங்க, யாரோ ஒரு பையனுக்குக் கண்ணாடி குத்தி ரத்தம் வந்துட்டது. எல்லா தண்ணீரும் ரத்தம் ஆகிவிட்டது.  நீச்சல் குளத்தைச் சுத்தம் பண்ண வேண்டும். தண்ணிய காலி பண்ணிவிட்டு, பினாயில் போட்டு அலம்பி, திரும்பவும்   தண்ணீரை நிரப்ப வேண்டும்.  இதை நான் பண்ணனும்னு இவர் சொல்றார். அது என்ன சார் நியாயம்? ” என்று கேட்டு ராபர்ட்  மூச்சு வாங்கினார்
“அவருடைய கேட்டரிங் பையன் கண்ணாடி  டம்பளர்களைத் தட்டில் எடுத்துக் கொண்டு ஓரமாகப்   போனதாலே தானே, தட்டு  நீச்சல் குளத்தில் விழுந்தது?  நல்ல காலம், பப்ளிமாஸ் காலில் குத்தி விடவே எல்லா குழந்தைகளும் தப்பித்தார்கள்.  இல்லாவிட்டால் எல்லா குழந்தைகளுக்கும் ரத்த காயம் ஏற்பட்டிருக்கும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். (அந்தக் காலனியின் கமிட்டியின் தலைவர் அவர் என்று பின்னால் எனக்கு தெரிந்தது. )
ராபர்ட் என்னிடம் வந்து ”சார், நீங்க  இந்தக் காலனிகாரர் இல்லை என்று நினைக்கிறேன்” என்று ஆரம்பித்தவுடனே, தொச்சு அவரிடம் “ராபர்ட், இவர் பெரிய எழுத்தாளர். என் பிரதர்-இன் -லா” என்றான்.  
” ஓ! அப்படியா?   நீங்க   நிறைய சிந்திக்கற வேலை செய்யறவர். நீங்கள் என்ன சொன்னாலும் நான் சம்மதிக்கிறேன்” என்றார் ராபர்ட். (என் தலைமேல் ஐஸ்கட்டியை வைத்த மாதிரி இருந்தது)
ராபர்ட் உரத்தகுரலில் “ஜோசப், ஏய்..ஜோசப்! சாருக்கு சூடா டீ கொண்டு வா.  ஈர உடம்போடு இருக்கார்” என்று கத்தினார். ( சூடான ஐஸ்!)
அவரிடம் நான் “பிரதர், ஒரு விஷயம் எனக்குத் தெரியணும். இப்போது, இந்த நீச்சல்குளத்துத் தண்ணீரை  பம்ப் பண்ணி எடுத்து விட்டு, பினாயில் போட்டு கழுவி விட்டு, மறுபடியும் தண்ணீர் நிரப்ப என்ன செலவாகும்? ” என்று கேட்டேன். சமாதான பேச்சுவார்த்தைக்கு வருகிறார் என்று ராபர்ட் ஊகித்து இருக்க வேண்டும். உடனே என்னை பார்த்து “அங்கிள், நீங்க பெரிய ரைட்டர். நாலும் தெரிஞ்சவர். கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய் ஆகும். தண்ணி லாரி, தண்ணீர் பம்ப், அது இது என்று பணம் செலவு இழுத்துக் கொண்டு போய்விடும்” என்று மிகவும் பவ்யமாக சொன்னார் 
“பாருங்க, ராபர்ட். பாதி செலவை நான் ஏத்துக்கிறேன்” என்று சொல்லி முடிப்பதற்குள் ராபர்ட், “ நான்  பாதி செலவை  ஏத்துக்கிறேன், சார்” என்றார். சுற்றியிருந்தவர்கள்  ‘வெரிகுட் ராபர்ட், சபாஷ் ராபர்ட்’ என்று குரல் கொடுத்தார்கள்!  
தொச்சு “வெரிகுட் அத்திம்பேர்” என்று சொன்னான். மனதிற்குள்ளேயே ‘அப்பாடா’ என்று அவன் சொல்லி இருக்க வேண்டும்.  அங்கச்சி “வெரிகுட் அத்திம்பேர், வெரிகுட் அத்திம்பேர்” என்று சொன்னாள். (அங்கச்சிக்குத் தொச்சு சைகை காட்டியிருக்க வேண்டும்.).
ராபர்ட் உரத்த குரலில்   “டேய், ஜோசப். எல்லாருக்கும் சாக்லெட் கொண்டுவந்து கொடுடா ” என்று உற்சாகமாகச் சொன்னார்
                      *                                *
வீட்டிற்குத் திரும்பி வந்தேன். வாசலிலேயே கமலாவும் என் மாமியாரும், சும்மா வந்து நிற்பது போல் பாவ்லா காட்டிக்கொண்டு இருந்தாலும்,  நீச்சல் குளத்தில் நடந்ததை விலாவாரியாக கேட்பதற்குக்  காத்திருப்பது தெரிந்தது. கடன்காரன் தொச்சு அங்கு நடந்ததை மசாலா போட்டுச் சொல்லி

” காற்று மாசு குறைந்து விட்டதா எப்படி அமைச்சரே . ?”    ” ஊரடங்கால் குதிரை படை யானை படை புழுதியை கிளப்ப வில்லை மன்னா ….” சீர்காழி.ஆர்.சீதாராமன்

இருப்பான் என்பது என் ஊகம்.
“பாவம், பப்ளிக்குக் கண்ணாடி குத்திவிட்டதாமே?  அவன் தான் தண்ணீரில் இறங்க பயந்தானே, அவனை எதுக்கு  “வாடா,  வாடா” என்று கூப்பிட்டீங்க ?” என்று  கமலா ஆரம்பித்தாள். 
“கமலா, தொச்சு எல்லா விவரங்களையும் சொல்லி விட்டானா? வெரிகுட். கண்மண் தெரியாமல் பப்ளி  ஓடினான்; மாம்பழ ஜூஸ் கொண்டு வந்த சர்வர் பையன் மேல மோதினான்… விடு.. . எல்லாம் ஒரு மாதிரி சமாதானமாகப் போய் விட்டது, காலனியைக் கட்டிய கான்ட்ராக்டரோடு!” என்றேன்.
  “அத்திம்பேர் அவசரப்பட்டு 2000 ரூபாய்க்கு தரேன்னு சொல்லி சொல்லிட்டார். மொத்த செலவு 4,000 ரூபாய் என்று அந்த ராபர்ட்  சொன்னது சரியான வடிகட்டின ஏமாற்று வேலை. மொத்தம் 2000 ரூபாய் கூட ஆகாது. அப்படின்னு தொச்சு சொன்னான்” என்றாள் கமலா.
அப்போது என் மாமியார்  “கமலா, நீ எதுக்குப் போய் பில்லு, பில்லு என்று எதையாவது  சொல்லிண்டு இருக்கே? தொச்சுவுக்கு நல்ல பெயர் வாங்கித் தரணும்னு அப்படி சொல்லி இருக்கார். இவருக்கு அவன் எவ்வளவோ செஞ்சிருக்கான். அதனால அவனுக்காக சொல்லி இருக்கார்…. ஒண்ணும் தப்பு இல்லை” என்றாள் என் மாமியார்.

 என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை.
 அதை விட வியப்புக்குரிய விஷயம் “அம்மா, நீ சரியா தான் சொன்னே. வாங்கோ, காப்பி ஒரு கப் கொடுக்கிறேன். பாவம் குறுக்கெழுத்துப்  போட்டி கூட போடாம ஓடினீங்க” என்றாள் கமலா.  
என் கால்கள் தரையில் இல்லை. மாமியாரும், அருமை பெண்ணும் சொன்ன வார்த்தைகள் அப்படியே என்னை அலேக்காக தூக்கிக்கொண்டு போயின. இப்படி அவர்களை மாற்றியதற்கு 2000 என்ன, இன்னும் மேலே கூட செலவு பண்ணலாம்!  
“ஆண்டவா!  அவ்வப்போது இப்படி நான் 2000 ரூபாய் செலவு செய்வதற்கு உபாயம் செய்” என்று வேண்டிக்கொண்டேன்! 

உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது.”

“உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது.”

கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் சுப்ரியாவை பாராட்டி, விஜயகுமார் IPS சொன்ன வார்த்தைகள் இவை.

சுப்ரியாவின் தன்னலமற்ற அந்த பரபரப்பான ஓட்டத்தையும், யாரோ ஒரு பார்வையற்ற மனிதருக்கு அந்தப் பெண் காட்டிய பரிவான சேவையையும்,

பார்த்த அனைவருமே பாராட்டினார்கள்.

கடந்த ஜூலை 9 ம் தேதி.

கேரள மாநிலத்தில்

ஒரு ஊரடங்கு தளர்வு நேரத்தின்

வெறிச்சோடிய சாலை.

யாரோ ஒரு இளம்பெண் மூச்சு வாங்க வாங்க சாலையோரம் ஓடிச் சென்று ஒரு பஸ்சை நிறுத்தி, யாரோ ஒரு பார்வையற்ற மனிதருக்கு உதவி செய்ய, அதை யாரோ ஒருவர் தற்செயலாக மொபைல் மூலம் வீடியோ எடுக்க, அடுத்த சில நொடிகளில் உலகம் எங்கும் பரபரப்பாக பரிமாறப்பட்டது அந்த வீடியோ.

யார் இந்த பெண் என்ற கேள்வி அந்த வீடியோவை பார்த்த எல்லோர் மனதிலும் எழுந்தது.

ஒன்றிரண்டு நாட்களில் உலகமே அவர் பெயரை உச்சரித்தது.

சுப்ரியா.

சமீபத்தில் அந்த அன்பு உள்ளம் கொண்ட சுப்ரியாவுக்கு அருமையான ஒரு புத்தம்புதிய வீட்டை பரிசாக வழங்கியிருக்கிறார் ஆலுக்காஸ் நிறுவன அதிபர்.

இந்த செய்தியை நண்பரிடம் நான் காட்டினேன்.

“நிஜம்மாவே சந்தோஷமா இருக்கு ஜான்.”

இதோ, அந்த செய்தியின் முழு வடிவம் :

கேரள மாநிலம் திருவல்லாவில் ஜாய் ஆலுக்காஸ் துணிக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார் சுப்ரியா.

கணவன் மற்றும் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்

சுப்ரியா வழக்கம் போல பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பார்வையற்ற நபர் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார்.

அவருக்கு சரியான பேருந்தை கண்டு பிடிக்க முடியாத நிலையில் அவரிடம் விசாரித்து அவர் போக வேண்டிய ஊருக்கு பேருந்தில் ஏற்றி விடுவதற்காக சுப்ரியா அழைத்து வந்தார்.

அப்போது அந்த பார்வையற்ற நபர் செல்ல வேண்டிய ஊருக்கான பேருந்து வந்ததும், அந்த பேருந்தின் பின்னால் கத்திக்கொண்டே ஓடி ஒருவழியாக பேருந்தை நிறுத்தினார்.

பின்னர் நடத்துநரிடம் விவரத்தை கூறி பேருந்தை நிற்க வைத்து விட்டு, மீண்டும் அந்த பார்வையற்ற நபரிடம் ஓடிச் சென்று, அவரை அழைத்துவந்து பேருந்தில் ஏற்றிவிட்டார் சுப்ரியா.

தற்செயலாக இந்த சம்பவத்தை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதையடுத்து,

அந்த வீடியோ பரபரப்பாக பரிமாறப்பட்டது.

பலரும் சுப்ரியாவுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொல்லி வந்தனர்.

இந்த வீடியோவை பார்த்த ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர் சுப்ரியாவை அவருடைய வீட்டில் சென்று பார்த்து வாழ்த்துகள் தெரிவித்தாராம்.

மேலும் திருச்சூரில் இருக்கும் தலைமை நிறுவனத்தில் வந்து தன்னை சந்திக்குமாறும் கூறியிருக்கிறார்.

அதன்படியே சுப்ரியாவும், தலைமை அலுவலகத்துக்கு சென்றார்.

அப்போது அந்நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் முன்னிலையிலும் சுப்ரியாவிற்கு புத்தம் புதிய வீடு ஒன்று பரிசாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார் ஆலுக்காஸ் உரிமையாளர்

ஜாய் ஆலுக்காஸ்.

இதனை கேட்டு மகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தார் சுப்ரியா.

“மனிதாபிமான அடிப்படையில் நான் செய்த சிறிய உதவிக்கு இவ்வளவு பெரிய பாராட்டை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை” என்று கண்ணீருடன் நா தழுதழுக்க ஊழியர்கள் முன்னிலையில் சொன்னார் சுப்ரியா.

கேரளாவை கடவுளின் தேசம் ( God’s own country ) என்று சொல்வது நிஜம்தான் என சுப்ரியாவை பார்க்கும்போது தோன்றுகிறது.

“கடவுளிலே கருணை தன்னைக் காணலாம்

அந்தக் கருணையிலே கடவுளையும் காணலாம்”

John Durai Asir Chelliah

அந்த கட்சியோட மேடைப் பேச்சாளர் எதுக்கு திடீர்னு தனக்கு கட்சியிலே பொறுப்பு வேணும்னு கேட்டு அடம்பிடிக்கிறாரு!

   “பொறுப்பில்லாம பேசறாரு”!ன்னு யாரும் விமர்சனம் பண்ணிடக் கூடாதாம்! எஸ்.வேதா.

உதவி

உதவி                       தனுஜா ஜெயராமன்.

வாச கதவை திறந்ததும் எதிரே நின்றிருந்தாள் லஷ்மி…

ஏன் லஷ்மி ..காலையிலேயே வரேன்னுட்டு சொல்லாம கொள்ளாம நின்னுட்டயே..சிங்க் நிறைய பாத்திரம் குமிஞ்சு கெடக்கு… துணிவேற மிஷின்ல கெடக்கு …என்று கோபித்தாள் சித்ரா

சாரிம்மா…”எங்க சங்கத்துல இந்த கௌதம் பயலுக்கு கல்வி உதவி தொகை தர்றேன்னு சொல்லியிருந்தாங்க” …அதான் காலையிலே போயிட்டு, இப்ப தான் வரேன்….

“வாங்கிட்டயா லஷ்மி”

“ஒரு ஆயிரம் ரூபா குடுத்தாங்க”..அதுக்கே நாலுமணி நேரம் வெயில்ல உக்காந்துட்டு வாங்கினு வரேன்..

” ஏன், என்னாச்சி”

“அது எங்க சாதி ஆளுங்க வெச்சிருக்கிற சங்கம்..மா”…நல்லா படிக்கிற எங்க சாதி பசங்களுக்கு உதவி தொகை தரோம்னு கூப்டாக…ஆனா இம்மா நேரம் மீட்டிங் போட்டு சாதி சாதின்னு பேசி அறுத்து தள்ளிட்டு தான் அந்த காசையே தந்தானுங்க ..

“அதுக்கு ஏன் லஷ்மி இவ்ளோ கோவம் …”

அடபோங்கம்மா…எங்க ஆளுங்கல்லாம் நல்லா வசதியாத்தான் இருக்காங்க…நான் வீட்டு வேலை செஞ்சி வவுத்தை கழுவுறேன்… சாதியா வந்து சோறுபோடுது….என் கஷ்டத்துல தான் நான் குப்பைய கொட்றேன்… என்று சிங்கிலிருந்த பாத்திரங்களை தொலக்க ஆரம்பித்தாள்..

“ஆமாம் லஷ்மி…. கேக்கறேன்னு தப்பா நினைக்காதே…நீ…நீ ..என்ன ஜாதி…”

ம்…ம் “ஏழை ஜாதி” …என்றாள் தூண்டை உதறி தோளில் போட்டபடி….

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

” எதிரி மன்னன் சாக்ஸ் போட்டு வர காரணம் என்ன அமைச்சரே ?”

  ” தங்கள் பாத பூஜை ரகசியம் கசிந்து விட்டது போல மன்னா….”

– சீர்காழி .ஆர் . சீதாராமன் .

தலைவரை மேலிடம் கட்டம் கட்டிட்டாங்களாம் ….”

    ” தனிமை படுத்திட்டாங்கன்னு டீசன்ட்டா சொல்லுங்க ….

– சீர்காழி .ஆர் . சீதாராமன் .

உங்க பையன் பொண்ணுங்க இடுப்பையே சைட் அடிச்ட்டு இருக்கானே?

ஹிப் னாடிசம் படிக்க வெச்சேன்,ஒரே “குஷி” ஆகிட்டான்

  சி.பி. செந்தில்குமார், சென்னிமலை.

இன்னும் எத்தன நாளைக்குதான் நடந்ததையே நினச்சிட்டு இருக்கப்போற?”

வாக்கிங்க் போனது போதும், சுகர் சரி ஆகிடுச்சுன்னு டாக்டர் சொல்றவரை

சி.பி.செந்தில்குமார்.  சென்னிமலை.

டியர்! பீச்ல  லவ்வர்ஸ் எல்லாரும்  ஃபேஸ் to ஃபேஸ்  பார்த்தபடிதான்  உட்கார்ந்திருப்பாங்க.  நீ  ஏன் முதுகை  காட்டியபடி திரும்பி உட்கார்றே?


நீங்கதான்  என்னோட மறுபக்கத்தை  தெரிஞ்சுக்க ஆசைப்பட்டீங்க?

                                        சி.பி,எஸ்.

என் சம்சாரம் புரளி, வதந்திகளை உடனே நம்பிடுவா. என்னை மாதிரி ஜாலி டைப் கிடையாது.

ஓஹோ…  சென்ஸ்  ஆஃப் ஹியூமர் உனக்கு, சென்ஸ்  ஆஃப் ரூமர்  அவங்களுக்கா?

            சி.பி.எஸ்.

 கார் ரேஸ்  வீரரான நீங்க ஃபார்முலா ஒன் கார் பந்தயத்துல ஏன் கலந்துக்கலை?


சின்ன வயசுல இருந்தே கணக்கு, ஃபார்முலா இதுல எல்லாம் நான் கலந்துக்கறதில்லைங்க.

       சி.பி.எஸ்.

இவ‌ர் க‌ணி‌னி தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த் துறை‌யி‌ல் வேலை பா‌க்குறவரு போல?
இதய‌த் துடி‌ப்ப வ‌ச்சே எ‌ப்படி சொ‌ல்‌‌றீ‌ங்க டா‌க்ட‌ர்.
இதய‌ம் ல‌ப் ட‌ப்பு‌ன்னு துடி‌க்காம லே‌ப் டா‌ப் லே‌ப் டா‌ப்பு‌ன்னு துடி‌க்குதே…

அத வ‌ச்‌‌சி‌த்தா‌ன்.

  •                    பகவான் ஜி

எங்க மேனேஜர் இப்ப லஞ்சம்னு கை நீட்டறதே கிடையாது…!

     திருந்திட்டாரா?

நீ வேற கொரானா பயத்துலே எல்லாமே இ-பே பண்ணச் சொல்லிடறாரு…!

  எஸ்.எஸ்.பாபு.

 தலைவர் திடீர்னு கொள்கை பரப்பு செயலாளரா நடிகையை அறிவிச்சிட்டாரே ஏன்?

அவங்கதான் இளைஞர்களை “சுண்டி இழுக்கறாங்க”ளாம்!

எஸ்.எஸ்.பாபு,

      உங்க பையன் எங்கிருக்கான்னு கேட்டா எப்பவும் மாமியார் வீட்டுல இருக்கிறதா சொல்றீங்களே வீட்டோட மாப்பிள்ளையா இருக்காரா?

ஜெயிலோட மாப்பிள்ளையா இருக்கார்!

சின்னசாமி, நத்தம்.

            புதுப் புடவையிலே வேலைக்காரி ப்ரைட்டா இருக்கான்னு வாய்விட்டு வொய்ஃப்கிட்ட சொல்லிட்டேன்

  அப்புறம்?

அன்னிக்கு பூரா என் நேரம் டார்க்கா ஆயிருச்சு!

                         -அகரத்தான்.

       அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?

  போஸ்ட் மார்ட்டம் பண்ணப் போற பாடிக்கு மயக்க மருந்து கொடுக்க சொல்றாரே!

  எஸ்.வேதா, நத்தம்.

  “எந்தப்பொருள் வாங்கனும்னாலும்,பத்து பதினைஞ்சி கடை ஏறி இறங்கி ,விலை low வா விக்கிற கடையிலதான் வாங்குவார் என் வீட்டுக்காரர்”

” உங்க வீட்டுக்காரர் ‘லோ’ ‘லோ’ ன்னு அலையறதை நானும் பார்த்திருக்கேன்டி”

புது வண்டி ரவீந்திரன்

“அந்த கலைக்டர் அம்மா விரல் நுனியில் வச்சிருக்காங்க”

” புள்ளி விவரங்களைத்தானே?

” இல்ல.மருதாணியை”

புது வண்டி ரவீந்திரன்

“நம்ம பிரேம் கண்ணாடி கடை வச்சதிலேர்ந்து தன்னோட பேரை மாத்திக்கிட்டானாம். தெரியுமா?”

” என்னான்னு மாத்திக்கிட்டான்?”

” ஃபிரேம்”

புது வண்டி ரவீந்திரன்

கவிதைச்சாரல்!

கவிதைச்சாரல்!

” நடிப்பு புலி பட்டத்தை அந்த நடிகர் எப்படி மாத்திகிட்டார் ….?”    ” நடிப்பு வைரஸ்ன்னு தான் ….” சீர்காழி.ஆர்.சீதாராமன்               .      9842371679 .

    பாரியன்பன் – கவிதைகள்
********************************
1.
சதுரம் சதுரமாய் 
சதுரங்களை வெட்டுகிறேன்.
அடுத்து 
வட்ட வட்டமாய் வட்டங்களை 
வெட்டத் தொடங்கி
அதை – 
அரை, கால், அரைக்காலென; 
வெட்டுகிறேன்.
முக்கோணத்தை 
சிதைக்காமல் வெட்டத் தொடங்கி
வெட்டலின் சூத்திரத்தை
முழுமையாய்
அறியத் தொடங்கிய நாளில்…

உன் அன்புக் கட்டளைக்கு
இணங்க
மீண்டும் சதுரம் சதுரமாய் 
சதுரங்களை 
வெட்டத் தொடங்குகிறேன்.
ஆரம்பத்தில் 
நான் வெட்டிய சதுரங்களுக்கும்
இப்போது 
வெட்டி முடித்த வட்டங்களிலும் 
முக்கோணங்களிலும்
காண முடிகிறது 

தொழில் நேர்த்தியின் 
நிறைய வித்தியாசங்களுடன்

என்னிலும்…!

2.
அன்றொரு நாள்
என் கன்னத்தில் 

செல்லமாகத் தட்டினாய்.

பிரிதொரு நாள்
பூங்கொத்தை என் மீீீது

எறிந்தாய்.
இவை இரண்டிலும் 

வலியின் வித்தியாசங்கள்
பெரிதாகச் சொல்லும்படி  

ஏதுமில்லை.

3.
ஒரு காலத்தில்…
நான் 
இல்லாமல் போவேன்.
நீங்களும் 
இல்லாமல் போவீர்கள்.
ஒரு கட்டத்தில் எல்லாமும் 
இல்லாமல் போகும்.
பின்வரும் யுகத்திற்கு
அதுதான் “ஆதி”.

4.
நான் 
அங்கு வரும் நேரத்தில் 
நீங்களும் 
அங்கு அவசியம் இருங்கள்.
என் வருகைக் குறித்து
எதுவும் தெரியாதென்று
தப்பிக்கும் வாய்ப்பினை
நீங்களாகவே 
இட்டு நிரப்பிக் கொள்ளாதீர்கள்.

பின்வரும் 
திடமான அன்பையும்,
அடர்த்தியான மகிழ்வையும்,
நீங்கள் இழந்ததற்கு
நான் காரணமில்லை என்பதை
அப்போதுதான் 
உங்களால் பூரணமாய் 
தெரிந்து கொள்ள முடியும்.

 கைபேசி ; 9443139353. 

நடமாடும் தெய்வம்  விவசாயி

” வெயிலோ  மழையோ

  சமநிலையில்   விவசாயி மனநிலை 

 பக்குவப்பட்ட   உடல்   

  தேடலில் நிற்கும் மனம்   

ஓய்வில்லாஉழைப்பாளி 

தடைவிரும்பாதொழிலாளி

 மாசு படிந்ததேகம்

 பசுமையை விரும்பும் 

பெரிய மனம் 

பிறர்பசியைபோக்கிவிட்டு

கஞ்சியைபழையசோற்றை

அசைபோடும் மூலவிதை 

   ‘என்னோட டூத் பிரஷ்  எப்பவுமே புதுசா  இருக்கும்னு எப்படிச் சொல்றே ?”
            ”நீ பக்கத்திலே வந்தாலே, அதை நீ பயன்படுத்துறது இல்லைன்னு தெரியுதே !”- பகவான் ஜி                       

படிக்காதமேதை

வானிலையைகணிக்கும்ஞானி 

 மண்வாசனையை நித்தமும்

  நுகரும் வரமான மனிதன்

 ” சோதனையே  பயணம்

 சாதனையே அறுவடை

  விதைபோல எண்ணம்

  துளிர்விடும்விடாமுயற்சி

  சேற்றில்பாதம் கைநிறையஅன்னம்

  எளிமையான தோற்றம்

  பசிநீக்கிவிட்டநிறைவு

 விவசாயிவிஷமில்லாஅமிர்தம் …”

அகராதியில் இல்லாத பொருள்

பெருமையுடையது

 தியாகத்தின் மறுஉருவம்

  நடமாடும்தெய்வம்விவசாயி ….” 

 சீர்காழி .ஆர் .சீதாராமன் .

உடைந்த பொம்மை  ஏக்கத்தோடு பார்க்கும்  தாயில்லா குழந்தை  கவிஞர் மீன்கொடி

அலைபேசி:   9842371679 .

சாப்பிட வந்தவர் :ஏம்பா சர்வர்.. சாம்பாரிலும், ரசத்திலும் நல்ல நெய் வாடை வருதே எப்படி?

சர்வர் : இரண்டிலும் சாணிடைசர்மிக்ஸ் பண்ணித் தர்றோம் சார்…!

   இந்து குமரப்பன், விழுப்புரம்.

#ம்லகா

அப்போது என்விரல்களில் பிஞ்சுத் தன்மை நிரம்பியிருந்தது

பற்றிக்கொள்ள நீ என்பது தேவையாயிருந்தது

பயத்தையும்

துக்கத்தையும்

வலியையும்

நீயற்ற

ஏமாற்றத்தில் அழுகையும்

நான் நெருங்கிய வேளைகளில் நீ உதறி உதறிப் போனதைப்போலவே நான் இவைகளை உதறி ஓடப்பழகினேன்

அசுரத்தனமாய்

இதோ இன்று

நீ பற்றிக்கொள்ளத்

தேடுகிறாய்

எனது விரல்களை

இப்போது இப்படித் திரும்பியிருக்கிறது

#ம்லகா

ஓடத்துவங்கிய காலத்தில் விரல்கள் கொடுத்தவர்களுக்காக என் விரல்களை ஒப்புக்கொடுத்த நான் இப்போது என்ன செய்வது?.

லதா நாகராஜன்.

குறுகிய ஆறு இக்கரைக்கும் அக்கரைக்குமிடையே பாலமிடும் மரங்கள்!   ஹைக்கூ உமா.  
  நடைப்பயணம் பின் தங்கும் அப்பாவின் நிழலில் நடந்துபோகும் குழந்தை!   ஹைக்கூ உமா.  
உடைந்த மண் சட்டி பாதி நிறைந்த நீரிலும்  முழு நிலா பாண்டிய ராஜ்    

அத்தர் வாச மழை

வானம் தெளிந்த இரவில்

ஒரு நிலவைப்போல அமர்ந்திருக்கிறான் சூஃபி.

மொய்க்கும் நட்சத்திரங்களாய்

அவனைச் சுற்றிலும் சூஃபிக்கள்.

அத்தியாயங்கள் வாசிக்கப்பட்டு

மூடப்பட்ட கிதாப்களும், மடக்கப்பட்ட ரேகாலிகளும்

ரேக்கில் அடுக்கப்பட்டுவிட்டன.

மழை கொண்டு வந்த குளிர்

தாண்டவ தீயை மூட்ட

அரூப இசையோடு ஆட்டம்.

தஸ்ஃபீக் உருட்டிய கரங்களிலிருந்து

பறக்கும் இரவுப் பறவைகளுக்கு

நம் மனசின் சாயல்.

 வலங்கைமான் நூர்தீன்

நானே அதிகம் பேசுகிறேன்

பல நேரம்

உனது வார்த்தைகளையும்கூட

நானே பேசுகிறேன்

ஏனோ

சில நொடிகள்கூட

மவுனத்தைச் சுமக்க முடியவில்லை

ரசிப்பது நீயெனும்போது…

  வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

#1.

உடைந்த குச்சிகளை

ஊரறிய சேகரிக்கும்

கழுத்தில் முடியில்லா

காகம் அழகுதான்..!

#2.

கழுத்தைக் கவ்வி

குட்டியைத் தூக்கிச்செல்லும்

பூனையை இமைக்காமல்

பார்க்கும் விடுதிக்குழந்தை..!

#3.

ஊசிக்குள் மெல்ல

நுழைய மறுக்கிறது

பார்வை குறைந்த

பாட்டியின் கையிலுள்ள நூல்..!

#4.

பூவிலிருக்கும் கள்மட்டுமல்ல

வண்ணமும் கவிதையும்

வாசமும் புன்னகையும்

நீ… நீமட்டுமே..!

#5.

தாகம் தீர்க்க

தண்ணீர் கேட்கிறேன்

நீயோ உன் பார்வையால்

போத்தல் மது வார்க்கிறாய்..!

#6.

பருவம் எனும்

பூஞ்சோலையில் காதலெனும்

போதையை ஊட்டி

பேதையென மாற்றுகிறாய்..!

#7.

சாளரத்தின் இரட்டைக்கதவுகள்

நாம்.. பூட்டிக்கொள்ள

இரவாகிப் போகிறோம்

திறந்தாலோ பிரகாசமாகிறோம்..!

ஆர் ஜவஹர் பிரேம்குமார்,

பெரியகுளம்.

முன்னம் மாதிரி இப்பல்லாம்

பெரிய மார்பகங்கள்

காமம் கிளறுவதில்லை

யார்ட்லியோ சார்லியோ பாய்சனோ

நாசிக்கென்று

ஒன்றும் பிரத்யேக கிளர்ச்சியில்லை

கூடை கூடையாய் மக்கட் அள்ளிச்

செல்லும் பொருட்களை

வாஞ்சையாய் கண்ணுருவதில்லை

இளசுகளின் குசுகுசுப்புகளில்

நாட்டமில்லை

காலை மிதித்துவிட்டு

சாரி கேட்பவர்கள் மறத்து நாளகிட்டது

பத்து மணிக்கு லிப்டை பூட்டி

சாவி மாட்டிவிட்டு

தவணையில் வாங்கிய வாகனத்தில்

ஊரும்போதெல்லாம்

உன் நகைகளை எங்கனம் மூட்டுவேன்

காமம் அடங்காமல் நான் திமிறிய

தவற்றுக்காய்

புடைத்த உன் வயிற்று

இரண்டாம் உயிரை

இவ்வுலகில் எங்கனம் போஷிப்பேன்?

கோ.ஶ்ரீதரன்

அரையிருட்டில்
ஆளரவமில்லை
யாருக்கு
மொழி பெயர்க்கிறது
தார்ச்சாலை…
நிலவுப்பெண்ணின்
வெளிச்சமெனும்
காதல் மொழியை.. துடுப்பதி வெங்கண்ணா

  நீ!

எனக்கு

அழகிய பெண்களின்

சிநேகம் அதிகம்!

சில பெண்கள்

பார்க்கும்போது அழகு!

ஒரு சிலர்

புன்னகைக்கும்போது அழகு!

இன்னும் ஒரு சிலரோ

பேசும்போது அழகு!

சில மங்கையர்

சிரிக்கும்போது அழகு!

தேன்சிட்டு செப்டம்பர் இதழுக்கான படைப்புகளை ஆகஸ்ட் 15ம்  தேதிக்குள் அனுப்பி வையுங்கள்!

ஆனால் –

நீ மட்டும் தானடி

நினைக்கும்போதே

அழகாக இருக்கிறாய்!

          ****

    காரணம்!

எப்பொழுது (மே) ம்

நான்

கவிதை

எழுதிக் கொண்டிருப்பது

ஏன் தெரியுமா அன்பே?!

என்

ஒவ்வொரு கவிதையிலும் நீ

எப்படியாவது

வந்து விடுகிறாய்

என்ற

காதலினால்தான்!

          ****

   உண்மை!

என்னில்

முழுவதுமாய்

நீ இருக்கிறாய்!

உன்னில் முழுவதுமாய்

நான்

இருக்கிறேன்!

ஆனால் –

காண்பவர்

கண்களுக்கு

(மட்டும்தான்)

நாம் இருவரும்

தனித்தனியாக

இருப்பதைப்போல் தெரிகிறது!

 முத்து ஆனந்த் வேலூர்

யாரு சுட்ட தோசை இது அப்பா சுட்ட தோசை

யாரு சுட்ட தோசை
இது அப்பா சுட்ட தோசை

——————————–புதுவண்டி ரவீந்திரன்.

ஒவியம் : அ.செந்தில் குமார்  கைகளில் ஃபோனை வைத்துக்கொண்டு ஃபேஸ்புக்கை நோண்டியபடியிருந்த என்னைப்பார்த்து பெருமூச்சி விட்டபடி சொன்னாள், என் மனைவி கமலா.

” ‘லாக் டவுன்’ லீவ்ல நீங்கதாங்க லைஃபை என்ஞ்சாய் செய்யறீங்க”

” என்னடி இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டே.? எப்போ இந்த கொரோனா ‘யூ டர்ன்’ அடிச்சி திரும்பி போகும்.எப்போ கார்டு ரீடர்ல ‘பன்ச்’அடிச்சிட்டு கம்பனிக்குள்ள நான் வேலைக்கு போவேன்னு ஆவலா எதிர்பார்த்துக்கிட்டிருக்கிற என்னைப்பார்த்து இப்படி சொல்லிட்டியடி?!”

” நீங்க வேலைக்கு போறப்பவே, நான் காலையில ஏழு மணிக்குதான் எழுந்திருப்பேன்..இப்பெல்லாம் இன்னும் சீக்கிரமா எழுந்திருக்க வேண்டியதா இருக்கு. உங்களுக்கு மூனு வேளையும் வக்கனையா வடிச்சிப்போட!”

‘வக்கனையா’ என்பது தேவையற்ற ‘அட்ஜக்டிவாய்’ தோணிற்று எனக்கு.ஆனால் சொல்ல முடியுமா வாய் திறந்து? என் வாய்க்கு ‘லாக் டவுன்’ ஆகிவிடுமே அப்புறம்?

” ஏன் ? உன்னை யார் இப்படி ‘பிரும்ம முஹூர்த்த’ நேரத்திலியே எழுந்திருக்க சொன்னது? லேட்டா எழுந்து லேட்டஸ்டா செய்யவேண்டியதுதானே உன் வேலையை?”

” ம்கும்..இதுக்கேதான் காலை டிஃபன் சாப்ட மணி 9 ஆயிடுது. புள்ளைங்க எழுந்ததுமே சாப்பாடுன்னுதானே எழுந்திருக்குதுங்க? புள்ளைங்கள விடுங்க..நீங்க.. அதுங்களைவிட மோசமாதானே இருக்கீங்க? புள்ளைங்களையாவது ஒரு மிரட்டு மிரட்டினா அடங்கிடும்.உங்களை மிரட்டதான்முடியுமா? மிரட்டுனாதான் நீங்க அடங்கிப்போற ஆளா?

” ஏன்டி ஒரு வருஷத்து கஷ்டத்தை ஒரே நாள்ல இப்படி ‘பொல பொல’ன்னு கொட்டி தீர்க்கறியே?”

” சே!! சே !!ஒரு வருஷ மனக்கஷ்டம்னு யார் சொன்னது? அதை கொட்ட இன்னொரு ‘லாக் டவுன் ‘ லீவ் மாதிரி ‘லாங் லீவ்’ தேவைப்படும்.அவ்ளோ இருக்கு.இப்ப சொன்னது எல்லாம் இப்போதைய புலம்பல்தான்”

“சரிடி! உனக்கு இப்போ, நான் ஃபோனை நோண்டக்கூடாது அப்டித்தானே? கொஞ்சம் கஷ்டம்தான்.இருந்தாலும். தினமும் நான், என் விரல்ல மருதாணியை வச்சிக்கிறேன்.போதுமா?”

காலையில் எழுந்ததும் ‘கத்தி’ சண்டை போட்டுக்கொண்டிருப்பதாய் நினைத்து, மகன் சத்யாவும், மகள் மாலுவும் எங்களிருவரையும் உற்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நான் அவர்களைப்பார்த்து சொன்னேன்.

“மாலும்மா..!! .அம்மா பாவம்தான் இல்ல?!!
நீயும் அண்ணனும் ஃபோனை வச்சிக்கிட்டு வீடியோ கேம் விளையாடறீங்க. நான் ‘ ஃபேஸ் புக்’ல மூழ்கிடறேன். ‘லாக் டவுன்’ , அம்மாவுக்கு ரெஸ்டே கொடுக்கலியே?!! அதனால…நான் ஒன்னு செய்யப்போறேன். அதுக்கு , நீங்க ரெண்டு பேரும் எனக்கு உதவி செய்யணும்.செய்யறீங்களா?”

” செய்யறோம்பா”

இருவரின் குரலும் ஒன்றாய் சேர்ந்தே வந்தது பதிலாய்.

சொல்லி விட்டு, அப்பா என்ன செய்யப்போறார் என்று சஸ்பென்ஸில் மூழ்கி இருந்தார்கள், பிள்ளைகள்.

” நாளைக்கு அம்மாவை உட்கார வச்சி, காலை, மதியம், ராத்திரினு மூனு வேளைக்கும்…நாம மூனு பேரும் சேர்ந்து சமைச்சி போட்டு அசத்தறோம்.சரியா?” சஸ்பென்ஸை உடனடியாய் போட்டு உடைத்தேன்.

” அப்பா….!! உங்களுக்கு தண்ணி சுட வைக்கிறதைத்தவிர கிச்சன்ல ஒன்னுமே தெரியாதேப்பா..எப்படி சமாளிப்பீங்க?

மகனின் கேள்வி நியாயமாகப்பட, என் பொண்டாட்டியும் என்னைப்பார்த்து சிரித்தாள்.

“யூ..யூ..யூ..டியூப்பாய நமஹ “என்றேன்.

இரவு முழுக்க எனக்கு தூக்கம் வரவில்லை.புரண்டு புரண்டு படுத்தேன்.’கிச்சன் கில்லாடிகள்’ என்கிற டிவி நிகழ்ச்சி எல்லாம் என் மனசுக்குள் வந்து வந்து கிண்டலடித்துவிட்டு போவது மாதிரி இருந்தது.
நான் முதன் முதலா சமையப்போறேன்.சாரி சமைக்கப்போறேன்.
அதை நினைத்து, நெஞ்சி படபடத்தது.

அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி..சே..!! என்ன கண்றாவி நினைப்பு இது? சமைக்கப்போறோம்னு நினைச்சதுக்கே..பெண்கள் செய்யற எல்லா வேலையும் ,தானாகவே நினைவுக்கு வர்தே?

மறுநாள்.

நான் படுக்கையிலிருந்து எழும்போது , காலை…எட்டு மணி ஆகி இருந்தது.நைட் முழுக்க தூங்காம , விடிய காலையில் கொஞ்சம் கண் அசந்துட்டிருக்கேன் போலிருக்கு. அதான் ‘லேட் வேக் அப்’

‘பெட்’டில் கமலாவைக்காணவில்லை.

“அச்சச்சோ.! .நான் இன்னிக்கு சமைக்கப்போறதால பயந்துபோயி, லெட்டர் கிட்டர் எழுதி வச்சிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டாளோ?”

பயந்தபடி..தலையணையை தூக்கி பார்த்தேன்.நல்ல வேளை …லெட்டர், கடுதாசி என்று ஒன்றுகூட கண்களில் தென்படவில்லை.

கிச்சனிலிருந்து பாத்திரச்சத்தம் கேட்டது.
எந்த கதாபாத்திரமாய் இருக்கும் அது? மனைவி, மகள், மகன்?

“கமலா..!! .கமலா!”

என அழைத்தபடி கிச்சன் நோக்கி செல்ல,
அவள் , காலை தோசைக்கு சட்னி அரைக்க வெங்காயம் ‘கட்’ செய்ய தயாராகிக்கொண்டிருந்தாள்.

“நோ நோ..சொன்னது சொன்னதுதான்.நீ உட்கார்ந்து டிவி பார்,..ஃபேஸ் புக்கை நோண்டு, எத எதல்லாம் செய்து எஞ்சாய் செய்ய நினைக்கறியோ செய்.இன்னிக்கு சமையல் நாங்கதான்”

நான் சொன்னதும், அவளின் கண்களில் தண்ணீர். ‘செண்டிமெண்ட் ‘டால் அல்ல.நான் சொன்னதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் , அவள் வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்திருந்ததுதான் அந்த கண்ணீருக்கு காரணம்.

பிள்ளைங்களும் காலை தூக்கத்துக்கு ‘டாடா’ சொல்லிவிட்டு, என்னோடு வந்து சேர்ந்து கொண்டார்கள்.

“அம்மா…ப்ளீஸ்..! கோ அண்ட் டேக் ரெஸ்ட்.வி ஆர் கோயிங் டு குக் நவ்”

கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை கமலாவுக்கு.

“எப்டியோ செஞ்சித்தொலைங்க “

என சொல்லிவிட்டு ஹாலில் போய் அமர்ந்தாள்.

மூவரும் சேர்ந்து, அன்றைய மெனுவினை ஃபைனல் செய்தோம்.

காலை பிரேக் ஃபாஸ்ட்க்கு, தோசையும் தேங்காய் சட்னியும்.

மதியம் காரக்குழம்பு, ரசம், தயிர், வெண்டைக்காய் பொறியல், அப்புறம்..அப்பளமும்.

இரவு மீண்டும் தோசை.சைட்டிஷ் எந்த சட்னி என்பதை மட்டும் அப்புறமாய் முடிவெடுத்துக்கொள்வது எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

என் பொண்ணு மாலு, ஃபிரிஜ்ஜிலிருந்து இட்லி மாவினை எடுத்து வந்து கொடுத்தாள்.

பையன்…ஃபோனை எடுத்து வந்து கொடுத்தான்.

“இதை எதுக்குடா இப்ப எடுத்துக்கிட்டு வந்தே?”

” யூ டியூப் பார்க்க வாணாமாப்பா?”

” டேய் !! தோசை ஊத்தறது எப்டின்னு ‘யூ டியூப் ‘ பார்த்தா…அதை விட கேவலம் எதுவும் இல்லைடா.சரியான மாவா இருக்கானே இவன்னு சமூகம் பேசும்டா!”

” அப்பா..!! தோசை ஊத்த தெரியுமா உங்களுக்கு?

என்றாள் பொண்ணு.

கல்தோசையை முன்னாடி ஒரு தடவை ஊத்தி இருக்கேன் என அவளுக்கு சொல்ல நினைக்க, எந்தன் மனம் ஒரு ஃபிளாஷ் பேக் நோக்கி சென்றது.

ஒரு தடவை…ஃபிரிஜ்ஜிலிருக்கிற மாவை எடுத்துக்கொடுங்கன்னு கமலா கேட்டப்போ…அவசர அவசரமாய் மாவு டப்பாவை எடுத்து அவளிடம் கொடுக்கிற சமயம் பார்த்து, பழம் நழுவி பால்ல விழறமாதிரி, கை நழுவி டப்பா கீழே விழ..
முக்கால் வாசி மாவு…தரையில் கொட்டிவிட்டது.

கமலா திட்டி தீர்த்துவிடுவாளே என காதை பொத்திக்கொள்ள நினைத்தபோது..

“தோசையை தோசைக்கல்லுலதாங்க ஊத்துவாங்க. உங்களுக்கென்னங்க அப்படி ஒரு அவசரம்? இப்படி தரையிலியே ஊத்திட்டீங்களே?” என அமைதியுடன் கேட்டாள்.

தரை முழுக்க மொசைக் போட்டு ‘வழ வழ’ என்றிருக்கும்.

” மாவு ஊத்தி இருக்கிற தரையை மட்டும் கொஞ்சம் சூடாக்கினா போதும்.லேசா எண்ணையை ஊத்தி அப்டியே

நகைச்சுவை சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை

திருப்பிப்போட்றுவேன்.தோசை நல்லா பெரிசா ஃபேமிலி தோசையாயிடும்.குடும்பமே குந்திக்கினு சாப்டலாம்.ஒவ்வொன்னா ஊத்திக்கினு இருக்க தேவை இல்லை.மசால் தோசை மாதிரி இதுக்கு ‘ மொசைக் தோசை’ னு
பேர் வச்சிடலாம்”

அதுவரை டென்ஷனாகாதவள், எனது ‘ ‘மொசைக் தோசை ‘ஐடியாவை கேட்டதுமே.. அப்படி டென்ஷனானாள்.அது வேணாம் இப்போ…விட்றுவோம்.

ஃபிளாஷ் பேக் முடிந்தது.வாங்க கிச்சனுக்கு போவோம்.

தோசை ஊத்த தெரியுமாப்பா என்ற மாலுவிடம் சொன்னேன்.

“கிண்டலிடிக்காத மாலு.! அப்பா ஊத்தின தோசையை ஒரு தடவ சாப்டா, அதுக்கப்புறம் நீ அப்பா ஊத்துற தோசையை மட்டும்தான் சாப்டுவேன்னு அடம்புடிப்பே !.. வேணும்னா பாரேன்”

“மாலு…நீ வெங்காயம் ‘கட் ‘பண்ணு.
“சத்யா…!! நீ…தக்காளிய ‘கட்’ பண்ணி கொடு”

வேலையை பகிர்ந்தளித்தேன்.

“அப்பா வெங்காயம் ரெடி..இந்தாங்க”

பொண்ணை நினைச்சா பெருமையா இருந்துச்சி எனக்கு. இவ்ளோ சின்ன வயசில ,இவ்ளோ திறமையை அடக்கி வச்சிக்கிட்டிருக்காளே!! எவ்வளவு சீக்கிரமா வெங்காயம் ‘கட்’ பண்ணிட்டா? என நினைத்தபடியே திரும்பிப்பார்த்தேன்.

எனது கண்கள் முழுக்க கண்ணீர்.வெங்காயம் ‘கட்’ பண்ணதால வந்ததல்ல அந்த கண்ணீர்.உண்மையிலியே..அழுததால வந்தது.

மாலு…வெங்காயத்தின் தோலை உறிக்காமலேயே ‘கட்’ பண்ணி வைத்திருந்தாள்.அதுதான் எனக்கு கண்ணீரை வரவழைத்திருந்தது.

“என்ன செஞ்சி வச்சிருக்கே நீ?”

” ஆனியன் கட் பண்ணியிருக்கேன் டாடி”

” நான் உங்கிட்ட என்ன சொன்னேன்?”

” ‘ஆனியன்’ ‘கட்’ பண்ண சொன்னீங்க!”

“அப்பா விடுங்க…கவுண்ட மணி செந்தில் வாழப்பழ சீன்ல பேசிக்கிற டயலாக் மாதிரி போவுது.தோலை உறிச்சிட்டு கட் பண்ணாலும்…கட் பண்ணிட்டு தோலை உறிச்சாலும் ஒன்னுதானே?” மாலு..நீ தோலை உறி” என்றான், சத்யா.

” வழக்கமா நீ செய்யற அட்டூழியத்துக்கு, அப்பாதானே உன் தோலை உறிப்பாரு.இப்ப ஏன் என்னை உறிக்கச்சொல்றே?”

இது மாலு.

“இபடி கிண்டல் பண்றத விட்டுட்டு, சுண்டல் பண்றதெப்டின்னு தெரிஞ்சிக்கோ.ஈவினிங் அம்மாவுக்கு ஸ்னாக்ஸ் செஞ்சி கொடுக்கலாம்”

“டேய்!! டேய் ! பேச்சைக்குறை.எங்கே தக்காளி ? கட் பண்ணிட்டியா?”

“இல்லப்பா.பார்க்க அழகா இருந்துச்சி..அதனால அதை ‘கட்’ பண்ணவே மனசு கேட்கலப்பா”

“சோம்பேறி!! சோம்பேறி !? தக்காளி ‘ கட்’ பண்ணச்சொன்னா ..கவிதை பேசி திரியுது பாரு..கொண்டா இப்டி நானே’ கட் ‘பண்ணிக்கிறேன்”

தக்காளியை கையில் வாங்கினேன்.
சத்யா சொன்னது சரியாத்தான் இருக்கு.
தக்காளியின் உருவத்தில் ‘ஹன்சிகா’ தெரிந்தாள்.அவ்ளோ அழகா தெரிஞ்சது, தக்காளி.

எனக்கு ஹன்சிகான்னா இவனுக்கு எவளோட முகம் தெரிஞ்சிதோ?
என நினைத்து அவனைப்பார்த்தேன்.எதோ புரிந்து போய் மெல்ல சிரித்தான்.

ஹன்சிகாவை நினைவிலிருந்து தூக்கிப்போட்டு விட்டு, கம்பனியில் என் பாஸின் உருவத்தை நெற்றியின் நடுவில் கொண்டு வந்ததும்..கைகளிலிருந்த தக்க்காளி வேகமாய்’ கட் ‘டுப்பட்டு போயிருந்தது.

” என்னங்க…தோசை ரெடியா? பசிக்குது”

நகைச்சுவை சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை

ஹாலிலிருந்து மனைவியின் குரல்.

இவளென்ன பழிக்கு பழி வாங்குறாளோ?
நாம தினம் தினம் சொல்ற டயலாக்கை இன்னிக்கு இவள் சொல்றாளே?

என நினைத்து,

” ரெடியாகிட்டே இருக்கு” என்று கோரஸாக சொன்னோம்.

‘ நீங்க சட்னியை சட்டுன்னு அரைக்க மாட்டீங்க போலிருக்கு.முதல்ல தோசை ஊத்துங்க.நான் இட்லி பொடி வச்சி சாப்டுக்கறேன்”

ஹாலிலிருந்தபடியே, அவள், ‘பொடி’ வைத்து பேசியது எனக்கு ரொம்ப பிடிச்சிப்போயிருந்தது.

” அடி தூள்! இட்லி தூளை விட்டுட்டோமே!! மாலு! காலை மெனுவில் சட்னியை அரைச்சிட்டு, சாரி !! சட்னியை அடிச்சிட்டு இட்லி பொடின்னு மாத்தி எழுது”

சத்யாவுக்கும் பசி வயிற்றை கிள்ளியது போல.மாலுவுக்காக வெயிட் செய்யாமல், அவனே அடிச்சிட்டு திருத்தினான் மெனுவை. சீரியலில் இனி இவருக்கு பதில் இவர் என போடுவார்களே அது போல. சட்னிக்கு பதில் பொடி.

தோசைக்கல் அடுப்பில் வைக்கப்பட்டது.
மாலு ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்து வந்திருந்த மாவும் ‘குளிர்’ விட்டுப்போயிருந்தது.

இட்லி மாவில் ஒரு கரண்டியை போட்டு ‘கர கர’ என கலக்கினேன்.

பிள்ளைகள்…அசந்து போய்விட்டார்கள்.

” எப்டி இதெல்லாம்..?’கலக்கறீங்க’ டாடி!”

” எத்தினிதடவை பார்த்திருக்கேன்.உன் அம்மா கலக்கினத? இது கூடவா தெரியாது?

” என்ன ஆசசு? தோசை ரெடியா?”
ஹாலிலிருந்து என் உரிமைக்குரல் ஒலித்தது.

“ரெடியாகிட்டிருக்கு கமலா”

” ‘பேசிக்கிட்டிருக்கேன் மாமா’ வடிவேல் டயலாக் போலவே இருக்குப்பா நீங்க சொல்றது”

சத்யா காமெடி செய்ய முயற்சித்து தோல்வியை அடைந்தான்.நாங்கள் இருவரும் எள்ளவுகூட சிரிக்கவில்லை.

“தட்டு கழுவி…இட்லி பொடிய ஒருத்தர் வைங்க.எண்ணையை ஒருத்தர் ஊத்தி கலக்கி ரெடியா வைங்க.அம்மாவுக்கு பசிக்குதாம்”

மாலுவும் சத்யாவும் பொறுப்பாய், தவறேதும் செய்யாமல் சரியாய் அந்த வேலையை செய்திருந்தார்கள்.

ஒரு கரண்டி..மாவினை எடுத்து கல்லில் ஊற்றினேன்.அது வட்டமாய் ஓடிப்போய்க்கொண்டிருந்தது. அது ஓடி முடிப்பதற்குள், இன்னொரு கரண்டி மாவினை எடுத்து அதன் தலையிலியே ஊற்றி , தோசையின் விட்டத்தை கரண்டியின் உதவியினால்…பெரிசாக்கினேன்.

சத்யாவும் …மாலுவும் ஆவலுடன் அப்பா சுட்ட தோசையின் ‘ஃபர்ஸ்ட் காப்பி’க்காக காத்திருந்தார்கள்.ரிலீஸ்க்கு அப்புறம் அவர்களிருவரும்தான் டிஸ்ட்ரிபியூட்டர்கள்.’கமலா’ தியேட்டருக்கு.

எனக்கும் ஆவலாகவே இருந்தது. கல்லில் தோசை மாவு அத்தனை அழகாய் வட்டமிடப்பட்டிருந்ததை ரசித்துக்கொண்டிருந்தேன். கையிலிருக்கும் கரண்டியை ஒரு சுழட்டு சுழட்டி பார்த்தேன். அது ஒரு பென்சில் போல காட்சி தந்தது எனக்கு.

நான் பள்ளியில் படிக்கும்போது, கணக்கு ‘ ஜியாமென்றி’ பாடத்தில், மற்றவர்கள் போல , பெண்களின் வளையலையோ, ஒரு ரூபாய் காயினையோ வைத்து வட்டம் போடாமல்,

நகைச்சுவை சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை

பென்சிலால் அப்படியே வட்டம் போட்டு பழகி இருந்ததுதான்..இன்றைக்கு தோசை இவ்ளோ அழகான வட்டமாய் வந்ததிற்கான காரணம் என தோனிற்று.

அந்த நேரம்.

“அப்பா “என்றாள் மாலு.

“என்னம்மா?”

“நான் பார்த்திருக்கேன்பா”

‘ என்னத்தை பார்த்தேன்னு சொல்லுடி செல்லம்!””

” கல்லுல மாவை அம்மா ஊத்தினதும்..’சொய்ய்ய்ய்’னு ஒரு சத்தம் வரும்.இப்போ வரலியேப்பா”

” முதல்ல ஹால்ல ஓடுற டிவி யை ஆஃப் செஞ்சிட்டு வா. தோசை போடற சின்ன சத்தம் கூட காதுல விழமாட்டேங்குது.அவ்ளோ சத்தம் டிவியிலிருந்து”

” அப்பா…டிவி ஆஃப்லதான் இருக்கு”

தேன்சிட்டு இதழுக்கு படைப்புக்கள் அனுப்ப கடைசி தேதி. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி.

” ஆஃப்ல இருக்கா..? பின்ன ஏன் அந்த ‘சொய்ய்ய்ய்’னு சத்தம் வரல? ஆங்…!! கண்டு புடுச்சுட்டேன்.இவ்ளோ நேரம் மாவு ஃபிரிஜ்லதானே இருந்துச்சி.அது சில்லுனு இருக்கும்தானே…அதான் அந்த சவுண்ட் மிஸ்ஸிங்”

தட்டில் தயாராய் கலக்கி வைத்திருந்த இட்லி பொடியிலிருந்து , எண்ணெய் தனியாகப் பிரிந்து ஓடிக்கொண்டிருந்தது,

பசி தாங்க முடியாமல், கமலா கிச்சனுக்குள்ளே வந்துவிட்டாள்.

“என்னதான் பண்றீங்க நீங்க? ஒரு தோசை சுட லாயக்கி இல்ல.இதுல மதியம் வேற சமைக்கறாங்களாம்”
கோபத்தில் அடுப்பை நெருங்கிய கமலாவிடம். மெல்லிய குரலில் சொன்னாள் மாலு.


“அம்மா !!’சொய்ய்ய்’ னு சத்தம் வராம சைலண்ட் மோட்லியே வேகுதும்மா அப்பா ஊத்தின தோசை”


என்று சொன்ன மாலுவை கொஞ்சம் தள்ளி நிற்கச்சொல்லிவிட்டு, என்னையும் கண்களால் முறைத்து விட்டு, அடுப்பை பற்ற வைத்தாள் ,கமலா.

சத்யாவும், மாலுவும் ஏளனமாய் என்னை பார்த்தார்கள்.

‘ பத்த வைக்காம விட்டுட்டியே பரட்ட?!! எனும் வினா அவர்களின் பார்வையில் தெரிந்தது எனக்கு.


இன்னும் கொஞ்ச நேரத்தில், மாலு எதிர்பார்த்த ‘ சொய்ய்ய்ய்’ என்ற சத்தம் வந்துவிடும்.

ஆனால்..என்னோட தோசை ஊத்தும் ‘ப்ளான்’ செம்மயா ‘ஊத்திக்கிச்சி’என நினைக்கும்போது தான் , என் மனம் வெந்துபோனது..பற்ற வைத்த அடுப்பின் மேல் இருக்கும் தோசைக்கல்லில் மாவுபோல…

தேன்சிட்டு – எழுத்தாளர் தஞ்சை ப்ரணா இணைந்து நடத்திய நகைச்சுவை சிறுகதைப் போட்டி முடிவுகள்

தேன்சிட்டு – எழுத்தாளர் தஞ்சை ப்ரணா இணைந்து நடத்திய நகைச்சுவை சிறுகதைப் போட்டி முடிவுகள்

அன்பார்ந்த வாசகர்களே! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த  நகைச்சுவை சிறுகதைப் போட்டியின் முடிவுகள் இதோ.

முதல் பரிசு:   புதுவண்டி ரவீந்திரன்.

  யாரு சுட்ட தோசை! இது அப்பா சுட்ட தோசை!

இரண்டாம் பரிசு:  மலர்மதி

ஞாபகமறதி ஞானக்கண்ணு

மூன்றாம் பரிசுஆர். ஹரிகோபி

மங்கையர்க்கரசியின் மகிமை.

ஆறுதல் பரிசுகள்:

லஷ்மி-  ஐம்பது கிலோ தாஜ்மஹால்

 சி.பி. செந்தில்குமார் – ஒரு மஞ்சமாக்கானின் பெண் பார்த்த படலங்கள்

புவனா-   நளபாகம்.

வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தேன்சிட்டு நிர்வாகம் தெரிவித்துக் கொள்கிறது. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.பரிசினை தவறவிட்டோர் இம்முறை பரிசு கிடைக்காவிட்டாலும் அடுத்த முறை பரிசினை வெல்ல வாழ்த்துகள்.

இப்போட்டிக்காக மொத்தம் 35 கதைகள் வந்தன. தேன்சிட்டு நிர்வாகம் இன்னும் அதிகமான போட்டியாளர்களை எதிர்பார்த்தது. ஆனால் பெரும்பாலோர் இதில் ஆர்வம் காட்டவில்லை. நகைச்சுவை கதை என்பதால் இருக்கலாம் என்று நினைக்கின்றோம்.

இப்போட்டி குறித்து எழுத்தாளர் ப்ரணா அறிவித்தபோது நடுவர் யார் சார்? என்றேன். நீங்களே சொல்லுங்கள் என்றார். முதல் நபராய் நான் சொன்ன நபர் நந்து- சுந்து. குமுதம் வார இதழில் இரண்டு வருடங்களாக தொடர்ந்து எக்ஸ்- எக்செல் நகைச்சுவை கதைகளை எழுதி அசத்திக் கொண்டிருப்பவர். கலைமகள், கல்கி, வாரமலர், ராமகிருஷ்ணவிஜயம், பொதிகைச்சாரல் உள்ளிட்ட பத்திரிகைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளை வென்ற இவரின் நகைச்சுவை உணர்வு அபரிமிதமானது. அவருடன் சில வார்த்தைகள் பேசினாலே நமக்கு நகைச்சுவை உணர்வு நிரம்பி வழியும். நகைச்சுவை மட்டுமின்றி சிறுகதை ஒரு பக்க கதை என அனைத்து வடிவ கதைகளிலும் தனிமுத்திரை பதித்துவரும் அவரே இப்போட்டிக்கு நடுவராக இருக்க சரியானவர் என்று நினைத்தேன். எனவே அவர் பெயரை முன்மொழிந்தேன். ப்ரணாவும் நானும் அவரைத்தான் நினைத்துள்ளேன். என்றார். ப்ரணாவே நந்து-சுந்து  அவர்களை தொடர்பு கொண்டு பேசி சம்மதம் வாங்கினார்.

தேன்சிட்டு இதழ் ஆசிரியர் என்ற முறையில் அவருக்கு ஒரு மெயில் அனுப்பியதோடு என் பணி முடிந்துவிட்டது. எழுத்தாளர் ப்ரணாவே நடுவரை அவ்வப்பொழுது தொடர்பு கொண்டு போட்டி குறித்து தகவல்களை அளித்தார். முதலில் 31-5-20 கடைசி தேதியாக அறிவித்தோம். பின்னர் பலரின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு மாத கால நீட்டிப்பு வழங்கினோம்.அதன் பின்னரே கதைகள் வந்து சேரத் துவங்கின.

போட்டிக்கு வந்த மொத்த கதைகளையும் தொகுத்து பிடிஎப் வடிவில் அவருக்கு அனுப்பி வைத்தோம். பத்துநாள் அவகாசம் கேட்டவர் ஒரே வாரத்தில் முடிவுகளை தந்துவிட்டார். அவரிடம் கதைகளை தேர்ந்தெடுத்த விதம் குறித்து ஒரு விளக்கம் கேட்டோம். அதையும் எழுதி தந்தார். அதை கீழே பிரசுரித்து உள்ளோம்.

முதல் மூன்று பரிசு பெற்ற கதைகள் இவ்விதழில் பிரசுரமாகி உள்ளது. மற்ற மூன்று கதைகள் அடுத்த இதழில் பிரசுரம் ஆகும். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை அனுப்பி வைக்கப் படும். வாழ்த்துகள்.

நந்து சுந்து அவர்கள் கதைத் தேர்வு குறித்து சொன்ன விளக்கம்  

போட்டிக்கு மொத்தம் 35 கதைகள் வந்திருந்தன.

இதில் சிலர் இரண்டு கதைகள் அனுப்பியிருந்தனர்.

நகைச் சுவை எழுதுவது கடினம். நகைச்சுவை எப்படி எழுதுவது?

விஷயங்களை மிகைப் படுத்துதல். அல்வா சாப்பிட்டு வாய் ஒட்டிக் கொண்டது என்பது போல.

ஒருவர் பேசுவதற்கு இடக்கு மடக்காக கவுண்டர் கொடுத்தல்.

உண்மையை இன்டைரக்டாக சொல்லுதல். நீ ஒரு நாய் என்று நேரிடையாக சொல்லாமல் நீ ஒரு வள்ளவன் என்று கூறுதல்.இந்த சூட்சுமத்தை புரிந்து கொண்டு எழுதப்பட்ட கதைகள் பரிசுக்கு தேர்வாகியுள்ளன.

நகைச் சுவை கதைகளில் பொன் மொழிகளும் தத்துவங்களும் தேவையில்லை. சில கதைகளில் அவைகள் இருந்தன. இலக்கிய நடை அவசியமில்லை.எழுத எழுத வந்து விடும்.

சீரியஸ் கதைகளுக்கு நல்ல கதைக் கருவும் வலுவான பாத்திரங்களும் இருந்தால் போதும். கதையை அதுவே நகர்த்திச் சென்று விடும். காமெடி அப்படியல்ல.

உப்புமா கிண்டினான். அவ்வளவு தான் கதை. அவன் தப்பு தப்பாக உப்புமா செய்வது தான் கதை. இதற்கு பெரிதாக பாத்திரங்கள் வேண்டாம் (ஒரு வாணலி போதும்)

வாணலி பேசுவதாகக் கூட எழுதலாம். காமெடிக்கு எல்லைகளும் வரம்புகளும் இல்லை.போட்டிக்கு வந்த கதைகள் தேர்ந்தெடுக்கபட்ட விதம் இதோ:

எடுத்துக் கொண்ட கருவுக்கு 25 மார்க்.எழுதிய நடைக்கு 25 மார்க்.

கதையில் தூவப்பட்டுள்ள ஜோக்குகளுக்கு 50 மார்க்.மூன்றையும் கூட்டி மொத்த மார்க்.

பரிசு பெற்ற கதைகளுக்கிடையே ஒன்று அல்லது இரண்டு மார்க் தான் வித்தியாசம்.எனவே தேர்வான எல்லா கதைகளுமே முதல் பரிசுக்கு நிகர் தான்.

தேர்வு பெறாதவர்கள் வருந்த வேண்டாம்.காமெடி வேறு விதமான டிராக். பழகப் பழக வந்து விடும். சற்றே மாற்றி யோசியுங்கள். வெற்றி கதவைத் தட்டும்.

கதவை திறந்து வைத்திருந்தால் இன்னும் நல்லது. அது தானாக நுழைந்து விடும்.

நடுவராக பணியாற்ற வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி.

போட்டி குறித்து எழுத்தாளர் ப்ரணாவின் கருத்துரை:

வணிக நோக்கமோ பொருளாதார பயனோ எதிர் நோக்காது ஒரு மின்னிதழை தொடர்ந்து இரு வருடங்கள் நடத்துவதென்பது பாராட்டுதலுக்குரிய ஒன்று. புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு பயிற்சி களமாகவும், பல்வேறு வணிக இதழ்களில் எழுதுவோருக்கு ஒரு மாறுபட்ட தளமாகவும் இயங்குவது மட்டுமன்றி உள்ளடக்கத்திலும், வடிவமைப்பிலும் மாதா மாதம் மெருகேறிக்கொண்டே வரும் ஒரு மின்னதழ் தேன்சிட்டு. அதனாலேயே “தேன்சிட்டு” மின்னிதழுக்கு எப்பொழுதுமே என் மனதில் தனி இடம் உண்டு. 

எனது முதல் சிறுகதை தொகுப்பான “பிள்ளையார் சுழி” ஏறக்குறைய 750 பிரதிகள் விநியோகமாகி பொருளாதர ரீதியிலும் நிறைவை தந்த போது நான் ஒரு சிறுகதை போட்டி நடத்தி அந்த மகிழ்வை பகிர்ந்து கொள்ள நினைத்தேன். உடனே எனது நினைவுக்கு வந்த இதழ் “தேன்சிட்டு” மின்னிதழ் தான்.

நேரத்தையும், திறமையையும், உழைப்பையும் முதலாய் கொண்டு தொடர்த்து மின்னிதழ் நடத்தும்

 திரு.நத்தம் சுரேஷ் பாபு அவர்களின் செயல்பாடுகளுக்கு என்னால் கொடுக்க முடிந்த சிறு

 மரியாதையாகத்தான் “தேன்சிட்டு” மின்னிதழுடன் இணைந்து இந்த “நகைச்சுவை சிறுகதை போட்டி” நடத்த

 எண்ணினேன். தொலைபேசியில் ஆசிரியரை அழைத்து அனுமதி கேட்ட உடனேயே இசைந்தார்.  திரு. நத்தம் சுரேஷ் பாபு அவர்களுக்கு என் நன்றி.

நகைச்சுவை சிறுகதை போட்டி என்பதால் அதற்கு தகுதி வாய்ந்த ஒருவர் தான் நடுவராக இருக்க வேண்டும் 

என எண்ணிய போது திரு. நந்து சுந்து அவர்கள் தான் என் நினைவுக்கு வந்தார். இவர் குமுதம் இதழில் எழுதும் “சிரி” கதையை படித்துவிட்டு சிரிக்காதவர்கள் தமிழ் படிக்கத் தெரியாதவர்களாய்த் தான் இருக்க வேண்டும்; அப்படியொரு சரளமான நகைச்சுவை எழுத்துக்கு சொந்தக்காரார்.

வணிக இதழ்கள் நடத்திய பல்வேறு சிறுகதை போட்டிகளில் மட்டுமின்றி சர்வதேச சிறுகதை போட்டிகளிலும் முதல் பரிசு வென்று வெற்றி வாகை சூடியவர். “மாறியது நெஞ்சம்” என்னும் சிறுகதை தொகுப்புக்கு சொந்தக்காரர்.

திரு. நந்து சுந்து அவர்களிடம் செய்தியை சொல்லி நடுவராய் இருக்க முடியுமா என்று கேட்டவுடன் ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஒப்புக்கொண்டார். போட்டிக்கு வந்த அத்தனை கதைகளையும் படித்து பரிசுக்குரிய 

கதைகளை தேர்வும் செய்து தந்தார். அதுமட்டுமின்றி எந்த அடிப்படையில் தேர்வு செய்துள்ளார் என்பதையும் 

சுருக்கமாக விளக்கியுள்ளார். இது வருங்காலத்தில் நகைச்சுவை எழுதுவோருக்கும் மிகவும் உதவும். திரு. நந்து சுந்து அவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

இந்த இருவரின் நட்பும் தொடர்பும் எனக்கு கிடைக்க உதவிய “தமிழக எழுத்தாளர்கள்” வாட்ஸ்-அப் குழுமத்திற்கும் அதன் அட்மின்கள் திரு. வைகை ஆறுமுகம் மற்றும் திரு.பெ.பாண்டியன் அவர்களுக்கும் எனது நன்றி!

இந்த நகைச்சுவை போட்டி சிறப்பு பெற்றதே பங்கேற்ற அனைத்து நகைச்சுவை சிறுகதை எழுத்தாளர்களால்

தான். அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது தனிதனி   

நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிக்கு சிறுகதை எழுதிய அனைவருக்குள்ளும் இருக்கும் நகைச்சுவையாளர்கள் ஒவ்வொரு விதத்தில் வெளிப்பட்டாலும் சில அளவுகோல் கொண்டு நடுவர் அவர்கள் அலசியதால் சிலரே வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் அனைவருமே எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறும்

 சாத்தியம் உள்ளது. முயற்சி திருவினையாக்கும்.

போட்டியில் வென்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்!

நன்றி!

————————————————————————————————————————————————

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே! வணக்கம். இந்த இதழுடன் நமது இதழ் இரண்டு ஆண்டுகளை முழுதாய் நிறைவு செய்கிறது. ஆறுமாதங்கள் முன்பு இவ்விதழை நிறுத்திவிடலாம் என்றொரு யோசனை வைத்திருந்தேன். அதையும் மீறி இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்ததில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

சென்ற இதழ் ஹைக்கூ சிறப்பிதழ் பற்றிய உங்கள் கருத்துகள் கிடைக்கப் பெற்றேன். ஹைக்கூ சிறப்பிதழ் ஹைக்கூ படைப்பாளிகள் பலருக்கு பெரிய சுவையை கொடுக்கவில்லை என்பதை விமர்சனங்களின் மூலம் அறிந்தோம். குறைகளை அடுத்தச் சிறப்பிதழில் நிறைகளாக்க முயல்வோம். இந்த இதழ் நகைச்சுவை சிறப்பிதழாக வெளியிடுகின்றோம். அதற்கு முதல் காரணம் எழுத்தாளர் தஞ்சை ப்ரணா. அவரது படைப்புக்களை நமது இதழில் தொடர்ந்து வாசித்து இருப்பீர்கள்.

   நான்கு மாதங்கள் முன்பு தேன்சிட்டு இதழ் சரிவர வாசகர்களிடையே சென்று சேரவில்லை என்ற வருத்தத்தில் இதழை பி.டி.எப் வடிவம் நிறுத்திவிட்டு இணைய தளத்தில் மட்டும் பதிவுகளாக வெளியிடலாமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது. தேன்சிட்டுடன் இணைந்து சிறுகதைப் போட்டி நடத்தலாமா என்று போனில் தொடர்பு கொண்டு கேட்டார். அவர் ஒரு பரிச்சயமான சிறந்த எழுத்தாளர். முகநூலில் அவருக்கு ஏராளமான நட்பும் பாலோயர்ஸும் உண்டு. அவர் முகநூலிலேயே இந்த சிறுகதைப் போட்டியை அறிவித்திருக்கலாம். இருப்பினும் தேன்சிட்டுடன் இணைந்து சிறுகதைப்போட்டியை நடத்த வந்தது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

  இதைக் கேட்டபோது. சிலர் மின்னிதழ் துவக்கி ஆர்பாட்டமாய் வெளியிடுவார்கள் சிலமாதங்களில் அந்த இதழ் காணாமல் போய்விடும். அப்படியில்லாமல் தொடர்ந்து நீங்கள் வெளியிட்டு வருகிறீர்கள். உங்களை பாராட்டும் விதமாகவும் வாசகர்களுக்கு இந்த கொரானா லாக்டவுன் காலத்தில் பயனுள்ள விதமாக பொழுது கழியும் வண்ணம் நகைச்சுவை சிறுகதைப்போட்டி நடத்தலாம் என்றார். அவர் தேன்சிட்டின் மீது கொண்ட நம்பிக்கை தேன்சிட்டுவிற்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

    தேன்சிட்டு- எழுத்தாளர் ப்ரணா நகைச்சுவை சிறுகதைப் போட்டி உதயமானது. அப்போட்டியில் வாசகர் பலர் கலந்து கொண்டு படைப்புக்களை அனுப்பி இருந்தீர்கள். அந்த படைப்புக்களை நடுவர் பரிசீலித்து பரிசுகளை அறிவித்துள்ளார்.  பரிசுபெற்றோர் விவரம் உள்ளே. பரிசுபெற்ற நகைச்சுவை கதைகளில் முதல் மூன்று பரிசினை பெற்ற கதைகள் இவ்விதழை அலங்கரிக்கின்றன.

நகைச்சுவை சிறப்பிதழில் உங்களை மகிழ்விக்கும் வண்ணம் ஏராளமான நகைச்சுவை துணுக்குகளும் நகைச்சுவை கதைகளும் தந்துள்ளோம். கொரானா என்னும் கொடிய தொற்றுநோயின் தாக்கத்தில் இருந்து கொஞ்சமேனும் உங்கள் துயரங்களை மறந்து சிரிக்க இந்த இதழ் உதவுமேயானால் மிகவும் மகிழ்வோம்.

   அடுத்த இதழ் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எனவே புத்தம் புதிய பகுதிகளுடன் உங்களை மகிழ்விக்க வருகிறது தேன்சிட்டு.

உங்கள் படைப்புக்களையும் விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் விரைந்து அனுப்புங்கள். தேன்சிட்டோடு வானில் சிறகடியுங்கள்! நன்றி வணக்கம்.                     அன்புடன்.

நத்தம்.எஸ். சுரேஷ்பாபு. ஆசிரியர், தேன்சிட்டு.