விவசாயியை மணந்த பெண் இஞ்ஜினியர்.

தற்போதை இளம்பெண்கள் தங்கள் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும், பல இலட்சங்கள் சம்பாதிக்க வேண்டும். ஐ.டி துறையில் வேலை பார்க்க வேண்டும் என்று பல்வேறு கட்டளைகள் போட பெற்றோர் அதற்கேற்ற வரன்களை தேடி வருகின்றனர். ஆனால் திருவண்ணாமலையில் பொறியியல் படித்த பெண் ஒருவர் மணந்தால் ஒரு விவசாயியைத்தான் மணப்பேன் என்று வித்தியாசமாக அடம்பிடித்து தன் ஆசைப்படி ஒரு விவசாயியை மணந்துள்ளார். அந்த செய்திதான் கீழே

கண்ணமங்கலம்:’விவசாயியைத் தான் திருமணம் செய்வேன்’ என்ற கொள்கையோடு, விவசாயியை தேர்வு செய்து, பெண் இன்ஜினியர் திருமணம் செய்து கொண்டார்.


திருவண்ணாமலை மாவட்டம், முனியந்தாங்கலை சேர்ந்தவர், லட்சுமணன் மகள் அரசம்மா, 27; இன்ஜினியரிங் படித்துள்ளார். இவருக்கு, பல இடங்களில் அவரது பெற்றோர் வரன் தேடி வந்தனர். அரசம்மா, ‘நான் ஒரு விவசாயியைத் தான் திருமணம் செய்து கொள்வேன்’ என, தீர்க்கமாக கூறிவிட்டார்.

இதையடுத்து, தேப்பனந்தலில் வசிக்கும் லட்சுமணனின் சகோதரி எல்லம்மாள், 65, தன் மகன் விவசாயியான சிவக்குமார், 29, என்பவருக்கு அரசம்மாவை பெண் கேட்டார். இதையடுத்து, 27-ல், சிவகுமாருக்கும், அரசம்மாவுக்கும் திருமணம் நடந்தது. மகளின் ஆசைப்படி லட்சுமணன், மருமகன் சிவகுமாருக்கு, விவசாய பணிக்காக டிராக்டர் மற்றும் டில்லர் வாங்கி கொடுத்துள்ளார்.

நன்றி: தினமலர் நாளிதழ்.

தானியங்கி, ‘டாய்லெட் கிளீனர்’: அரசு பள்ளி மாணவன் அசத்தல்

கும்மிடிப்பூண்டி : மாவட்ட அளவில் நடந்த புத்தாக்க அறிவியல் ஆய்வு போட்டியில், எருக்குவாய் அரசு நடுநிலைப் பள்ளி மாணவனின், தானியங்கி, ‘டாய்லெட் கிளீனர்’ கண்டுபிடிப்பு, முதல் இடம் பிடித்தது.

துாய்மை:

திருவள்ளூரில், மத்திய – மாநில அறிவியல் மற்றும் தொழி நுட்ப துறையினரால் நடத்தப்பட்ட, மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான போட்டியில், தானியங்கி டாய்லெட் கிளீனர் கருவி, அனைவரது கவனத்தையும் ஈர்த்து, முதல் இடம் பிடித்தது.இதை காட்சிப்படுத்தியது, கும்மிடிப்பூண்டி அருகே, எருக்குவாய் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின், 7ம் வகுப்பு மாணவன், க.பிரித்விராஜ்.

இந்த கண்டுபிடிப்பு குறித்து, மாணவன் க.பிரித்விராஜ் கூறியதாவது:அம்மிக்கும், ஆட்டுக்கல்லுக்கும், தொழில்நுட்பத்தில் மாற்று இருக்கும்போது, துாய்மையாக இருக்க வேண்டிய கழிப்பறையை சுத்தம் செய்ய, கருவி இல்லாதது குறித்து யோசிச்சேன். அதன் வெளிப்பாடே, இந்த தானியங்கி டாய்லெட் கிளீனர்.குறைந்த விலையில் வடிவமைக்கப்பட்ட இந்த கருவியை வைத்து, முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் உட்பட அனைவரும், கழிப்பறைகளை எளிதாக சுத்தம் செய்யலாம்.

ஆலோசனை:

தற்போது, மின் இணைப்பு மூலம் இயங்கும் அந்த கருவியை, பேட்டரி மூலம் இயக்க, தலைமை ஆசிரியர் ஆலோசனையோடு தயார் செய்து வருகிறேன். மேலும், இந்த கருவியில், கிருமி நாசினியை நிரப்ப, தனி இடம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதை சிறந்த கருவியாக தயாரித்து, சமுதாயத்திற்கு பரிசளிப்பேன்.இவ்வாறு, அவர், தன்னம்பிக்கையுடன் கூறினார்.மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்ததன் மூலம், அடுத்த மாதம், மாநில அளவில் நடைபெற இருக்கும் போட்டியில், பிரித்விராஜ் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.


நன்றி: தினமலர் நாளிதழ்.

சோழவரம் அரசுப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே சோழவரம் அரசு மேனிலைப்பள்ளி அமைந்துள்ளது. பல ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த பள்ளி அடிப்படை வசதிகள் சரிவர இல்லாமல் மாணவர்கள் படிக்க மிகவும் சிரமம் அடைந்தனர். போதுமான வகுப்பறைகள், கழிப்பறைகள், இருக்கைகள் , குடிநீர் வசதி போன்றவை இல்லாததால் மாணவர்களின் வருகை குறைந்து அருகாமையில் உள்ள வேறு பள்ளிகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

சோழவரம் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு இது மிகவும் வருத்தமாக இருந்தது. தாங்கள் படித்த பள்ளி தற்போது மிகவும் மோசமடைந்து மாணவர்கள் வருகை குறைந்து போனதை அறிந்து வருந்தினார்கள். வருந்தியதோடு நிற்காமல் பள்ளியை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று யோசனை செய்தனர் . இப்பள்ளியில் 1996ம் ஆண்டு மேனிலைக் கல்வி முடித்த மாணவர்கள் தற்போது பல்வேறு பணிகளில் பணிபுரிந்து நல்ல நிலைமையில் இருந்தனர். அவர்கள் அனைவரும் சமூக வலைதளம் மூலம் ஒன்றிணைந்து கடந்த ஆகஸ்ட் மாத சுதந்திர தினத்தில் பள்ளியில் கூடினர்.

அப்போது பள்ளியின் முன்னாள் மாணவர்களுக்கான வாட்சப் குழு ஒன்றை ஆரம்பித்து பல முன்னாள் மாணவர்களை இணைத்தனர். பல முன்னாள் மாணவர்கள் அளித்த நிதியின் மூலம். பள்ளி வகுப்பறைகளுக்கு தேவையான இருக்கைகளையும் குடிநீர் தொட்டியும் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு கருவி, மற்றும் பள்ளிக்குத்தேவையான உபகரணங்களை ரூபாய் 1.20 லட்சம் செலவில் வழங்க முடிவெடுத்து. இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று பள்ளியில் கூடி வழங்கினர்.

மாணவர்களுடன் இணைந்து கொடியேற்றி இனிப்புகள் வழங்கி மரக்கன்றுகள் நட்டு மகிழ்ந்த முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்குத் தேவையான வசதிகளை செய்து தர உள்ளதாகவும். சுகாதார வளாகத்தை பராமரித்து சுகாதாரமான கழிப்பறைகளை அமைத்துத் தர உள்ளதாக தெரிவித்தனர்.