ஜோக்

என்ன சொல்கிறீர் மந்திரியாரே…! ,மக்கள் தாங்களாகவே ஊரடங்கு செய்து கொண்டுள்ளார்களா? ஏன்?

  வெளிநாட்டில் இருந்து   திரும்பி வந்த தாங்கள் நகர்வலத்துக்கு வரப்போவதாக அறிவித்தது தான் காரணம் மன்னா…!

தேன்சிட்டு மின்னிதழ் மற்றும் எழுத்தாளர் தஞ்சை ப்ரணா இணைந்து நடத்தும்மாபெரும்நகைச்சுவைசிறுகதைப்போட்டி-

தேன்சிட்டு மின்னிதழ் மற்றும் எழுத்தாளர் தஞ்சை ப்ரணா இணைந்து       நடத்தும்

மாபெரும்நகைச்சுவைசிறுகதைப்போட்டி-

மொத்தப்பரிசு ரூபாய்- 8000

முதல் பரிசு_ 3000- இரண்டாம்பரிசு ரூ 2000. மூன்றாம் பரிசு ரூ 1500

மேலும் மூன்று ஆறுதல் பரிசுகள் தலா.ரு 500.

போட்டிக்கான கதைகள் வந்து சேர கடைசி நாள்: 31-5-2020

முடிவுகள் ஜூலை 2020 இதழில் வெளியாகும்.

பரிசுபெற்ற கதைகள் தொடர்ந்து தேன்சிட்டு மின்னிதழ் மற்றும் தேன்சிட்டு இணையதளத்தில் பிரசுரமாகும்.

போட்டிக்கான விதிமுறைகள்:

கதைகள் நகைச்சுவை உணர்வுடன் ஒரு நீதியைக் கொண்டிருக்க வேண்டும்.

கதைகள் 800 முதல் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

கதைகள் இதற்கு முன்னர் எந்த இதழிலும் ஊடகத்திலும் மின்னிதழ், இணையதளங்களில் பிரசுரம் ஆகாதவையாக இருத்தல் வேண்டும். படைப்பாளி இது தமது சொந்த படைப்பு வேறு எங்கும் பிரசுரம் ஆகவில்லை என்று சான்றளித்து கையோப்பம் இட்டு அனுப்ப வேண்டும்.

கதைகளை எம்.எஸ்.வேர்டில் தட்டச்சு செய்து மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

போட்டி குறித்து கடிதத்தொடர்போ போன் செய்து விசாரிப்பதை தவிர்க்கவும்.

போட்டியில் பிரபலமான எழுத்தாளர்கள் கலந்து கொள்வதை தவிர்க்கவும்.

போட்டிக்கான கதைகள் நடுவரால் பரிசீலிக்கப்பட்டு தேன்சிட்டு மின்னிதழில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும். நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

போட்டிக்கான கதைகளை மின்னஞ்சலில் அனுப்பியதோடு முகநூலில் தங்கள் பக்கத்தில் பதிந்து தேன்சிட்டு முகநூல் பக்கத்தில் tag செய்து பகிரவேண்டும்.

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் : thalir.ssb@gmaiil.com.  தேன்சிட்டுஃபேஸ்புக் பேஜ் லிங்க்: https://www.facebook.com/thaliranna/?modal=admin_todo_tour

ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்!

கொரானா என்கிற சனியன்.

கொரானா என்கிற சனியன்.
                     கரடிக்குளம், ஜெயாபாரதி ப்ரியா

Description: Story Of Shani Dev And Mahadev Shiva - शनिदेव की ...

சனியன்அவன்பாட்டுக்குசிவனேன்னுபோயிக்கிட்டிருந்தான்.அன்னைக்கு, நிசமான சிவனுக்குநாக்குல சனி போலருக்கு.

எலேசனியாஎங்கடேபோய்ட்டிருக்கேஎன்றார் சிவன்.

கும்பிடுதேன்சாமி.பூராப்பெயபுள்ளைகளும் இந்த கொரானாப்பயலுக்குப்
பயந்துஓடிஒளிஞ்சுக்கிட்டாஹளாஒருத்தனையும் காங்கல. அதான் அசந்து
மறந்துஒருபயலாவதுசிக்கமாட்டானான்னு பொழப்பத்தேடி அலையுதேன்
சாமி …!

நீயேஒருஏழரைநாட்டான்.உலகத்துலஎல்லா நாட்டானும் உனக்கு பயந்து
எருவிக்கிட்டுஅலையுதானாமேநெசமாலே …?

என்னமோசாமி…மனுஷப்பயஹகளோட “பயத்துலதான” உங்க பொழப்பும்
நம்மபொழப்பும்எல்லாம்ஓடுது.அதுசரிஎசமான்அவுஹநீங்கஎன்னஇம்புட்டு சிலாத்தாகுத்தவச்சுக்கிட்டிருக்கீஹ ?

சிவனுக்குசுள்ளுண்ணுகோபம்வந்துருச்சு.அதென்ன நம்மளை இந்த பயலுக்கு
சமமா வச்சு பேசுறான் .

கோபத்தை அடக்கிக்கொண்டு சிவன் சொன்னார். நமக்கும் ஒன்னப்போல
தான்டேசித்திரைமாசத்துக்குமேலதான்சோலி கிட்டும் போல.

அதான்எசமான்இம்புட்டுநாளாநான்தான்பெரியகில்லாடின்னுநினைச்சுக்கிட்டு இருந்தேன்…இப்பபாருங்கஇந்தகொரானாப்பயஎன்னயவே தூக்கி மிழுங்கிருவான்
போல இருக்கே …!?

அதென்னலேநீஎன்னபெரியஇவனாஉன்னக்கண்டு பயப்படறதுக்கு …?

ஒலகத்துலஅப்பிடித்தான்பேசிக்கிடுதாஹ முதலாளி …!சர்தாம்டே நீ என்ன விட பெரியஇவம்னே வச்சுக்கிடுவோம் …ஏன் சாமி இந்த ஏழைய வம்புக்கு
இழுக்கீஹ?உங்களோடேல்லாம்என்னைய இண சேர்க்க முடியுமா
நான் ஒரு ஈத்தர …!

அதுக்கில்லலேஉலகத்துலஎம்புட்டுபெரிய கொம்பனா இருந்தாலும் நீ
புடிச்சாஅவனஒருவழிபண்ணாமவிடமாட்டியாமே … எமனையே மிரட்டற
எமப்பயலாமே நீ … நெசமா ?

இப்பிடியேஉசுப்பேத்திஉசுப்பேத்திஉடம்பரணமாக்கிட்டீஹளே ..
அதென்னமோசாமிநமக்குகெடச்சவரம் அப்படி.உங்களுக்கு தெரியாததா ?

ஓ வரம் வேற வாங்கி இருக்கியா ?ஆமா முதலாளி.உங்களுக்கு
பயப்படாதவன்எல்லாம்எனக்குபயந்தாகணுமில்ல …?

சர்தாம்லே ரொம்ப பீத்திக்கிறாத.

பீத்தலசாமி.உலகத்துலஎவனாஇருந்தாலும் ஒரு தடவையாவது நம்ப
கையிலசிக்கிருவாம்ல…எல்லாம்உங்ககருணையினாலதான் இந்த ஏழையோட
பொழப்பு நடக்குது ..ஏலஇம்புட்டுபேசுதியேநீஇதுவரைக்கும் யாரையெல்லாம் புடிச்சிருக்கே
லிஸ்ட் வச்சிருக்கியாடே ?

இருக்குசாமி.பாண்டவர்கள்,ராமர்லட்சுமணர் சீதை அகலிகை,
அரிச்சந்திரன்,நல்லதங்காள்இப்படிபெரியபெரியமனுஷங்களிலேருந்து
விஜய்மல்லையாலலித்மோடின்னுகழுதப்பயக எம்புட்டுப்பேரு தெரியுமா ?
பிரம்மச்சுவடிமாதிரிநம்மகிட்டேயும்ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கே ?

இம்புட்டுபெரியலிஸ்ட்டுலஎன்பேருஇருக்காடே ?

இதென்னசின்னப்புள்ளத்தனமாஇருக்கு?உங்களுக்குஏன்இப்பிடி
ஒரு ஆசை எசமான் …?

இடையில்கைலாயமலைக்குன்றிலிருந்து “சக்தி” கத்தினாள் –

ஏங்கஅந்தசனிப்பெயலோடஉங்களுக்குஎன்ன பேச்சு .. கொரானா மாதிரி புடிச்சா
விட மாட்டான் … உள்ள வாறீகளா ?

ஏட்டிஉமாசித்தபொறுத்தாஇந்தாவந்துருதேன்.ஏலெ சனியா நீ இம்புட்டு
பேசுதியேஉன்னாலஎன்னநெருங்கமுடியுமா நீ சரியான ஆம்பளையா
இருந்தாஉன்பவரஎம்மேலகாட்டுபாப்பம் ?

வேண்டாம்சாமிநீங்கஈஸ்வரன்.நான் சனீஸ்வரன் நமக்குள்ள எதுக்கு
வம்பு ?

ஓஇந்தஉலகத்தையேகட்டிக்காக்கிறநானும் ஈஸ்வரன் நீயும் ஈஸ்வரனா ?
அம்புட்டுகொழுப்புஏறிப்போச்சாஉனக்கு ? இப்ப நீ என்ன பண்ற இங்க
இப்பஎன்னைநீபுடிக்கிறே…உன்னாலமுடிஞ்சா எம்பொடதில ஏறி உக்காந்து
என்னை ஆட்டிப் படைக்கிறே …?!

கோபத்துலசிவன்ருத்ரதாண்டவம்ஆடசனி எவ்வளவோ சொல்லிப்பார்த்தும்
சிவனின் கோபம் தணியவில்லை.

சரிங்கசாமிஇன்னைக்கு,நாளைக்கு,நாளைக்கு மக்காநாள் ஒரு மூணுநாள்
உங்களுக்குநான்டைம்தாரேன்அதுக்குள்ளேநான்உங்களைபுடிச்சிடறேன் சரியா ?

நீஎனக்குடயம்தர்றியா…?சரிடேமூணுநாள் என்ன மூணு யுகம் வேணும்னாலும்
எடுத்துக்கடே …!

இல்லசாமி.சரியாமூணாம்நாள்நான்உங்களைபிடிக்கிறேன்.மூணுமாசத்துக்கு உங்களுக்குசனிதிசைஎன்றபடி சனியன் போய்விட்டான்.

சிவன்பார்த்தார்.கைலாயமலையில்இருந்தாதானேசனியன்பிடிப்பான்.
பேசாமஏழுகடல்ஏழுமலை,ஏழுலோகம்தாண்டி பாதாளத்துல போய் ஒரு மூணு
மாசத்துக்குஒளிஞ்சுக்கிடுவோம் ….
சனியன்என்னஒருசப்புராதியாலேயும்நம்மளை நெருங்க முடியாது என மூணு
நாள்பயணம்செய்துகுகைக்குள்போய்ஒளிந்து கொண்டார்.

என்ன…?ஒரேஇருட்டும்,வெக்கையும்புழுக்கமுமா இருந்தது.

பல்லைக்கடிச்சிக்கிட்டுமூணுமாசத்தைஓட்டிரணும் . இந்நேரம் அந்த சனியன்
நம்மளசல்லடபோட்டுசலிச்சுதேடிக்கிட்டிருப்பான்.

தலகீழநின்னாலும்அந்தசவத்துமூதியால நம்ம கிட்ட நெருங்க முடியாது .
நாம யாரு சிவனா கொக்கா ?

இப்படியானயோசனையிலேயேமூணுமாசம் மூணு யுகமா நகர்ந்து முடிஞ்சது.

சிவன்வெற்றிப்பெருமிதத்தோடுபாதாளலோகத்தில்இருந்துஏழுலோகம், ஏழு மலை ஏழுகடல்கடந்துவெளில வந்து பைய எட்டிப்பார்த்தார்.

எதிரில்அடக்கத்துடன்கைகட்டிநின்றுகொண்டிருந்தான் சனியன்.என்னடே தோத்துட்டமேன்னுவெட்கமா இருக்கா?

இல்லசாமி…இப்பிடிசிவன்தோத்துட்டாரேன்னு வருத்தமா இருக்கு …!

என்னலேஉளறுதே….நான்தான்மூணுமாசமா எவன் கண்ணுலேயும் படாம
பாதாளக்குகைக்குள்ளேபோய்ஒளிஞ்சுக்கிட்டேனே ?

அதேதான்எசமான்நீங்கஎம்புட்டுபெரியஆளு…குளுகுளுகைலாயமலையில ஆடலும்பாடலும்கேட்டுரசிச்சுஆடிக்கிட்டுபாடிக்கிட்டுஉலகத்தையே கட்டி ஆள வேண்டியகடவுள் .டென்ஷனான சிவன் கத்தினார்.

நீட்டி முழக்காம விஷயத்த சொல்லுடே …!நான் உங்க பெடதிலயே ஏறி உக்காந்து
உங்களைக்கொண்டுபோய்மூணுமாசம்பாதாளகுகையிலஅடைச்சுவச்சுட்டேன் பார்த்தீகளாஇதுக்குபேருதான் சனி பிடிக்கிறது சாமி.

அசந்துபோனசிவன்மனம்திறந்துபாராட்டினார்.உன்ன என்னமோ நினைச்சேன்
கழுதப்பய ஜெயிச்சுட்டியேலே …?!

ஆட்டம், வி. சகிதாமுருகன், நூல்விமர்சனம்

நூல் விமர்சனம்!

 ஆட்டம்!  வி.சகிதா முருகன். பாவைமதி பதிப்பகம்.

Description: C:\Users\nice day\Downloads\sm.jpg
Description: C:\Users\nice day\Downloads\smn.jpg

தமிழ்வாசகப்பெருமக்களுக்கு சகிதா முருகன் என்ற பெயர் மிகவும் பரிச்சயம் ஆனது. தமிழில் வெளியாகும் பிரபலமான வார மாத இதழ்களில் இவரது நகைச்சுவை துணுக்குகள் ஏராளமாக வந்து சிரித்து மகிழவைக்கும். அப்படி நகைச்சுவைக்கு சொந்தக்காரரான சகிதா முருகனை ஒரு வித்தியாசமான சமூக நோக்கம் உள்ள எழுத்தாளராக இந்த ஆட்டம் சிறுகதை தொகுப்பு நம்மிடையே அறிமுகம் செய்துள்ளது.

பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது சுவாரஸ்யமான முன்னுரையில் சொல்லியிருப்பது போல சகிதாமுருகன் வளர்ந்துவிட்ட எழுத்தாளர் என்பதை இந்த நூல் வாசிக்கும் போது உணர முடிகின்றது.

மொத்தம் இருபது கதைகள். ஒவ்வொன்றிலும் சமூக சிந்தனை விரிந்து கிடக்கிறது. சிறுகதைகள் என்றால் விரிந்து ஏழெட்டு பக்கம் இருக்கும் என்று எல்லோரும் பயந்துவிட வேண்டாம். இக்கால வாசிப்புக்கு ஏற்ப மூன்று நான்கு பக்கங்களில்  சிறுகதையை எழுதி சொல்லவந்ததை அழுத்தம் திருத்தமாய் பதிவிட்டு விடுகின்றார் எழுத்தாளர்.புத்தகத்தின் தலைப்பாய் வைத்துள்ள முதல் கதை ஆட்டம். ஆட்டத்தை அட்டகாசமாக துவக்கியிருக்கிறார். நாட்டுப்புற கலைகளை முதலாளி வர்கம் எப்படி கையாள்கிறது. வயிற்றுப்பாட்டுக்கு கலைகளோடு உடலையும் விற்கவேண்டிய நிலைக்கு ஆளாகும் நாயகி இறுதியில் எடுக்கும் முடிவு நம்மை அதிர்ச்சி அடையவைத்தாலும் நாட்டுப்புற கலைஞர்களை மோசமாக நடத்துவோர்க்கு ஓர் சவுக்கடி கொடுத்திருக்கிறார்.

உரம் வாங்க முடியாத விவசாயி உரக்கம்பெனியில் வேலைக்கு சேரும் போது நம்கண்களில் ஈரம் வர அண்ணன் கதை பங்காளி பாசத்தை சொல்கிறது. முதிர்கன்னிகளின் சின்ன ஆசை கூட நிறைவேறாமல் போவதை பட்டுச்சேலை பேச கணவனே தெய்வமாக கணவனையே சுற்றிவந்தபெண் கணவன் திடீர்விபத்தில் சிக்கவும் குடும்ப பாரத்தை சுமப்பதை அழகுற விவரிக்கிறது துணைக்கோள்.

உயிர்ப்போராட்டம் என்ற அறிவியல் புனைக்கதையின் முடிவு நாம் எப்படி இந்த பூமியை நாசாமாக்கி வருகிறோம் என்று மண்டையில் அடித்துச்சொல்கின்றது.. உயிர்பிழைக்க முடியாத நடுத்தர வயது வாசக எழுத்தாளர் செய்யும் தானம் நம்மை கண்கலங்கச்செய்கிறது.ஸ்டெர்லெட் உயிரிழப்பு சம்பவங்களை அப்படியே கண்முன்னே நிறுத்தி தொழிலாளர்களின் நிதர்சனத்தை காட்டுகிறது நிதர்சனம் என்ற முத்தாய்ப்பான கதை.

மகன்கள் நிராகரித்துவிட கணவனோடு கிளம்பும் சரோஜினியின் இரண்டாவது இன்னிங்க்ஸ் வெற்றி நடை போட வைக்கிறது.மனைவியின் துரோகத்தை அறிந்து துடிக்கும் ஒரு கணவனின் முடிவு கைதட்ட வைக்கிறது துரோகமுள் சிறுகதையில்.

இப்படி ஒவ்வொரு கதையிலும் ஒரு மென் சோகத்தை கொடுத்து நம்மை கண்கலங்க வைத்தாலும் நடுத்தர வர்க்கத்தின் கஷ்டங்களையும் எதிர்பார்ப்புக்களையும் ஏமாற்றங்களையும் சுருங்கச்சொல்லிவிடுகின்றார்.

சுவாரஸ்யம் குறையாத வாசிப்புக்கும் இந்த சமூகத்தின் மீது சிறிதளவாவது மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டவைக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரராகி தனது முதல் தொகுப்பிலேயே அசத்தலான பாராட்டுக்களை பெறுகின்றார் சகிதா முருகன்.

வெளியீடு: பாவைமதி வெளியீடு, தண்டையார்ப்பேட்டை, சென்னை.

பக்கங்கள்:96. விலை ரூ 100.00.

சிரி”ச்ச மூஞ்சி நூல் (Facebook) சிரிப்புகள்

”சிரி”ச்ச மூஞ்சி நூல் (Facebook) சிரிப்புகள்!

“யாருமே வெளிய வரல..எப்டி இத செய்யறதுன்னு எதிர்கேள்வி கேக்கறானே..இவன் யார்?”

” செயின் திருடன்.break the chain பத்தி கேக்கறான்”

புது வண்டி ரவீந்திரன்

“மாப்ள US ரிட்டர்ன்”

” வீட்டுக்கு வெளிய sticker ஒட்டிட்டாங்களா?”

புது வண்டி ரவீந்திரன்

” அடப்பாவத்த!! நாலு நாளா அந்தாளு டாய்லெட் போகாம இருக்கானா ஏன்?”

” ‘வெளிய’ போனா கொரோனா வந்துடுங்கிறத தப்பா புரிஞ்சிக்கிட்டாராம்”

புது வண்டி ரவீந்திரன்

இவளை ஒருத்தன்கையிலே புடுச்சிக்கொடுத்திட்டேன்னா நிம்மதியாக கண் மூடிடுவேன்..”

கையை நல்ல கழுவ சொல்லிட்டு புடுச்சி கொடுடா!”

ஆர்.ரமேஷ்பாபு,விருத்தாச்சலம்

கும்பகர்ணனுக்கு வந்த நோய் எது சொல்லு?

 “கொர்”ரானா”!

ஆர்.ரமேஷ்பாபு, விருத்தாச்சலம்.

எனக்கு வாழ பிடிக்கலே டாக்டர்…”

“பரவாயில்லை… கொஞ்சம் வயசானவங்க, வாழக் காயை தவிர்க்குறது நல்லதுதான்!

வி.சி.கிருஷ்ண ரத்தினம்.

Description: C:\Users\nice day\Downloads\fb1.jpg

” ‘வோர்க் ஃபிரம் ஹோம்’ன்றதை ‘வோர்க் டு ஹோம்’னு மாத்திட்டியே, இது நியாயமா தனம்?”

வி.சி. கிருஷ்ணரத்தினம்.

அமைச்சர்: “அந்தப் புலவர் தங்களைப் புகழ்ந்து, ‘லிரிக்ஸ் ஃபிரம் ஹோம்’ செய்வதாக பொய்ச் சொல்லிவிட்டு, வார இதழ்களில் கொரோனா ஜோக்ஸ் எழுதி சன்மானம் வாங்கிக் கொண்டிருக்கிறார் மன்னா!”

வி.சி. கிருஷ்ணரத்தினம்.

புலவரே! தாங்கள் பாடிய பாடலில் பிழை உள்ளதே!”

“இது போல் எதையாவது சொல்லி சன்மானத்தை மறுதலிப்பீர்கள் என்று தெரிந்தே, நான் காப்பி அடித்த பிரசுரமான ஒரிஜினல் பாடலையும் கையோடு கொண்டு வந்துள்ளேன் மன்னா!”

வி.சி. கிருஷ்ண ரத்தினம்.

மது வடலாரா விமர்சனம்

மது வடலாரா விமர்சனம்

நாயகனும், நாயகனின் நண்பனும் ஒரு ஆன்லைன் டெலிவெரி கம்பனியில் டெலிவெரி பாய்ஸாக வேலை செய்கிறார்கள். நாயகனின் நண்பன் கேஷ் ஆன் டெலிவெரி பண்ணும்போது கஸ்டமர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு நோட்டை மறைத்துவிட்டு, “சார் 500 ரூபாய் குறையுது, 100 ரூபாய் குறையுது” என ஏமாற்றிப் பணத்தை அபகரிப்பார்.

இதைப் பார்த்த நாயகனும் அதைப் போல முயற்சி செய்யப் போக, அவன் பல சிக்கல்களில் மாட்டுவதுதான் கதை. வித்தியாசமான மேக்கிங்கால் கவர்ந்துள்ளார் இயக்குநர்.

ஒரு கஸ்டமர். அதுவும் பாட்டி. அப்பாட்டியை ஏமாற்ற முயன்று, அப்பாட்டியிடம் மாட்டிக் கொள்கிறார் நாயகன். அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யும்போது பாட்டி இறந்து விடுகிறார். பாட்டியின் பிணத்தை மறைக்க அந்த வீட்டுக்குள் போய், அது தேவையில்லாமல் பெருஞ்சிக்கலில் இழுத்துவிட்டு விடுகிறது.

அதைச் சமாளிக்க முடியாமல் அவ்வீட்டிலேயே மயங்கிவிடும் நாயகன், மீண்டும் விழிக்கும் பொழுது, ரத்தத்தால் தோய்ந்த பிணத்தின் அருகில் கிடப்பதை உணர்கிறார். என்ன ஏதென்று புரியாமல், அலறியடித்தவாறு தனது டெலிவெரி பேக் எடுத்துக் கொண்டு, வீட்டுக்கு வந்தால், அந்த பையில் 50 லட்சம் பணமிருக்கிறது.

பைக்குள் இருந்த டெலிவரி பார்சல்களை எடுக்க மறுபடியும் அந்த வீட்டுக்கு நண்பர்களோடு செல்கின்றான் நாயகன். அங்கே அவனுக்கு பல அதிர்ச்சிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. பாட்டி என்னானார், நாயக்ன் அருகில் இறந்து கிடந்தது யார், யார் நாயகனை அந்தக் கொலைவழக்கில் சிக்க வைத்தது என பயங்கர ட்விஸ்ட்களாகப் படம் பயணிக்கிறது.

படத்தின் நாயகன் ஸ்ரீ சிம்ஹா, பாகுபலி பட இசையமைப்பாளர் கீரவாணியின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பக்க துணையாக நகைச்சுவையில் கலக்கியுள்ளார் சத்யா. எழுதி இயக்கியுள்ள இளம் இயக்குநர் ரித்தேஷ் ராணாவிற்கு இது முதற்படம். ‘மது, வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு’ என பாட்டியின் குரலில் ஆரம்பிக்கும் படம் நெடுகேவும் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. குறிப்பாக, படம் நெடுகே ஒரு டிவி சீரியல் காட்டப்படுகிறது. அச்சீரியலில், நெற்றியில் சுடப்படும் நாயகன் செய்யும் அட்ராசிட்டிகள் அதகளம். அவர்கள் கலாய்த்துள்ள நெடுந்தொடரின் மூலம், சன் டிவியில் வந்த ஒரு தமிழ் சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான த்ரில்லிங் படவிரும்பிகளுக்கான படமிது. நாயகன் அந்த வீட்டில் மாட்டுனதிலிருந்து, அவன் தப்பிப்பானா மாட்டானா, இதெல்லாம் யார் செய்றா என சீட் நுனிக்கு கொண்டு வந்துவிடுகின்றனர். கதாநாயகியும், பாடல்களும் இல்லாத இந்த த்ரில்லர் படம், அமேசான் ப்ரைமில் காணக் கிடைக்கிறது.

– ரமேஷ் சுப்புராஜ்

நன்றி: http://ithutamil.com/

கவிதைக் காதலி!

கவிதைக் காதலி!

காதல் கவிஞர் வேலூர் முத்து ஆனந்த்

அழியட்டும் கொரோனா

என் உள்ளத்து உணர்வுகளை ஊற்றி

அப்படியே அதனை ரசனைகளாய் மாற்றி

உன்னால் மட்டும் எப்படியடா

இந்தக் காதல் கவிதைகளைப் பேரழகாய்

வடிக்க முடிகிறது?!

மன்மத பாணத்தை ஏவி

என்னை நீ வீழ்த்தியதால்தான்

நான் உன்னேயே நினைத்து

என்னை (யே) மறந்தேனடா!

விதவிதமாய் விந்தைகள் புரியும்

விழிகள் உனக்கு என்றாய்!

ஆனால் – அந்தக் கண்களே

எப்பொழுதும் உன் மீது தானே நிலை குத்தி நிற்கிறது!

என் மீது எவ்வளவு காதல் இருக்கிறதோ

அவ்வளவு பரிவும் உனக்கிருக்கிறதடா!

அதனால்தான் –

கொரோனா அச்சத்திற்காக

முத்தங்களைக்கூட

இதழ்களிலும் கன்னங்களிலும் தராமல்

எனக்குப் பறக்கும் முத்தங்களைக்

காற்றில் அனுப்புகிறாய்!

நீ

ரசித்து ருசித்துப்

புசிக்கும்போதுதான்

தெரிகிறது

நான்கூட எத்தனை அழகான

இனிமையான கவிதையென்று!

அன்றல்ல இன்றல்ல

என்றுமே

என் இதயத்தின் காதல் இளவரசன்

நீ மட்டும்தான் அன்பே!

நன்றி

இடி மின்னல் மழை வெள்ளம்

எது என்றாலும்

எனக்கு அது நீதானடா அன்பே!

அன்பு காட்டுவது எப்படி என்றுகூட

உன்னிடமிருந்துதான்

தெரிந்து கொண்டேன்

இடி போல் பிரமிக்க வைக்க!

திடீர் திடீரென நீ வைக்கும் முத்தங்கள்

எனக்கு மின்னல்களைத்தான்

நினைவுபடுத்துகின்றது!

சிறு தூறலாகத் தொடங்கும் உன் அணைப்பு

கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து

மழையாகிமழையாகி

பின் பெரு வெள்ளமாக மாறி

என்னில் முழுவதுமாய்

அப்படியே இறங்குகிறது!

உன் புன்னகைகள் 

குட்டிக் குட்டி வரங்கள் என்றால்

உன் சிரிப்பு எனக்குப் பேரதிர்ஷ்டம்!

நான் நினைத்ததையெல்லாம்

நிறைவேற்றுவதற்காகவே

உன்னை எப்பொழுதும்

முத்த மழையில் நனைய வைக்க வேண்டும்

என்ற கட்டளையை என் மனம்

எனக்கே தெரியாமல்

கடைப்பிடிக்கிறது!

என் மகிழ்ச்சியை எப்பொழுதும்

உச்சத்திற்குக் கொண்டு செல்லும்

சுக்கிரன் நீதான்!

என்னை எப்பொழுதும் ஆட்சி செய்யும்

சக்கரவர்த்தியும் நீதான்!

நம்மை ஆண்ட ஆள்கிற

ஆளப் போகிற

காதலுக்கு என்றென்றும்

ப்ரியமான நன்றி!

அந்தப்புரம்!

நேரில் மட்டுமல்லகனவுகளிலும் கற்பனைகளிலும்கூட

உன்னைப் பார்ப்பது எனக்கு வரம்தானடா!

கலையான சிற்பம்அழகான ஓவியம்

எதைக் கண்டாலும்அதில் நீதான்

மின்னுகிறாய்! மிளிர்கிறாய்!

ஜொலிக்கிறாய்!பளபளக்கிறாய்!

உன்னைப் பற்றியஎன்னுடைய கிறுக்கல்களுக்குக்கூட

கவிதைகள் என்று பெயர் வைக்கிறார்கள்!

கனிச் சாறுகள் கூடக் கசக்கிறது

உன் இதழ்களின் சுவையின் முன்னே!

எப்பொழுதும் எல்லாமாக இருக்க

உன்னால் மட்டும் எப்படியடா முடிகிறது?!

உன்னைக் காதலித்த பின்தான்அழகானேன் என்று

நம் காதல்கூடக் கவிதையுரைக்கிறது!

இந்தப்புறம் அந்தப்புறம் என்றில்லை

நீ இருக்கும் இடம் எதுவானாலும்அது எனக்குநம் அந்தப்புரம்தான்!

முழுவதுமாய் நீ என்னை ஆட்கொள்ளும்போதுதான்

காதல் அத்தனை அழகையும்அள்ளிக் கொள்ளும் என்று தெரிகிறது!

பார்ப்பது புன்னகைப்பது பழகுவது

பேசுவது முத்தமிடுவது ஆள்வது

எனஎல்லாவற்றையும் தனதாக்கிக் கொண்டு

சிறப்பான ஆட்சியைத்தான்

நடத்துகிறது இந்தக் காதல்!

ரூல்ஸ்!

காலையில் பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்த தீபிகா “அப்பா 100 ரூபா வேணும்!” என்றாள்

   ”எதுக்கு இப்ப நூறு ரூபா?”

”நேத்து ஸ்கூலுக்கு ஐடி கார்ட் போட்டுகிட்டு போக மறந்துட்டேன்! அதுக்கு ஃபைன் நூறு ரூபா கட்டணும்!”

“ஐடி கார்ட் போட்டுகிட்டு போகணும்னு தெரியும் இல்லே! போட்டுகிட்டு போகலைன்னா ஃபைன் கட்டணும்னு தெரியும். அப்படியும் அலட்சியமா இருந்திருக்கே! ரூல்ஸை ஃபாலோ பண்ண கத்துக்க!”

 “ஸாரிப்பா!”

என்ன ஸாரி? உன்னோட அலட்சியத்தனத்தாலே இப்ப எனக்கு நூறு ரூபா நஷ்டம்? இந்தா பிடி!” நூறு ரூபாயை கொடுத்து விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

   ”அப்பா! ஒரு நிமிஷம்பா!”

”என்ன?” என்றேன் எரிச்சலோடு!

”என்னை ரூல்ஸ் பாலோ பண்ண கத்துக்கணும்னு சொன்ன நீங்களே ரூல்ஸை ஃபாலோ பண்ண மாட்டேங்கிறீங்களே! வண்டியிலே போற எல்லோரும் கட்டாயம் ஹெல்மெட் போடனும்னு ரூல்ஸ் சொல்லியிருக்கு! மீறினா 1000 ரூபா அபராதம். போகட்டும் பணம் போனா கூட திரும்ப சம்பாரிச்சிக்கலாம். ஆனா உயிர் போனா வருமா? கொஞ்சம் யோசிங்கப்பா!”   செவிட்டில் அறைந்தார்போல தீபிகா கேட்கவும். ”தப்புதாம்மா! இப்பவே ஹெல்மெட் வாங்கிடறேன்!” என்று சொல்லிவிட்டு கடைக்கு கிளம்பினேன்

எஸ்.எஸ். பாபு. பஞ்செட்டி.

காமெடிக்கு மறு பெயர்…ஜெர்ரி லூயிஸ்..

காமெடிக்கு மறு பெயர்…

Description: C:\Users\nice day\Downloads\jerry luis.jpg

ஹாலிவுட்டைக் கலக்கிய காமெடியன்களின் வரிசையில் தலையாய நபரை அறிவோம். த ஒன் அன் ஒன்லி சார்லி சாப்ளின். அடுத்து நின்றவர்கள் பாப் ஹோப், லாரல் ஹார்டி, நார்மன் விஸ்டம், ஜெர்ரி லூயிஸ்… கடைசிப் பெயரை எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறதா? நாகேஷ் தன் குரு இவர் என்பாரே அடிக்கடி, அவரேதான்! ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் அறிமுகக் காட்சி, அவரது ஓஹோ புரடக்‌ஷன்ஸ் மேஜையின் மீது இவர் படம் இருக்கும் ஷாட்டில்தான் ஆரம்பமாகும். இவரைத்தான் சார்லி சாப்ளினின் வாரிசு என்பார்கள். ஏன், அவரையே மிஞ்சிவிட்டார் என்பவர்களும் உண்டு. அந்தத் ‘தங்க விலை பவுனுக்கு 200 ரூபாய்’ காலத்திலேயே 1000 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தவர்.

காமெடி என்றாலேயே வசனம் என்றாகிவிட்ட இந்தக்கால ரசிகர்களுக்கு இவர் எந்த ஒரு வார்த்தையும் இன்றி நாலைந்து நிமிடத்துக்கு தனி ஒருவராகவே முழு ஆக்‌ஷனையும் தன் மேல் போட்டுக் கொண்டு, ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அரங்கத்தைக் குலுங்க வைப்பது அட, இப்படிக்கூட ஒரு பொற்காலம் இருந்ததா என்று அதிசயிக்க வைக்கும். இல்லாத டைப் ரைட்டரில் லெட்டர் அடிப்பது போல அவர் அபிநயிப்பதும் (‘Who’s minding the Store?’) அடுக்களைத் திண்டில் அமர்ந்து கொண்டு ஒரு முழு ஆர்கெஸ்ட்ராவை ஃப்ளூட், ட்ரம்ஸ், கிளாரினெட் என்று வாசித்து முடிப்பதும்(‘Cinderfella’) எக்ஸிகியூடிவ் மீட்டிங்கில் எம்.டி கத்துவது போல ஒலிக்கும் பின்னணி இசைக்கு நடிப்பதும் (‘The Errand Boy’) எவராலும், ஆம், எவராலும் மிமிக்ரி பண்ண முடியாத எவர் க்ரீன் காட்சிகள்! (links below)

அப்பா டேனி லூயிஸும் மேடைக் கலைஞர். அம்மாவோ ரேடியோவில் பியானோ வாசிப்பவர். ஆக, வயது ஐந்திலேயே மேடை ஏறிவிட்டார். பின்னால் ஒலிக்கும் கிராமபோனுக்கு நடிப்பார். விழுந்த கைதட்டல்களைப் பார்த்து சான்ஸ்கள் வந்தன. பின்னாள் பிரபல நடிகர் டீன் மார்டினும் இவரும் கூட்டணி அமைத்து நட் கிளப்களில் நிகழ்ச்சிகள்… பிராட்வே மேடைகளில் நடித்தபோது ஒரே நாளில் ஒன்பது ஷோக்கள்! தினம் ஒரு லட்சம் போட்டோக்களை ரசிகர்களுக்கு வீசினர். ‘படிப்படியாக’ என்றால் இவங்கதான். மேடையைத் தொடர்ந்து ரேடியோ நிகழ்ச்சிகள். அப்புறம் டி.வி. பின் ஹாலிவுட் படங்கள். 1949 இல் ‘My Friend Irma’ இல் தொடங்கி பல வெற்றிப் படங்கள்! படங்களில் டீன் பங்கு குறையவே பிரிய நேர்ந்தது. தனியே இன்னும் பிரபலம் அடைந்தார்கள். என்றாலும் ஜெர்ரியுடையது ஜெட் வேகம். இவரை வெச்சு காமெடி பண்ணின தயாரிப்பாளர்களுக்கு காசு கொட்டலாச்சு! பத்தே வருடத்தில் பாரமவுண்டில் 18 மில். டாலரும் லாபத்தில் 60%-ம் என்று அந்த நாளில் ஹாலிவுட்டின் உச்ச சம்பளம் இவருடையதே.

பாடலிலும் ‘அடி’யெடுத்து வைத்தார். ஒரு முறை நடிகை ஜூடி கார்லண்ட் வராததால் அவர் பாடலை இவர் பாட ‘Rock-a-bye’ என்ற அந்த ரிகார்ட் 40 லட்சம் விற்று ப்ரேக் செய்தது ரிகார்டை.

அறிமுகப்படுத்திய ஹால் வாலிஸின் காண்ட்ராக்ட் முடியும் வரை காத்திருந்தார். சொந்தக் கடையை ஆரம்பித்தார். முதல் படம் ‘Cinderfella’. புகழின் உச்சிக்குத் தள்ளிய படம். கிளைமாக்ஸில் அந்த 63 படிகளில் ஸ்டைலாக இறங்கிவந்து ஆடுவார் பாருங்க ஒரு பால் ரூம் டான்ஸ், இப்ப பார்த்தாலும் கிறங்க அடிக்கும். கடைசி ஷாட்டை, இவர் ஆடி முடித்ததும் மற்ற அனேகரும் சேர்ந்து கொண்டு ஆடுவதாக ஒரே ஷாட்டாக அமைத்திருப்பார்கள், அது போனஸ்.

அடுத்த வெற்றி ‘The Nutty Professor.’ பிற்பாடு எட்டி மர்ஃபி நடித்து ரீமேக்குக்கே பார்ட் 2 வந்த படம். தன் தந்தையைப் போலவே கோழையாகிவிடுவோமோ என்று மனம் குறுகும் புரபசர் டாக்டர் கெல்ப் (ஜெர்ரி) ஒரு மருந்தைக் கண்டு பிடிக்கிறார். டெஸ்ட் செய்ய, தானே அதை டேஸ்ட் செய்கிறார். எதையாவது கண்டுபிடித்து யாராவது அதைக் குடித்து மனிதன் பாதி மிருகம் பாதியாக மாறும் படங்கள் வந்த காலம் அது. மருந்தை அருந்திய ஜெர்ரி வலியில் துடிக்கிறார். முகம் அஷ்ட கோணலாகிறது. தசைகள் இழுத்துக் கொள்ள லேபரட்டரி மூலையில் ஒடுங்குகிறார். அடுத்த காட்சி காலேஜ் காம்பஸ். ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் எல்லார் முகத்திலும் அதிர்ச்சி. அபூர்வ வஸ்துவைப் பார்த்த மாதிரி புருவம் உயர..நடந்து வருகிறார், சூபர் ஆணழகராகிவிட்ட ஜெர்ரி. அப்புறம் என்ன, இவர் விரும்பி ஏங்கிய பெண்ணே தேடி வருகிறாள். திடீரென மருந்தின் வலிமை குறைய லேபுக்கு ஓடுவார் சரி செய்ய. கல்லூரி விழாவின் நடுவே சுய ரூபம் வெளிப்பட க்ளைமாக்ஸ்! அமெரிக்க நேஷனள் லைப்ரரியில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள முக்கியமான படங்களில் இது ஒன்று. மத்தவங்க நேசத்துக்கு ஆசைப்படற நாம முதல்ல நம்மை நேசிக்கக் கத்துக்கணும் என்ற பாடத்துடன் முடியும் படம் இது. சிவாஜி 9, கமல் 10 என்றால் இவர் 7. ‘The Family Jewels’ என்ற படத்தில் அந்தக் கோடீஸ்வர சிறுமி தன் ஆறு மாமன்களில் ஒருத்தரைத் தன் கார்டியனாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஆறும் படா கில்லாடிகள்! ஒவ்வொருவரிடமும் அவளை அழைத்துச் செல்லும் டிரைவராகவும் கப்பல் கேப்டன், பைலட், ஃபோட்டோகிராஃபர், சர்க்கஸ் கோமாளி என அந்த ஆறு மாமன்களுமாக ஜெர்ரி காமெடித் துகள் கிளப்பினார். புகழ் பரப்பினார்.

The Errand Boy’ என்ற படம் ட்ரீம் ஃபேக்டரியான ஹாலிவுட்டைச் சுற்றிப் பின்னப்பட்டது. முதலிலேயே சினிமா மாயை பற்றி ஒரு முன்னுரைக் காட்சி வரும். வேர்வை கொட்ட, புஜங்கள் முறுக்கேற ஹீரோ ஒரு மலையுச்சியிலிருந்து அந்தப் பாறையை கீழே தள்ள, பலத்த சப்தத்தோடு அது கீழே வீழும். அடுத்த ஷாட்டில் திரைக்குப் பின்னால் நடப்பதைக் காண்கிறோம். ‘ஒன் மோர் டேக்!’ என்றபடி கீழே நிற்கும் டைரக்டர், ‘பிடியுங்க!’ என்று மேலே எறிகிறார் அந்தப் ‘பாறை’யை!

படத்தின் கதை? கனவுகளுடன் ஹாலிவுட் வந்து சேரும் ஜெர்ரிக்கு ஸ்டூடியோவில் எடுபிடி வேலைதான் கிடைக்கிறது. செட் பிராப்பர்டீஸ் அறையில் இருக்கும் ஒரு பொம்மையிடம், “எங்க ஊரில சின்னப் பையனா இருந்தப்ப ஹாலிவுட் எவ்வளவோ தூரத்தில இருக்குதேன்னு நினைச்சேன், இப்ப இங்க இருக்கிறப்பவும் அதே தூரத்திலதான் அது இருக்கு!” என்று பேசும் காட்சியில் உருக வைக்கிறார். “உனக்குப் பிடிச்சதை நீ நம்பறே!” என்றொரு பதில் வரும் அந்தப் பொம்மையிடமிருந்து. உண்மைதானே? நாமெல்லோரும் அப்படித்தானே இருக்கிறோம்? இப்படி இவர் படங்களில் மெஸேஜுக்கு பஞ்சமில்லை.

பெஸ்ட் காமெடியனான ஜெர்ரி லூயிஸ் பெஸ்ட் டைரக்டர் அவார்டை எட்டுமுறை வாங்கிவிட்டார் ஐரோப்பாவில். இவர் இயக்கும் படம் அதை யார் எழுதினாலும் இவர் படமாகவே இருக்கும், பாரதிராஜாவை மாதிரி. சினிமாவை ஒரு விஷுவல் மீடியம் என்று இவர் அளவுக்கு யாராவது புரிந்து வைத்திருக்கிறார்களா என்றால் சந்தேகம்தான். ‘The Total Filmmaker’ என்று ஒரு விமரிசகர் சொல்கிறார் இவரை.

மறுபக்கம் இவர் ஒரு கலைவாணர் எனலாம். ‘டெலிதான்’ என்பார்கள் அதை. டெலிவிஷனில் மாரத்தான் போல தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சி. 48 வருடமாக குறிப்பிட்ட தினத்தில் நடத்திவந்தார். தசைகள் செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் Muscular Dystropy Association -க்கு இரண்டு பில்லியன் டாலர் வரை சேர்த்திருக்கிறார். 1977 இல் இதற்காக நோபல் பரிசுக்கு இவரைப் பரிந்துரைத்தார் ஓர் அமெரிக்க காங்கிரஸ் மெம்பர்.

2008 -இல் மனித நேயத்துக்கான ஆஸ்கார் பரிசைப் பலத்த கரகோஷத்துக்கிடையே பெற்றார். மனம் உருகினார்: “யாருக்காச்சும் உதவறதுங்கிறது, ஏதாச்சும் செஞ்சு அதுக்கு அப்ளாஸ் வாங்கிக்கிறதுன்னு இதுவரை நான் நினைச்சதில்லே. இந்த அவார்ட் என் நெஞ்சைத் தொட்டுடுச்சு!”

நகைச்சுவையில் நலமாகும் டூர் நிகழ்ச்சிகளை ஐரோப்பா முழுக்க நடத்தியிருக்கிற இவரால் மறக்க முடியாதது ஜனாதிபதி கென்னடி, அவரின் நண்பரும்கூட, அளித்த பாராட்டுதான். “உலகத்தில் மூன்றே விஷயங்கள்தாம் நிஜம். கடவுள், மனிதனின் முட்டாள்தனம், சிரிப்பு. முதலிரண்டுக்கும் நம்மால் எதுவும் செய்ய முடியாது. எனவே, மூன்றாவதை நம்மால் எத்தனை முடியுமோ அத்தனை செய்யவேண்டும்.”

கான்சர், இருமுறை மாரடைப்பு, ஓபன் ஹார்ட் சர்ஜரி, ஓயாத முதுகுவலி என்று ஒரு புறம் சிரமித்தாலும் இடைவிடாமல் உதவிப் பணி நடத்தி பிரமிக்க வைத்தார்.

ரொம்ப ஆச்சரியப்படுகிற விஷயம் இன்றைய ஜாம்பவான்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்கும் ஜார்ஜ் லூகாஸும் இவரின் மாணவர்கள் என்பது. கலிஃபோர்னியா யூனிவர்சிடியில் சினிமாவைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக இருந்திருக்கிறார். அந்த லெக்சர்களின் தொகுப்பு புத்தகமாக வந்துவிட்டது.

“அனேக குழந்தைங்க எதைச் செய்து திட்டு வாங்குமோ அதைச் செய்து துட்டு வாங்கறேன் நான்!” என்பார் ஜெர்ரி. இவர் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது எல்லார் மனதிலும் எழும் உணர்வு அனேகமாக ஒன்றே. ‘சந்தோஷக் களிமண்ணில் வனையப் பட்டிருக்கும் இந்த உலகில் நாம் இத்தனை சீரியஸாக இருக்க வேண்டுமா? யோசித்துப் பார்த்தால் எல்லாமே ஒரு தமாஷ்தானே? வெறுப்புப் போர்வையை விட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுவோம். வாய்விட்டுச் சிரிப்போம்!’

‘ஒரு முறையே பயணிக்கிறேன் நான் இவ்வுலகில்.ஏதேனும் நன்மை என்னால் இயலுமானால், எவரிடமேனும் அன்பு நான் செலுத்த முடியுமானால் செய்யட்டும் நான் அதை உடனே. ஒதுங்கவோ ஒத்திப்போடவோ வேண்டாம். ஏனெனில் ஏகிடேன் இவ்வழியே நான் இன்னொரு முறை!’ இந்த வரியை தன் வாழ்க்கை வரியாக்கிக் கொண்டவர்.

சிரிப்புக்கும் சோகத்துக்கும் இடையே இடைவெளி இல்லை என்பது இவர் கட்சி. சிந்திக்க வேண்டிய விஷயம்.

நன்றி: கே.பி,ஜனார்த்தனன் முகநூல் பதிவு.