சாபம்!       ஒருபக்க கதை          

சாபம்!       ஒருபக்க கதை                     நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

கணவனை இழந்த விமலா, இருக்கும்  ஒரு ஏக்கர் நிலத்தில் வெண்டை, கத்தரி, தக்காளி என்று கொஞ்சம் கொஞ்சம் பயிரிட்டு இருந்தாள்.

        வெயிலில் செடிகள் வாடும்போது, பக்கத்துக் கழனிக்காரரிடம் கெஞ்சி, வாரம் இரண்டு நாள் நீர் பாய்ச்சினாள். இயற்கை உரங்களையே போட்டாள்.

           ‘காயெல்லாம் தளதளன்னு பசுமையாத்தான் இருக்கு… ஆனாலும் நல்ல விலைக்குப் போகலையே?’ – விமலா வருத்தப்பட்டாள்.  

           “ஏம்மா!காய்கறியெல்லாம் அருமையா இருக்கே! என் கடைக்கு மொத்தமா கொடுத்திடறியா?” – 

பக்கத்து ஊர் சூப்பர் மார்க்கெட் முதலாளியின் கேள்வியால் விமலாவுக்கு ஒரே மகிழ்ச்சி.  ‘இனி தெருத்தெருவா  சுத்த வேணாம். ஒரே இடத்தில் மொத்தமா வித்துடலாம்’ –  

“சரிங்க ஐயா! “ என்று ஒப்புக்கொண்டாள். 

           “நம்ம வேனை அனுப்பி வைக்கறேன்! ஏத்தி விட்டுடு. கடைக்கு வந்து பணத்தை வாங்கிக்க “ என்றபடி முதலாளி சென்றுவிட்டார்.

            மாலையில் அந்த சூப்பர் மார்க்கெட் போய்ப்  பார்த்த விமலாவுக்குப் பகீரென்றது. 

          “அண்ணே! தண்ணி தெளிச்சு வைச்சாலும் எப்படியும் வாடி  வதங்கிடும்! இங்கே எப்படிண்ணே எல்லா காயும் புத்தம் புதுசா இருக்கு?”

              “மருந்து தெளிச்சு,  பாலிஷ் போட்டு, பாலித்தீன் கவர்ல வைச்சிருக்கோமே! ஒரு வாரம் ஆனாலும் வதங்காது!”

            “ஐயோ! சாப்பிடறவங்களுக்குப்  பாதிப்பு வராதா?”

              “வரத்தான் செய்யும்! அதைப்பத்தி  நமக்கென்ன? நாளையிலிருந்து  வேன் வரதுக்குள்ளே சீக்கிரமா காயெல்லாம் பறிச்சு வைச்சிடும்மா”

          “இல்லேண்ணே! நான் என் புள்ளைங்க மாதிரி பாத்துப் பாத்து வளர்த்த காய்கறிங்க! இப்படி மருந்து தெளிச்சு, சாப்பிடறவங்க  வயெறெரிஞ்சு சாபம் விடலாமா? மொத்தமா விற்கலைன்னாலும்  பரவாயில்ல… நாளையிலிருந்து வேன் அனுப்பாதீங்க! “

              லாபத்தைப் பற்றிக் கவலைப்படாமல், சாபத்தைப் பற்றி கவலைப்படும் விமலாவை வியப்புடன் பார்த்தார், கடைச் சிப்பந்தி.         

      ———————————

முள்ளை முள்ளால்!

சீர்காழி. வி. வெங்கட். ஒரு பக்க கதை

நித்யா காய்கறி கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது எதிரே கவிதா தென்பட்டாள் வழக்கமான புன்முறுவலுடன்..

”பார்த்து ரொம்ப நாளாச்சி நல்லாயிருக்கியா..”

“உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லனும்னு இருந்தேன் அதை எப்படி சொல்றதுதான்னு தெரியலே, என்றாள் தயங்கியபடி..”

“பரவாயில்லே சொல்லு..”

” உன்னோட கணவர் ராகவன் நான் வர்ற வழியில இருக்கற ‘டாஸ்மாக்’ கடையில நின்னு மதுபாட்டில் வாங்கி அவரோட டூ வீலர் சைடு பாக்ஸ்ல வெச்சார் எனக்கு மனசு பக்குன்னுது குடிப்பழக்கம் இல்லாத மனுஷனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலையின்னு நித்யா…”

ராகவன் சோபாவில் அமர்ந்து செய்திச்சேனலை பார்த்துக் கொண்டிருந்தார் அமைதியாக..

”எதையும் வெளிக்காட்டாமல் கிச்சனில் இருக்கும் ஃபிரிட்ஜில் வாங்கி வந்த காய்கறிகளை அடுக்கினாள்.

சில நிமிடங்களில் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் மகன் விஷ்வா “அம்மா நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்..வர்றதுக்கு நைட் கொஞ்சம் லேட்டாகும்..” என்றான்.

இதைக்கேட்ட ராகவன் “ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுப்பா..” இதோ வந்துடறேன் எனக்கூறி விட்டு வாசலில் நின்றிருந்த டூவீலர் பாக்ஸை திறந்து ஒரு குவார்ட்டர்,சிகரெட் பாக்கெட்டை எடுத்து வந்து அவனிடம் நீட்டினார் அதிர்ந்தாள் மனைவி நித்யா.

“என்ன நித்யா பார்க்கறே,உம்பையன் அவனோட ஃபிரெண்ட் வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு பாருக்கு போயி தினமும் குடிக்கறது எனக்கு தெரியும்.. அதான் அதிகமா குடிச்சிட்டு டூவீலர்ல வந்து போலீஸ் இவனை பிடிச்சி டிரங்க் அன் டிரைவ் கேஸ்ல ஜெயில்ல போட்டு பேப்பர்ல நியூஸ் வந்து மானம்,மரியாதை காத்துல பறக்கறத நான் விரும்பலே, வீட்டு மொட்டைமாடியில போயி சாப்பிட்டுட்டு அமைதியா படுத்துட்டா ஆக்ஸிடெண்ட்,கேஸ்னு எந்த பிரச்சனையும் இருக்காது பாரு..அதான் என்னோட கெளரவத்தை விட்டு நானே கடையில போயி வாங்கிட்டு வந்தேன்” என்றார் உடைந்த குரலில் ராகவன்.

அவன் தலையை வாஞ்சையாக தடவி ஆறுதல் கூறிய ராகவனை தெய்வமாக பார்த்தாள் மனைவி நித்யா

சின்னத்தாய்!

சின்னத்தாய்!

 ஒருபக்க கதை:  கி.ரவிக்குமார்


வெளியே ஜோவென மழை பெய்து கொண்டிருந்தது.
இரவு மணி ஏழு! எட்டாம் வகுப்பு படிக்கும் வர்ஷிணி மும்முரமாக தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தாள்.

அம்மா விமலா இரவு சாப்பாட்டுக்கு தயார் செய்து கொண்டிருந்தாள். மூன்று வயது அஸ்வின், பொம்மை உலகில் ஆழ்ந்திருந்தான்.
திடீரென வாந்தி எடுக்கும் சத்தம். ஹாலுக்கு வந்து பார்த்தாள் விமலா. 
அஸ்வின், வாந்தி எடுத்திருந்தான். ஓடி வந்த வர்ஷிணி அவன் வாயில் விரல் விட்டு ஒரு பிளாஸ்டிக் மூடியை எடுத்தாள். எச்சிலில் ரத்தம் தோய்ந்து இருந்தது. பகீர் என்றது விமலாவுக்கு.

அஸ்வின் அழ ஆரம்பித்தான். வாயில் ரத்தம் வழிந்தது.

"கிளம்புமா! கிருத்திக் டாக்டர் கிட்டே போவோம்! இல்லைனா தம்பிக்கு தொண்டைப் புண் செப்டிக் ஆயிரும்!" என்றாள் வர்ஷிணி .
"அவ்வளவு பணம் இல்லம்மா! காலையில் தான் கேஸ் சிலிண்டர் வந்தது. விட்டா, அப்புறம் கிடைக்காதேன்னு இருக்கும் பணத்தில் வாங்கிட்டேன்.

அப்பா ஊரிலிருந்து நாளைக்கு தான் வருவார். அது தான் என்ன பண்றதுன்னு தெரியலை!" என்றாள் விமலா கையை பிசைந்த படி!

உடனே, வர்ஷிணி எழுந்து போய் ஒரு சின்ன துணி பர்ஸை எடுத்து வர, அதில் பத்து ஐம்பது நூறு என ரூபாய் தாள்கள் இருந்தன.
விமலாவின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்து வர்ஷிணியை பார்த்தன!
"நீ, அப்பா, தாத்தா, பாட்டி எல்லோரும், என் பிறந்த நாள், பண்டிகை நாள்னு கொடுக்கும் பணத்தை இதில் சேர்த்து வைத்தேன். இப்போ, 1550 ரூபாய் இருக்கும்மா! இதை வைச்சுக்கோ! நான் ஸ்கூல் ஆட்டோ அங்கிளுக்கு போன் செய்து வரச் சொல்றேன்!" என்று சொல்லி கொடுக்கவும், 

“என்ன பெத்த ஆத்தா!" என கட்டிப் பிடித்துக் கொண்டாள் விமலா!


அடுத்த வேளைச் சாப்பாடு

அடுத்த வேளைச் சாப்பாடு

ஒருபக்க கதை:                                                          பூபதி பெரியசாமி

காலை 9.00 மணி… படுடென்ஷனாய் இருந்தாள் கவிதா. காரணம், சமையல்காரி தனம் இன்னும் வேலைக்கு வந்தபாடில்லை. கோபமாய்ப் போனை எடுத்தாள். அப்போது, வேகமாய் ஓடிவந்த சமையல்காரி… “அம்மா மன்னிச்சிடுங்கம்மா. கொஞ்சம் லேட்டாயிடுச்சு…”

உடனே, சலிப்பாய்…“சரி… சரி போய் வேலையப்பாரு. நிறைய வேலை கிடக்கு…” என்றாள் கவிதா. 

சில நிமிடங்களில்… வழக்கமாய் கேட்பதுபோலவே, “அம்மா… அடுத்த வேளைக்கு என்ன சாப்பாடு செய்ய?” என்றாள் தனம். வகைவகையான அயிட்டங்கள் பலவற்றைச் சொல்லிவிட்டு, ஷாப்பிங் புறப்பட்டாள் கவிதா. தனத்தின் சமையல் கைவண்ணம், வீடு முழுக்க வாசம் வீசியது.

‘எப்படியும் வேலை முடிந்து போகும்போது, முதலாளியம்மா ஏதாவது கொடுப்பாங்க…’ என்ற ஆவலில் தன்னை மறந்து வேலையில் மூழ்கினாள் தனம். எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும், மீதமிருந்ததை எடுத்து பிரிட்ஜில் வைக்கச் சொன்னாள் கவிதா. 

‘அடுத்த வேளைக்கு என்ன சாப்பாடு செய்ய…?’ என்று முதலாளி அம்மாவிடம் ஆசையாய்க் கேட்ட வேலைக்காரி தனம்,  ‘அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போறேனோ தெரியல?…” என்ற கவலையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள்.

இருமல்

இருமல்

 ஒருபக்க கதை :   மலர்மதி

ஓவியம்: அ. செந்தில் குமார்

ள் அரவமற்ற சாலையில் அவள் தனியாக நடந்து சென்றுக் கொண்டிருந்தாள்.

சாலையோரம் அரட்டை அடித்துக்கொண்டிருந்த அந்த நால்வரின் காமப் பார்வையில் எக்குத்தப்பாய்ச் சிக்கினாள்.

“மச்சி… செம ஃபிகருடா!”

“என்ன சொல்றே?”

“வேறென்ன சொல்ல? வழக்கம்போல் விருந்துதான்!”

பைக்குகளை எடுத்துக்கொண்டு அவளை வட்டமடித்தனர்.

மிரண்டு போனாள்.

அவளை ‘அ

லேக்’காகத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த சவுக்குத் தோப்புக்குள் நுழைந்தனர்.

“தயவு செஞ்சு என்னை விட்ருங்க. ப்ளீஸ்… என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க…” – கெஞ்சினாள்.

அவர்களில் ஒருவன் அவளை நெருங்கினான்.

திடீரென்று –

வழக்கமாய் பயமோ, பீதியோ ஏற்படும்போது உண்டாகும் தொடர் இருமல் உண்டாயிற்று அவளுக்கு.

“லொக்கு… லொக்கு… லொக்கு…” – அடக்கமுடியாமல் தொடர்ந்து இருமினாள்.

“டேய்… இவளுக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருக்குடா…” என்று ஒருவன் கத்த, அவர்கள் மின்னல் வேகத்தில் மறைந்து போனார்கள்.

நிம்மதியுடன் எழுந்து வேகமாய் நடக்க ஆரம்பித்தாள் அவள்.

ஆப்ஷன்

ஆப்ஷன்   

கடலூர் சார்லி.

டிவியில் நேரடி ஒளிபரப்பு. காம்பியர் மேனகா,

ஜோதியைக் கேட்டாள். “மேடம், சொல்லுங்க. நீங்களும் உங்க பொண்ணும் ரொம்ப க்ளோசா !”

“ஆமாம் “

” அவங்க பர்சனல் எல்லாம் கூட உங்களுக்கு தெரியுமா?”

“நிச்சயமா “

ஏன்னா, போட்டியே அதைப் பத்தி தான்.

அப்புறம். போட்டியின் விதி முறைகளை

திரும்பவும் நினைவு படுத்தறேன். உங்ககிட்ட இப்ப கேக்கப்போற அத்தனை கேள்விகளையும் உங்க பொண்ணு வித்யா கிட்ட ஏற்கனவேபெர்சனலா கேட்டு

ரெக்கார்ட் பண்ணி வெச்சிருக்கோம். உங்க விடை தப்பா இருந்தா, உங்க பொண்ணு சொன்ன சரியான

பதிலை உங்களுக்கு சொல்லி உங்க பொண்ணை

காட்டிக்கொடுக்க மாட்டோம். உங்க விடையும் பொண்ணு

விடையும் மேட்ச் ஆனால் தான் நீங்க ரெண்டு பேரும்

க்ளோஸ்னு அர்த்தம். உங்களுக்கு ஒரு லட்சம்

பரிசு. ஓகே வா.”

“ஓகே “

” சரி. உங்களுக்கான முதல் கேள்வி. உங்கள் மகள்

வித்யா யாரை லவ் பண்றா? ஆப்ஷன் A:ஸ்ரீதர்

ஆப்ஷன் B:மகேஷ். ஆப்ஷன் C:சிவா ஆப்ஷன் D:

யாரும் இல்லை.

“ஆப்ஷன் A.ஸ்ரீதர். “

“மிகச் சரியான விடை. வாழ்த்துக்கள். ம்.. ஓகே.

உங்களுக்கான அடுத்த கேள்வி… வித்யா யார் கூட சமீபத்துல டேட்டிங் போனா?

ஆப்ஷன் A:ஸ்ரீதர். B:மகேஷ் C:சிவா

D:புது ஃபிரண்டு ரூபன். “

இதற்கு ஜோதி பதில் சொன்னாள், “ஆப்ஷன் D.ரூபன் “

” ஆர் யூ ஷ்யூர்? “

“எஸ் “

” ஜோதி மேடம்,உங்க பொண்ணு வித்யாவின் பதிலோட உங்க பதில் மேட்ச் ஆகுதான்னு இப்ப போர்டை பார்க்கலாமா?

காம்பியர், போர்டில் விடையை சரி பார்க்க,

போர்டு, ” ரூபன் “சரியான விடை என்று காட்டியது. “கரெக்ட் ஆன்சஅஅஅர் ” என்று கத்திய காம்பியர்,

அந்தக் கடைசி கேள்வியைக் கேட்டாள்.

“வித்யாவோட குடும்ப வாழ்க்கை எப்படி அமையும்?

ஆப்ஷன் A:ஸ்ரீதரோட ஓடிப்போய்.

ஆப்ஷன் B: ரிஜிஸ்டர் மேரேஜ்.

ஆப்ஷன் C:அப்பா அம்மா பார்க்கிற மாப்பிள்ளையோட திருமணம்.

ஆப்ஷன் D:மேலே சொன்ன எதுவும் இல்லை.

இதற்கு ஜோதி பதில் சொன்னாள், “ஆப்ஷன் டி தான் சரி.

என் பொண்ணு வித்யா யாரையும் கல்யாணம்

பண்ணிக்க மாட்டா. எதிர் காலத்துல ஒரு அமெரிக்க

பையனுடன், ” லிவிங் டு கெதர் ” பிளான்ல

இருக்கா. “ஜோதி இவ்வாறு பதில் சொன்னதும்,

“வாவ் “மிகச் சரியான விடை “என்று கத்திய

காம்பியர், “ஒரு லட்சத்துக்கான காசோலை

உங்களுக்கு ” என்று அறிவித்தாள். காசோலையுடன்

ஜோதி வீட்டுக்கு ஆட்டோவில் சென்று இறங்கியபோது வாசலிலேயே இருந்த வித்யா காச் மூச்

என்று கத்தினாள். என்னைப் பத்தி மீடியாமூலமா

என் பாய் பிரண்ட்ஸ் எல்லாருக்கும்

போட்டுக்குடுத்து டீவில ஒரு லட்சம் வாங்கிட்ட இல்லே.

அதே டீவில அடுத்தப் போட்டி “அப்பா… மகள் “

நீ அப்பாவை எப்படி வளைச்சுப் போட்டே, எப்படி கார்னர்

பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேங்கறதை எல்லாம்

கழுவி கழுவி ஊத்தி ரெண்டு லட்சம் பரிசோட வரேன்.

“ஏய்…. ஏய்… நில்லுடி “என்ற அம்மாவைப்

பொருட்படுத்தாமல் வித்யா, அதே ஆட்டோவில் ஏறி

விரைந்தாள்.

உதவி

உதவி                       தனுஜா ஜெயராமன்.

வாச கதவை திறந்ததும் எதிரே நின்றிருந்தாள் லஷ்மி…

ஏன் லஷ்மி ..காலையிலேயே வரேன்னுட்டு சொல்லாம கொள்ளாம நின்னுட்டயே..சிங்க் நிறைய பாத்திரம் குமிஞ்சு கெடக்கு… துணிவேற மிஷின்ல கெடக்கு …என்று கோபித்தாள் சித்ரா

சாரிம்மா…”எங்க சங்கத்துல இந்த கௌதம் பயலுக்கு கல்வி உதவி தொகை தர்றேன்னு சொல்லியிருந்தாங்க” …அதான் காலையிலே போயிட்டு, இப்ப தான் வரேன்….

“வாங்கிட்டயா லஷ்மி”

“ஒரு ஆயிரம் ரூபா குடுத்தாங்க”..அதுக்கே நாலுமணி நேரம் வெயில்ல உக்காந்துட்டு வாங்கினு வரேன்..

” ஏன், என்னாச்சி”

“அது எங்க சாதி ஆளுங்க வெச்சிருக்கிற சங்கம்..மா”…நல்லா படிக்கிற எங்க சாதி பசங்களுக்கு உதவி தொகை தரோம்னு கூப்டாக…ஆனா இம்மா நேரம் மீட்டிங் போட்டு சாதி சாதின்னு பேசி அறுத்து தள்ளிட்டு தான் அந்த காசையே தந்தானுங்க ..

“அதுக்கு ஏன் லஷ்மி இவ்ளோ கோவம் …”

அடபோங்கம்மா…எங்க ஆளுங்கல்லாம் நல்லா வசதியாத்தான் இருக்காங்க…நான் வீட்டு வேலை செஞ்சி வவுத்தை கழுவுறேன்… சாதியா வந்து சோறுபோடுது….என் கஷ்டத்துல தான் நான் குப்பைய கொட்றேன்… என்று சிங்கிலிருந்த பாத்திரங்களை தொலக்க ஆரம்பித்தாள்..

“ஆமாம் லஷ்மி…. கேக்கறேன்னு தப்பா நினைக்காதே…நீ…நீ ..என்ன ஜாதி…”

ம்…ம் “ஏழை ஜாதி” …என்றாள் தூண்டை உதறி தோளில் போட்டபடி….

அடையாளம்

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

கோடம்பாக்கம் அருகே ஒர் சுமாரான ணவகத்தில்  சாலையை பார்த்தவாறு இருக்கும் மேஜையில் அமர்ந்து சர்வர் கொண்டுவந்து கொடுத்த மசால்தோசையை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவர் தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தார். கல்லாவில் அமர்ந்தவரிடம் குரல் கொடுத்தார். அவரோ காசை வாங்கிப்போடுவதில் குறியாக இருந்தார் இவரை வனிக்கவில்லை.

அடுத்து அவர் டேபிள் கிளீன் செய்யும் ஒரு பையனிடம் குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா? என்று கேட்டார். அவனோ உள்ளே கை காட்டினான்  அவர் மெதுவாக உள்ளே வந்து என்மேஜை மீதிருந்த  தண்ணீர் ஜக்கை எடுத்து கிளாசில் ஊற்றினார்.

 சாப்பிட்டுக்கொண்டிருந்த நான் “சார்.. நீ.. நீங்க ஆக்டர் காமேஷ்தானே..! என்றேன்.

  உஷ்! என்றுவாய்மீது விரல் வைத்து சைகைசெய்தவர், எதிரே அமர்ந்தார். பரவாயில்லையே என்னை இன்னும் ஞாபகம் வைச்சிருக்கீங்களே?

உங்களை மறக்க முடியுமா? 80களில் கொடிகட்டிப்பறந்த காமெடி கிங்காச்சே நீங்க?அதெல்லாம் ஒரு காலம்! இப்ப ஒரு வேளை சாப்பாட்டுக்கும் வழி கிடையாது!

நீங்க மறுக்கலைன்னா  நான் ஒரு தோசை ஆர்டர் செய்யட்டுமா உங்களுக்கு? மனம் அதை வெறுத்தாலும் பசி அவரை வென்றது. சரி என்றார்.

சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருந்தேன்! சார் உங்களோடு ஒரு செல்ஃபி..?தாராளமா? என்றவர் ஆனா ஒரு ரிக்வெஸ்ட்!

என்ன சார்?

தயவு செஞ்சு பேஸ்புக்லேயும் டிவிட்டர்லயோ போட்டு என்னை அசிங்கப்படுத்திடாதீங்க!   காமேஷ்னா ஒரு இமேஜ் மக்கள் கிட்டே இருக்கு! அது ஒரு அடையாளம்! அந்த அடையாளத்தை உங்க போட்டோ உடைச்சிடக் கூடாது! இந்த போட்டோ உங்களோடேயே இருக்கட்டும்!

அடையாளத்தை இழந்த அவரின் அடையாளத்தை கலைக்க விரும்பாமல் மவுனமாய் கிளம்பினேன்.

கவர்ச்சிக்கு மரியாதை!

கவர்ச்சிக்கு மரியாதை!  

       நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

கண்ணன் தன் மனைவி கோதையுடன் பக்கத்து டவுனுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தான். வீட்டுத்தேவைக்காக சில அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என்று கோதை நச்சரித்தமையால் அவளையும் அழைத்துக்கொண்டு சென்றான்.

  அழகான கிராமத்து சாலையின் ஓரத்தில்  . ஒரு முலாம்பழத்தோட்டத்தில் பழங்களை பறித்து சாலையோரம் குவித்து வைத்திருந்தார்கள். அங்கே சிறியதும் பெரியதுமாய் அடுக்கியிருந்த பழங்களைப் பார்த்ததும், என்னங்க! முலாம் பழம் தோட்டத்துலே பழுத்தது விக்கிறாங்க! வெயிலுக்கு ஜுஸ் போட்டு குடிச்சா உடம்புக்கு நல்லது. ஒண்ணு வாங்கிகிட்டு போலாங்க! என்றாள் கோதை.

  வண்டியை நிறுத்திவிட்டு பழங்களில் ஒரு பெரிய பழத்தை பொறுக்கி எடுத்து எவ்வளவுப்பா? என்றாள். அறுபது ரூபா கொடும்மா!

   ”என்னது இந்த பழம் அறுபது ரூபாயா? நாற்பது ரூபாய்க்கு கொடு!”

 “கட்டுப்படியாகாதும்மா!  அஞ்சு ரூபா கொறைச்சு கொடுங்க!”

   “நாற்பதுன்னா கொடு! இல்லேன்னா வேணாம்!”

  ” வராதும்மா!”

  ” கொட்டிக்கிடக்குது பழம்! குறைச்சு கொடுக்க அவனுக்கு மனசே வர மாட்டேங்குது வண்டியை எடுங்க போகலாம்!”

டவுனுக்கு சென்று வாங்க வேண்டிய பொருட்களை வாங்கி முடித்ததும் அந்த குளிரூட்டப்பட பழ அங்காடிக்கு சென்றனர்.

  ”இதோ இருக்கு முலாம் பழம்! அதை எடுங்க!

 அங்காடியில் இருந்தவர் எடுத்தார் எடை போட்டார். 6கிலோ வருதுங்க! கிலோ இருபது ரூபா 120 ரூபா வரும்…”

பில் போடுங்க! என்று பேசாமல் பணத்தை எண்ணிக் கொடுத்த மனைவியை ஒன்றும் செய்ய முடியாமல் கவர்ச்சிக்குத்தான் இந்த காலத்தில் மரியாதை என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டான் கண்ணன்.

எதிர்வினை!

    ஒருபக்க கதை!   .  சுரேஷ்ஸ்வாமி

“என்னங்க! நான் எங்க அம்மாவீட்டுக்கு போய் ஒருவாரம் இருந்துட்டு வரட்டுமா? போய் ஆறுமாசம் ஆகுது!” தேவி கேட்கவும்

  ”ஒருவாரமா? அதெல்லாம் வேண்டாம்! போனமா வந்தமான்னு காலையிலே போயிட்டு சாயந்திரம் கிளம்பிடலாம்! நானும் வரேன்!” என்றான் நந்தன்.

  ”ஏங்க பொண்ணுங்களுக்கு எவ்வளவு வயசானாலும் தாய்வீடுங்கிறது சொர்கம் மாதிரிங்க!நீங்க ஏன் அனுப்பவே மாட்டேங்கீறீங்க? அனுப்பினாலும் உடனே வந்துடனும்னு சொல்றீங்களே? உங்க அக்கா தங்கச்சியெல்லாம் இங்கே வந்து தங்கிட்டு போகலையா?”

    “அதனாலேதான் வேணாம்கிறேன்!”

 “என்னங்க சொல்றீங்க?” எங்க அக்கா தங்கச்சி வந்தா நீ என்ன சொல்றே?  வந்துட்டாளுங்க! குடும்பத்து சொத்தை அள்ளி எடுத்துட்டு போக! கல்யாணம் கட்டிகிட்டு போகும்போதே எடுத்துகிட்டு போனது பத்தலைன்னு அப்பப்ப வந்து மூட்டைக்கட்டிகிட்டு போறாங்க!” புருஷணுக்கும் பொண்டாட்டிக்கும் கோள்மூட்டி சண்டை மூட்டி விடறாளுங்க!” இப்படியெல்லாம் நீ புலம்பறே இல்லை?”

    ”ஆமாம்! அதிலென்ன தப்பு?”  “தப்பே இல்லைதான்!”  நீ இங்கே என் அக்கா தங்கச்சிகளை சொல்ற மாதிரி  அங்கே உன் அண்ணி உன்னை பத்தி அவ புருஷன் கிட்டே புலம்பலாம் இல்லையா? அது உனக்கு மட்டுமா  அசிங்கம்! கட்டின எனக்கும்தானே அசிங்கம்.! அதான் போக வேணாங்கிறேன்! போனாலும் உடனே திரும்பிடனுங்கிறேன்!” என்று நந்தன் சொல்ல, தன்வினையே தனக்கு எதிர்வினையாகி நிற்பதை கண்டு  பதில் பேச முடியாமல் நின்றாள் தேவி.