ஒரு பிலிப்பைன்ஸ் விவசாயி.!

ஒரு பிலிப்பைன்ஸ் விவசாயி.!

  டேனியப்பா

@minimeens

என்னவோ சத்தம் என்றுதான் வெளியே எட்டிப் பார்த்தேன்.
 

அலுவலக டாய்லெட் வாசலில் அந்த முரட்டு நைஜீரிய என்ஜினியர் அங்கே பாவமாய் நின்றுகொண்டிருந்த நேபாளித் தொழிலாளிகள் இருவரையும் பயங்கரக் கோபத்துடன் அடிக்கப் பாய்ந்து கொண்டிருந்தான்.
ஓடிப்போய் அவனைத்
 

தடுத்தால்… காலையிலிருந்து டாய்லெட் அடைத்திருப்பதை சரிசெய்யாமல், அவசரத்திற்கு உள்ளே போகவிடாமல் அந்த நேபாளிகள் தடுப்பதாய் அந்த நைஜீரியன் கோபமாய்த் தெரிவிக்க, முக்கியமான இடத்தில் அடைத்திருப்பதால் தண்ணீர் போக மாட்டேன் என்கிறது, இன்ஸ்பெக்‌ஷன் சேம்பர் வழியாக எவ்வளவு குத்தியும்
 

அடைத்திருப்பது போகாததால், அதை சரி செய்யும் வரை டாய்லெட்டை உபயோகிக்க முடியாது என்று தடுத்ததாய் இவர்கள் ஹிந்தியில் சொன்னார்கள்.
 

பாவம்… இந்த நேபாளிகள். வேலை தெரியாத ஹெல்ப்பர் ஆட்கள். ப்ளம்பர் விடுமுறை என்பதால் சமாளிக்கலாம் என்று வந்தவர்கள், இப்போது என்ன செய்வதென்று தெரியாமல்
 

அட்மின் சூப்பர்வைசர் ஜெய்மர் வரக் காத்திருப்பதாய்ச் சொல்லிவிட்டு அவனுக்கு ஃபோன் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஜெய்மர் பெயரைக் கேட்டதுமே எனக்கு இந்தப் பிரச்னை இன்னும் பெரியதாகப் போகிறது என்று தெரிந்துவிட்டது.
 

ஜெய்மர் என்கிற இந்த ஜெய்மர் க்யூனிசலா ஒரு பிலிப்பைனி. நல்ல சிவப்பு.
 

 நாகரிகம். எல்லாவற்றிலும் அழுக்குப்படாத உயர்தரம் விரும்பும் ஒரு ஆள். ஐஃபோனும் ஆடி காருமாய் வாழும் அவன், கொஞ்சம் தலைக்கனம் பார்ட்டி. அவ்வளவு சுலபத்தில் யாரிடமும் பேசமாட்டான். சுத்தம் சுத்தம் என்று எந்நேரமும் சுத்தம் பற்றியே பேசுபவன் என்பதால் அவனை அவன் சுத்தமாய் வைத்துக் கொள்வது
 

போலவே அலுவலகத்தையும் சுத்தமாய் வைத்துக் கொள்வதில் கெட்டிக்காரன். அதனால்தான் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் வாழும் கம்பெனியில் தாக்குப் பிடிக்கிறான் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.
 

அந்த நேபாளிகள் அவனுக்கு ஃபோன் செய்து கொண்டிருக்கும்போது அவர்கள் குத்திக் கொண்டிருந்த
 

சேம்பரை எட்டிப் பார்த்தேன். மனிதக் கழிவுகளும் வண்டலுமாய் கலங்கி நுரைத்து நாறிக் கொண்டிருந்தது. பார்த்த உடனேயே வயிற்றைப் பிரட்ட சட்டென்று அங்கிருந்து நகர்ந்து நின்றுகொண்டேன். சற்று முன்னே மண்ணைத் தோண்டி பைப்பை உடைத்து, குத்திவிட்டு திரும்ப பைப்பை சரிசெய்து மாட்டி விட்டால்
 

அடைப்பு போய்விடும். ஆனால் அதற்குக் கண்டிப்பாய் ஒரு மணிநேரமாவது ஆகும்.
 

என்ன செய்யப் போகிறானோ என்று யோசித்துக் கொண்டிருக்கையில் வந்துவிட்டான் ஜெய்மர். அந்த நேபாளிகளிடம் என்ன என்று கேட்டுக் கொண்டே அவன் அடைப்பு இருந்த இடத்தை நோக்கி நகர, அதற்குள் சேர்ந்திருந்த இன்னும் சில
 

என்ஜினியர்கள் ’புவர் மெயிண்டெனன்ஸ்’ என்று கத்த ஆரம்பிக்க, நான் அவர்களிடம் ’சற்று பொறுங்கள்’ என்று சமாதானம் செய்துகொண்டிருக்கும் போதுதான்… யாரும் எதிர்பாராமல் ஜெய்மர் அந்தக் காரியத்தைச் செய்தான்.
 

இன்ஸ்பெக்‌ஷன் சேம்பர் அருகே முட்டியை மடக்கி உட்கார்ந்தவன்,
 

சட்டென்று சட்டைக் கையை ஏற்றிக் கொண்டு, அந்த சாக்கடைக்குள் கையைவிட்டு, அதற்குள் அடைத்திருந்த சாப்பாட்டுக் கவரை ஒரு இழுப்பில் இழுக்க… மறுவிநாடி எல்லா பிரச்னையும் முடிந்தேவிட்டது.
 

எட்டிப் பார்க்கவே குமட்டும் அந்த சாக்கடைக்குள் எப்படிக் கையை விட்டான்.? அதுவும் அவ்வளவு சுத்தம்
 

பார்க்கும் இவனா அதைச் செய்தான்… என்ற அதிர்ச்சியில் எல்லோரும் உறைந்திருக்க, ஒன்றுமே நடக்காதது போல, ”அவ்ளோதான். இப்ப நீங்க டாய்லெட்டை உபயோகிக்கலாம்.!” என்று எங்களைப் பார்த்து சிரித்தபடியே கைகளைக் கழுவ டாய்லெட்டுக்குள் சென்றான்.
 

’எப்படி அப்படிச் செய்ய முடிந்தது?’ என்று பிறகு
 

நேரில் பார்த்த போது கேட்டேன். அதற்கு நேரடியாய் பதில் சொல்லாமல் சிரித்தபடி என்னைக் கேட்டான்.
 

“உங்களுக்கு விநோபா பாவே-வைத் தெரியுமா.?”
 

எனக்கு இன்னும் ஆச்சர்யமாகி அவனிடம் கேட்டேன்.
“ஆமாம்.. எங்கள் நாட்டு சுதந்திரப் போராட்ட தியாகி. அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.?”
அவன்
 

சிரித்தபடி சொன்னான், “அவர்தான் மக்சேசே விருது வாங்கிய முதல் இந்தியர்.!”
அது என்ன விருது, அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தமாய் இருக்கும்… என்ற குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்த என்னிடம் அவன் தொடர்ந்து சொன்னான்.
 

“ரமொன் மக்சேசே எங்கள் நாட்டுத் தலைவர். இன்னும் சொல்லப் போனால்
 

உங்களுக்கு காந்திபோல எங்களுக்கு அவர் தேசப்பிதா என்றே சொல்லலாம். மக்கள் எவ்வழி மகேசன் அவ்வழி என்பார்கள் தெரியுமா… அதுபோலவே தலைவர்களை வைத்தே அந்த நாட்டு மக்கள் குணத்தை ஓரளவு அறியமுடியும். பாருங்கள் அத்தனைபேர் இருந்த இடத்தில் நீங்கள் மட்டும்தான் நிலைமையைச் சமாதானமாக்க முயன்று
 

கொண்டிருந்தீர்கள். நான் நிலைமையைச் சீர் செய்ய முயன்று கொண்டிருந்தேன். ஏனென்றால் நம் முன்னோர்கள் அப்படி.!” என்று சிரித்துக் கொண்டே போய்விட்டான்.

இது என்ன புதிதாய் இருக்கிறதே என்று சற்றே ஆர்வம் அதிகமாகி முதன்முதலாய் விநோபா பாவே யார் என்றும் ரமொன் மக்சேசே யார் என்றும் தேடிப்
 

படிக்க ஆரம்பித்தேன்..
 

”மக்சேசே நாலு வருசம் கூட முழுதுமாய் பிலிப்பைன்ஸ் பிரசிடெண்டாய் இருக்கவில்லை. ஆனால், அவர் நாட்டுக்குச் செய்த அளவு நல்லதை வேறு யாருமே அவர்களுக்குச் செய்ததில்லை என்கிறது வரலாறு. அவர் ஒரு ஆட்டோ மெக்கானிக். மிலிட்டரியில் வேலை செய்தவர். கொரில்லா படை ஒன்றை
 

இரண்டாம் உலகப் போரில் வழிநடத்தியவர்.. ஆனால் அவரை அப்போதை விட, பதவிக்கு வந்தபிறகுதான் பிலிப்பைன்ஸ் தெரிந்து கொண்டது. நமது விநோபா கூட அப்படித்தான். சுதந்திரப் போராட்டத்தின் போது அவரைப் பற்றித் தெரிந்து கொண்டதைவிட சுதந்திரத்திற்குப் பிறகுதான் இந்தியா அதிகம் தெரிந்து கொண்டதாய்
 

சொல்கிறது நம் வரலாறு.
 

மக்சேசே ஆண்ட நாட்கள் பிலிப்பைன்ஸின் பொற்காலம் என்றே சொல்லலாம். மிக எளிமையானவர். தான் மிகப் பெரிய பதவியில் இருந்த போதும் சாதாரணர் ஒருவர் இறந்தபோது அவருடைய உடலைச் சுமந்து போனவர் மக்சேசே. அப்படிப்பட்ட மக்சேசே ஆட்சியில்தான் வியாபாரம், தொழில், விளையாட்டு
 

எல்லாத்துலயும் புது ரத்தம் பாய்ந்து பிலிப்பைன்ஸ் முன்னேற ஆரம்பித்தது. பேஸ்கட் பால், பாக்சிங் என விளையாட்டில், அறிவியல் கண்டுபிடிப்புகளில் அவர்கள் பங்களிப்பு மிகப் பெரியது. இப்படி ராணுவம், ஆட்டோமொபைல் என்று மக்சேசே வளர்ந்திருந்தாலும் மக்கள் வளமா இருக்கச் சரியான தொழில் என்று
 

அவர் தேர்ந்தெடுத்தது விவசாயத்தைத்தான். அவருடைய ஆட்சியில்தான் நிலச்சீரமைப்பு சட்டம் மூலமாக நிறைய நிலத்தை ஏழை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து, பல நீர் வழிகள் சரிசெய்யப்பட்டு விவசாயத்தை பெருக்கி இருக்கிறார் மக்சேசே.
அதேபோல, சுதந்திரத்துக்குப் பிறகு காந்தியக் கொள்கைகளை மறந்து
 

அறிவியல் ஆயுதம் என்று இந்தியா தனது பார்வையைத் திருப்பிய போது, விநோபாவே கிராமம்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொன்ன காந்தியின் வார்த்தைகளைப் பற்றிக் கொண்டு இந்தியா முழுவதும் பயணம் செய்து நிலம் உள்ளவர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 44லட்சம் ஏக்கர் நிலங்களைத் தானமாய்ப் பெற்று,
 

ஏழை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து விவசாயத்தை பெருக்கும் பூமிதான இயக்கத்தை வழிநடத்தி இருக்கிறார். கிராமக் கைத்தொழிலைப் பெருக்க சர்வோதயா சங்கத்தை துவங்கி இருக்கிறார். தன்னை விட மிகச் சிறந்த காந்தியவாதி விநோபா பாவே தான் என்று காந்தியே சொல்லி இருக்கிறாராம்.
 

‘என்னுடைய எல்லா
 

முயற்சியும் இதயங்களை ஒன்றிணைப்பதுதான்’ என்று பயணம் கிளம்பிய விநோபா ஏறக்குறைய இந்தியா முழுவதும் பயணித்திருக்கிறார். கிட்டத்தட்ட மக்சேசே வாழ்க்கையும் அப்படிப் பட்டதுதான்.
 

பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி ஆகி நான்கு வருடங்களுக்குள்ளேயே ஒரு விமான விபத்தில் அவர் இறந்துவிட்டார். ஆனாலும்
 

       தேன்சிட்டு      இணையதளம். https://thenchittu.com/

இன்றும் மக்கள் அவரை நன்றியுடன் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் நினைவாக ஆசியாவின் நோபல் என்று சொல்லப்படும் மக்சேசே விருதுகள் பலதுறைகளில் மாற்றங்களை கொண்டு வருபவர்களுக்கு கொடுக்க முடிவு செய்த கொடுக்க ஆரம்பித்தபோது முதல் முறையாய் வாங்கியவர்களில் பிலிப்பைன்ஸ் தாண்டி

வெளிநாட்டிலிருந்து இந்த விருதை வாங்கிய முதல் நபர் விநோபா பாவே மட்டும்தான். அப்படித்தான் விநோபாவா பற்றி ஜெய்மருக்குத் தெரிந்திருக்கிறது.
 

மக்சேசே மற்றும் விநோபா இருவருமே அறிவியலுக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் மக்கள் சுயமாய் நிற்க வளர்ச்சியை விட விவசாயம் தான் உதவும்னு
 

அவர்கள் நம்பியிருக்கிறார்கள். அதை அவர்கள் வாழ்நாளில் செய்தும் காட்டியிருக்கிறார்கள்.
 

இதையெல்லாம் நான் அவனிடம் சொன்னபோது, ஜெய்மர் சிரித்தபடி தானும் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் தான் என்று சொன்னான். நானும் தான் என்று சொன்னதும் கேட்டான்.
 

”ஆக, நம் முன்னோர்கள் எல்லாம்
 

நாம் பெருமைப்படும்படித்தான் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், நாம் அவர்கள் பெருமைப்படும்படி வாழ்கிறோமா என்றால்… வாழவில்லைதானே.? காந்தி, விநோபா, மக்சேசே போன்றவர்கள் நம்பிக்கையத் தோற்கடித்து விட்டுத்தானே நாம் இங்கே வந்து நிற்கிறோம். விவசாயக் குடும்பங்களில் பிறந்து, வளர்ந்து,
 

படித்து முன்னேறிவிட்டோம் என்று நினைத்து விவசாயத்தைப் பற்றியே தெரியாமல் அழித்த முதல் பரம்பரை நம்முடையதுதான்… இல்லையா நண்பா.?” என்று நிஜமான வருத்தத்துடன் கேட்டான்.
 

எனக்குத்தான் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.!
 

உலகின் முதல் நவீன அறுவை சிகிச்சை மருத்துவர்

உலகின் முதல் நவீன அறுவை சிகிச்சை மருத்துவர்

               காசங்காடு. வீ. காசிநாதன்.

உலகின் முதல் நவீன அறுவை சிகிச்சை மருத்துவர் (Surgeon) யார் ?

இந்த கேள்வியை மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களிடம் கேட்டால் பதில் எப்படி இருக்கும் ?

அவர் ஏதேனும் ஒரு மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி நாடுகளை சார்ந்த ஒரு கிறித்துவர் குறிப்பாக ஒரு பாதிரியாராக இருக்கலாம் என ஒரு பெயரை குறிப்பிடலாம். பொது மக்களின் எண்ணமும் அவ்வாறாகத்தான் இருக்கும். ஏனெனில் கிறித்தவ பெரு மக்கள் மருத்துவ துறைக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பு அப்படியானது.

இந்த பதில் பாதி உண்மையானதே. ஏனெனில் அவர் மேற்கத்திய நாடான ஸ்பெயினை சார்ந்தவர் ஆனால் கிறித்தவர் அல்ல. பாதிரியாரும் அல்ல.

அவர் பெயர் அல் ஜஹ்ராவி ( Al Zahrawi) முழுப் பெயர் அபுல் காசிம் அல் ஜஹ்ராவி. லத்தீன் பெயர் Albucasis. (பிறப்பு 936- இறப்பு 1013). இவர் நவீன அறுவை சிகிச்சையின் தந்தை என அறியப்படுகிறார். அன்றைய முஸ்லிம் ஸ்பெயினில் கார்டோபா நகரில் பிறந்தவர். இந்தியாவை போன்றே ஸ்பெயின் சுமார் 700 ஆண்டுகாலம் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்தான் முதன்முதலில் நவீன அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டவர். தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த ஒரு அடிமைப் பெண்ணை அறுவை சிகிச்சை செய்து பிழைக்க வைத்தார். இது அக்காலத்தில் மிகப் பெரும் சாதனையாக கருதப்பட்டது. தனது மருத்துவ ஆராய்ச்சிகளை முப்பது தொகுதிகளில் (30 Volumes) கிதாப் அல் தஷ்ரீப் (Kitab Al Tasreef) (The Method of Medicine) என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். இதை எழுத ஐம்பது ஆண்டு காலம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

கி.பி.1000 ல் வெளியான இந்த நூலில் உடற்கூறு(Anatomy) மருத்துவம்(Medicine),மருத்துவ சிகிச்சை முறைகள்(Medical Treatment), அறுவை சிகிச்சை முறைகள்(Surgery), பல் மருத்துவம்( Dentistry) மற்றும் அறுவை சிகிச்சை கருவிகளின் பயன்பாடுகள் (Usage of Surgical Tools) குறித்து எழுதியுள்ளார். சுமார் 200 அறுவை சிகிச்சை கருவிகள் குறித்து படத்தோடு விளக்கியிருக்கிறார். அதில் சில கருவிகள் அவரே உருவாக்கியவை.

அவரது நூல் Gerard of Cremona என்பவரால் லத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டது. சுமார் 500 ஆண்டு காலம் இது பாடமாக கற்பிக்கப் பட்டு வந்தது. இப்னு சினாவின் The Canon of Medicine ஐ போன்றே சிறந்த புத்தகமாக மருத்துவ உலகில் கருதப்படுகிறது.

British Medical journal கூற்றுப்படி இங்கிலாந்தில் முதல் மருத்துவ நூல் எழுதப்பட்டது கி.பி.1250 ம் ஆண்டில் ஆகும். அந்த புத்தகத்திலும் அல் ஜஹ்ராவியின் கிதாபுல் தஸரீப் குறித்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மருத்துவ அறிஞர்களின் மருத்துவ ஆராய்ச்சி நூல்களே ஐரோப்பாவின் மருத்துவ துறை மேம்படையவும்,புதிய மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும் தூண்டு கோலாக இருந்தது. அரபு இஸ்லாமிய மருத்துவர்களின் ஆராய்சிக்கு இந்திய,சீன பழம் மருத்துவ முறைகள் பயன்பட்டுள்ளது என்பது நமது பெருமைக்குரியது. இது குறித்து பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் வெளி வந்துள்ளன.

கொரானா அடுத்தது என்ன?

    கொரானா!   

                      அடுத்தது என்ன?

#corona_Antigen_test            டாக்டர் சில்வியா ப்ளாத்.

இன்னைக்கு நிறைய பேர் கிட்ட இருக்குற கேள்வி இது தான். கொரானா இன்று அனைத்து மாவட்டங்களிலும் பாசிடிவ் என்று தகவல்கள் வந்துள்ளன.
மதுரை மற்றும் நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கேள்விக்கு பதிலாகத் தோன்றியது தான் இந்தக் கட்டுரையில் கொடுத்து உள்ளேன்.

சென்ற வாரம் ICMR ஆராய்ச்சி ஒன்று செய்தி சேனல்களில் அடிபட்டு அந்த செய்தி திரும்ப நாங்கள் அப்படி சொல்ல வில்லை என்று வாபஸ் வாங்கப் பட்டது. அந்த செய்தி என்ன என்றால் ICMR இந்தியா முழுவதும் செய்த ஆராய்ச்சி முடிவுகள் காட்டுவது என்ன என்றால் இந்த நேரத்தில் இந்தியாவில் ஏழு லட்சம் கொரானா நோயாளிகள் இருக்க வேண்டும் என்பது தான். இந்த செய்தி வைரல் ஆனது தொடர்ந்து இது வாபஸ் பெறப்பட்டது.

உண்மையில் இந்த ஆராய்ச்சி என்ன சொன்னது என்று விரிவாக படித்ததின் சுருக்கம். ICMR இந்தியா முழுவதும் மொத்தம் 69 மாவட்டங்களில் உள்ள மக்கள் இந்த கொரானா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்களா என்று random இரத்த மாதிரியை எடுத்து Antibody பரிசோதனைகள் செய்து இருக்காங்க இதில் 0.73% ஆட்களுக்கு இரத்தத்தில் கொரானாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி இரத்தத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதை இந்தியா முழுவதும் உள்ளவர்களுக்கு அப்ளை செய்து பார்த்தால் இந்தியா முழுவதும் இந்த நேரத்தில் ஏழு லட்சம் பேருக்கு இந்த கொரானா தாக்குதல் வந்து சென்று இருக்க வேண்டும் என்று கணிக்கப்பட்டது.

எனவே இந்த நோயை விரைந்து அடையாளம் காண வழக்கமாக எடுக்கப்படும் பரிசோதனைகள் மட்டும் போதாது அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது தான் ரேபிட் கிட் பரிசோதனைகள் வேண்டும் என்று கூறப்பட்டது. ஏற்கனவே சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ரேபிட் கிட் பரிசோதனைகள் முடிவுகள் தவறாக இருந்த காரணத்தால் கைவிடப் பட்ட நிலையில் AIIIMS உதவியுடன் இந்தியாவில் உள்ள Biotechnology நிறுவனத்தில் மீண்டும் ரேபிட் கிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தடவை Antibody க்கு பதில் Antigen வைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. Antibody – கொரானாவுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி. Antigen – கொரானா வைரஸ் மூலக்கூறுகளில் சில பகுதிகள் இருக்கிறதா என்று கண்டறிதல்.

இந்த rapid kit Antigen detection test வெற்றிக்கரமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு தற்போது டெல்லியில் மக்களுக்கு பரிசோதனைகள் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதல் நாளில் 7000 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 450 பேருக்கு பாசிடிவ் என்று வந்து உள்ளது.

இந்த பரிசோதனையின் பயன்கள்.
1)செய்வது எளிது. இரத்த சர்க்கரை அளவு பார்க்கும் மாதிரி ஒரு துளி இரத்தம் மட்டுமே தேவை
2)30 நிமிடங்களில் முடிவுக்கு வர முடியும்.
3) highly specific – இது பாசிடிவ் என்றால் பாசிடிவ் தான். அடுத்த கட்ட RT PCR பரிசோதனை செய்யத் தேவை இல்லை.
4) ஒரே நேரத்தில் இலட்சம் பேருக்கு மேலாக பரிசோதனைகள் மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
5)இந்த மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கண்டறிந்தவர்களை தனிமைப்படுத்துவதின் மூலம் நோய் பரவலை எளிதாக கட்டுப்படுத்த முடியும்

இந்த பரிசோதனை நெகடிவ் ஆனால் கொரானா அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் RT PCR swab டெஸ்ட் பண்ண வேண்டும். ஏனெனில் இந்த Antigen test ல false negative வர வாய்ப்பு உள்ளது.

ICMR எழுபது லட்சம் பரிசோதனை கிட் இன்னும் பத்து நாட்களில் தயராகி விடும் என்று கூறி உள்ளது. தற்போது இரண்டு லட்சம் கிட் இருக்கிறது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னை மற்றும் நான்கு மாவட்டங்களில் இந்த லாக் டவுன் அமலில் இருக்கும் இந்த நேரத்தில் Secondary prevention நடவடிக்கைகளான early diagnosis and treatment என்று அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இந்த பரிசோதனைகள் மூலம் mass screening க்கு நகர்ந்தால் இந்த கொரானா பரவல் கட்டுக்குள் வைக்கும் வாய்ப்பு உள்ளது.

இளம்பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அப்துல் கலாம்!

இளம்பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அப்துல் கலாம்!

                      ஜான் துரை ஆசிர் செல்லையா

“அப்துல் கலாம் ஒரு பெண்ணோட கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா ?
என்ன ஜான் சொல்றே ?”

“ஆமா. அந்தப் பெண்ணின் பெயர் சரஸ்வதி.”

“எப்போ நடந்தது இது ?
எதுக்காக அந்த கல்யாணத்தை நிறுத்தினார் அப்துல் கலாம் ?”

நண்பரிடம் விளக்கமாக நான் அதை சொன்னேன்.

ஆம்.

அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம்.

அப்போது உயர் அதிகாரியாக திருச்சியில் பணி புரிந்து வந்த கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து.

“சொல்லுங்க சார்” என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி.

கலாம் சொன்னார்
அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என.

காரணம் அந்த பெண்ணின் வயது 16. பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள்.
மாப்பிள்ளைக்கு 47.
இரண்டாவது கல்யாணம். சொந்த மாமன்.

கலாம் தொடர்ந்தார் :
“கட்டாய கல்யாணம். அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க. அப்புறம்
அந்தப் பொண்ணு மேலே படிக்கணும்னு ஆசைப்படுது.
அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை…”

“அதை நாங்க பாத்துக்கிறோம் சார்” என்றார் கலியபெருமாள்.
“பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?”

ஊர் பெயரை சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது.

அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார்.
ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.

கலாம் சொன்னபடியே அந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ் டூ சரஸ்வதி நன்றி சொன்னாள்.
“சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்.”

“நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. அதற்கான ஏற்பாடு பண்றோம்.”

சொன்னாள். கவனமாக
குறித்துக் கொண்டார் கலியமூர்த்தி.

“ஓகே, நாங்க புறப்படறோம்.
அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்.”

“என்ன சார் ?”

“உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே.
அவருக்கு யாரும்மா இந்த தகவலை சொன்னது ?”

“நான்தான் சார்.”

ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி.

“எப்படீம்மா ?”

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். அதற்கு அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆகவில்லை.
அந்த கூட்டத்திற்கு இந்தப் பெண் சரஸ்வதியும் போயிருந்தாள்.

பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : “உங்களில் யாராவது ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம்.
Only four students…”

கேள்வி கேட்ட நான்கு பேரில் ஒருவர் இந்தப் பெண்.

கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட நால்வரையும் தனியாக அழைத்து பாராட்டினார் கலாம்.
“இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்.”

அந்த கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி, ஃபோன் நம்பர் இருந்தன.

எப்படியோ அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள் இந்தப் பெண். அதுதான் இந்த ஆபத்துக் காலத்தில் அவளுக்கு உதவியிருக்கிறது.

இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார்.
அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.
அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார்.

காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ?

சமீபத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி.

அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம் பெண் அவசரம் அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம்.

யார் இந்தப் பெண் ?
எங்கோ பார்த்தது போல இருக்கிறதே !

மேடையில் நின்ற அந்தப் பெண்
மூச்சு வாங்க சொன்னாளாம். “நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்.”

யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்?
எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.

“கலியமூர்த்தி சார். நான் இங்கே அமெரிக்காவில் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன்.
மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருக்கு நான்கு லட்சம். சந்தோஷமாக இருக்கிறோம்.
நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா ?”

“தெரியவில்லை” என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி.

அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள் :
“ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால் காப்பாற்றப்பட்டவள்.
படிக்க வைக்கப்பட்டவள்.
நான்தான் துறையூர் சரஸ்வதி.”

இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில் கண் கலங்கி போகிறார்.

“உங்களுக்கும் நன்றி.
உங்களுக்கு தூண்டுகோலாக இருந்து என் வாழ்வில் ஒளியேற்றிய அப்துல் கலாம் ஐயாவுக்கும் நன்றி.”

சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்ட நிறைவோடு, மேடையை விட்டு இறங்கி போகிறாள் அந்தப் பெண்.

ஆச்சரியம்தான்.
அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் உள்ள ஒரு சாமானிய பெண் ஜனாதிபதியோடு சகஜமாக பேச முடிந்திருக்கிறது.
தான் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.

ஆம்.
அது ஒரு அழகிய கலாம் காலம்.

‘இமிடேஷன்’ ஜுவல்லரி’ மூலம் ‘ரியல்’ லாபம்! அசத்தும் சென்னை பெண்!

‘இமிடேஷன்’ ஜுவல்லரி’ மூலம் ‘ரியல்’ லாபம்! அசத்தும் சென்னை பெண்!


 பிரிக்க முடியாதது எது? ஒருவேளை திருவிளையாடல் தருமியிடம் இந்தக் கேள்வியை மீண்டும் கேட்டால் பெண்களும் ஆபரணங்களும் என்று பதிலளிக்க வாய்ப்புண்டு. அந்த அளவிற்கு பெண்களுடன் ஆபரணங்கள் என்றென்றும் ஒன்று கலந்தது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகிலும் பெண்களுக்கு ஆபரணங்கள் மீதான ஆர்வம் சற்றும் குறையவில்லை என்றே சொல்லலாம். உடையலங்காரம், சிகையலங்காரம் போன்றவற்றில் எத்தனையோ மாற்றங்கள் வந்து சேர்ந்திருந்தாலும் பாரம்பரிய நகைகளுக்கு என்றுமே மவுசு உண்டு. தங்க நகைகள் அலங்காரப் பொருட்களாக மட்டுமின்றி முதலீடாகவும் மக்களால் பார்க்கப்படுகிறது. இதனால் பெண்கள் நகைகளை வாங்கும்போது தங்களது விருப்பத்தில் சமரசம் செய்து, நகைகளின் வடிவமைப்பு பிடித்திருந்தாலும் கற்களுடன் இருக்கும் நகைகள், அதிக சேதாரத்துடன்கூடிய நகைகள் போன்றவற்றைத் தவிர்த்துவிடுகின்றனர். எனவே அவர்களது விருப்பதை பூர்த்தி செய்துகொள்ள குறைந்த விலையில் இமிடேஷன் நகைகள் வாங்கிக் கொள்கின்றனர். இவை தங்க நகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்குகிறது. இந்தத் துறையில் இருக்கும் வணிக வாய்ப்பை நன்கு உணர்ந்ததால் தான், அதைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஆனந்தி.

 ஹோம்ப்ரூனர் ஆனது எப்படி? ஆனந்தி எம்.எஸ்.சி பட்டதாரி. இவரது குழந்தைக்கு 3 வயதாகிறது. திருமணத்திற்குப் பிறகு வணிக முயற்சியில் ஈடுபட விரும்பினார். கல்லூரி நாட்களில் இவர் விதவிதமாக அணியும் நகைகள் பலரைக் கவர்ந்துள்ளது. நண்பர்கள், உறவினர்கள் என பலரும் இவரது ரசனையைப் பாராட்டியுள்ளனர். எனவே இந்தப் பகுதியில் செயல்பட விரும்பினார். ஆன்லைனில் இமிடேஷன் ஜுவல்லரி விற்பனை செய்யத் தீர்மானித்த ஆனந்தி ASA Online Boutique தொடங்கினார்.
“முதல்ல ஆறு பேர்களோட வாட்ஸ் அப் குழு ஆரம்பிச்சேன். சமூக வலைதளங்கள்ல பகிர்ந்துகிட்டேன். அப்படியே வாடிக்கையாளர்கள் அதிகமானாங்க. ஆரம்பத்துல மூன்று சப்ளையர்கள் மட்டுமே இருந்தாங்க. இப்போ நேரடியா 160 சப்ளையர்ஸ் இருக்காங்க. அப்டேட் கொடுக்கதான் நேரம் இல்லை,” என்கிறார் பரபரப்பாக இயங்கி வரும் ஆனந்தி.

 
 இவரது உறவினர்கள் பலரும் ASA பெயரிலேயே வாட்ஸ் அப் குழுக்களை நிர்வகித்து வருகின்றனர். அவர்கள் எடுக்கும் ஆர்டர்களின் மூலம் லாபம் ஈட்டி வருகின்றனர். இப்படியாக வாட்ஸ் அப்பில் ஒரு குழுவை அமைத்துத் தொடங்கப்பட்ட இவரது வணிக முயற்சி இன்று 35 வாட்ஸ் அப் குழுக்களுடன் 1500-க்கும் மேற்பட்ட மறு விற்பனையாளர்களுடனும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

 வெளிநாட்டவர்கள் பலரும் இவரது நகைகளில் ஆர்வம் காட்டியதால் முறையாகப் பதிவு செய்து ஏற்றுமதியும் செய்து வருகிறார்களாம். வருவாய் புடவை வியாபாரத்துடன் ஒப்பிடுகையில் இமிடேஷன் நகைகள் மூலம் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்கிறார் ஆனந்தி. இவர் இந்த வணிகம் மூலம் முதல் ஆண்டிலேயே கிட்டத்தட்ட 9 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளார். இரண்டாம் ஆண்டில் வருவாய் 16 லட்சத்தைக் கடந்துள்ளது. மாத வருவாயாக 1 முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை ஈட்டப்படுவதாகத் தெரிவிக்கிறார். இமிடேஷன் ஜுவல்லரி வணிகத்தைப் பொறுத்தவரை நேரடியாகத் தயாரிப்பாளர்களிடம் வாங்கும்போது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால் அதிக லாபம் ஈட்ட முடிவதாகக் குறிப்பிடுகிறார் ஆனந்தி. கடைகளில் வாங்கும் விலையுடன் ஒப்பிடும்போது நேரடியாக விற்பனையாளர்களிடம் வாங்கி விற்பனை செய்யும்போது மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்ய முடிகிறது. அதே பொருள், அதே தரத்தில், குறைந்த விலையில் கிடைக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கும் சிறந்த மதிப்பு கிடைக்கிறது. திருமண நிகழ்வுகளில் மணமகளுக்கான ஆபரணங்கள் வாடகைக்கு கொடுப்பதன் மூலம் நல்ல வருவாய் ஈட்டலாம் என்கிறார். “பெண்கள் தங்களுக்கு தெரிஞ்சவங்களை குழுவா சேர்த்து இந்த பிசினஸை முறையா நடத்தினாங்கன்னா மாத வருவாயாக 10 ஆயிரத்துலேர்ந்து 15 ஆயிரம் வரைக்கும் தாராளமா சம்பாதிக்கலாம்,” என்கிறார். ஆனந்தி முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்தி இந்த வணிகத்தை நடத்தி வருகிறார்.

மறு விற்பனையாளர்கள் நம்பகத்தன்மையுடன் செயல்படுவதால் கிட்டத்தட்ட 200-300 மறு விற்பனையாளர்கள் தன்னிடம் மட்டுமே வாங்கி விற்பனை செய்து வருவதாக ஆனந்தி தெரிவிக்கிறார். இதுதவிர அவ்வப்போது தேவை இருக்கும்போது மட்டும் வாங்கும் மறு விற்பனையாளர்களும் உள்ளனர். சப்ளையர்கள் ஆனந்தி சென்னை, பெங்களூரு, மும்பை என பல்வேறு பகுதிகளில் உள்ள மொத்த விற்பனையாளர்களிடம் வாங்கி விற்பனை செய்கிறார். “வாடிக்கையாளர்களுக்கு இணையாக சப்ளையர்களை திருப்திபடுத்தறது முக்கியம்ன்னு நான் நினைப்பேன். ஏன்னா வாடிக்கையாளர்களைவிட, சப்ளையர்கள்கூடதான் நாங்க ரொம்ப தூரம் பயணிக்கவேண்டியிருக்கும். அவங்களோட சப்போர்ட் எங்களுக்கு ரொம்ப முக்கியம்,” என்கிறார் ஆனந்தி. சந்திக்கும் சவால்கள் “நிறைய மறு விற்பனையாளர்கள் போலியான குரூப் உருவாக்கி எங்க விலையை தெரிஞ்சுப்பாங்க. எங்க விலையைவிட குறைந்த விலையில சில பொருட்களை விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்கள் வாங்க விடாமல் செஞ்சிடுவாங்க. அதோட அந்த பணத்தை கலெக்ட் பண்ணிகிட்டு குரூப்பை பிளாக் பண்ணிட்டு போயிடுவாங்க,” என்று தன் கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். உடனடியாக தங்கள் ஆர்டரை ட்ராக் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் இருக்கும். ஆனால் எல்லா நேரங்களிலும் இது சாத்தியமில்லை என்பதே அவரது கருத்து. சில பொருட்கள் சேதமடைந்தால் உடனே அவற்றைத் திரும்ப எடுத்துக்கொண்டு மாற்றிக்கொடுக்கவேண்டும் என்பதும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்பாக இருக்கும். ஆனால் விற்பனையாளர்களுக்கு பார்சலை அன்பாக்ஸ் செய்த வீடியோவை அனுப்புவது உள்ளிட்ட சில செயல்முறைகளுக்குப் பின்னரே அது சாத்தியப்படும் என்கிறார்.

 கடின உழைப்பு ஆனந்தி இந்த நிலையை எட்டக் கடினமாக உழைத்துள்ளார். கடின உழைப்பிற்கு ஏற்றவாறே பலன் கிடைக்கும் என்பது இவரது திடமான நம்பிக்கை. வாடிக்கையாளர்களிடம் ஆர்டர்கள் பெறுவது, விற்பனையாளர்களிடம் ஆர்டர் செய்வது, ஆர்டர்களை முறையாக ட்ராக் செய்வது, மறு விற்பனையாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது, கணக்குகளை நிர்வகிப்பது என பம்பரமாகச் சுழல்கிறார் ஆனந்தி. குழந்தை வளர்ப்பு, குழந்தையின் படிப்பு, உணவு, உறக்கம் என வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் எத்தனையோ தியாகங்கள் செய்த பின்னரே வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டமும் எட்டப்பட்டதாக விவரிக்கிறார். “என் கணவர் எனக்கு பக்கபலமா இருக்காரு. குழந்தையை பார்த்துக்கறதோட பிசினஸ்லயும் ரொம்ப சப்போர்டிவா இருக்காரு,” என்று கூறி முடித்தார் ஆனந்தி. கடின உழைப்புமும் ஆர்வமும் இருந்தால் வெற்றியை வசப்படுத்தமுடியும் என்று பெண்களுக்கு ஊக்கமளிக்கிறார். இவரது வளர்ச்சியைக் கண்டு இவரது உறவினர்கள், நண்பர்கள், அருகில் வசிப்பவர்கள் என பலரும் இந்த வணிகத்தில் களமிறங்கி வருவாய் ஈட்டி வருகின்றனர். தொழில் தொடங்கும் அனைவருமே வெற்றியடைந்து, லாபம் ஈட்டி, உச்சத்தை எட்டி விடுவதில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கான சக்சஸ் ஃபார்முலாவைக் கண்டறிந்து அவற்றைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஆனந்தி போன்றோரே உதாரணம்.

 ஃபேஸ்புக் பக்கம்: ASA Boutique    கட்டுரையாளர்: ஸ்ரீவித்யா
நன்றி: https://yourstory.com

கொண்டாடப்படவேண்டிய ஹைக்கூ கவிஞர் ஜென்ஸி

கொண்டாடப்படவேண்டிய ஹைக்கூ கவிஞர் ஜென்ஸி

********************************************************

பெயர் : ஜென்ஸி

வசிப்பது : சென்னை

சொந்த. ஊர் : திருச்சி மாவட்டத்தில் குளித்தலை.

கவிதைகள் வெளியான. நூல்கள் : நான் நீ இந்த. உலகம்

பனி விழும் மலர் வனம்.

கால நதியெங்கும் கவிதை வாசம்.

தேரோடும் வீதி.

என்ன. சொல்லப் போகிறாய்..?

மற்றும் முண்ணனி தினசரி. மாத. வார. இதழ்கள்.

எழுதி வெளியிட்டுள்ள. நூல்கள் : சிறுகதைத் தொகுப்பு–1

கவிதைத் தொகுப்பு–2

ஹைக்கூ தொகுப்பு–1.

பெற்றுள்ள. பட்டங்கள் :

நேயச் சுடரொளி

கவிச்சிகரம்.

இலக்கியத் தென்றல்.

முகவரி : ஜென்ஸி

C/0 கே. ராஜேஸ்தமிழ்வாணி.

9–S 2 ஸ்ரீ லட்சுமி ஹோம்ஸ்

பிரியாநகர் 3 ஆம் பகுதி

ஆறாவது தெரு.

ஊரப்பாக்கம்–603210

சென்னை.

கைபேசி ;8838600138

மின்னஞ்சல் : Selvarasujensi @, gmail.com.

நாத்திகர் வாங்கிய.

நாட்காட்டியிலும் இருக்கிறது

இராகு காலம்

.

மரத்தை வரைகிறது.

ஹைக்கூ சிறப்பிதழ்.

தன் எச்சத்தால்

ஒரு பறவை.

மணல் வீடு கட்டி

விளையாடுகிறார்கள்

கடற்கரை காதலர்கள்

மலை உச்சியிலிருந்து

மெல்ல. நழுவுகிறது

மேகத்தின் நிழல்

இரவு நேரத்தின்

மௌன விசும்பல்

முதிர்கன்னி

தத்துவப் புத்தகம்

படித்துப் பார்க்கிறார்

விலையை

வேடனின் குறிக்குத்

தொகுப்பு: கவிஞர். கா.. கல்யாண சுந்தரம்.

தப்பிப் பறந்தது

குயில் பாட்டு

வெட்ட. வெளியில்

நடந்து முடிந்தது

மகரந்த. வேட்டை

             யார் கண் பட்டதோ..

             விற்பனை மந்தம்

            பூசணிக்காய்

           குவளை நீரில்

        தெளிவாய் தெரிகிறது

பாத்திரத்தின் அழுக்கு

என்னைப் போல் ஒருவன்

எட்டிப் பார்க்கிறான்

நீர் நிறைந்த. கிணறு

…….ஜென்ஸி

தமிழ் சினிமாவும் முறை தவறிய உறவுகளும்!

தமிழ் சினிமாவும் முறை தவறிய உறவுகளும்!

 பிரபாகர் சர்மா

அடிமகள், நிழல் நிஜமாகிறது, பின்னே பதினாறு வயதினிலே

அடிமகள் 1969 இல் மலையாள மொழியில் சேதுமாதவன் இயக்கத்தில் சாரதா, ஷீலா, பிரேம் நசீர், சத்யன் இவர்களது நடிப்பில் வெளிவந்த திரைப்படம். இந்தப் படத்தின் மூலம் தெரியவில்லை. அதுவும் ஏதாவது கொரியன் அல்லது இரானிய மொழிப் படமாக இருக்கலாம்.

பதினாறு வயதினிலே 1977ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் ஸ்ரீதேவி, கமலஹாசன், ரஜனிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம்.

1978ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஷோபா, சுமித்ரா, கமலஹாசன், சரத்பாபு ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம்.
அடிமகளும் நிழல் நிஜமாகிறதும் ஒரே ஊடுசரத்தில் இழையும் கதைகள்.

கிராமத்திலிருந்து பஞ்சம் பிழைக்க பணக்கார வீட்டில் சமையல்காரியாக நுழையும் ஒரு பாவப்பட்ட பெண்ணைப் பற்றிய கதை. மலையாளத்தில் சாரதாவும், தமிழில் ஷோபாவும் பிய்த்து உதறியிருக்கும் பாத்திரப் படைப்பைக் கொண்ட படங்கள்.

கே.பியின் படத்தில் நகாசு வேலை அதிகம். சேதுமாதவன் உணர்ச்சிகளுக்கு மட்டும் இடம் கொடுத்து விரசமில்லாமல் ஆனால் படு வில்லங்கமான கதையைக் கையாண்ட படம்.

பதினாறு வயதினிலே படத்தை அப்படியே மலையாள படத்தைத் தழுவி எடுக்காமல் கொஞ்சம் மாற்றியிருப்பார்கள்.

கேரளத்தில் பொதுவாகவே எஜமானனுக்கும் வேலைக்காரிக்குமான உறவு அவர்கள் வடித்துக் காட்டும் சித்திரங்கள், படிக்கும் கதைகள் அவர்கள் வரலாறு இவற்றைக் கொண்டு நான் கற்பித்துக் கொண்ட இலக்கணதிற்குக் கொஞ்சமும் விலகாமல் அடிமைகள் படம் எடுக்கப்பட்டிருப்பதால் முறை தவறிய உறவு என்பது கேரளாவில் பெரிய விஷயமாக இருப்பதற்கு அவசியமில்லை என்றே தோன்றுகிறது. இதனை நான் பொதுமைப்படுத்தி மலையாளிகளைப் புண்படுத்த விரும்பவில்லை என்றாலும் எழுபதுகளில் இவ்வாறுதான் வீட்டுப் பணிக்குச் செல்லும் பெண்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் தமிழில் கலாசாரத்தில் முறை தவறிய உறவு என்பது ஐந்திணை ஒழுக்கத்தில் கூட இருந்தது கிடையாது. களவொழுக்கம் உண்டு என்றாலும் செவிலி, பாங்கன், தோழி, நற்றாய், ஊரார் அனைவரும் சேர்ந்து களவொழுகிய ஆடவனையும், மங்கையையும் திருமணத்தில் கொண்டு விட்டு விடுவார்கள். எனவே முறை தவறிய பெண்மையை ஒரு திரைச் சித்திரத்தில் இன்றளவும் சித்தரிக்க தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் அச்சப்படுகின்றனர். அது தவறா முறையா என்பதெல்லாம் பிறகு.

அதனால்தான் பாரதிராஜா மிக சாமர்த்தியமாக மயிலு டாக்டர் மீது மையல் கொண்டாலும் முறை தவறப் போகும் நேரத்தில் கை நழுவிப் போய்விடுவதாகக் காட்டியிருப்பார்.. போலி கற்பு பற்றிய புரிதல் என்று இதனை ஒதுக்கி விட முடியாது. அவளது பெண்மை காப்பாற்றப்படுகிறது என்றாலும் சந்தேகத்தில் நிழல் அவள் மேல் படிந்து அவளது தாயாரின் உயிரைக் குடிப்பதாக கதையைக் கொண்டு போயிருப்பார்.

நிழல் நிஜமாகிறது அடிமகளின் டிட்டோ காப்பி. ஷீலா மலயாள படத்தில் கிருஷ்ண பக்தை. ஆண்களை வெறுத்து சிறு வயதில் தனது தாபங்களைஎல்லாம் உள்ளுக்குள் கற்பனையாக அடக்கிக் கொண்டு வீட்டிற்குள் ஒரு போலிச் சாமியாரை வரவழைத்து சன்யாச வாழ்க்கை வாழ்பவள். அவளது சகோதரன் அனந்தனின் சிநேகிதன் ஒரு சிவில் எஞ்சினியர் –காட்சியமைப்பின்படி அவர்களுக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆகியிருக்க வேண்டும்- அப்புக் குட்டன் என்பவன் வீட்டிற்குள் நுழைகிறான். அவன் திறந்த மனப்பாங்கு உடையவன் என்பது காட்சிகளில் கூறப்படுகிறது. ஷீலா போர்வை போட்டு மூடி மறைக்கும் பெண்மையைச் சீண்டுகிறான். அவனது கடவுள் மறுப்புப் பேச்சுகள் அவளுக்கு ரசிக்கவில்லை என்றாலும் இயற்கையின் இயல்பான தூண்டுதல் அவனிடம் அவளுக்குப் பாலியல் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அதனை அப்புக்குட்டனும் முகர்ந்து பார்த்து ஒருநாள் அவளைக் கட்டியணைத்து நேரடியாகத் தனது காதலை வெளிப்படுத்தி விடுகிறான். ஷீலாவின் சகோதரன் அனந்தன் அந்த வீட்டில் சமையல்காரியாகத் தன்னை முற்றிலும் நிலை நிறுத்திக் கொண்ட சாரதாவின் எதிர்பால் ஆசையைத் தூண்டி விட்டு அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான்.

இரண்டு வெவ்வேறு முனைகளில் உள்ள ஆடவர்கள் தங்களுக்கு எதிமுனையில் உள்ள பெண்களிடம் தங்களை வெளிப்படுத்துவதில் ஆண்களின் நிலையிலிருந்துதான் காட்டப்படுகிறதே தவிர பெண்களின் நிலையிலிருந்து காட்டப்படவில்லை. தன்னை ஒரு பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள இயக்குனராகக் காட்டிக் கொண்ட இயக்குனர் கே.பாலச்சந்தர் சுமித்ராவின் பாத்திரப்படைப்பைக் குட்டிச் சுவராக்கியிருப்பார்.

மலையாள அடிமகளில் சாரதாவின் சம்மதத்துடனேயே அவர்களது உறவு யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக நீடிக்கிறது. அவர்கள் வீட்டில் எடுபிடி வேலைக்கென்று பொட்டன் என்ற செவித்திறன் இழந்த ஒருவன் வளைய வருகிறான். அவனுக்கும் இளம்பிராயம்.

பிரேம் நசீர் அந்த பாத்திரத்தை மலயாளத்தில் ஏற்று நடித்திருப்பார். என்னைப் பொறுத்தவரையில் தமிழில் அதே பாத்திரத்தை ஏற்று நடித்த ஹனுமந்துவும் மலையாளத்தில் நடித்த பிரேம் நசீரும் முக்கியமான இடத்தில் சொதப்பியிருப்பார்கள்.

ஆனால் இதே வேடத்தைச் சப்பாணியாக ஏற்று நடித்த கமலஹாசன் பிரமாதப்படுத்தியிருப்பார். ( நிழல் நிஜமாகிறது படத்தில் நடிக்கும்போது அட நம்ம ரோலை ஹனுமந்து என்று தோன்றி இருக்குமோ?)

அடிமகளும், நிழல் நிஜமாகிறதும் பாத்திரத்தின் குணச்சித்திரங்களைச் சிதைத்து விடும் படங்களாகும். இரண்டு படங்களிலும் சத்யன் மற்றும் கமலஹாசனின் பாத்திரங்கள் தேவையே இல்லை என்று சொல்வேன். ஏன் என்றால் இரண்டிலும் சாரதாவும் ஷோபாவும்தான் தங்களுக்கும் தங்கள் வேலை பார்க்கும் இல்லங்களின் எஜமானர்களுக்கும் இடையில் உறவை அனுமதிக்கின்றனர். அவர்கள்தான் தங்களது வாழ்நாள் துணைவன் யார் என்பதைத் தேர்வு செய்கிறார்கள்.

பழைய களத்தூர் கண்ணம்மா நினைவில் இருக்கிறதா? அறுபதுகளில் வந்த படங்களில் காந்தர்வத் திருமணம் போன்ற ஒன்றை நிறுவிப் பெண்களுடனான தகாத உறவை நியாயப்படுத்துவார்கள். எழுபதுகளில் கொஞ்சம் முன்னேற்றம். மலையாளத்திலிருந்து தமிழிற்குக் கசிந்ததால் இத்தகைய முறை தவறிய உறவுகள் தமிழுக்கு வந்தனவே அன்றி அசல் தமிழில் அப்படி இல்லை.

தி.ஜானகிராமன் ஜெயகாந்தன் இருவரும் இந்த விஷயத்தில் எதிர் எதிர் முனையில் நிற்பவர்கள். தி.ஜானகிராமன் ஒரே மாதிரி கதைகளை எழுத நிற்பந்தப்படுத்தப்பட்டார் என்றுதான் கூற வேண்டும். ஜெயகாந்தன் இதற்கான தீர்வைதான் பார்த்தார். அக்னிபிரவேசம் சில நேரங்களில் சில மனிதர்களாகப் பிரவாகமெடுத்தபோது கங்கா பிரபுவிடம் கூறுவாள்,”அன்னிக்கு நானும்னா சம்மதிச்சேன். நான் மறுத்திருந்தால் அப்படி ஒரு விஷயமே நடந்திருக்காது. அதற்கு நானும் ஒரு காரணம்” என்று கூறுவாள். அதில் ஒருவகை நேர்மை இருக்கும்.

பாலியல் தேவைகள் ஆணுக்கும் பெண்ணிற்கும் பொது; செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் பொது. ஆனால் முறை தவறும்போது கர்ப்பம் உண்டாகுதல் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் பெண்களுக்கே பாதிப்பை ஏற்படுத்துகின்றன. முள் சேலை பழமொழி அரதப் பழசானாலும் அதில் உள்ள உண்மையை மறுக்க முடியாது.

வெறும் பாலியல் தேவைகள் மட்டும் என்றால் இந்த நவீன யுகத்தில் பல கர்ப்பத்தடை சமாச்சாரங்கள் வந்து விட்டன. ஆனால் ஒரு கலைஞன் வெறும் பாலியல் தேவையோடு ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வை நிறுத்தி விட நினைப்பதில்லை.
ஜெயகாந்தன் சிறுகதையில் ஒரு சுலபமான தீர்வைத் தருகிறார். வெளியில் போய்விட்டு வரும்போது காலில் சேற்றுக் கறை பட்டதற்குக் காலை யாரும் வெட்டிக் கொள்ள மாட்டார்கள் என்று கங்கா ஜலத்தைத் தெளித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் காதும் காதும் வைத்தது மாதிரி வீட்டிற்குள் அனுமதித்து விடுவார். நிஜமாகவே பாராட்டப்பட வேண்டிய மனிதாபிமானம் மிக்க முடிவுதான்.

ஆனால் படித்தவர்கள் என்ற முறையில் வரும் மேட்டுக்குடிப் பாத்திரங்கள் அடிமகள் நிழல் நிஜமாகிறது இரண்டு படத்திலும் எண்ணுவதற்கே கூசும் முடிவை எடுப்பார்கள். எஜமானர்கள் வீட்டில் எடுபிடியாக இருக்கும் செவித்திறன் பாதிக்கப்பட்ட வனை முறை தவறிய உறவால் கர்ப்பமான வேலைக்காரிக்குத் துணையாக இருக்கும்படி கேட்டுக் கொள்வார்கள்.

இதனுடைய நீட்சியாக மகரிஷி புவனா ஒரு கேள்விக்குறி என்ற நாவலை எழுதியிருப்பார். அதில் பாதிக்கப்பட்ட பெண் கருச்சிதைவு வரை சென்று இறுதியில் மாதங்கள் அதிகமாகி விட்டதால் மருத்துவர் கருச் சிதைவிற்குச் சம்மதிக்க மறுத்ததால் வேறு ஒரு ஆடவனின் அடைக்கலத்தில் சென்று இருக்க சம்மதிப்பாள். பழைய காதலன் தனது திருமணத்திற்குப் பிந்தைய மகப்பேறின்மை காரணமாக தனது பழைய காதலியை அவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தையைக் கோருவதற்கு வருவான். தற்போதைய ஆண்மையின்மையைக் காரணம் காட்டி அந்தக் குழந்தை அவனுக்குப் பிறந்தது இல்லை என்று கோர்டில் தன்னால் நிரூபிக்க முடியும் என்று மிகத் துணிச்சலாகக் கூறுவாள். படத்திலும் நாவலிலும் இது சரியான முறையில் கையாளப்பட்டிருக்கும்.

நடந்த பொதுவான தவறுக்கு மாற்று ஏற்பாடு என்று வரும்போதே ஷீலா சுமித்ரா கமலஹாசன் சத்யன் ஆகியோர் நடித்த பாத்திரங்களின் நேர்மைத்தன்மை அடிபட்டுப் போகிறது.

மேட்டுக்குடி மக்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்கள் போடும் அத்தனை திட்டங்களையும் பாவப்பட்ட வறியவர்கள் கேட்டுக் கீழ்படிந்துக் நடப்பதைத் தவிர வேறு வழியை இவர்காளால் காட்ட முடியவில்லையா என்று தோன்றும்.

விதி படத்தில் இது பட்டிமன்றம் போல கோர்ட்டில் விவாதிக்கப்பட்டு முறைதவறிப் பிறந்த குழந்தைக்கு ஏமாற்றிய காதலன்தான் காரணம் என்பதை நிரூபித்து விட்டு இறுதியில் அவனைக் கதாநாயகி நிராகரிப்பாள் . அதிலாவது கொஞ்சம் இலக்கிய முறைமை இருந்தது. இந்த இரண்டு படங்களிலும் அயோக்கியத்தனம் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.

பதினாறு வயதினிலே படம் இந்தச் சிக்கலை எளிதில் கடந்து விடுகிறது. தனது மகள் நடத்தை கெட்டவள் என்ற ஊராரின் அலர் தோன்றியதும் மானஸ்தியான அவள் தாயார் மடத்தனமாகத் தற்கொலை செய்து கொண்டு மகளை நட்டாற்றில் தவிக்க விட்டு உயிரைப் போக்கிக் கொள்கிறாள். என்னைக் கேட்டால் இவளை விட கங்கா ஜலம் தெளித்து மகளை ஏற்றுக் கொள்ளும் அக்னிப்பிரவேசத் தாய் எவ்வளவோ மேன்மையானவள். அதன் பிறகு வீட்டிற்குக் காவலாக வரும் சப்பாணி மயிலுக்கு அனைத்துமாக இருந்து இறுதியில் ஒரு கொலைக்கும் ஆளாகி மயிலைக் காப்பாற்றுகிறான். POETICAL JUSTICE என்பது இந்தப் படத்தில் இருந்ததன் காரணமாகவே இந்தப் படம் மற்ற இரண்டு படங்களையும் விட அமோக வெற்றி பெற்றது எனலாம்.

முறை தவறிய குடியில் பிறந்த மாதவி கோவலன் தொடர்பைக் கூட மேபட்ட உறவாகச் சித்தரிக்கும் தமிழ் கலாசாரத்தில் திருமணத்தில்முடியாத முறை தவறிய உறவுகள் பற்றிக் கூறும் கதைகள் வெற்றி பெற்றதில்லை.

பி.கு: DNA பரிசோதனைகள் வந்த பிறகு மேற்சொன்ன எல்லா கதைகளும் அடிபட்டுப் போய்விடும் என்றாலும் இன்றளவும் பாலியல் தேவைகள் முறைகெட்டு வரும்போது ஆணுக்கு ஒரு வழியையும் பெண்ணிற்கு வேறொரு வழியையும்தான் காட்டுகிறது.


பிரபாகர் சர்மா. முகநூல் பதிவு.

பட்டுக்கோட்டையின் பாசம்மிக்க டாக்டர்!

பட்டுக்கோட்டையின் பாசம்மிக்க டாக்டர்!

பட்டுக்கோட்டை தாலுக்காவில் மருத்துவர் டி.ஏ.கே.ரத்தினம் அவர்களை அறியாதவர்களே இருக்க முடியாது.

நான் பட்டுக்கோட்டையில் இருந்தபோது இவர்தான் எங்கள் குடும்ப மருத்துவர். மிகக் குறைவான மருந்துகளே எழுதுவார். அதிகபட்சம் இரண்டு. பிரிஸ்க்ரிப்ஷன் பேடே உள்ளங்கை சைசில்தான் இருக்கும்.

மிகவும் கனிவாகப் பேசுவார். கூர்ந்து கவனிக்க வேண்டிய அளவிற்கு மென்மையான குரலில் குறைந்த டெஸிபலில் பேசுவார்.

என் முதல் சிறுகதை அச்சில் வந்தபோது நான் கொண்டு சென்று காட்டி ஆசிபெற்ற வெகு சில அன்பு நெஞ்சங்களில் இவரும் ஒருவர்.

பிரசவம் பார்ப்பதில் ஸ்பெஷலிஸ்ட். ஆமாம். ஆயிரக்கணக்கான பெண்கள் ஆண் மருத்துவர் என்றும் பார்க்காமல் இவரிடம் போவார்கள். 99.99% சுகப் பிரசவம்தான்.

இலக்கிய, சமூக ஆர்வமும் உண்டு. நாங்கள் ஒரு குழுவாக முத்தமிழ் பேரவை என்கிற இலக்கிய அமைப்பை துவங்கியபோது அதில் உறுப்பினரானதோடு மாதாந்திர நிகழ்ச்சிகளை அவருக்குச் சொந்தமான இடத்தில் இலவசமாக நடத்த அனுமதியளித்தவர்.

இவர் இந்த கொரானா நேரத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் நன்கொடை அனுப்பியதோடு..அவரது கட்டிடத்தில் உள்ள வர்த்தக கடைகளுக்கு மூன்று மாதங்களுக்கு வாடகை தர வேண்டாம் என்று தாமாக முன்வந்து கருணை காட்டியிருக்கிறார்.

மனிதம் மீது நம்பிக்கை வளர்க்கும் இந்த மாமனிதரை நன்றியுடனும், பாராட்டுக்களுடனும் வணங்கி மகிழ்கிறேன். 91 வயதான இவர் நூறாண்டு கடந்து வாழ வேண்டுமென்றும் வாழ்த்துகிறேன்.

பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் முகநூல் பதிவு.

கொரோனாவில் இருந்து மீண்டார்

கொரோனாவில் இருந்து மீண்டார்..அனுபவ பதிவு  ..


 டாக்டர் ஆனந்திபிரபாகர்

புலி வருது புலி வருது’ என சொல்லிக்கொண்டே திரிந்தோம். இதோ இன்று நம் வீட்டு வாசலுக்கும் வந்து நிற்கத் தொடங்கிவிட்டது. எனக்குத் தெரிந்து எதிர்காலத்தில் இங்கிருக்கும் !

இது என்னுடைய அனுபவமும், என் கருத்துகளும் மட்டுமே.

நான் ஓர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர். ‘சமூக இடைவெளி’யென ஊருக்கு உபதேசமளித்தாலும், நிறைய நோயாளிகளை தினந்தினம் நெருங்கிப் பரிசோதிக்க வேண்டிய, மருந்து அளிக்க வேண்டிய பணியும் கடமையும் எங்களுடையது. அப்படி கொரொனா பாசிடிவ் ஆன ஒரு நோயாளியிடமிருந்து எனக்கும் என் சக நண்பர்களுக்கும் வந்திருக்கும் என நினைக்கிறேன்.

ஜூன் 11ஆம் தேதி இரவு மருத்துவமனையில் Nightstay. எனக்கு அன்று மாலையிலிருந்து இலேசான உடல் அசதி இருந்தது. இரவு காய்ச்சலும் சேர்ந்து கொண்டிருந்தது. வார்டிலிருந்து ஒரு காய்ச்சல் மாத்திரையை வாங்கி போட்டுக் கொண்டு இரவைக் கழித்தேன்.

அடுத்தநாள் ஜூன் 12ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காய்ச்சல் குறையவேயில்லை.
Myalgia என ஆங்கிலத்திலே சொல்வார்கள். தசைவலி. கெண்டைக்காலில் ஆரம்பித்து அப்படியே மொத்த உடம்பும், என்னால் எழ முடியாத அளவு, வலிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த அறிகுறிகளைக் கொண்டு எனக்கும் பாசிடிவாக இருக்கலாம் என நான் யூகித்துக்கொண்டதால் என்ன நானே தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்கினேன்.

நேரமாக நேரமாக தலைவலியும் இருமலும் சேர்ந்து கொண்டது. எனக்கு உடம்பு சரியில்லாமல் போவது, அதுவும் காய்ச்சல் இருமல் வருவதென்பதெல்லாம் அரிதிலும் அரிதாக நிகழ்பவை. எனவே நிச்சயம் கொரொனா தான் என்பது எனக்கு தெளிவாகவே புரிந்துவிட்டது.

அடுத்தநாளே swab test கொடுத்துவிட்டு, மீண்டும் வந்து என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்.இந்த நான்கு நாட்களும் என் அறிகுறிகளுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தேன்.

ஜூன் 14 அன்று ரிசல்ட் பாசிடிவ் என்று வந்தது. எனக்கு மட்டுமல்ல.என்னோடு படிக்கும் ஆறு பேருக்கு. நாங்கள் அனைவரும் கொரொனா தனிமைப்படுத்துதலுக்கென ஒதுக்கப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டோம்.

நான் ஏற்கனவே கொஞ்சம் யூகித்து வைத்திருந்ததால், ரிசல்ட் என்னை அப்போது பெரிதாக பாதிக்கவில்லை. அடுத்தடுத்த நாட்களில் நீண்ட நேர தனிமையும், தொடர் இருமலும் அதனால் ஏற்ட்ட நெஞ்சுவலியும் கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தின. பிறகு இரண்டு நாட்களுக்கு தூக்க மாத்திரைகள் போட்டு,தூக்கத்தோடு தான் இரவும் பகலும் கழிந்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கு நுகர்வறியும் திறன் எப்போது போனது என்பதே தெரியவில்லை. Anosmia என ஆங்கிலத்தில் சொல்வார்கள். மணம், துர்நாற்றம் எதுவுமே தெரியாது. பற்றாக்குறைக்கு சுவையும் தெரியவில்லை.

‘சுவைஔி ஊறுஓசை நாற்றம் என்றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு’
என்பான் வள்ளுவன். இதில் நமக்கு இரண்டு அவுட். சாப்பாடெல்லாம் மல்லுக்கட்டி சாப்பிடவேண்டியதாக தான் இருந்தது. ஆனாலும் சாப்பிட்டேன்.

12 நாட்களுக்குப் பிறகு, இரண்டு swab test posiive களுக்குப் பிறகு, மூன்றாவது test negative. இப்பொழுது தனி அறையில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இது ஏழு நாட்களுக்குத் தொடரும்.

கொரானா வந்தால் என்னென்ன லாம் சாப்டணும் என்று நீங்கள் குழப்பிக் கொள்ளவே தேவையில்லை.

உங்கள் அறிகுறிகளுக்குத் தேவையான மாத்திரை மருந்துகள்,
மூன்று வேளை உணவு,
எலுமிச்சை இஞ்சி புதினா கலந்த ஜூஸ்(அல்லது) மிளகு கலந்த சூப்,
இரண்டு வேளை டீ,பால்,
மாலை சிற்றுண்டிக்கு ஏதேனும் பயறுவகைகள்,
மிளகு,மஞ்சள் தூள் கலந்த பால்,
தினம் ஒரு முட்டை,
தினம் ஒரு பழம் (பெரும்பாலும் ஆரஞ்சு),வெந்நீர்,
கபசுரக் குடிநீர்,
முகத்துக்கு மாஸ்க்என எல்லா மருத்துவமனைகளிலும் அவர்களின் நேரக் கணக்குப்படி உங்களின் இடத்திற்கே வந்து தருவார்கள்.
இதில் நம்முடைய வேலை ‘ஐயோ. சாப்பிட முடியலையே’ என்று ஒதுக்கி வைக்காமல் எல்லாவற்றையும் சாப்பிடுவது தான்.
இது இல்லாமல் ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை அன்னாசிப்பழம் ஆகியவற்றை நான் தனியாக வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டேன்.

வார்டிற்கு வருபவர்கள் வரும்போது தேவையான துணிமணிகளை எடுத்துக்கொள்ளுங்கள். எந்த அளவுக்கு குறைவாக பயன்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு குறைவான துணிகள் போதும். மூன்று செட் எடுத்துப் போவதே போதுமானதாக தான் இருக்கும்.

இது இல்லாமல் ஹேண்ட்வாஷ், அவசரத்திற்கென கொஞ்சம் மாஸ்க், குளிக்க துவைக்க சோப், டூத்ப்ரஷ், பேஸ்ட், சீப்பு, வெந்நீர் பிடித்துக் கொள்ள ஃப்ளாஸ்க், டம்ளர் செல்போன், சார்ஜர் ஆகியவற்றைக் கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஹெட்போன், புத்தகங்கள், தலையணை,போர்வை, தட்டு, துணி காயப்போடும் ஹேங்கர் எடுத்துச் செல்வதெல்லாம் அவரவர் விருப்பதிற்குட்பட்டது. உங்களுக்கு வெந்நீர் அடிக்கடி அவசியம் தேவைப்படும் எனும் பட்சத்தில் உங்களிடம் ‘கெட்டில்’ இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் மருத்துவமனையில் இதற்கென தனியாக இன்டக்ஷன் ஸ்டவ் வைத்திருந்தார்கள்.

கட்டாயம் செய்ய வேண்டியவை:

எனக்கு இருந்த அறிகுறிகள் :
காய்ச்சல்
தலைவலி
உடம்புவலி
இருமல்
வயிற்றுப்போக்கு
மணம் (வாசனை)தெரியவில்லை
சுவை தெரியவில்லை

கொரொனா நோய் அறிகுறிகள் உங்களுக்கு இருப்பின் தயவுசெய்து உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் சுற்றத்திற்கு, குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி.

அறிகுறிகள் இருப்பின் தயங்காது அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

பாசிடிவ் வந்தால், வார்டில் சேர வரும்போது, மேலே குறிப்பிட்டுள்ள ‘அவசியம் எடுத்து வர வேண்டிய பொருட்களை’ எடுத்துவாருங்கள்.

உங்களுக்கு ஏதேனும் நோய்கள் இருப்பின், அறுவை சிகிச்சை செய்திருப்பின் அதற்கான குறிப்பு அட்டைகள், நோட்டுகள், மருந்து மாத்திரைகளைக் கட்டாயம் எடுத்து வாருங்கள். உங்கள் மருத்துவர்களிடம் மறக்காமல் தெரியப்படுத்துங்கள்.

வார்டில் கட்டாயம் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். (அந்த மாஸ்க்கை சரியான முறையில் அப்புறப்படுத்தி விடுங்கள் மக்களே. மருத்துவமனையில் கொடுக்கும் மாஸ்க்கை வாங்கி மடித்து வைத்துவிட்டு, இரண்டு, மூன்று நாட்களுக்கெல்லாம் ஒரே மாஸ்க்கை அணிந்து கொண்டு இருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்.)

பாரபட்சம் பார்க்காமல் எல்லாவற்றையும் சாப்பிடுங்கள். அதிகமாக, மிக அதிகமாக நீர் அருந்துங்கள்.

முக்கியமான ஒன்று, வார்டிலும் உங்களை நீங்கள் தனிப்படுத்திக் கொள்ளுதலே சாலச் சிறந்தது. திருவிழாவுக்கு வந்ததைப் போல ரவுண்டு கட்டி உட்கார்ந்து சாப்பிடுபவர்களைப் பார்க்கும் போது, எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் முறையாக உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் cross infection க்கு வழிவகுத்து, உங்களுக்கு குணமடைய நாட்கள் அதிகமாகலாம்.

மற்ற வார்டைப் போல இங்கே நம்மைப் பார்த்துக் கொள்ள குடும்பத்தினர் இருக்க மாட்டார்கள். உங்களைப் பார்க்க உறவினர்கள் பார்க்க மாட்டார்கள். கொஞ்சம் கடினமான சூழல் தான். உங்கள் மனஇறுக்கத்தைப் போக்கிக் கொள்ள புத்தகங்கள், பாட்டு என மடைமாற்றிக் கொள்ளுங்கள். உடல்நலத்திலும் மனநலத்திலும் என்ன பிரச்சனையென்றாலும் அங்குள்ள மருத்துவர்களுக்கோ, செவிலியர்களுக்கோ தெரியப்படுத்தி சரிசெய்து கொள்ளுங்கள். இதுவும் ஒரு சாதாரண காய்ச்சல் போல தான்.

முறையான மருந்துகளோடும், சரியான உணவோடும் நம்மால் இதை எளிதில் கடந்து வர முடியும் என்கிற நம்பிக்கை மிக முக்கியம். இன்றைய சூழலில் உடல்நிலையை விட, மனநிலை மிக முக்கியம். பொருளாதாரம், அடுத்த மாச செலவு என எல்லா சுமைகளையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிடுங்கள். உடல்நிலை சரியானதும் அந்தப் போராட்டத்தை எல்லாம் கவனித்துக் கொள்ளலாம்.
மீண்டும் சொல்கிறேன். ‘நாம் உயிரோடிருக்கிறோம்’ என்பதே மிகப் பெரிய விசேஷம் தான்..

உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு: ‘பக்கத்துல இருந்து பார்த்துக்க முடியலையே’ ன்னு வருத்தப்படாதீர்கள். அதற்கு பதிலாக அவ்வப்போது அவர்களை அலைபேசியில் அழைத்து பேசி உற்சாகப்படுத்துங்கள். அவர்களின் மனநலத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.” நாங்கள் இருக்கிறோம். மீண்டு வருவாய்” என்ற நம்பிக்கையை எப்போதும் ஏற்படுத்துங்கள்.
ஏனெனில்,

“நம்பிக்கை.. அதானே எல்லாம்♥”

ஹைக்கூ கவிதையின் பண்புகள்

ஹைக்கூ கவிதையின் பண்புகள்  முனைவர். ம.ரமேஷ்.

ஹைக்கூச் சிறப்பிதழ்

 

ஹைக்கூ கவிதைகளைக் குறித்து முனைவர் பட்டத்துக்காக ஆராய்ந்த நிர்மலா சுரேஷ் அவர்கள் ஹைக்கூவின் பண்புகளாகப் பின்வருவனவற்றை எடுத்துரைக்கிறார். இக்கருத்துக்கள் ஹைக்கூ கவிதையை புரிந்துகொள்ள பெரிதும் உதவும்.

 • மூன்றடிகளால் பாடுவது.
 • ஹைக்கூ கற்பனையை ஏற்காது.
 • ஹைக்கூ உவமை, உருவகங்களைப் பயன்படுத்தாது.
 • ஹைக்கூ உணர்ச்சியை வெளிப்படையாய்க் கூறாது.
 • ஹைக்கூ தன்மைப் பாங்கினைத் தவிர்க்கும்.
 • ஹைக்கூ கவிதைக்குள்ளே ஒரு சொல் மட்டும் குறியீடாய்ப் பயின்று வருதல் இல்லை.
 • ஹைக்கூ இருண்மையை மேற்கொள்ளாது.
 • ஹைக்கூவில் நுண்பொருண்மை இல்லை.
 • கவிஞன் தன் கருத்தை ஏற்றிச் சொல்லாமை.
 • பிரச்சாரமின்மை.
 • எளிமையாகக் கூறுவது.
 • சொல்லுவதைக் காட்டிலும் சொல்லாமல் விடுவது.
 • சின்ன உயிர்களையும் சிறப்பித்துப் பாடுவது.
 • மின்னல் என வரும் ஈற்றடி அமைப்பினைக் கொண்டதாக இருப்பது.
 • மெல்லிய நகைச்சுவையுணர்வு இழையோடியிருக்கும்படி அமைவது.
 • இயற்கையைப் பாடுவதுடன் இயற்கையை மனித உணர்வுகளோடு இணைத்துப் பாடுவது.
 • ஆழ்மன உணர்வுகளும் மெல்லிய சோகமும் இழையோடும்படி அமைவது. 
 • பிற உயிர்களைத் தனக்கு இணையாக மதித்துப் பாடுவது.

என்ற கருத்தை ஹைக்கூ படைப்பாளர்களும், வாசகர்களும் கருத்தில் கொண்டு ஹைக்கூ கவிதைகளை அணுக வேண்டும்.

ஹைக்கூ – சொல் விளக்கம்

‘ஹை’ என்பதற்கு ஜப்பானிய அடிச் சொல்லுக்கு அணுத்தூசி, கரு, முழுமையான கரு என்ற பொருள் உண்டு. ‘கூ’என்பது சொற்றொடர், வெளிப்பாடு, வாக்கியம், பகுதி, ஒரு வரி, ஓர் அடி, ஒரு செய்யுள், ஒரு கவிதை என்றும் பொருள் தருகிறது ஜப்பானிய அகராதி. (நிர்மலா சுரேஷ், ஹைக்கூக் கவிதைகள் ஆய்வு நூல், ப.15.)

இவற்றை இணைத்துப் பார்க்கையில் ஹைக்கூ என்பது கரு போன்றும், உயிரணு போன்றும் உருவானதொரு கவிதை என்னும் முழுப்பொருளைத் தரும். மேலும் வளர்ச்சிக்கும் விரிவுக்கும், ஒரு கருவுக்கு உள்ளிருக்கும் இன்னொரு கவிதைக் கருவைக் காண்பதற்கும் ஹைக்கூ என்ற சொல் சிறப்பாக அமைந்திருப்பதைக் காணலாம்.

ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதை ஹொக்கூ என்றே அழைக்கப்பட்டது. பிறகு ஹைகை என்று திரிந்து ஹைக்கூ என்றாயிற்று. ‘Haiku’ என்ற சொல்லுக்கு இணையாகத் தமிழில் ஹைகூ, ஹைக்கூ, ஹைய்கு, ஹொக்கு, அய்க்கூ, ஐக்கூ என்ற சொல்லாட்சிகளும், அதன் வடிவத்தைச் சுட்டும் வண்ணம் துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்பா, அகத்தியக் கவிதை, கடுகுக் கவிதை, குட்டைக் கவிதை, குறுங்கவிதை, நறுக் கவிதை, மத்தாப்பூக் கவிதை, மின்மினிக் கவிதை, வாமனக் கவிதை முதலான பெயர்களாலும் அடையாளப்படுத்தப்படுகிறது. இன்று ஹைக்கூ என்ற சொல்லாட்சியே தமிழ் இலக்கிய உலகில் இடம்பெற்றுள்ளது.

ஹைக்கூ வாசிப்பு முறை: 

ஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3 அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும் (மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மூன்றாவது அடி என்ன சொல்லவரும் என்று சிந்தனையில் மூழ்க வேண்டும்… மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி நாம் சிந்தித்த கருத்தைப் பிரதிபலிக்காது எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும்.

ஹைக்கூவும் வாசகனும்:

ஹைக்கூ ஒரு காட்சியைக் காட்டுகிறது. அதைப்பற்றிச் சொல்வதில்லை. அதன் விளைவான உணர்ச்சிகளையும் சொல்வதில்லை, படிப்பவரின் கற்பனைக்கே அவைகளை விட்டுவிடுகின்றது.

எழுதும்போது கவிஞனுக்கும் கருப்பொருளுக்கும் ஒரு சிறு இடைவெளிகூட இல்லாமல் எண்ணங்களைக் கலையவிடாமல் நேரடியாகச் சொல்லும்போது கவிஞனின் உணர்வுக்கும், வாசகனின் மனதிற்கும் கவிதை ஒரு பாலமாக அமைந்து நேரடித் தொடர்பை உண்டாக்கிவிடுகிறது.

கவிஞனின் எண்ணம் முழுவதையும் ஹைக்கூ வெளிப்படுத்துவதில்லை, ஹைக்கூ கவிதைகளைப் புரிந்துகொள்வதில் வாசகனுக்கு மிகப்பெரிய பங்குண்டு ‘ஹைக்கூ ஒரு பொருளை சுட்டிக் காட்டுவதோடு நின்றுவிடும், வாசகனே அதில் மறைந்திருக்கும் உணர்ச்சிகளைத் தேடித் துருவிக் கண்டுபிடித்து சுவைக்க வேண்டும்.

மேலும், ஈரோடு தமிழன்பன் அவர்கள் ‘ஹைக்கூ முழுமையானதாகவோ, தெளிவான கருத்துத் தெறிப்புடனோ இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாசகன் தனது கைவசம் கொஞ்சம் வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஹைய்குவைப் படிக்க வேண்டும். அவை தேவைப்படலாம். அவன், தனது அனுபவங்களையும், அனுமானங்களையும், கற்பனைகளையும் எடுத்துக் கொண்டு சென்றால், தானும் படைப்பாளியோடு ஒரு பங்குதாரராகிப் பயனை இதயக்களத்தில் வரவு வைக்கலாம். வாசகனும் கவிஞனோடு சேர்ந்து ஹைய்குவை மணந்துகொண்டு அவனுக்கு ஒரு விதத்தில் சகலையாகி விடுவதைத் தவிர வேறு வழியில்லை’ (தமிழன்பன், சூரியப் பிறைகள், ப.10.) என்று குறிப்பிடுவதிலிருந்தும் ஹைக்கூ கவிதையைப் புரிந்து பொருள் கொள்வதில் வாசகன் எந்த அளவுக்கு இன்றியமையாதவனாக விளங்குகின்றான் என்பதை உணரலாம்.

ஹைக்கூவில், நாம் காட்டும் காட்சி அல்லது நிகழ்ச்சி இயற்கையைப் பற்றி, மனிதனைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி ஓர் அரிய உண்மையை உணர்த்துவதாக, வாசகன் உள்ளத்தில் ஒளியேற்றுவதாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஹைக்கூ எழுத வேண்டிய அவசியமில்லை (அப்துல் ரகுமான், சோதிமிகு நவகவிதை, ப.44.) என்பார் அப்துல் ரகுமான்.

ஹைக்கூவின் மரபு குறித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கூற்று (அப்துல் ரகுமான், சோதிமிகு நவகவிதை, ப.44.)

ஹைக்கூவில் நாம் கடைபிடிக்க வேண்டிய மூன்று முக்கிய மரபுகள் உண்டு. 

1. ஹைக்கூவில் முதல் இரண்டடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும்.

2. மற்றொரு மரபு ஹைக்கூவின் மொழி அமைப்பு. ஹைக்கூவின் மொழி ஊழல் சதையற்றமொழி. தந்தி மொழியைப்போல், அவசியமற்ற இணைப்புச் சொற்களை விட்டு விட வேண்டும். 

3. உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.

ஹைக்கூவுக்குத் தலைப்பிட்டு எழுதக் கூடாது. ஒரு ஹைக்கூவிற்கு இரண்டுக்கு மேற்பட்ட அல்லது குறைந்த பட்சம் இரண்டு உட்கருத்தாவது (குறியீடு போல; உட்பொருள்) இருக்க வேண்டும். ஹைக்கூவுக்குத் தலைப்பிடக் கூடாது என்பதற்கான காரணம் இதுதான்: தலைப்பைத் தாண்டிச் சிந்திப்பதைத் தடை செய்கிறது. ஒரு ஹைக்கூவின் உட்பொருள் (குறியீடு போல்) விரிந்து செல்வதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு ஹைக்கூக்கள் பெரும்பான்மையும் ஒற்றைப் பரிமாணத்தில்தான் வருகின்றன என தன் வருத்தத்தைப் பதிவுசெய்வார் கோவை ஞானி. ஒரு உண்மையான ஹைக்கூ குறைந்தபட்சம் இரண்டு உட்பொருளையாவதுத் தாங்கி நிற்பது சிறப்பு.

மேற்கண்டவற்றை ஹைக்கூப் படைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஹைக்கூவின் அடையாளமும், அழகும், ஆற்றலும் இவற்றில்தான் இருக்கின்றன என்றால் மிகையாகாது.

எல்லா கால்தடமும்
ரசிக்கும்படி இருக்கும்
கடற்கரையோரம்

எந்தத் திசை
தெரியாமல் சுற்றும்
வீடுகளில் வாஸ்து மீன்

முனைவர்.ம.ரமேஷ்