காமெடிக்கு மறு பெயர்…ஜெர்ரி லூயிஸ்..

காமெடிக்கு மறு பெயர்…

Description: C:\Users\nice day\Downloads\jerry luis.jpg

ஹாலிவுட்டைக் கலக்கிய காமெடியன்களின் வரிசையில் தலையாய நபரை அறிவோம். த ஒன் அன் ஒன்லி சார்லி சாப்ளின். அடுத்து நின்றவர்கள் பாப் ஹோப், லாரல் ஹார்டி, நார்மன் விஸ்டம், ஜெர்ரி லூயிஸ்… கடைசிப் பெயரை எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறதா? நாகேஷ் தன் குரு இவர் என்பாரே அடிக்கடி, அவரேதான்! ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் அறிமுகக் காட்சி, அவரது ஓஹோ புரடக்‌ஷன்ஸ் மேஜையின் மீது இவர் படம் இருக்கும் ஷாட்டில்தான் ஆரம்பமாகும். இவரைத்தான் சார்லி சாப்ளினின் வாரிசு என்பார்கள். ஏன், அவரையே மிஞ்சிவிட்டார் என்பவர்களும் உண்டு. அந்தத் ‘தங்க விலை பவுனுக்கு 200 ரூபாய்’ காலத்திலேயே 1000 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தவர்.

காமெடி என்றாலேயே வசனம் என்றாகிவிட்ட இந்தக்கால ரசிகர்களுக்கு இவர் எந்த ஒரு வார்த்தையும் இன்றி நாலைந்து நிமிடத்துக்கு தனி ஒருவராகவே முழு ஆக்‌ஷனையும் தன் மேல் போட்டுக் கொண்டு, ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அரங்கத்தைக் குலுங்க வைப்பது அட, இப்படிக்கூட ஒரு பொற்காலம் இருந்ததா என்று அதிசயிக்க வைக்கும். இல்லாத டைப் ரைட்டரில் லெட்டர் அடிப்பது போல அவர் அபிநயிப்பதும் (‘Who’s minding the Store?’) அடுக்களைத் திண்டில் அமர்ந்து கொண்டு ஒரு முழு ஆர்கெஸ்ட்ராவை ஃப்ளூட், ட்ரம்ஸ், கிளாரினெட் என்று வாசித்து முடிப்பதும்(‘Cinderfella’) எக்ஸிகியூடிவ் மீட்டிங்கில் எம்.டி கத்துவது போல ஒலிக்கும் பின்னணி இசைக்கு நடிப்பதும் (‘The Errand Boy’) எவராலும், ஆம், எவராலும் மிமிக்ரி பண்ண முடியாத எவர் க்ரீன் காட்சிகள்! (links below)

அப்பா டேனி லூயிஸும் மேடைக் கலைஞர். அம்மாவோ ரேடியோவில் பியானோ வாசிப்பவர். ஆக, வயது ஐந்திலேயே மேடை ஏறிவிட்டார். பின்னால் ஒலிக்கும் கிராமபோனுக்கு நடிப்பார். விழுந்த கைதட்டல்களைப் பார்த்து சான்ஸ்கள் வந்தன. பின்னாள் பிரபல நடிகர் டீன் மார்டினும் இவரும் கூட்டணி அமைத்து நட் கிளப்களில் நிகழ்ச்சிகள்… பிராட்வே மேடைகளில் நடித்தபோது ஒரே நாளில் ஒன்பது ஷோக்கள்! தினம் ஒரு லட்சம் போட்டோக்களை ரசிகர்களுக்கு வீசினர். ‘படிப்படியாக’ என்றால் இவங்கதான். மேடையைத் தொடர்ந்து ரேடியோ நிகழ்ச்சிகள். அப்புறம் டி.வி. பின் ஹாலிவுட் படங்கள். 1949 இல் ‘My Friend Irma’ இல் தொடங்கி பல வெற்றிப் படங்கள்! படங்களில் டீன் பங்கு குறையவே பிரிய நேர்ந்தது. தனியே இன்னும் பிரபலம் அடைந்தார்கள். என்றாலும் ஜெர்ரியுடையது ஜெட் வேகம். இவரை வெச்சு காமெடி பண்ணின தயாரிப்பாளர்களுக்கு காசு கொட்டலாச்சு! பத்தே வருடத்தில் பாரமவுண்டில் 18 மில். டாலரும் லாபத்தில் 60%-ம் என்று அந்த நாளில் ஹாலிவுட்டின் உச்ச சம்பளம் இவருடையதே.

பாடலிலும் ‘அடி’யெடுத்து வைத்தார். ஒரு முறை நடிகை ஜூடி கார்லண்ட் வராததால் அவர் பாடலை இவர் பாட ‘Rock-a-bye’ என்ற அந்த ரிகார்ட் 40 லட்சம் விற்று ப்ரேக் செய்தது ரிகார்டை.

அறிமுகப்படுத்திய ஹால் வாலிஸின் காண்ட்ராக்ட் முடியும் வரை காத்திருந்தார். சொந்தக் கடையை ஆரம்பித்தார். முதல் படம் ‘Cinderfella’. புகழின் உச்சிக்குத் தள்ளிய படம். கிளைமாக்ஸில் அந்த 63 படிகளில் ஸ்டைலாக இறங்கிவந்து ஆடுவார் பாருங்க ஒரு பால் ரூம் டான்ஸ், இப்ப பார்த்தாலும் கிறங்க அடிக்கும். கடைசி ஷாட்டை, இவர் ஆடி முடித்ததும் மற்ற அனேகரும் சேர்ந்து கொண்டு ஆடுவதாக ஒரே ஷாட்டாக அமைத்திருப்பார்கள், அது போனஸ்.

அடுத்த வெற்றி ‘The Nutty Professor.’ பிற்பாடு எட்டி மர்ஃபி நடித்து ரீமேக்குக்கே பார்ட் 2 வந்த படம். தன் தந்தையைப் போலவே கோழையாகிவிடுவோமோ என்று மனம் குறுகும் புரபசர் டாக்டர் கெல்ப் (ஜெர்ரி) ஒரு மருந்தைக் கண்டு பிடிக்கிறார். டெஸ்ட் செய்ய, தானே அதை டேஸ்ட் செய்கிறார். எதையாவது கண்டுபிடித்து யாராவது அதைக் குடித்து மனிதன் பாதி மிருகம் பாதியாக மாறும் படங்கள் வந்த காலம் அது. மருந்தை அருந்திய ஜெர்ரி வலியில் துடிக்கிறார். முகம் அஷ்ட கோணலாகிறது. தசைகள் இழுத்துக் கொள்ள லேபரட்டரி மூலையில் ஒடுங்குகிறார். அடுத்த காட்சி காலேஜ் காம்பஸ். ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் எல்லார் முகத்திலும் அதிர்ச்சி. அபூர்வ வஸ்துவைப் பார்த்த மாதிரி புருவம் உயர..நடந்து வருகிறார், சூபர் ஆணழகராகிவிட்ட ஜெர்ரி. அப்புறம் என்ன, இவர் விரும்பி ஏங்கிய பெண்ணே தேடி வருகிறாள். திடீரென மருந்தின் வலிமை குறைய லேபுக்கு ஓடுவார் சரி செய்ய. கல்லூரி விழாவின் நடுவே சுய ரூபம் வெளிப்பட க்ளைமாக்ஸ்! அமெரிக்க நேஷனள் லைப்ரரியில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள முக்கியமான படங்களில் இது ஒன்று. மத்தவங்க நேசத்துக்கு ஆசைப்படற நாம முதல்ல நம்மை நேசிக்கக் கத்துக்கணும் என்ற பாடத்துடன் முடியும் படம் இது. சிவாஜி 9, கமல் 10 என்றால் இவர் 7. ‘The Family Jewels’ என்ற படத்தில் அந்தக் கோடீஸ்வர சிறுமி தன் ஆறு மாமன்களில் ஒருத்தரைத் தன் கார்டியனாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஆறும் படா கில்லாடிகள்! ஒவ்வொருவரிடமும் அவளை அழைத்துச் செல்லும் டிரைவராகவும் கப்பல் கேப்டன், பைலட், ஃபோட்டோகிராஃபர், சர்க்கஸ் கோமாளி என அந்த ஆறு மாமன்களுமாக ஜெர்ரி காமெடித் துகள் கிளப்பினார். புகழ் பரப்பினார்.

The Errand Boy’ என்ற படம் ட்ரீம் ஃபேக்டரியான ஹாலிவுட்டைச் சுற்றிப் பின்னப்பட்டது. முதலிலேயே சினிமா மாயை பற்றி ஒரு முன்னுரைக் காட்சி வரும். வேர்வை கொட்ட, புஜங்கள் முறுக்கேற ஹீரோ ஒரு மலையுச்சியிலிருந்து அந்தப் பாறையை கீழே தள்ள, பலத்த சப்தத்தோடு அது கீழே வீழும். அடுத்த ஷாட்டில் திரைக்குப் பின்னால் நடப்பதைக் காண்கிறோம். ‘ஒன் மோர் டேக்!’ என்றபடி கீழே நிற்கும் டைரக்டர், ‘பிடியுங்க!’ என்று மேலே எறிகிறார் அந்தப் ‘பாறை’யை!

படத்தின் கதை? கனவுகளுடன் ஹாலிவுட் வந்து சேரும் ஜெர்ரிக்கு ஸ்டூடியோவில் எடுபிடி வேலைதான் கிடைக்கிறது. செட் பிராப்பர்டீஸ் அறையில் இருக்கும் ஒரு பொம்மையிடம், “எங்க ஊரில சின்னப் பையனா இருந்தப்ப ஹாலிவுட் எவ்வளவோ தூரத்தில இருக்குதேன்னு நினைச்சேன், இப்ப இங்க இருக்கிறப்பவும் அதே தூரத்திலதான் அது இருக்கு!” என்று பேசும் காட்சியில் உருக வைக்கிறார். “உனக்குப் பிடிச்சதை நீ நம்பறே!” என்றொரு பதில் வரும் அந்தப் பொம்மையிடமிருந்து. உண்மைதானே? நாமெல்லோரும் அப்படித்தானே இருக்கிறோம்? இப்படி இவர் படங்களில் மெஸேஜுக்கு பஞ்சமில்லை.

பெஸ்ட் காமெடியனான ஜெர்ரி லூயிஸ் பெஸ்ட் டைரக்டர் அவார்டை எட்டுமுறை வாங்கிவிட்டார் ஐரோப்பாவில். இவர் இயக்கும் படம் அதை யார் எழுதினாலும் இவர் படமாகவே இருக்கும், பாரதிராஜாவை மாதிரி. சினிமாவை ஒரு விஷுவல் மீடியம் என்று இவர் அளவுக்கு யாராவது புரிந்து வைத்திருக்கிறார்களா என்றால் சந்தேகம்தான். ‘The Total Filmmaker’ என்று ஒரு விமரிசகர் சொல்கிறார் இவரை.

மறுபக்கம் இவர் ஒரு கலைவாணர் எனலாம். ‘டெலிதான்’ என்பார்கள் அதை. டெலிவிஷனில் மாரத்தான் போல தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சி. 48 வருடமாக குறிப்பிட்ட தினத்தில் நடத்திவந்தார். தசைகள் செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் Muscular Dystropy Association -க்கு இரண்டு பில்லியன் டாலர் வரை சேர்த்திருக்கிறார். 1977 இல் இதற்காக நோபல் பரிசுக்கு இவரைப் பரிந்துரைத்தார் ஓர் அமெரிக்க காங்கிரஸ் மெம்பர்.

2008 -இல் மனித நேயத்துக்கான ஆஸ்கார் பரிசைப் பலத்த கரகோஷத்துக்கிடையே பெற்றார். மனம் உருகினார்: “யாருக்காச்சும் உதவறதுங்கிறது, ஏதாச்சும் செஞ்சு அதுக்கு அப்ளாஸ் வாங்கிக்கிறதுன்னு இதுவரை நான் நினைச்சதில்லே. இந்த அவார்ட் என் நெஞ்சைத் தொட்டுடுச்சு!”

நகைச்சுவையில் நலமாகும் டூர் நிகழ்ச்சிகளை ஐரோப்பா முழுக்க நடத்தியிருக்கிற இவரால் மறக்க முடியாதது ஜனாதிபதி கென்னடி, அவரின் நண்பரும்கூட, அளித்த பாராட்டுதான். “உலகத்தில் மூன்றே விஷயங்கள்தாம் நிஜம். கடவுள், மனிதனின் முட்டாள்தனம், சிரிப்பு. முதலிரண்டுக்கும் நம்மால் எதுவும் செய்ய முடியாது. எனவே, மூன்றாவதை நம்மால் எத்தனை முடியுமோ அத்தனை செய்யவேண்டும்.”

கான்சர், இருமுறை மாரடைப்பு, ஓபன் ஹார்ட் சர்ஜரி, ஓயாத முதுகுவலி என்று ஒரு புறம் சிரமித்தாலும் இடைவிடாமல் உதவிப் பணி நடத்தி பிரமிக்க வைத்தார்.

ரொம்ப ஆச்சரியப்படுகிற விஷயம் இன்றைய ஜாம்பவான்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்கும் ஜார்ஜ் லூகாஸும் இவரின் மாணவர்கள் என்பது. கலிஃபோர்னியா யூனிவர்சிடியில் சினிமாவைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக இருந்திருக்கிறார். அந்த லெக்சர்களின் தொகுப்பு புத்தகமாக வந்துவிட்டது.

“அனேக குழந்தைங்க எதைச் செய்து திட்டு வாங்குமோ அதைச் செய்து துட்டு வாங்கறேன் நான்!” என்பார் ஜெர்ரி. இவர் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது எல்லார் மனதிலும் எழும் உணர்வு அனேகமாக ஒன்றே. ‘சந்தோஷக் களிமண்ணில் வனையப் பட்டிருக்கும் இந்த உலகில் நாம் இத்தனை சீரியஸாக இருக்க வேண்டுமா? யோசித்துப் பார்த்தால் எல்லாமே ஒரு தமாஷ்தானே? வெறுப்புப் போர்வையை விட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுவோம். வாய்விட்டுச் சிரிப்போம்!’

‘ஒரு முறையே பயணிக்கிறேன் நான் இவ்வுலகில்.ஏதேனும் நன்மை என்னால் இயலுமானால், எவரிடமேனும் அன்பு நான் செலுத்த முடியுமானால் செய்யட்டும் நான் அதை உடனே. ஒதுங்கவோ ஒத்திப்போடவோ வேண்டாம். ஏனெனில் ஏகிடேன் இவ்வழியே நான் இன்னொரு முறை!’ இந்த வரியை தன் வாழ்க்கை வரியாக்கிக் கொண்டவர்.

சிரிப்புக்கும் சோகத்துக்கும் இடையே இடைவெளி இல்லை என்பது இவர் கட்சி. சிந்திக்க வேண்டிய விஷயம்.

நன்றி: கே.பி,ஜனார்த்தனன் முகநூல் பதிவு.

என்றென்றும் டி.எம்.எஸ்!

என்றென்றும் டி.எம்.எஸ்.!

Description: C:\Users\nice day\Downloads\tma.jpg

மதுரையில் கச்சேரி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார் தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதர். அரங்கின் வெளியே அவரது புகழ்பெற்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அது தனது பாடலின் ஒலிப்பேழை என நினைத்தபடி அரங்கில் நுழைந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. கூட்டத்தில் அந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தவன் ஒடிசலான ஒரு சிறுவன். கச்சேரி முடிந்ததும் “அப்படியே என்னைப் போலவே பாடுறியே… சென்னைக்கு வா தம்பி உனக்கு எதிர்காலம் இருக்கு” என வாஞ்சையோடு சிறுவனை வாழ்த்திவிட்டுச் சென்றார் பாகவதர். அவர்தான் டி.எம்.சௌந்தரராஜன்!

நீண்ட முயற்சிகளுக்குப்பின்’கிருஷ்ண விஜயம்’ படத்தில் முதல் வாய்ப்பு. சுந்தரராவ் நட்கர்னி இயக்கத்தில் 1950-ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடல்தான் சினிமாவில் அவர் குரலில் ஒலித்த முதல்பாடல். (ஆனால் பாடல் பதிவுவானது 1946-ஆம் ஆண்டு. 4 ஆண்டு இடைவெளிக்குப்பின்னரே படம் வெளியானது). அன்றுமுதல் அரை நுாற்றாண்டுக்காலம் தமிழர்கள் அவரது குரலை ஒருநாளும் கேட்காமல் உறங்கிப்போயிருக்கமாட்டார்கள்.

‘மலைக்கள்ளன்’ படத்தில் நடிகர் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலாக பாடிய ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் டி.எம்.எஸ்ஸைக் கொண்டுசேர்த்தது. அதுமுதல் திரையுலகில் டி.எம்.எஸ் ராஜ்ஜியம்தான். திரையுலகில்11ஆயிரம் பாடல்கள், சில நுாறு மேடைகள், மூவாயிரம் பக்திப்பாடல்கள் என தன் சாதனையைப் பதிவுசெய்தார்.

திருச்சி வானொலி நிலையத்திற்கு டி.எம்.சௌந்தரராஜன் பக்திப்பாடல்கள் பாடுவதற்காக ஒருமுறை சென்றிருந்தார்
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் திருவரங்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னிடமிருந்த பாடலைக் காண்பித்து, ‘நன்றாக இருக்கிறதா? எனப் பார்த்து சொல்லுங்கள்’ என்றார். பாடலைப் படித்துப் பார்த்த டி.எம்.எஸ்ஸின் மனம் மலர்கிறது. அவருக்கு மிகவும் பிடித்த முருகப்பெருமானைப் பற்றியப் பாடல். விடுவாரா? அந்த இளைஞருடைய பாடலைத் தானே திருச்சி வானொலி நிலையத்தில் கொஞ்ச நேரம் முன் பாடினார். பாடலும் புகழ்பெற்றது. எழுதிய கவிஞரும் புகழ்பெற்றார் அவர்தான் கவிஞர் வாலி. ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’என்ற பாடல்தான் அது.

கவிஞர் வாலியை”நீங்கள் இருக்கவேண்டிய இடம் திருச்சி அல்ல; சென்னை! உடனே புறப்பட்டு வாருங்கள். திரைப்படப்பாடல்கள் எழுதலாம்” என்று அழைப்பு விடுத்து விட்டு வந்தார் டி. எம். சௌந்தரராஜன்.கவிஞர் வாலியை இப்படி திரை உலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ். அந்த நன்றியை கடைசி வரையிலும் மறவாமல், ‘இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ் போட்டது’ என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்வார் வாலி!

மும்பையில் உள்ள தனது இன்னொரு மகனின் வீட்டில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்துள்ளார் வாலியின் தாய். “எனது சகோதரனின் வீட்டில் மும்பையில் இருக்கும் அம்மா உங்களைக் காண விருப்பப்படுகிறார்” என டி.எம்.எஸ்ஸிடம் கோரிக்கை வைத்தார் வாலி. உடனே புறப்பட்டு மும்பை சென்று அவரைப் பார்த்து அவருக்கு விருப்பமான இரு பாடல்களைப் பாடி விட்டு வந்தார் டி.எம்.எஸ். அதில்தான், தான் எத்தகையை சிறந்த மனிதாபிமானம் கொண்டவர் என்பதை மிகவும் உணர்வுபூர்வமான விதத்தில் நிரூபித்துள்ளார்.

டி.எம்.எஸ்ஸின் மூத்த மகன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ‘பாகப்பிரிவினை’ படத்தில் பாட அழைத்துள்ளார்கள். மகனின் நிலைமை கண்டு அழுதுகொண்டிருந்த டி.எம்.எஸ்., பாடச் சென்றுள்ளார். வழக்கமாகப் பாடும்போது இரண்டு முறையாவது ஒத்திகை பார்ப்பார் டி.எம்.எஸ். அன்றைக்கு டியூனையும் பாடல் வரிகளையும் கேட்டுவிட்டு ஒத்திகை இல்லாமலே இசையமைப்பாளரிடம் பாடிக்காண்பித்தார். நேராக டேக்குக்குச் சென்றுவிட்டார். ஒரே டேக்கில் பாடலைத் துல்லியமாகப் பாடிவிட்டார். அன்று அவர் இருந்த நிலைக்குக் கச்சிதமாக இருந்தது அந்தப் பாடலின் வரிகள்…

“ஏன் பிறந்தாய் மகனே… ஏன் பிறந்தாயோ… இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய் தங்க மகனே” என்றபாடல் தான் அது.

பாடலைப் பாடிவிட்டு வீட்டுக்கு வந்தால், மகனின் உயிர் பிரிந்திருந்தது.

மகனின் நினைவு வரும் என்பதால் அந்தப் பாடலை மட்டும் எந்த மேடையிலும் பாடக்கூடாது என முடிவெடுத்து வைத்திருந்தார் டி.எம்.எஸ். எத்தனை பெரிய நபர் கேட்டாலும் பாடமாட்டார். வானொலியில் இந்தப் பாடல் ஒலித்தாலும் அணைத்துவிடுவார்.

1959-இல் அந்தப் பாடலைப் பாடிய டி.எம்.எஸ்., தனது நிலைப்பாட்டை ஒருவருடத்தில் மாற்றிக்கொண்டார், வாலியின் தாய்க்காக.

தன்னைப் பார்க்கவேண்டும் என்று விருப்பப்பட்ட வாலியின் தாய், “ஏன் பிறந்தாய் மகனே” பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டதும், துடிதுடித்துப் போய்விட்டார் டி.எம்.எஸ். ஆனாலும் சில நொடிகளில் அந்த முடிவை எடுத்தார். உடல்நலமில்லாமல் இருக்கும் இந்தத் தாயின் விருப்பத்தை உடனே நிறைவேற்றவேண்டும். தனது மனத்தை மாற்றிக்கொண்டு அவர் கேட்டபடியே உருக்கமாகப் பாடினார். “ஏன் பிறந்தாய் மகனே… ஏன் பிறந்தாயோ?”

பாண்டியன் சுந்தரம். நன்றி: படைப்பு முகநூல் குழுமம்

சாதனை அரசிகள்!

நெய் மிளகாய், பிங்க் கொய்யா: புதிய ரகங்களை கண்டுபிடித்து அசத்தும் பட்டதாரி ‘விவசாயி’ ஸ்ரீலஷ்மி! விவசாயிக்கு லாபம் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு இந்த இரண்டையும் சாத்தியமாக்கி வருகிறார் புதுச்சேரியை சேர்ந்த எம்பிஏ பட்டதாரிப் பெண் ஸ்ரீலஷ்மி. பாரம்பரிய பயிர்களில் புதிய ரகங்களை கண்டுபிடித்து விவசாயத்தில் புதிய இலக்கணம் படைத்து வருகிறார் இவர். By Priyadarshini Bharathiraja 14th Mar 2019 15 claps +0 +0 நான் விவசாயியின் மகள் என்று சொல்லவே பலர் சங்கோஜப்படும் காலகட்டத்தில் அப்பாவின் விவசாய அறிவையும் அனுபவத்தையும் பார்த்து வியந்து அவர் வழியிலேயே விவசாயத்துறையில் புதுமைகள் படைத்து வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீலஷ்மி. “புதுச்சேரி மாநிலம் கூடப்பாக்கம் எனது சொந்த ஊர். அப்பா வேங்கடபதி 4ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும் வேளாண் ஆராச்சியில் என்னை வியக்க வைத்த மனிதர். லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து பரிசோதனைக் கூடம் அமைக்கும் அளவு வசதி இல்லாததால் எங்களிடம் உள்ள பணம் மட்டும் பொருட்களை பயன்படுத்தி 1999லேயே சோதனைக் கூடம் அமைத்து புதிய ரக கண்டுபிடிப்புகளை அப்பா செய்து வந்தார். அந்த காலகட்டத்தில் அப்பா பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு சென்று வேளாண் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்று பேசுவதுண்டு. அப்பாவிற்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் என்னையும் உடன் அழைத்துச் செல்வார். பேராசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை எனக்கு புரிந்த வரை அப்பாவிற்கு விளக்கிக் கூறுவேன். இதோடு பேராசிரியர்களின் உரையை பதிவு செய்து வந்து வீட்டிலும் போட்டு கேட்டு அர்த்தம் புரிந்து கொள்வோம். இப்படியாக அப்பாவிற்கு உதவியாக 7 வயதில் தொடங்கிய பயணம் விவசாயத்தின் மீதான ஈர்ப்புக்கு காரணமாகிவிட்டதாகக் கூறுகிறார் ஸ்ரீலஷ்மி. கனகாம்பர பூக்களில் புதிய ரகங்களை விளைவித்து வேங்கடபதி ரெட்டியார் அனைவரையும் அதிசயப்படுத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சவுக்கை, கரும்பு போன்ற பயிர்களில் குறைவான காலத்தில் அதிகப்படியான விளைச்சலை தரக்கூடிய வகைகளை உருவாக்கியுள்ளார். கல்வியறிவு இல்லாவிட்டாலும் விடாமுயற்சியோடு வேளாண் ஆராய்ச்சியில் புதுமைகள் பல படைத்ததை பெருமைப்படுத்தும் விதமாக மத்திய அரசு இவருக்கு ’பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்துள்ளது. அப்பாவிற்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது என்பதை உண்மையாக்கும் விதமாக கான்வென்ட்டில் படித்து, எம்பிஏ பட்டம் பெற்றாலும் விவசாயம் தான் எனது மூச்சு என்று அப்பா வேங்கடபதி வழியில் அவரை பின்பற்றி ஸ்ரீலஷ்மியும் படித்து முடித்த பின்னர் வேளாண் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார். “எம்பிஏ படித்து முடித்த பின்னர் பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு தேர்வான போதும் பிறரிடம் அடிமையாக ஏன் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். விவசாயம் தான் நிறைவான வாழ்கைக்கான அர்த்தம் தரும், இந்தத் துறையில் இருந்தால் மட்டுமே என்னை தனித்துக் காட்ட முடியும் என கருதினேன். அதோடு வேளாண் ஆராய்ச்சியில் எனக்கு வேண்டிய தகவல்களை வழங்க எனக்கு குருவாக அப்பா இருக்கிறார், அவரின் அனுபவமே ஆயிரம் விக்கிபீடியாவிற்கு சமம் என்பதால் விவசாயத்தையே சொந்த தொழிலாக செய்யலாம் என்று முடிவு செய்து அதையே விரும்பி செய்தேன்,” என்கிறார் ஸ்ரீலஷ்மி. 2012ல் மிளகாயில் புதிய ரகமாக நெய் மிளகாய் என்ற ரகத்தை கண்டுபிடித்துள்ளார் இவர். இந்த மிளகாய் சாதாரண மிளகாயை விட காரம் கூடுதல் + சமைக்கும் உணவில் சேர்க்கும் போது நெய் வாசனையை கொடுக்கும் என்பது இதன் ஸ்பெஷல். இதனைத் தொடர்ந்து 2014ல் ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களில் விளையக்கூடிய ஆப்பிள் பழங்களை வெப்பம் மிகுந்த கடலோரப் பகுதிகளிலும் விளைவிக்க முடியும் என்பதை சாதித்து காட்டினார். குளிர்பிரதேசத்தில் விளையக்கூடிய ஆப்பிளுக்கு நிகராக அதிக சாறு நிறைந்ததாகவும், சுவை மிகுந்ததாகவும் உள்ளது. இவர் உருவாக்கி உள்ள ஆப்பிள் மரத்தில் ஆயிரக்கணக்கான பூக்கள் பூத்து குலுங்கி இருக்கின்றன. ஆப்பிள் வகைகளை கிராஃப்டிங் செய்து இனவிருத்தி செய்யவும் ஸ்ரீலஷ்மி திட்டமிட்டுள்ளார். 2016ல் ஆப்பிள் பழம் போன்று பெரிய அளவில் நாவல்பழ ரகம், 2 அடி உயரம் கொண்ட கத்தரிக்காய், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறி வகைகளையும் விளைவித்து வியக்க வைத்துள்ளார். பொதுவாக கத்திரிக்காய் செடியில் இருந்து 6 மாதம் மட்டுமே விளைச்சல் எடுக்க முடியும், அதிலும் நோய் தாக்குதலால் மகசூல் பாதிக்கும். இதனை கட்டுப்படுத்தும் விதமாக கிராஃப்டிங் செய்து ஒரே செடியில் கத்திரிக்காய், மிளகாய், தக்காளி (இவை மூன்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை) என மூன்றையும் ஒட்டுகட்டி விளைச்சல் எடுக்க முடியும். இது செடி போன்று இருக்காமல் மரம் போன்று இருப்பதால் 5 ஆண்டுகள் விளைச்சல் கொடுக்கும், மேலும் சுண்டைக்காயை வேரில் போட்டு ஒட்டுகட்டுவதால் மரம் வளர அதிக நீர் தேவையில்லை, வறட்சியையும் சமாளிக்கும் என்று தனது ஆராய்ச்சிகளின் பலன்களை மடை திறந்த வெள்ளமென கொட்டுகிறார் ஸ்ரீலஷ்மி. 2018ம் ஆண்டு முதல் கொய்யா விவசாயத்தில் பல புதிய ரகங்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார் ஸ்ரீலஷ்மி. சந்தையில் தற்போது வெள்ளை கொய்யா மட்டுமே கிடைக்கிறது. இதில் வைட்டமின் சி மட்டுமே இருப்பதால் இதனை சாப்பிட்டால் வயிறு நிறையும். இதுவே சதைப்பகுதி பிங்க் அல்லது சிகப்பு நிறத்தில் இருக்கும் கொய்யாவை சாப்பிட்டால் மார்பக புற்றுநோயை தவிர்க்கலாம், சர்க்கரை நோய் கட்டுப்படும். ஆனால் இந்த வகை கொய்யா சந்தையில் கிடைப்பதில்லை என்பதோடு அதிக விலையும் கூட. வளர்ந்த செடியின் நுனிமொட்டை வெட்டி எடுத்து செடிகளாக வளர்க்கும் குளோனன் முறையில் இந்தச் செடிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து வளர்த்து, பிறகு வயலில் நடும்போது 2 மாதத்திலேயே செடிகளில் கொய்யா பிஞ்சுகளைக் காண முடிந்தது. நிச்சயமாக ஒரு ஏக்கர் நிலத்தில் இந்த வகை கொய்யா ரகங்களை நட்டு எங்களின் அறிவுறுத்தல்கள்படி பராமரித்து வந்தால் ஓராண்டில் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும் என்று உத்தரவாதம் தருகிறார் ஸ்ரீலஷ்மி. பட உதவி: தினமலர் புதிய ரக கண்டுபிடிப்புகள் அனைத்துமே எங்களது பண்ணையில் 2 ஆண்டுகள் வரை சோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே விவசாயிகளிடத்தில் வழங்கப்படுகிறது. விதைகளாக விவசாயிகளிடம் வழங்கினால் அவற்றில் சம அளவிலான மகசூல் எடுப்பது சிரமம் என்பதால் குளோனன் முறையில் செடிகளை வளர்த்து கொடுக்கிறோம். இந்த குளோனன் முறையில் வளர வைக்கும் செடிகளில் காய்க்கும் காய்கள், பழங்கள் சமமான எடை மற்றும் அளவில் இருக்கும் என்பதால் விவசாயிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாது என்கிறார் ஸ்ரீலஷ்மி. அப்பாவின் அனுபவம் அறிந்தவர்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் கிடைத்த விளம்பரம் காரணமாக எங்களின் புதிய ரகங்கள் பற்றி அறிந்தவர்கள் எங்களை அணுகி செடிகளை வாங்கிச் சென்று தங்களது விளைநிலத்தில் பயிரிட்டு வருகின்றனர். செடிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் தாங்களும் வருமானம் பெறுவதாகக் கூறுகிறார் ஸ்ரீலஷ்மி. அதிக மகசூல் தரும் கொய்யாச்செடிகளை புதிய முறையில் வளர்த்து ஜெர்மனியைச் சேர்ந்த இன்டர்நேஷனல் பீஸ் யூனிவர்சிட்டியின் (International Peace University ) டாக்டர் பட்டத்தைப் பெற்றுள்ளார். வேளாண் ஆராய்ச்சியில் இதுவரை செய்தது எல்லாம் ட்ரெய்லர் தான் இனி தான் மெயின் பிச்சரே என்கிற ரீதியில் உற்சாகம் குறையாமல் பேசும் ஸ்ரீலஷ்மி, கொய்யாவில் 50 புதிய ரகங்களை கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளார். 2 அல்லது 3 மாதங்களில் ஆராய்ச்சி முடிந்து புதிய ரக கொய்யா தயாராகிவிடும் என்கிறார் இந்த பெண் விவசாயி. பெண்களுக்கு ஏற்ற துறை வேளாண் ஆராய்ச்சித்துறை ஆனால் ஃபிளைட் கூட எளிதில் ஓட்டிவிடும் இன்றைய பெண்கள் இந்தத் துறையை திரும்பிக் கூட பார்க்காதது வருத்தமாக இருப்பதாகக் கூறுகிறார் ஸ்ரீலஷ்மி. கண்டுபிடிப்பிற்கான ஆர்வமும், சரியான வழிகாட்டுதலும் இருந்தால் இந்தத் துறையைப் போல பெண்களுக்கு எளிமையான துறை வேறு எதுவுமே இல்லை. எல்லா பெண் குழந்தைகளையும் போல அப்பா தான் என்னுடைய முன்மாதிரி என்று சொல்லும் ஸ்ரீலஷ்மி, மறைந்த அப்துல் கலாம் ஐயாவின் விருப்பத்தின்படியே தான் வேளாண் ஆராய்ச்சியாளராகியுள்ளதாகக் கூறுகிறார். நான் 7 வயதாக இருக்கும் போதே அப்துல்கலாம் ஐயா ராஷ்ட்ரபதி பவனுக்கு எங்களை குடும்பத்துடன் அழைத்து அப்பாவை பாராட்டினார். அப்போது அப்பா இந்தத் துறையில் சாதிப்பது போல நானும் சாதிக்க வேண்டும் அப்போது தான் தனித்துவத்துடன் இருக்க முடியும் என்று அறிவுரை கூறினார். அவரின் ஊக்கத்தினாலும் அப்பாவுடன் சிறு வயது முதல் பயணித்து வந்த காரணத்தாலும், தான் முழுக்க முழுக்க கணினி சார்ந்த பட்டப்படிப்பை படித்தாலும் விவசாயத்துறைக்கே முக்கியத்துவம் அளித்ததாக பெருமையோடு சொல்கிறார் ஸ்ரீலஷ்மி. எப்போதுமே ஒரு செயலை செய்வதற்கு முன்னர் லட்சம் முறை யோசிக்கலாம் ஆனால் அதனை செய்யத் தொடங்கிய பின்னர் அது சரியா, தவறா என்று ஆராய்ச்சி செய்யக் கூடாது. இதை செய்து முடிக்க வேண்டும் என்றால் எப்பாடு பட்டாவது அதை சாதித்து காட்ட வேண்டும். இலக்கை அடைவற்காக வாழ்வில் எந்த ரிஸ்க்கையும் எடுக்கலாம். விமர்சனங்களை தூக்கி எறிந்து வெற்றியில் மட்டுமே குறியாக இருந்து அதை நோக்கி கவனம் செலுத்தினால் லட்சியம் நிறைவேறும் என்பதே ஸ்ரீலஷ்மியின் தொடர் சாதனைகளுக்கான உரம்.

நன்றி: https://yourstory.com/

ஹாங்காங்கில் நடந்த ஆசிய பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஆர்த்தி அருண் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பல்வேறு நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்ட இந்த தொடரில் இவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மருத்துவரான இவர் சென்னையில் வசித்து வருகிறார். மேலும் பல்மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருகிறார். ஏற்கனவே கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் பளுதூக்கும் போட்டியில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த இவர், கடந்த ஆண்டு கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் மாஸ்டர்ஸ் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.

இதனையடுத்து ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றார் ஆர்த்தி அருண். வெற்றிக்கு பிறகு சென்னை திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்த்தி அருண், தங்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். மேலும் காமன்வெல்த் மற்றும் உலக பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 5,000 ரூபாய் முதலீட்டில் பெண்கள் பிரத்யேக ஆடை தயாரிப்பில் கால் பதித்த பெண் தற்போது பல கோடிகளுக்கு அதிபதி ஆகியுள்ளார்.

பொள்ளாச்சியில் பிறந்து வளர்ந்து படித்த ஸ்ரீநிதி மஞ்சுளா காதலித்து திருமணம் செய்த பின் கூட்டுக் குடும்பமாக ஒரு சராசரி மனுஷியாகத்தான் வாழ்ந்து வந்தார். இவருக்கு சக்தி ஆதர்ஷ், நிஜிந்திரவாணன் என்ற பெயர் கொண்ட 2 பிள்ளைகள்.
ஆரம்பத்தில் நன்றாக சென்ற வாழ்க்கை நாளடைவில் ஸ்ரீநிதியின் முன்னேற்றத்துக்கு அவரது கணவரே தடை கல்லாக இருந்துள்ளார்.

இதனால் எப்படியாவது வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என முடிவு எடுத்த ஸ்ரீநிதி தையல் பயிற்சியில் சேர்ந்தார். பலர் இவருடைய உழைப்பை பார்த்து கேலி, கிண்டல் செய்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தால் ஒவ்வொரு படியாக மேல் எடுத்து வந்தார்.அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஸ்ரீநிதியின் வளர்ச்சிக்கு அவரது மாமியார் ரத்னகுமாரி ஆதரவா இருந்து பெரிதும் உதவி உள்ளார். மேலும் ஸ்ரீநிதி பணி நிமித்தமாக இருக்கும்போது அவரது குழந்தைகளையும் நன்றாக கவனித்துக் கொண்டார் மாமியார். ஆனால் சில நாட்களில் மாமியார் இறந்து விட ஸ்ரீநிதி 2004 -ல் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.ஒரு தையல் மெஷின், ஒரு உதவியாளர், 5,000 ரூபாய் முதலீட்டில் தொழிலை ஆரம்பித்த ஸ்ரீனிதி பெண்களுக்கான பிரத்யேகமான சேலைகளையும் வித்தியாசமான டிசைன்களுடன் கூடிய ஜாக்கெட்டுகளையும் தைத்துக் கொடுக்க ஆரம்பித்தார். தற்போது ஸ்ரீநிதியிடம் 50 பேர் வேலை செய்கிறார்கள்.

மேலும் தமிழகம் முழுவதும் தன்னுடைய நிறுவனமான `ஆதுநிஸ்’ கிளைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளார் ஸ்ரீநிதி. மேலும் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகளுக்கு ஆடை வடிவமைப்பு தொழிலை கற்றுக் கொடுக்கவும் ஸ்ரீநிதி திட்டமிட்டுள்ளார். தொழில் தொடங்க பெரிய அளவுல பணம், முதலீடுனு இருக்கணுங்கிற அவசியமில்லை.நமக்கு என்ன திறமைன்னு கண்டுபிடிச்சு, அதையே மூலதனமாக்கி உழைத்தால் நிச்சயம் வெற்றி என்கிறார் ஸ்ரீநிதி.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்றத்திற்கான தேர்தலில் 5 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இதில் 22 வயதே நிரம்பிய டாக்டர் அஷ்வினி சுகுமார் என்கிறவரும் போட்டியிட்டார். இவரது தந்தை சுகுமார் அதிமு பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவராக 22 வயது பெண் மருத்துவர் அஷ்வினி மாவட்டத்தில் அதிக வாக்கு வித்தியாசமாக 2547 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் பதிவான 6982 வாக்குகளில் டாக்டர் அஷ்வினி சுகுமாருக்கு 4187 வாக்குகள் கிடைத்த நிலையில் இவர் தனக்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்ற வேட்பாளரான ஷீபாவை விட 2547 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.இதன்மூலம் மாவட்டத்தில் குறைந்த வயதில் வெற்றி பெற்ற வேட்பாளராகவும், மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளராகவும் டாக்டர் அஷ்வினி சுகுமார் சாதனை படைத்துள்ளார்.தனது வெற்றி குறித்து டாக்டர் அஷ்வினி தெரிவிக்கையில் புதுகும்மிடிப்பூண்டியில் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்வது, ஊராட்சிக்கு என தனியாக சேவை மையம் ஏற்படுத்தி தருவது, ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மையங்கள் அனைத்து

பகுதிகளிலும் ஏற்படுத்தி தருவது என தேர்தலில் தான் மக்களுக்கு தந்த 15 வாக்குறுதிகளையும் நிறைவேற்றி தருவேன் என்றார்.மேலும் ஊராட்சி பணியோடு சேர்ந்து தனது ஊராட்சியில் மருத்துவ சேவையையும் செய்ய தயாராக உள்ளதாக புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி தெரிவித்தார். நன்றி : தினமணி

அமெரிக்கா, ரஷ்யா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் அமைத்துள்ள சர்வதேச ஆய்வு மையத்தில் 6 வீரர்கள் தங்கியிருந்து தொடர்ந்து ஆராய்ச்சி வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தோராயமாக ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் மூன்று பேர் பூமிக்கு திரும்புவர், பின்னர் அதற்கு பதிலாக புதிதாக மூவர் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்படுவர்.
அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா கோச் என்ற விண்வெளி வீராங்கனை கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். தொடர்ந்து 10 மாதங்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த அவர் இன்று பூமி திரும்பியுள்ளார். கஜகஸ்தானில் விண்வெளி ஓடம் மூலம் அவர் தரை இறங்கியுள்ளார். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 328 நாட்கள் தங்கியிருந்து, அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

சண்டிகரை சேர்ந்த இளம்பெண் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்த19 வயதினருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சண்டிகர் வீராங்கனை காஷ்வி கவுதம் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.

சண்டிகர்-அருணாச்சல பிரதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் களமிறங்கிய சண்டிகர் அணி 50 ஓவர்களில்4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து. பின்னர் களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணி காஷ்வி கவுதமின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 25 ரன்களுக்குள் சுருண்டது.

அபாரமாக பந்து வீசிய காஷ்வி கவுதம் மொத்தம் உள்ள பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்து சாதனை படைத்தார்.

காஷ்வி கவுதம் மொத்தம் 29 பந்துகளை வீசினார். அவர் வீசிய29 பந்துகளில் ஆறு டாட் பந்துகள், மீதமுள்ள 23 பந்துகளில்12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அருணாச்சல பிரதேசத்தின்10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

94 வயது சமூகப்போராளி! கிருஷ்ணம்மாள் ஜெகனாதன்.

தமிழகத்தை சேர்ந்த 94 வயது சமூக போராளி கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருதை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. யார் இவர்? இவர் தமிழக மக்களுக்கு ஆற்றிய பங்குதான் என்ன?

காந்தி, வினோபா பாவே என பெருந்தலைவர்களோடு பயணித்து, நிலமற்ற மக்களுக்கு நிலம் வாங்கி தந்த கிருஷ்ணம்மாளின் நீண்ட நெடிய விருது பட்டியலில் இப்போது இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷனும் சேர்ந்துள்ளது.

பதின்பருவத்தில் தொடங்கிய அவரது போராட்டம், காலங்கள் கடந்தும் அதே வீரியத்தோடு பயணிக்கிறது. குடிசையில் வசிக்கும் எண்ணற்ற குடும்பங்களின் நிலை, அவர்களை முன்னேற்ற என்ன செய்யலாம் என்பது தொடர்பான உரையாடல் இல்லாமல் யாரும் அவரிடம் இருந்து விடைபெற முடியாது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட, கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கும், குடிசை வீடுகளில் சிரமப்படும் பெண்களின் நிலைமையை சரிசெய்ய என்ன திட்டங்களை வைத்துள்ளார் என்பது குறித்து பேசினார். 1950களில் சுதந்திர போராட்ட வீரர் வினோபா பாவே தொடங்கிய பூமிதான இயக்கத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை இன்றும் பின்பற்றுபவர்.

“மனிதனுக்கு வீடு அவசியம்”

”தன்மானத்தோடு வாழ்வதற்கு ஒரு மனிதனுக்கு வீடு அவசியம். ஒரு தரமான வீடு இருந்தால், அவனது வாழ்க்கையில் பாதி சிரமங்களை குறைத்துவிடலாம். நேரம், காலம் பார்க்காமல் உழைக்கும் மக்களுக்கு ஒரு காணி நிலம்கூட சொந்தமில்லாமல் இருப்பது சாபக்கேடு,” என வீடில்லா மக்களின் வலியை பற்றிய உரையாடலில் என்னிடம் பேசினார்.

கணவர் ஜெகநாதனோடு அவர் தொடங்கிய எண்ணற்ற சமூக பணிகளில் மிக முக்கியமான ஒன்று லாபிட்டி(Land for the Tillers’ Freedom). உழுபவனுக்கு நிலம் சொந்தம், என்பதை கொள்கையாகக் கொண்ட அமைப்பு லாபிட்டி. நாகப்பட்டினத்தில், கீழ்வெண்மணி கிராமத்தில், நில உரிமையாளர்களால், 44 தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள் உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவம் அவர் மனதை அதிகம் பாதித்தது. இந்த பாதிப்பின் விளைவாக உருவானதுதான் லாபிட்டி.

நில உரிமையாளர்களிடம் பேசி, குறைந்த விலைக்கு நிலங்களை பெற்று, வங்கிக்கடன் அல்லது நன்கொடை மூலமாக வாங்கி நிலமற்ற உழைப்பாளிக்குக் கொடுக்கும் இயக்கமாகச் செயல்பட்டது லாபிட்டி. நிலத்தை வாங்கும் ஏழை உழைப்பாளி, குறைந்த வட்டியை வங்கியில் செலுத்தி, நிலத்தை சொந்தமாக்கிக்கொள்வார்.

இந்தமுறையில், 1982 முதல் 1986 வரை சுமார் 175 நிலச்சுவான்தார்களிடம் இருந்து 5,000 ஏக்கர் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி 5,000 குடும்பங்களுக்கு அளித்தவர். 1981ல் நாகப்பட்டினம் மாவட்டத்தில், கிராம வளர்ச்சித் திட்டத்தின்கீழ், 19 கிராமங்களில், 1112 ஏக்கர் நிலத்தை, வங்கிக்கடனில் பெற்று, 1112 குடும்பங்களுக்குப் பிரித்துக்கொடுத்தார்.

வட்டியை செலுத்திய மக்கள் அனைவரும், முதல் தலைமுறையாக தங்களுக்கென ஒரு ஏக்கர் நிலம் சொந்தமாக இருப்பதை நன்றியோடு இன்றும் நினைவுகூறுகிறார்கள்.

நன்றி: பி.பி.சி நியுஸ்!

மன அழுத்தத்தில் இருந்து விடுபட

உடலின் 90% நோய்க்கு மூலமாக இருப்பதே டென்ஷன் மன அழுத்தம்(Stress) இவைகள் இருப்பதால் 1.முடி உதிர்தல்
2.ரத்த அழுத்தம்
3.இருதய நோய் இப்படி அநேக நோய்கள் உண்டாகிறது
மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்யலாம்
1. மனதை அமைதியாக வைக்க முயற்சி செய்ய வேண்டும்
2.மனதின் பாரங்களை நம்பிக்கை உரியவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது நம்முடைய மன பாரம் குறைகிறது
மன அழுத்தத்தில் இரண்டு வகை இருக்கிறது
1. நேர்மறையான மன அழுத்தம்
2. எதிர்மறையான மன அழுத்தம்
குறிப்பாக நம்மை சுற்றி இருக்கக் கூடிய ஜனங்கள் நீ எல்லாம் படித்து கலெக்டர் ஆக முடியாது என்று எதிர்மறையாக சொல்வார்கள்
நம்முடைய ஏழ்மையை குறை படுத்துவார்கள் உன்னுடைய சூழல் சரியில்லை அதற்கு நிறைய பொருளாதார வசதி வேண்டும் என்று அவர்கள் எதிர்மறையாக பேசும்பொழுதும்
நமக்குள்ளே நாம் “என்னால் முடியும்” என்று நாம் நேர்மறையாக சிந்திக்க வேண்டும்
அதே நேரத்தில் ஏழ்மை நிலையிலிருந்து முன்னேறி சாதித்தவர்கள் உடைய புத்தகங்களை வாசிக்கும் பொழுது எதிர்மறையான சிந்தனைகள் நமக்குள் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை
நேர்மறை சிந்தனை உடைய மக்களிடத்திலே அதிகமான தொடர்புகள் வைத்துக் கொள்ள வேண்டும்
எதிர்மறை சிந்தனைகலோடு பேசுகின்ற மக்களிடத்திலே நாம் தொடர்பு வைத்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் முடிந்தவரை நாம் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றி பெறும் வரை அவர்களோடு தொடர்பு இல்லாமல் இருப்பது மிகவும் நல்லது.

சி.சுரேஷ்
தருமபுரி

திருவாதிரை நட்சத்திரம் வெடித்துச் சிதறப் போகிறதா?

திருவாதிரை நட்சத்திரம் – சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயராக இருக்கும். பலர் இந்த நட்சத்திரத்தில் பிறந்ததாகவும் சோதிடம் சொல்லும். அந்த திருவாதிரை நட்சத்திரம் மரணப் படுக்கையில் இருப்பதாக கடந்த சில நாள்களாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

விண்வெளியில் பல்லாயிரம் கோடி விண்மீன்கள் உள்ளன. நம் சூரியனும் ஒரு விண்மீன்தான். ஒவ்வொரு விண்மீனும் ஒரு சூரியன்தான். அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கோள் மண்டலங்கள் இருக்கக்கூடும். மனிதர்களுக்கு இருப்பதைப் போல விண்மீன்களுக்கும், குழந்தைப் பருவம், வளர்ச்சி, முதுமை ஆகியவை உண்டு.

அளவில் மிகவும் பெரியதாக உள்ள விண்மீன்கள் அதன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் ஊதிப் பெருத்து கடைசியில் வெடித்துச் சிதறும் நிகழ்ச்சிப் போக்கை ‘சூப்பர் நோவா’ என்பார்கள். இப்படி ஊதிப் பெருக்கும்போது அந்த விண்மீனின் பிரகாசம் மங்கும்.

இப்போது நம் திருவாதிரைக்கு வருவோம்.

திருவாதிரை (Betelgeuse) என்பது விண்வெளியில் மிருகசீரிஷம் (Orion) என்று தமிழில் அறியப்படும் உடுக்கூட்டத்தில் (உடு என்றால் விண்மீன் என்று பொருள்) இடம் பெற்றுள்ள ஒரு விண்மீன். இது நம் சூரியனைப் போல பல்லாயிரம் மடங்கு பெரியது. சுருங்கி விரியும் தன்மையுள்ளது. இரவு வானில் மிகவும் பிரகாசமானது. எப்போது இருந்தாலும், சூப்பர் நோவா ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு விண்மீன் இது. 1 லட்சம் ஆண்டில் இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறப்பட்டுவந்தது. இதன் உட்கருவில் தனிமங்கள் எரிவது அதிவேகமாக நடந்துவந்தது.

இப்போது எதிர்பார்த்தைவிட விரைவாக சூப்பர் நோவா ஆகும் அறிகுறிகள் தெரிவதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். விரைவாக திருவாதிரை தமது பிரகாசத்தை இழந்து, வீங்கிப் பெருத்துவருவதே இதற்குக் காரணம்.

மேலே காணப்படும் டிவிட்டர் பதிவில் 2019 ஜனவரியில் இருந்ததை விட டிசம்பரில் எவ்வளவு தூரம் அது தன் பிரகாசத்தை இழந்திருக்கிறது என்பதை படங்களைக் கொண்டு காட்டியுள்ளார் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் திருவாதிரை நட்சத்திரம் குறித்து ஆய்வு செய்துகொண்டிருக்கும் விண்வெளி ஆய்வாளர் சரஃபினா நான்ஸ். தமது வழக்கமான பிரகாசத்தில் அது 36 சதவீதத்தை இழந்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

.

ஆனால், இப்போது திடீரென திருவாதிரைக்கு என்ன ஆனது? இது விரைவில் வெடித்துச் சிதறும் என்று செய்திகள் வருவதன் பின்னணி என்ன? விரைவில் என்றால் எவ்வளவு விரைவில்? அப்படி நடந்தால் பூமிக்கு என்ன ஆகும்? இந்தக் கேள்விகளோடு இந்திய மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானியும், தமிழில் அறிவியல் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பிபிசி தமிழின் சார்பில் பேசினோம்.

அவரது பேட்டியில் இருந்து:

ஓராண்டாகவே குறையும் பிரகாசம்

“பூமியில் இருந்து பார்க்கும்போது மிகப் பிரகாசமாகத் தெரியும் விண்மீன்களைப் பட்டியலிடும்போது, மிகப் பிரகாசமாக முதலிடத்தில் இருப்பது சிரியஸ் என்ற விண்மீன். இந்தப் பட்டியலில் 10வது இடத்தில் இருந்து வந்தது திருவாதிரை. ஆனால், சுமார் ஓராண்டாகவே இந்த பிரகாசம் மங்கத் தொடங்கி இப்போது 24 வது இடத்துக்கு சென்றுள்ளது இந்த விண்மீன்.

பூமியில் இருந்து திருவாதிரை எவ்வளவு தொலைவில் உள்ளது என்பது பற்றி பல்வேறு முரண்பட்ட கருத்துகள் இருந்ததுண்டு. எனினும் மிகச் சமீப காலத்தில் ஹிப்பார்கஸ் விண்வெளி தொலைநோக்கி உதவியுடன் செய்யப்பட்ட கணக்கீட்டின்படி இங்கிருந்து 724 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது திருவாதிரை” என்கிறார் வெங்கடேஸ்வரன்.

எவ்வளவு தூரத்தில் இருக்கிறது திருவாதிரை?

ஒளியாண்டு என்பது விண்வெளியில் தூரத்தைக் கணக்கிடும் ஒரு நடைமுறை. விநாடிக்கு சுமார் 3 லட்சம் கி.மீ. வேகத்தில் ஒளி பயணம் செய்யும். இது மாறாதது. இந்த வேகத்தில் ஓராண்டு பயணம் செய்தால் ஒளி எவ்வளவு தூரம் செல்லுமோ அதுதான் ஒரு ஒளியாண்டு தூரம் எனப்படும். இதன்படி பார்த்தால் 724 ஆண்டுகள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் சென்று சேரும் தூரத்தில் இருக்கிறது திருவாதிரை.

“இதன் பொருள், இந்த திருவாதிரையின் பிரகாசத்தில் நாம் காணும் மாற்றங்கள் உண்மையிலேயே நடந்து முடிந்து 724 ஆண்டுகள் ஆகின்றன. இதை வரலாற்றில் வைத்து சொல்வதாக இருந்தால் வட இந்தியாவில் அலாவுதீன் கில்ஜியின் ஆட்சி நிலை பெற்றபோது திருவாதிரையில் நடந்ததையே நாம் இப்போது பார்க்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நட்சத்திரம் எவ்வளவு பெரியது?

இந்த விண்மீன் எவ்வளவு பெரியது என்று கேட்டபோது, “சுருங்கி விரியும் தன்மையுடைய திருவாதிரையின் ஆரம், சூரியனுடைய ஆரத்தைப் போல 550 முதல் 920 மடங்கு பெரியது. அளவு என்றால் சூரியனைப் போல அது 20 கோடி மடங்கு பெரியது. சூரியனைப் போல 15 மடங்கு அதிக நிறையுடையது. சூரியனைப் போல 5 ஆயிரம் மடங்கு அதிக ஆற்றலை வெளியிடக்கூடியது” என்றார் வெங்கடேஸ்வரன்.

இப்போது என்ன ஆனது?

“ஒரு விண்மீன் வீங்கிப் பெருக்கும்போது, அது மொத்தமாக வெளியிடும் ஆற்றல் குறையாது. ஆனால், அதன் பிரகாசம் குறையும். ஒரு சுவற்றின் மீது டார்ச் லைட் அடிக்கும்போது பக்கத்தில் இருந்து அடித்தால் ஒளி பிரகாசமாகவும், தூரத்தில் இருந்தால் மங்கலாகவும் சுவற்றில் தெரியும். ஆனால், டார்ச்சில் இருந்து வெளியாகும் ஒளியின் அளவு மாறுவதில்லைதானே. அதனை ஒப்பிட்டு இதனைப் புரிந்துகொள்ளலாம்.

கடந்த ஓராண்டாக திருவாதிரை மங்கி வருகிறது என்றால் அது வீங்கிப் பெருத்து வருகிறது என்று பொருள். குறிப்பிட்ட அளவுக்கு மேல் பெரிதாக இது வீங்கிப் பெருக்கும்போது, இதன் புறப்பரப்பு, உட்கருவின் ஈர்ப்பு விசைக்கு அடங்காமல்போய் உடைந்து சிதறும். இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அது சில ஆண்டுகளிலும் நடக்கலாம். 500 ஆண்டுகளோ, பல்லாயிரம் ஆண்டுகளோ ஆகலாம்”.

வெடித்தால் பகலிலேயே பார்க்கலாம்

அது போன்ற ஒரு வெடிப்பு இப்போது நடக்குமானால், அப்போது திருவாதிரை நட்சத்திரம் பலகோடி சூரியன்களின் ஆற்றலை வெளிப்படுத்தும். இந்த வின்மீன் நிலவின் அளவுக்கு வானத்தில் பெரிதாவதை பூமியில் இருந்து வெறும் கண்ணால் பார்க்கலாம் என்பது மட்டுமல்ல, அதனைப் பகலில் கூட பார்க்கலாம்.

சூப்பர் நோவா எனப்படும் இந்த வெடிப்பு நிகழ்வு மூன்று கட்டங்களில் நடக்கும். இது ஒருவேளை 50 ஒளியாண்டு தூரத்தில் நடக்குமானால், பூமியில் உயிர்கள் அழியும். புவியை அடையும் எக்ஸ் ரே கதிர்களின் கதிரியக்க அளவு ஹிரோஷிமா, நாகசாகியில் நடந்த அணுகுண்டு தாக்குதலைப் போல இருக்கும். ஆனால், 724 ஒளியாண்டு தூரத்தில் நடப்பதால் புவிக்குப் பாதிப்பு ஏதும் இருக்காது, என்கிறார் வெங்கடேஸ்வரன்.

இதற்கு முன்பு இப்படி ஒரு சூப்பர் நோவா நிகழ்வை புவியில் இருந்து உணர முடிந்த நிகழ்வு 1987ல் நடந்தது. புவியின் தென் கோளத்தில் இருந்து பார்க்க முடிந்த இந்த நிகழ்வை சூப்பர்நோவா 1987-ஏ என்று அழைக்கிறோம்.

இதுபோன்ற நிகழ்வுகளில் இருந்து புவிக்கு வருகிற நியூட்ரினோக்களைக் கொண்டு இந்த நிகழ்வைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், கடந்த முறை நடந்தபோது வெளியான நியூட்ரினோக்களை ஆராயப் போதுமான அளவு ஆய்வகங்கள் உலகில் இல்லை. இப்போது இந்த நிகழ்வு நடந்தால், இதனை கண்காணிக்க உலகில் அண்டார்டிகா, ஜப்பான் போன்ற இடங்களில் ஆய்வகங்கள் உள்ளன என்றார்.

தமிழகத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வகமும் இதனை கண்காணிக்க முடியுமா என்று கேட்டபோது, “அது சாத்தியமில்லை. அங்கிருந்து வருகிற உயர் ஆற்றல் நியூட்ரினோக்களை தமிழகத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தால் உணர முடியாது. தமிழகத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வகம், உலகில் எங்காவது அணுக் கசிவு நடந்தால் அதைக் கண்டறியக்கூடியது” என்று தெரிவித்தார்.

இந்தியாவில் திருவாதிரையின் பண்பாட்டு முக்கியத்துவம் என்ன?

“திருவாதிரை விண்மீனை வட இந்தியாவில் ‘ஆத்ரா’ என்று குறிப்பிடுகிறார்கள். ஆத்ரா என்றால் ஈரப்பதம் என்று பொருள். இந்த விண்மீன் வட இந்தியாவில் ஜூன் 4-5 தேதிகளில்தான் தெரியும். இது வட இந்தியாவில் மழை அதிகம் பெய்யும் காலம். எனவே இதனை மழைக்காலத்தின் தொடக்கத்துடன் இணைத்துப் பார்க்கிறார்கள். அதனால்தான் இதன் பெயரும் ஆத்ரா என்று ஆனது.

அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏதாவது ஆகுமா?

“திருவாதிரை நட்சத்திரம் வெடித்தால், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதாவது ஆகுமா?” என்று வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம்.

பலமாக சிரித்துவிட்டு அவர் சொன்னார், “இப்போது ஒரு வேளை திருவாதிரை வெடித்து சூப்பர் நோவா ஆகும் நிகழ்வை, அது நிலவின் அளவுக்கு விண்ணில் ஒளிர்வதை நாம் பார்க்க நேர்ந்தால், அந்த நிகழ்வு 724 ஆண்டுகளுக்கு முன்பே நடந்துவிட்டது என்று பொருள். ஏனெனில், அந்த நிகழ்வின் ஒளி புவியை வந்தடைய இத்தனை காலம் ஆகும். குறிப்பிட்ட ஒருவர் பிறப்பதற்கு 724 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு இவரை எப்படிப் பாதிக்கும்? என்று அவர் கேட்டார்.

நன்றி: பி.பி,சி, நியுஸ்

“சுஜாதா” தமிழ் எழுத்துலகின் ஆசான்!

சுஜாதா தேசிகன்

“என் தாய்வீடான சிறுகதையைக் கொஞ்சநாள் மறந்துதான் விட்டேன். அவ்வப்போது எனக்கு சிறுகதை எழுத வேண்டிய உந்துதல் கிடைக்கும். அறிவியல், வேதாந்தம், சங்க இலக்கியம் போன்ற விஷயங்களில் முழுவதும் ஈடுபட விரும்பவில்லை நான். காரணம் சிறுகதை எழுதும் சந்தோஷத்தை இழந்து விடுவேனோ என்கிற ஒரு லேசான பயம்” – கற்றதும் பெற்றதும்

சுஜாதாவிற்கு சிறுகதை மேல் அளவுகடந்த காதல் என்று சொல்லலாம். எந்த எழுத்தாளர் பற்றிக் கேட்டாலும் அவர்கள் எழுதிய ஒரு நல்ல சிறுகதையை உடனே நினைவுகூர்வார். ஒரு முறை சுஜாதாவைக் கடுமையாக விமர்சனம் செய்த எழுத்தாளரைப் பற்றி பேச்சு வந்தபோதும் அந்த எழுத்தாளர் எழுதிய ஒரு நல்ல கதையின் தலைப்பைச் சட்டென்று சொன்னார். வியந்துபோனேன். ‘எல்லோரிடமும் ஒரு நல்ல சிறுகதை இருக்கிறது’ என்று பலமுறை சொல்லியிருக்கார்.
ஒரு சிறுகதை அனுபவம்:
“சார், போன வாரம் திருச்சி போன போது என் ஸ்கூல் கிளாஸ்மேட் ஒருவன் ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்றுக்கொண்டு இருந்தான்.. அதைப் பற்றி ஒரு சிறுகதை எழுதலாம் என்று இருக்கிறேன்”
“எழுதுங்க”
“எழுதிவிட்டு உங்களிடம் காண்பிக்கிறேன். நீங்கள் தான் எப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும்”
“அதுக்கு என்ன கொண்டு வாங்க…”
அடுத்த வாரம் நானும் அந்தச் சிறுகதையை எழுதி அவரிடம் காண்பித்தேன். கதையை முழுவதும் படித்துவிட்டு “முதல் பாரா… கடைசி பாரா நல்லா இருக்கு” என்றார்.
“மற்றவை?” கேட்ட என் குரல் காற்றிறங்கிக்கொண்டிருக்கும் பலூனாய் இருந்தது.

“ரீரைட்”
எப்படி என்று சொல்லவில்லை. எனக்கும் கேட்கத் தோன்றவில்லை.
திரும்பவும் அடுத்த வாரம் அவரிடம் மாற்றியெழுதிய சிறுகதையைக் காண்பித்தேன். படித்துவிட்டு, “பரவாயில்லை… இன்னொரு முறை திரும்ப எழுதிவிடுங்கள்” என்றார்.
ஒரு வாரம் கழித்து நம்பிக்கையுடன் திரும்பக் காண்பித்த போது, படிக்கக் கையிலேயே வாங்காமல், “எவ்வளவு பக்கம் பிரிண்டவுட்”
“8 பக்கம்”
“அடுத்த வாரம்6 பக்கமாக்கிவிட்டுக் கொண்டு வாங்க”
சிறுகதையை எழுதுவதை விட்டுவிடலாமா என்று கூட நினைத்தேன்.
விடாக்கண்டனாய் அடுத்தவாரம் ஆறுபக்கக் கதையை அவரிடம் காண்பித்த போது”நடுவில் உள்ள ஒரு கதாபாத்திரம் மீது குரோதம் வருகிற மாதிரி ஒரு சம்பவம் வேண்டும்.. அது இந்தக் கதையில் இல்லை”
“இல்லை சார்… அந்தக் கதாப்பாத்திரம் ரொம்ப ஸாஃப்ட்”
“வில்லனா மாத்திவிடு”
இப்படியாக அந்தக் கதையை முழுவதும் மாற்றி எழுத வேண்டியதாகிவிட்டது.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதவனாய் அடுத்த வாரம் காண்பித்த போது, “இன்னொரு முறை ரீரைட் செய்துவிடுங்கள்… சிறுகதை ரெடி”
யாருக்கும் இந்த மாதிரி ஓசியில் சிறுகதை வகுப்பு எடுத்திருப்பாரா என்று எனக்குத் தெரியாது. எனக்கு அந்த பாக்கியம் கிடைத்து. அவருக்கு என்மீது அபிமானம் என்று சொல்லுவதை விட, சிறுகதையின் மேல் அவருக்கு இருந்த காதல்தான் இதற்குக் காரணம்.
இன்னொரு நேரில் கண்ட அனுபவம்- வாசகர் ஒருவர் மின்னஞ்சலில் சிறுகதை ஒன்றை அனுப்பியிருந்தார். பிரிண்டவுட் எடுக்கச் சொன்னார். எடுத்தேன். முதல் பாராவை படிக்கச் சொன்னார். நடுவிலிருந்து ஒரு பாரா படிக்கச் சொன்னார். பிறகு”படிச்சுப் பாருங்க கதை இதுதான்” என்று என்னிடம் சொல்லிவிட்டார். படித்துப் பார்த்த போது ஆச்சரியப்படுமளவில் அவர் சொன்ன மாதிரியே கதை இருந்தது. எவ்வளவு சிறுகதைகள் ஆழ்ந்து ஆர்வத்துடன் படித்திருந்தால் இந்த மாதிரி சொல்ல முடியும்?

“சில எழுத்தாளர்கள், தான் எழுதியதுதான் வேதவாக்கு, அதில் ஒரு கால்புள்ளி, அரைப்புள்ளி குறைத்தாலும் சகியேன் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். ஒரு ஞானபீட எழுத்தாளர் தன் கதையை குறைத்துப் பிரசுரித்தார்கள் என்ற காரணத்துக்காக அந்தப் பத்திரிகையில் எழுதுவதையே நிறுத்திவிட்டாராம். நான் அப்படியில்லை. நான் அத்தனை சென்சிட்டிவ் இல்லை” — ஓரிரு எண்ணங்கள்.

சுஜாதா பத்திரிகைக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும். ஒரு முறை அவர் விகடனுக்கு எழுதிய கட்டுரையை எனக்கும் அனுப்பியிருந்தார். விகடனில் பிரசுரம் ஆனதைப் படித்தபோது அந்தக் கட்டுரையின் முதல் வரியையே எடிட் செய்திருந்தது தெரிந்தது. அவரிடம் அதைப் பற்றிப் பேசியபோது, “They have done a good job” என்றார். எடிட் செய்த அந்த வரியை அப்படியே பிரசுரம் செய்திருந்தால் சர்ச்சை வந்திருக்க வாய்ப்பிருக்கிறது; அவருக்கு இல்லை, அதில் குறிப்பிட்ட அந்த நடிகருக்கு!.

பல பத்திரிகைகள் அவரைத் தொடர்கள் எழுதச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியிருக்கின்றன. 1987-இல் சுஜாதாவை திருச்சியில் ஒரு லயன்ஸ் கிளப் விழாவில் சந்திக்க நேர்ந்தது. அவர் ஒரேயடியாக நான்கு ஐந்து பத்திரிகைகளில் தொடர் எழுதிக்கொண்டிருந்த சமயம் அது. தன் அருகில் இருந்தவரிடம் ஒரு பத்திரிகையைக் குறிப்பிட்டு ஒரு காப்பி வேண்டும் என்றார். அவரும் உடனே பக்கத்தில் இருந்த கடையிலிருந்து வாங்கி வந்து அவரிடம் கொடுத்தார். “எதுல முடித்திருக்கிறேன்?” என்று கடைசி வரியை மட்டும் கேட்டுத் தெரிந்துகொண்டார். திரும்ப ஊருக்கு போகும் போது அடுத்த பகுதியை எழுதிக்கொண்டு போவார் என்று நினைத்துக்கொண்டேன்.
ஒரு முறை தொடர்கதை ஒன்றைக் குறிப்பிட்டு “இந்த தொடரில் ஏகப்பட்ட கதாப்பாத்திரங்கள். இதை நீங்கள் ஒரு பெரிய நாவலாக எழுதியிருக்க வேண்டும். ஏன் உடனே முடித்துவிட்டீர்கள்?” என்று கேட்டேன்.

“யூ ஆர் கரெக்ட்…நாவலாகத் தான் ஆரம்பித்தேன்… அது தான் ஆசை. ஆனால் அந்தப் பத்திரிகையில் திடீர் என்று ஏதோ புதுசா காரணம் சொல்லி 12 வாரத்தில் முடிக்கச் சொல்லிவிட்டார்கள். நான்9 வாரத்தில் முடித்துவிட்டேன்” என்றார். எப்படி ஒரு முப்பது வாரக் கதையை ஒன்பது வாரத்தில் ஒரு வித்யாசமும் வெளித்தெரியாதவாறு முடித்தார் என்று வியந்திருக்கிறேன்.
“சுஜாதாவின் பொழுதுபோக்கு வேலிகளை உடைப்பது. கதைக்கு எடுத்துக் கொள்கிற விஷயத்திலும், கதையை எழுதுகிற நடையிலும், கதைக்குக் கொடுக்கிற அமைப்பிலும், பழைய வேலிகளை உற்சாகமாக உடைத்துக் கொண்டு தனிக்காட்டு ராஜாவாய்த் துள்ளுகிறார் அவர். என்ன புதுமைகளைப் புகுத்தினாலும் தமிழினால் தாங்க முடியும் என்பதை உணர்ந்திருப்பதால் பேனாவை வைத்துக் கொண்டு சுதந்திரமாய்ச் சிலம்பு விளையாடுகிறார். ஓரோர் சமயம் அவருடைய கையெழுத்துப் பிரதியைப் பார்க்க நேர்கையில், “டெலிபோனை வைத்து விட்டு, ‘வஸந்த், பதினைஞ்சு நிமிஷத்திலே தயாராகணும்’!” என்று வாக்கியம் மொட்டையாக நின்று விடுவதைக் கண்டு நான் திடுக்கிட்டதுண்டு. அந்த இலக்கண விநோதத்தை அனுமதிக்கக் கூடாதென்று முடிவு செய்து, உடனே பேனாவை எடுத்து, ‘என்றான்‘ என்று முடிப்பேன். முடித்துவிட்டு வாசித்துப் பார்த்தால், அவர் மொட்டையாக விட்டிருந்தபோது இருந்த அழுத்தம் இந்தப் பூர்த்தியான வாக்கியத்தில் இல்லை போலிருக்கும். முணுமுணுத்தபடியே அந்த ‘என்றானை‘ அடித்துவிடுவேன்” – ரா.கி.ரங்கராஜன்

Continuous improvement என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதை அவரிடம் நேரில் பார்த்திருக்கிறேன். கதையை வேகமாகத் தட்டச்சு செய்துவிட்டு பிறகு ஒவ்வொரு வரியையும் நிதானமாக மாற்றி அமைத்து தேவை இல்லாத வார்த்தைகளை எடுத்துவிட்டு ஒழுங்குபடுத்துவதைப் பார்ப்பது இனிய அனுபவம். அவருடைய எழுத்துகளைப் பல முறை படித்திருக்கிறேன். ஆரம்ப கால எழுத்துகளில் “என்றான்” என்பதை நிறைய உபயோகப்படுத்தியிருப்பார். ஆனால் பிறகு அதன் உபயோகத்தைக் குறைத்திருப்பார். எழுத்தைத் தவமாக, அதை மேலும் மேலும் எப்படி ஒழுங்கு செய்யலாம் என்று அவருக்கு உள்ளே இருந்த உந்துதல்தான் அவரை ஒரு வெற்றி எழுத்தாளர் ஆக்கியது என்று நினைக்கிறேன்.
ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான, முக்கியமான அடிப்படைக் ‘குணம்’ என்ன? கூர்மையான பார்வை, காது, படிப்புத் திறன். – கேள்வி பதில்

அவருடைய சிறுகதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படிக்கும் போது அதில் உள்ள தகவல்கள் நம்மை வியக்க வைக்கும். ஒரு முறை நான் அவருடன் என்னுடைய கொரியா அனுபவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தேன். தொடர்கதையில் அடுத்த வாரப் பகுதியில் என்னுடைய அனுபவத்தை அழகாக உள்ளே புகுத்தியிருந்தார். எழுத்தாளனுக்கு தகவல் முக்கியம். துல்லியமான தகவல்; தெரியவில்லை என்றால் அது என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம்; பிறகு நினைவாற்றல்.
2006-இல் எழுத்தாளர் சுஜாதாவுடன் நான் உரையாடியதிலிருந்து சில பகுதிகள்… ( ஒலிப்பதிவிலிருந்து )
“நடு ராத்திரி ஒருத்தர் வந்து கதவைத் தட்டி ஒரு கதையைக் கொடுத்து இதில என்ன தப்பு சொல்லுங்க… நீங்க எழுதற குப்பைய எல்லாம் போடறாங்க.. எவ்வளவோ முறை நான் எழுதி திரும்ப வந்துவிட்டது” என்றார்.

அந்தக் கதையைப் படித்த போது, அது ஒரு காலேஜ் காதல் கதை.
“எந்த காலேஜ்?” என்று கேட்டேன். ஏதோ பேர் சொன்னான்.
“சரி அந்த காலேஜுல நுழையும் போது, என்ன இருக்கும்?”
“என்ன… உள்ளே போகும் போது மரங்கள் எல்லாம் இருக்கும்”
“சரி அந்த மரத்துக்குப் பேர் என்ன?”
“அதெல்லாம் தெரியணுமுங்களா?”
ஏம்பா, நீ தினமும் ஒரு காலேஜ் போற. அந்த மரத்தை எப்பவாவது நிமிர்ந்து பார்த்திருக்கியா? என்ன மரம்னு கூட சொல்ல முடியலை. அந்தDetail இல்லைன்னா நீ எப்படி எழுத்தாளன் ஆறது?”
“ஏங்க நீங்க கூட நிறைய கொலை கதை எழுதியிருக்கீங்க. நீங்க என்ன கொலையா செய்திருக்கீங்க?” என்றார்.
என்னால் பதிலே சொல்ல முடியலை.
தி.ஜானகிராமன் சொல்வார்.. ஒரு தடவை டெல்லியில் Barakhamba சாலையில் போய்கொண்டு இருந்த போது இரண்டு பக்கமும் சோலை போல மரங்கள். தி.ஜா என்னிடம் கேட்டார், “நீ எப்பவாவது நிமிர்ந்து மேலே பார்த்திருக்கியா? அந்த மரம் பேர் தெரியுமா?”
He was very precise and was remembering every tree. அதனாலதான் அவருடைய கதைகளில் அவ்வளவு டீட்டெய்ல் இருக்கும். எனக்குக் கூட மரங்களை அடையாளம் காணமுடியும். சங்ககாலப் பாடல்களை பார்த்தால் எல்லா மரமும் இருக்கும். What is important is that look at nature and know something.
அப்படித்தான் பெங்களூரில் இருக்கும் போது… நீங்க கூடப் பார்த்திருப்பீங்க, ஒரே நாள்ல பூக்கும்.. அதன் கலர் கூட…”
“மோகலர்…”
“ஆமாம் மோகலர்.. Have you seen it? பேர் தெரியுமா?”
“பார்த்திருக்கேன், பேர் தெரியாது… ஆனா நீங்க ‘இருள் வரும் நேரம்’ கதையில முதல் பாராவில அதைப் பத்தி எழுதியிருப்பீங்க”
“Exactly”
“அதனுடைய பேர்Jakaranda. அந்தப் பூவோட பேர் எனக்கு எப்படி தெரிஞ்சதுன்னா– ஒரு வெளிநாட்டுக்காரர் வந்திருந்தார். அவருடைய பேர்Thomas Dish. He was a science fiction writer. அவர் இந்தப் பூவை பார்த்திட்டு, இது என்ன ‘பூ’ன்னு கேட்டார். எனக்குத் தெரியலை; அப்பறம் எங்கல்லாமோ தேடி கடைசியில Botany Professor கிட்ட கேட்டு அதன் பெயர் Jakaranda அப்படீன்னு கண்டுபிடிச்சோம். He then wrote a small Haiku like கவிதை. அந்தக் கவிதை எனக்கு இன்னும் கூட நினைவு இருக்கு.

இந்த ஜாகரண்ட மாதிரி பூக்கள், மரங்கள் பேர்களை எல்லாம் தெரிஞ்சுக்கணும். நீங்க கூட என்னுடைய எழுத்துல பார்க்கலாம், ஒரு விஷயம் தெரியலைன்னா அதன் டீட்டெய்ல் தெரியும் வரை வெயிட் பண்ணுவேன். This is one of the secrets of writing. யாரிடமாவது கேட்பேன், இல்ல தேடுவேன்… இப்ப ரொம்ப சுலபம்
“கூகிள் இருக்கிறது”
“ஆமாம்( சிரிக்கிறார் )

தேடலுக்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன். 1996-இல் என்று நினைக்கிறேன், சுஜாதாவை அவரது பழைய வீட்டில் சந்தித்த போது ‘நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள்’ என்ற பெரியாழ்வார் பாசுரத்தின் கடைசியில் “பண்டன்று பட்டிணம் காப்பே” என்று பாசுரத்தில் கடைசியில் வந்த வாக்கியத்துக்கு சரியான அர்த்தம் என்ன என்று தேடிக்கொண்டு இருக்கேன் என்றார். சில ஸ்ரீவைஷ்ணவ உரைகளிலிருந்து தேடி எடுத்ததும், பக்தி சம்பந்தமான யாஹூ குழுவில் இதைப் பற்றித் தேடியதும் எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் அவருக்குத் திருப்தி இல்லை. அதற்குப் பிறகு அதைப் பற்றி மறந்துவிட்டேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஸ்ரீவைஷ்ணவத்தைப் பற்றி2003-இல் ஆற்றிய உரையின் கடைசியில் இவ்வாறு பேசினார்..
“…..என் தந்தையார் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது, எனக்குப் பிரபந்தமே போதுமடா! என் பட்டினம் இப்போது காப்பில் உள்ளது” விடை அவருக்கு மட்டும் இல்லை நமக்கும் கிடைத்துவிட்டது.
அவருடைய சிறுகதைத் தொகுதிகளைத் தொகுக்கும் போது, “ஏதாவது சிறுகதை சுமார் என்று தோன்றினால் எடுத்துவிடுங்கள்” என்றார். விமர்சனத்துக்கு அவர் கொடுத்த மரியாதை இது.
எழுத்தாளனுக்கு முக்கியமான விஷயம் சர்ச்சைகளில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது. தன் கதைக்கு யாராவது எதிர்வினை செய்தால், வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சண்டை போடுவதைக் காட்டிலும் வேறு ஏதாவது படிக்கவோ எழுதவோ செய்யலாம் என்பது அவருடைய எண்ணம். பல முறை நான் இதைப் பார்த்திருக்கிறேன், அவர் எழுதிய ‘அம்மா மண்டபம்’ போன்ற கதைகளை எழுதிய போது அதற்குக் கிளம்பிய எதிர்ப்பும் அவரை ஒன்றும் செய்யவில்லை. கொஞ்சநாள் பேசிவிட்டு, டிவியில் சானல் மாற்றுவது மாதிரி அடுத்த சானலுக்குப் போய்விட்டார்கள்.
சினிமாவிலும் தன் கதையை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு அதை பற்றிக் கண்டுகொள்ள மாட்டார்.
அவருடைய வீட்டில் ஒரு முறை பேசிக்கொண்டு இருந்த போது ஒரு நடிகர் அங்கே வந்தார். நான் கிளம்புகிறேன் என்று எழுந்தேன்.
“நீங்க இருங்க” என்று என்னை உட்காரச் சொல்லிவிட்டு நடிகரிடம் என்ன என்று விசாரித்தார்.
“சார் இயக்குனர் கதை சொன்னார்… உங்களிடம்.. ” என்று ஏதோ சொல்ல வந்தார்.
“இயக்குனர் சொல்லுவதைச் செய்துவிடுங்கள்” என்று ஒரே வரியில் முடித்துவிட்டார்.

“நாற்பது வருஷமாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே… என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு சுஜாதா சொன்ன பதில்
நீண்ட யோசனைக்குப் சுஜாதா சொன்ன பதில் “நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!”
அவர் கற்று எழுதியதை நாம் வாசிப்பு அனுபவமாக பெற்றோம்
– சுஜாதா தேசிகன்
விகடன் சுஜாதா மலருக்கு எழுதியது (2012)

நன்றி: சுஜாதா தேசிகன் முகநூல் பக்கம்.

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்த ஆரஞ்சுப்பழ வியாபாரி!

பத்மஸ்ரீ விருது கிடைத்தது கூட அறியாத ஒரு அறியாமையாளர்தான் கூடையில் ஆரஞ்சுப்பழம் கூவிக்கூவி விற்கும் ஏழை ஹஜப்பா..ஆனால் புண்ணியம் கோடிக்கு
சொந்தக்காரர்!

இந்த ஆண்டு குடியரசு தினத்துக்கு முதல் நாள். அன்று சனிக்கிழமை. அழுக்கேறிய உடைகளுடன் ரேஷன் கடை வரிசையில் பொருட்கள் வாங்க சோர்வோடு நின்று கொண்டிருந்தார் ஹரேகலா ஹஜப்பா. கூட்டம் நிறைய இருந்தது. 35 கிலோ ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் கொடுத்துவிட்டு அவர் தன்னுடைய ஆரஞ்சுப் பழ வியாபாரத்திற்குச் செல்ல வேண்டும். அப்போது அவரது செல்போன் சிணுங்கியது. இந்த வேளையில் நம்மை அழைப்பது யார் என்று புரியாமல் செல்போனை எடுத்து, “யார் பேசுறீங்க?” என்று கேட்டார்.அதில் ஒலித்த குரல் ஹிந்தியில் இருந்தது.யார் எங்கிருந்து பேசுகிறார்கள் என்று புரியாமல், பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவரை அழைத்துத் தன்னுடைய செல்போனைக் கொடுத்து “யார் பேசுவது என்று புரியவில்லை. தயவு செய்து கேட்டுச் சொல்லுங்கள்”என்றார் ஹஜப்பா

ஆட்டோ டிரைவருக்கும் ஹிந்தி தெரியாது. எனவே அவராலும் என்ன பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அதில் பத்மஸ்ரீ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதை ஆட்டோ டிரைவர் உணர்ந்து, “இதில் ஏதோ பத்மஸ்ரீ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமே எனக்குப் புரிகிறது. வேறு ஏதும் புரியவில்லை” என்று சொல்லி செல்போனை திரும்ப ஹஜப்பாவிடம் கொடுத்துவிட்டார்.

மாலையில் ஆரஞ்சுப் பழ வியாபாரத்தை சீக்கிரமே முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பிய ஹஜப்பாவை எதிர்பார்த்து உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர் காத்துக் கொண்டிருந்தார்.”கை கொடுங்க. உங்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைச்சிருக்கறதா டெல்லியிலிருந்து செய்தி வந்திருக்கிறது..வாழ்த்துகள்” என்றார் அவர், ஹஜப்பாவின் வலது கையைப்பிடித்துக் குலுக்கியபடி.
யார் இந்த ஹஜப்பா? ஏழ்மை தாண்டவம் ஆடும் குடிசை வீட்டில் குடியிருக்கும்இவர் செய்த சாதனை என்ன? இவருக்கு எதற்காக அறிவிக்கப்பட்டது பத்மஸ்ரீ விருது?

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா பகுதியைச் சேர்ந்த கைகளில்ஆரஞ்சுப் பழக்கூடை ஏந்தி தெருத் தெருவாகக் கூவி விற்கும் வியாபாரிதான் ஹரேகலா ஹஜப்பா. இவர் நியூ படப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிக்கூடமே இல்லாத இந்தக் கிராமத்தில் உள்ள ஏழைக்குழந்தைகள் படிப்புக்காக 1999-இல் முதன் முதலாக ஆரம்பப் பள்ளி ஒன்றை மசூதியில் ஆரம்பித்தார். இந்தப் பள்ளியில் முதலில் 28 மாணவர்கள் படித்தார்கள். பின்னர் தனது சொற்ப வருமானத்தில் இருந்து சிறிது சிறிதாகப் பணம் சேர்த்தும் கடன் வாங்கியும் பள்ளிக்கான நிலத்தை கிராமத்தில் வாங்கினார்.2000-ஆமாவது ஆண்டில் அவர் இதற்காக முதலீடு செய்தது வெறும் ரூபாய் 5000 மட்டுமே.

தான் ஆரஞ்சு வியாபாரம் செய்து தினசரி சம்பாதித்த பணத்தைக் கொண்டும், அரசிடமிருந்தும், கிராமத்தில் இருந்த நன்கொடையாளர்களிடம் இ‌ருந்தும் வந்த பணத்தின் மூலமும் வாங்கிய இடத்தில் ஒரு பள்ளியைக் கட்டினார். இன்று அரசாங்கப் பள்ளியாகத் திகழ்கிறது இது. இதில் தற்போது, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கிறார்கள். மிகச்சிறந்த உயர்நிலைப் பள்ளியாகச் செயல்பட்டுவருகிறது.

இந்தப் பள்ளியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஹஜப்பாவுக்கு எப்படி வந்தது? அதற்குப் பின்னே ஒரு சுவாரஸ்யக் கதை இருக்கிறது.ஹஜப்பா பள்ளி சென்று படிக்காதவர்.ஒருமுறை இவர் ஆரஞ்சுப் பழக் கூடையைச் சுமந்து வியாபாரத்துக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அன்று பார்த்து போணியாகவில்லை.மனம் தளர்ந்து கூவிக்கூவி “ஆரஞ்சு ஆரஞ்சு” என்று வீதி வீதியாக வலம் வந்தார்.வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி அவரை நோக்கி வந்தார்கள். மனமகிழ்ச்சியோடு எப்படியும் இன்று போணியாகி விடும் என்ற நம்பிக்கையில் அவர்களிடம் ஆரஞ்சுப் பழங்களை நீட்டியிருக்கிறார். அவர்கள் “ஒரு கிலோ பழங்களின் விலை என்ன?” என்று ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறார்கள். இவருக்கு துளு தவிர வேறு மொழி தெரியாததால், பதில் சொல்ல முடியவில்லை. அந்தத் தம்பதி இவரிடம் பழங்கள் வாங்காமலேயே சென்றுவிட்டனர். ஏமாற்றமடைந்த ஹஜப்பா ‘படிப்பறிவு இல்லாததால் தானே அவர்களிடம் தன்னால் வியாபாரம் செய்ய முடியவில்லை. இந்த நிலைமை இந்தக் கிராமத்தில் இருக்கும் எந்த மனிதருக்கும் இனி வரக்கூடாது’ என்று எண்ணியவர், கிராமத்துப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கும் முடிவுக்கு அன்றே வந்திருக்கிறார்.

இடத்தை வாங்கி பள்ளி ஆரம்பித்ததோடு தன் கடமை முடிந்து விட்டது என்று எண்ணவில்லை ஹஜப்பா. இன்றும் பழ வியாபாரம் தவிர இதர நேரங்களில் பள்ளி வளாகத்தைச் சுத்தப்படுத்துவது, மாணவர்கள் குடிக்கத் தண்ணீர் ஏற்பாடுசெய்வது, கல்வி வசதிகளை மேம்படுத்தத் தொடர்ந்து அதிகாரிகளிடம் பேசுவது என வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை குழந்தைகளின் கல்விக்காகவே செலவிட்டு வருகிறார் ஹஜப்பா.

ஹஜப்பாவின் தொடர் முயற்சியாலேயே அதிகாரிகளின் கவனம் இந்தப் பள்ளிமீது விழத் தொடங்கியிருக்கிறது. 60 வயதைக் கடந்தபோதும் பள்ளியின் மீது மிகுந்த அக்கறைகொண்டு, அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு செயல்பட்டுவருகிறார் ஹஜப்பா.

பத்மஸ்ரீ விருது குறித்துப் பேசிய ஹஜப்பா, “கடந்த 2014-ஆம் ஆண்டு, காவல்துறை துணை ஆணையர் ஏ.பி.இப்ராஹிம்தான் மத்திய அரசிடம் எனது பெயரை விருதுக்குப் பரிந்துரைத்தார். அதன்பிறகு, நான் அதை மறந்துவிட்டேன். இப்போது, விருது எனக்குக் கிடைத்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த நான், இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. கல்வி அளிப்பதுதான் என்னுடைய கனவு. இதற்காகத் தொடர்ந்து காலம்பூரா உழைப்பேன்.

எனக்கு எவ்வளவு பண விருதுகள் கிடைத்தாலும், அவை அனைத்தையும் இந்தப் பள்ளிக்காகவே செலவிடுவேன். இதே பள்ளி வளாகத்தில் ஒரு கல்லூரி அமைக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு. அரசாங்கம் அதை நிறைவேற்றும் என நம்புகிறேன். அப்போதுதான் மாணவர்கள் கல்வியை மேலும் தொடர்வார்கள்” என்று கூறினார்.

பள்ளியிலுள்ள வகுப்பறைகளுக்கு இந்தியாவின் சாதனையாளர்களான சுவாமி விவேகானந்தர், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ராணி அப்பாக்கா, கல்பனா சாவ்லா ஆகியோரின் பெயர்களை வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவர், கடந்த 2009-ஆம் ஆண்டு சி.என்.என் ஐ.பி.என் ஊடகத்தின் `ரியல் ஹீரோ’ என்ற விருதை பெற்றார். கர்நாடகா அரசின் ராஜ்யோத்சவா விருதையும் 2013-ஆம் ஆண்டு பெற்றுள்ளார். தற்போது, நாட்டின் உயரிய விருதாகக் கருதப்படும் பத்மஶ்ரீ விருதை வென்று, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ -என்றான் பாரதி.அதைச் செய்து வரும் ஹஜப்பா போன்றோர் பணம் கோடி இல்லாதவர்களாக இருக்கலாம்…
புண்ணியம் கோடி சேர்த்துக் கொண்டே இருக்கிறார்களே, அது போதாதா?

செய்தி: ஹரிஹரன் வெங்கட் அவர்கள் முகநூல் பக்கத்தில் இருந்து.

எல்.ஐ.சி பங்குகள் விற்பனை! ஓர் அலசல்!

எல் ஐ சி யின் பங்குகள் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் சொன்னதும் சோசியல் மீடியாவில் அது பெரும் பேசுபொருளானது.

மோடி / பாஜக வெறுப்பாளர்கள் அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரா ஒரு புறம் களமிறங்க, வாட்சப் வெறியர்கள் வழக்கம் போல, எல் ஐ சி யின் நிலைமையே மோசமாயிடுச்சு என்றும், எல் ஐ சிக்கே காப்பீடு வேணும் என்றும், இனிமே பாலிசியில் போட்ட பணம் கிடைக்காது என்றும் கிளப்பி விட்டுட்டாங்க. இன்னோரு வாட்சாப் கூட்டம் எல் ஐ சியை சப்போர்ட் பண்றேன்னு கெளம்பி 100% அரசு நிறுவனத்தை கூறுபோட்டு 5% தான் அரசின் கையில் இருக்கு மிச்சம் 95% எல் ஐ சி கைலதான் இருக்குன்னு எல் ஐ சியின் Composisiton யே கேலிக்கூத்தாக்கியது. இதற்கு நடுவில் எல் ஐ சியில் பணம் போட்ட மிஸ்டர். பொதுஜனம் பாலிசியை தொடரலாமா அல்லது கேன்சல் பண்ணலாமான்னு கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க

இந்த Disinvestment குறித்து தகவல்களும் என் கருத்தும்.

எல் ஐ சி ஒரு பார்வை

1956 இல் நேருவால் தொடங்கப்பட்ட இந்திய அரசு நிறுவனம்

இன்று வரை இது 100% இந்திய அரசு நிறுவனம்

இந்தியாவின் நம்பர் 1 ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

8 zonal offices, 113 டிவிஷனல் ஆஃபிஸ், 2000+ ப்ரான்ச் ஆபீஸ், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் ஏஜெண்ட்கள் கொண்ட நிறுவனம்

இந்தியாவில் தவிர 14 நாடுகளில் காப்பீட்டுத் தொழில் செய்யும் நிறுவனம், ஃபிஜி, பஹ்ரைன், நேபாள் போன்ற நாடுகளில் நம்பர் 1 காப்பீட்டு நிறுவம் எல் ஐ சியே

எல் ஐ சி யின் சொத்து மதிப்பு 31 லட்சம் கோடி

ரூபாய்கள். சென்ற ஆண்டு லாபம் 26000 கோடிகள் அரசுக்கு வழங்கிய டிவிடெண்ட் மட்டுமே 2600 கோடிகளுக்கு மேல்

எல் ஐ சி இந்தியாவில் என்னோட ஃபேவரைட் காப்பீட்டு நிறுவனம். உலக அளவில் அதிக அசையும் / அசையா சொத்துகள் கொண்ட காப்பீட்டு நிறுவனம்

எல் ஐ சி இந்தியாவின் உண்மையான மல்ட்டி நேஷனல் ஜயண்ட்.

எல் ஐ சி தன் சொத்தில் பாதியைத்தான் பங்குகளில் முதலீடு செய்துள்ளது, மிச்சத்தை அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளது. ஒரு வங்கியின் 51% பங்குகளை வாங்குவதாலயோ, பங்குச் சந்தை வீழும் போது பொதுத்துறை, தனியார் நிறுவன பங்குகளை வாங்குவதன் மூலம் சந்தை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த செலவிடுவதாலோ எல் ஐ சிக்கு எவ்வித பெரிய பாதிப்பு வரவே வராது. அது போல கம்பெனியின் 5-10% பங்குகளை வெளியிடுவதாலும் அதற்கு எவ்வித பாதிப்பும் வராது

Disinvestment

பொதுவா நான் அரசுகள் தொழில் செய்வதை விரும்புவதில்லை. அரசு அரசாங்கம் நடத்தணும், பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றை உறுதி செய்யணும். பணம் அச்சடிப்பதை தன் வசம் வைத்திருப்பதன் மூலம் விலைவாசியை கட்டுக்குள் வைக்க வேண்டும். நலத்திட்டங்கள் வழங்குவதும் அரசின் செயலே. மத்தபடி மிட்டாய் விக்கறது, ஏரோப்ளேன் விடறது, செல் போன் விக்கறது எல்லாம் அரசின் வேலையல்ல. அப்படி முயலும் போது அரசு நிறுவனங்களின் Efficiency மிக மோசமாக இருக்கும். அரசு நிறுவனமாக இருப்பதன் நிர்பந்தகளும் ரெட் டேப் கலாச்சாரமும் அதை நல்ல முறையில் நடக்க அனுமதிக்காது. எனவே அரசு தன் நிறுவனங்களை நல்ல விலைக்கு விற்க முடியும் போது விற்று விடுவது நல்லது. இல்லேன்னா ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமைதான் மற்ற நிறுவனங்களுக்கும் வரும்.

காபிடலிஸ சிந்தனை கொண்ட நான் எல் ஐ சியை ஒரு Exception ஆக பார்க்கிறேன். அதற்குக் காரணம் அதன் Uniqueness. பிற நிறுவனங்கள் பொருட்களை உற்பத்தி செய்தோ வாங்கியோ சந்தையில் விற்று லாபம் பார்க்க வேண்டும், உதாரணங்கள் பி எச் இ எல், ஐ ஓ சி எல் இன்ன பிற.

எல் ஐ சிக்கு கச்சாப் பொருள் என்பதே இல்லை. அது பொருளை வாங்குவதுமில்லை உற்பத்தி செய்வதுமில்லை. வெறும் 1.1 லட்சம் பேர் மட்டுமே சம்பளம் பெரும் ஊழியர்கள் – வருமானம் ஈட்டித்தரும் ஏஜெண்ட்கள் அனைவருமே கமிஷன் அடிப்படையில் பணி புரிபவர்கள். ஆகவே எல் ஐ சியின் Operating Expenses ரொம்ப கம்மி. எல் ஐ சியின் கஸ்டமர்களோ தெய்வங்கள் 15 முதல் 40 ஆண்டுகள் என மிக நீண்ட நாட்களுக்குத் தவராமல் பணம் செலுத்திவிட்டு வெறும் 4-5% வளர்ச்சியை சந்தோசமா வாங்கிக் கொள்ளத் தயாராய் இருக்கிறார்கள். எல் ஐ சி விற்பனை செய்வதில் பெரும் பகுதி எண்டோமெண்ட் பாலிசிகள் – இவற்றில் Sum Assured மிகவும் குறைவு . பாலிசி காலத்தில் பயனர் இறந்தாலும் எல் ஐ சி தர வேண்டிய தொகை மிகவும் குறைவு. பல்லாண்டுகளுக்கு பண வரத்து கேரண்டீட், அதனால் அதை நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய முடியும். கடைசியில் பணம் போட்டவர்களுக்கு வெறும் 4-5% ரிட்டர்ன் கொடுத்தாப் போதும் அதுவும் கேரண்டி தரத் தேவையில்லை

இது ஒரு Dream Position to be in, இதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் எல் ஐ சியின் சொத்து மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. ஒரு சில முதலீடுகள் சரியா போகலேன்னாலும் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை.

இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தின் 10% கூட ஏன் விற்க வேண்டும் என புரியவில்லை. அதற்கு பதில் வேறு சில பல பொதுத்துறை நிறுவனங்களை மொத்தமா வித்துடலாம். இந்தியாவின் பொருளாதார நிலைமை சரியா இல்லை, அதை சரி செய்ய செலவுக்கு எல் ஐ சியின் ஒரு பகுதியை விற்கும் முடிவை அரசு எடுக்கிறது என்றே கருத வேண்டியிருக்கிறது. அப்படியானால் அதையாவது வெளிப்படையாகச் சொல்லவேண்டும் இந்திய அரசு. பொருளாதாரம் சூப்பரா இருக்குன்னு சொல்லிக்கிட்டே பொன் முட்டையிடும் வாத்தை எதுக்கு அறுத்துப் பாக்கணும்?

அடுத்து என்ன நடக்கும்?

வரும் செய்திகளைப் பார்த்தால் எல் ஐ சி யை அரசு விற்க எண்ணவில்லை, ஒரு சிறு பகுதியை ஐ பி ஓ மூலம் இந்திய ரீடெயில் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் எனத் தெரிகிறது. அதானிக்கோ அம்பானிக்கோ வேறு வெளி நாட்டு காப்பீட்டு நிறுவனங்களுக்கோ எல் ஐ சியை தாரை வார்க்கும் திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. சில ஆயிரங்கள் இருந்தால் நீங்களும் நானும் எல் ஐ சியின் நாலு ஷேர் வாங்கலாம். குறைந்தது இன்னும் 10-20 ஆண்டுகளுக்காவது இந்திய அரசே எல் ஐ சியின் மேஜர் ஓனராக (51%க்கு மேல்) இருக்கும் என நம்பலாம்.

இந்தியப் பங்குச் சந்தையின் மிகப் பெரிய நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதன் market capitalization 10 லட்சம் கோடிகள், இரண்டாவது இடத்தில் டி சி எஸ், அதன் market capitalization 8 லட்சம் கோடிகள். எல் ஐ சி பங்குகள் சந்தைக்கு வரும் போது அது நேரடியாக நம்பர் 1 இடத்துக்குப் போகும், ஏன்னா அதன் market capitalization ரிலையன்ஸ், டி சி எஸ் இரண்டையும் சேத்தா வருமளவுக்கு இருக்கும். அதனால் அதன் பங்கின் விலையும் மிக அதிகமாக இருக்கும்.

என் கருத்துப்படி முதலாண்டு 5% இரண்டாமாண்டு 5%க்கு மேல் பங்குகள் வெளியிடப்படாது, எல் ஐ சி பங்கின் விலை மிக அதிமாக இருக்கும் போது அதுக்கு மேல வெளியிட்டா வாங்கறதுக்கு ஆளிருக்காது

நல்லதா கெட்டதா?

எல் ஐ சி Disinvestment தேவையில்லாத ஆணி என்று நான் கருதினாலும் அதிலும் சராசரி இந்தியர்களுக்கு சாதகங்கள் இருக்கத்தான் செய்கிறன. எல் ஐ சியின் அசுர பலம் இந்தியர்கள் தந்தது. எல் ஐ சி ஒரு பொதுச் சொத்து, ஒவ்வொரு இந்தியனும் அதன் உண்மையான உரிமையாளர். இந்த Disinvestment அதை உணமையிலேயே இந்தியர்கள் அனுபவிக்க ஒரு வாய்ப்பைத் தரும். எல் ஐ சி இயங்கும் விதத்திலும் Transparency, Accountability ஐ இது கொண்டு வரும், இல்லேன்னா வருடாந்திர மீட்டிங்கில் ஷேர் ஹோல்டர்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

எண்டோமெண்ட் ப்ளான்ல பணம் போட்டு 4-5% சம்பாதிப்பதற்கு பதில் எல் ஐ சியின் பங்குகளை வாங்கி லாபம் பாக்கலாம்.

பயனர்கள் செய்ய வேண்டியது என்ன ?

எதுவுமேயில்லை, வழக்கம் போல இருங்கள். டெர்ம் பாலிசி எடுக்க நினைத்திருந்தால் தாராளமாக எடுங்கள். ஏற்கெனவெ எடுத்திருந்தால் தொடர்ந்து பணம் கட்டுங்கள்.

எண்டோமெண்ட் பாலிசி எடுத்திருப்போர், மனம் திருந்தி அவற்றை கேன்சல் செய்ய எண்ணியிருந்தால் ஓகே, எல் ஐ சி திவால் ஆகிடுமோ, தனியார் கிட்ட போய் நமக்கு பணம் இல்லேன்னு சொல்லிடுவாங்களோ என்ற பயத்தில் மட்டும் கேன்சல் செய்ய நினைச்சா – வேண்டாம், எல் ஐ சிக்கு ஒண்ணும் ஆகாது. எல் ஐ சியை யாராவது திவால் ஆக்கணும் கங்கணம் கட்டிக்கிட்டு வேலை செஞ்சா கூட அதுக்கு 50 வருசம் ஆகும். அதுக்குள்ள உங்க பாலிசி முதிர்வடைஞ்சு பணம் கைக்கு வந்திருக்கும்.

எல் ஐ சியின் Disinvestment ஐ கொள்கை ரீதியாக எதிர்ப்போர், அது முழுக்க முழுக்க அரசிடமே இருக்க வேண்டும் என்று நினைக்கும் சோசியல் மீடியா போராளிகள், யூனியன்கள், காம்ரேட்கள் ஏனையோர் பங்குகள் வெளியாகும் போது அனைத்து பங்குகளையும் நீங்களே வாங்கிடுங்க – கொள்கை முடிவுகள் அனைத்திலும் அரசின் பக்கம் நில்லுங்கள் – அப்படிச் செய்தால் ப்ராக்டிக்கலா எல் ஐ சி 100% அரசிடம் இருக்கும். பங்குகளை வாங்கி அரசுக்கே தானமா கொடுத்துடுஞ்க அது அதை விட இன்னும் சிறப்பு.

டிஸ்கி 1 Disinvestment குறித்து முழுமையான தகவல்கள் வராத நிலையில் இதை எழுதறேன், சில விசயங்கள் முன்ன பின்ன நடக்கலாம்.

ஸ்ரீராம் நாராயணன் அவர்களின் முகநூல் பகிர்வு.

புதிதாக தொழில் தொடங்க போறீங்களா? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்!

வேலையை விடுத்து தொழில் தொடங்க இந்த 20 உத்திகளை தெரிந்துகொள்ளுங்கள் !

1.வேலையை விடுக்கின்ற போது , உங்களுக்கான மாதந்த வருமானம் நின்றுபோகும். இதனால் உங்கள் வீட்டுச் செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு, வீட்டுக்கடன் போன்றவற்றைச் சமாளிக்க குறைந்தபட்சம் 6-12 மாதங்களுக்காவது பணம் தேவை. இந்த தொகையை ஏற்பட்டு செய்து கொண்டு தொழிலில் இறங்க வேண்டும்.

2.இதுமட்டுமில்லாமல், கூடுதலாக இரண்டு வகையான முதலீடுகளுக்கும்(Capital) உங்களுக்கு பணம் தேவைப்படும் . ஒன்று , தொழில் தொடங்குவதற்காக -ஒரு முறை செய்யப்பட வேண்டிய நிரந்திர முதலீடு( Fixed Capital) (அலுவலக வாடகை முன்பணம்(Office advance) , எந்திரங்கள் (Machinery) , கணினி(Computer) போன்ற மின் மற்றும் மின்னணு சாதனங்கள்(Electric & Electronics Goods), மேசை-நாற்காலிகள்(Furniture’s) , வாகனம்(Vehicles) போன்ற பல ).

இரண்டாவது, ஆறு மாதங்களுக்குத் தேவையான நடைமுறை மூலதனம்(Working Capital) (வாடகை(Rent) , ஊழியர் சம்பளம்(Salaries), மின் மற்றும் தொலைபேசி கட்டணம்(Electric & Telephone Charges), பயணச் செலவு (Travel Expenditures), விளம்பர செலவு(Advertisement Cost), பொருள் கொள்முதல்(Raw Material Cost) போன்றவை ), இந்த இரண்டு தேவைகளுக்கும் பணம் இருந்தால் மட்டுமே நீங்கள் தொழில் தொடங்க வேண்டும்.

3.தொழில் தொடங்க விரும்புவோர் , வேலையில் இருந்து கொண்டே அதற்கான தொடக்ககட்ட பணிகளை முடித்துவிட வேண்டும். அதாவது தொழிலுக்கான Project Report தயாரித்தல், இடத்தை தேர்வு செய்தல் , TIN(Tax-Payer Identification Number), VAT(Value Added Tax Registration),PAN (Permanent Account Number),CST (Central sales Tax ), IEC (Import & Export Code), Company Registration போன்ற அரசு நடைமுறைகளை நிறைவு செய்தல் , தொழிலுக்கு தேவைப்படும் அரசு அனுமதிகளை (License ) பெறுதல் , வங்கி கணக்கு (Bank Account) தொடங்குதல், அலுவலக உள் மற்றும் வெளி அலங்கார வேலைகளை மேற்கொள்ளுதல், Business Card, Letter Pad, Brochure, Palm let போன்றவற்றை முன்கூட்டியே தயாரித்தல், உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டால், முதல் நாளில் இருந்தே வருமானத்தில் கவனம் செலுத்தலாம்.

4.வேலையை விடுத்தவுடன் வீணாக்குகிற ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வருமான இழப்பாகும். அதுமட்டுமல்ல அன்றிலிருந்தே தொழிலை நடத்துவதந்கான செலவும் தொடங்கிவிடும்.

5.எல்லாவற்றையும்விட , வாடிக்கையாளரையும்(Customers) கண்டறிந்து விட்டால் வேலை எளிதாகி விடும். உங்களுடைய தொழிலில், நீங்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டியது, வருமானம் தரக்கூடிய வாடிக்கையாளர்களைத்தான்(Revenue Customers) .

6.வருமான உத்தரவாதம் இல்லாதவரை , தொழில்முனைவர் தொழிலை தள்ளிப் போடுவது நல்லது.

7.தொழில் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் பலரிடம் தொழில் தொடங்கப் போகின்ற செய்தியைச் சொல்லி அதைப் பரவலாக்க வேண்டும் .அப்போதுதான் வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடிவருவார்கள் .

8.உங்கள் தொழிலில் பிற வருமானம் தரக்கூடிய ( Other Revenue Sources) வழிகளை முடிந்தவரை அதிகரிக்கச் செய்யுங்கள் .

9.கல்லாவில் பணம் புழங்குகிற தொழிலாக இருந்தால் ,தொழிலை கணினிமயம் ஆக்குகிற வரை நீங்கள்தான் கல்லாவில் அமரவேண்டும்.

10.தொழிலை தொடங்கத் திட்டமிடுகிறபோது, நீங்கள் உருவாக்குகிற திட்டம் இழப்பைத் தருமானால், அடுத்து மாற்று வழி (Alternative Planning) என்ன என்பதையும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் .

11.உங்களைவிட அறிவாளிகளை உடன் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நிறுவனத்திற்கு தொழில் ஆலோசகர்களும், வழிகாட்டிகளும் மிக,மிக முக்கியம். குறிப்பாக திறமையான Auditor , Business Advisor, Business analyst, Advocate, Human Resource Advisor போன்றோரை எப்போதும் கலந்து ஆலோசித்த பிறகே முடிவுகளை எடுங்கள்.

12.எந்த பொருளையும் கொள்முதல் செய்கின்றபோது குறைந்தபட்சம் மூன்று Supplier களிடமாவது விலைப்பட்டியலைப் (Price Quotation) பெறுங்கள். இணையதளத்தில் உலவி (Search in Internet) கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

13.உங்கள் தொழில் வளர்ச்சி அடைகிற வரை ,குடும்பத்தினரில் யாரவது ஒருவருடைய உதவி உங்களுக்கு அவசியம் தேவை .

14.தொழில் வளர்கிற வரை பிடிவாதம் வேண்டாம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்றபடி, நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ளுங்கள். உங்கள் திறமையை நிரூபித்தபின் உங்கள் ஆலோசனைகளை கேட்க அவர்கள் முன் வருவார்கள் .

15.முடிந்த வரை வாடகை ,சம்பளம் போன்ற நிரந்தரச் செலவுகளை குறைத்துக் கொண்டு , கொள்முதல் ,விளம்பரம் போன்ற மாறிக் கொண்டிருக்கும் செலவுகளை அதிகரித்துக் கொள்வது நல்லது . இதனால், பணத்தேவையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

16.தொழிலில் எவ்வளவு முதலீடு, அதை விட இரண்டு மடங்கு வரை நீங்கள் கடன் வாங்கலாம். அதற்கு மேல் வாங்கினால், இடர்கள் அதிகம்.

17.வாங்குகிற கடன்களுக்கெல்லாம் மாதந்தோறும் வட்டியை மட்டுமே செலுத்தாமல், அசலில் ஒரு பகுதியையும் திருப்பிச் செலுத்தப்பழகுங்கள்.

18.முடிந்தவரை Supplier-களிடம் பணத்தைத் திரும்பச் செலுத்துவதற்கான காலக்கட்டத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

19.எளிதில் பணம் கிடைக்கிறது என்பதற்காக, பல தொழில்களில் கவனம் செலுத்தாதீர்கள்( Don’t Focus Many-things). நீங்கள் பணத்தை தேடி ஓடுவதை விட , பணம் உங்களைத் தேடி வரும் வகையில், உங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள் .

20. மாதந்தோறும் உறுதியாக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே, ஒரு ஆளை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். அதுவரை நீங்கள் தனி ஆளாக ஓடிக்கொண்டே இருங்கள் .

* நண்பர்களே! இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.### படித்ததில் பிடித்தது.

தனிமரம் நேசன் அவர்களின் முகநூல் பகிர்வு.